Tuesday, November 06, 2007

ஒரு புத்தகம் - ஒரு முன்னுரை

குளிக்கக் காசு கேட்கிற ஸ்காட்லாந்தில், என் பக்கத்து வீட்டுக்காரர் வித்தியாசமான பேர்வழி. விடிகாலையில் குளித்து முடித்து, சுத்தமான, கனவான்ரக உடுப்புகள் அணிந்து சுறுசுறுப்பாக எனக்கு முன்னால் ஓட்டமும் துள்ளலுமாக மாடிப்படி இறங்கிக் கொண்டிருப்பார். ராத்திரி, பகல், சாயங்காலம் என்று எந்த நேரத்தில் கண்ணில் பட்டாலும் த்ரீ பீஸ் சூட், தொப்பி, பளபளக்கும் ஷூவோடு தான் காட்சி தருவது வழக்கம். புத்துணர்ச்சியூட்டும் சோப்பு விற்பதற்காக வருடக் கணக்காக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் விளம்பரப் படத்தில் நடிக்கிறவராக அவர் இருக்கலாம் என்று கற்பனை செய்திருந்தேன். அது ஓர் உன்னதமான சோப்பாக இருக்கக்கூடும். குளித்து முடித்தவுடன், இன்று புதிதாகப் பிறந்த உணர்ச்சியைத் தரும் அந்த அற்புதப் பொருளை அனுபவித்த ஆனந்தத்தை அவர் உடலாலும் மனதாலும் முழுவதும் பிரதிபலிக்கும்வரை பொறுமையாகத் தினமும் காமெராவை ஓடவிட்டுக்கொண்டு யாரெல்லாமோ காத்திருக்கிறார்கள். குளிக்கவும், உடுக்கவும், நடக்கவுமாகப் பரிசுத்தமாக நகரும் நாட்கள் எல்லாம அவருக்கு உடமையானவை.

இந்தக் கற்பனை கலைந்தது அண்மையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுதில். அழைப்பு மணியை ஒலித்து, என் வீட்டு வரவேற்பறையில் அவர் நுழைந்தபோது நான் கம்ப்யூட்டரில் கதை எழுதிக்கொண்டிருந்தேன். மாசு மறுவற்ற அவருடைய சுத்தத்தின் முன் நான் தூசியாகக் கரையும் முன்னால், வந்த விஷயத்தைக் கூறினார். எங்கள் இரண்டு வீட்டுக்கும் நடுவே ஓடும் கழிவுநீர்க் குழாயில் அடைப்பு. அதைச் சரிசெய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். செலவை நான் பங்கு போட்டுக்கொள்ள முடியுமா? முப்பது பவுண்ட் ஆகக்கூடும்.

கழிவும் காசும் இதர அசுத்தங்களும் இல்லாத உலகில் அவர் இல்லை என்பதை நம்பக் கஷ்டமாக இருந்தது. ஃப்யூனரல் டைரக்டராக இருக்கிறாராம். சாவுச்சடங்கு நிர்வாகி. கறுப்பு நிற சூட்டும் தூய வெள்ளைச் சட்டையும் மிடுக்கான டையும் எல்லாம் சவ அடக்கங்களை நிர்வகித்து நடத்திக்கொடுப்பதற்கான உத்தியோக உடுப்பு. கண்ணியத்தோடும் மிடுக்கோடும் தினசரி சாவைச் சந்திக்கிற அந்த மனிதரிடம் நான் கதை எழுதுவதாகச் சொன்னபோது, இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கிறீர்கள் என்று விசாரித்தார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் நான் சுவர்க்கம் அல்லது நரகம் புகுந்தவர்கள் அல்லது அவற்றில் நம்பிக்கை வைக்காத காரணத்தால் வெற்றுவெளியில் மறைந்தவர்களின் பிரதிநிதியால் விசாரிக்கப்படுவேன் என்று முன்பே எனக்குத் தெரிந்திருந்த காரணத்தால் கணக்கு ஒப்பிக்கலானேன்.

நூற்று எட்டு சிறுகதைகள். பதினான்கு குறுநாவல். இரண்டு நாவல், முன்னூற்று இருபத்தெட்டு கட்டுரை. நாற்பத்தேழு கவிதை. அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். குளிக்கப் போவதற்கு முன் இன்னும் மூன்று பத்தி எழுத உத்தேசம்.

நூற்றியெட்டுச் சிறுகதை. அதில் ஏழு காற்றில் கரைந்து போனது. அதாவது அகில இந்திய வானொலியில் ஒலிபரப்புவதற்காக எழுதி, கண்ணாடி அறைக்குள்ளிலிருந்து யாரோ கையை அசைக்க, ஒவ்வொரு தாளாக மரமேசையில் நகர்த்தி, பிரம்மாண்டமாக வைத்திருந்த ஒலிவாங்கியில் குரல் இடறாது ஜாக்கிரதையாகப் படித்து ஒலிப்பதிவு செய்யப்பட்டவை. ரேடியோக்காரர்கள் அந்தத் தாளையெல்லாம் வாங்கிக்கொண்டு ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் சன்மானம் கொடுத்தார்கள். நகல் எடுத்து வைக்காத காரணத்தால் அவற்றை இனிக் காணமுடியாது.

ஆனாலும் நூற்றியெட்டும் நினைவில் இருக்கிறது. வார்த்தை ரூபமாக இல்லாவிட்டாலும், ஒவ்வொன்றும் மனதில் தோன்றிய அந்த வினாடி ஞாபகம் இருக்கிறது. எழுதி முடித்ததும் எழுந்த கணநேர ஆசுவாசத்தை, நிம்மதியைத் திரும்ப உணர்கிறேன். முதல் கதையைப் பொறுத்தவரை அது வெளியாகிப் படித்த முதல் நொடியும் நினைவில் பதிந்திருக்கிறது.

எழுதுவதென்பதே சாஸ்வதமான இந்த அபூர்வ கணங்களுக்காகத்தான்.
இந்த நொடிகள் எல்லாம் காலம் உறைந்த மனவெளியில் நிகழ்கிறவை. எட்டு வயதில் விளக்கணைந்துபோன ஒரு நடு ராத்திரி நேரத்தில் வாசலுக்கு வந்தபோது கையில் கொளுத்திப் பிடித்த லாந்தரோடு வார்ச் செருப்பு ஒலிக்க ஒருத்தன் தெருவில் நடந்துபோய்க் கொண்டிருந்தான். எத்தனையோ வருடம் கழித்து மும்பாய் நாரிமன் பாயிண்ட் அலுவலகத்தில் ஒரு பிரம்மாண்டமான லிஃப்டில் தனியாக ஏழாம் மாடிக்குப் போய்க் கொண்டிருந்தபோது அந்த லாந்தர்க்காரன் வெகு சுவாதீனமாக உள்ளே கடந்துவந்து ஞாபகம் இருக்கா என்று சிரித்தான். லாந்தர்க்காரன் கூடவே காந்தி வாத்தியாரும், கறுத்த, பவுருஷம் பொங்கிப் பிரவகிக்கும் ஒரு ரயில் இஞ்சினும், நகர மறுக்கிற ஒரு கோயில் தேரும் என் டூ பெட்ரூம் தில்லி ஃப்ளாட்டில் நுழைய, ‘தேர்’ எழுதி முடித்தபோது அன்றைக்கு நடுராத்திரி கடந்துவிட்டிருந்தது.

லாந்தர்க்காரனை மட்டுமில்லை, பள்ளிக்கூடத்தில் படித்தபோது, நாராயணியம்மா வீட்டுத் திண்ணையில் குடிபுகுந்த சன்னியாசியை நானும் எட்ட நின்று பார்த்திருக்கிறேன். வீட்டு வாசலில் ஒரு தேரை, சன்னியாசியை வைத்துக்கொண்டு சகஜமாக எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? இதைப் பற்றி யோசிக்க ஒரு முப்பது வருடம் காத்திருக்க வேண்டி வந்தது. ஆனாலும் அதெல்லாம் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக சங்கிலித் தொடராக நிகழ்ந்தவை. அப்படித்தான் தோன்றுகிறது.

எமர்ஜென்சி காலத்து மாம்பலம் தெருவில் இன்னொரு இரவு. நான் சென்னை வந்து பாங்க் ஊழியனாக உத்தியோக வாழ்க்கையைத் தொடங்கியிருந்த நேரம். ஊர் ஓய்ந்து தூங்கப் போய்க்கொண்டிருக்கிறது. கடைசிப் பலகையைப் பொருத்தி மூடிக்கொண்டிருந்த மாவுமில் வாசலில் நின்று வயதான ஒருத்தர் ‘ரகுராமா’ என்று மேலே இருண்டு கிடந்த லாட்ஜிங்கைப் பார்த்துச் சத்தமாகக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். எத்தனையோ வருடத்துக்கு அப்புறம் நான் மாம்பலம் வாசியாகி வண்டிக்கு பெட்ரோல் போடுவதற்காக நடுப்பகலில் காத்திருந்தபோது அந்த ஸ்தூல சரீர வைஷ்ணவர் ‘ஆழ்வார்’ ஆக மனதின் உள்ளறையில் திரும்பவும் உரக்கச் சத்தம் கொடுக்க ஆரம்பித்திருந்தார்.

மலையாளத்தில் மொழிபெயர்த்த கார்சியா மார்க்வெஸ்ஸின் ‘நூறாண்டுத் தனிமை’யைப் படித்துக்கொண்டு மாம்பலம் அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிபம்பு முன்னால் கார்ப்பரேஷன் தண்ணீருக்காக நடுராத்திரியில் காத்திருந்திருக்கிறேன். மேஜிக் ஷோ நடத்த வாய்ப்புத் தரச்சொல்லி, வருடக் கணக்காகச் சளைக்காமல் மந்திரவாதி ஒருவர் எனக்கு போஸ்ட் கார்ட் போட்டுக்கொண்டிருக்கிறார். ஏலக்கடை லாலா ‘மேரா ஜூத்தா ஹை ஜப்பானி’ என்று பாடிக்கொண்டு விநியோகித்த நோட்டீசுக்காகப் பின்னால் ஓடியிருக்கிறேன். திரவுபதை அம்மன் கோவில் பொட்டலில் தொடர்ந்து பத்து நாள் சைக்கிள் சவாரி செய்தவனை ஒரு ராத்திரி முழுக்கக் குழிவெட்டிப் புதைத்து அடுத்தநாள் வெளியே எடுக்க, எல்லோருக்கும் அவன் வணக்கம் சொன்னபோது பதில் வணக்கமாக இந்தச் சின்னப் பையனின் கைகளும் உயர்ந்திருக்கின்றன. இவன் தீர்த்தம் தீர்த்தமாக நீராடிக் கொண்டு, ராமேஸ்வரத்தில் வாளியோடு நடக்கிற வழிகாட்டியைப் பின் தொடர்ந்தபோது, மின்சாரம் போன இன்னொரு ராத்திரி. கோவில் யானை பிளிறி இரும்புச் சங்கலியை அசைத்த சத்தமும், சண்டீசுவரர் சந்நிதி தீபத்தில் இலுப்பெண்ணெய் வாடையும், ஈரக்காலில் நறநறவென்று சமுத்திர மணலலும் இன்னும் இழைகிறது - அதையெல்லாம் கதையில் கடத்தி, உருமாற்றிக் கலந்து வார்த்து வைத்து முடிந்தாலும்.

இருபத்தைந்து வருட தாம்பத்தியத்துக்குப் பிறகு விவாகரத்து பெற்று, மகளைப் பிரிந்த சோகத்தை லண்டன் போகும்போதெல்லாம் பகிர்ந்துகொண்ட நண்பர் ஜெஃப் போனமாதம் இன்னொரு கல்யாணம் செய்துகொண்டதாக ஈமெயில் அனுப்பியிருந்தார். அவர் லண்டன் கோபுர வளாகத்தில் காவலராக இல்லை. ஆனால், அந்த 1945-ம் வருட தீபாவளி மலரை நான் படித்திருக்கிறேன். அரண்மனைக்காரர் ஒருத்தர் நூறுரூபாய் கடன் கேட்டு என் அப்பாவுக்கு விண்ணப்பம் அனுப்பியதை நான் தான் கொண்டுவந்து கொடுத்தவரிடமிருந்து வாங்கினேன். அப்பா இருபது ரூபாய் – ரெண்டு அகலமான அந்தக் காலத்துப் பத்து ரூபாய் நோட்டு - எடுத்து மடித்து அதே கவரில் வைத்துக் கொடுத்தனுப்பினார். அந்த அரண்மனைக்காரரின் தம்பி ஒரு மார்கழி விடிகாலையில் சிவன் கோவில் வாசலில் சுருட்டுப் பிடித்தபடி நின்று ஏதோ இரைந்து கொண்டிருந்தார். ஆனால் டிராயிங் மாஸ்டரிடம் கடியாரத்தைப் பழுது பார்க்கக் கொடுத்தது அவர் இல்லை. சொல்லப்போனால், டிராயிங் மாஸ்டருக்குக் கடியாரம் பழுதுபார்க்கத் தெரியாது. அது சயின்ஸ் வாத்தியார்.

‘அம்பி’ என் அப்பாதான். அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிமிடத்தை என்னிடம் ஒரே ஒரு முறை சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டது அவரைப் பிரிந்து இருந்தபோது நினைவு வரக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தேன். ‘நானே எழுதின மாதிரி இருக்குடா. இதெல்லாம் உனக்குச் சொன்னேனா?’ இல்லேப்பா. ஆனா, இது வேறே மாதிரி இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.

முதல் கதை ‘வண்டி’ கணையாழியில் பிரசுரமானபோது புதுதில்லியில் இருந்தேன். கரோல்பாக் தமிழ்க்கடை. முன்னிரவு. ஸ்டாண்ட் போட்ட ஸ்கூட்டர். கையில் புகையும் ஃபோர் ஸ்கொயர் சிகரெட். ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி பத்திரிகை படித்தபோது. கூட நடந்து வந்த வயதான ஸ்திரீயுடன் ஏதோ வேடிக்கையாகப் பேசிச் சிரித்துக்கொண்டு கடந்துபோன இளம் பஞ்சாபிப் பெண்ணின் முகமும், கனமான செண்ட் வாடையும் இப்போது தூக்கலாக எழுந்து வருகிறது. இந்த இருபத்திரெண்டு வருடத்தில் அவளுடைய முகம் வயதாகி வீர்த்திருக்கலாம். என்னுடையதைப் போல.

செண்ட் வாடை அவளை அலுப்படைய வைத்திருக்கலாம். சிகரெட்டை நான் விட்டொழித்ததுபோல. அவள் இன்னும் அலுப்படையாமல் பேசிக்கொண்டிருக்கலாம், நடந்து கொண்டிருக்கலாம் அல்லது கதை எழுதிக்கொண்டிருக்கலாம். கற்பனை செய்யச் சுகமாக இருக்கிறது.

எழுதுவது எப்போதுமே அலுப்புத் தட்டாத விஷயம்தான். இந்த சுவாரசியம் எழுதிக் கொண்டிருக்கும் காலம் முழுக்க, கட்டுவிரியன் பாம்பாகச் சட்டை உரித்துக்கொண்டு நகர்வதில்தான் இருக்கிறது. கதைக் கருவில், சொல்கிற விதத்தில், தொனியில், மொழியில் எந்த முடுக்குச் சந்திலும் சிக்கிவிடாமல் முன்னே போகிற சுதந்திரம் எனக்கு முக்கியமானது. ‘அவருடைய முத்திரை இந்தக் கதையில் அழுத்தமாக விழுந்திருக்கிறது’ என்று யாராவது எதையாவது பற்றிச் சிலாகிக்கும் விமர்சனத்தைப் படித்தால், பிராவிடண்ட் ஃபண்ட் லோன் கிட்டாத சிப்பந்தி அழுத்திக் குத்திய தபால் முத்திரையோடு வந்து விழுகிற சிமிண்டுக் கம்பெனி ஆண்டறிக்கைதான் நினைவுக்கு வருகிறது. இந்த ஆண்டறிக்கைகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைத்துவிடுகிறது என்ற காரணத்துக்காக நானும் சிமெண்ட் கம்பெனி நடத்த முடியாது.

எழுத்தை நான் ஒரு சடங்காகவோ சம்பிரதாயமாகவோ அணுகுவதில்லை. எழுத மனதில் உந்தல் தோன்றும் ஒவ்வொரு முறையும், ஒரு சாவுச்சடங்கு நிர்வாகியாக நான் சீரான உடையணிந்து கண்ணியமான தோரணைகளோடு அதை எதிர்கொள்வதில்லை. அவ்வாறு எதிர்கொள்கிறவர்களை நான் மதிக்கிறேன். கழிவுநீர் அடைப்பு நீக்குதல் போன்ற பொது சுகாதாரத்தை உத்தேசித்த காரியங்களுக்காக அவர்கள் செலவு செய்யவேண்டி வந்தால் நானும் பங்கேற்கிறேன்.

என் பக்கத்து வீட்டுக்காரர் இன்று காலையில் மூன்று பவுண்ட் முப்பது பென்ஸ் திருப்பிக் கொடுத்துவிட்டார். பழுதுபார்க்கச் செலவு கம்மியாகத்தான் ஆனதாம்.

இரா.முருகன்
நவம்பர் 06, எடின்பரோ.

பின்குறிப்பு

நண்பர்கள் பா.ராகவன், பத்ரி, முத்துராமன், இகாரஸ் பிரகாஷ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தத் தொகுதியின் ஒவ்வொரு பக்கத்திலும் இடைவரிகளாக இவர்கள் எனக்குத் தட்டுப்படுகிறார்கள்.

(என் சிறுகதைகளின் கிட்டத்தட்ட முழுத் தொகுப்பு
கிழக்குப் பதிப்பக வெளியீடு
'இரா.முருகன் கதைகள்'
ஜனவரி 2007
பக்கங்கள் 846)

4 Comments:

At 2:39 am, Blogger ஜீவி said...

நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி.

சரவணா ஸ்டோர்ஸின் 'அந்த' பத்திரிகையில்(பெயர் மறந்து விட்டது- இதயம் பேசுகிறது- வா? மணியனின் தொடர்ச்சியா?) பார்த்ததிற்கு, படித்ததிற்குப் பிறகு இப்பொழுது தான் உங்களைச் சந்திக்க முடிந்தது.

இனி நிறைய உங்களைப் படிப்பேன்.

ஜீவி

 
At 10:31 am, Blogger Costal Demon said...

படிப்பதற்கு எனக்கு சுகமாக இருக்கிறது... தொடருங்கள்

 
At 4:50 pm, Blogger Sri Srinivasan V said...

Dear Murugan,
It is so NICE to read your thoughts again.
You have an extraordinary DEPTH.
The weaving, you play, is really stunning.
PLEASE keep sharing and posting your thoughts.
Thanks and Warm Regards,
affectionately,
Srinivasan. V.

 
At 9:29 pm, Blogger கதிர் said...

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது புத்தகம் வாங்க திருச்சி சென்றிருந்தேன். "எப்படி" வகை புத்தகங்கள் பல ஆயிரங்களுக்கு மத்தியில் "இரா.முருகன் கதைகள்" முழுதொகுதியும் பார்த்தேன். மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை. நாஞ்சில் நாடனின் புத்தகங்கள் மட்டும் வாங்கி வந்தேன்.

இப்பதிவை இன்று வாசிக்கும்போது ஏன் வாங்காமல் வந்தோம் என்று தோன்றுகிறது. இதுவரை உங்களின் தாக்கம் என் மீது ஏன் படியவில்லை எனவும் என்னையே கேட்கிறேன்.

இப்போதும் ஒன்றுமில்லை 'வரவழைத்து விடலாம்'

-கதிர்-

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது