Tuesday, December 25, 2007

சிவகங்கையில் ஒரு சின்னப் பையன்

சிவகங்கை சிவன்கோவில் எதிர் வசத்து ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்தபோது எனக்கு ஏற்பட்ட பெருமகிழ்ச்சியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஆழ்ந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி முடியும்? உங்களுக்கு எப்போதாவது ஒன்பது வயது முடிந்திருக்கிறதா? நீங்கள் அரை டிராயர் அணிந்திருக்கிறீர்களா? குருசாமி டெய்லர் தைத்துக் கொடுத்ததா அது? அழுத்தமான கருப்பிலும், அடிக்கும் நீலத்திலுமாக, மாட்டிக்கொண்டால், தொளதொள என்று வழிந்து முழங்காலுக்குக் கீழே, கணுக்காலுக்குக் கொஞ்சம் மேலே வரை வருமா? அப்புறம், இடுப்புக்கு மேலே இரண்டு பக்கத்திலும் வார் வைத்துப் பெருக்கல் குறி மாதிரி முதுகில் இணைத்திருக்குமா? எல்லாக் கேள்விக்கும் ஆம் என்று பதில் சொல்லியிருந்தால், உங்கள் பெயர் ஷண்முகசுந்தரம் அல்லது சுந்தரராஜன் அல்லது முக்தார் சாயபு. நீங்களும் என்னோடு நாற்பத்து நாலு வருஷம் முன்னால் ஐந்தாம் கிளாஸ் தேறி ஆறாவது வகுப்புக்கு, அரசர் உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைத்திருப்பீர்கள். வெள்ளைச் சட்டை, நீல டிராயர் என்று சீருடை அணிந்திருப்பீர்கள். முட்டிக்காலுக்கு நீண்டிருந்தாலும் அந்த நீல டிரவுசரில் இடுப்புக்கு மேல் வார் என்ற அவமானச் சின்னம் நிச்சயம் இருந்திருக்காது. “ஐஸ்கூல்லே படிக்கற பையன்; கொளந்தைப்புள்ளை மாதிரி வார் எல்லாம் என்னத்துக்கு அம்மா?” என்று குருசாமி டெய்லரே அம்மாவிடம் சிபாரிசு செய்து அனுமதி வாங்கியிருப்பார்.

ஆக, அரசர் உயர்நிலைப் பள்ளி என்றால் ஏற்படும் முதல் மகிழ்ச்சியில் குருசாமி டெய்லருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறதுபோல் சீருடையில் மற்றொரு அங்கம் நீல நிற டை. கஷ்டப்பட்டு சிங்கிள் நாட், டபுள் நாட் என்று போட பிரம்மப் பிரயத்தனம் செய்து கழுத்தை நெறிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அழகான ரெடிமேட் முடிச்சோடு, பின்னால் நெக்லஸ் போல் மாட்டிக்கொள்ள கொக்கி வைத்து வந்த அந்த டைக்காகவே இன்னொரு தடவை ஆறாம் வகுப்பு படிக்கலாம். இந்த மகிழ்ச்சிக்கும் மேலாக, அல்லது கீழாக, பளீர் வெண்மையில் கான்வாஸ் ஷ¥. ஷ¥ லேஸ் இரண்டையும் சரியாகக் கோர்த்து முடிந்து கொள்வது கொஞ்சம் சிரமமான காரியம்தான் கூடிய சீக்கிரம் இதில் தேர்ச்சி பெற்றுவிடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பில் நுழைந்ததற்கு முந்திய வருடம்தான் முதன்முதலாகப் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் தொடங்கினார்கள். ஏழாவது வகுப்பு சீனியர்கள் ‘போங்கடா பொடியங்களா’ என்று எங்களைப் பார்த்துக்கொண்டு வெள்ளைக்கார துரை கணக்காக முன்னால் லெப்ட் ரைட் போட்டு நடக்க, அதை லட்சியமே செய்யாமல், ஆறாம் வகுப்புப் பிள்ளைகளான நாங்கள் முந்தின பாராவில் விளக்கப்பட்ட சந்தோஷம் காரணமாகப் பறந்து கொண்டு வருவோம். உடம்பும் அப்போது இறகு போல லேசாக இருந்ததாக நினைவு.

நான் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தபோது அப்பா ஊரில் இல்லை. அவர் எப்போதுமே ஊரில் இருந்தது இல்லை. நாலைந்து மாதத்துக்கு ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்து போட் மெயில் என்ற ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் நாலு நாள் பயணமாக வந்து சேர்ந்து, பழநியின் குதிரை வண்டி ஜல்ஜல் என்று கம்பீரமாக ஒலியெழுப்பி நிற்க வீட்டு வாசலில் இறங்குகிறவர் அவர். வங்கி அதிகாரி. அவரை கொல்கத்தா, மும்பாய், தில்லி, அகமதாபாத் என்று வருடம் தவறாமல் இந்தியாவின் சகல பிரதேசங்களுக்கும் மாற்றிய அவருடைய மேலதிகாரிகளுக்கு, சிவகங்கையிலும் அந்த வங்கிக்குக் கிளை உண்டு என்ற விஷயம் ஏனோ தெரியாமல் போனது.

மணத்தக்காளி வத்தல் குழம்பு, கீரை மசியல், மிளகு ரசம், சுட்ட அப்பளம் என்று ‘அப்பா மெனு’ அமலாக்கப்படும் காலம் அப்பா ஊருக்கு வரும் அந்த நான்கு நாளும். வழக்கப்படி கொஞ்சம்போல் கொறித்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்தபடி அப்பா புதுப்பள்ளிக்கூடத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“விளையாட்டு மைதானம் ஓரமா நாலைஞ்சு வேப்ப மரம் இருக்குமே, எப்படி இருக்கு?”

“தெரியலியே அப்பா”

“இவனை எந்த ஸ்கூல்லே போட்டே?” அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்டபோது நான் போர்ட் ஹைஸ்கூலில் சேர்ந்திருப்பேன் என்று அவர் சந்தேகப்பட்டிருப்பார் என்று தோன்றியது. போர்ட் ஹைஸ்கூல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி என்றாலும், குருசாமி டெய்லர் தைக்கிற உடுப்பு ஒரு பார்வைக்குப் பாவாடை மாதிரி தெரிவதால் அப்படி யோசித்திருக்கலாம்.

“சின்னக் குழந்தை. இப்பத்தான் நாலு மாசமாப் புதுப்பள்ளிக்கூடத்துக்குப் போறான். அதுக்குள்ளே எல்லாம் பார்த்துப் பழகி அத்துப்படியாயிருக்குமா என்ன?” பாட்டியம்மா கால் ஆணிக்குக் களிம்பு தடவியபடிக்கு என் தரப்பில் ஆணித்தரமாக வாதாடி அப்பாவின் சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

வேப்ப மரத்தில் ஆரம்பித்து, முன் மண்டபம், கல் படிக்கட்டு, சாத்தப்பய்யா ஊருணி என்று அப்பா ஊஞ்சலில் மெல்ல ஆடியபடிக்கு பள்ளிக்கூடத்தை வலம்வர, பக்கத்தில் உட்கார்ந்து முன்னும் பின்னும் அவரோடு நகர்ந்துகொண்டிருந்த எனக்கு (வழக்கம்போல்) தாமதமாகத்தான் புரிந்தது - அப்பாவும் முன்னொரு காலத்தில் அரசர் உயர்நிலைப்பள்ளியில்தான் படித்திருக்கிறார். தொடர்ந்து தடதட என்று அவர் காலத்து ஆசிரியர்களின் பெயர்களை வரிசையாக அடுக்கி, யார் வகுப்பில் எத்தனை மதிப்பெண் வாங்கினார் என்று தகவல் தர ஆரம்பிக்க , நான் நீல டை பெருமையை நிலைநாட்டப் பெருமுயற்சி செய்தேன். அந்த நிமிடம்தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

“நான் படிக்கறபோது அழகுக் கோனார்னு ஒரு அட்டெண்டர்”

“அழகுக் கோனாரா? இருக்காரே”

அப்பாவும் பிள்ளையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்ட அந்த அற்புதமான கணத்தை வழங்கிய அழகுக்கோனாரும் அரசர் உயர்நிலைப்பள்ளி என்றால் நினைவுக்கு வருகிற இன்னொரு மகிழ்ச்சி.

தீபாவளி, பொங்கலுக்காக இரண்டு நாள் விடுமுறை, காலாண்டு அரையாண்டு, முழுப் பரீட்சைக்கான நீண்ட விடுமுறை போன்றவற்றை அறிவிக்கும் சுற்றறிக்கையை எடுத்துக்கொண்டு தலையில் முண்டாசும் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுமாக அழகுக் கோனார் மெல்ல நடந்து வருவார். ஆசீர்வாதம் சார் அறிவியல் வகுப்பில் ஆர அமர விளக்கும் •போட்டோசின்தசிஸில் ஒரு கண்ணும், மற்றது பள்ளி நூல்நிலையப் பக்கம் அழகுக் கோனாருக்காகத் திருப்பியும் காத்திருப்பதில் தொடங்கிய மகிழ்ச்சி. அப்புறம் அழகுக் கோனார் தெருவோடு நடந்து போவதைப் பார்த்தாலும் அந்த சந்தோஷம் கிடைக்க ஆரம்பித்தது. இரண்டு தலைமுறையைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய பெரியவர் அழகு நிச்சயம் செஞ்சுரி அடித்து ‘நாட் அவுட்’ ஆக இன்னும் வலம் வந்துகொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

மகிழ்ச்சிப் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிப்பது ‘டேப்லெட்’. கூடவே பாஸ்கர சேதுபதி சார். புதுக் காகித மணத்தோடும், கருப்பு வெள்ளைப் படங்களோடும், அழகான ஆங்கிலத்தில் அச்சடித்து வந்திருந்த வரலாற்றுப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்தபடி சுமேரிய நாகரீகம் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் சேதுபதி சார். சுமேரியர்கள் அரசியல் சட்டங்களை டேப்லெட்டில் எழுதி வைத்திருந்தார்கள் என்று பாடம் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட பிரமிப்புக்கு அளவே இல்லை. டேப்லெட் என்றால் மாத்திரை இல்லையோ? தீபாவளி கழிந்து மூன்றாம் நாள் சர்வ நிச்சயமாக வரும் காய்ச்சலுக்காக டாக்டரிடம் போனால், ஆள் உயர போத்தலில் இருந்து எடுத்து ஒரு உறையில் போட்டு, “தினசரி மூணு வேளை ரசம் சாதம். சாப்பாட்டுக்கு அப்புறம் முழுங்கு. பாட்டி பல்வலி எப்படி இருக்கு? அப்பா லெட்டர் போட்டாரா? தீபாவளிக்கு வீட்டிலே என்ன ஸ்வீட்? எப்படிப் படிக்கிறே? கணக்கிலே எத்தனை மார்க்?” என்று பதில் சொல்லக்கூடிய, கூடாத கேள்விக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தபடி கையில் தருகிற சமாச்சாரம் இந்த டேப்லெட். சுமேரியர்கள் மூவாயிரம் வருடம் முந்தியே தீபாவளிக் காய்ச்சலில் அவதிப்பட்டிருக்கிறார்களா? அல்லது அரசியல் சட்டத்தை எழுதக் காகிதம் கிடைக்காமல் மாத்திரை மேல் எழுதினார்களா? (டாக்டர் தருகிற ஜயண்ட் சைஸ் மாத்திரையில் இந்திய அரசியல் சட்டத்தையே எழுதிவிடலாம்).

நான் பதுங்கிப் பதுங்கி மெதுவாகச் சந்தேகத்தைக் கேட்டபோது, சேதுபதி சார் விளக்கினார் - “டேப்லெட் என்றால் களிமண்ணில் உருவாக்கிய எழுத்துப் பலகையும் தான்”. இப்போதும் காய்ச்சல் என்று டாக்டரிடம் போனால், பெரிய சைஸ் களிமண் பலகையைக் கொடுத்து முழுங்கச் சொல்வாரோ என்று கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ஒன்பதாம் வகுப்பில் புயல் மாதிரி ஒரு பிரவேசம், சத்தியகிரிராஜன் சார். பல்கலைக் கழகப் பேராசிரியராக, ரீடராகப் பணியாற்றிய அவர் எனக்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியராக இருந்தார் என்று சொன்னால் அவரைத் தெரிந்த பலபேர் நம்ப மாட்டார்கள். ஆனால் என்னைத் தெரிந்த சிலராவது நிச்சயம் நம்புவார்கள். “பட்டன் அப், பட்டன் அப்” என்று சொல்லியபடியே வகுப்பில் நுழைந்து, சட்டையில் சரியாகப் பொத்தான் போடாத மாணவர்கள் கன்னத்தில் தட்டி (இன்னும் வலிக்கிறது) இடி முழக்கத்தோடு பாடத்தை ஆரம்பிப்பார். பாடப் புத்தகத்தைத் தாண்டிச் சிந்திக்கத் தூண்டியவர் அவர்தான் என்பதை நினைத்தால் அந்த வலி மறந்து போய் அவரும் மகிழ்ச்சிப் பட்டியலில் இடம் பெறுகிறார்.

இந்தி மாஸ்டர் முத்துகிருஷ்ணன் சார் அடுத்தபடிக்கு மேடைக்கு வரலாம். நல்ல நகைச்சுவை உணர்ச்சி. நெடுநெடுவென்று உயரம். சுறுசுறுப்பு. ஒரே பிரச்சனை இந்திதான். இந்தி திணிப்பு மும்முரமாக நடந்துவந்த காலம் அது.

முத்துகிருஷ்ணன் சார் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். “ஆவோ பேட்டா. பேட்டி ஆவோ. புவாஜி ஆயியே. மேலா சலே”. அப்பா வீட்டில் ஒவ்வொருத்தராக அழைத்து பொருட்காட்சிக்குக் கூட்டிப் போகிறார். அங்கே போனதும் முதல் காரியமாக ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி ஒவ்வொன்றாகப் பிய்த்து விநியோகிக்கிறார். “பேட்டா கேலா காவ். பேட்டி கேலா காவ். பெஹன்ஜீ கேலா காயியே”. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல் எல்லோரும் வரிசையில் நின்று வாழைப்பழம் பெற்றுச் சாப்பிட்டு வரிசை கலையாமல் குடைராட்டினத்தில் சுற்றுகிறார்கள். அப்புறம் அப்படியே நடந்து

- சரி விடுங்கள், அந்த வினோதமான குடும்பம் இன்னும் வட மாநிலப் பாடப் புத்தகங்களில் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். இந்தி திணிப்பு வாழைப்பழக் குடும்பத்தோடு முடியவில்லை. உடற்பயிற்சிக்கான கட்டளை கூட இந்தியில் தான் என்று ஆனது. எட்டாம் வகுப்பில் எங்களை மைதானத்தைச் சுற்றி ஓட வைத்தும், பிரதி வெள்ளிக்கிழமை சாயங்காலம் வியர்க்க விறுவிறுக்க, முரசு ஒலியெழுப்ப ‘சாவ்தான், வீஸ்ராம்’ என்று இந்தியில் முழங்கி ஒரு மணி நேரம் விதவிதமாக உடம்பை வளைத்து உடற்பயிற்சி செய்ய வைத்தும் இன்பப்படுத்திய நீலமேகம் சார் மறக்கக் கூடியவரா என்ன?

நாங்கள் ஒன்பதாம் வகுப்பில் புகுந்தபோது, நீலமேகம் சாரும் கூடவே நுழைய வெலவெலத்துப் போனது. வகுப்புக்குள்ளேயே வைத்து இந்தியில் உடற்பயிற்சி சொல்லித்தரப் புதிதாக ஏதாவது சட்டம் வந்திருக்கலாம். குர்ஸி பே கடோ. வீஸ்ராம். கேலா காவோ.

“போயொரு கால் மீளும் புகுந்தொரு கால் பின்செல்லும்” என்று நீலமேகம் சார் அழகாக நளவெண்பாவைப் பாடம் சொல்ல ஆரம்பித்தாரே பார்க்கணும்! திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தோம். அவர் தமிழாசிரியராக அந்த வருடத்திலிருந்து மாறினார். “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ்க் குமுகாயம்” என்று தொடங்கி அவர் எழுதிக் கற்பித்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு பற்றிய கட்டுரையை வீட்டு மாடியில் நடைபோட்டபடி உரக்கப் படிக்கும்போது சிவாஜி ‘மனோகரா’ வசனம் பேசுகிறதுபோல் மனதில் பெருமிதம் பரவும். அதுவும் ‘பார்புகழும் தமிழக முதலமைச்சரான அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைக்க” என்ற இடம் வரும்போது ஒருதடவைக்கு இரண்டு தடவை சொல்லப்படும். அந்த வருடம் தமிழக வரலாற்றில் முக்கியமானது. அதற்கு முன்னால் அறிஞர் அண்ணா பெயரை வகுப்பில் உச்சரித்தால் சாவ்தான்.

சிவாஜி என்றால் நினைவுக்கு வருகிறவர் எங்கள் வி.ஆர்.நாகராஜன் சார். பள்ளி இறுதி வகுப்பில் வகுப்பு ஆசிரியராக ஆங்கிலமும், வரலாறும் எடுத்தவர் அவர். ஆப்ரஹாம் லிங்கனின் கெட்டீஸ்பர்க் சொற்பொழிவா, ஆஸ்கார் ஒய்ல்டின் ‘மகிழ்ச்சி இளவரசன்’ கதையா, ஜிம் கார்பெட்டின் வாழ்க்கைச் சித்திரமான ‘லாலாஜி’யா, வி.ஆர்.என் சார் நடத்தினால் எங்களுக்கு முன்னால் மேடை போட்டு நாடகம் நடப்பதுபோல் ஒன்றிப் போய்விடுவோம்.

இரண்டு வாரம் முன்னால் லண்டன் கோபுரத்தில் டியூடர் வம்ச நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். எந்தத் தவறும் செய்யாத பேரரசி ஆன்பொலின் சிரச்சேதம் செய்யப்பட்ட இடம் ஏற்கனவே பார்த்துப் பழக்கமானதுபோல் தோன்றியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டில் வி.ஆர்.என் சார் அந்தக் காட்சியை அற்புதமாக விளக்கியது இன்னும் நினைவில் இருப்பது தான் காரணம்..

வகுப்பில் நடுவில் ஏதாவது இரைச்சல் எழுந்தால் (தீபாவளி விடுமுறை சர்க்குலரோடு அழகுக் கோனார் ஆஜராகும்போது நடப்பது), “தம்பி தம்பி, என்ன இது •பிஷ் மார்க்கெட் போல” என்று சின்னதாகக் கோபப்படுவார் வி.ஆர்.என். முழுச் சைவரான அவர் மீன்கடைப் பக்கம் போயிருக்க வாய்ப்பே இல்லை என்பதை அவரிடம் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றினாலும், ஆப்ரஹாம் லிங்கன் மற்றும் அனிபொலின் கேட்டுக் கொண்டபடி தீபாவளி சந்தோஷத்தில் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.

ஆனாலும் வி.ஆர்.என் சார் என் ஒரு சந்தேகத்தை மட்டும் தீர்க்கவே இல்லை.

யாரோ சொன்னார்கள் - சவுந்தரராமனா, ஷாஜஹானா என்று நினைவில் இல்லை. சிவாஜி கணேசனுக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது வி.ஆர்.என் சார்தான் என்று. அவரிடம் கேட்டபோது சிரித்தபடி, “அதெல்லாம் எதுக்கு உனக்கு? இங்கிலீஷ் ரிவைஸ் செஞ்சியா? வோர்ட்ஸ்வொர்த்தோட ‘சைல்ட் இஸ் தி •பாதர் ஓ•ப் த மேன்” புரிஞ்சதா இல்லியா? “ என்று பாடத்துக்குத் தாவி விட்டார்.

முந்தாநாள் ராத்திரி ஒரு கனவு கண்டேன். பள்ளிக்கூடத்தில் வி.ஆர்.என் சார் வகுப்பில் உட்கார்ந்திருந்தேன். கட்டை மீசையும், சோடா புட்டிக் கண்ணாடியும், கழுத்தில் கொக்கி மாட்டாத நீல டையுமாக நான். அவர் இன்னும் அதே இளமையோடுதான் “ஸ்வாலோ ஸ்வாலோ, லிட்டில் ஸ்வாலோ” என்று ஆஸ்கார் ஒய்ல்டின் மகிழ்ச்சி இளவரசனாக நவரசமும் ததும்பப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். நான் கருத்தரங்கிலே பேசுகிறதுபோல் எழுந்து நின்று பணிவான குரலில் கேட்கிறேன் - சிவாஜிக்கு நடிகர் திலகம் என்று பட்டம் அளித்தது நீங்கதானா? அவர் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். அதற்குள் வாசலில் அழைப்பு மணியை அடித்து யாரோ எழுப்பிவிட்டு விட்டார்கள்.

காலிங் பெல்லைக் கண்டுபிடித்தவர்களை லண்டன் டவரில் வைத்து ஆன்பொலின் போல் சிரச்சேதம் செய்ய வேண்டும்.

(சிவகங்கை அரசர் உயர்நிலைப்பள்ளி தன் நூற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவினை இந்த ஆண்டு கொண்டாடியதை ஒட்டி வெளியிட்ட சிறப்பு மலர் கட்டுரை).

3 Comments:

At 6:24 am, Blogger Unknown said...

வாழ்க்கையில் மறக்கவே முடியாத பல சம்பவங்கள் பள்ளிக்கூடங்களோடு தொடர்புடையவை. மிகவும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். உங்கள் பள்ளி இன்னும் பல நூற்றாண்டுகள் காண வாழ்த்துகிறேன்.

இராம்

 
At 6:26 am, Blogger Costal Demon said...

வாழ்க்கையில் மறக்கவே முடியாத பல சம்பவங்கள் பள்ளிக்கூடங்களோடு தொடர்புடையவை. மிகவும் அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். உங்கள் பள்ளி இன்னும் பல நூற்றாண்டுகள் காண வாழ்த்துகிறேன்.

இராம்

 
At 6:24 am, Blogger லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

முருகண்ணா,

ஒரு சோம்பேறித்தனமான மழை தூவும் வெள்ளி மாலையில், கொட்டாவியுடன் நெட்டில் எல்லே உலா வருகையில், உங்களுடைய சிவகங்கைச் சீமைப் பெருமையைக் கண்டேன், மகிழ்ந்தேன்.

பிரமாதம்ங்ணா, பிரமாதம். பாலு மகேந்திரா படம் பார்த்த மாதிரி மனசு குதூகலித்தது.

அது சரி, இந்த ராமராயனை இப்படி மறந்துட்டியளே, இது ஞாயமாங்ணா?!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது