Sunday, April 09, 2006

எடின்பரோ குறிப்புகள் - 11

ஒரு மாதம் கழித்து இதைத் தொடரும்போது, உதிர்ந்த மலர்களோடு தொடங்க வேண்டி இருப்பதில் வருத்தம்.

மலையாள இலக்கியம் ‘சாஹித்திய வாரபலம்’ கிருஷ்ணன் நாயர், குப்தன் நாயர் என்ற இரண்டு முக்கியமான விமர்சகர்களைக் கடந்துபோன முப்பது சில்லறை நாட்களில் இழந்துள்ளது. குப்தன் நாயரைத் தீவிர இலக்கிய ரசிகர்கள் அவருடைய சொற்பொழிவுகள், புத்தகங்கள் மூலம் அறிவார்கள்.

கிருஷ்ணன் நாயருடைய ரசிகர்களில் மலையாளப் பத்திரிகை படிக்கிற, இலக்கியத்தோடு குறைந்த பட்சப் பரிச்சயம் உள்ள ஒரு பெரிய ஜனக்கூட்டமே அடங்கும். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடத்துக்கு மேலாக வாராவாரம் மிடில்-ஓஃப்-தி-ரோட் பத்திரிகைகளில் இலக்கியம் பற்றிச் சளைக்காமால் எழுதி வந்த ஜாம்பவான் அவர். எழுதிய பத்திரிகை அவ்வப்போது மாறிவந்தாலும், கட்டுரைத் தொடருக்கு ஒரே பெயர்தான் - சாஹித்ய வாரபலம். முப்பத்தேழு வருடத்தில் இரண்டே வாரம் தான் இந்த இலக்கிய வாரபலன் கட்டுரை எழுதாமல் நாயர் பேனா மூடிவைக்கப்பட்டது. ஒன்று அவர் அபூர்வமாகக் காய்ச்சலில் விழுந்தபோது. மற்றது அவருடைய மகன் சாலை விபத்தில் இறந்துபோன வாரம்.

சினிமா, அரசியல் விமர்சனம் போல் அந்தந்த வாரத்துக்குக் கொஞ்சம் முன்னால் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதை, கவிதை என்று எடுத்துக்கொண்டு சிரத்தையாகச் செய்த விமர்சனம் கிருஷ்ணன் நாயருடையது. இந்த விமர்சனத்தைச் சாக்காக வைத்து அவர் படித்த, படித்துக் கொண்டிருந்த ஆங்கில, வேற்று மொழி இலக்கியங்களைச் சளைக்காமல் அறிமுகப்படுத்திய உற்சாகமான விமர்சகர் அவர்.

ஒரு புலர்காலைப் பொழுதில் மலையாளத்தில் இனிமேல் சிறுகதையோ, கவிதையோ எழுதமாட்டோம் என்று எல்லா எழுத்தாளர்களும், எழுதினாலும் போடமாட்டோம் என்று பத்திரிகை ஆசிரியர்களும், அச்சுப்போட்டு வந்தாலும் படிக்க மாட்டோம் என்று வாசிக்கத் தெரிந்த மலையாளிகளும் ஒட்டுமொத்தமாகத் தீர்மானித்துச் செயல்பட்டிருந்தால்கூட கிருஷ்ணன் நாயர் வாரபலன் கட்டுரையை நிறுத்தியிருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. அவருக்கு வேற்று மொழி இலக்கியம் பற்றி எழுத, முக்கியமாக இலக்கியம், ரசனை பற்றிப் பொதுவாகக் கதைக்க வண்டி வண்டியாகக் கைவசம் இருந்தது.

ஜப்பானிய எழுத்தாளர் மிஷிமோ பற்றி இந்து பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதிய ஒரு கட்டுரை பற்றி கிருஷ்ணன் நாயரோடு இண்லண்ட் லெட்டர் யுத்தம் நடத்திய அனுபவம் டயரிக்காரனுக்கு உண்டு. ஆனாலும் அவருடைய இலக்கியச் சேவைக்காக, குறிப்பாக, நூற்றுக்கணக்கான லத்தீன் அமெரிக்க, ஜப்பானிய, ஆப்பிரிக்க இலக்கியவாதிகளையும் அவர்களுடைய படைப்புகளையும் அறிமுகப்படுத்தியதற்காக லட்சக்கணக்கான மலையாள வாசகர்களில் ஒருவனாக நாயருக்கு எப்போதும் நன்றி பாராட்டுகிறதில் பெருமிதமே.

கிளிக்கூண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு பத்திரிகையை விட்டு மற்றதுக்கு வாரபலம் கட்டுரைத் தொடரை மாற்றி வந்த ஒரு கிளி ஜோசியக்காரனாகக் கிருஷ்ணன் நாயரை உருவகப்படுத்தி மதிப்புக்குரிய மலையாள இலக்கியவாதியான ஒரு நண்பர் டயரிக்காரனுக்கு இரண்டு வருடம் முன்பு எழுதியிருந்தார்.

என்னெ க்ஷமிக்கணெ பகுமானப்பெட்ட …….. நம்முடெ ஸ்வந்தம் கிருஷ்ணன் நாயர் மரிச்செங்கிலும் வாழ்த்தப்பெடட்டே.
888888888888888888888888888888888888888888888888888888888888888

காலமானார் பட்டியலில் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் தேவராஜனும் சேர்ந்துவிட்டார்.

வயலார் கவிதைக்கு - அதெல்லாம் கவிதை இல்லை என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவார் கிருஷ்ணன் நாயர் - தேவராஜன் மாஸ்டர் இசையமைத்து, ஏசுதாசும், பொரயத்து லீலா என்ற பி.லீலாவும், ஜானகியும் பாடி, சத்யனும், மதுவும், நசீரும், ஷீலாவும், ஜெயபாரதியும் அபிநயித்து மறக்க முடியாதவை ஆக்கிய திரைப்படப் பாடல்கள் ஏராளம்.

அறுபது - எழுபதுகளின் மலையாள நாடக மேடைக் கானங்களுக்கும் புத்துயிர் கொடுத்தவர் தேவராஜன். தன் ஆப்த நண்பரும் கவிஞருமான ஒ.என்.வி.குறூப் எழுதி தேவராஜனே பாடிய ‘துஞ்ஞன் பரம்பிலே தத்தே’ இசைத்தட்டு இணையத்தில் கிடைக்கும். கேட்டுப்பாருங்கள். (‘நிங்ஙள் என்னெ கம்யூனிஸ்ட் ஆக்கி’ நாடகம் என்று நினைவு; ‘எண்டெ மகனாணு சரி’ நாடகம் அது என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னாலும் சரிதான்). தேவராஜன் மாஸ்டருக்கு ஜி.என்.பாலசுப்ரமணியம் மேல் இருந்த அபிமானம் புரியும்.

தமிழில் அவர் இசையமைப்பில் துலாபாரம் (‘காற்றினிலே’, ‘சங்கம் வளர்த்த தமிழ்’), அன்னை வேளாங்கண்ணி (‘வானமென்னும் வீதியிலே’ மாதுரி - ஏசுதாஸ் பாடலுக்கு அபிநயம் ஜெ.ஜெ - ஜெமினி), ஜெயகாந்தனின் கதையை எஸ்.வி.சுப்பையா திரைப்படமாக்கிய ‘காவல் தெய்வம்’ படத்தில் ‘அல்லாவின் தயவினிலே’ (டி.எம்.எஸ், பி.பி.எஸ் குரல்களும் சிவாஜி - முத்துராமன் நடிப்பும்) என்று சில படங்களே நினைவு வருகின்றன. சுவாமி ஐயப்பன் படத்தில் ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே’ பாட்டை விட்டுட்டீங்களே என்கிறார் நண்பர் தூள்.காம் பாலாஜி.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

போன மாதம் காலமான மலையாள குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.திருப்பணித்துற பற்றி எழுதாமல் இந்த ஓபிச்சுவரி பூர்த்தியடையாது.

‘திருப்ணித்ற’ பற்றி இரண்டு வருடம் முன்னால் திண்ணையில் மத்தளராயனாக எழுதிய கட்டுரையை அன்பர்கள் தேடிப்பிடித்துப் படித்தால் அவர்களுக்கு சகல சவுபாக்கியமும் திருப்பணித்துறையின் ஆசிர்வாதமும் கிட்டும்.

மாதிரிமங்கலம் சேஷன் வெங்கட்ராமன் என்ற மலையாளத் தமிழரான திருப்பணித்துற சினிமா, சின்னத்திரை நடிகராகப் பரவலாக அறியப்பட்டவர். ஹரிஹரனின் ‘பெருந்தச்சன்’ படத்தில் நெடுமுடி வேணுவோடு வரும் அசட்டு நம்பூத்ரியா, ‘மின்னாமினுங்கின் நுறுங்கு வெட்டம்’ படத்தில் பார்வதி ஜெயராமின் தகப்பனாக வரும் மனசில் ஈரமில்லாத நம்பூத்ரியா, ஏஷியாநெட் டி.வி மெகா சீரியலில் ரத்தம் குடிக்கத் துரத்தி வரும் காதோரம் லோலாக்கு இல்லாத கள்ளியங்காட்டு யட்சி சுகன்யாவைக் கண்டு மிரண்டு ஓடும் கிருஷ்ணன் கோயில் சாந்திக்கார நம்பூத்ரியா - திருப்பணித்துற நடிக்காவிட்டால் இந்த நம்பூத்ரிகள் காற்றில் கரைந்து போயிருப்பார்கள்.

தமிழில் ஒரே படம். மம்மூட்டியின் ‘மௌனம் சம்மதம்’ -நாகேஷின் அதிரடியான எடுபிடி.

கதாகாலட்சேபக் கலைஞர், கணக்கு வாத்தியார் என்ற மற்ற சிறப்புகளும் இந்தத் தமிழ் மலையாளிக்கு உண்டு என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

அப்பாடா, நினைவஞ்சலி ஒரு வழியாக முடிந்தது. இங்கிலாந்து பத்திரிகைகளில், முக்கியமாக கார்டியனில் பக்கம் பக்கமாக ஓபிச்சுவரி போடுவதோடு, அதையெல்லாம் புத்தகமாக வேறு வெளியிடுகிறார்கள். போன வாரம் இங்கே எடின்பரோ பத்திரிகையில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது - காலமானார் பகுதி எழுத அனுபவம் உள்ள பத்திரிகையாளர் தேவை.

தினமணியில் தினசரி ‘நீர்மட்டம்’ செய்தி எழுதவே ஒரு நிருபர் இருந்ததாக நா.பா சொல்வார். தினசரி ‘பேச்சிப்பாறை நீர்த்தேக்கம் முப்பது அடி, வைகை அணண இருபத்தேழு அடி, மேட்டூர் தண்ணீர் இல்லை’ என்று மர ஸ்கேலால் எழுதுவதை விட இது சுவாரசியமான வேலையாகத்தான் இருக்கும்.
8888888888888888888888888888888888888888888888888888888888888888

எடின்பரோ ராயல் லைசியம் தியேட்டர் குழுவின் பாஸ்ட் நாடகத்தைப் பார்க்கச் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

இரண்டு பாகமாக அமைந்த நாடகம். ஒவ்வொரு பாகமும் இரண்டு, இரண்டேகால் மணி நேரம் நிகழக்கூடியது. ஒரே நாளில் நிகழ்த்தப்படும் போது பார்க்கப் போனால், பிற்பகலிலிருந்து ராத்திரி பத்து மணி வரை நாடகம் பார்க்க, கொட்டகைக் கடையில் பியர் குடிக்க, மூத்திரம் போக, சாயந்திரம் தட்டுக்கடையில் சூடாக டோநட், சாயா, பக்கத்து டிராவர்ஸ் தியேட்டரிலும், அஷர் ஹால் இசையரங்கிலும் அடுத்து என்ன நிகழ்ச்சி, எப்போது என்று விளம்பரங்களை மேய்வது, லோத்தியன் வீதி பங்களாதேஷ் சாப்பாட்டுக் கடையில் ரொட்டி, ராத்திரி போஜனம், திரும்ப நாடகம் என்று தொடர்ந்து செலவழிக்க வேண்டி வரும்.

நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கிட்டத்தட்ட இருபது பவுண்ட் கட்டணம். ஆனாலும் எடின்பரோ லைசியம் தியேட்டரில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ‘பாஸ்ட்’ அவை நிறைந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் இரண்டாம் வாரம் வரையான காட்சிகளுக்குக் கணிசமாக நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.

அரங்கில் நுழைந்தபோது கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. இரண்டு பக்கத்திலும் வெள்ளைக்கார மூதாட்டிகள் கையில் பைனாகுலரோடு அமர்ந்திருக்க, நடு இருக்கையில் உட்கார வேண்டிய கட்டாயம்.

நாடகம் உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம்.

ஐரோப்பிய இலக்கிய சாதனைகளை யார் பட்டியல் போட்டாலும் தவறாமல் இடம் பெறுவது ஜெர்மன் கவிஞர் கதே எழுதிய கவிதை நாடகமான பாஸ்ட் (Faust). பதினேழாம் நூற்றாண்டு மத்தியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியப் பகுதி வரை வாழ்ந்த கதே அரசியல், கலை, இலக்கியம் என்று எல்லா வகையிலும் பரபரப்பாக விளங்கிய இந்த இரண்டு நூற்றாண்டுகளின் சிந்தனை ஓட்டங்களையும், அவற்றை மீறிய அசாத்தியப் படைப்பு ஆற்றலையும் இந்தக் கவிதை நாடகத்தில் வடிக்க எடுத்துக் கொண்ட காலம் கிட்டத்தட்ட அறுபது வருடம். அவருடைய வாழ்நாள் சாதனை என்று தயங்காமல் சொல்லலாம் இரண்டு பாகமாக அமைந்த இந்தப் படைப்பை.

ஹோமரின் கிரேக்க இதிகாசமான இலியாதில் வரும் நாயகி ட்ராய் நகரப் பேரரசி ஹெலன், சாமானியர்கள்,சாத்தான், தெய்வம், மிருகங்கள் என்று கிட்டத்தட்ட நூறு கதாபாத்திரங்கள் கொண்ட இந்தப் படைப்பை மேடையேற்றுவது அசுர சாதனை என்று தான் சொல்ல வேண்டும். லைசியம் தியேட்டர் நாடகக் குழுவினர் இதை அனாசயமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.

அதுவும் போன நூற்றாண்டு இலக்கியப் படைப்பை நவீன மேடை உத்திகள், பின் நவீனத்துவ நாடகமொழி இவற்றின் அடிப்படையில், நிகழ்கால பிரக்ஞையும், காலப் பிரமாணமும் கச்சிதமாகப் பொருந்திவரும்படிக்கு.

உடலுறவு பற்றி சதா உதிர்க்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள் நாடகம் முழுக்க விரவி இருப்பதைக் கூடப் பொறுத்துக்கொள்ளலாம். தமிழ்ச் சூழலில் இதுதான் நிகழ்கலையான நாடகம் என்று தெரிவிக்கப்பட்டு நிகழ்த்தப்படும்போது பார்வையாளர்களாக இருந்தும், நாடகப் பிரதியை வாசித்தும் வளர்ந்தவர்களுக்கு, என்னதான் ஐரோப்பிய நாடக வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்தாலும், உடலுறவை கிட்டத்தட்ட நிகழ்த்திக்காட்டும் காட்சியமைப்புகள் அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். கூட்டப் புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி போன்றவை இவை.

கதேயின் நாடக நாயகன் டாக்டர் பாஸ்ட் வானளாவிய அதிகாரம் கிடைக்க ஏங்குகிறான். உலகத்தின் சகலமான இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். கேட்டதைத் தருகிறேன் என்று முன்வருகிறான் மெபிஸ்டபிலிஸ் என்ற பெயரில் வரும் சாத்தான். ஒரே ஒரு நிபந்தனை. பாஸ்ட் சாத்தானுக்குத் தன் ஆன்மாவை ஒப்புத்தரவேண்டும். எந்த ஒரு இன்பத்தை அனுபவிக்கும்போது அதில் அமிழ்ந்து வெளியேறி அடுத்த இன்ப அனுபவத்துக்கு வர முடியாமல் போகிறதோ, அப்போது பாஸ்ட் சாத்தானுக்கு அடிமையாகி விடுவான். ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுத்தரும் பாஸ்ட்டும், அவன் கூடவே மெபிஸ்டபிலிஸும் போகிற வெளி, உள் பயணங்களின் ஒழுங்கமைவு ஜாக்கிரதையாகக் குலைக்கப்பட்ட தொகுப்பு தான் ‘பாஸ்ட்’ நாடகம்.

‘இன்பத்தின் எல்லைகளை அனுபவிக்க வேணும்’ என்கிற பாஸ்ட் உடல் சார்ந்த இன்பத்தின் எல்லைகளைத் தொடும்போது தயங்குகிறான். ‘எல்லைகளை அனுபவிக்க வேண்டும். ஒரு எல்லைக்கு உட்பட்டு’ என்று திருத்திச் சொல்கிற பாஸ்ட் இந்தக்காலத் தயக்கமும், குழப்பமும் கலந்த மதிப்பீடுகளின் பிரதிநிதி.

சுழலும் நாடக மேடை. மேடைக்குள் மேடையாக இன்னொரு அரங்கம், மேடையைச் சுற்றிக் கவிந்து பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளாக, சுற்றிச் சூழ்ந்து இறுகும் கூண்டுகளாக, பாத்திரங்கள் அவ்வப்போது ஏறி இறங்கி, இருந்து அபிநயிக்கும் மேடை வெளியாக பிரம்மாண்டமான இரும்புச் சட்டகங்கள். பின்னால் திரையில் அவ்வப்போது விடியோ ப்ரஜெக்ஷனாக கோள்கள், வானப்பரப்பு என்று விரியும் காட்சிகள். மேடையில் பொதுவாகவும், சூழும் இருளுக்கு நடுவே குறிப்பிட்ட இடத்திலும் படரும் ஸ்ட்ரோபிக் ஒளியமைப்பு. தொழில் நுட்பம் நயமாகப் பயன்படுத்தப்பட்டு, பாஸ்ட் நாடகத்தைச் சிறப்பாக்குகிறது.

கூடவே, எளிய காட்சியமைப்புகள். பல காட்சிகளில் கட்டியங்காரன் போல் இயக்குனரும் ஒரு பாத்திரமாக மேடையில் நாற்காலி போட்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார். ‘இந்தப் பாத்திரம் உள்ளே போகலாம்’ என்று அவர் உரக்கச் சொல்ல, பாதிப் பேச்சில் ஒரு கதாபாத்திரம் மறைகிறது. ‘தெருவில் நடக்கிறான் பாஸ்ட்’ என்று சொல்ல, செட் பிராப்பர்ட்டி எதுவும் கண்ணில் காட்டாமல், மேடை சட்டென்று தெருவாகிறது. காட்சியைச் சட்டென்று முடிக்க வேண்டியிருந்தால், ‘உயிரைக் கொண்டு போக தேவதைகள் வரலாம்’ என்று அவர் அறிவிக்க, இரண்டு தேவதைகள் உள்ளே வர, இழுத்துப் பறிக்காமல் ஒரு மரணம். காட்சி முடிவு.

நாடகத்தின் முதல் பகுதியில் பெண் கதாபாத்திரமான கிரட்சென், பாஸ்ட் அவளுடைய படுக்கையறையில் மறைத்துவைத்துப்போன அழகான உடையைப் பார்க்கிறாள். தோழி தூண்ட, உடுத்தியிருந்ததைக் களைந்துவிட்டு அங்கேயே புது உடுப்பை மாற்றிக்கொண்டு அழகு பார்க்கிறாள். அவள் தோழியை சாத்தான் மயக்குகிறான். சுவரில் சாய்ந்து அவனோடு வாய்வழிப் புணர்ச்சியில் தோழி ஈடுபட, பாஸ்டோடு படுக்கையைப் பகிர்கிறாள் கிரட்சென். இரண்டு பக்கத்திலும் பெண் பார்வையாளர்கள் இருக்க, நடுவில் உட்கார்ந்து இதைப் பார்க்கச் சங்கடமாக இருந்தாலும், கதையும், வசனமும், நாடக ஆக்கமும் இருக்கையில் உட்காரவைத்தன.

நாடகத்தின் இரண்டாம் பகுதியில் பாஸ்ட் பேரழகியும் கிரேக்க மகாராணியும் ஆன ஹெலனைச் சந்திக்க விரும்புகிறான். கடல் தேவதைகளும் சாத்ததனும் கேட்டுக்கொண்டபடி அவன் முழு உடுப்பையும் களைய வேண்டி வருகிறது. பிறந்த மேனிக்கு மேடையில் நின்று வசனம் பேசும் பாஸ்ட், அப்படியே மெல்ல நடந்து பின்னால் போக, பக்கத்தில் சத்தம். திரும்பிப் பார்க்க, பைனாகுலர்கள் உயர்ந்திருந்தன.
888888888888888888888888888888888888888888888888888888888888888

மக்கார்த்தி ஐம்பதுகளில் அமெரிக்காவில் நடத்திய கம்யூனிஸ்ட் களையெடுப்பு பற்றிய ஜார்ஜ் க்ளூனியின் ‘குட்நைட் அண்ட் குட்லக்’, ருவாண்டா படுகொலை பற்றிய பிரிட்டீஷ் படமான ‘ஷூட்டிங் டாக்ஸ்’, பிலிப்ப் சைமோர் ஹாப்மெனுக்கு ஆஸ்கர் பரிசு வாங்கித்தந்த ‘கபோட்’ என்று பார்த்த சினிமாக்கள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. கட்டுரை நீண்டு போனதால், அதெல்லாம் அடுத்த இதழில்.

முடிக்கும் முன்னால், கார்டியன் பத்திரிகையில் பீட்டர் பிராட்ஷா இந்த வாரம் ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட் 2’ படம் பற்றி எழுதியிருந்தது :

‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’ முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த ஷரன் ஸ்டோன் கிட்டத்தட்டப் பத்து வருடம் கழித்து வரும் இந்த இரண்டாம் படத்திலும் கதாநாயகி. ஈ-மெயில் கம்ப்யூட்டர் கீ-போர்ட் ‘@’ பொத்தான் உபயோகத்தில் கொண்டு வந்த அதேயளவு மாபெரும் மாற்றத்தை, விடியோ ரிமோட்டின் ‘pause’ பொத்தானை அழுத்துவதில் ஏற்படுத்திய படம் முதல் பேசிக் இன்ஸ்டிங்க்ட்.".

அவர் குறிப்பிடும் காட்சி என்னவென்று புரிந்திருக்கலாம். அந்தப் படம் பார்க்கும்போது உங்களிடம் வீடியோ பிளேயர் இருந்ததா?

0 Comments:

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது