ஒண்ணித் திலநகை - ஓரம்போ;ஆழி மழைக் கண்ணா, ஆடி வா

இன்றைக்கு மார்கழி நாலு. 'ஆழி மழைக்கண்ணா' திருப்பாவைத் தினம். 'ஆழியில் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிந்து, வாழ உலகில் பெய்திடாய்' என்று நாச்சியார் உளமுருக இயற்கையை வேண்டும்போது அறைக்கு வெளியே குளிரக் குளிர ஒரு பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் டாக்டர் வெங்கடகிருஷ்ணன் அவசர அவசரமாக இந்த அற்புதமான திருப்பாவையை விளக்க (என்ன செய்ய, அவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பது நாலு நிமிடம் தான்), தொடர்வது மணியம் செல்வன் நேர்த்தியாக அமைத்த அரங்கில் இந்தப் பாசுரத்த்துக்கு அபிநயம் கொடுத்து அமைந்த பரதம். அமிர்தவர்ஷணி ராகத்தின் கம்பீரத்தோடு ஆழி மழை கொட்டத் தொடங்கி இரண்டே நிமிடத்தில் ஜெட் வேகத்தில் பாசுரமே பாடி ஆடி முடித்தாகி விட்டது. ஆழி மழைக் கண்ணா என்று கையை விரித்து வேண்டுகிற பத்து வினாடி, ஊழி முதல்வன் உருவம் போல் கருத்த மேகத்தை அபிநயிக்க இன்னொரு ஐந்து வினாடி, நாலு பேர் திசைக்கு ஒருத்தராக நின்று சங்கு பிடிக்கிற பாவம் காட்ட வலம்புரி அதிர்தல், அப்புறம் எல்லோரும் மண்டியிட வாழ உலகில் பெய்திடாய். பெப்ஸி விளம்பரம் கூட இன்னும் அதிக நேரத்துக்கு வரும்.
சரி, திருப்பாவை முடிந்தது. மார்கழியின் இன்னொரு மனத்தை விட்டகலாத அம்சமான திருவெம்பாவை. அதுவும் நாலாவது பாவைப் பாட்டு அழகான உரையாடலாக அமைந்த 'ஒண்ணித்தில நகையாய்'. ஊஹூம். மார்கழி என்றால் மீடியாவுக்குத் திருப்பாவை மட்டும்தான்.
தூர்தர்ஷன் பொதிகையில் ஒண்ணித் திலநகை தூக்கம் முடித்து வந்தாள். நாச்சியார் போன பிறகுதான் அதுவும்.
இரண்டு நாள் முன்னால் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் -
"அதென்ன சார், டிவியில் வைணவம் தான் எப்போதும் பார்க்கவும் கேட்கவும் கிடைக்கறது. பொதிகையிலே காலை ஆறரைக்கு 'கண்ணனில் ஆரமுது'. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி அற்புதமாக பகவத்கீதைக்குப் பொருள் சொல்கிறார். அதோடு, வடமதுரை, துவாரகை, திருக்குறுங்குடி, பழமுதிர்சோலை என்று அத்தனை தலங்களுக்கும் போய் அனுபவங்களையும், தல வரலாறுகளையும் சுவையாகப் பகிர்ந்து கொள்கிறார். ஆனாலும் தப்பித்தவறிக் கூட சைவம் பற்றி ஒரு தடவை கூட மூச்சு விடுவதில்லை. பழமுதிர்சோலை அழகரின் வைபவத்தை நாவார வர்ணித்தவர், பழமுதிர்சோலை சங்க காலம் - அதற்கு முன்பிருந்தே முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்று என்பதைக் கோடிகாட்டக் கூட இல்லை. நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொன்னதை எல்லாம் விளக்க வேண்டாம். ஒரு வார்த்தை சைவம் பற்றி, 'பழமுதிர்சோலை மலை கிழவோனே' பற்றிச் சொன்னால் என்ன குறைந்து விடும்? அதை விடுங்கள். மதுரையில் கூடல் அழகப் பெருமான் விண்ணககரத்தில் திருமாலின் வனப்பையும், ஆற்றில் இறங்கிச் சேவை சாதிப்பதையும் வர்ணித்த அவர், மதுரை மாநகர் என்றாலே மனமெல்லாம் நிறையும் அங்கயற்கண் அம்மை எங்கள் மீனாட்சியின் திருக்கோவில் பற்றியோ அழகர் ஆற்றில் இறங்குவதற்கு முந்திய திருக்கல்யாண உற்சவம் பற்றியோ வாயே திறக்கவில்லை. வைணவம் தழைக்கட்டும். தமிழ் வளர்த்த பக்தி இலக்கியத்தின் இன்னொரு கண்ணான சைவத் திருமுறைகளை, சிவ நெறியை பின் தள்ள என்ன காரணம்?"
யோசித்துப் பார்த்தால், இந்தப் பின் தள்ளல் சைவத்திலேயே தான் தொடங்குகிறது என்று புரியும். சிதம்பரம் கோவில் கருவறையில் நின்று ஓதுவார மூர்த்திகள் உள்ள்த்தை உருக்கும் தேவாரப் பண் இசைக்க முட்டுக்கட்டை இடப்படுவதில் ஆரம்பமாவது இல்லையா இது?
2 Comments:
// யோசித்துப் பார்த்தால், இந்தப் பின் தள்ளல் சைவத்திலேயே தான் தொடங்குகிறது என்று புரியும். //
புரியவில்லை. நண்பர் கேட்பது பொதிகை தொலைக்காட்சியும் வேளுக்குடி ஸ்வாமியும் சைவம் என்ற ஒரு விஷயமே இல்லாதது போன்று நடந்து கொள்வது பற்றி. மிக நியாயமான கேள்வி. நீங்கள் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்கிறீர்கள்.
டிடி சென்னை உயர்பதவியில் அதிபயங்கர வைஷ்ணவ அபிமானி ஒருவர் இருக்கிறார் போலிருக்கிறது. ஆன்மிகம் என்று வரும்போது முழுக்க முழுக்க வைஷ்ணவத்தையே ப்ரொஜெக்ட் செய்கிறார்கள்.
ஜெயா டி.வியில் கம்பர் அடிசூடி பழ.பழனியப்பனின் திரும்பாவை உரையை நாளை கேட்டுப் பாருங்கள். நம்மாழ்வார், கம்பர் ஏன் திருப்பாவையிலிருந்தும் மேற்கோள்கள் தந்து சைவ தத்துவங்களையும், சிவானுபவத்தையும் அழகாக விளக்கிறார். கிருபானந்த வாரியார் உரையில் ராமனையும், கண்ணனையும், திருமாலையும் பற்றி அற்புதமாகச் சொல்வார். தப்பித்தவறி ஒரு ஐயங்கார் ஸ்வாமியின் பேச்சிலும் சிவனையோ, அம்பிகையையோ குறிப்பிட மாட்டார்கள். என்ன செய்வது? வெட்டிப் போகும் வைணவ ஆசாரியார்களாக ஆகி விட்டார்கள்!
சொல்லப் போனால், திருப்பாவை நோன்பு என்பதே நல்ல கணவன் வேண்டி கோபிகைகள் காத்யாயனி தேவியை பூஜை செய்யும் மரபில் இருந்து தான் உருவானது (ஸ்ரீமத்பாகவதத்தில் இது குறிப்பிடப் படுகிறது).
// சிதம்பரம் கோவில் கருவறையில் நின்று ஓதுவார மூர்த்திகள் உள்ள்த்தை உருக்கும் தேவாரப் பண் இசைக்க முட்டுக்கட்டை இடப்படுவதில் ஆரம்பமாவது இல்லையா இது? //
இது வதந்தி, பொய்ப்பிரசாரம்.
இந்த வருடம் ஆகஸ்டு மாதம் கூட சிதம்பரம் சென்றிருந்தேன். பகல் பூஜை முடிந்து தீபாரதனைக்குப் பின் சின்ன வேதபாராயணம், அதன் பின் "மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள்" என்று தொடங்கி கணீர் குரலெடுத்து ஓதுவார் பஞ்சபுராணம் பாடினார். செவி குளிரக் கேட்டேன். சிற்றம்பலத்திற்கு மேலேறி (ஸ்பெஷல் டிக்கெட்!) சென்று நாங்கள் தரிசனம் செய்தோம் - அந்த நேரம் முழுக்க நான் வாய்விட்டு தேவாரம் தான் பாடிக் கொண்டிருந்தேன். யாரும் ஏதும் சொல்லவில்லை.
இங்க தானே இருக்கு சிதம்பரம்? நீங்களே ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்.
Madhurabarathi wrote:
அன்பின் முருகன்,
பொதிகையைப்
பொறுத்தவரை
வைஷ்ணவம்தான்
தலைதூக்கி
நிற்கிறது என்பது
உண்மையல்ல. சென்ற சில
மாதங்களாகத்
தேவாரப் பண்கள்
ஓதுவா மூர்த்திகள்
பலரால் மிக
இனிமையாகப்
பாடப்பட்டதுடன்
அவற்றுக்கு முனைவர்
இரா. செல்வகணபதி
அவர்கள் பொருளும்
கூறினார். தவிர,
திருவண்ணாமலையில்
கார்த்திகை தீபத்
திருநாளை நேரடி
ஒளிபரப்பு
செய்தார்களே.
திருவெம்பாவை
வரவில்லை
என்பதுதான் உங்கள்
நண்பரின்
குறையானால் நான்
அதைத்
தீர்த்துவைக்கிறேன்
:-)
எனது மதுரமொழியில்
தினமும்
திருவெம்பாவை உரையை
அழகிய படங்களுடனும்,
சிறப்புக்
குறிப்புகளுடன்
வலையேற்றி
வருகிறேன். தவிர,
திருவெம்பாவைக்கு
ஒரு சிறிய முன்னுரை,
மாணிக்க வாசகரின்
வாழ்க்கை வரலாறு
ஆகியவற்றையும்
சென்ற சில நாட்களில்
இட்டுள்ளேன்.
படிக்க, கருத்துச்
சொல்ல: http://mozhi. blogspot. com
அன்புடன்
மதுரபாரதி
www.tamilonline. com
http://mozhi. blogspot. com
:-)
எனது மதுரமொழியில்
தினமும்
திருவெம்பாவை உரையை
அழகிய படங்களுடனும்,
சிறப்புக்
குறிப்புகளுடன்
வலையேற்றி
வருகிறேன். தவிர,
திருவெம்பாவைக்கு
ஒரு சிறிய முன்னுரை,
மாணிக்க வாசகரின்
வாழ்க்கை வரலாறு
ஆகியவற்றையும்
சென்ற சில நாட்களில்
இட்டுள்ளேன்.
படிக்க, கருத்துச்
சொல்ல: http://mozhi. blogspot. com
அன்புடன்
மதுரபாரதி
www.tamilonline. com
http://mozhi. blogspot. com
Post a Comment
<< Home