Thursday, September 29, 2005

துள்சி சேச்சிக்கு






இருநூறு பதிவு காணும் துளசி நூறு பிறை காண வாழ்ததி, இந்தப் புகைப்படம் இங்கே நிறுத்தப்படுகிறது. அவருடைய 'ஆரம்பப் பள்ளிக்கூடம்' படத்துக்குச் சற்றே, அதாவது நூறு வருடம் முற்பட்டது.

1905-ல் சென்னை ஜியார்ஜ் டவுணில் முதல் பெண்கள் பள்ளி மாணவிகள்.

படம் நியூசிலாந்து பிரஸ்பைடெரியன் திருப்பள்ளி ஆவணத்தில் உளளது. காப்புரிமை அவர்களுடையது. நண்பர்கள் பார்த்து முடித்தபின் இங்கிருந்து அகற்றப்படும்.

Wednesday, September 28, 2005

எடுவர்ட் மனே என்ற ஓவியர்

அமைதியான ஒரு நீர்நிலை. ஆறோ, ஓடையோ தெரியவில்லை. கரையில் பச்சைப் பசேல் என்று மெத்தையாகவிரிந்த பசும்புல். நீரில் குளித்துக் கரையேறிக் கொண்டிருக்கும் ஒரு பெண்.

இதெல்லாம் பின்புலத்தில். காட்சி விரியும்போது உங்கள் பார்வையை ஈர்ப்பது, முன்னணியில், அந்தப் புல்தரையில் இருக்கிறவர்கள்.

நாகரீக உடுப்பு அணிந்த இரண்டு கனவான்கள். இருவரும் இளைஞர்கள். ஒருவர் முழு ஐரோப்பிய பாணியில் கால்சராயும், மேலே சட்டையும், கழுத்தில் டையும், மேலே கோட்டும் அணிந்து இருப்பவர். ஆனாலும் மிகக்கொஞ்சம் போல் ஆசுவாசமாகக் கையை ஒரு புறம் ஊன்றியபடி இருக்கிறார்.

மற்றவர் முகத்தில் தாடியும், பின்னால் தொங்கும் குஞ்சம் வைத்த பாரசீகத் தொப்பியும் மற்றப்படி ஐரோப்பிய உடையலங்காரமுமாக இருப்பவர். இவர் இடது கையைப் புல்தரை மேடிட்டுச் சிறிது உயரும் பிரதேசத்தில் ஊன்றியபடி வசதியாகச் சாய்ந்து அமர்ந்து, வலது கையை விரித்து நீட்டி முன்னால் சொல்லப்பட்டவரோடு எதையோசுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

மிக முன்னால், விதவிதமான பழங்கள், ரொட்டி என்று உணவுப் பொருட்கள்.

இது ஓர் ஓவியம்.

இது மட்டும் தான் படம் என்றால் நூற்றைம்பது வருடம் முந்திய அந்த ஓவியத்தை எல்லோரும் மறந்து போயிருப்பார்கள். அதை வரைந்த எடுவர்ட் மனே (Edouard Manet) என்ற பிரஞ்சு ஓவியரையும்.

'புல்தரையில் மதிய உணவு' ('Luncheon on the grass') என்ற இந்த ஓவியத்தை மற்ற அக்கால ஓவியங்களில் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறவள் ஒரு பெண்.
அவள் அந்தக் கனவான்களுடன் கூட அமர்ந்திருக்கிறாள் புல்தரையில். ஆனால் அவர்களின் உரையாடலில் அவள்பங்கெடுத்துக் கொள்ளவில்லை.

பாரசீகத் தொப்பி அணிந்தவனுக்கு நேர் முன்னால் சற்றே தள்ளி அமர்ந்து ஒரு காலை ஒய்யாரமாக முழங்காலை மடக்கி, வலது கரம் முகவாயில் பதிந்திருக்க உங்களையே பார்க்கிறாள் அவள். நீங்கள் எங்கே இருந்துநோக்கினாலும் அவள் பார்வை உங்களைத் தொடர்கிறது.

என்னைத்தானே பார்க்கிறே?

உங்களைத் தோரணையாகக் கேட்கும் அவள் உடுப்பு எதுவும் உடலில் இல்லாமல் இருக்கிறாள்.

1863-ல் பாரீசில் நடந்த ஓவியக் கண்காட்சிக்காக எழுதப்பட்ட படம் இது. வரைந்த ஓவியர் எடுவர்ட் மனே(Edouard Manet) க்கு முப்பத்தோரு வயது அப்போது. பாரீசில் ஒரு பிரபுத்துவக் குடும்பத்தில் தோன்றியவர். 'பையன் வெட்டியா எதோ கிறுக்கிட்டு கிடக்கான்' என்று அலுத்துக் கொள்ளாமல் மனேயின் தந்தைஅவருடைய ஓவிய ஆர்வத்தைக் கண்டு கொண்டு ஓவியக் கல்லூரியில் சேர்த்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தது மெய்யியலான ரியலிசத்தின் அடிப்படையில் அமைந்த ஓவியக் கலை. மனேயும் ரியலிச ஓவியராகத்தான் தன் படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

வலிய வரவழைத்துக் கொண்ட மிகையான தோற்றத்தோடு ஓவியம் வரைய மாடலாக நின்ற மாடல்களிடம் அவர்ஒரு முறை சொன்னது இது - "இயல்பாக இருங்கள். சந்தைக்கடையில் போய் முள்ளங்கி வாங்கும்போது எப்படி இருப்பீர்களோ அது போல்".

மனேயை மரபு மிகவும் பாதித்தது. முக்கியமாக ரெம்ப்ராண்டின் கவிதை சொல்லும் ஓவியங்களில் அவர் ஆழ்ந்துபோனார். நேரம் கிடைத்தபோதெல்லாம் பாரீசு அருங்காட்சியகத்துக்குச் சென்று அங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ரெம்ப்ராண்டின் சித்திரங்களை அப்படியே நகலெடுத்துப் பயிற்சி செய்தார்.

இப்படி மரபில் காலூன்றிய ஓவியர் மனே தான் மரபைத் துணிச்சலாக மீறி ரியலிசத்திலிருந்து அடுத்தகட்டமான இம்ப்ரஷனிசத்துக்கு நவீன ஓவியக் கலையை அழைத்துப் போக முன்கை எடுத்தவர்.

பார்ப்பதை அப்படியே ஓவியமாக வரையாமல், காட்சி தன்னைப் பாதித்ததைப் படைப்பாக்கும் இம்ப்ரஷனிசம் கால்கோள் கொண்டது மனேயின் 'புல்தரையில் பகல் உணவு' ஓவியம் மூலமாகத் தான்.

மனேயின் மரபு மீறல் ஓவியத்தின் பொருள் மற்றும் வடிவம் தொடர்பானது.

அதுநாள் வரை, முக்கியமாக ரெம்ப்ராண்ட் போன்றவர்கள் வரைந்த ஓவியங்களில் பிறந்தமேனிப் பெண்களாகச் சித்தரிக்கப்பட்டவர்கள் இதிகாசங்களில் வளைய வரும் கடவுள், தேவதைகள் முதலானோர்.

ஆனால் மனேயின் ஓவியம் நிகழும் காலத்தைச் சேர்ந்த ஓர் உடை துறந்த பெண்ணை ஓவியத்தின் பிரதான அங்கமாகக் கொண்டது.

இதிகாச, புராணக் காட்சிகளையே அதுவரை பிரம்மாண்டமான கான்வாசில் வரைந்து வந்தார்கள். மனே சமகாலப் பாத்திரங்களை, அதுவும் நாகரிகம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களாகத் தோற்றமளித்தநபர்களை இதிகாசப் பாணியில் பிரம்மாண்டமான ஓவியமாக வரைந்திருந்தார்.

அவர் எதிர்பார்த்ததுபோலவே ஓவியக் காட்சியில் அந்த ஓவியம் இடம் பெறமுடியாது என்று சொல்லி விட்டார்கள். கண்காட்சிக்கு வந்து, இடம் மறுக்கப்பட்ட ஓவியங்கள் பற்றிப் பத்திரிகைகள் விடாமல் எழுதவே (பிரான்சில் கலாரசனை அதிகம்), அவையும் கண்காட்சி மண்டபத்தை ஒட்டிய ஒரு அறையில் காட்சிக்குவைக்கப்பட்டன. மனேயின் ஓவியம் எந்தப் பிரதானமும் அளிக்கப்டாமல் பத்தோடு பதினொறாக அங்கே இருத்தப்பட்டது.

ஆனாலும் மண்டபத்தில் வைத்த ஓவியங்களை விட அதிக சர்ச்சைக்கும் அதன் மூலம் மேலதிகமான கவனிப்புக்கும் உள்ளாகியது மனேயின் ஓவியம்.

மனேயின் நிர்வாண நங்கை அதுவரை ஓவியம் பற்றி நிலவிய கோட்பாடுகளையும் சித்தாந்தங்களையும் வெகுஇயல்பாக உடைத்துப் போட்டாள். மனேயின் நோக்கமும் அதுதான்.

பழகிய ரசனையும் அதன் அடிப்படையான கோட்பாடுகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்போது அசௌகரியமாக உணர்கிறவர்களின் முதல் எதிர்வினை பரிகாசம். மனேயின் படத்தை எள்ளி நகையாடவே கூட்டம் கூட்டமாகவந்து பார்த்தார்கள். அதன் பாதிப்பில், நகைப்பை வரவழைக்கும் படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

பரிகாசத்தின் அடுத்த கட்டம் அவமதிப்பு. சீச்சி அசங்கியம் என்று சனாதனிகள் அந்த ஓவியத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். மன்னன் மூன்றாம் நெப்போலியன் ஓவியக் காட்சிக்கு வந்தபோது இந்த ஓவியத்தைப் பார்க்காமலேயே கடந்து போனான்.

ஆனாலும் மனேயின் 'புல்தரையில் மதிய உணவு' காலம் கடந்து இன்னும் நிற்கிறது. அந்த ஓவியத்துக்கு இடம் தராமல் அன்று மண்டபத்தில் பிரதானமாகக் காட்சிக்கு வைக்கப்பட்ட பல ஓவியங்கள் காலப் பிரவாகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் காணாமலேயே போய்விட்டன.

தனக்கு அடுத்த தலைமுறை ஓவியர்களை முற்றாகப் பாதித்து, இம்ப்ரஷனிஸ ஓவியக் குழு அமையக் காரணமாகஇருந்தது மட்டுமில்லாமல், எடுவர்ட் மனே தன் காலத்தவராகிய பிரபல பிரஞ்சு எழுத்தாளர் எமிலி சோலா,கவிஞர் சார்ல்ஸ் போதலீர் போன்றோரையும் வெகுவாகப் பாதித்தவர். இலக்கியமும் நுண்கலைகளும் நெருங்கியதொடர்பு கொண்டவையாக இருப்பது தற்செயலானதில்லை.

(Mar 2003)

Monday, September 26, 2005

குரும்பூர் குப்புசாமி புத்தகம்

தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் - ஓர் ஆய்வு
--------------------------------
'ராணி' பத்திரிகை ஆசிரியர் அ.மா.சாமி வித்தியாசமானவர். தான் 'ஆமா சாமி' என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறவர் அவர் (ஆதித்தனார் மாணவர் சாமி).

'குரும்பூர் குப்புசாமி'யாகத் தொடர்கதை எழுதினாலும், நுணுக்கமான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும், 'எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக, சுவையாக எழுத வேண்டும்' என்று ஆதித்தனார் பள்ளியில் பாடம் படித்த சாமி, படித்த பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பதைத் 'தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்' புத்தகம் புலப்படுத்துகிறது.

ஒன்றல்ல, நூறல்ல .. ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவ இதழ்கள் பற்றிய விவரங்களைத் தேடிப் பிடித்துத் தொகுத்திருக்கும் சாமி ஒரு கிறிஸ்தவர் இல்லை என்பதில் யாராவது சின்னதாக ஆச்சரியப்பட்டால், இஸ்லாமியராக இல்லாத இவர், இதற்கு முன் இஸ்லாமிய இதழ்கள் பற்றியும்
இன்னொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்பதற்கும் சேர்த்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம்.

எது கிறிஸ்தவ இதழ் என்பதற்குக் 'கிறிஸ்தவத்தைப் பற்றிய இதழாக இருக்க வேண்டும். அல்லது கிறிஸ்தவர் மட்டுமே படிக்கத் தகுந்த இதழாக இருக்க வேண்டும்' என்று விளக்கம் சொன்னாலும், அதை நெகிழ்த்தி, கிறிஸ்தவர்கள் நடத்திய வேறு இதழ்கள் பற்றியும் சொல்லிப் போகிறார் சாமி. அதோடு நிறுத்தாமல், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தின் வரலாற்றையும் விரிவாகத் தருவது இந்தப் புத்தகத்தின்
சிறப்பு.

தெரிந்த செய்தியில் கூடத் தெரியாத அம்சம் எதையாவது சேர்த்துத் தருகிறார் சாமி. கூடன்பர்க் 1455-ல் வெளியிட்ட பைபிள்தான் உலகில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அது காகிதத்தில் அச்சாகவில்லை. தோலில் அச்சடிக்கப்பட்டது. 200
பிரதி தயார் செய்வதற்காகப் பத்தாயிரம் கன்றுக்குட்டிகளைக் கொல்ல வேண்டி வந்தது என்பது தெரியுமா?

புத்தகத்தில் கண்ட இன்னும் சில 'முதல்'கள் :

கடல் கடந்து கிறிஸ்தவம் பரவிய முதல் நாடு தமிழ்நாடு. இலத்தீன் மொழிக்கு அப்புறம் அச்சேறிய முதல் மொழி தமிழ். 1554-ல் போர்ச்சுக்கல்லில் 'கார்த்தீலியா' என்ற பெயரில் தமிழ் - போர்ச்சுகீஸ் மொழிகளில் வெளியான இந்த நூலின் தமிழ்ப் பகுதியை எழுதித்தர தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மீனவத் தமிழர்கள் போர்ச்சுக்கல் போய் வந்தார்களாம்!

முதல் தமிழ்ப் பத்திரிகை 1812-ல் வெளியான 'மாசத் தினச் சரிதை'.

தமிழ் அல்லாத முதல் கிறிஸ்தவ இதழும் (ஆர்மீனிய மொழி) சென்னையிலிருந்துதான் வெளியானது. 1794-ல். அதற்கு முன் ஆர்மீனிய நாட்டிலேயே பத்திரிகை கிடையாதாம்!

இன்னும், இந்தியாவில் முதலில் வெளிவந்த குழந்தைகள் இதழ் 'பாலதீபிகை' (1840) தமிழ்தான். இந்திரா காந்தியின்
எமர்ஜென்சி காலத்தில் தடைசெய்யப்பட முதல் பத்திரிகையும் கிறிஸ்தவத் தமிழ்ப் பத்திரிகையான 'சபதம்'.


அ.மா.சாமி அடுக்கும் ஆயிரத்து அறுநூறு பத்திரிகைகளில், ஒரே ஒரு இதழ் மட்டும் வெளியாகிக் காணாமல்
போனவையும் உண்டு. 1841-ல் தொடங்கி டபிள் சென்சுரியை நோக்கி நடை போடும் 'உதய தாரகை'யும் உண்டு.
தொண்ணூறு வயசான 'சர்வ வியாபி'யும் கூட உண்டு.

இதழ்களின் பெயர்களில் தான் எத்தனை வகை! 'இலவசம்' என்ற பெயரில் சும்மாவே வினியோகிப்பட்டு அப்புறம் கொம்பு முளைத்த 'இரட்சண்யக் கொம்பு'.

பல பத்திரிகைகளின் பெயர்களில் 'இயேசு அழைக்கிறார்' .. இயேசு - ஆசீர்வதிக்கிறார், இருக்கிறார், நேசிக்கிறார், வருகிறார்,
சந்திக்கிறார், தருகிறார், தொடுகிறார், விசாரிக்கிறார், சுகமளிக்கிறார், மன்னிக்கிறார்.

இதழ் ஆசிரியர்களும் சுவாரசியமானவர்களே.
"இலவசமாகக் கொடுத்தாலும் படிக்காமல் போடுகிறீர்களே" என்று அங்கலாய்ப்பவர்கள், 'காசு கொடுத்தால்தான்
புத்தகம்' என்று கண்டீஷனாகச் சொல்கிறவர்கள், 'நான் சொந்த வீடு கட்டிக் கொண்டு உங்களுக்குத் தொடர்ந்து
ஊழியம் செய்ய நிதி அனுப்புங்கள்' என்று கோரிக்கை விடுப்பவர்கள், 'இந்தப் பத்திரிகையை முஸ்லீம்களுக்குக்
கொடுக்க வேண்டாம்' என்று கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கும் 'கல்வாரியின் அழைப்பு' பத்திரிகை
ஆசிரியர் மைதீன்.. மரணப் படுக்கையில் இருந்தபோதும் கூட ·ப்ரூப் பார்த்து, அச்சடிக்கக் கையெழுத்துப் போட்ட பேலீசு அடிகளார் (1870-லேயே bombshell என்பதற்குத் 'தீக்குடுக்கை' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியவர் இவர்!) .

பெரும்பான்மையான இதழ்கள் கிறிஸ்தவச் செய்திகளை மட்டுமே தாங்கி வந்தாலும், 'சர்வவியாபி' இதழில்
வடுவூர் துரைசாமி அய்யங்கார் 'மரகதம் அல்லது கருங்குன்றத்துக் கொலை' துப்பறியும் தொடர்கதை
எழுதியிருக்கிறார்! காண்டேகர் நாவல் மொழிபெயர்த்து வெளியிட்ட 'நல்ல ஆயன்' பத்திரிகை 'பொழுது
போக்கு இதழாக மாறியதால்' நிறுத்தப்பட்டது!

'இந்தப் பத்திரிகை ராணி சைஸ்' .. 'இது தினத்தந்தியை இரண்டாக மடித்த அளவில் வெளிவந்தது' என்பது
போல் அங்கங்கே தட்டுப்படும் வரிகளில், தாம் பணிபுரியும் பத்திரிகைக் குடும்பத்தோடு இரண்டறக் கலந்த
சாமி தென்படுகிறார்.

தமிழ் நூல்களைப் பதிப்பிக்கச் சுவடி தேடி அலைந்த 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா போல் இந்த அரிய நூலைப்
பதிப்பிக்க 1000-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் பிரதிகளைத் தேடித் தமிழகம் எங்கும் அலைந்த அ.மா.சாமியை 'கிறிஸ்தவத் தாத்தா' என்று அழைத்தால், 'கிறிஸ்துமஸ் தாத்தா' சாண்டாகிளாஸ் ஆட்சேபிக்க மாட்டார்!

(தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் - ஓர் ஆய்வு

அ.மா.சாமி
நவமணிப் பதிப்பகம் வெளியீடு,
12, 2-வது பெருஞ்சாலை,
நகர வளர்ச்சிக் குடியிருப்பு,
சென்னை 600 004
விலை ரூ 130/)

மத்தளராயன் என்னும் இரா.முருகன்

பிரசுரம் கல்கி

'பேனா' அப்புசாமி

பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர்

தலைப்பாகையும், பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி, பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில் , லா பாயிண்ட்தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர் சட்டம்படித்த பெ.நா.அப்புசுவாமி.

பாக்கியம் ராமஸ்வாமி சாஸ்வதமாக்கிய அப்புசாமித் தாத்தாவுக்கும் இந்த அறிவியல் தாத்தாவுக்கும் வயதும் துறுதுறுப்பும் தான் ஒற்றுமை.

1917 ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்தகட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை லகுவாகத் தாண்டும். (தள்ளாத பிராயத்தில் தான் எழுதிய படைப்பைப் பத்திரிகைக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகத்துக்கு நடந்தபோது தான் இந்த ஜாம்பவான் காலமானார் என்று எங்கேயோ படித்த நினைவு.)

படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமைதரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல்எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

1936ல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளியாத்திரை பற்றி எழுதியவர், துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரிசாட்டலைட்) பற்றி 1965ல் அதே உற்சாகத்தோடு எழுதுகிறார். 'பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே' என்று கிராமபோனில் கேட்டு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நெக்குருகிக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கும் அப்புசாமி, நவீன அறிவியல் கோட்பாடான மேதமை அமைப்பு (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னனு மொழிபெயர்ப்பு பற்றி 1960களின் இறுதியில் தமிழில் முதலாவதாக எழுதுகிறார்.

அது மட்டுமில்லை, "நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகி வருகிறது" என்று அவர் கணினிப் புரட்சிக்குஇருபது வருடம் முந்திய 1969 லேயே அறிவியல் ஆருடம் சொல்லிவிடுகிறார்.
கமிட்டி போட்டுக் கலந்தாலோசித்து நத்தை வேகத்தில் ன்று தமிழில்கலைச் சொல்லாக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புசுவாமி அலட்டிக்கொள்ளாமல் 'பொங்கியெழுகேணி' (artesian well), நுண்துகள்கொள்கை (corpuscullar theory), அறிவுக்குறி எண்(intelligent quotient) என்று போகிற போக்கில் நல்ல தமிழ்த் தொடர்களை வீசிப் பிரமிக்க வைக்கிறார்.

"வயிற்றோட்டமும் பலவீனமும் இருப்பின் அரை அல்லது ஓர் ஆழாக்கு சாராயம் தரலாம்" என்று கள்ளுக்கடை மறியல் காலத்தில் இவர் எழுதிய கட்டுரையும் சிறிய தரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.இந்த வைத்தியம் மனிதனுக்கு இல்லை, நோய் கண்ட பசுமாட்டுக்கு.

புத்தகத்தை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கும் உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் பாராட்டுக்குரியது.

எழுதிய ஆசிரியரின் பெயரை ஓரத்தில் போட்டுவிட்டு, தொகுப்பாசிரியரின் பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.
--------------------------------------------------

புத்தகம் பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்(தொகுதி - 2)

வெளியீடு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை

கட்டுரை - இரா.முருகன் 2001
பிரசுரம் இந்தியா டுடே

Sunday, September 25, 2005

பெரிய சிறகுகளோடு ஒரு கிழவன்


நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (ஸ்பானிஷ் மொழி) காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் படைப்பிலக்கியத்தில் மாய யதார்த்த வாதத்தை (மேஜிக்கல் ரியலிசம்) முன்னெடுத்துச் சென்றவர். அவருடைய 'நூறு வருடத் தனிமை' மேஜிக்கல் ரியலிசப் புனைகதைகளில் ஒரு மைல்கல்.


குழந்தைகளுக்காக எழுதிய கதை என்று உபதலைப்போடு அவர் எழுதிய அற்புதமான சிறுகதை, 'A very old man with enormous wings'.


கதையை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்.
மத்தளராயன் என்னும் இரா.முருகன்
------------------------------------------------------------


பெரிய இறக்கைகளோடு ஒரு வயசாளி

மழை பெய்ய ஆரம்பித்த மூன்றாம் நான் பெலாயோவின் வீட்டுக்குள் வந்த ஏராளமான நண்டுகளைக் கொன்றார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ராத்திரி முழுக்கக் காய்ச்சலாக இருந்தது. செத்த நண்டுகளின் வாடையால் அது ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் நினைத்ததால், பெலாயோ மழையில் நனைந்த வாசலைக் கடந்து எடுத்துப் போய் அவற்றைக் கடலில் எரிந்தான்.


செவ்வாய்க்கிழமையிலிருந்து உலகம் சோகமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே போல சாம்பல் நிறத்தில் கிடந்தது. மார்ச் மாத இரவுகளில் வெளிச்சப்பொடிகள் போல் மின்னிய கடற்கரை மணல், செத்த கிளிஞ்சல் பூச்சிகளும் சகதியுமாகக் குழம்பிக் கிடந்தது.


நண்டுகளைக் கடலில் எரிந்து விட்டு பெலாயோ திரும்பி வந்தபோது, சந்திரனின் ஒளி மிகவும் சோகையோடு இருந்ததால், அரையிருட்டில், வீட்டு நடையில் வலியால் முனகியபடி நகர்ந்து கொண்டிருப்பது எது என்று
அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதற்கு மிக அருகில் போய்ப் பார்த்தபோது அது ஒரு கிழவன் என்று தெரிந்தது. ரொம்பவே வயசான ஒரு கிழவன். சகதியில் முகம் புதையப் படுத்திருக்கிறான். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவன் எழுந்திருக்க முடியாததற்குக் காரணம், அவனுடைய
மிகப் பெரிய இறக்கைகள்.


பெலாயோ பயந்துபோய் வீட்டுக்குள் ஓடினான். அவன் மனைவி எலிசிந்தா நோயால் துடிக்கும் குழந்தைக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வாசல் நடைக்குப் போனான் பெலாயோ. விழுந்து கிடக்கும் உருவத்தை இருவரும் வியப்பும் திகைப்புமாகப் பார்த்தார்கள்.
அந்தக் கிழவன் குப்பை பொறுக்குகிறவன் போல் உடுத்தியிருந்தான்.


அவனுடைய வழுக்கைத் தலையில் சில மங்கிய முடிகளே மிச்சம் இருந்தன. பொக்கை வாயிலும் கொஞ்சம் போல் பற்கள். இதற்கு முன் எத்தனை ராஜபோகமாக இருந்தானோ. முழுக்க நனைந்த முப்பாட்டன் போல் அவனுடைய தற்போதைய பரிதாபமான நிலையில் அதெல்லாம் அடிபட்டுப் போயிருக்கும்.


பாதி பிடுங்கப்பட்ட அவனுடைய இரண்டு பெரும் இறக்கைகளும் அழுக்காக, சகதியில் சிக்கிக் கொண்டிருந்தன.
பெலாயோவும் எலிசிந்தாவும் அந்தக் கிழவனை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்புறம் பார்வை பழகி அவனும் பழகிப் போனான். பிறகு அவனிடம் தைரியமாகப் பேச முயன்றார்கள். அவன் மாலுமிகளின் கனத்த குரலில் ஏதோ புரியாத மொழியில் பேசினான்.


புயலில் சிக்கிச் சீரழிந்த கப்பலிலிருந்து தூக்கி எறியப்பட்டவன் அந்தக் கிழவன் என்று அவர்கள் புத்திசாலித்தனமாக ஊகிப்பதற்கு அவனுடைய பெரிய இறக்கைகள் தடையாக இல்லைதான்.


ஆனாலும் பக்கத்து வீட்டம்மாவை அவர்கள் கூப்பிட்டார்கள். வாழ்க்கை, சாவு பற்றி சகலமும் தெரிந்த அவள் ஒரு தடவை அந்தக் கிழவனைப் பார்த்ததுமே, அவர்கள் நினைப்பு தவறானது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.


"அவன் ஒரு தேவதூதன். உங்க குழந்தை உடம்பு சரியில்லாம இருக்கு இல்லியா ... அதோட உயிரைக் கொண்டு போறதுக்காக வந்தவனா இருக்கும்.. பாவம் .. வயசு ரொம்ப ஆச்சு இல்லே .. மழை அவனைக் கீழே விழுத்தாட்டிடுச்சு".


ரத்தமும் சதையுமாக ஒரு தேவதூதன் பெலாயோ வீட்டில் பிணைக்கைதி போல் இருக்கிறான் என்ற தகவல் அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.


"இந்த மாதிரி தேவதூதர்கள் சுவர்க்கத்தில் நடக்கும் ஏதோ சதியில் தப்பித்து வந்தவங்க.." என்று பக்கத்து வீட்டுக்கார அம்மா சொன்னதால், அந்தக் கிழவனை அடித்துக் கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.


சமையல்கட்டிலிருந்து பெலேயோ பிற்பகல் முழுக்க அந்தக் கிழவனைக் கண்காணித்தபடி இருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று அவன் கையில் ஒரு தடி இருந்தது. ராத்திரி தூங்கப் போகும் முன் அவன் கிழவனைச்
சகதியிலிருந்து இழுத்துக் கொண்டு போய்க் கோழிக்கூட்டில் வைத்துப் பூட்டினான்.


நடுராத்திரியில் மழை நின்றது. பெலேயோவும் எலிசிந்தாவும்
அப்போதும் நண்டுகளைக் கொன்றபடி இருந்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்துக் காய்ச்சல் இறங்கிக் குழந்தை விழித்துக் கொண்டு பசியால் அழுதது. அப்போது அவர்களுக்குக் கருணை பொங்கியது.


தேவதூதனை ஒரு தோணியில் ஏற்றி மூன்று நாளுக்கு வரும்படியாகக் குடிதண்ணீரும் சாப்பாடும் கூடவே வைத்துத் திரும்பக் கடலில் கொண்டுவிட்டுவிடலாம் என்று தோன்றியது.

ஆனால் விடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் கோழிக்கூடுக்கு முன்னால் அண்டை அயல் முழுக்கக் கூடி இருந்தது. அந்தக் கும்பலுக்குத் தேவதூதன்மேல் கிஞ்சித்தும் மரியாதை இல்லை. ஒரு சர்க்கஸ் மிருகத்துக்குக்
கொடுப்பது போல் கூண்டின் கம்பிகள் வழியே ஏதேதோ பண்டங்களை அவன் தின்பதற்காக எறிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

இந்த வினோதமான செய்தி கிடைத்துத் திடுக்கிட்டுக் காலை ஏழு மணிக்கு முன்னதாகவே கொன்சாகா பாதிரியார் வந்து சேர்ந்தார். அந்த நேரத்தில் தேவதூதனைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் காலையில் வந்தவர்கள் போல் விளையாட்டுத்தனத்தோடு இல்லாமல், பிடிபட்ட தேவதூதனின் எதிர்காலம் குறித்துப் பல விதமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.


அவர்களில் எளிமையான சிந்தனையுடையவர்கள், தேவதூதனை உலகத்தின் தந்தையாக, ஒரு மாநகராட்சி மேயர் போல் நியமிக்க வேண்டும் என்றார்கள். கொஞ்சம் கடுத்த மனம் படைத்தவர்கள் தேவதூதனுக்கு உடனே ஐந்து
நட்சத்திர அந்தஸ்து உள்ள படைத்தளபதி பதவி கொடுத்து, உலகின் யுத்தங்களை எல்லாம் ஜெயிக்க வேண்டும்
என்றார்கள். இன்னும் சில முன்னோக்கு சிந்தனையாளர்கள் அவனை ஒரு பொலி காளை போல் பயன்படுத்தி,
இறக்கை முளைத்த அறிவாளிகளின் இனத்தை உருவாக்கி அவர்கள் இந்த அகிலத்தையே அரசாளச் செய்ய வேண்டும்
என்று அபிப்பிராயப் பட்டார்கள்.

கொன்சாகா பாதிரியார் பாதிரி மடத்தில் சேர்வதற்கு முன் ஒரு திடகாத்திரமான விறகுவெட்டியாக இருந்தவர். கோழிக் கூண்டுக்கு வெளியே நின்றபடி கேள்வி-பதில் முறையில் இங்கே நடப்பதை அறிய வேண்டும் என்று தீர்மானித்தபடி பக்கத்தில் போய்ப் பார்க்க வசதியாகக் கதவைத் திறக்கச் சொன்னார். குஞ்சுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு பெரிய கோழி போல் உள்ளே இருந்தவன் அவருக்குத் தெரிந்தான்.

தேவதூதன் ஒரு ஓரமாகச் சூரிய வெளிச்சத்தில் இறக்கையை உலர்த்தியபடி இருந்தான். காலையில் அவனைப் பார்க்க வந்தவர்கள் மேலே விட்டெறிந்த பழத்தோல்களும் பலகார மிச்சங்களும் அவனைச் சுற்றி இருந்தன. இந்த உலகத்தின் மரியாதையில்லாத்தனத்தோடு அந்நியப்பட்டவனாக அவன் தன் அறுதப் பழைய கண்களால் ஏறெடுத்துப் பார்த்துப் புரியாத மொழியில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.


கொன்சாகா பாதிரியார் கோழிக் கூட்டுக்குள் நுழைந்து அவன் அருகில் சென்று இலத்தீன் மொழியில் காலை
வணக்கம் சொன்னார்.

கடவுளின் மொழியாகிய இலத்தீனை அவன் விளங்கிக் கொள்ளவில்லை. கடவுளின் ஊழியர்களான பாதிரியார்களுக்கு எப்படி மரியாதையோடு முகமன் கூறுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆசாமி ஒரு
மோசடிப் பேர்வழியாக இருப்பானோ என்று கொன்சாகா பாதிரியாருக்கு அப்போதுதான் முதன்முதலாகச்
சந்தேகம் வந்தது.


அப்புறம்தான் அவர் கவனித்தார். அவன் ஒரு சராசரி மனிதன் போலத்தான் இருந்தான். அவனிடம் வெளியிடங்களில் அடிக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத நெடி இருந்தது. அவன் இறக்கைகளின் பின்புறத்தில்
புழுபூச்சிகள் அரித்துக் கொண்டிருந்தன. தரைக்காற்றால் சேதமடைந்த இறக்கைகள் அவை. அவனைப் பற்றிய
எதுவுமே தேவதூதர்கள் பற்றிய பெருமையும் கண்ணியமும் கொண்டதாக இல்லை.


அவர் கோழிக்கூட்டிலிருந்து வெளியே வந்து, கூடியிருந்தவர்களிடையே சுருக்கமாக ஒரு சொற்பொழிவு
செய்தார். ஆர்வக் கோளாறினால் காட்டும் துணிச்சலின் அபாயங்கள் குறித்து இருந்தது அது. கேளிக்கை
விழாவில் காட்டும் தந்திரங்களைப் பிரயோகித்துச் சாத்தான் இப்படித்தான் விஷயம் தெரியாதவர்களைக்
குழப்பும் என்றார். விமானத்துக்கும் கழுகுக்கும் வேறுபாடு என்ன என்று தீர்மானிக்க இறக்கைகள் மட்டும் போதாது.
தேவதூதர்களைப் பற்றிய தீர்மானம் எடுப்பதில் இறக்கைகளின் பங்கு இன்னும் குறைச்சல்தான் என்று விளக்கினார்.

என்றாலும் அவர் தன் பிஷப்புக்கு இது குறித்து எழுதுவதாகச் சொன்னார். பிஷப் அவருடைய தலைவருக்கு. அவர்
நேரடியாக போப்பாண்டவருக்கு. இப்படியாக உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பு இந்த விஷயத்தில் கிடைக்கும்.

ஆனால் அவருடைய மேதாவிலாசம் அங்கே எடுபடாமல் போனது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி அதி
வேகமாகப் பரவ, சில மணி நேரத்தில் அந்த வீட்டு நடையில் சந்தைக்கடை இரைச்சலோடு கும்பல் நிரம்பி
வழிந்தது. அவர்கள் வீட்டையே தகர்த்து விடலாம் என்பதால், கத்தி சொருகிய துப்பாக்கியோடு காவல்படை
வந்து இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது.

வீட்டு நடையில் குவிந்த குப்பைகளை எடுத்துத் துப்புரவு செய்து அலுத்துப்போன எலிசிந்தா, வீட்டு நடையைச்
சுற்றி வேலி அடைக்கலாம் என்றும் தேவதூதனைக் காண வருகிறவர்களிடம் ஆளுக்கு ஐந்து காசு நுழைவுக் கட்டணம்
வாங்கலாம் என்றும் முடிவு செய்தாள்.

அதிசயத்தைப் பார்க்க ஆசை கொண்டவர்கள் தொலை தூரத்திலிருந்து எல்லாம் வந்தார்கள். ஊர் ஊராகப் போகும்
ஒரு களியாட்ட விழாக்குழுவும் வந்தது. அதில் ஒரு வித்தைக்காரன் கூட்டத்தின் தலைகளுக்கு மேல் பறந்து
வேடிக்கை காட்டினான். ஆனாலும் யாரும் அவனை லட்சியம் செய்யவில்லை. காரணம் அவனுக்கு இருந்தவை வௌவால்
சிறகுகள் தான். தேவதூதன் போல் பெரிய இறக்கைகள் இல்லை.

உலகின் மிகுந்த துர்பாக்கிய வசப்பட்ட உடல் குறையுள்ளவர்கள் தாங்கள் நலம் பெற வந்தார்கள். ஒரு ஏழைப் பெண்மணி வந்தாள். அவள் சிறு வயதிலிருந்து தன் இதயத் துடிப்புகளை ஒன்று விடாமல் எண்ணி, இனிக் கணக்கு வைக்க அவளிடம் எண்கள் தீர்ந்திருந்தன. போர்ச்சுக்கலில் இருந்து ஒரு மனுஷ்யன் வந்திருந்தான். அவனைத் தூங்கவிடாமல் நட்சத்திரங்களின் சத்தம் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததாம். அப்புறம், தூக்கத்தில் நடக்கும் ஒருவன். அவன் விழித்திருக்கும் செய்த எல்லாவற்றையும் தூக்கத்தில் நடந்து கலைத்துப் போடுகிறவன்.


இன்னும், அத்தனை கடுமையான உபாதைகள் இல்லாத பலரும் கூட வந்திருந்தார்கள். இந்த மகா கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் இடையே பெலாயோவும் எலிசிந்தாவும் களைத்துப் போனபடி சந்தோஷமாக இருந்தார்கள். இருக்காதா பின்னே? ஒரு வாரத்துக்குள் வீட்டு அறைகள் முழுக்கப் பணம் சேர்த்து அடைத்து வைத்திருந்தார்கள். தேவதூதனைத் தரிசிக்க நின்ற யாத்திரீகர்களின் வரிசை தொடுவானத்துக்கு அப்பால் நீண்டிருந்தது.


தேவதூதன் மட்டும் இதிலெல்லாம் பங்கு பெறாமல் இருந்தான். அவன் கடன் வாங்கிய தன் இருப்பிடத்தில்
முடிந்தவரை சௌகரியமாக இருக்க முயன்றான். முள்வேலியைச் சுற்றி ஏற்றி வைத்த எண்ணெய் விளக்குகளும், தரிசிக்க வந்தவர்கள் ஏற்றி வைத்த புனிதமான மெழுகுதிரிகளும் கிளப்பிய சூடு நரக வேதனையாக
இருந்திருக்கும்.


முதலில், அவனைச் சில அந்துருண்டைகளைச் சாப்பிட வைக்க முயன்றார்கள். அந்துருண்டை தான் தேவதூதர்கள்
சாப்பிட விதிக்கப்பட்ட உணவு என்று எல்லாம் தெரிந்த பக்கத்து வீட்டு அம்மா சொன்னதே காரணம். ஆனால்
அவன் அவைகளைச் சாப்பிடவில்லை. அதேபோல், மடாலயங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட பாதிரிகள்
சாப்பிடும் புனிதமான உணவையும் அவன் நிராகரித்தான். அதற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததா
அல்லது அவன் ரொம்பவும் வயசாளியாக இருந்ததா என்று யாருக்கும் தெரியவில்லை. கடைசியில், அவன்
கத்தரிக்காய்க் கூட்டு மட்டும் சாப்பிட ஆரம்பித்தான்.

அவனுடைய ஒரே அசாதாரணமான இயல்பு அவனுடைய பொறுமைதான். முக்கியமாக, கோழிகள் அவனுடைய
இறக்கைகளில் வானவெளிப் புழுப்பூச்சிகளைத் தேடித்தேடிக் கொத்திக் கொண்டிருந்தபோதும், முடவர்கள் அவனுடைய
இறக்கையிலிருந்து சிறகு பிய்த்தெடுத்துத் தங்கள் செயலிழந்து போன உடல் பகுதிகளில் வைத்துத் தடவிக்
கொண்ட போதும், இன்னும், சிலர் கல்லெறிந்து அவனை நிற்க வைத்துப் பார்க்க முயன்ற போதும் அவன்
பொறுமையாகவே இருந்தான்.

அவன் கொஞ்சம் பொறுமை இழந்தது ஒரே ஒரு தடவைதான். அவன் மணிக்கணக்காக அசையாமல் இருந்தபோது செத்துப்போய் விட்டானா என்று பரிசோதிக்க, கொதிக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் அவனுக்குச் சூடு
வைத்தபோது அவன் சிலிர்த்து எழுந்து, யோகிகளின் மொழியில் ஏதோ சொல்லியபடி, கண்களில் நீர்முட்ட எழுந்து நின்று தன் இறக்கைகளை இரண்டு தடவை விசிறி அடித்துக் கொண்டான். அப்போது கோழி எச்சமும், நிலாத் தூசியும்
பறக்க, இந்த உலகத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாத நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சூறாவளி எழுந்தது.


அவனுடைய எதிர்வினை கோபத்தால் எழுந்தது இல்லை. அது வலியால் ஏற்பட்டது என்று புரிந்தது, அப்புறம் அவர்கள் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அவர்களில் பலருக்கும் அவனுடைய நிதானம் ஒரு நாயகனின்
சாவகாசமான செயல்பாடு இல்லை என்றும் அது ஓய்வில் எழும் தீவிரமான செயல்பாடு என்றும் புரிந்தது.


கொன்சாகா பாதிரியார் கூட்டத்தின் குதூகலத்தை வேலைக்காரியின் ஆர்வ உந்துதல் பற்றிய சமன்பாடுகளால்
தக்க வைத்துக் கொண்டு, இந்தச் சிறைப்பிடிக்கப்பட்ட தேவதூதன் பற்றிய இறுதித் தீர்ப்பு மடாலயத்தின்
மேலிடத்திலிருந்து வருவதற்காகக் காத்திருந்தார்.


ஆனால் ரோமாபுரியிலிருந்து வந்த கடிதத்தில் நிலைமையின் அவசரமே தென்படவில்லை. அவர்கள் இந்த நபருக்குத் தொப்புள் இருக்கிறதா, அவன் பேசும் மொழியில் அராமைக் மொழியின் சாயல் புலப்படுகிறதா, அவனால் எத்தனை முறை ஒரு ஊசியின் முனையில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியும் .. இல்லை அவன் இறக்கை முளைத்த ஒரு நார்வே நாட்டுக்காரனா .. என்று கண்டறிவதிலேயே நேரத்தைச் செலவிட்டார்கள்.


இந்தக் கடிதங்கள் வந்தும் போயும் கொண்டிருப்பது முடிவே இல்லாமல் நீண்டிருக்கும்.. நல்ல வேளை, ஒரு நிகழ்ச்சி
பாதிரியாரின் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அந்த நாட்களில், கேளிக்கை விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊர் விட்டு ஊர் போகும் ஒரு கண்காட்சி நகரத்துக்கு வந்தது. பெற்றோருக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக ஒரு சிலந்தியாக மாற்றப்பட்ட
பெண்ணைக் கண்காட்சிப் பொருளாக வைத்து நடத்தப் பட்டது அது.


சிலந்திப் பெண்ணைப் பார்க்க, தேவதூதனைக் காணக் கொடுக்க வேண்டிய கட்டணத்தை விடக் குறைவாகத் தான்
வசூலிக்கப்பட்டது. அது மட்டும் இல்லை. அந்தச் சிலந்தியை முழுக்கத் தடவிப் பார்த்து, எல்லாவிதமான கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவள் ஆட்டுக்குட்டி அளவிலான ஒரு பயந்து போன சிலந்தியாக, நடுவே பெண் தலையோடு இருந்தாள்.


அவளுடைய அசாதாரணமான தோற்றத்தை விட, அவள் உண்மையான கரிசனத்தோடு தன் துரதிருஷ்டம் பிடித்த
வரலாற்றைச் சொன்னதே மனதைத் தொடுவதாக இருந்தது. பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடனமாடப் போய்,
ராத்திரி முழுக்க ஆடிக் களித்து விட்டுக் காட்டு வழியே வீட்டுக்குத் திரும்பி வரும்போது, வானம் பிளந்ததுபோல் இடி இடித்து மின்னல் கீற்று இறங்கி வந்து அவளைச் சிலந்தியாக மாற்றிப் போட்டதாம்.


அவளுடைய ஒரே உணவு, பரிதாபப்பட்ட நல்லவர்கள் அவள் வாயில் விட்டெறிந்த இறைச்சி உருண்டைகள் தான்.
இவ்வளவு மனுஷத்தனமான உண்மையும், அச்சுறுத்தும் படிப்பினையும் கொண்ட அவளுடைய இருப்பு, யாரையும்
ஏறெடுத்துக்கூடப் பார்க்காத மேட்டிமையான தேவதூதனின் காட்சியைச் சுலபமாக முந்திக் கொண்டு கூட்டம் சேர
வைத்தது.

தேவதூதன் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட ஒரு சில அற்புதங்களும் கிட்டத்தட்டக் கிறுக்குத்தனமானவையாக
இருந்தன. பார்வையில்லாத ஒருவனுக்கு அனுபவப்பட்ட அற்புதத்தில் அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கவில்லை.

ஆனால் புதிதாக மூன்று பற்கள் முளைத்தன. முடவன் ஒருவனுக்கு ஏற்பட்ட அற்புத அனுபவம் வேறு மாதிரி. அவனுக்கு நடக்க முடியவில்லை. ஆனால் லாட்டரிக் குலுக்கலில் அநேகமாக அவனுக்குப் பரிசு கிடைத்தது. தொழுநோய் பீடித்த ஒருவனின் புண்களில் சூரியகாந்திப் பூக்கள் பூத்தது இன்னொரு அதிசயம்.


இப்படி ஒன்று கிடக்க ஒன்று நடக்கும் ஆறுதல் அற்புதங்கள் தேவதூதனின் பெருமையைக் கீழே இறக்கிவிட்டன. அந்த
சிலந்திப் பெண் அதை முழுமையாக இல்லாமல் போக்கி விட்டாள்.

கொன்சாகா பாதிரியாரின் தூக்கம் வராத நோய் சொஸ்தமானது. பெலாயோ வீட்டு நடை திரும்ப ஆள் அரவமற்றுப் போனது.

ஆனாலும் பெலாயோவுக்கும் அவன் மனைவிக்கும் குறைப்பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. தேவதூதனைப் பார்க்க வசூலித்த காசில் அவர்கள் இரண்டு அடுக்கு வீடாகத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கட்டினார்கள். தோட்டமும்
பால்கனியும் அமைந்த அந்த வீட்டுக்குள் நண்டுகள் வராமல் இருக்க, சுற்றிலும் உயரமான வேலி அமைத்தார்கள்.

பெலாயோ சர்க்கார் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு நகரத்துக்குப் பக்கத்திலேயே முயல் பண்ணை
வைத்தான். எலிசிந்தா குதிகால் உயர்ந்த செருப்புக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் சீமாட்டிகள் உடுத்தும்
தரமான உடுப்புக்களும் நிறைய வாங்கினாள்.

கோழிக்கூடு மட்டும்தான் அப்படியே இருந்தது. அதை அவ்வப்போது கிருமிநாசினி கலந்த நீரால் கழுவிவிட்டு,
புகை போட்டது தேவதூதன் மேல் அவர்கள் வைத்திருந்த மரியாதையால் இல்லை. அங்கே கனமாகப் பிசாசு
போல் சூழ்ந்து புதுவீட்டைப் பழைய வீடுபோல் தோற்றம் அளிக்க வைத்த குடலைப் பிடுங்கும் கோழிக்கழிச்சல்
வாடை போய்த் தொலையத்தான்.

குழந்தை நடக்கத் தொடங்கியபோது அவன் கோழிக்கூட்டுக்குப் பக்கத்தில் போகாமல் இருக்கும்படி
ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சீக்கிரமே அவர்களுக்குப் பயம் தணிந்து, கோழிக்கூட்டு வாடையும் பழகிப் போனது. இரண்டாவது பல் முளைத்தபோது, அவன் விழுந்து கொண்டிருந்த கம்பிகள் அடைத்த கோழிக்கூட்டுக்குள் விளையாடப் போனான்.


தேவதூதன் குழந்தையிடமிருந்தும் விலகித்தான் இருந்தான். ஆனாலும் அது செய்யும் குறும்புகளை பிரமைகள் இல்லாத நாய் போல் பொறுத்துக் கொண்டான்.


இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தின் தட்டம்மை வந்தது. குழந்தைக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்குத் தேவதூதனின் இதயம் துடிக்கும் சத்தத்தை
எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று ஆசை. அப்படிக் கேட்க நேர்ந்தபோது அந்த இதயத்தில் ஏகப்பட்ட சீழ்க்கைச் சத்தமும், சிறுநீரகத்திலிருந்து வேறு சத்தங்களும் தட்டுப்பட்டன. இதோடு எல்லாம் கூடி எப்படி அந்தத் தேவதூதன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்றே
அவருக்குப் புரியவில்லை. அவனுடைய இறக்கைகள் இன்னொரு ஆச்சரியம்.


தர்க்கரீதியாகத் தேவதூதன் உடம்போடு அவை இசைந்துபோனது போல் ஏன் மற்ற மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கவில்லை என்றுதான் மருத்துவருக்கு
விளங்கவில்லை.


குழந்தை பள்ளிக்கூடம் போகத் தொடங்கியபோது மழையிலும் வெய்யிலிலும் சேதமடைந்து கோழிக்கூடு விழுந்துவிட்டது. இறந்து கொண்டிருக்கும் அநாதை போல் தேவதூதன் அங்கேயும் இங்கேயும் ஊர்ந்து
கொண்டிருந்தான். படுக்கையறையில் அவன் ஊர்ந்து வந்தால் விளக்குமாற்றால் அடித்து விரட்டுவார்கள். அடுத்த வினாடி அவன் சமையல்கட்டில் இருப்பான்.


அவன் தன்னைத்தானே பல வடிவங்களாக்கிக் கொண்டு, பல இடங்களில் ஒரே நேரத்தில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது.


இப்படி இழவெடுக்கும் தேவதூதர்களோடு மாரடித்து மாரடித்து வீடே நரகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று எலிசிந்தா
அலுத்துக்கொண்டாள்.


தேவதூதனால் எதையும் சாப்பிட முடியவில்லை. அவனுடைய புராதனமான கண்களும் பஞ்சடைந்து போய்க் கம்பங்களில் முட்டிக் கொண்டபடி ஊர்ந்தான். அவனுடைய இறக்கைகளின் கடைசித்துண்டு தான் மிச்சம் இருந்தது.
பெலாயோ அவன் மேல் ஒரு போர்வையைப் போர்த்தி, அவனைத் தொழுவத்தில் படுத்துக்கொள்ள அனுமதித்தான்.
அப்போதுதான் தேவதூதனுக்கு இரவில் காய்ச்சல் அடிக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்தது. அவன் ஜன்னி கண்டு நார்வேஜிய மொழி போல் ஏதோ பல்லை உடைக்கும் பாஷையில் பிதற்றிக் கொண்டிருந்தான். அவன். இறந்து விடக்கூடும் என்று அவர்களுக்குப் பயம் ஏற்பட்டது. செத்துப்போன தேவதூதர்களை என்ன செய்வது என்று பக்கத்து வீட்டம்மா கூடச் சொல்லவில்லை.


ஆனாலும் தேவதூதன் அந்த மோசமான குளிர்காலத்தைச் சகித்துக்கொண்டான். கோடை வந்தபோது அவன் உடல் நலம் தேறியது. முற்றத்தின் கோடியில் யாரும் காணாத இடத்தில் அவன் நாட்கணக்கில் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.


டிசம்பர் வந்தபோது அவன் இறக்கைகளில் புதிய சிறகுகள் முளைக்கத் தொடங்கின.ஆனாலும் அவை வைக்கோல் பொம்மையின் சிறகு போல் பரிதாபமாக இருந்தன. அவனுக்கு அதன் ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும். அந்தச் சிறகுகளை யாரும் பார்க்கக் கூடாது என்பதிலும்,
நட்சத்திரங்கள் முளைத்த ராத்திரியில் அவன் சில நேரங்களில் பாடிய கடற்பாட்டுக்களை யாரும் கேட்டு விடக்கூடாது என்பதிலும் கவனம் எடுத்துக் கொண்டதாகப் பட்டது.


ஒருநாள் காலை எலிசிந்தா பகல் உணவுக்காக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். கடலில் இருந்து வந்ததுபோல் ஒரு காற்று சமையலறையில் வீசியது.


அவள் ஜன்னல் அருகில் போய்ப் பார்த்தபோது காமாசோமா என்று தேவதூதன் பறக்க முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. அவன் நகங்கள் காய்கறி விளைந்திருக்கும் தோட்டத்து மணலில் ஆழப் பிராண்டிக் கொண்டிருந்தன. இறக்கைகளின் மடார் மடார் என்ற அடிப்பில் தொழுவமே
விழுந்துவிடும் போல் இருந்தது. அவனால் காற்றைப் பற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து கொண்டிருந்தான்.

ஒரு கிழட்டுக் கழுகு போல் இறக்கைகளை அபாயகரமான முறையில் அடித்தபடி அவன் பறந்து, தெருவின் கடைசி வீடுகளைக் கடந்து போனபோது எலிசிந்தா தனக்காகவும் அவனுக்காகவும் பெருமூச்சு விட்டாள்.


வெங்காயம் அரிந்தபடி, பார்வையில் இருந்து மறையும் வரை அவன் பறந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள் எலிசிந்தா. அதற்கப்புறம் அவன் அவள் வாழ்க்கையில் ஒரு தொந்தரவாக இல்லாமல் போனான். கடலின் தொலைவில் தெரியும் அடிவானத்தில் அவன் ஒரு கற்பனைப் புள்ளியாக
மட்டும் தெரிந்தான்.



மொழிபெயர்ப்பு - மத்தளராயன் என்னும் இரா.முருகன் - மே 2002

'ஒரு கிறிஸ்துமஸ் கதை'



மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் 'சக்கரியயுடெ பெண்கதகள்' மலையாளச் சிறுதொகைத் தொகுப்பில் (டி.சி புக்ஸ், கோட்டயம் வெளியீடு - 2001) இருந்து எனக்குப் பிடித்த இந்தச் சிறுகதையை மொழிபெயர்த்துத் தருகிறேன். சக்கரியாவின் எழுத்துகள் பற்றி நிறையப் பேசவேண்டும்.
--------------------------------


சித்தார்த்தனும் பத்ரோசும் சேர்ந்து அம்மிணி என்ற வேசியை ஒரு விடுதியின் அறைக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அடுத்த அறையில் இருந்த யாரோ அவளைத் திருப்பியனுப்பியபோது, சித்தார்த்தன் விடுதி வராந்தாவில் வைத்து அவளைச் சந்தித்ததன் பின்னால் நடந்தது அது.

"எனக்குப் பிராந்தியும் பிரியாணியும் வேணும்"

அவள் சொன்னாள். பிறகு சித்தார்த்தனின் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள். போர்வையைப் போர்த்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு அவள் கிடந்தாள்.

சித்தார்த்தனும் பத்ரோசும் சிறிது நேரம் அவளையே பார்த்தார்கள். பத்ரோசு பிராந்தியும் பிரியாணியும் வாங்க வெளியே போனபோது, சித்தார்த்தன் போர்வையை மெல்லத் திறந்து அவளை நோக்கினான்.

பிராந்தி குடித்து, பிரியாணியும் சாப்பிட்டு முடித்ததும் அவள் மீண்டும் கட்டிலில் படுத்து, போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிராந்தியின் போதையில் சற்றே ஆடிய தலைகளோடு சித்தார்த்தனும் பத்ரோசும் அவளை நோக்கியிருந்தார்கள்.

"தூங்கறதுக்கா நீ இங்கே வந்தே? நாங்க ரெண்டு பேர் இங்கே காத்திருக்கோம், தெரியுதா?".

பத்ரோசு அவளிடம் உரக்கச் சொன்னான்.

அம்மிணி சுவரைப் பார்க்கத் திரும்பி இருந்தாள்.

சித்தார்த்தன் சொன்னான் - "அவ நம்மளை ஏமாத்திட்டா".

அம்மிணி சுவரைப் பார்த்தபடியே சொன்னாள் - "நான் யாரையும் இதுவரை ஏமாத்தினது இல்லே. ரெண்டு நாளாச்சு நான் நல்லாத் தூங்கி. என்னோட சங்கடமும் கஷ்டமும் உங்களுக்குப் புரியாது. நான் கொஞ்சம் தூங்கறேனே".

"உனக்குக் களைச்சு இருந்தா, தூங்கு. நாங்களும் கொஞ்சம் தூங்கிக்கறோம்", என்று சொல்லியபடி பத்ரோசும் சித்தார்த்தனும் அடுத்த கட்டிலில் தூங்கினார்கள்.

மாலை மங்கும்போது அவர்கள் எழுந்தார்கள். அப்போது அம்மிணி கட்டிலில் உட்கார்ந்தபடியே தலை வாரிக்கொண்டிருந்தாள். அவள் வாய் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

"தூங்கி முடிச்சுட்டியா?"

பத்ரோசு கேட்டான்.

சித்தார்த்தன் அவள் மெல்லப் பாடிக் கொண்டிருந்த பாட்டைக் கேட்டபடியே கண்களை மூடிக் கிடந்தான்.

"ஒரு கிண்ணம் சந்தனம் கொண்டு ஓடி நடக்கும் வெண்ணிலாவே" என்று அவள் பாடிக் கொண்டிருந்தாள்.

"கிண்ணமாக விரித்த பூவிதழ்க் கைகளோடு காட்டுப் பூவின் இதயம் காத்திருக்குது".

சித்தார்த்தன் மீதிப் பாடலை முணுமுணுத்தான். அது அவனுக்கு விருப்பமான பாடல்.

அப்புறம் ஒருத்தன் வெளியே நாற்காலியில் இருந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்க மற்றவன் அவளோடு சுகித்தது நடந்தது. சித்தார்த்தனுக்கு ஏனோ சங்கடமாக இருந்தது.

ராத்திரிச் சாப்பாட்டு நேரம் பத்ரோசு மீண்டும் வெளியே போய்ப் பிராந்தியும், பிரியாணியும் வாங்கி
வந்தான்.

குடியும், சாப்பாடும் முடிந்ததும் அம்மிணி நாற்காலியில் உட்கார்ந்து, கட்டிலில் காலை நீட்டியபடி சொன்னாள்
"எனக்கு இப்போ தூக்கம் வரலே. என்னோட கஷ்டங்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? ஒரு வேசியின் வாழ்க்கை எப்படிப்பட்டது? எனக்குப் புருஷனும் ரெண்டு குழந்தைகளும் உண்டு. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அண்ணி, அக்கா, தங்கச்சி, மாமா, மாமி எல்லாரும் உண்டு. நான் வேசி. இதோட அர்த்தம் என்ன? நான் எங்கேயோ இருந்து வந்து உங்க கட்டில்லே கிடக்கறபோது நீங்களும் கேட்டிருக்க வேணாமோ இதோட அர்த்தம் என்னன்னு? நான் வேசியாக இல்லாம இருந்தால் எப்படி ஆகியிருப்பேன்? எனக்கு இது புரியவே இல்லை. நான் யாரு? மனைவியா? மகளா? அம்மாவா? உடன் பிறந்தவளா? காதலியா? வேசியா?"

சித்தார்த்தன் அவள் பாதங்களை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு சொன்னான் - "நீ ஒரு பாவப்பட்ட பொண்ணு. உன் பேர் என்ன?"

"இப்போ என் பேரு உங்களுக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்? எனக்குத் தொழில் ஆளை மயக்கறது".

அம்மணி தேம்பி அழத் தொடங்கினாள்.

"இப்பத்தான் நீங்க என் பேரைக் கேக்கறீங்க. இத்தனை நேரம் நீங்க யார்கிட்டப் பேசிட்டு இருந்தீங்க? யாரோட படுத்துக் கிடந்தீங்க?"

சித்தார்த்தனும் பத்ரோசும் குற்ற உணர்வோடு சொன்னார்கள் - "நீ எங்களை மன்னிக்கணும். உன்னை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. நீ இன்னிக்கு ராத்திரியும் வேணுமானா நாளைக்கும் இங்கேயே தங்கிக்கோ. நாங்க உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டோம்".

"அப்படீன்னா நீங்க முதல்லே என் கதையைக் கேளுங்க. என்னோட காதலன் என்னைத் தேடிட்டு வரக் கூடும். என்னோட புருஷன் என்னைத் தேடிட்டு வரக் கூடும். என்னோட அம்மாவோ அப்பாவோ இனி வரப்போறதில்லே.

நீங்க என்ன செய்வீங்க? ஆச்சரியப்படாம இருப்பீங்க என்றால் கேளுங்க. நான் வேசியானது என் புருஷன் சொல்லித்தான். அவனுக்குக் குடிக்க அதிகப் பணம் தேவையா இருந்தது என்கிறது அப்புறம் தான் தெரிஞ்சது. என் வீட்டுக்காரன் கூட்டிட்டு வரவங்களோட நான் படுப்பேன்.

அவன் வாசல் திண்ணையிலே பீடி வலிச்சிட்டு உட்காந்திருப்பான். அப்புறம் காசைக் கணக்குப் பண்ணி வாங்கிப்பான். அதுக்கு அப்புறம் என்னை அங்கேயும் இங்கேயும் தொட்டும் முகர்ந்தும் பார்ப்பான்.

நான் நடுராத்திரியானாலும் குளிச்சுட்டு என் குழந்தைகளோடு போய்த் தூங்குவேன். அப்பவும் எனக்கு என் புருஷனைப் பிடிச்சிருந்தது? ஏன்?

புருஷன்னா என்ன? எதுக்காக எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு? அவன் எனக்குக் கொடுத்த குழந்தைகளோடு இருக்கற அன்பு அவனுக்கும் ஆகிப் போனதோ? அவன் நிஜமாகவே என்மேல் பிரியம் வச்சிருக்கான் அப்படீன்னு நான் நினைச்சதாலா?

அவன் காசை எண்ணறதும் என்னை அப்புறம் மோந்து பார்க்கறதும் எனக்கு அலுத்தபோது எனக்கு ஒரு காதலன் கிடைச்சான். ஒரு லாரி டிரைவர். அவன் சாயந்திரம் எனக்கு பிராந்தியும் பிரியாணியும் கொண்டு வருவான். என் குழந்தைகளுக்கு நல்ல உடுப்புகளும் பொம்மைகளும் வாங்கித் தருவான். அவங்களைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோய் விடுவான். லாரியிலே அவன் பக்கத்துலே என்னை உட்கார வச்சு, எம்.சி.ரோடிலே வேகமாப் போவான். சினிமாவுக்குக் கூட்டிப் போவான். என் வாழ்க்கையிலே முதல் தடவையாக எனக்கு முத்தம் கொடுத்தது அவன் தான். உங்களுக்குத் தெரியுமா?"

அம்மிணி சட்டென்று எழுந்து நின்று கேட்டாள் -

"நான் இந்நேரம் முழுக்க உங்களோட இங்கே இருந்தாலும் நீங்க யாராவது எனக்கு முத்தம் கொடுத்தீங்களோ? எனக்கு உதடு இருக்குன்னு உங்களுக்கு நினைப்பு வந்ததா? முத்தம் பிடிக்கும் எனக்கும்"

சித்தார்த்தனும் பத்ரோசும் குற்ற உணர்ச்சியோடு சுவரைப் பார்த்தபடி இருந்தார்கள்.

சித்தார்த்தன் சொன்னான் - "எங்களுக்கும் இதுவரை யாரும் முத்தம் கொடுத்ததில்லே. நாங்க இன்னும் கொஞ்சம் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வரோம். எங்களுக்கு நீ முத்தம் கொடுப்பியா?"

அம்மிணி வேகமாக நடந்து அவர்களின் நெற்றியில் முத்தினாள்.

"குழந்தைகளுக்கு இது போதும்", என்றாள்.

"விளையாடாதே. நாங்க பிள்ளைங்க இல்லே. அம்மா முத்தம் கொடுக்கற மாதிரி இருந்தது நீ முத்தம் கொடுத்தது".

"அப்ப நீங்க பொய் சொன்னீங்க"

அம்மிணி அவர்கள் பக்கத்தில் போய் அவர்கள் இருவரின் முகங்களையும் தன் கொஞ்சம் கனத்த வயிற்றில் அணைத்தபடி சொன்னாள். "உங்க அம்மாவாவது உங்களுக்கு முத்தம் கொடுத்திருக்காங்களே. நானும் உங்க அம்மாதான். என் வயத்துக்குள்ளே உங்களோட குட்டித் தம்பியோட சுவாசம் உங்களுக்குக் கேக்கறதா?"

அவர்கள் பெருந்துன்பத்தோடு அம்மிணியின் கைகளிலிருந்து தங்கள் தலையை விடுவித்துக் கொண்டார்கள் அவளுடைய புடவைக்கும் ரவிக்கைக்கும் இடையே தெரிந்த வயிற்றை சந்தேகத்தோடு பார்த்தார்கள். தங்களுக்கு அதிலிருந்து ஒரு இதயம் துடிக்கும் சத்தம் கேட்டது என்று அவர்களுக்குத் தோன்றியது.

"என்னோட காதலனோட மகன் இவன். இவன் பேரு சித்தார்த்தன்" அம்மிணி சொன்னாள்.

சித்தார்த்தன் திடுக்கிட்டுப் போனான்.

"அது மகன் தான்னு உனக்கு எப்படித் தெரியும்?" பத்ரோசு கேட்டான்.

"அவன் என்னைக் கஷ்டப்படுத்தறான். வயித்துக்குள்ளே அப்படியும் இப்படியும் திரும்பிக் கிடக்கான். ஆண்கள் தான் இப்படிக் கஷ்டப்படுத்துவாங்க. இன்னொரு தடவை நீங்க அவனோட இருதயத் துடிப்பைக் கேட்கறீங்களா?"

சித்தார்த்தனும் பத்ரோசும் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தார்கள்.

"வேணாம். நீ எங்களை விளையாட்டுப் பிள்ளையா எடுத்துக்கிட்டே".

"உங்களை எப்படி நான் அந்த மாதிரி எடுத்துக்கிட்டதாச் சொல்றீங்க?"

அம்மிணி கேட்டாள்.

"உனக்குக் கர்ப்பம் இருக்குன்னு நீ எங்க கிட்டச் சொல்லவே இல்லியே?"

அம்மிணி உரக்கச் சிரித்துக் கொண்டு அவர்கள் பக்கம் ஓடிப்போய் அவர்கள் இருவர் கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.

"நான் கர்ப்பமா இருந்தாலும் இல்லாட்டாலும் உங்களுக்கு என்ன வந்தது? நீங்க இப்பப் பழகறது என்னோடு தானே? என்னோட வயத்துலே இருக்கற குட்டி மகனோடு இல்லியே? அவன் உங்களை என்ன செய்யப் போறான்?"

மகிழ்ச்சியில் பளபளக்கும் கண்களோடு அம்மிணி அவர்கள் கண்ணுக்குள் நோக்கியபடி நின்றாள்.

"அறையிலே வேறே யாரோ இருக்கற மாதிரி"

பத்ரோசு சொன்னான்.

"நீ ஏன் அவனுக்கு என் பெயரை வச்சே?"

சித்தார்த்தன் கேட்டான்.

அம்மிணி புன்சிரித்தபடி கட்டிலில் படுத்துப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

"உங்களுக்கு என் மகன் மேலே பயமா? அவன் பாவம். என் சிநேகிதனோட மகன். நானும் அவனும் கொஞ்சம் தூங்கறோம்".

சித்தார்த்தனும் பத்ரோசும் இரவின் இருட்டில் படி இறங்கிப் போய்ப் படகுத் துறையில் நீரில் நிழலிடும் படகுகளின் விளக்குகளைப் பார்த்தபடி நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். தூரத்தில் கப்பல்களின் அலறலை அவர்கள் கேட்டார்கள். முன்பு ஒரு காலத்தில் ஒரு மகன் பிறந்ததைக் கொண்டாட பாதி ராத்திரியில் மணிகள் முழங்கின.

"சித்தார்த்தா".

பத்ரோசு கூப்பிட்டான்.

"என்ன?"

"இன்னிக்கு கிறிஸ்துமஸ்".

"ஆமா" என்றான் சித்தார்த்தன்.

"சரிதான்".

அப்புறம் மேலே, ராத்திரியின் உயரங்களில் ஒரு பனிப்புகையிலூடே ஆகாசத்தின் பால்வழியைப் பார்த்தபடி சித்தார்த்தன் மெல்லப் பாடினான்.

"ஸ்ரீமகாதேவன் தன்ரெ ஸ்ரீபுள்ளோர்க் குடம் கொண்டு ஓமன உண்ணியுடே ..".

பிறகு அவர்கள் திரும்பிப் போனார்கள். அம்மிணியின் தூக்கம் கெடாமல், ஒரு சத்தமும் காட்டாமல், கட்டிலில் படுத்தபடிக் கண்களை மூடாமல் பதுமைகள் போல் கிடந்தார்கள்.

அவர்களின் காதில் பெருஞ்சத்தமாக தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது தங்களின் இதயத் துடிப்போ, அம்மிணியின் கர்ப்பத்தில் உள்ள சிசுவின் இதயத்துடிப்போ என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ராத்திரியில் எப்போதோ அம்மிணி தூக்கத்தில் ஏதோ சொல்வது கேட்டு அவர்கள் நடுங்கினார்கள். அவளுடைய அமைதியான சுவாசத்தின் அலைகள் மீண்டும் அவர்களைத் தழுவிச் சென்றன.

"தெய்வமே".

சித்தார்த்தன் மெல்லச் சொன்னான்.

"என்ன சொன்னே?"

பத்ரோசு கேட்டான்.

"ஒண்ணுமில்ல".

அப்புறம் ஒரு தொட்டிலைப் போல் அந்தக் கட்டில் அவர்களையும் கனவில்லாத ஓர் உறக்கத்தில் ஆழ்த்தியது.

(பால் சக்கரியாவின் 'ஒரு கிறிஸ்துமஸ் கத' - மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு - இரா. மு
- translation Aug 2003 )

Friday, September 23, 2005

பத்திக்கிட்டால் பத்துக் கலைப் படம்


நூறு வருடத்துக்கு முந்திய, இன்னும் சரியாகச் சொல்லப் போனால், விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேயர்கள் குளித்தார்களா? தினசரியோ அல்லது வாரம் ஒரு தடவையோ அதுவும் இல்லாத பட்சத்தில் லீப் வருடத்தில் பிப்ரவரி 29ம் தேதியோ தவறாமல் குளிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது என்று எந்த சரித்திர ஆசிரியராவது எழுதினால் அதெல்லாம் ரீல் என்று நிரூபிக்க நான் தயார்.

ப்ரூப் வேணுமா? கொஞ்சம் என்னோடு யார்க்ஷயருக்கு வாருங்கள். விக்டோரியா ஓட்டல் என்ற புராதனமான தங்கும் விடுதியில் குளியலறையை வெளியில் இருந்து பாருங்கள்.

உள்ளே போகலாம்தான். ஒடுங்கலான அந்த அறைக்குள் ஒரு தினுசாக உடம்பை உடும்பாக வளைத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும். அதே போஸில் ஷவரைத் திறக்க வேண்டும். ஒருக்களித்தபடியே குளித்துவிட்டு சுளுக்குப் பிடிப்பதற்கு முன் வெளியே வர வேண்டும்.

ரைட் ராயலாக உள்ளே நுழைந்தால் எசகு பிசகாகச் சுவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு தீயணைப்புப் படையைக் கூப்பிட வேண்டியிருக்கும். அதுவும் அந்த ஊர்த் தீயணைப்புப் படையில் ஆறரை அடி உயரத்தில் கட்டு மஸ்தான பெண்மணிகள் அதிகம். நாலு சவரன் தங்கச் செயினை அழித்து ஒரு பவுன் மோதிரம் நாலு செய்கிறதுபோல், ஒரு தீயணைப்பு மாமியை அழித்தால் என் சைஸ் ஆசாமிகள் மூணு பேரைத் தோராயமாகச் செய்து நிறுத்தலாம்.

இந்த வீராங்கனைகள் இரண்டு பேர் வந்து பாத்ரூமிலிருந்து வெடுக்கென்று வெளியே பிடித்து இழுத்தால் இடது கை, வலது முழங்கால், தோள்பட்டை என்று தனித்தனியாக வந்து விழுந்து அப்புறம் உத்தேசமாக ஒட்டிச்சேர்க்க வேண்டியிருக்கும்.

தீயணைப்புப் படை என்ன, இங்கிலாந்து தேசியக் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்கவிட்டுக் கொண்டு பட்டாளமே கொட்டி முழக்கிக்கொண்டு வந்தாலும் விக்டோரியா ஓட்டல் ஷவரில் தண்ணீர் வராது. குழாயைத் திறந்து இரண்டு நிமிடம் ஆனபிறகு சன்னமாக சீசன் ஓய்ந்த குற்றால அருவி மாதிரி சலித்துக்கொண்டு ஒழுக ஆரம்பிக்கும்.

இவ்வளவுக்கும் அந்தப் பட்டணத்தில் எக்கச் சக்க மழை பெய்து ஏரி, குளம் எல்லாம் எப்பவும் ரொம்பி இருப்பதால், முனிசிபாலிட்டிக்காரர்கள் லோக்கல் பத்திரிகைகளில் விளம்பரம் தருவது இந்த மோஸ்தரில் - ‘மகாஜனங்கள் எல்லோரும் நிறையத் தண்ணீரைச் செலவழிக்கும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தண்ணீர் நமக்கு இயற்கை கொடுத்த வரம். தினமும் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இன்னும் நாலு பக்கெட் பிடித்துத் தோட்டத்துச் செடிகொடிகளுக்கு நீர்பாய்ச்சுங்கள். தினசரி ஒரு மணி நேரமாவது ஷவரில் குளியுங்கள்'.

விக்டோரியா ஓட்டல் நிர்வாகிகளை அந்த ஊர் நகரசபைக்கும், நகரசபை உறுப்பினர்களை நம்முடைய தருமம் மிகு தண்ணீர் குறை சென்னைக்கும் நாலு வாரம் அனுபவப் பயிற்சி பெற அனுப்ப வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு குளித்துத் திரும்பினேன் ஒரு ஞாயிறு காலையில். அது ஓட்டலில் குடித்தனம் வைத்து வெற்றிகரமாகப் பத்தாவது நாள்.

காலைச் சாப்பாடு ரெடியா என்று கீழ்ப் போர்ஷனில் விடுதிக் காப்பாளார் மார்த்தா அம்மையாரை டெலிபோனில் விசாரிக்க. விடிகாலையிலேயே ஏண்டாப்பா பிராணனை வாங்கறே என்றார் அந்தம்மா.

காலை பத்து மணி விடிகாலையானதற்குக் காரணம் முந்திய ராத்திரி விடிய விடிய ஊர்கூடிக் கூத்தடித்துக் கொண்டிருந்ததுதான். சனிக்கிழமை சாயந்திரம் ஊர் மக்கள் ஓட்டல் கீழ்த்தளத்தில் சுதி ஏற்றிக் கொண்டு பழைய ஜாஸ், கண்ட்ரி ம்யூசிக் பாட்டுகளைக் கர்ண கடூரமாகப் பாடி ஆட ஆரம்பிப்பது, நடு ராத்திரி வரை தொடரும். நான் அரைகுறைத் தூக்கத்தில். சபரிமலை அய்யப்ப சாமிக்குப் படிப்பாட்டு பஜனை, தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் கோஷ்டி கானத்தைக் கேட்டபடி பிரயாணம் என்று சத்தத்தின் பாதிப்பில் தினுசு தினுசாகக் கனவு கண்டு விழித்துக் கொள்ளும்போது கீழே ஓட்டல் இசைக்குழு ட்ரம்காரர் ஓங்கி முரசரைந்து ஒரு பாட்டை முடித்து அடுத்ததை ஒரு வழி பண்ணக் கிளம்பி இருப்பார்.

இன்ஸ்டால்மெண்ட் தூக்கத்தில் ஒருதடவை இப்படி எழுந்தபோது, தலைமாட்டில் சுருட்டு வாசனை. கண் சிவந்த ஒரு வெள்ளைக்காரர். மனுஷர் நீட்டி நிமிர்ந்து சோபாவில் சாய்ந்து நிம்மதியாகப் புகைவிட்டபடி டெலிவிஷன் பார்த்துக்கொண்டு இருந்தார். துள்ளி எழுந்து விளக்கைப் போட்டேன். பத்திரமாக உள்புறமாகப் பூட்டிவிட்டுப் படுத்துக் கொண்ட என் அறையில் இவர் எப்படி நுழைந்தார்? ஏன் நுழைந்தார்?

அவருக்கும் என்மேல் அதேபோல் சந்தேகம். வயல்காட்டுப் பக்கம் விடிகாலையில் குத்த வைக்கப்போகிற எங்கள் கிராமத்துப் பெரிசுகள் போல் பக்பக் என்று சுருட்டு பாட்டுக்கு புகையோடு இழுபட்டுக் கொண்டிருந்தது. பெயரை உச்சரிப்பது போல் அவருடைய அறை எண்ணை அவர் உச்சரிக்க, நான் என்னுடையதைச் சொன்னதோடு மேஜையில் வைத்திருந்த சாவிக்கொத்தில் மேற்படி எண்ணைக் காட்டி சந்தேகமற நிரூபித்தேன். என் ரூம்தான்.

மாடிப்படியில் எத்தனையாவது வளைவிலோ தவறாகத் திரும்பி இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். அதைவிட இன்னொரு பெரிய உண்மை ஏக காலத்தில் எங்கள் இருவருக்கும் புலப்பட்டது. விக்டோரியா ஓட்டலில் எல்லா அறைச் சாவியும் ஒரே மாதிரித்தான். ஒரு சாவி இருந்தால், இருக்கப்பட்ட முப்பது அறையில் எதில் வேணுமானாலும் சுளுவாக நுழைந்து விடலாம்.

இந்த ஞானோதயத்தோடு ராத்திரி ரெண்டேகாலுக்குக் கைகுலுக்கி விடைபெறும்போது அந்த ஐரிஷ்காரர் நான் உடுத்தியிருந்த எட்டுமுழ வேட்டியை உற்றுப் பார்த்தார். "இப்படி பெட்ஷீட்டை இடுப்பில் கட்டிக் கொண்டால் படுக்கையில் விரித்துப் படுக்க என்ன பண்ணுவே?' என்று கரிசனத்தோடு கேட்டுப் போனாரே பார்க்கலாம்..

சனிக்கிழமை ராத்திரி இப்படி எதிர்பாராத விருந்தாளிகளை வரவேற்று உபசரித்துச் சப்த சமுத்திரத்தில் கரையேறுவதில் கரைந்து போனால், மற்ற ராத்திரிகள் கொஞ்சம் வித்தியாசமாக பயர் அலாரம் அலறுவதில் உயிர் பெறும்.

ஏகக் களேபரமாகப் பத்து நிமிடம் ‘தீப்பிடிச்சுடுத்து, ஓடு, ஓடு' என்று அது அலறும். பதறி அடித்து பேண்டுக்குள் காலை நுழைத்துக் கொண்டு, கைக்குக் கிடைத்ததை வாரிச் சுருட்டிக் கக்கத்தில் இடுக்கியபடி பிராணபயத்தோடு கீழே ஓடினால், மற்ற அறைக்காரர்களும் அவ்வண்ணமே. அவர்களில் அரைக்காலுக்கு கீழே கண்டிப்பாக இறங்காத இறுக்கமாக நிஜார் அணிந்த ரதிகள் நாலைந்து பேராவது கட்டாயம் இருப்பார்கள். தீயாவது, விபத்தாவது என்று படு அலட்சியமாக இந்தத் தலைமுறையின் கனவுக்கன்னிகளான ஷாரப்போவாவுக்கும், பமீலா ஆண்டர்சனுக்கும் ஏனையோருக்கும் சவால் விடும் வனப்போடு அவர்கள் ஓட்டல் வாசல் நாற்காலியில் அட்டணக்கால் போட்டபடி சிகரெட் குடித்துக் கொண்டிருப்பதை பார்க்கத் தடையுத்தரவு போடும் என் மனசு. மகா அல்பமாக அது, எடுத்துவர மறந்துபோன இருமல் மருந்தை, ஜீரண மாத்திரையை, மூக்கடைப்பு களிம்பைச் சுற்றி ஜலதோஷத்தோடு சுழன்று கொண்டிருக்கும்.

"ஓட்டல் சலவைக்கூடத்தில் எலியோ எதோ ஒயரைக் கடிச்சுப் போயிருக்கு. அதான் பயர் அலார்ம் கூவினது. சமத்தாப் போய்த் திரும்பத் தாச்சிக்கோ' என்று மார்த்தா அம்மையார் கட்டளையிட அறைக்குத் திரும்ப நடந்தது பத்துக்கு மூன்று ராத்திரி அரங்கேறிய கதை. அதற்கப்புறம் தூக்கம் பிடிக்காமல் டெலிவிஷனைப் போட, ரெப்பல்ஷன், டெணண்ட் என்று மூணு ராத்திரியும் ரோமன் போலன்ஸ்கியின் அருமையான திரைக்காவியங்களை தொலைக்காட்சி தயவில் பார்த்தேன்.

‘வீடு போன்று சவுகரியமான' ஹோம்லி சூழ்நிலை அமைந்திருந்தால் மற்ற ரசனைக்கெல்லாம் இல்லாவிட்டாலும், கலை ரசனைக்காவது ஏதோ தீனி போடமுடிந்த நிம்மதி.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - 11 செப்டம்பர் 05

Sunday, September 18, 2005

வீடு கணக்கா ஓட்டல்


‘வீடு மாதிரியே சகல வசதியும் கொண்ட‘ என்று விளம்பரப் படுத்தப்படும் சாப்பாட்டு ஹோட்டலையோ, லாட்ஜையோ கண்டால் பலபேர் எப்படி காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்புத் துண்டாக அங்கே போய் விழுகிறார்கள் என்பது புரியாத சமாசாரம். இப்படியான ‘ஹோம்லி’ அடைமொழியை விளம்பரப் பலகையில் பார்த்ததுமே கங்காருவாக நாலடி அந்தாண்டை தாண்டிக் குதித்து ஓடி ரட்சைப்பட வேண்டாமோ! படாதவன் பட்ட பாடு, அதுவும் பரங்கி தேசத்தில் - ஏன் கேக்கறீங்க, இதோ.

“முழிச்சிக்கோ பாய், இடம் வந்தாச்சு. வீடு கணக்கா சவுகரியமான ஓட்டல்” என்று சொன்னான் மான்செஸ்டர் ஏர்போர்ட்டிலிருந்து என்னை டாக்சியில் வைத்து ஓட்டி வந்த பாகிஸ்தானி இளைஞன்.

ஒரு ஏற்றம், ஒரு இறக்கம் என்று பத்து அடிக்கு ஒரு தடவை பூமியே தண்டால் பஸ்கி எடுக்கிற மாதிரி எழுந்து தாழ்ந்திருந்த பகுதியில் கார் நின்றிருந்தது. இங்கிலாந்துதான். ஆனால் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு என்று கேஷுவலாக இருநூறு வருடம் பின்னால் போன மாதிரி உணர்வு .

மேற்கு யார்க்ஷையர் பகுதியில் அந்த சின்ன ஊரில் ஆளை அடிக்கிற மாதிரி பிரம்மாண்டமும், அழுக்கும் அடைசலுமாகக் கட்டிடங்கள். “இதுதான் எல்லா சவுகரியமும் இருக்கப்பட்ட விக்டோரியா ஓட்டல். குஷியாத் தங்கு”, டாக்சிக் கட்டணத்தை வாங்கிக் கொண்டு பாகிஸ்தானி போக, கொட்டாவி விட்டுக்கொண்டே ஒரு வெள்ளைக்காரக் கொள்ளுத் தாத்தா வாசல் கதவைத் திறந்து உள்ளே வரச்சொன்னார்.

அந்த ஒடுக்கமான வாசலைக் கடந்து நான், என் சூட்கேஸ்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் இத்தனையும் பத்திரமாக உள்ளே போக, புலி-ஆடு-புல்லுக்கட்டு புதிர் போல் வாசலுக்கும் உள்ளுமாக ஏகப்பட்ட விசிட். அதில் ஒரு பெட்டி கோபித்துக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று உருண்டு, சமவெளி இல்லாதபடியால் தெருக்கோடி தாண்டி ஊர் எல்லைக்கே போய்விட்டிருந்தது.

முதல் மாடியில் அறை. உளுத்துப்போக ஆரம்பித்திருக்கும் மரப்படிக்கட்டில் ஏறி அங்கே போக வேணும். அந்தப் படிக்கட்டு ஏழு தடவை வலமும் இடமும் வளைந்து திரும்ப, அங்கங்கே சின்ன மரக்கதவுகளைத் திறந்து மூடிக் கடந்து போக வேண்டிய கட்டாயம். ஒவ்வொரு கதவைக் கடக்கவும் இன்னொரு தடவை புலி - ஆடு - புல்லுக்கட்டு. எல்லாம் கடந்து போனால், தலையில் நாகரத்தினத்தை வைத்துக் கொண்டு ஒரு பாம்புக் கன்னி தெலுங்கு சினிமாப் பாட்டோடு வளைந்து நெளிந்து நடனமாடி என்னை வரவேற்கப் போகிறாள். அப்படித்தான் என் அந்தராத்மா காலதேச வர்த்தமானமில்லாமல், சுருட்டுக் குடித்துக் கொண்டு சொன்னது.

நாககன்னி இல்லை, கவுன் போட்ட பாட்டியம்மா வரவேற்றாள் அறைவாசலில்.

“கூரையிலே பயர் அலார்ம் இருக்கு. தீப்பிடிச்சா அலறும்” என்று சுருக்கமாக ராணியம்மா மிடுக்கில் சொன்னார் விடுதியின் காப்பாளரான அந்த அம்மையார். விக்டோரியா ராணியின் ரெண்டு விட்ட சித்தப்பா பேத்தியாக இருக்கலாம்.

அறையில் நாலு பீங்கான் கோப்பை, ஒரு மின்சாரக் கெட்டில், சோப்பு, பால்பொடி, சர்க்கரை, டீத்தூள் பொட்டலம் என்று சின்னச் சின்னதாக பிளாஸ்டிக் தட்டில் நிறைத்து வைத்துவிட்டுப் போன போது ‘கதவை மறக்காமல் தாழ்ப்பாள் போட்டுக்கோ” என்று உபதேசமும் அளித்தார் அவர்.

அறைச் சுவரில் விக்டோரியா மகாராணி புகைப்படம் கொஞ்சம் ஆம்பளைத்தனமாக முறைத்து ‘தலை பத்திரம். சிகரெட், சுருட்டு வாடை எல்லாம் எனக்குக் கட்டோடு பிடிக்காது பயலே” என்றது.

கட்டிலில் உட்கார்ந்தபடி மேல் கூரையைப் பார்த்தேன். தொட்டு விடும் தூரம் தான் அந்த மரக் கூரை. புகை விட்டு அங்கே பயர் அலாரத்தை அலற வைக்க வேண்டாம். மேலே அண்ணாந்து பார்த்து வாயைத் திறந்து ‘பயர்’ என்று கொஞ்சம் உரக்கச் சொன்னாலே போதும், அது கூவ ஆரம்பித்துவிடக் கூடும்.

கட்டிலுக்குப் பக்கம் மேஜைக்கு நடுவே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கருப்புப் பெட்டி வால்வ் ரேடியோவாக இருக்கலாம் என்று ஊகம். சுவிட்சைப் போட்டு ஐந்து நிமிஷம் சூடான பிறகு செய்தி அறிக்கையில் இரண்டாம் உலக யுத்தம் முடிந்த செய்தி வரும் என்று காத்திருந்தேன். ஒலிக்கு முன்னால் ஒளி வந்து சேர்ந்தது.

டெலிவிஷன் தான். அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங்க் ஏற்படுத்தி எழுதிக் கொண்டிருந்தபோது உருவாக்கினதாக இருக்கலாம். பிரிட்டீஷ் சர்க்கார் சமாச்சாரமான பி.பி.சி சானல் ஓடிக் கொண்டிருந்தது. பி.பி.சி ரேடியோவோ, டிவியோ, நாலு வயசன்மார் வட்ட மேஜையைச் சுற்றி உட்கார்ந்து உலக நடப்பு விவாதித்து, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுவது கனஜோராக நடக்கிற நிகழ்ச்சி. இப்போதும் அப்படியான துரைகளும், துரைசானிகளும் ஆஜர்.

பேசுகிற விஷயத்தை சுவாரசியமில்லாமல் கேட்டபடி படுக்கையில் விழுந்தபோதுதான் அவர்கள் எல்லோரும் நீலப்படங்களை சென்சார் செய்கிற பிரிட்டீஷ் சென்சார் போர்ட் உறுப்பினர்கள் என்று தெரிந்தது.

சென்னையிலிருந்து அடித்துப் பிடித்து நீ யார்க்ஷையர் வந்தது இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கவா என்று அவர்கள் கண்டித்த மாதிரி இருக்கவே எழுந்து உட்கார்ந்தேன். அந்த மூத்த தலைமுறை வெள்ளைக்காரர்கள் படும் கஷ்டம் இருக்கிறதே, அந்தோ பரிதாபம். ஒரு மாதத்தில் குறைந்தது பத்து நீலப்படங்களையாவது தணிக்கை செய்ய வேண்டியிருக்கிறது. அதில் எந்தெந்தக் காட்சி ரொம்ப மோசம், எது எல்லாம் சுமார் பாசம் என்று தெளிவான முடிவுக்கு வர, ஒவ்வொரு படத்தையும் குறைந்தது நாலு தடவையாவது முதலிலிருந்து கடைசி வரை பார்த்து குறிப்பு எடுக்க வேண்டும். அப்புறம் விவாதிக்க வேண்டும்.

கவர்மெண்ட் இந்த போர்ட் உறுப்பினர்களுக்கு இதற்கான ஊதியமாக மாதாமாதம் கொடுக்கும் பிசாத்து பீஸ் யிரத்துச் சில்லறை பவுண்ட் (சுமார் எழுபத்தையாயிரம் ரூபாய்) யாருக்கு வேணும்? இந்தத் துன்பத்தை எல்லாம் தாங்க அது ஈடாகுமா என்ன?

பெரிசுகள் அங்கலாய்த்தபோது தூக்கம் போய் எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியாக வந்தது. ‘விலகிக்கோ பெரிசு, நான் உங்க சார்பிலே நாலு நாள் இந்தக் கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கறேன்’ என்று உதவிக்கரம் நீட்ட ஆசை.

‘கம்ப்யூட்டரைப் புளியஞ்சாதம் போல கட்டிக் கொடுத்து வேலை பார்த்துவிட்டு வான்னு அனுப்பினா நீலப்படமா பார்க்கிறே” என்று டெலிபதியில் சென்னைவாழ் வீட்டு, ஆப்பீஸ் தலைமைப் பீடங்கள் முறைக்க, டெலிவிஷனை அமர்த்திப் போட்டுத் தூங்கப் போனேன்.

சுருக் என்று ஏதோ முதுகுக்கு ரெண்டு செண்டிமீட்டர் கீழே கடித்ததாக உணர்ச்சி. பிரமைதான். இங்கிலாந்து குளிருக்கு ஊர்கிற, நகர்கிற, பறக்கிற, கடிக்கிற வர்க்கம் எல்லாம் உறைந்து போய் இருக்குமே. யார் சொன்னது என்று ஆட்சேபித்து, இன்னொரு சுருக் முந்தியதற்கு நாலு மில்லிமீட்டர் வலப்புறமாக.

எழுந்து உட்கார்ந்து விளக்கைப் போட்டால் முதல் காரியமாக பீஸ் ஆகியது அந்த பல்ப். “நூறு வருஷ பல்பை பியூஸ் ஆக்கிட்டியே பையா” என்று இருட்டில் விக்டோரியா பார்வை முதுகைச் சுட்டபோது அடுத்த சுருக்.

டார்ச்சை எடுத்துப் படுக்கையைப் பரிசோதிக்க, நான் காண்பதென்ன? சூரியன் அஸ்தமிக்காத இங்கிலாந்து பெருநாட்டுத் தங்கும் விடுதியில் ஓர் ஒரிஜினல் மூட்டைப் பூச்சி. தொல்லைகள் தொடரட்டும் என்று வாழ்த்தி ஓடி மறைந்தது அது.

(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - செபடம்பர் 4, 2005)

Saturday, September 17, 2005

ஓணப் பிற்றேன்ன


(ஓணத்துக்கு அடுத்த நாள்)

ஓணத்துக்கு அடுத்த அவிட்டமும் கழிந்த சதய நாளிது.

ஓணத்தன்று கவிஞர் சுகுமாரனுக்குத் தொலைபேசியபோது அவர் மலைப்புரத்தில் அலைந்து கொண்டிருந்தார். சூர்யா டிவியில் புள்ளிக்காரன் ஏற்பாடு செய்யும் 'வர்த்தமானம்' நிகழ்ச்சிக்கான அலைச்சல் அது. ஒரு நல்ல தமிழ்க் கவிஞரை கேரளா பாலிடிக்ஸ் இப்படியா அலையவிட வேண்டும்.

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்து சொன்னபோது, 'பொன் ஓணமில்லே, வெட் ஓணமாக்கும் இங்கே திருசூர்லே' என்றார். மழை நிற்கவேயில்லை அங்கேயும், ஆலப்புழையிலும்.

சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஓணம் எல்லாம் ஒருபோல தான் இப்போது. டிவி சானல் ஓணம். ஓட்டலில் 100 ரூபாய்க்கு ரிசர்வ் செய்து ஸ்பெஷல் ஓண சத்ய ஓணம் -ஒரு சுக்கும் இல்லை ரெண்டிலும்,

சானல் ஓணம் சானல் தீபாவளி மாதிரித்தான். சினிமா நடி நடன்மார் திரையை ஆக்கிரமிக்காத நேரங்களில் சின்னத்திரை நட்சத்திரங்கள். அப்புற்ம அந்த அந்த டிவிக்குச் செல்லப் பிள்ளைகளான பிரமுகர்கள் ஓணாசம்ச நேர்தல என்ற வாழ்த்துச சொல்லல். ஏகத்துக்கு விளம்பரங்களுக்கு
நடுவில் சினிமாப் படம்.

கைரளி டிவியில், அட்லாஸ் ஜுவல்லரி ராமச்சந்திரன் 'ஜனகோடிகளுடெ விஸ்வஸ்த ஸ்தாபனம்' என்று முகத்தில் ஜாக்கிரதையாக ஒட்டி வைத்த சிரிப்போடு அறிவித்துக் கொண்டு அடிக்கடி தோன்றி பாட்டும் கூத்துமாக எதேதோ ஸ்பான்சர் செய்கிறார்.

ஓணத்துக்கு முந்தைய உத்தராட நாளில் வந்த விக்ரம் பேட்டியை அங்கே இங்கே கொஞ்சம் மாற்றினால் நம்ம ஊர் சானலில் தீபாவளிக்கு ரீயூஸ் செய்து விடலாம். அவர் பேட்டியோடு காட்டப்பட்ட கிளிப்பிங்கள் மிக்கவாறும் தமிழ்ப் படங்கள் தான்.

ஆனாலும் இந்த ஓணம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குத்தான் பொன் - பிளாட்டினம் ஓணம். நேரறியான் மம்மூட்டி, மம்மூட்டியோடொப்பம், மம்முட்டியோடு ஒரு கூடிக்காழ்ச்ச என்று சகல சானலிலும் அவர்தான் பிரகாசித்தார். தூர்தர்ஷன் மலையாள்த்தில், நிஜமான ஜ்வலிப்பு - நாலு தாம்புக் கயிறு செயின் கழுத்தில், எல்லா விரலிலும் தாமரைக்கனி போட்டிருந்த சைஸ் மோதிரங்கள், கைத்தண்டையில் பிரேஸ்லெட், கோல்ட் செயின் வாட்ச் என்று நடமாடும் நகைக்கடையாக வந்தார் மம்மூக்கா, செட்டில் பீடி குடித்தபடி, டபுள் முண்டோடு காஷுவலாக தரையில் கால்வைத்து நடந்து கொண்டு, மம்மூட்டி என்ற பெயரில் ஒரு அற்புதமான நடிகர் இருந்ததாக ஞாபகம்.

மோகன்லால்? அவரும் எல்லா சானலிலும் தவறாமல் வருகிறார். 'பங்கஜ கஸ்தூரி - ப்ரீத் ஈசி' என்று ஆஸ்துமா மருந்து விளம்பரம் கொடுத்துக் கொண்டு.

ஏஷ்யாநெட்டில் கொஞ்ச நேரம் ஷீலா, ஜெயராம் நடித்த 'மனசினக்கரெ' பார்த்தபோது தோன்றியது - கொச்சுத் தெரசா ஷீலாவை விட, கூட நடித்த அந்தக்கால வில்லி நடிகை கேபிசிஏ லலிதா அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனாலும் ஷீலா ஷீலாதான்.

குறியேடத்துத் தாத்ரிக்குட்டிக்கும் (பார்க்க, இரண்டு வாரம் முன்னால் 'திண்ணை'யில் சுகுமாரன் கட்டுரை, மற்றும் ராயர் காப்பி கிளப்பில் என் பழைய கட்டுரைகள்) தன் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார் ஷீலா. ஆனாலும் இதைச் சிலவருடம் முன்னால் தொடங்கி வைத்த எழுத்தாளர் - நடிகர் - வசனகர்த்தா மாடம்பு குஞ்ஞுக்குட்டன் நம்பூத்ரியோ இப்போது தாத்ரி பிரச்சனையின் நூற்றாண்டு நிறைவில் அதைப் பற்றி பேசியவர்களோ எதுவும் பதில் சொல்லவில்லை.

(ஓவியம் ராடிக்கல் மூவ்மெண்ட் ஓவியர் என். என்.ரிம்சன் - நன்றி தேசாபிமானி)

அரசாங்க வாத்து


அரசுத் துறை தொலைக்காட்சியில் மலையாளம் தூரதர்ஷன் கொஞ்சம் தூக்கலாக அரசாங்க வாசனை வீசுவது. சம்பளம் வாங்கினோமா, வேலையைச் செய்தோமா என்று அதது பழகிப் பதிந்த தடத்திலேயே நடக்க, திருவனந்தபுரம் குடப்பனிக்குன்னு தூர்தர்ஷன் கேந்திரத்தில் பிள்ளை, குறூப், நம்பியார், நாயர், நம்பூத்ரி வகையறாக்கள் கடியாரத்தைப் பார்த்து வேலை செய்து சாயந்திரம் மழை வரும்போது குடையைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் போகிற ஸ்தலம் இது.

ராத்திரிகளில் தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியாக - லைவ் ·போன் இன் - நிசாகந்தி என்று ஒரு பரிபாடி. சினிமாவையே பெரும்பாலும் நம்பி இருப்பது இது. மலையாளத் திரைப் பாடலில் முத்திரை பதித்த காலம் சென்ற வயலார் ராமவர்மாவின் மகனான சரத்சந்திர வர்மா போன்ற இளம் பாடலாசிரியர்கள், பூவச்சன் காதர் போன்ற பழைய பாடலாசிரியர்கள், சுவாமி என்று எல்லோராலும் பிரியமாக அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி போன்ற முதுபெரும் இசையமைப்பாளர்கள், லெனின் ராஜேந்திரன் போன்ற கலைப்பட இயக்குனர்கள் என்று அவ்வப்போது நிசாகந்தியில் வந்தாலும் மற்ற நாட்களில் சினிமாக்காரர்கள் யாரையாவது பிடித்து வந்து நிகழ்ச்சி நடத்தி முடிக்கிற அரசாங்க அலுப்பு தெரிகிறது.

இப்படி மாட்டிய விருந்தாளிகளிடம் தொலைபேசி உரையாடுகிறவர்கள் பெரும்பாலும் இவர்களுடைய பந்துமித்திரர்களும் நண்பர்களுமே. நீங்க சௌக்கியமா, உங்க வீட்டுலே எருமைக் கண்ணுக்குட்டி, மாமியார், மச்சினி சௌக்கியமா என்று போஸ்ட் கார்டில் எழுதிக் கேட்கிற சமாச்சாரங்கள் தான் பெரும்பாலும். அண்ணாச்சி, போன மாசம் என்கிட்டே கைமாத்தா வாங்கிட்டுப் போன நூத்துப்பத்து ரூபாயை எப்பத் திருப்பப் போறீங்க என்று எப்போது யார் யாரைப் பார்த்துக் கேட்கப் போகிறார்கள் என்று ஆவலாக எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

இது இருக்கட்டும். பாரப்புரத்து எழுதிய ஒரு கதை - யாத்ரயுடெ அந்தம். கே.சி.ஜியார்ஜ் அதை தூர்தர்ஷனுக்காக ஒரு நல்ல தொலைக்காட்சிப் படமாக்கினார் ஐந்தாறு வருடம் முன்பு. எம்.ஜி.சோமன், முரளி, கரமன ஜனார்த்தனன் நாயர் போன்ற நடிகர்களின் அற்புதமான நடிப்பில் மிளிர்ந்த படம் இது. திருவனந்தபுரம் தூரதர்ஷன் மகிழ்ச்சியோடு திரையிட, நல்ல திரைப்படங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். சந்தோஷம்தானே, அப்ப இன்னொரு தடவை பாருங்க. தூரதர்ஷன் திரும்பத் திரையிட்டது யாத்ரயுடெ அந்தம் படத்தை. மறுபடி மகிழ்ச்சி. அப்புறம் திருவனந்தபுரம் தொலைக்காட்சியில் யாருக்குத் தோன்றியதோ - யாத்ரயுடெ அந்தம் படத்தை ஒளிபரப்பினால் மலையாளபூமியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடும் என்று. இப்போதெல்லாம் மாதம் ஒருதடவையாவது படம் அந்தச் சானலில் வரத் தவறுவது இல்லை.

இது கூடப் பரவாயில்லை.

ஏழு வருஷத்துக்கு முன்னால் மத்தளராயன் இங்கிலாந்து போவதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷனைப் போட்டால் பழைய மலையாளச் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி. ஜெயபாரதி வாத்து மேய்த்தபடி வாய்க்காலைக் கடக்க முற்படும்போது பாடிக் கொண்டே நனைவார். இங்கிலாந்திலிருந்து வந்து இங்கே கொஞ்சம் நாள் குப்பை கொட்டி விட்டு தாய்லாந்தில் அடுத்த வருடம் முழுக்க மசாஜ் செய்து கொண்டு திரும்பி வந்து டிவியைப் போட்டால் அதே ஜெயபாரதி, வாத்து, வாய்க்கால்.

அப்புறம் யு.எஸ், இங்கிலாந்து என்று துரைகளோடும் துரைசானிகளோடும் வருடக் கணக்கில் இழைந்து மறுபடி சென்னைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை புலர்காலைப் பொழுதில் ரிமோட்டை அழுத்தி மலையாள தூரதர்ஷனுக்குப் போனபோது தெரியவந்தது யாதெனில், ஜெயபாரதியும் அவர் மேய்க்கும் வாத்துக்களும் இன்னும் வாய்க்காலைக் கடந்து அக்கரைக்குப் போகவே இல்லை.

(செப்டம்பர் 2003-ல் எழுதியது)

சில பின்குறிப்புகள் 17 sep 2005
-----------------
1) இரண்டு வாரம் முன்னால் தூர்தர்ஷன் மலையாளம் சானலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அதே வாத்துகள். அதே ஜெ.பா. அடுத்த வாரம் மீண்டும் பயணம் வைக்க ஏற்பாடு. போய் சாவகாசமாகத் திரும்பி வரும்போது வா மற்றும் ஜெ-பா அங்கேயே இருக்க என் மனம் நிறைந்த வாத்துகள்.

2) என் குட்டநாடு புகைப்படத் தொகுப்பில் ஒரு வாத்தும் இல்லாத காரணத்தால் விடிகாலையில் கூகுளிக்க, நிறைய ஜெயபாரதி புகைப்படங்கள் கிடைத்தன. காலைக் காப்பி பறிபோனது.

Saturday, September 10, 2005

வாகன யோகம் - 2

பறப்பது என்பது பறவைகளுக்கு மட்டும் ‘படச்சோன்’ ஆன ஆண்டவன் வழங்கிய விசேஷ கன்செஷன். மனிதர்கள், அதிலும் நம்மைப் போன்ற சாமானியர்கள் பறக்க யத்தனித்தால் பின்னும் கஷ்டம் பெருங்கஷ்டம். விமானப் பயணத்தைச் சொல்கிறேன்.

விமானம் ரன்வேயில் பறந்து எவ்வி வானத்தில் ஏறியதும், ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி கையில் தட்டு நிறைய எடுத்து வந்து வழங்குவது மிட்டாயில்லை. டர்க்கி டவல் துண்டு. யூதிகோலன் செண்ட் மணக்க மணக்க, பார்த்தாலே முகத்தைப் புதைத்துக் கொள்ளச் சொல்லும் இந்தத் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்திருப்பார்கள். அது என்ன எழுதாத விதியோ, சென்னையில் வியர்த்து விறுவிறுத்து பிளேனைப் பிடித்தால் என் கையில் திணிக்கப்பட்ட டவல் வென்னீரில் நனைத்ததாக இருந்து வியர்வையை இன்னும் ஆறாகப் பெருக்கும். அண்டார்டிகா குளிரில் விமானம் ஏறினால், ஜில்லென்று ஐஸ்வாட்டரில் ஊறப்போட்ட துவாலையை நீட்டி மூக்கு, முழி, மூக்குக் கண்ணாடியை எல்லாம் உறைந்துபோக வைப்பார்கள். இந்த டவல் உபச்சாரம் மேலதிக மரியாதையோடு விமான உயர் வகுப்பிலும் ‘வேணும்னா எடுத்துக்கோ, இல்லாட்ட கம்முனு கெட’ பார்வையோடு எகனாமி கிளாஸ் என்ற கால்நடை வகுப்பிலும், வர்க்க பேதமில்லாமல் நடத்தப்படும்.

இந்திய அரசுடமையாக்கப்பட்ட விமான சர்வீசில் சாப்பாடு என்பது ஒரு விநோதமான சமாச்சாரம். காலைச் சாப்பாட்டு நேரத்தில் பயணம் செய்தாலும், மதிய உணவு அல்லது சாயந்திர, ராத்திரி டின்னர் நேரம் என்றாலும், உணவு கிட்டத்தட்ட ஒரேமாதிரித்தான். அது தென்னிந்திய உணவா, வட, வடமேற்கு, மிசோராம், அருணாசல் பிரதேசச் சாப்பாடா என்றெல்லாம் சுளுவில் கண்டுபிடித்துவிட முடியாது. கமிட்டி போட்டு இந்தியில் விவாதித்து வேற்றுமையில் ஒற்றுமை காண உருவாக்கப்பட்ட சாப்பாடு. தேசிய ஒற்றுமையை வளர்க்கிறதோ என்னமோ, தேசிய அஜீர்ணத்தை வளர்ப்பதில் அதன் பங்கு கணிசமானது.

சக பயணிகள் விமானப் பயணத்தில் இன்னொரு சுவாரசியமான அனுபவத்தைத் தரக்கூடியவர்கள். சிலர் விமானப் பணிப்பெண் அவ்வப்போது தரும் சகலமானதையும் மூட்டை கட்ட முனைவார்கள். சாக்லெட், காதில் அடைத்துக் கொள்ளும் பஞ்சு, பத்திரிகை, நீண்ட தூரப் பயணத்தில் பற்பசை, பிரஷ் என்று எல்லா ஏர்லைன் வஸ்துக்களும் கைப்பையில் அடைக்கலமாகி விடும். விமானங்களில் சாப்பாட்டு நேரத்தின்போது முன்பெல்லாம் எவர்சில்வரில் ஸ்பூன், வெண்ணெய் வெட்டும் கத்தி, முள்கரண்டி என்று அளிக்கப்படும். கையாலேயே சாப்பிட்டு, விரலால் காப்பியில் சர்க்கரை கலக்கிக் குடித்து இந்த உபகரணங்களைக் சேகரித்த என் சகபயணி ஒருவர் இருபது மணி நேரப் பயணத்தின் முடிவில் மினிசைஸ் பாத்திரக்கடை வைக்கும் உத்தேசத்தோடு பிளைட்டை விட்டு இறங்கிப் போனார்.

சிங்கப்பூரில் சற்றே ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பிய விமானத்தில் ஏறிய வயதான ஒரு பெண்மணி பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். அவர் கையில் துணி சுற்றி ஏதோ பாத்திரம். காணிக்கைப் பாத்திரத்தோடு யாத்திரை கிளம்பியிருக்கிறவர் போலிருக்கிறது. அதை மடியில் வைத்துக் கொண்டு சீட்பெல்டை அணிந்து கொள்ளக் கஷ்டப்பட்டார் பாவம். “எங்கிட்டே கொடுங்க, வச்சுக்கறேன்” என்று உதவிக் கரம் நீட்டினேன். வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

விமானம் பறக்க ஆரம்பித்ததும் மூடிவைத்த துணியை மெல்ல விலக்கினார். கண்கள் மூடியபடி இருந்தன. பாத்திரம் வாய்க்கு அருகே உயர்ந்தது. இது என்ன மாதிரி பிரார்த்தனை என்று புரியாமல் அவரையே பார்த்தேன். துப்பினார். அந்தப் பாத்திரத்துக்குள் தான். ஒன்றரை மணி நேரப் பயணத்தில் துப்பல் பாத்திரம் நூற்றுச் சில்லறைத் தடவை அவர் வாய்க்கு முன் உயர்வதை ஒரு நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையை அடைந்தாலும் ஏராப்பிளேன் இறங்காப்பிளேன் ஆக வானத்திலேயே ஏதோ நேர்ந்து கொண்டது போல் முப்பது முறை சுற்றி வந்தது. லேண்டிங்கில் சின்னத் தகறாராம். இந்தத் தகவலை அந்தப் பெண்மணிக்குத் தெரியப்படுத்தியபோது அவர் கலவரப்பட்டதில் மடிப்பாத்திரம் கிட்டத்தட்ட நிறைந்து என் மேல் துளும்பும் நிலைக்கு வந்து விட்டது. அதுவும் கடந்து விமானம் முழுவதையும் அது வெள்ளத்தில் ஆழ்த்துவதற்குள், நல்லவேளை விமானி பத்திரமாகத் தரையிறங்கி விட்டார்.

லண்டனிலிருந்து விமானம் ஏற ஹீத்ரு ஏர்போர்ட் போனபோது ஒரு தடவை விமானக் கம்பெனி ஊழியர் நைச்சியமாகச் சொன்னது இது - “நீங்க இந்த பிளைட்லே போகாமல், நாளைக்குக் கிளம்பிப் போனால், உங்களுக்கு உடனடியா இருநூறு பவுண்ட் பணம் (அதாவது கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய்) தரோம். த்ரீ ஸ்டார் ஓட்டலே ஒருநாள் ப்ரீயா எஞ்சாய் பண்ணுங்க எங்க செலவுலே. நாளை சாயந்திரம் பிளைட்டைப் பிடிச்சுடலாம்”.

விமானத்தில் சீட் எண்ணிக்கையை விடக் கூடுதலாக டிக்கெட் விற்றிருந்தார்களோ என்னமோ. டவுன் பஸ் போல் ஸ்டாண்டிங்க் பிரயாணம் எல்லாம் கிடையாது கையால் பயணத்துக்கு ஆயத்தமாக வந்தவர்களில் சிலரையாவது இப்படிக் கையூட்டுக் கொடுத்துத் திருப்பியனுப்ப முயற்சி. அதை வெற்றிகரமாக முறியடித்தேன். நான் இந்தியா திரும்பாவிட்டால் பத்துக்கோடி பவுண்ட் கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்று விளக்கினேன். (பத்துக்கோடிக்கு எத்தனை சைபர் போடணும்?). வேண்டா வெறுப்பாக எனக்கு விமானத்தின் கடைசியில் கழிவறைக்கு அருகில் சீட் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

கீகடமான இடத்தில் நடு சீட்டில் நான். ஜன்னலை ஒட்டிய இருக்கையில், வஞ்சனையில்லாமல் வளர்ந்த ஒரு பஞ்சாபிக்காரர். இந்தப் பக்கத்துச் சீட்டில் அதே சைசிஸ் ஒரு குஜராத்திக்காரர். பஞ்சாபிக்காரர் லண்டனில் சாப்பாட்டுக்கடை நடத்துகிறார். குஜராத்தியார் அங்கே தட்டுமுட்டுச் சாமான், பிளாஸ்டிக் வாளி இத்யாதி விற்கிற கார்னர் ஷாப் என்ற பெரிய சைஸ் பெட்டிக்கடை நடத்துகிறார்.

பத்தே நிமிடத்தில் இரண்டு பேரும் எனக்கு சிநேகிதமாக, ஒரு காதில் சாப்பாட்டுக்கடை நடத்துவதில் இருக்கும் பிரச்சனைகள் வந்து நிறைந்த வண்ணம் இருந்தன. இன்னொரு காது பெட்டிக்கடைக்காக ஒதுக்கப்பட்டது.

ரெட்டை ஸ்டீரியோவாக எனக்குக் கரைத்துப் புகட்டப்பட்ட பிரித்தானிய வியாபார நெளிவு சுளிவு, சந்திக்க வேண்டிய சவால்கள் ஒன்று கலந்து ஜீர்ணமானதில், ஏர்லைன்ஸ் சாப்பாடு கூட வேண்டியில்லாமல் வயிறு திம்மென்று இருந்தது. இவ்வளவுக்கும், இடியாப்பம், காரக்குழம்பு என்று தமிழ்ப் பதார்த்ததைச் சமைத்து இங்கிலீஷில் மெனுகார்ட் அடித்துப் பரிமாறிய பிரிட்டீஷ் விமானக் கம்பெனி சேவை அது.

சர்வதேச விமானப் பயணத்தில் சினிமா, சின்னத்திரை சீரியல் காட்சி என்று பல மொழியிலும் போடுவார்கள். ஒன்றுக்கு நாலு சானலில் இதெல்லாம் தெரிய குட்டியாக ஒரு டெலிவிஷன் நம் சீட்டுக்கு முந்தியதின் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு தடவை என் பக்கத்து சீட்டில் காவியுடுத்த சாமி. அவருக்கு நேர் முன் சீட்டில் அதி சிக்கனமாக ரவிக்கை போட்ட மாமி. முக்கால் திறந்த முதுகைக் கடந்து வருவது பக்திப் படமென்றாலும் வேண்டாம் என்று முற்றும் துறந்த சந்நியாசி சொல்லிவிட்டதால், பயணம் முழுக்க நானும் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு உபன்னியாச வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்க வேண்டிப் போனது.
பறவைகள் மட்டுமில்லை, பறப்பதும் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஆகஸ்ட் 28 2005)

வாகன யோகம் - 1


அதென்னமோ ராசிபலன் எழுதுகிறவர்களுக்கு என் ராசி என்றால் இளப்பம். ‘மேற்கே அல்லது தென்கிழக்கில் பயணம்’ என்று அவர்கள் எனக்குப் பலன் கணித்து எழுதியிருந்தால், மேற்படி யோகம் தனியாக வந்ததாக சரித்திரமே இல்லை. கூடவே அலைச்சல், வீண் செலவு, சுகவீனம் என்று ஏகப்பட்டது முன்பாரம் பின்பாரமாக ஆஜராகி விடும்.

உடனடியாகக் கிளம்பி லண்டன் போகச் சொல்லித் தாக்கீது பிறப்பிக்கப்படுவதில் தொடங்குவது இது. டிக்கட் வந்து சேர்ந்தும் சோதித்தால் வாஸ்கோடகாமா, கொலம்பஸ், மார்க்கோ போலோ என்று உலகம் சுற்றிய அந்தக்கால வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் ஞாபகம் வருவார்கள். சென்னையிலிருந்து நேரடியாக லண்டன் போக என்று இல்லாமல், கொழும்பு, மாலத்தீவு, மான்செஸ்டர் வழியாக லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்குப் போய்ச்சேர டிக்கட் எடுக்கப்பட்டிருக்கும். ஆகக் குறைந்த கட்டணத்தில் எடுக்கப்படுவதால் அலைந்து திரிந்து நொந்து நூலாகிச் சாவகாசமாகத்தான் இலக்கை அடைய வேண்டிய நிர்பந்தம்.

விமான நிலையத்தில் நுழைந்ததுமே தப்பான இடத்துக்கு வந்துவிட்டதாகத் துரத்தப்படலாம். ‘உன் மூஞ்சிக்கெல்லாம் பிளைட் ஒரு கேடா?’ என்கிற மாதிரித் துரத்தல் இல்லை இது. “விமான நிலையம் மாறி வந்திட்டீங்க சார்” என்று ஏர்போர்ட் வாசலில் காவல் இருக்கும் போலீஸ்காரர் என் பயணச் சீட்டைச் சோதித்து விட்டுச் சொன்னார் ஒரு முறை. சென்னையில் எனக்குத் தெரியாமல் ஏழெட்டு விமான நிலையம் எப்போது வந்தது என்று புரியாமல் அவரைப் பார்த்து டிரேட் மார்க் முழியோ முழி என்று முழித்தேன். இங்கே இருக்கிற கொச்சிக்கு விமானத்தில் போவதற்காக ஜம்பமாக சென்னை விமான நிலைய உள்நாட்டு டெர்மினலுக்குப் போய்ச் சேர்ந்தது என் தப்பு.
ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி ஏழெட்டு நாடு கடந்து சென்னை, அப்புறம் கொச்சி என்று பறக்கும் விமானத்தில் டிக்கட் போட்டிருந்தார்கள். அந்த விமானத்தைப் பிடிக்க அதே சென்னை விமான நிலையத்தில் அமைந்திருக்கும் இண்டர்நேஷனல் டெர்மினலுக்குப் போகவேண்டும்.

மூட்டை முடிச்சோடு அங்கிருந்து இங்கே வியர்க்க விறுவிறுக்க ஓட்டந்துள்ளலாகச் சாடினேன். கவுண்டரில் இருந்த அதிகாரி, விமானம் ஏறப் போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார். வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.

“இதைப் பூர்த்தி செய்து கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.”

பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டிய ரகம். கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா? முந்தாநாள் உமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டதா? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, “விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க” என்றார்கள். நான் பள்ளிக்கூட இம்போஷிஷன் போல் எழுதிக் கொடுத்த பாரம் கேட்பாரற்று ஒரு மூலையில் எறியப்படுவதைப் பார்த்தபடி நகர்ந்தேன்.

இப்படியான கலாட்டா எல்லாம் முடிந்து செக்யூரிட்டி செக்-இன் என்னும் பாதுகாப்பு பரிசோதனைக்குப் போய் இரண்டு கையையும் விரித்து நின்றால், ஸ்கேனர் என்ற இரும்பு விசிறி மாதிர்¢யான ஒரு சமாச்சாரத்தால் உடம்பு முழுக்கத் தடவுவார்கள். குண்டு வைத்திருந்தால் அந்த ஸ்கானர் பீப்பீப் என்று அலறி, குண்டர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பது என்னமோ சரிதான். ஆனால் எப்போது என்னைப் பார்த்தாலும் அந்தக் கருவிக்கு குஷி கிளம்பி விசிலடிக்க ஆரம்பித்துவிடுவதுதான் ஏனென்று தெரியவில்லை. அது கத்துகிறதே என்று காவலர் சந்தேகப்பட்டு என் கேசாதி பாதம் பரிசோதனை செய்தால், பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் எப்போதோ போட்டுத் தேடிக் கிடைக்காத ஐந்து ரூபாய் நாணயம் கிட்டும். அதைத் தடவிப் பார்த்துத்தான் ஸ்கானர் ‘இந்த ஆள் குண்டோ வேறே என்ன கருமாந்திரமோ வச்சிருக்கான்’ என்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டும்.

ஒரு தடவை ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை. சட்டைப் பையில் இருந்த மொபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன்.

"ஓண் இட்", பாதுகாப்புச் சோதனை செய்த காவலர் சொன்னார். ‘உன்னோடது தானா’ என்று விசாரிக்கிறார் போல் இருக்கிறது. உரிமையை எப்படி நிரூபிப்பது? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ.
அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப "ஓண் இட்".

‘என்னோடது தான். என்னோடது மட்டும் தான்’. துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொபைலை வாங்கி, அதை இயக்கினார். திருப்தியோடு, “சரி போங்க” என்றார்.

சேட்டன் மலையாள உச்சரிப்பில் "on it" என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.

"உங்க மொபைலை ஆன் பண்ணச் சொன்னாங்க. என்னோடதை ஆ·ப் செய்யச் சொன்னார் அந்தப் போலீஸ்கார அம்மா". பாதுகாப்புப் பரிசோதனை முடிந்து வந்த என் மனைவி சொன்னாள். “இப்படி இருந்தால் அப்படியும் அப்படி இருந்தால் இப்படியுமாக மாற்றச் சொல்லிச் சோதனை செய்வதற்குத்தான் அவர்களுக்குச் சம்பளம்” என்றேன்.

இதெல்லாம் கடந்து விமானத்துக்குள் நுழைந்தால், உபசரிக்க நிற்கும் ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி நம்மைப் பார்த்து இயந்திரகதியில் ஒரு சிரிப்பை உதிர்ப்பார். வரவேற்கிறார் என்று அர்த்தமாம். நம் போன்ற எகானமி கிளாஸ், அதாவது சிக்கன வகுப்பு பயணி என்றால் விமானக் கம்பெனிகளுக்குக் கொஞ்சம் இளப்பம்தான் என்று என் யூகம். இந்த இகனாமி கிளாசுக்கு, விமான ஊழியர் பரிபாஷையில் ‘கால்நடை வகுப்பு’ என்று பெயராம். இது தெரிந்தது முதல், விமானத்தில் ஏறியதும் ‘ம்மா’ என்றோ ‘மே’ அல்லது ‘மியாவ்’ என்றோ ஏர் ஹோஸ்டஸ¤க்குப் பதில் வணக்கம் சொல்ல ரொம்ப நாளாக ஆசை.

விமானத்தில் முன் இருக்கைகளாக சகல சொகுசோடும் கூடிய ‘எக்சிக்யூட்டிவ் கிளாஸ்’ என்ற ‘நிர்வாகி வகுப்பு’ இருக்கும். அதிகக் கட்டணம் செலுத்தி இந்த இருக்கைகளில் ஆரோகணித்துப் பயணம் செய்யும் மேட்டுக்குடியினருக்கு விமான ஊழியர்கள் விழுந்து விழுந்து செய்யும் உபசரிப்பு தனிரகம். ‘கால்நடை’கள் இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டு வெப்ப மூச்சு விடக்கூடாது என்ற கரிசனத்தில், விமானம் பறக்கும்போது திரையைப் போட்டு இந்த மேன்மக்களைத் தனிமைப் படுத்தி விடுவது வழக்கம்.

“அவனுக்கென்ன, சதா ஏராப்ளேன்லே பறந்துட்டிருக்கான்” என்று என்னைப் பார்த்து இதே ரக வெப்ப மூச்சை வெளியேற்றும் என் பந்து மித்திரர்களுக்கு, இந்தக் கஷ்ட புராணம் கொஞ்சம் நிம்மதியை அளிக்கலாம். அடிஷனல் நிம்மதி அடுத்த வாரம் தொடரும்.

(தினமணி கதிர் - சற்றே நகுக - 21 ஆகஸ்ட் 2005)

Saturday, September 03, 2005

கார்ப்பரேட் விருந்தாளிகளும் ஒரு துண்டு ஊறுகாயும்



காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்து வரும். வாரக் கடைசியில் ஆபீசிலிருந்து வீட்டுக்குக் கிளம்புகிறபோது ஈமெயில் வந்தால் கம்பெனிக்கு விருந்து வரும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நாலு சுமார் சைஸ் இட்லி, பிரிட்ஜில் வைத்திருந்த முந்தாநாள் வெங்காயச் சட்னி, அதற்கு மூதாதையரான டீகாஷனும், பழம்பாலும் கலந்த காபி என்று ஒரு மாதிரி ஒப்பேற்றி உபசரித்து அனுப்பிவிடலாம். கார்ப்பரேட் விருந்தாளிகள் இன்னொரு வகை.

போயிங் விமானமும், ஏர்பஸ் விமானமும் பிடித்துக் கிளம்பியிருப்பார்கள் அவர்கள் ஊர் நேரத்துக்கும் நம் ஊர் நேரத்துக்கும் ஏகதேசம் பத்தரை மணி நேர வித்தியாசம் இருப்பதால் ஜெட்லாக் என்ற அயர்வு வேறே. காது வலி, கால் ஆணி போல் இல்லாமல் மகா கவுரவத்தோடு சொல்லக் கூடிய சுகவீனமாக்கும் இந்த ஜெட்லாக். இப்படி வந்து சேர்ந்து சென்னையிலும் தில்லியிலும் கத்திரி வெய்யிலில் கோட்டு சூட், டை மாட்டிக் கொண்டு பிசினஸ் பேச எழுந்தருளும் வாடிக்கையாளர்களை வரவேற்று, உபசரித்து, வழியனுப்பி வைப்பதற்காகவே பெரிய கம்பெனிகளில் வழிமேல் விழி வைத்துப் பார்த்தபடி ஒரு நிர்வாகி இருப்பார். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இவருடைய செல்போன் எப்பவுமே பிசியாக இருக்கும்.

"ரெஸ்ட் ரூமுக்குப் போகணும்", என்று வந்த விருந்தாளி சொல்ல, அட்டகாசமாக பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போன் போட்டு ரூம் புக் செய்தார் இந்த மாதிரி உத்தியோகத்தில் புதிதாகச் சேர்ந்த என் நண்பர் ஒருவர். வந்தவர் பொறுக்க முடியாமல் நெளிந்தபடி "எங்கே இருக்கு டாய்லெட்" என்று இங்கே புரியும் ஆங்கிலத்தில் கேட்டபோதுதான் நம்ம ஆளுக்கு விஷயம் புரிந்தது. அவங்க ஊர் பரிபாஷையில் ரெஸ்ட் ரூம் என்றால் நம்ம ஊர் ‘பாத்ரூம்'. ஒரு ரூபா கொடுத்துப் போக வேண்டிய விஷயத்துக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு!

கம்பெனி விருந்தினர் வருவதற்கு முன்னாலேயே அவர்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை வந்துவிடும். தாய்லாந்திலிருந்து முக்கிய விருந்தாளிகள் வந்தபோது நான் வேலை பார்த்த நிறுவனம் அனுப்பிய சுற்றறிக்கை சொன்னது - "தாய்லாந்துக்காரர்களை சவா தே காப் என்று சொல்லி வணங்க வேண்டும். தலையைத் தொடுவது அவர்கள் நாட்டில் அவமரியாதை'.

என் தலையை நான் தொட்டால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை என்று புரியாமல் விசாரித்தபோது, அவர்கள் தலையைத் தொடுவதுதான் அவமரியாதை என்று விளக்கம். வந்த விருந்தாளி தலையை வேலை மெனக்கெட்டு ஏன் தொட வேண்டும் என்று குழப்பத்தோடு விமான நிலையம் போனால் விருந்தாளிகள் மழலைத் தமிழில் ‘வணக்கம்' என்றார்கள். மர ஸ்டூல் வாங்கிப் போட்டு ஏறி நின்று தான் அவர்கள் தலையைத் தொடவேண்டியிருக்கும். வந்தவர்கள் சராசரி ஆறரை அடி உயரம்.

இது இப்படி என்றால், இன்னொரு முறை ஜப்பானில் இருந்து ஒரே சீராக ஐந்து அடி உயரத்தில் ஓர் உயர்மட்டக் குழு வந்தது. ஜப்பானியர்களைக் குனிந்து வணங்க வேண்டும். குனிந்தபடியே நம் விசிட்டிங்க் கார்டை அவர்கள் படிக்க வசதியாகத் திருப்பி நீட்ட வேண்டும். அவர்கள் கார்ட் கொடுத்தால் கரிசனத்தோடு வாங்கி, பெயரை ஒருதடவை தப்பு இல்லாமல் உரக்கப் படிக்க வேண்டும். இதெல்லாம் ஜப்பானியக் கலாச்சாரத்தைப் போதிக்கும் கம்பெனிக் கட்டளைகள்.

முப்பது பேருக்கு முப்பது முறை இடுப்பை வளைத்துக் குனிந்து வணங்கி, விசிட்டிங்க் கார்ட் பரிமாற்றம் செய்து ஜாக்கிரதையாகப் பெயரை உச்சரித்து முடிப்பதற்குள் மதியச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி குனிந்தபடிக்கே அவர்களை லஞ்சுக்கு அழைத்துப் போனேன்.

"கலிபோர்னியாவிலிருந்து மிஸ்டர் சாம்சன் வருகிறார். விமான நிலையத்துக்கு ஏர்கண்டிஷன் காரை எடுத்துப் போய் அழைத்து வரவும்" என்று கம்பெனி ஆணையிட, அடலேறாகப் புறப்பட்டார் இன்னொரு நண்பர். வரப் போகிற விருந்தாளியின் பெயரை எழுதிப் பிடித்த அட்டையோடு தான் இந்த மாதிரி சந்தர்பங்களில் ஆள் அனுப்புவது வழக்கம். அட்டையும் வேணாம், கட்டையும் வேணாம் என்று தில்லாகக் கிளம்பிப் போனார் இவர். விமானத்திலிருந்து இறங்கி கைவீசி ஒய்யாரமாக வந்த ஒவ்வொரு துரையையும் கவனித்துப் பார்த்து மிஸ்டர் சாம்சன் என்று அழைக்க, ஊஹ¥ம், யாரும் லட்சியமே செய்யவில்லை.

"சாம்சன் கவுத்துட்டார். வரவே இல்லை", என்று அங்கலாய்ப்போடு ஆபீசுக்குத் திரும்பி வந்த இவரை மிஸ்டர் சாம்சனே வரவேற்றார். வெள்ளைக்காரர் இல்லை. கருப்பு இன அமெரிக்கர் அவர். அதே விமானத்தில் தான் வந்திருக்கிறார். அமெரிக்கர் என்றால் வெள்ளைக்காரர் என்றே மனதில் படிந்து போன பிம்பத்தை நண்பர் இப்போது ஒழித்துக்கட்டி விட்டார்.

சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ வந்த ஒரு விருந்தாளியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ள இளைஞரான அதிகாரி ஒருத்தரை அனுப்பினார்கள். வந்தவர் பிசினஸ் பேசி முடித்து, ஷாப்பிங்க் போய் விட்டு, தொழிற்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கு பெற்ற கூட்டத்தில் சொற்பொழிவாற்றுவதாக ஏற்பாடு. எல்லாம் கிரமமாக முடிந்தது. கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும்போது, சில முக்கியத் தகவல்களை அச்சடித்த காகிதங்களை விநியோகிக்க வைத்திருந்தது நினைவுக்கு வரவே அவர் விருந்து அதிகாரியை அழைத்தார். தங்கியிருந்த ஓட்டலுக்குப் போய், மேசைமேல் வைத்திருந்த பார்சலை எடுத்து வரவேண்டும். அதைப் பிரித்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

அதிகாரி போய்ப் பார்சலை எடுத்து வருவதற்குள் பேச்சு தொடங்கி விட்டது. உள்ளே நுழைந்து பார்சல் பிரித்துப் பார்த்த அவர் முகத்தில் சின்னக் குழப்பம். விருந்தாளியோ, சீக்கிரம் விநியோகிக்கச் சொல்லி சைகை செய்கிறார். எஸ் சார் என்று தலையசைத்து விட்டு வேலையை ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில், கூட்டத்தில் இருந்த ஒவ்வொருத்தர் உள்ளங்கையிலும் ஒரு துண்டு ஆவக்காய் ஊறுகாய். சிங்கப்பூரார் ஊருக்குக் கொண்டுபோக வாங்கி வைத்திருந்த ஊறுகாய்ப் பார்சலைத் தவறுதலாக எடுத்து வந்ததன் விளைவு அது.

கம்பெனி விருந்தாளிகள் விஷயம் இப்படி என்றால் தேசிய விருந்தாளிகள் இன்னொரு விதம். முன்பெல்லாம், டூரிங் கொட்டகையில் சினிமா தொடங்குவதற்குமுன் இந்தியன் நியூஸ் ரீல் போடுவார்கள். பீகாரில் வறட்சி, ஹரியானாவில் வெள்ளம் எல்லாம் நியூஸ் ரீலில் வருகிறதோ என்னமோ, டோங்கா மன்னர் வருடம் தவறாமல் இந்தியா வருவார்.

முழுத் திரையையே ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆகிருதியும் நல்ல மனசும் கொண்ட அவர் போன்றோர் இப்போதெல்லாம் வருவதில்லை என்பதில் வருத்தமே.

டோங்கா இருக்கட்டும். முப்பது வருடத்துக்கு மேலாக நம் தலைவர்கள் நல்லெண்ண விஜயமாக மடகாஸ்கர், டிம்பக்டூ, பராகுவே என்று உலக வரைபடத்தில் தேடித்தேடி விசிட் அடிப்பதை வானொலி சொல்லிக்கொண்டே இருக்கிறது, தொலைக்காட்சி பிலிம் காட்டியபடியே இருக்கிறது. வருடக் கணக்காக இப்படிக் கொண்டு போய்ச் சேர்ந்த நல்லெண்ணத்தை எல்லாம் என்ன செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

தினமணி கதிர் 'சற்றே நகுக' பகுதி 21 ஆகஸ்ட் 2005

Thursday, September 01, 2005

சென்னை 366



சென்னை நகருக்கு வயது 366!

லண்டனை அதன் சகல அழுக்குகளோடும் சார்லஸ் டிக்கன்ஸ் நேசித்தது போல், டப்ளினை ஜேம்ஸ் ஜாய்ஸ் பிரியப்பட்டது போல், கொல்கத்தாவை சத்யஜித்ராயும், மும்பையை அருண் கொலட்கரும் விரும்பியது போல், சென்னையை நேசிக்கிறேன்.


நண்பர் மாலன் தன் வலைப்பதிவில் சென்னை மாநகர் பிறந்த வரலாறு பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

என் பங்குக்கு, அரசூர் வம்சம் நாவலில் இருந்து 1760களின் சென்னை பற்றி சில பகுதிகள்
------------------------------------------------

பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே?
----------------------------------------------
நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல சௌகரியம் கூடியும் இருந்தது.

வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று விட்ட சித்தப்பா என்பதால் இவன் ஒன்று விட்ட அண்ணா.

தெருவில் எல்லோருக்கும் அவன் மேல் நிறைய மரியாதை இருந்தது. அவன் வெளியே போகும்போதும் வரும்போதுமெல்லாம் அக்கம்பக்கத்திலே இருக்கப் பட்டவர்களும், எதிர்ப்பட்டவர்களும் அவனை சார் என்று மரியாதையாக விளித்தது சங்கரனுக்கு விநோதமாகப் பட்டது. அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு ஜயா என்றோ எஜமான் என்றோ அர்த்தம் என்று ஊகித்திருந்தான் அவன்.

கோட்டையில் வேலை பார்க்கிற ராஜாங்க உத்தியோகஸ்தன் என்பதால் வைத்தியநாதனுக்கும் அப்படியே எல்லோரும் கூப்பிடுவது பழகிப் போயிருந்ததோடு பிடித்தும் இருந்தது.

வைத்தியநாதய்யன் கோட்டையில் குமஸ்தன் வேலை பார்க்கிறதாகச் சொன்னான். துறைமுகத்தில் வந்து சேரும், புறப்படும் கப்பல் போக்கு வரத்து பற்றிய கணக்கு எல்லாம் அவன் தான் எழுதியாக வேண்டுமாம். அதுவும் துரைத்தனத்து மொழியில். இவன் கணக்கு எழுதாமல் எந்தவொரு பரங்கித் துரையோ, துரைசானியோ சென்னைப்பட்டணத்துக்குள் காலெடுத்து வைக்க முடியாது. அதே பிரகாரம், கப்பலேறி ஊரைப் பார்க்கவும் புறப்பட முடியாது என்று வைத்தியநாதய்யன் சொன்னபோது சங்கரனுக்கும் அவன்மேல் சொல்ல முடியாத அளவு மரியாதை வந்து சேர்ந்தது.

வைத்தி சார், இங்கிலீஷிலே வார்த்தையும் கணக்கும் எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே?

சங்கரன் அவனைக் கேட்டான்.

கச்சேரி ராமநாதய்யர் கோர்ட்டுக் கச்சேரியில் சிரஸ்ததார் என்ற உத்தியோகத்தில் பல வருஷம் இங்கே சென்னப்பட்டணத்திலேயே இருந்ததால் அதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சிரமமில்லாமல் படிக்கத் தனக்கு வாய்த்தது என்றான் வைத்தி.

கச்சேரி ராமநாதய்யர் அவனைச் சீமைக்கு அனுப்பி பி.ஏ பரீட்சை கொடுத்துவிட்டு வரவும் ஏற்பாடு செய்திருந்தாராம். உள்ளூர் வைதீகர்கள் அப்படி அனுப்பினால் அடுத்த க்ஷணமே ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகப் பயமுறுத்தவே அதைக் கைவிட்டுக் கோட்டையில் குமஸ்தனாகப் போக வேண்டிப் போனதாக வருத்தப்பட்டான் வைத்தி.

வைதீகர்கள் இந்தப் பெரிய பட்டணத்திலும் இருக்கிறார்கள் என்பதே சங்கரனுக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது. கருப்புப் பட்டணத்திலும், மற்ற இடத்திலும் சகல ஜாதியினரும் நிரம்பி வழிந்து மூச்சுக் காற்று முகத்தில் பட, வியர்வை தோளில் ஈஷ, பிருஷ்டம் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு ஊர்ந்து போகும் ஸ்தலத்தில் அவர்கள் தர்ப்பைக் கட்டையோடு இறங்கினால், ஒவ்வொரு பத்தடி போனதற்கும் திரும்பி வந்து குளித்துத் தீட்டுப் போக்கவே நாள் முழுக்க நேரம் சரியாக இருக்கும். அப்படியும் மிஞ்சிய நேரத்தில் எள்ளை இறைத்துத் தர்ப்பணமும், அப்தபூர்த்தி ஹோமமும் செய்து நாலு காசு சம்பாதிக்கவும், அதற்கும் எஞ்சி நேரம் கிடைத்து கச்சேரி ராமநாதய்யர் சீமந்த புத்திரனை ஜாதிப்பிரஷ்ட விஷயமாக மிரட்டிவிட்டுப் போகவும் அவர்களுக்கு எப்படி ஒழிந்தது என்று சங்கரனுக்குப் புரியவில்லை.
------------------------------------------
நாலு தெரு நடந்தால் முச்சந்தி வரும். அங்கே அரை மணி காத்திருந்தால் கருப்புப் பட்டணம் போகும் வண்டி வரும். கருத்த ராவுத்தன் காத்திருப்பான். அந்தத் தெலுங்குப் பிராமணப் பையனும் தான்.

முச்சந்தியில் வண்டிக்காக நாலு பேர் நின்றிருந்தார்கள். பருமனான ஒரு மனுஷ்யன் தலையில் பெரிய முண்டாசும், தொளதொளவென்று வஸ்திரமும் கையில் பிடித்த சிலுவையுமாக ஏதோ பெரிய கூட்டத்தை எதிர்கொண்டது போல உரக்கப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்.

பரணி ஆண்டி சொல்கிறேன். சென்னப் பட்டணத்து மகா ஜனங்களே இந்த சத்ய வார்த்தையைக் காது கொடுத்துக் கேளுங்கள். நானும் சாதாரண ஹிந்துவாக இருந்தவன் தான். இப்போது உன்னத ஹிந்துவாகி இருக்கிறேன். அதெப்படி என்று கேட்பீராகில் சொல்லுவேன், நான் பிரஜாபதியை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டேன். அவரை நமஸ்கரிக்கிறேன். நித்யமும் அனுசாந்தானம் செய்து அஷ்டோத்திரமும் சகஸ்ரநாமமும் சொல்லி அந்த மஹா மூர்த்தத்தை அர்ச்சிக்கிறேன்.

கண்கள் செருக ஆகாயத்தைப் பார்த்தான். கிரகணம் விட்டுப் போன சூரியன் அவனைக் கஷ்டப்படுத்தினதாகத் தெரியவில்லை. அப்புறம் அந்தப் பிரசங்கியின் பார்வை புதிதாக வந்து சேர்ந்து முகத்து வியர்வையைத் தோள் துண்டால் துடைத்துக் கொண்டிருந்த சங்கரன் மேல் விழுந்தது.

இதோ நிற்கிறாரே இந்தப் பிராமணோத்தமர் போல் பெங்காளத்தில் ஞான சூரியனாக இருக்கப்பட்டவர் கிருஷ்ண மோஹன் பானர்ஜியா. அந்த மகாநாமத்தை இன்னொரு தடவை சொல்கிறேன் கேளுங்கள். கேட்ட மாத்திரத்திலேயே பீடையெல்லாம் விலகி ஓடும். கிருஷ்ண மோஹன். எந்தக் கிரகணமும், ராகுவும் கேதுவும் பற்றிப் பிடித்து தொந்தரைப்படுத்த உத்தேசித்தாலும் அந்த மஹாத்மாவிடம் அது ஈடேறாது. அவர் எனக்குக் காட்டித் தந்த பிரஜாபதிதான் கிறிஸ்து மஹரிஷி. ஓம் நமோன்னமஹ வந்தே என்று ஹிந்துக்களான நாமெல்லாரும் போற்றித் துதிக்கத்தக்க தெய்வ துல்யமான அந்த புண்ணிய ஸ்வரூபனையும், அவருடைய புண்யமாதாவான சர்வேஸ்வரி மஹாமேரி அம்மனின் மங்களகரமான சித்திரத்தையும் நீங்கள் தரிசிக்க இப்போதே காட்டித் தருகிறேன்.

அந்த மனுஷ்யன் தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அவன் நின்ற மரத்தடி நிழல் சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இவன் எல்லாத் தெய்வத்தையும் தரிசனப்படுத்தி அந்தாண்டை போகட்டும். அந்த தெய்வங்களின் கிருபை இவனுக்குப் பரிபூர்ணமாகக் கிட்டட்டும். ஒரு நொடிப் பொழுது அந்த விருட்ச நிழலை ஒழித்துக் கொடுத்தால் சங்கரன் இளைப்பாறிப் போவான்.

பரணி ஆண்டி ஓய்கிற வழியாக இல்லை. கருப்புப் பட்டணத்துக்கும், சமுத்திரக் கரைக்கும் போகும் ஒரு வண்டி கூட வந்து சேராத காரணத்தால் அவனுக்கு முன்னால் ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டு ஒரு கூட்டம். அதில் இப்போது பத்துப் பேராவது இருப்பார்கள்.
------------------------------------------
கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்
வந்தாண்டா வந்தாண்டா தாயோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

(புகைப்படம் - சென்னை துறைமுகம் 1896)

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது