Saturday, November 19, 2005

அந்த பத்து செகண்ட் வலி!

பழைய சினிமாப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமுள்ள ஒரு நண்பரோடு சமீபத்தில் என்னையும் அவரையும் விட உத்தேசமாக இருபத்தைந்து வருடம் காலத்தால் முந்திய ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்து, ஊஹூம், அததற்கான வார்த்தையைப் போடுவதுதான் கவுரவம். கண்டு களித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கால சினிமா இலக்கணப்படி கொஞ்சம் பூசினாற்போல் கதாநாயகி. இந்தப் "பூசினாற்போல்' என்ற பதம் லாங்க் ஷாட்டில் அரைத்திரையை அடைப்பது, மிட்- லாங்க் ஷாட்டில் முக்கால் திரை மற்றும் குளோசப் ஷாட்டில் முழுத்திரை தாண்டிப் பக்கத்துச் சுவர், தூணை ஆக்கிரமித்துச் கொள்வது வரையான அங்க லாவண்யத்தை உள்ளடக்கிச் சொல்வது. சாத்தனூர் அணைக்கட்டில் சிரமம் பார்க்காமல் படிகளில் ஏறி இறங்கி, ஓடியாடிப் பாடிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண்மணி. அணையின் மதகுகளில் தண்ணீர், பாட்டின் இசைக்குத் தோதாகக் குதித்து கதாநாயகியோடு நடைபோடுகிறது. கர்நாடக சர்க்கார் தகராறு பண்ணாமல் காவிரி ஆற்று நீரைத் திறந்துவிட்டிருந்த காலம் என்பதால் வெள்ளப் பெருக்கும் கதாநாயகி போலவே அகல, நீளத்தால் என் கண்ணே பட்டுவிடும்படி இருக்கிறது.

""எம்புட்டு அழகா இருக்காங்க பாரு''. முப்பது வினாடிக்கு ஒரு முறை என் ஒல்லிப் பிச்சு நண்பர் ஆரோக்கியமான கதாநாயகியின் அழகை உரக்கச் சிலாகிக்கிறார். அந்த செüந்தர்ய உபாசகருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேர்க்கடலை கொறித்துக்கொண்டு நானும் கதாநாயகியைத்தான் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வை பதிந்திருந்தது அந்தம்மா தோளில். தோள் கண்டவன் தோளே கண்டு மலைத்திருக்கக் காரணம், அல்ப விஷயமான அழகு இல்லை. அழகு இன்றைக்கு வரும், நாளைக்குப் போகும். அடுத்த வாரம் ப்யூட்டி பார்லருக்குப் போனால் அடுத்த இண்ஸ்டால்மெண்டாகத் திரும்பி வரும். என் கவனிப்பு வேறே மாதிரி. கதாநாயகியின் இடது புஜத்தில் குட்டைக்கை ரவிக்கை முடிகிற இடத்தில் இரண்டு வட்டங்கள், எந்த அழகு சாதனமும் அழிக்க முடியாமல் காலத்தின் கல்வெட்டாக அந்த மென்-கம்-திண் தோளில் இருந்த அம்மை குத்திய தழும்புகளைத்தான் என் பார்வை வருடிக்கொண்டிருந்தது.

உலக அழகிப் போட்டிக்கு மனுப்போடும் நங்கை முதல் உள்ளூர் பஞ்சாயத்து போர்ட் மாஜி உறுப்பினர் வரை, நூறு ஏக்கர் காவேரிப் பாசனம் நஞ்சை மிட்டா மிராசு தொடங்கி வானம் பார்த்த சீமை விவசாயி வரை, சாமியார் முதல் அவருக்குப் பூர்வ ஜன்ம மாமியார், பேர்பாடியான சகலபாடி முடிய எல்லோர் தோளிலும் சோஷலிச அடையாளமாக ஏறி அந்தக் காலத்தில் பவனி வந்தது அம்மைத் தழும்புதான்.

இந்த அம்மை குத்துவது சாதாரணப்பட்ட காரியமா என்ன? டர்டர் என்று டீசல் மூச்சு விட்டுக்கொண்டு ஏகப்பட்ட புகையைக் கக்கிக் கொண்டு ஆரம்ப சுகாதார மையமோ வேறே ஏதோ அனுப்பிய, சர்க்கார் கோபுரம் படம் போட்ட ஜீப் முதலில் வரும். ஊர்க் கோடிக்கு வரும்போதே அது உத்தரவாதமாக நின்று போய்விடும். மாயழகு டீக்கடையில் டீக் குடித்துக் கொண்டிருக்கும், குடித்து முடித்து வாயில் புகையும் உறையூர்ச் சுருட்டோடு கண்மாய்க்கரைப் பக்கம் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கிக் கொண்டிருக்கும் பெரிசுகள், சும்மா வேலை வெட்டி இல்லாமல் அங்கே இங்கே திரிந்து கொண்டிருக்கும் இளவட்டம், நண்டு சிண்டுகள் ஜீப்பைத் தள்ள ஒரு கை கொடுக்க வருவார்கள். இந்தச் சமூக நல ஆர்வலர்கள்தான் ஜீப்புக்குள் ஒரு லுக் விட்டு உள்ளே இருப்பவர்கள் யார், அவர்கள் கொண்டு வந்திருக்கும் சாதனங்கள் எத்தகையவை என்று வினாடி நேரப் பரிசோதனை நடத்துவார்கள்.

"" அம்மை குத்தறவக வந்திருக்காக அப்பூ'' இந்தக் குரல் எதாவது ஒரு தொண்டையிலிருந்து உயர்ந்தவுடன் தெருவில் ஒரு பரபரப்பு. அந்தக் காலத் தேசிய விரோதி சீனாக்காரனோ, திண்ணைப் பெரிசுகள் இருமலுக்கு நடுவே பழைய புராணம் சொல்லும்போது அடிக்கடி அவர்கள் வாயிலிருந்து விழும் எம்டன் குண்டோ ஊரில் கணிசமான சேதம் விளைவித்தது போல் தோன்றும் அந்தச் சூழ்நிலை. நாலு குடும்பத்தில் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு அடுத்த ஊருக்குக் குழந்தை குட்டியோடு பஸ்ûஸப் பிடிக்க ஓடுவார்கள். இன்னும் நாலு வீட்டில் அம்மைப்பாலை அழிக்க சாணம், அரைத்த வேப்பிலை போன்ற சாதனங்களைச் சேகரித்துக் கொல்லையில் வைப்பார்கள். இந்தப் பயந்தாங்கொள்ளிகளுக்கு இன்ஸ்டண்ட் காப்பி மாதிரி உடனடி அறிவு போதித்து அவர்களை இன்முகத்தோடு அம்மை குத்திக்கொள்ள வைக்க பள்ளிக்கூட ஆசிரியர்களும், அவர்களிடத்தில் படிக்கிற மழலைப் பட்டாளமும் தயார் நிலையில் இருத்தப்படுவார்கள்.

அம்மை இன்ஸ்பெக்டர் ஒருத்தர் கெத்தாக ஜீப்பில் இருந்து இறங்கி, தெரு ஓரமாக நாற்காலி போட்டு உட்கார்வார். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் வீட்டிலிருந்துதான் இந்த நாற்காலி, சபைக்கு அதன் நிரந்தர வாசிகளான ஆயிரத்துச் சில்லரை மூட்டைப் பூச்சிகளோடு தூக்கி வரப்படும். நாற்காலியில் நெளிந்தபடியே ஒரு சாணித்தாள் பைலைத் திறந்து அம்மை அதிகாரி தெரு ஜனத்தொகையைக் கணக்கெடுப்பார். நாலைந்து ராஜாங்க சேவகர்கள் வீடு வீடாகப் படியேறி "அய்யா வந்திருக்காக. அம்மை குத்திட்டுப் போங்க' என்று சுற்றமும் நட்பும் சூழ வரச்சொல்லி வரவேற்றுக் கொண்டிருக்க, இன்னும் இரண்டு பேர் ஒரு முக்காலி மேல் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை வைத்து ஏற்றிக் கொண்டிருப்பார்கள். வழக்கப்போல் அதில் மண்ணெண்ணெய் தீர்ந்துபோய் புகைவாடை வரும். இப்போதும் ஹெட்மாஸ்டர் வீட்டிலிருந்துதான் தேங்காய்நார் அடைத்த பச்சை போத்தலில் எண்ணெய் வந்து சேரும். அம்மைக்குத்து எதிர்ப்பாளர்களுக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் முதல் விரோதிகளாகவும், ஹெட்மாஸ்டர் மற்றும் பள்ளிக்கூடப் போர்ப்படை இரண்டாம் பட்சத் துரோகிகளாகவும் தென்படுவது இப்போதுதான்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் பல் சக்கரம் போன்ற அமைப்போடு கூடிய நீள நீளக் குழாய்களைக் கொதிக்க விடுவதைக் கொஞ்சம் பயத்தோடு பார்க்கும் பிள்ளைகளுக்கு புன்சிரிப்பால் அபயம் அருளும் பள்ளிக்கூட வாத்தியார்கள் தான் முதன்முதலாக அம்மை குத்திக்கொள்ள கை நீட்டுவார்கள். பெண்களுக்கு அம்மை குத்திவிட கட்டாயம் ஒரு அம்மையார் ஜீப்பில் வந்து இறங்கி, செய்தித்தாளை மடித்து விசிறியபடி உட்கார்ந்திருப்பார். எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்தபடி, அரைக்கண்ணை ஜாக்கிரதையாக மூடிக்கொண்டு இடது கையை நீட்டினால், ஆஸ்பத்திரி வாசனை மணக்கும் பஞ்சை வைத்து நீர்க்க நீர்க்க ஒரு தடவல். அப்புறம் அந்த வினோதக் கருவியைக் கைமேல் வைத்து ஒரு சுழற்றுச் சுழற்றி வெளியே எடுக்க, உச்சந்தலைக்குள் வலி. சதையில் பதிந்து வெளியே வந்த கருவி பட்ட கையிலேயே கொஞ்சம் கீழே இன்னொரு தடவை குடைய கண்ணில் நீர் முட்டிக்கொண்டு வரும்.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பத்து செகண்ட் வலி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்படி உட்கார்ந்து பழைய சினிமா பற்றி எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். கையழகியான கதாநாயகியும் நானும் இன்னும் இந்த நாட்டில் பலரும் பெரியம்மையில் போய்ச் சேர்ந்திருப்போம். தழும்பே உனக்கு நன்றி.

(Dinamnai Kadhir - 'Satre Nakuka' - Oct 05)

3 Comments:

At 9:40 pm, Blogger தருமி said...

எனக்கே (ஏகாரம் கவனிக்க) நினைவில் இல்லாத விஷயங்கள்கூட உங்களுக்கு இருக்கே...?

 
At 1:45 am, Blogger ஜெ. ராம்கி said...

இரா.மு ஸார்... அப்படியொரு ஹெல்த் இன்ஸ்பெக்டரம்மாவா எங்க அம்மாவும் கொஞ்ச நாள் வேலை பார்த்திருக்காங்களாம்....அவ்வப்போது அனுபவங்களை எடுத்துச்சொல்லுவாங்க... சொன்னதில் நான் தெரிந்து கொண்ட செய்திதான் உங்களின் கடைசி பத்தி!

 
At 3:53 pm, Blogger Aruna Srinivasan said...

முருகன், இந்த அம்மைக் குத்தற வைபவம் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டது. என் ஆரம்பப் பள்ளி நாட்களில் இது அடிக்கடி நடக்கும். உங்களின் இந்தப் பதிவு, அந்த "டிங்சர்" வாசனை முதற்கொண்டு - உள்ளூர வயிற்றைப் பிசையும் அந்த பயம் உட்பட - :-) ஞாபகத்திற்குக் கொண்டு வந்துவிட்டது :-)

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது