Sunday, July 29, 2012

லண்டன் ஒலிம்பிக்ஸ்


லண்டன் ஒலிம்பிக்ஸ் துவக்க விழா நிகழ்ச்சி இரண்டு பேருக்காக நினைவில் தங்கி விடும். 

வழக்கமான இரண்டாம் உலகப் போர் நோஸ்டால்ஜியாவைத் தவிர்த்து, பிரிட்டிஷ் நகைச்சுவை தூக்கலாகத் தெரிய ஒரு பிரம்மாண்டமான நாடகம் போல் வடிவமைத்த டேனி பாயில் முதலாமவர்.

ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கும் குறும்படத்தில் ‘க்தாநாயகி’யாக எண்பத்தாறாம் வயதில் நடித்துப் புகழைத் தட்டிக் கொண்டு போன எலிசபெத் மகாராணி அவர்கள்.

What a fabulous James Bond Girl, even better than the first of the lot Ursula Andress.

ராணியே நடிக்கிற் போது நாமும் நடிக்கலாமே என்று இங்கேயும் எண்பது கடந்த தலைவர்கள் நினைக்க ஆரம்பிக்கலாம்...

http://www.guardian.co.uk/sport/2012/jul/28/queen-stratford-london-2012-olympics

Saturday, July 28, 2012

விவித் பாரதி பேட்டி

விவித பாரதியில் பேட்டிக்காக அழைத்திருந்தார்கள். பத்து வருடத்துக்கு மேலாகி விட்டது சென்னை வானொலி நிலையத்துக்குப் போய். தொண்ணூறுகளில் அவ்வப்போது ஓலை அனுப்புவார்கள் - ‘அழுகை’ என்ற பொருளில் சிறுகதை பதினைந்து நிமிடத்துக்கு மேல் போகாமல் எழுதி எடுத்து வந்து படியுங்கள்’. அப்படிப் படித்த கதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கலாம்.. பிரதி இல்லாமல் தொலைந்து விட்டன் அவை. 

ஒரு நிகழ்ச்சியில் நானும் நண்பர் வண்ணதாசனும் கலந்துரையாடினோம். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் மனம் விட்டுப் பேசியது வானொலியில் வந்ததை விட அதிகம்.

இது பில்லா படத்துக்கான கலந்துரையாடல். வானொலி நிலைய வளாகத்துக்குள்ளே Commercial Broadcasting Service கட்டடத்தில் நடந்தது.   நேரடி ஒலிபரப்பு. phone in என்பதால் அவ்வப்போது ‘ஊரப்பாக்கத்துலே இருந்து அர்ஜுனன் பேசறேங்க வணக்கம் ஹலோ கேக்குது சொல்லுங்க..’ ரக உரையாடல்.

அதையும் சுவையாக நிகழ்த்தினார் நிலைய நண்பர் கமலக் கண்ணன். அன்பான வரவேற்புக்கு நிலைய நிர்வாகி டாக்டர் சேயோனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அழைத்து உரையாடிய குரல்களுக்கு நடுவே ஒரு பழக்கமான குரல். மகள். படத்தைப் பற்றிய தன் விமர்சனத்தைத் தெளிவாகச் சொன்னாள். சிவகங்கையில் நிகழ்ச்சியைக் கேட்ட நண்பர்கள் பாராட்டியது அவரைத்தான்.

நிகழ்ச்சி முடிய ஐந்து நிமிடம் முன்பு அழைத்ததும் தொலைபேசியில் வந்து வாழ்த்திப் பேசிய நண்ப்ர் கிரேசி மோகனுக்கு நன்றி சொல்ல மாட்டேன். ‘கிரேசி முதல் கிரேசி வரை’ புத்தகத்தை விரைவில் முடித்து வெளியிட முயன்று கொண்டிருக்கிறேன். கிருஷ்ணார்ப்பணம்.

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது