Sunday, May 07, 2006

எடின்பரோ குறிப்புகள் – 15

எடின்பரோ கோட்டைக்குத் தெற்கே நீண்டு வளைந்து உயரும் ராயல் மைல் தெருவில் பழைய பட்டணம் தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கருப்புப் பட்டணமாக விரிந்த சென்னை ஜார்ஜ் டவுண் போல காலம் உறைந்து நிற்கும் சுற்றுப்புறங்கள். மூதாதையரின் மூச்சுக் காற்றின் வாடை இன்னும் கூடத் தீர்க்கமாக புலனை ஊடுருவி, மனதின் திசைகளை உள்வளைத்து ஒரே முகமாகத் திருப்பும் வீதி இது. போதாக்குறைக்குத் தெருவில் ஏதாவது ஒரு ஓரத்தில் ஸ்காட்லாந்து தேசிய உடையணிந்த இசைக் கலைஞர்கள் தேசிய இசைக்கருவியான Bagpipe இசைத்தபடி நின்று, கொஞ்ச நஞ்சமிருக்கும் காலப் பிரக்ஞையையும் உதிர்ந்துபோக வைக்கிறார்கள்.

ஆங்கில இலக்கியம் என்றதும் நினைவு வரக்கூடிய வால்டர் ஸ்காட்டின் இல்லம், புதையல் தீவு புதினம் மூலம் குழந்தை இலக்கியத்தில் தடம் பதித்த ஆர்.எல்.ஸ்டீவன்சன் வசித்த இடம் என்று அங்கங்கே கல்லில் பொறித்து வைத்த அறிவிப்புப் பலகைகளை வாசித்தபடி நடந்தால், பதினெட்டாம் நூற்றாண்டு எடின்பரோவின் மிச்சமான ஒரு கட்டிடம் முன்னால் முன்னூறு வருடம் முந்தைய நீர்வழங்கு நிலையம். எடின்பரோ நகரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வந்த அந்தக் காலத்தில் நடுராத்திரிக்குத் தண்ணீர் வழங்கத் தொடங்கி பின்னிரவில் இரண்டு மணிக்கு நிறுத்துவார்களாம்.

இருபது வருடம் முன்னால் புழலேரி வரண்டபோது, சென்னை மாநகராட்சி தண்ணீர் வழங்கிய நேரம் இந்த ராத்திரி 12 – 2 மணி. தூக்கமும் கெடாமல் தண்ணீரும் கிடைக்க, சென்னை மேல் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் கடைப்பிடித்த அதே வழியைத்தான் முன்னூறு வருடம் முந்திய எடின்பரோ மேட்டுக்குடியும் கடைப்பிடித்திருக்கிறது. நடுராத்திரியில் சர்க்கார் கொடுக்கிற தண்ணீருக்காகக் காத்திருந்து வாங்கி வந்து வீட்டுத் தொட்டியில் நிரப்ப, கூலி கொடுத்து ஆட்களை அமர்த்தியிருக்கிறார்கள்.

இதை எழுதி வைத்த தகவலைச் சுவாரசியமாகப் படித்தபடி மேற்கே நடையை எட்டிப்போட, பிரம்மாண்டமான ராபர்ட் ஹ்யூம் சிலை. தத்துவ மேதையும் வரலாற்றாசிரியருமான ஹ்யும் துரை ரூசோ போன்ற பிரஞ்சுப் புரட்சியாளர்களின் நண்பர். இந்த எடின்பரோ பிரமுகரின் அற்புதமான சிற்பத்துக்கு தற்கால எடின்பரோ இளைய தலைமுறை ஒரு பரிசு வழங்கியிருக்கிறது. பதினைந்து இருபது அடி சிலையின் தோளைப் பிடித்து ஏறி, ராபர்ட் ஹ்யூமின் தலைக்கு மேல் போக்குவரத்தை ஒழுங்கு செய்யத் தெருவோரம் வைக்கப்படும் பல வண்ண பிளாஸ்டிக் டிராபிக் கூம்பைக் கவிழ்த்திருக்கிறார்கள். கழுத்தில் காலி பியர் பாட்டிலைக் கட்டித் தொங்க விடாததுதான் பாக்கி.

இந்த vandal பிசாசுகளின் வம்சம் விருத்தியாகாமல் போகட்டும் என்று சபித்தபடி நடக்க, எடின்பரோவில் உலவும் மற்ற பிசாசுகளைக் காட்டித்தரத் தயாராக நிற்கிற தரகர்கள் துரத்துகிறார்கள். எல்லாமே முன்னூறு, நானூறு வருடத்துக்கு முந்திய நிஜப் பிசாசாம்.

அழுக்குக் கோட்டும் தாடியுமாக ஒரு கிழவர் கையில் வைத்திருந்த பைலை நீட்டிப் புரட்டிப்பார்க்கச் சொல்கிறார். எந்த எந்தப் பேயை யார் யார் எந்தக் கிழமையில் பார்த்தார்கள் என்ற தகவல் அதெல்லாம். போன மாதம் எட்டாம் தேதி முன்னிரவில் ஒரு இருபது அடி தள்ளி நிலத்தடிப் பேழைப் பக்கமாகத் தட்டுப்பட்ட பேய் தான் லேடஸ்ட் ghost appearance. நாலு பவுண்ட் கொடுத்து கிழவரோடு நடந்தால் இப்பவும் கணிசமான பேய், பிசாசு, ரத்தக் காட்டேறி வகையறாக்கள் கண்ணில் பட வாய்ப்பு இருக்கிறதாம்.

சரி, பெரிசு. ராத்திரி ஏழு ஏழரையைப் போல சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு வரேன்,போகலாம். அட நில்லுப்பா, ஏழு மணி வரைக்கும் என்னாத்துக்குக் காத்துக்கிடக்கணும்னேன். இப்பவே நடையைக் கட்டலாம். கிளம்பு.

சாயந்திரம் நாலு மணிக்கு மேட்னி ஷோ நடத்த எந்தப் பிசாசு வரும் என்று சந்தேகத்தைக் கிளப்ப, இப்படி விஷயம் தெரியாத பிள்ளையாக இருக்கியே என்று ஒரு பார்வை.

இந்தப் பக்கம் நூறு வருஷத்துக்கு முந்தின பியர்க்கடை இருக்கு பார், அங்கே ஒரு பைண்ட் வாங்கி ஊத்திட்டு அடுத்த கடைக்கு பத்து மினிட் நடந்தா அடுத்த பைண்ட், வழியிலே ஹலோ சொல்ல ஒரு பிசாசு. அப்புறம் அடுத்த நூறு வருச மது. பக்கத்துலே அழகான ஆவியா அலையற மாது. கிளம்புப்பா.

அமாவாசைக்கு வரேன் பெரிசு என்று பிய்த்துக்கொண்டு கிளம்ப வேண்டிப் போனது.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

எழுத்தாளர்கள் அருங்காட்சியகமான ராயல் மைல் ரைட்டர்ஸ் மியூசியத்தில் நுழைய, நாவலாசிரியர் வால்டர் ஸ்காட் எழுத உபயோகித்த மேஜை, நாற்காலி, அலமாரி.

அந்த தேக்கு அலமாரிக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. பகலில் உன்னதமான தச்சுக் கலைஞனாகவும், இரவில் கொடூரமான கொள்ளைக்காரனாகவும் இருந்து பிடிபட்டு, நகர மத்தியில் தூக்கிடப்பட்ட ஒரு எடின்பரோக்காரன் உருவாக்கியதாம் அது.

வால்டர் ஸ்காட் பங்குதாரராக இருந்து நடத்திய அச்சகம் திவாலாகி, தன் வழக்கை நடத்திய வழக்கறிஞருக்கு வக்கீல் ஃபீசுக்குப் பதிலாக ஸ்காட் கொடுத்த டைனிங் டேபிள், நாற்காலிகள் ஒரு அறை முழுக்கப் பரத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. முழு உருவ பிளாஸ்டர் ஓஃப் பரீஸ் சிற்பமாக நாற்காலியில் உட்கார்ந்து இன்னும் சாப்பிட ஆரம்பிக்காத வால்டர் ஸ்காட். அறைக்கு வெளியே கண்ணாடிப் பேழைகளில் ஸ்காட்டின் கையெழுத்துப் பிரதிகள், குடை, உடுப்பு, காலணி, துப்பாக்கி.

அவருடைய அச்சகத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. அந்தப் பழைய பிரிண்டிங்க் மிஷினை மாடியில் ஒரு அறையில் அப்படியே அலுங்காமல் நலுங்காமல் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

கவிஞர் ராபர்ட் ப்ரவுண், நாவலாசிரியை டோரதி பார்க்கர், ஆர்.எல்.ஸ்டீவன்சன் என்று எடின்பரோ படைப்பாளிகள் ஒவ்வொருவர் பற்றியும் வால்டர் ஸ்காட் நினைவகம் போலவே பார்த்துப் பார்த்து நேர்த்தியாக அமைத்து வைத்த காட்சிப் பொருள்கள். எழுதிச் சம்பாதிப்பதில் உலக அளவில் உச்சத்தில் இருக்கும் இன்னொரு எடின்பரோ பெண் எழுத்தாளருக்கும் இன்னும் கொஞ்ச நாளில் இங்கே இடம் ஒதுக்கப்படும். ஹாரி பாட்டரைப் படைத்த ஜே.கே.ரவுலிங் தான் அவர்.

ஆனாலும், பின் நவீனத்துவத்தைத் தன் படைப்புகளால் செழுமைப்படுத்தி, போன மாதம் காலமான முதுபெரும் எடின்பரோ எழுத்துக்காரி மூரியல் ஸ்பார்க் இந்த எழுத்தாளர் மியூசியத்தில் இப்போதைக்கு இடம் பெறுவார் என்று தோன்றவில்லை.
8888888888888888888888888888888888888888888888888888

ராயல் மைலிலிருந்து, தெற்குப் பாலம் வழியாகத் திரும்பினால், ஐந்தே நிமிடத்தில் எடின்பரோ பல்கலைக் கழகம். எதிரே சேம்பர் வீதியில் சோழர்காலச் சிற்பங்கள் வைத்த ராயல் மியூசியம். அதற்கும் முன்னால் நிக்கல்சன் தெருவில் புராதனமான எடின்பரோ அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரி. இதன் தொடக்ககால மாணவர்கள் – ஆசிரியர்கள் முடிதிருத்தக் கலைஞர்கள். அந்தக்கால வழக்கப்படி இவர்களே சிகையலங்காரத்தோடு அறுவை சிகிச்சையும் நடத்தி வந்தவர்கள்.

கல்லூரிக்கு எதிரே, முகப்பு மட்டும் புதுப்பிக்கப்பட்ட இன்னொரு பழைய கட்டிடமான பெஸ்டிவல் தியேட்டர். பண்டிகைக் கொட்டகையில் கூட்டம் அலைமோதுகிறது. நாலு நாள் மட்டும் இங்கே ஆங்கில தேசிய பாலே கழகம் நடன நிகழ்ச்சி நடத்துகிறது. பாலே என்றாலே நினைவு வரும் ‘அன்னப் பறவைகளின் ஏரி’.

ரஷ்ய இசைமேதை ஷைகோவ்ஸ்கியின் அற்புதமான இசையமைப்பில் உருவான Swan Lake பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தின் மகத்துவம் பற்றி மனதிலிருந்து அப்படியே எடுத்து எழுதினாலும் cliché கலந்துவிடும் என்பதால் தவிர்க்கவேண்டிப் போகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பான் – ஐரோப்பியக் கலை நிகழ்வு ஸ்வான் லேக். ஜெர்மனியப் பழங்கதை. நாடக – நாட்டிய ஆக்கம் பிரஞ்சு முறையில். மேற்கத்திய மரபிசைப்படி இதற்கு இசைவடிவம் கொடுத்தவர் ரஷ்யரான ஷைகோவ்ஸ்கி. அவர் காலத்துக்குப் பிறகு இதை அமர காவியமாக்கியது சோவியத் யூனியனின் பாட்டாளி வர்க்கக் கலை வெளிப்பாட்டின் உன்னதக் குறியீடான, உழைக்குள் மக்களின் கலைக் கழகம் - போல்ஷாய் தியேட்டர்.

கொடூரமான மந்திரவாதி வான் ரோத்பார்ட். அவன் அன்னமாக உருமாற்றிய பேரழகி ஓடேட். கூடவே மற்ற அன்னப் பறவைகளான அவளுடைய தோழியர். இந்தப் பெண்களின் பெற்றோர் வடித்த கண்ணீர்ப் பெருக்கில் உருவான ஏரியில் சோகத்துடன் நீந்தும் அன்னப் பறவைப் பெண்கள் ராத்திரிக் காலங்களில் மட்டும் மனித உருப் பெறுகிறார்கள்.

அன்னப் பறவை ஏரிப்பக்கம் வந்த அரச குமாரன் சிக்ஃப்ரைட் இரவில் மானுடப் பெண்ணாகும் ஓடேட்டிடம் மனதைப் பறிகொடுக்கிறான். ஓடேட் மேல் உண்மையான காதலை அவன் நிரூபித்தால் அவளுக்கும் தோழியருக்கும் சாப விமோசனம் கிடைக்கும். அது நடக்க விடாமல் மந்திரவாதி தடுக்கிறான். தன் மகள் ஓடைல் என்ற இன்னொரு அழகியை ஓடேட் வடிவத்தில் அரச குமாரனை மயக்க வைக்கிறான். அப்புறம் – போதும், இணையத்தில் தேடினால் முழுக்கதையும் கிடைக்கும்.

நாலு விஸ்தாரமான காட்சிகள். குழு நடனமாகவும், தனி நடனமாகவும், ஜோடி நடனமாகவும் முப்பதுக்கு மேற்பட்ட நடனங்கள். கிட்டத்தட்ட ஐம்பது நடனக் கலைஞர்கள். ஓடேட் மற்றும் ஓடைல் பாத்திரங்களில் நடனமாடும் prima ballerina ஆன முதன்மை நர்த்தகி. வால்ட்ஸ், மார்ச், போல்கா, பாஸ்த் தெ தெக்ஸ், பாஸ் தெ ஆக்ஷன், பாஸ் தெ கெரக்தர் என்று நாட்டிய வகை, அமைப்புகள்.

இந்த நூற்றியிருபது வருடத்தில் ஸ்வான் லேக் கதையாடலில் துணிச்சலான சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாட்டிய அமைப்பிலும், காட்சியாக்கத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், ஷைகோவ்ஸ்கியின் இசை மட்டும் மாற்றமின்றி இன்னும் புத்தம் புதியதாகத் தொடர்ந்து வருகிறது. அந்த மேதையின் உழைப்பும் கலை நேர்த்தியும் ஒவ்வொரு இசைத் துணுக்கிலும் தெறித்துக் கிளம்பி மகத்தான ஓர் இசையனுபவத்தைக் கட்டி நிறுத்தும்போது மூன்று மணிநேரம் கடந்துபோனது தெரியாமல் நெக்குருகிப் போகிறோம்.

இசைக்கு அணி சேர்க்கும் விதத்தில் சோகம், மகிழ்ச்சி, பயம், குரூரம், கம்பீரம் என்று எல்லாப் பாவங்களோடும் அழகாகச் சுழன்றும், துவண்டும், கொடியாகத் துளிர்த்தெழுந்தும், அன்னமாக அசைந்து மேடைமுழுக்க நிறைந்து சூழ்ந்தும் நடனக் கலைஞர்கள். அழகான கறுப்பில் ஒரு ஆப்பிரிக்க நடனக்காரரும் அதில் உண்டு.

நாடகத்தின் கடைசிக் காட்சியில் அரச குமாரன் ஏரியில் குதித்து தன் தெய்வீகக் காதலை நிரூபிக்க, மந்திரவாதி மரணத்தைத் தழுவுகிறான். அன்னங்கள் நிரந்தரமாகப் பெண்களாக உருமாற, அரச குமாரனும், காதலி ஓடேட்டும் ஆவியாக சொர்க்கம் புகுகிறார்கள். போல்ஷாய் தியேட்டர் ஸ்வான் லேக் பாலே முடிவிலிருந்து இது வேறுபட்டது.

மாஸ்கோ போனாலும் போல்ஷாய் தியேட்டர் அன்னப் பறவைகளின் ஏரியை இப்போதைக்குக் காணமுடியாது. அங்கே மராமத்து வேலை நடக்கிறதாம். அது முடிந்தபிறகு, சோவியத் யூனியனின் சுவடு தெரியாமல், ரஷ்ய நாடு போல் அந்த அரங்கமும் உருமாறிப் போகலாம். அன்னப் பறவைகளுக்கும், ஷைக்கோவ்ஸ்கிக்கும், மக்கள்-சமூகக் கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கும் இனியும் அங்கே இடம் இருக்குமோ தெரியவில்லை.
888888888888888888888888888888888888888888888888888888888888888

எடின்பரோ மட்டுமில்லாமல், இங்கிலாந்தில் முக்கிய நகரங்களில் எல்லாம் இலவசமாக விநியோகிக்கப்படும் பத்திரிகை மெட்ரோ. மாம்பலம் டைம்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் போல ஆனால் வாரம் ஒரு தடவை இல்லாமல், தினசரி இலவச சேவை.

காலையில் பஸ்ஸில் ஏறினால் ஒரு பெட்டி நிறைய வைத்து எடுத்துக் கொள்ளச் சொல்லி அன்போடு வழங்கப்படும் இந்த மெட்ரோ பேட்டைப் பத்திரிகை தானே என்று அலட்சியம் செய்யாமல், அரசியல், கலை, விளையாட்டுப் பெருந்தலைகள் அவ்வப்போது பேட்டி கொடுப்பதும் உண்டு.

மாம்பலம் டைம்சில் மன்மோகன் சிங்க் பேட்டி வருமோ என்னமோ, இரண்டு வாரம் முன்னால்தான் இவிடத்து மெட்ரோவில் பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேரின் பேட்டி வந்தது. நாலு நாள் முன்பு, மரியாதைக் கட்சித் தலைவர் ஜோர்ஜ் கேலவேயின் பேட்டி.

டோனி ப்ளேரைவிட, அவருடைய அடுத்த நிலை அமைச்சர் கார்டன் பிரவுன் சிறப்பானவர் என்று நினைக்கிறீர்களா என்று நிருபர் விசாரித்தபோது கேலவே கொடுத்த பதில் இது.

They both are the cheeks of the same arse.

எலக்-ஷன் நேரத்தில் என்னதான் எகிறினாலும் நம் அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் தெகிரியமாக நாக்கில் பல்லுப்போட்டுப் பேசமுடியாதாக்கும்.

3 Comments:

At 11:45 pm, Blogger Venkat said...

முருகன் - பத்து வருடங்களுக்கு முன்னால் க்ளாஸ்கோவில் (அது எடின்பரோ மாதிரி மேட்டிமை நகரில்லை; பாட்டாளி வர்க்கத்தின் நகரமாக்கும் :) ) வசித்தபோது சில முறை எடின்பரோ சென்று வந்தது கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து கலைந்துபோய்விட்டது. உங்கள் குறிப்புகளிலிருந்து அவற்றில் சிலவற்றை மீட்டெடுக்க முடிகிறது.

எடின்பரோ அருங்காட்சியகத்திற்குப் போனபொழுது ரத்தக் கொதிப்பு எகிறிபோனது உண்மை. அறை அறையாக ஸ்காட்டிஷ் ராணுவ வீரர்கள் இந்தியர்களைக் கொன்று குவித்த ரத்தக்கறை உடைகளும் அதற்காக அவர்கள் மகாராணி அம்மையாரிடமிருந்து வாங்கிக் குத்திக்கொண்ட பதக்கங்களும் இன்னும் நினைவிலிருக்கின்றன.

அவற்றைத் தவிர க்ளாஸ்கோவிலும் எடின்பரோவிலும் இருந்த உருப்படியான கலைப்பொருட்கள் எல்லாம் இந்தியா உட்பட பல காலணி நாடுகளிலிருந்து திருடிக்கொண்டு வரப்பட்டவை.

உள்ளூர் நண்பர்கள் பெருமையாகக் காட்ட அழைத்துச் சென்ற பொழுது "யோவ் எங்கிட்டேந்து திருடி உங்க வூட்ல வச்க்கிட்டு என்னையும் கூப்புட்டுக்காட்ட ஒனக்கு வெக்கமாயில்ல" என்று கேட்டிருக்கிறேன்.

ஆனால் நமக்கெல்லாம் என்ன இழந்திருக்கிறோம் என்று கணக்கே கிடையாதுதானே!

 
At 12:32 pm, Blogger துளசி கோபால் said...

வழக்கம்போல அருமை. ஆமாம், கடை கடையா ரோந்து போனப்ப Greyfriars Bobby யைப் பார்க்கலையா?
ஷானோட வீட்டையும் விட்டுட்டீங்களா?

 
At 6:56 pm, Blogger era.murukan said...

Dear Chechi,

Thanks. i could not trace Sir Sean's house. Shall try again!!

ear Venkat,

Thanks for your comment on Edin-15.

Both Royal Museum, Edinburgh and London Tower Museum give raise to mixed feelig of anger, sadness, amazement and detestation in me. We (and almost all the commonwealth nations) lost our wealth and treasure to the nation of shopkeepers two hundred years ago. And they have displayed all these treasures with utmost care and affection for the antiques that is a true Brit characteristics - which I don't think we can expect to happen in the changed socio-political climate of our country and of our co-commonwealth buddies.

Even the Latin American geo does not have that admiration and respect for its treasures. I keep my fingers crossed about the preservation and long life of Picasso's master-piece 'Guvernica' returned to Spain.

warm regards
murugan ramasami

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது