Sunday, November 21, 2010

விசாரணை

இது இந்த ஆண்டு 2010 தினகரன் தீபாவளி மலரில் வெளியான என் சிறுகதை

---------------------------------------------------------------------------

விசாரணை

இந்திரா காந்தியின் முதலாண்டு நினனவு தினத்தில் பானர்ஜி கையில் ஒரு பெரிய அட்டைப் பெட்டியோடும் மனதில் ஒரு கேள்வியோடும் ஆபீசுக்குள் நுழைந்தார்.

அட்டைப் பெட்டி ஆபீஸ் காரியமாக எடுத்துப் போன வால்ட்டேஜ் ஸ்டெபிலைசர். தில்லி கிளையில் அதை பிளக்கில் செருகினால் எம்பிக் குதித்து ப்யூஸ் போகிறது. கொண்டு போனதை அங்கங்கே நசுங்கலோடு திருப்பி எடுத்து வந்து விட்டார்.

மனதில் கேள்வி ஆபீஸ் வேலைக்கு சம்பந்தம் இல்லாதது. வங்காள ஆர்ட் சினிமா டைரக்டர் தத்தாவின் கடைசியாக வெளிவந்த படத்தின் பெயர் என்ன?

காலையில் தத்தாவைப் பார்த்தும் கேட்க முடியாமல் போன கேள்வி.

ஆபீஸ் இயங்க ஆரம்பித்து அரை மணி நேரமாவது ஆகியிருக்கும். அங்கங்கே தலையைத் தூக்கி சின்னதாக சினேகத்தோடு பானர்ஜியைப் பார்த்து சிரிப்பு. அவர்களுக்குத் தெரியும், இவர் ஒரு பாவப்பட்ட மனுஷர். கீழ் நிலை வங்கி அதிகாரி. ப்ரமோஷன் என்று வங்காளம் விட்டுத் தமிழ் தேசம் வந்தவர். ஆபீஸ் உத்திரவை சிரமேற்கொண்டு ஒரு மாசம் பூரண சன்னியாசம் பூண்டு தில்லிக் குளிரில் ராவும் பகலும் உழைத்துத் திரும்பியவர்.

என்ன புண்ணியம்? கழுத்தில் விளக்கெண்ணெய் தடவி கத்திக்கு சேதாரமில்லாமல் அவர் தலையை வெட்ட ஒரு காபாலிகன் ரெடி இங்கே.

ஏ.ஜி.எம் ஒரு வாரமா பைல்ஸ் கம்ப்ளெயிண்ட் அதிகமாகி கஷ்டப்படறார்.

ஏதோ தானே தினசரி சோதித்துப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டது போல் கனகம்பீரமாக அறிவித்துவிட்டு, கம்ப்யூட்டர் திரையில் என்னத்தையோ பக்கத்து சீட் பழுப்பு வெள்ளைச் சட்டைக்காரர் திரும்பத் தேட ஆரம்பித்தார். முப்பத்தைந்து வயசு பானர்ஜியை விட ஐந்து வயது அவர் பெரியவர்.

புதுசாக ஆளெடுக்காமல், இருக்கப்பட்ட ஆபீசர்களைப் பிடித்துப் போட வேண்டிய கட்டாயம் காரணமாக வங்கியில் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் காதோர நரையோடு பிறந்தது. இளசுகள் குஷியாக ஓட்டும் ஸ்கூட்டரை பயபத்திரமாக ரெண்டு காலையும் ஊன்றி நகர்த்திப் போகிற மாமாக்கள் போல் இங்கே கம்ப்யூட்டரை மத்திய வயசினர் ஜாக்கிரதையாக இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

கர்ப்பகிரஹத்தைப் பார்த்தார் பானர்ஜி. நொரசிம்மன் வந்திருக்கவில்லை. இங்கே இருக்கப்பட்ட முப்பது ஜூனியர் ஆபீசர் கொத்தடிமைகளைச் சித்தரவதை செய்து கசையடி கொடுத்து வேலை வாங்க சன்னத்து வாங்கின உதவி ஜெனரல் மேனேஜர். நரசிம்மன் என்ற சாதா பெயரை பானர்ஜி வங்காளியில் நொரசிம்மனாக உச்சரித்தபோது முதுகுத் தண்டில் குடைச்சல் ஏற்படுகிறது போல் எல்லோருக்குமே பொதுவாக வாதனை தென்பட அதுவே பொதுப்பெயர் ஆனது,

வங்கியின் கம்ப்யூட்டர் துறை தொடங்கி நாலு வருஷமானாலும், நொரசிம்மன் எலும்புக்குள் துளைக்கிற கொடுமை முடிகிற வழியாகத் தெரியவில்லை. அதை யாரிடமும் சொல்லி அழுது பிரயோஜனம் இல்லை. யூனியனும் கைவிட்டு விட்டது.

“நீங்க எல்லாம் டெக்னிகல் சீமான்கள். யூனியன் மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம் எதுக்கு உங்களுக்கு” என்று தலைவர் அசூயையை வார்த்தையில் கொட்டினது நாலு மாசம் முன்னால். அது பானர்ஜி டெல்லி போகும் முன் தினம்.

ஒரு டெம்பரவரி சிப்பந்தி முன்னே கருப்பு ப்ரீப்கேசை தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வர, பின்னே சாப்பாட்டு காரியர், ப்ளாஸ்க் சமாசாரங்களுடன் டெம்பரவரி கார் டிரைவர் பவ்யமாகப் பின் தொடர, நொரசிம்மன் உள்ளே வந்தபோதே பானர்ஜியைப் பார்த்துத் தீவிழி விழித்தார்.

அவர் புகுந்து பத்து வினாடி இடைவெளி விட்டு சன்னிதானக் கபாடம் திறந்தது.

“ஏ.ஜி.எம் உங்களை கூப்பிட்டார்”.

தூக்கு தண்டனைக்கு அழைத்துப் போகிற காக்கி நிஜார் போட்ட எடுபிடி போல டெம்பரரி சிப்பந்தி கட்டியம் கூறி ஒதுங்கி நின்றார்.

ஏ.ஜி.எம் கண்ணாடி அறை ஜன்னல்களை அழுக்குத் திரை இழுத்துவிட்டு மூடினார் டெம்பரரி. ஆடு வெட்டும்போது அடுத்தவர் பார்த்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று கரிசனத்தோடு செயல்படுகிற பூசாரியின் அசிஸ்டெண்ட் செய்கை போன்றது அது.

நொரசிம்மன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கட்டைக் குரலில் கேட்டார்.

“பாதாம் ஹல்வா கொண்டு வந்தீரா? டெல்லி மேனேஜர் கொடுத்திருப்பாரே?”

பானர்ஜிக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. காலையில் புறப்பட்டபோது பாதி காணாமல் போன அல்வா. பழைய தில்லி பிராஞ்ச் மேனேஜரான நாமக்காரத் தமிழர் இவிடம் காணிக்கையாக ஒரு கிலோ பொட்டலம் கட்டிக் கொடுத்திருந்தார்.

“ஹல்வா. அது வீட்டுலே..”

“அப்ப நீர் மட்டும் இங்கே என்ன வெட்டி முறிக்க வந்தீர்? ஒரு மாசமா தண்டச் சம்பளம் தானே வாங்கிட்டு இருந்தீர் தில்லியிலே உட்கார்ந்துண்டு”.

மூலக் கடுப்பு மிருகம் குண்டுசியால் பல்லைக் குடைந்து கொண்டு பானர்ஜியை வார்த்தைகளால் துளைத்தெடுத்தது.

“இவ்வளவுக்கும் தில்லியிலே நீர் போனதும் ராஜ உபசாரமா நம்ம ராஜகோபாலன் உமக்கு சகலமானதும் செஞ்சு கொடுத்து கம்ப்யூட்டர் பிரதிஷ்டை பண்ண வழி வகுத்திருக்கார். நீர் அதை சுண்டைக்காய் அளவும் லட்சியம் பண்ணலை”.

தில்லி மேனேஜர் ராஜகோபாலன் ஒரு நொரசிம்ம பக்தன் என்று பானர்ஜிக்கு முதலில் பார்த்தபோதே பட்டதற்கும் அந்த மனுஷர் காது மேல் வளர்ந்திருந்த தாம்புக்கயிறு சைஸ் முடிக் கற்றைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

“இங்கே எதுக்கு கம்ப்யூட்டர் வைக்கணும்னு ஹெட் ஆபீஸ்லே அடம் பிடிக்கறா? நான் தான் இளிச்ச வாயனா கண்ட கருமாந்திரத்தையும் தலையிலே கட்ட?”

அவர் தமிழில் கேட்டு விட்டு பானர்ஜி முழித்த முழியைப் பார்த்து ஜாக்கிரதையான ஆங்கிலத்தில் இன்னொரு தடவை அங்கலாய்த்தார்.

“தப்பு,தப்பு”.

பானர்ஜி அப்போது அவர் வாயை அவசரமாகப் பொத்தினார்.

“கம்ப்யூட்டர்னு சொல்லாதீங்க. ஆடொமாடிக் லெட்ஜர் போஸ்டிங் மிஷின். அப்படித்தான் சொல்வோம்னு நம்ம மேனேஜிங் டைரக்டர் கையிலே அடிச்சு சத்தியம் செய்து கொடுத்திருக்கார்.”

யார் கையிலே? ராஜகோபாலன் காது முடியை திருகிய அழுத்தத்தில் காது கையோடு வந்திருக்கும்.

ரெண்டு பட்ட ஊழியர் சங்கங்களோட தலைவர்கள் கையில் அவர் சாட் பூட் த்ரீ போட்ட கதையை பானர்ஜிக்கு சொல்லப் பொறுமை இல்லை. ஆனாலும் ஆடோமேடிக் மெஷினில் கணக்கு போடும் பயிற்சி கொடுத்து தன்னை அனுப்பிய சேதியை அவர் மரியாதையோடு தெரியப்படுத்த, ராஜகோபாலன் நெளிந்தார்.

அப்புறம் அவசரமாக அவர் கேபினுக்குள்ளேயே அமைந்திருந்த கழிப்பறைக்கு மூச்சிரைக்க ஓடினார். விடிந்ததும் தட்டு நிறைய அன்னத்தை வட்டித்துக் கொண்டு சாப்பிட்டு ஆபீஸில் வயிறு சுத்தம் செய்து கொள்கிற தமிழ்ப் பண்பாட்டை அதிசயித்தபடி பானர்ஜி நிற்க, ராஜகோபாலன் இடது கையில் ஒரு ஈரத்துண்டும் முகம் நிறையத் திருப்தியுமாக திரும்பி வந்தார்.

“வீட்டுலே குளிச்சுட்டு இடுப்பிலே கட்டினது. நரசியண்ணா போன் வந்ததா, அதை அட்டெண்ட் பண்ணிட்டு அப்படியே மேலே பேண்ட் மாட்டிட்டு வந்துட்டேன்”.

இந்த மாதிரியான பிரகிருதிகளிடம் என்ன ஒத்துழைப்பை பானர்ஜி எதிர்ப்பார்க்க முடியும்? அவர் இங்கே நாலைந்து கிளார்க்குகளை மெஷினில் கணக்குப் போட பயிற்சி கொடுக்கணும். மெஷின்களை நிறுவணும். அப்புறம் அவங்க பாடு, மிஷின் பாடு, மாதாமாதம் அலவன்சும் ஓவர்டைமும் கூட அவங்க கணக்குதான்.

‘அதுக்கு ஏன் ஒரு மாசம்?’

ஏஜிஎம் பெண்குரலில் பேசவே, தலை குனிந்து பஞ்சமா பாதகம் செய்த குற்றவாளி போல நின்ற பானர்ஜி நிமிர்ந்து பார்த்தார். பர்வதம் கைலாசம் என்று ரெண்டு மலைகளின் பெயரோடு ஒரு சோனியான தென்னிந்திய ஸ்திரி.

ரெட்டைமலை அம்மாள் மும்பையில் சமீபத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்த களிப்பில் இன்னும் தடித்து நாற்காலி முனையில் ஈஷிக் கொண்டிருந்தாள். இவள் முன்னிலையிலா பானர்ஜி மேல் சதிக்குற்றம் சாட்டி நொரசிம்ம விசாரணை?

‘ஏன் ஒரு மாசம்?’ அல்வா வராத கோபத்தை கேள்வியில் நுழைத்தார் நொரசிம்மன்.

இருக்கப்பட்ட கணக்குகளை மெஷினில் போட, லெட்ஜர் லெட்ஜராகத் திறந்து பானர்ஜி ராவும் பகலுமாக ஒரு மாதம் முழுக்க வேலை பார்க்க வேண்டிப் போனது.

“இந்தம்மாவும் தானே மும்பையிலே இதே வேலை பார்த்துட்டு வந்திருக்கு?

நொரசிம்மன் ரெட்டைமலையை கனிவோடு பார்த்தபடி பல் குத்த, பானர்ஜி நாக்கு நுனியில் பதில். அந்தம்மா போனது போன மாதம் தான் ஆரம்பிக்கப்பட்ட புத்தம் புது கிளை. பானர்ஜி போனதோ எழுபது வருஷ தீர்க்காயுசோடு இயங்குவது. மவுண்ட் பாட்டன், அவருக்குப் பாட்டன் அக்கவுண்ட் கூட இன்னும் அங்கே இருக்கிறதாக நினைவு. மொத்தம் லட்சத்துச் சில்லரை அக்கவுண்ட். எட்டு ஏ.எல்.பி.எம்களில் அதையெல்லாம் ஏற்றியாக வேண்டிய கட்டாயம்.

நடுவிலே கம்ப்யூட்டர் வேறே குப்புறப் படுத்துப் பழிவாங்கி விட்டது.

“இப்போ சிரத்தைக்கு இவரை வைச்சுப் பாருங்க”

மேனேஜர் கொண்டு வந்து நிறுத்தின சர்தார்ஜி எலக்ட்ரிசியன் வோல்ட்டேஜ் செக் பண்ணி விட்டு, எர்த்தில் ஏழு ஓல்ட் வருது, எப்படி எப்படி என்று அபிநயம் பிடித்தார். பானர்ஜிக்கும் மேனேஜருக்கும் புரிபடாத விஷயம் அது.

அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் பேங்க்குக்கு வரும் மின்சாரத்தை நடுவில் ஒயர் இழுத்துத் திருடிப் பயன்படுத்திக் கொண்டிருந்த காரணத்தால் இது நடந்தது என்று நிரூபணமாகி, அந்தப் பிரச்சனை சுமுகமாகத் தீர கடந்த மாசம் முழுக்க ஆனது. அதற்குள் கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டிய தகவலை எல்லாம் யார் உதவியும் இல்லாமல் போட்டு வைத்திருந்தார் பானர்ஜி.

இந்த ஒரு மாதத்துக்குள் நாலு தடவை முழ நீள ஓலை அனுப்பி விட்டார் நொரசிம்மன். ஒரு ப்ராஞ்சில் ஒரு வாரத்துக்கு மேலே கம்ப்யூட்டர் போட எடுத்துக்கிட்டா நீ கையாலாகாதவன் என்று பானர்ஜியை இடித்துக்காட்டி இலக்கண சுத்தமாக மெமோ அனுப்பி பதிலை உடனடியாக எதிர்பார்த்திருந்தார்.

குளிர்கால ராத்திரிகளில் தூசி படிந்த லெட்ஜர்களைப் பக்கம் பக்கமாகப் படித்து மெஷினில் ஏற்றிக் கொண்டு இருந்தபடியால் அந்தக் கொலை மிரட்டல்களுக்கு எல்லாம் உடனுக்குடன் பதில் கொடுக்க பானர்ஜிக்கு முடியாமல் போனது.

‘பர்வதவர்த்தினியைப் பார்’ என்று சம்பிரதாயத்தை மீறிய வாக்கியத்தோடு தொடங்கிய கடைசிக் கடிதத்தில் இதே படி கம்ப்யூட்டர் நிறுவ நொரசிம்மனால் அனுப்பப்பட்ட பெண் அதிகாரி பர்வதவர்த்தினி கைலாசம் என்ற ரெட்டைமலை அம்மாள் மும்பையிலும் சுற்று வட்டாரங்களிலும் வெற்றிக்கொடி நாட்டிய தகவலைப் பகிர்ந்து கொண்டிருந்தார் மேலதிகாரி.

ஆயிரம் ப்ளாப்பிகளை ஆறு நாளில் தகவல் பதிய உபயோகமாக சித்தப்படுத்திய அம்மையாரின் அருந்தொண்டை மெச்சி அவரை விமான மார்க்கமாக சென்னை திரும்ப ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்தார் நொரசிம்மன்.

பூனைக்கு மயிர் பிடுங்குகிற தோதில் ஆயிரம் ப்ளாப்பியை பார்மெட் செய்வது கம்ப்யூட்டர் ஞானம் எள்ளளவும் தேவையின்றி, எருமைத் தயிர் வழித்துச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டபடி செய்கிற அசமஞ்ச வேலை என்றும் பானர்ஜி உயிரை விட்டு ராவும் பகலும் மெஷின்களை சித்தப்படுத்துவது கடினமான காரியம் என்றும் அந்த ராட்சச சொரூபத்துக்குப் புரியவில்லை. அதைப் பொருட்படுத்தாமல் பானர்ஜி லெட்ஜரைப் புரட்டி ஏதோ குக்ரேஜா கணக்கில் இருந்த முப்பத்தேழு ரூபாய் கணக்கை சிரத்தையாக கம்ப்யூட்டரில் ஏற்றியது போனவாரம்.

அதுதான் இப்போது பானர்ஜி தலையில் பெரும்பழியாக விடிந்திருக்கிறது.

‘போன புதன் கிழமை நான் அனுப்பின கடுதாசிக்கு ஏன் பதில் எழுதலே?’

நொரசிம்மன் பானர்ஜியின் குடலை உருவத் தயாராக விரல் நகங்களை சரி பார்த்தபடி அடுத்த அஸ்திரத்தை வீசினார். ரெட்டைமலை ராட்சசி புன்சிரித்தாள்.

‘அன்றைக்கு ராத்திரி முழுக்க பேங்கில் சிவராத்திரி மாதிரி முழிச்சிருந்தேன்’

தில்லிக் குளிர் ரெண்டு டிகிரி செல்சியஸுக்கு தில்லியின் வரலாற்றிலேயே முகலாயர் காலத்துக்கு அடுத்தபடி போன வாரம் புதன்கிழமை அது. முழுத் தகவலையும் வாங்கிக்கொண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மெஷின் கிட்டத்தட்ட கர்ப்பச் சிதைவாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் நொரசிம்மனின் எழவெடுத்த கடைசி மெமோ வந்து சேர்ந்ததால் பதில் வரவில்லை.

“நீர் தகுந்த ரிப்பேர் செய்தீரா? எதுக்கு உமக்கு ட்ரைனிங் கொடுத்தது?”

பானர்ஜிக்கு கொடுக்கப்பட்ட டிரைனிங் அரை முதியோர் கல்வி. கட்டம் போட்ட பேப்பரில் எட்டாம் கட்டத்தில் தொடங்கி மகாபாரதம் எழுதுகிற மாதிரி எட்டு பக்கம் கோட் எழுதி கம்ப்யூட்டரில் ஏற்றி கம்பைல் செய்து பட்டனைத் தட்ட, எட்டாம் வாய்ப்பாடு அச்சுப் போடும் அபூர்வ கம்ப்யூட்டர் பயிற்சி. அதை வைத்துக் கொண்டு எலிமெண்டரி ஸ்கூல் கணக்கு கூட சொல்லிக் கொடுக்க முடியாது. தில்லி பிராஞ்சில் முரண்டு பிடிக்கும் கம்ப்யூட்டரை என்ன பண்ண? உள்ளூர் சர்தார்ஜி எலெக்ட்ரீஷியன் ஒத்தாசை செய்து அதை நேராக்கினார்.

எல்லா கணக்கு வழக்கையும் பானர்ஜி ரெண்டு செட் ப்ளாப்பிகளில் பதிவு செய்து வைத்திருந்ததால் தகவல் சேதமின்றி எல்லாம் மெஷினில் ஏறி அப்புறம் ஒரு தடங்கலும் இல்லாமல் பானர்ஜி வந்த காரியம் நிறைவேறியது.

“சரி, அப்போ, வியாழக்கிழமையே புறப்பட்டு வந்திருக்க வேண்டியதுதானே. மூணு நாள் அலவன்சை பாழாக்கி விட்டீரே. யார் அப்பன் வீட்டு சொத்து”?

நொரசிம்மன் பல்லால் குண்டூசியைக் குத்தி ஈற்றில் ரத்தம் கொப்பளிக்க ஆவேசமாகக் கேட்டார்.

கிளம்பி இருப்பார். ஆனால் அதிபுத்திசாலி ராஜகோபாலன் அதைக் கெடுத்துத் தொலைத்தார். தகவலை பிரதி எடுத்த ப்ளாப்பிகளை பானர்ஜி அவரிடம் கொடுக்க, அவர் கர்ம சிரத்தையாக அவருடைய தப்த்ரி என்ற உசத்தியான கடைநிலை ஊழியரிடம் தர, மேற்படி தப்திரி பக்கத்து வெல்டிங் ஷாப்பில் கொடுத்து அதில் அரை இஞ்ச் ஓட்டை போட்டு கச்சிதமாக பைல் செய்து நீட்டினார்.

எப்படி பேக் அப் எடுப்பது, ப்ளாப்பியை எப்படி கையாளுவது, கம்ப்யூட்டருக்கும் வெல்டிங், டிங்கரிங் கடைகளுக்கும் தொடர்பின்மை போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்ற மீதி மூன்று நாள் வேண்டிப் போனது பானர்ஜிக்கு.

“ஒரு மாசம் கழித்து படி ஏறி இருக்கீர். நேரத்துக்கு வரணும்னு தோணாதா?”

அடுத்த அஸ்திரம். தாமதம்தான். தப்புதான். காலையில் மகன் கன்ஷுவைக் கண்டித்து அவன் அழ மனம் பொறுக்காது சமாதானப்படுத்தி ஒரு மாதம் ஓட்டாமல் வைத்திருந்த ஸ்கூட்டரை உதைத்து தாஜா பண்ணி கிளம்பும்போது ஒன்பது மணி.

மேம்பாலம் பக்கம் வந்துகொண்டிருந்தபோது ஏதோ சின்னக் குழப்பம். ஏழெட்டு பேர் அங்கே பிராசசிங் ஸ்டூடியோ வாசலில் கூடியிருந்தார்கள். நேப்பாளி கூர்க்காக்கள் குர்த்தா பைஜாமா போட்ட ஒருத்தரை நெட்டித்தள்ளி நடுத் தெருவில் நிறுத்த, அவர் உச்சக் குரலில் இரைந்து கொண்டிருந்தார். அது வங்காளி மொழியாக உணர்ந்த பானர்ஜி காலை ஊன்றியபடியே பார்த்தார்.

சாத்விக் தத்தா மோஷோய். அவர்தானா? திறந்த வாயை மூடவில்லை பானர்ஜி.

யார் எவர் என்று அடையாளம் தெரியாதவங்களை எல்லாம் பிராசசிங் ஸ்டுடியோ உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூர்க்கா தீர்மானமாகச் சொல்லி விட்டான். யாரையோ சோதனை செய்யாமல் அனுப்பி அவன் கஷ்டப்பட்டிருக்கலாம்.

“நீங்க தத்தாபாபு தானே?”

பானர்ஜி ஸ்கூட்டரை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு வங்காளியில் கேட்டபோது இனிப்பு கிடைத்த குழந்தையாக ஆனந்தமாகச் சிரித்தார் தத்தா. உலக அளவில் திரைப்பட விழாக்களில் கூப்பிட்டு கௌரவிக்கும் அந்த கலைப்பட டைரக்டரை சென்னையில் யாருக்கும் தெரியாது.

“என் புதுப் படம் பிராசசிங்குக்காக இங்கே வந்திருக்கு. எடிட்டிங்கும் இங்கேதான். சரி, வேலை பார்க்கலாமேன்னு வந்தேன். குஜராத்தி பேல்பூரிக்காரன்னு நினைச்சோ என்னமோ உள்ளே விடமாட்டேங்கறாங்க”.

சிரிப்பு மறையாமல் சொன்னார் தத்தா.

“உங்க படம்னா எனக்கு உயிர் சார்”.

உடல் முழுக்க புல்லரிக்க பானர்ஜி அவர் முன்னால் நின்றார். பிடித்த பத்திரிகையை தலைமுறை தலைமுறையாகப் படிக்கிற, பிடித்த கால்பந்தாட்டக் குழுவை கைதட்டி உற்சாகப்படுத்துகிற, பிடித்த கடையில் ரசகுல்லா சாப்பிடுகிற, பிடித்த ஆர்ட் சினிமா டைரக்டர் படத்தை கல்கத்தாவில் மட்டும் நிறைந்து ஓடும் தியேட்டரில் போய்ப் பார்த்து அனுபவிக்க க்யூ நிற்கிற சாமானிய வங்காளி அவர்.

பானர்ஜி எக்கி உள்ளே பார்த்து, லேபரட்டரி கட்டடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த கனவான் யாரையோ கூப்பிட, அவரிடம் தத்தாவை அறிமுகப்படுத்த, அவர் பானர்ஜியின் ஆங்கிலமும், வங்காளி ஆர்ட் பிலிம் வரலாறும் தெரியாத காரணத்தால் விழித்து விட்டு வேறு யாரோடோ வந்து சேரப் பத்து நிமிஷம்.

வந்தவர் கைகுலுக்கி தத்தாவை உள்ளே கூட்டிப் போகும்போது பானர்ஜியைத் திரும்பிப் பார்த்து தத்தா நன்றி சொன்னார். அவர் கையில் அவசரமாக தன் விசிட்டிங் கார்டை திணித்துவிட்டு ஸ்கூட்டரைக் கிளப்பிய பானர்ஜி நினைப்பில் அப்புறம் தத்தாவைத் தள்ளிவிட்டுவிட்டு நொரசிம்மன் தான் பேய்முழி முழித்தார்.

தத்தாவுக்கு உதவிக்கரம் நீட்டிய பத்து நிமிஷம், டிராபிக் நெரிசலால், ஆபீசுக்குள் நுழையும்போது முப்பது நிமிடம் தாமதமாக நீண்டு விட்டது.

இதையெல்லாம் நொரசிம்மனிடம் சொன்னால் கேட்கிற மனநிலையில் அந்த மனுஷர் இருக்கப்போவதில்லை. சாரி என்று மட்டும் சொன்னார் பானர்ஜி

‘போகட்டும். பாதாம் ஹல்வா என்ன ஆச்சு?’

மறுபடி அதே கேள்வி. அதுக்கு பதிலளிக்க பானர்ஜி அவருடைய எட்டு வயசுப் பிள்ளை கன்ஷுவைக் கூட்டி வந்திருக்கணும். பானர்ஜிக்கு முந்தி கண்முழித்த அவன் அப்பா கட்டி வந்த மூட்டையைக் குடைந்தபோது கண்ணில் பட்டது அந்த இனிப்பு டப்பா. திறந்து பாதிக்கு மேல் சாப்பிட்டு விட்டான்.

“அதைக் காணோம் சார். ரயில்லே தொலைச்சுட்டேன்”.

நொரசிம்மனின் முகம் கோபத்தால் இன்னும் உப்பியது.

“உங்களை எல்லாம் தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கணுமய்யா. புஞ்சைப்புளியம்பட்டி போல”.

ரெட்டைமலை அம்மாள் அதை பானர்ஜிக்கு ஆங்கிலத்தில் முரட்டடியாக மொழிபெயர்க்க அவருக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது. கம்ப்யூட்டரைக் காட்டி கொல்கத்தாவிலிருந்து பாஷை தெரியாத சென்னைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இன்னும் தெற்கே சின்னதும் பெரிதுமாக இருக்கும் எதாவது ஊரில் போட்டு விட்டால்? எப்படி இன்னும் மிச்சம் இருக்கும் காலத்தை ஓட்ட?

டெலிபோன் மிரட்டுகிற தொனியில் அடித்தது. ரெட்டைமலை அம்மாள் அதை எடுக்க உருண்டு கொண்டு போக, அவளை முந்திக் கொண்டு ஓடி நொரசிம்மன் எடுத்தார். அங்கங்கே ரத்தச் சுவடு படிந்த அவர் பின்புறம் பானர்ஜியை மிரட்டியது.

“எஸ் சார். எஸ் சார். எஸ் சார். எஸ் எஸ் சார். எஸ் சார்”.

நொரசிம்மன் தொடர்ந்து சுவரம் பாடினார். அந்த முனையில் ஜெனரல் மேனேஜரா?

போனை வைத்துவிட்டு முகத்தைத் துடைத்துக் கொண்டு பானர்ஜியைப் பார்த்தார்.

“மதியம் ரெண்டு மணிக்கு இதைத் தொடரலாம். ஏகப்பட்ட தப்பு செய்திருக்கீர். பேங்கு பணத்தை தேவையில்லாம செலவு செய்த குற்றம், கொடுத்த வேலைக்கு தேவைப்படும் காலத்தை விட நாலு மடங்கு அதிகமாக எடுத்து ஊர் சுற்றிவிட்டு வந்த பொறுப்பில்லாத்தனம், ஆபீசுக்கு லேட்டா வந்த திமிர், மேல் அதிகாரி கையில் கொடுக்க வேண்டிய முக்கிய டாக்குமெண்டை தொலைத்த அலட்சியம்”.

அவர் அடுக்க, பானர்ஜியின் மனம் முறையிட்டது. படுபாவி, பாதாம் அல்வா எப்போ முக்கியமான பேங்க் டாக்குமெண்ட் ஆனது?

நொரசிம்மன் டையை சரி செய்து கொண்டு நாலு கட்டிடம் தாண்டி இருக்கும் தலைமைப் பீடத்துக்குப் புறப்பட, பகல் ரெண்டு மணிக்குத் தன் எதிர்காலம் நிச்சயிக்கப்படும் என்று தீர்மானமான பானர்ஜி, தளர்ச்சியாக ஏஜிஎம்முக்குப் பின் கேபினை விட்டு வந்தார். நொரசிம்மன் ஞாபகமாக கதவை இழுத்துப் பூட்டினார்.

களைப்பும், மிரட்சியும் குறைய பக்கத்து சந்தில் ஒரு சாயா சாப்பிட்டு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டால் சுமாராகக் குணம் தெரியும் என்று பானர்ஜிக்குத் தோன்ற வெளியே வந்தார். நொரசிம்மன் கூடவே கொண்டு வந்து மிச்சம் வைத்து விட்டு ஹெட் ஆபீஸ் போனது போல வெளியே வெய்யில் தகித்துக் கொண்டிருந்தது.

பகல் சாப்பாட்டு நேரம். தெருவோரக் கடைகளில் நின்றபடிக்கும், ஆபீஸ் மேஜைகளில் இந்திப் பேப்பரைக் கீழே விரித்து மேலே தயிர் சாத எவர்சில்வர் டப்பாக்களைப் பரத்தியும் பசியோடு ஒரு ஜனக்கூட்டம் விழுங்கிக் கொண்டிருக்கிறது. வீட்டில் கொடுத்து விட்டிருந்த ஆலு பராட்டாவையும் வெள்ளரிக்காய் பச்சடியையும் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்தால் மதியம் தெம்பாக நொரசிம்மனின் மிச்ச சொச்ச விசாரணையை எதிர் கொள்ளலாம்.

புஞ்சாய். அது என்ன கிளை சொன்னார்? பஞ்சாப் மாதிரி பெயர். எங்கே இருக்கு அந்த ஊர்? ஆலு பரத்தா எல்லாம் கிடைக்கிற ஊரா? சாயாவும் சிகரெட்டுமாவது கிடைக்குமா? கொஞ்சம் போல் தமிழ் பேசத் தெரிந்த வீட்டுக்காரியும் சுறுசுறுப்பாக தமிழில் அரட்டை அடிக்கக் கற்றுக் கொண்ட குழந்தைகளும் எந்தப் பட்டியில் கொண்டு போய்ப் போட்டாலும் கஷ்டமில்லாமல் ஐக்கியமாகி விடுவார்கள். நாலு வருஷம் இங்கே இருந்தும் உள்ளூர் மொழி தெரியாத பானர்ஜி?

மூலைக் கடையில் பற்ற வைத்த சிகரெட்டை கடைசி இழுப்பு இழுத்து விட்டுத் தரையில் போட்டு அணைத்தபடி, தெருத் திரும்பி ஆபீஸ் படி ஏற முற்பட்டபோது வாசலை அடைத்தபடி ஒரு கூட்டம். இதென்ன, கூட்டம் கும்பல் என்று இன்றைக்கு முழு தினமுமே போய்க் கொண்டிருக்கே.

கூட்ட நடுவில் எட்டிப் பார்த்தார் பானர்ஜி. அட, தத்தா. அவரும் இன்று முழுக்க நாயகனாக அங்கே இங்கே தட்டுப் பட்டுக்கொண்டிருக்கிறார். கொல்கத்தாவில் ஒரு பத்து பேராவது பார்த்து, நலம் விசாரித்து, அதில் ரெண்டு பேர் பாதம் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு பரவசமாக நடந்து போயிருப்பார்கள். இந்த ஊரில் சும்மா அவர் மட்ட மல்லாக்க கூட்டத்துக்கு நடுவே வாசல் படிக்கட்டில் தலை சாய்த்தபடி கிடந்தார்.

“பெரியவர் வெய்யில் தாங்காம மயக்கம் அடிச்சு விளுந்துட்டாரு”.

ஏஜிஎம்மின் மெய்க்காப்பு பானர்ஜியைப் பார்த்துச் சொன்னபடிக்கு மாடிக்கு விரைந்தான். அவன் முன்னால் போனால் நொரசிம்மாவதாரம் இன்னும் பத்து நிமிடத்தில் வந்து கண்ணாடி அறையில் கால் பரத்தி உட்காரும் என்று ஐதீகம்.

“ஆம்புலன்ஸ் வந்தாச்சு. வழி விடுங்க”.

தத்தாவிடம் அவருடைய கடைசிப் படம் பற்றி விசாரிக்க வேண்டும். இப்போ முடியாது. நொரசிம்மனும் ஆம்புலன்சும் வரும் நேரம்.

படிக்கட்டு பக்கம் தத்தாவிடம் பானர்ஜி கொடுத்த விசிட்டிங் கார்ட். அதை மெல்ல எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பின்னால் திரும்பத் திரும்ப பார்த்தபடி மாடிப்படி ஏறினார் பானர்ஜி. தன்னைத் தேடி வந்தாரோ தத்தா?

தத்தாவின் கடைசிப் படத்தின் பெயர் என்ன? அவருக்கு நினைவு வரவில்லை.

(இரா.முருகன்)

ரங்கா சேட்

ரொம்ப நாளைக்கு அப்புறம் ப்ளாகை தொடர முடிவு செய்தேன் - க்ஷணப் பித்தம். வெப்சைட் ஒரு பக்கம் இருக்கட்டும், இது இன்னொரு பக்கம் இருக்கட்டுமே.. இந்த ஆண்டு 2010 கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த என் சிறுகதையோடு

---------------------------------------------------------------------------------------

ரங்கா சேட்

‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’

பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.

மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி பஸ் உள்ளே போட்டார்கள்.

‘எதுக்கு மாமா கூஜாவும் மண்ணாங்கட்டியும்?’

முந்திரிக்காய் கூஜா மூடி லூசாகி வென்னீர் காலில் சிந்தின அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் நந்து கேட்டான். ஆறே கால் அடி ஜாம்பவான். நித்தியப்படிக்கு நாலு சிகரெட் ஒளிந்து நின்று ஊதித் தள்ளுகிறதைத் தவிர ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. முதலாவது விடிகாலை கொல்லைக்குப் போக, அடுத்த மூணும் அந்தந்த வேளை ஆகாரம் முடிந்த அப்புறம்.

ரங்கா சேட்டின் ஒரே தங்கை நாச்சியார் கிழங்கு கிழங்காக நாலு பிள்ளைகளைப் பெற்று நல்லெண்ணெய் முழுக்காட்டி வளர்த்து நிறுத்தி வைத்திருக்கிறாள். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அவளுக்குக் கல்யாணம் செய்தபோது சீராகக் கொடுத்த கிழங்கு மாதிரியான முந்திரிக்காய் கூஜாவை மட்டும் இத்தனை வருஷம் போனபிறகு கழித்துக் கட்டிவிட்டாள்.

‘இதை எடுத்துண்டு போய் புழங்கிக்கோடா அண்ணா’

நாச்சியார் களிம்பேறிய அந்தக் கூஜாவை காலையில் விசேஷம் எல்லாம் முடிந்ததும் ரங்கா சேட்டிடம் கொடுத்தாள். நேற்று சாயந்திரம் தேங்காய் நாரை வைத்து தேய்க்கிறேன் என்று பெயர் பண்ணி முனிசிபல் குழாய்த் தண்ணீரில் அலம்பி, சுத்த ஜலம் என்று கொதிக்கக் கொதிக்க ஊற்றி வேறே கொடுத்தாள்.

முந்திரிக்காய் கூஜாவை எப்படிப் புழங்குவது என்று சேட்டுக்குப் புரியவில்லை. உசிர் இருக்கப்பட்ட மனுஷ ஜீவன் என்றாலும் வர, போக, பார்க்க, நாலு வார்த்தை பிரியமாகப் பேச, தலைவலி, கைகால் குடைச்சல் வந்தால் அலுப்பு மருந்து வாங்கி வந்து கொடுத்து, ‘நாளைக்கு சரியாப் போயிடும். ரஸ்க் சாப்பிட்டுத் தூங்கு’ என்று ஆறுதல் சொல்லிவிட்டு வர என்று பழக முடியும். கூஜாவோடு எப்படி உறவாட?

“எஞ்ஜாய் மாமா, தூங்கிட்டே சென்னை”. நந்து உற்சாகமாகச் சொன்னான்.

சேட் திகிலோடு பஸ் உள்ளே பார்த்தார். ரெண்டு வரிசையாகப் படுக்கை. ரயிலில் ஸ்லீப்பர் கம்பார்ட்மெண்டில் ஏறின மாதிரி. ஆனால் இங்கே சுத்தமான பஸ் வாடை, வெளியே அகாலத்தில் பலாச்சுளை விற்கிறவன் குரல், முன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்து ஆரோகணித்த டிரைவர், மற்றும் கண்டக்டர்.

“இந்த கூஜாவை வேணும்னா உங்க அம்மா கிட்டேயே பத்திரமா”.

ரங்கா சேட் ஜன்னல் வழியே கூஜாவின் முந்திரித் தலையை மட்டும் நுழைத்து மிச்சம் நுழையாத ஏக்கத்தோடு கேட்டபோது பஸ் நகர்ந்திருந்தது.

காக்கி நிஜார் மாட்டிய கண்டக்டர் படுக்கை படுக்கையாக டிக்கெட் விவரம் விசாரித்துக் கொண்டு வந்தான். ரங்கா சேட் எங்கே இருக்கணும்?

“டிக்கட் கொடு சார்”.

அவர் பவ்யமாக கான்வாஸ் பையைத் திறந்து நாமக்கட்டிக்கும் தலைவலி மாத்திரைக்கும் நடுவே வைத்திருந்த டிக்கட்டை எடுத்து நீட்டினார்.

‘சேட்டுன்னு போட்டிருக்கே. யாருக்கு எடுத்தது?’

படுபாவி நந்து. ஊரில் பெயர் புழங்குகிற படிக்கே டிக்கட் எடுத்து விட்டான். முந்திரிக்கா கூஜா என்று புழங்கியிருந்தாலோ?

“உங்க பேரு என்ன”?

முந்திரி. அவசரமாக வார்த்தையை முழுங்கியபடி ரங்கநாதன் என்றார்.

“அப்புறம் ஏன் சேட்டுன்னு வடக்கத்தியாருங்க பேரு”?

பாவ மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம்.

“அது ஒண்ணும் இல்லேப்பா. நாள் முழுக்க ஜர்தாபான் வாயிலே அடக்கிண்டே இருப்பேனா, மார்வாடிப் பெயர் வச்சுட்டாங்க சிநேகிதங்க எல்லாரும்”.

பக்கத்து படுக்கை கொஞ்சம் அசைந்து அதில் பத்து சதவிகிதம் தூக்கத்தில் இருந்தவன் ஒதுங்கிப் படுத்தான். அவன் மேலே ரங்கா சேட் புகையிலை அபிஷேகம் நடத்துவார் என்று தூக்கத்தை மீறின ஜாக்கிரதை உணர்ச்சி.

“பஸ்ஸுக்குள்ளே ஜர்தா குர்தா எல்லாம் போடக்கூடாதுன்னு சொல்லு கபாலி”

டிரைவர் இரைந்தது தன்னைப் பற்றித்தான் என்று ரங்கா சேட்டுக்குப் புரிந்தது.

“நான் ஜர்தா போடறதை விட்டு ஒரு மாமாங்கம் ஆகப் போறது. நீ ஏன் வெட்டியா கவலைப் படறே”.

அவர் குரல் எழுவதற்குள் பஸ் ஹாரன் பெரிசாக முழங்கி அதை விழுங்கிவிட்டது.

“என் சீட் எது”?

ரங்கா சேட் நகர முற்பட்ட கண்டக்டரை அவசரமாகக் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திக் கேட்டார்.

“அந்தக் கோடி சேட்டு. கடைசிப் படுக்கை. ஏணியிலே ஏறி மேலே போய்ப் படுத்துடு. துப்பிடாதே. சொம்புலே தண்ணி இருந்தா இப்பவே குடிச்சுட்டு”.

“குடிச்சுட்டு”?

“அதையும் உமிஞ்சிடாதே. கபால்னு முளுங்கிடு”.

கபாலி அறிவுரை அருளிய ஒளி முகத்தில் வீச ஞானஸ்தனாக முன்னே நடந்தான்.

கான்வாஸ் பை தோளில் கனக்க, கையில் வென்னீர் கூஜா குலுங்க தேகம் முழுக்க ஆடியபடி ரங்கா சேட் பஸ்ஸின் ஈசான மூலையை நோக்கிப் போனபோது யாரோ விடலைப் பசங்களைப் போல் விசில் அடித்தார்கள்.

பஸ் கம்பத்தைப் பிடித்தபடி மூச்சு வாங்கத் திரும்பிப் பார்த்தார். பஸ் வீடியோ உயிர் பெற்று பெருஞ்சத்தத்தோடு இயங்க ஆரம்பித்திருந்தது. ஒரு சுந்தரிப் பெண்ணை பரட்டைத் தலைப் பையன் பையப் பதறாமல் கொட்டு முழக்கோடு கேலி செய்து பாடிக் கொண்டு போன பாட்டு.

இன்னிக்கு வைகுண்ட ஏகாதசிதான். இந்த இரைச்சலில்.

அவர் மனசு சொல்ல அதை அடக்கினார். முதல்லே எங்கே முடங்கறதுன்னு பாரு.

தனக்குத்தானே உத்தரவிட்டபடி பஸ் கோடிக்கு வந்து விட்டார்.

இருட்டில் கீழ் பெர்த். இங்கேயும் பெர்த்னு தான் பெயர் புழங்குகிறதா? இல்லை வேறே ஏதாவது டெர்மினாலஜியா?

ஏதோ ஒண்ணு. கீழே புளிமூட்டை மாதிரி அடைந்து கிடந்தவன் கொஞ்சம் போல் உட்கார்ந்து எந்த சீட் என்றான்.

“மேலே போகணும்”.

தத்துவார்த்தமாக தான் சொன்னதை தானே ரசித்தார் ஒரு வினாடி.

“செருப்பை இப்படி கீழே விட்டுட்டு ஏணியைப் பிடிச்சு ஏறுங்க”.

கீழே பாதி அறுந்து கிடந்த அவனுடைய ரப்பர் ஸ்லிப்பரை பத்திரமாக ஓரத்தில் நகர்த்தி வைத்தான். அப்புறம் என்னமோ தோன்ற அதைத் தலைமாட்டில் வைத்து செய்தித்தாளுக்குள் பொட்டலம் கட்டிப் பத்திரப்படுத்தினான்.

உலகத்தை, அறுந்து போன ஸ்லிப்பர் மதிப்புக்குக்கூட அவன் நம்பத் தயாராக இல்லை என்று உறைக்க, சேட் மேலே போகிற வழியை அண்ணாந்து பார்த்தார்.

“இப்படி மலைச்சுப் போய் நின்னா, ராத்திரி முழுக்க நின்னுக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். ஏறு சார் சரசரன்னு”.

பின்னால் கண்டக்டர் குரல். அவன் ரங்கா சேட்டின் தோள்பையைப் பறித்து மேலே வீசினான். கூஜாவைப் பிடுங்கி ஒரு எம்பு எம்பி இருட்டுக் குகைக்குள் வைத்தான். அப்புறம் ரங்கா சேட்டின் இடுப்பில் கைகொடுத்து ஒரு தள்ளு தள்ளி இரும்பு ஏணியில் ஏற்ற, சேட் மேலே சயனப் பொந்தில் அலக்க மலக்க விழுந்தார்.

“ஏம்ப்பா, இங்கே சௌகரியம் எல்லாம்”.

அவர் சரிந்தபடி கேட்டபோது கண்டக்டர் நிமிர்ந்து பார்த்தான்.

“என்ன சௌகரியம் வேணும்? ஏசி போட்டு வைச்சிருக்கு. இப்போ ஜிலுஜிலுன்னு ஆயிடும். ஃபேன் இருக்கு. சைடுலே கையை விட்டுத் துளாவினா சுவிட்ச் கிடைக்கும். பிளேட்லே கையை விட்டுக்காம பத்திரமா சுவிட்ச் போடணும்”.

“அது இல்லேப்பா வேறே சௌகரியங்கள்”.

“கம்பளிப் போர்வை இருக்கு. போர்த்திக்கிட்டு தூங்கு. இறங்கும்போது என் கையிலே ஒப்படைச்சுட்டுப் போகணும்.”

“போர்வை கிடக்கட்டும். பாத்ரூம் சங்கதி”.

“அதுக்கெல்லாம் இடம் எங்கே இருக்கு? வண்டி நிக்கும்போது ஓரமாப் போய்”.

அவன் முடிப்பதற்குள் வீடியோ பாட்டு முடிந்து வசனம் ஆரம்பித்திருந்ததால் படுத்தபடி சினிமா பார்க்கிற யாரோ இடைஞ்சலாக இருப்பதாக ஆட்சேபிக்க, அவசரமாக நகர்ந்தான்.

ரங்காசேட் இருட்டுக்குள் பீதியோடு உற்றுப் பார்த்தார். அந்த கூஜா இங்கேதான் புழங்கிக் கொண்டிருக்கிறது. அதற்குள் சுத்த ஜலம். குடித்தால் ஒரு மணி நேரத்தில் பாத்ரூம் போக வேண்டி வரும்.

பஸ் வேகமாக நகர்கிறது. எப்போ நிற்கும்? எதுக்கு நிற்கணும்? இறங்கணுமா? இல்லே பாத்ரூம்.

வருதா? இப்போ வரல்லே.

அப்போ தூங்கு.

அவர் தூங்குகிற மாதிரி பாவனை செய்தார். குளிர் அதிகமாக இருந்தது. கம்பளிப் போர்வை என்று சொன்னானே?

தலைமாட்டில் ஹேர் ஆயில் வாசனையும் புளிப்பு மிட்டாய் வாடையுமாகக் கிடந்த பழந்துணிதானா அது?

அதுதான் போலிருக்கு. உட்கார்ந்து அதை பரிசோதிக்க நினைத்தார்.

எங்கே உட்கார? கொஞ்சம் நிமிர்ந்தால் தலை மேல் கூரையில் முட்டுகிறது. கிடப்பதைத் தவிர வழி இல்லை. சென்னை போகிற வரைக்குமா?

தூங்கினால் இதோ வேகமாக விடிந்து சென்னைதான். தூக்கம் எங்கே வருது?

காலையில் இருந்தே வித்தியாசமாக விடிந்தது சேட்டுக்கு.

அசை போட்டபடி கிடக்க, வீடியோவில் யாரோ செத்துப்போய் மூக்கில் பஞ்சு அடைத்து எடுத்துப் போனது பாதியில் நின்று ஜிகினா ஜிகினாவாக வெளிச்சம்.

“அமர்த்திடுங்க தூங்கணும்”,

யாரோ ஆணையிட அந்த வெளிச்சமும் போய் முழு அந்தகாரம்.

நேற்று வந்து இறங்கினதுமே நாச்சியார் சுவாதீனமாக வேலை ஒப்பித்தாள்.

“தோ பாருடா அண்ணா, நீ தனிக்கட்டை. ரெண்டு நாள் முந்தியே வந்திருக்கலாமில்லே. புது வீட்டுக்கு தரை பாலீஷ் போடறதுக்கும், கரண்ட் சப்ளைக்கும் அலைய ஒத்தாசையா இருந்திருக்கும். என்னமோ போ”.

கல்யாணம், பெண்டாட்டி, பிள்ளை குட்டி தேவை இல்லாமலேயே தாலுக்கா ஆபீசில் சீனியர் அசிஸ்டெண்டாக, அசிஸ்டெண்ட் என்ன, அவர் சேர்ந்தபோதே எழுத்தர்னு கூப்பிட ஆரம்பித்திருந்தார்கள். அப்புறம் முதுநிலை எழுத்தர்.

கிழ எழுத்தராக அவர் ரிடையர் ஆனபோது வட்டாட்சியர் அலுவலகத்திலும் கம்ப்யூட்டர் வந்துவிட்டது. அதுக்குப் பக்கத்தில் நிறுத்தி பிரிவுபசார போட்டோ எடுத்தபோது ஏனோ பெருமையாக இருந்தது. நாச்சியாரிடமும் அவள் பிள்ளைகளிடமும் காட்ட அதை எடுத்து வந்திருந்தார். யாருக்கு அவர் கொண்டு வந்ததைப் பார்க்க நேரம் இருக்கு? வேலை சொல்ல மட்டும் அது உண்டு போல.

நேற்று ராத்திரியே நாச்சியார் கட்டிய புதுவீட்டில் போய்ப் படுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வீடு இல்லை. ரெண்டாவது மாடியில் எழுநூறு சதுர மீட்டர் ப்ளாட். காலையில் கிரகப் பிரவேசம். வீடெல்லாம் தண்ணீரை அடித்துக் கழுவி, அது காயாமல் பாதி ராத்திரி வரை ஒத்தி ஒத்தி எடுத்து ஈரத் துணியைப் பிழிந்து ஒரு மாதிரி பொழுது போய்விட்டது.

காலையில் வந்து சேர்ந்த எல்லாரும் அவரை லட்சியம் செய்யாமல் புரோகிதருக்கு பிளாஸ்கில் இருந்து காப்பி ஊற்றிக் கொடுத்து உட்கார வைத்தார்கள்.

“பிரமாதமான காப்பி டிபன் கேடரிங்லே சொல்லியிருக்கு. இப்போ வந்துடும்”.

ரங்கா சேட் தேற்றப்பட்டார். ஏழு மணி வரை கேட்டரிங் பற்றிக் கேட்டும் பயனில்லை. காப்பியை யாரும் கண்ணில் காட்டவில்லை. பசுமாடு வந்தாச்சா என்று ஆளுக்கு ஆள் பரபரத்துக் கொண்டிருந்தார்கள்.

“மாமா, இங்கே தெருக்கோடிதான். இப்படியே நடந்து வலதுகைப் பக்கம் திரும்பி அரை கிலோமீட்டர் போனா, அஞ்சனா பண்ணைன்னு போர்ட் தெரியும். யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வாயிலே இருக்கு வழி”.

நந்து அவரைக் கிளப்பி விட்டான்.

“நீயும் வாயேன். உன் மோட்டார் பைக்கிலே போய்ட்டு வந்துடலாம்”.

யார்யாரையோ புதுமனை புகுவிழாவுக்கு விருந்தாளியாகக் கொண்டு சேர்க்க அந்த வண்டியை அவன் விடிந்ததிலிருந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறான்.

அவன் போயிருந்தான். மற்ற மருமகன்களும் கேடரிங் காண்ட்ராக்டர், புரோகிதருடைய உதவியாளர், யாரோ ஒரு மகாலட்சுமி மாமி, சிடியில் விஷ்ணு சகஸ்ரநாமம் முடிந்து பாவயாமி ரகுராமம் என்று சுற்றிக் கொண்டிருந்ததால் அஞ்சனா பண்ணைக்கு அவர் தனியாக நடக்க வேண்டி வந்தது.

அரை கிலோமீட்டர் என்பது மூணரை கிலோமீட்டராக வாய்வழியாக நீண்டு அஞ்சனா பண்ணையில் நுழைந்தபோது, முழுத் தொகையும் அட்வான்ஸாகத் தராத காரணத்தால் பசுமாடு வராது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்.

அட்வான்ஸ் கொடுத்திருந்த நூறு போக, சிறப்புக் கட்டணமாக ரங்கா சேட் பாக்கெட்டில் இருந்து இன்னொரு இருநூறை வெட்டினார். ஒரு கட்டு மஸ்தான ஆளோடு மாட்டை முன்னும் பின்னும் இழுத்து தட்டி தாஜா செய்து நகர்த்தி ப்ளாட் வந்தபோது எட்டு மணி. கேடரிங் முடிந்து வேன் கிளம்பிக் கொண்டிருந்தது.

“மதியச் சாப்பாடு சீக்கிரமே வச்சுக்கலாம் மாமா”.

“காப்பி?”

பிளாஸ்கைக் கவிழ்த்து ஆறி அவலாகிப் போன அரைக்கப் காப்பியை வாயில் ஊற்றியதும் புத்துணர்வு பெற்றார் சேட்.

“ரெண்டாம் மாடிக்கெல்லாம் மாடு ஓட்டிப் போக முடியாது. க்ரூயல்டி டு அனிமல்”.

அசோசியேஷன் செக்ரட்டரி கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். கட்டு மஸ்தான ஆசாமியும் ஆமோதித்தான். மாடு கூட அதேபடிக்குத் தலையை ஆட்டியது.

நந்து ஒரு நல்ல வழி சொன்னான்.

“பசுமாடு மாடிப்படி பக்கமா நிக்கட்டும். என் ஹேண்டிகாம் வீடியோ காமிராவிலே அதைப் படம் எடுத்துக்கலாம். கேமராவை அப்படியே பிடிச்சுட்டு படியேறி வீட்டுக்குள்ளே போனா, சம்பிரதாயம் நடந்து முடிஞ்ச மாதிரி தானே”.

ரங்காசேட் தான் இதுக்கும் அழைக்கப்பட்டார். பசுமாட்டை சிரத்தையாக எடுத்த ஹேண்டிகாமை கையில் பிடித்தபடி அவர் மாடிப்படி ஏற வேண்டிப் போனது. “மெல்ல”, “ஓடாமப் போங்க” என்று அங்கங்கே சகலரும் அறிவுரைத்தார்கள்.

நாலு படி ஏறுவதற்குள் ரங்கா சேட் தானே பசுமாடானதாக உணர்ந்தார். காலை எடுத்து முன்னால் வைக்கவே கஷ்டமாக இருந்தது. பாத்ரூம் போனால் தேவலை என்று ஒரு தோணல்.

சட்டென்று நினைவுச் சங்கிலி அறுபட்டது. பாத்ரூம். போகணும். போனால் தேவலை. இப்போதும்.

சும்மா கிட. அப்படி ஒண்ணும் இல்லே. வேறே எதையாவது நினை.

மனதுக்குக் கட்டளை இட்டது நாச்சியார் குரலில் இருந்தது தப்பாகி விட்டது. “முந்திரிக்காய் கூஜாவைப் புழங்க வச்சுக்கோடா அண்ணா”.

அது நிறைய வென்னீர். இங்கே தான் பக்கத்தில் இருட்டில் எங்கேயோ. பாத்ரூம் போயே ஆகணும்.

தூங்கு. இப்போ இல்லே. அப்புறம் ஒரு மணி நேரம் கழித்து உட்காரலாம்.

தூக்கமா விழிப்பா என்று தெரியாத நிலை. வயிறு மட்டும் படியேறாத பசுமாடு போல அடம் பிடித்தது.

கீழ் பெர்த்காரன் மேலே நிமிர்ந்து பார்த்தான்.

அவனுக்கு ஒரு குரலை கற்பனை செய்யலாம். நாச்சியார் குரல் வேணாம்.

முப்பது வருடம் முன்னால் அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜுனியர் அசிஸ்டெண்ட் ஆகச் சேர்ந்தபோது ஆகாசவாணியில் செய்தி வாசித்த குரல்.

சக வருஷம் .. செய்திகள் வாசிப்பது. கடவுள்.

கீழே படுத்திருந்த லுங்கி கட்டிய ஆசாமி சிரித்தான்.

“என்ன வேணும் கேளு ரங்கா. இந்த செருப்பை மட்டும் கேட்காதே”.

செய்தித்தாள் பார்சலில் இருந்து செருப்பை எடுத்து கால் பக்கம் நகர்த்தியபடி ரங்கா சேட்டைப் பார்த்தான்.

கடவுள் தானா? படுத்துக்கொண்டே பயணம் போகிற பஸ்ஸிலா?

ரங்கா சேட்டுக்கு எழுந்து உட்காரணும் போல் இருந்தது. கீழ் பர்த் கடவுள்காரன் ஒரு மாதிரி முதுகு வளைத்து உட்கார்ந்தான். செருப்பைக் கீழே போட்டான்.

பக்கத்தில் ஒரு நசுங்கின ப்ளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் இருந்து களக் களக் என்று சத்தம் எழ தண்ணீர் முழுவதையும் குடித்துத் தீர்த்தான். அத்தனை நீரும் ரங்கா சேட் வயிற்றில் இறங்கின மாதிரி இருந்தது.

சேட்டுக்கு இனியும் பாத்ரூம் போகாமல் முடியாது.

உட்காரவும் வழியில்லை. இறங்கி, டிரைவரை நிறுத்தச் சொல்லலாமா?

நகரும் இருட்டுப் பொதிக்குள் அவன் எங்கே இருப்பான் என்று தெரியவில்லை.

பாத்ரூம் போகணும்.

சத்தம் போடலாமா?

மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்ட நாக்கு. பஸ் நகர்கிற இரைச்சலும், ஏணியில் ஏதோ சங்கிலி உரசி உரசி வருகிற ஓசையும் தவிர வேறே சத்தம் இல்லை.

கீழ் சீட்காரன் திரும்ப மேலே பார்த்தான். கடவுள் பேசின மாதிரி இருந்தது.

“சொல்லு ரங்கா. என்ன வரம் வேணும்? என்ன வேணும்னாலும் கேளு, தரேன்”.

“பாத்ரூம் போகணும்”.

அவன் தலையை ஆட்டிக் கொண்டான்.

“கண்டக்டர் நிறுத்துங்க ப்ளீஸ்.”

அவன் இரைந்து அரை நிமிஷம் கழித்து பஸ் நின்றது.

“இறங்கிக்கறேன். திரும்ப ஊருக்குப் போக வேண்டிய அவசரம்”.

மொபைல் போனை சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

“இங்கே இறங்கினா வண்டி கிடைக்காது. யாரும் நிறுத்த மாட்டாங்க”.

கண்டக்டர் சொன்னபோது ரங்கா சேட் கான்வாஸ் பைகூட இல்லாமல் தனியாக ஏணியைப் பிடித்து இறங்கிக் கொண்டிருந்தார்.

“பரவாயில்லே. ரொம்ப அவசரம்”.

கீழ் பெர்த் கடவுள்காரன் செருப்பில் கால் நுழைத்துக்கொண்டபோது ரங்கா சேட் அவன் பக்கத்தில் நின்றார்.

“நீங்களும் இறங்கணுமா?”

கண்டக்டர் கேட்டான். தலையாட்டியபடி லுங்கிக்காரக் கடவுளைத் தொடர்ந்தார் ரங்கா சேட். பசுமாடு மாடிப்படி ஏறுகிற படபடப்பு அவர் நடையில்.

“இதை விட்டுட்டுப் போறீங்களே”.

கான்வாஸ் பையையும், முந்திரிக்காய் கூஜாவையும் நீட்டினான் கண்டக்டர்.

லுங்கிக் காரனும் பின்னால் ரங்காசேட்டும் இறங்கினார்கள்.

சேட் முகத்தில் அலாதி நிம்மதி. இருட்டில் ஓரமாக நின்று கூஜாவை கான்வாஸ் பையில் திணித்துக் கொண்டார். பாத்ரூம் என்றது மனம். இருடா ரங்கா என்றார்.

ஐந்து நிமிடம் கழித்து அவர் புறப்பட்டபோது லுங்கிக்காரன் போன தடம் தெரியவில்லை. இது வந்த வழியா, போக வேண்டியதா?

இருட்டில் எதுவும் புலப்படவில்லை. கடந்து போகிற பஸ் வெளிச்சத்தில் பாதை மட்டும் விட்டு விட்டுத் தெரிந்தது.

முந்திரிக்காய் கூஜாவில் இருந்து தண்ணீர் குடித்தார். அது திறக்கவும், மூடவும் சகஜமாக கைக்குப் பிடித்த பிடிக்கு வந்தது. பழகி விட்டது.

நடக்க ஆரம்பித்தார்.


p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது