Tuesday, October 04, 2005

வைதீஸ்வரன்


வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி ('வைதீஸ்வரன் கவிதைகள்' - கவிதா பதிப்பகம் வெளியீடு 2005) எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள் நுழைவதாக இல்லை. ஆனாலும் எனக்குப் பேச நிறைய இருக்கிறது.

நேசமான மனிதர். சந்திக்கப் போகும்போதெல்லாம் வாய் நிறையச் சிரிப்பும் அன்புமாக வாசலில் வந்து வரவேற்கிறார். எழுத்தோ, ஓவியமோ, படைப்புகளைப் பேச விட்டுத் தான் ஓரமாக ஒதுங்கிக் கொள்ளும் சாதனையாளர். மொழிபெயர்ப்பில் அவர் கவிதையைப் படித்து விட்டு அசாமிலிருந்தும், பீகாரிலிருந்தும் முகம் தெரியாதவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதும் கடிதங்கள் அவருடைய படைப்பு ஆளுமையை இனம் காட்டும். தேடிப்போய்ப் படிக்கும் தமிழ் வாசகர்களுக்குப் புலப்படும் உன்னதம் அது.

இந்தப் பகிர்வுக்கு ஒரு தலைப்பு கொடுத்துவிட்டு மேலே போகலாம். 'இணையத்தில் வைதீஸ்வரன்'.

வைதீஸ்வரன் என்ற இந்த எழுபது வயது இளைஞரின் சுறுசுறுப்பு ஆகஸ்ட் தீராநதியில் வந்த லேடஸ்ட் கவிதையான 'பெட்டியின் மரண'த்தோடு நின்றுவிடவில்லை.

துண்டு பட்டு முடிந்து போன
தண்டவாளத்தோரம்
ரயில் நிலையம் தொலைத்த மூலையில்
அடிபட்ட மிருகமென
அனாதை ரயில் பெட்டி.

வைதீஸ்வரனின் இணைய முகம் கவிதையோடு, ஓவியம், நாடகம், சினிமா மற்றும் நினைவலைகள் என்று பன்முகப் பரிமாணம் கொண்டது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

இணையத்தில் நாங்கள் 'ராயர் காப்பி கிளப்' (ரா.கா.கி) என்ற ஒரு கலை - இலக்கிய நண்பர்கள் குழு வைத்திருக்கிறோம். வைதீஸ்வரன் கிளப்பில் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது வழக்கம்.

பத்து நாள் முன், நாங்கள் சென்னைக்கு முன்னூற்று அறுபதாவது ஆண்டு நிறைவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது வைதீஸ்வரன் தான் அறுபத்திரெண்டு வருடம் முன் சென்னையில் குடிபுகுந்ததை இப்படிச் சொன்னார் -
----------------------------------------------
நாம் முதன் முதலில் சென்னைக்கு வந்த வருஷம் 1943.எனக்கு எட்டு வயது திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ரத்னா கபேயக்கு' அருகில் ஒரு நீளமான வீட்டில் ஒண்டுக் குடித்தனம் இருந்த என் அத்தையின் வீட்டில் தாமசம்.அத்தையின் மகன் மகான் 'கலைமகள்'' பத்திரிகையில் ஓவியராக இருந்தார்.

அப்போது ரத்னாகபே இருக்கவில்லை..சென்னைத் தெருக்களின் காலை மணம் இன்னும் என் மூக்கில் சுழன்று கொண்டிருக்கிறது, பசு மூத்திரம் கலந்த சாண வாசனையுடன் வீட்டோரமாக ஓடும் கழிவு நீர் சாக்கடையின் சூடான சௌகந்தமும் பக்கத்திலிருந்த 'பாய்' கடையின் அத்தர் சந்தன பத்தியின் புகை மணமும் தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் எனக்கு இனமறியாத இன்பக் கலவையாக கிறுகிறுப்பாக இருக்கும். தெருக்களில் தெலுங்கு தமிழ் கலந்த செப்பு மொழியும். கை ரிக்ஷா குப்புசாமியின் 'கய்தே..கஸ்மால.விளிப்புகளும் அழுக்குப் பாவாடையும் அதட்டுகிற மார்களுமாக ஆங்கிலோ இந்திய சகோதரிகளின் 'இன்னா மேன் .ஒன் வீக்கா ஹவுஸ் பக்கம் வர்ரதில்லே..சில்ட்ரென் ஒட்ம்பு கிட்ம்பு சீக்கா?' போன்ற கருப்பும் வெள்ளையும் கலந்த ஆதங்க வார்த்தைகளும் காய்கறி தயிர்க்காரிகளின் வினோதமான [கே]கூவல்களும்.சென்னைத் தெருக்களின் அற்புதமான பழைய அடையாளங்கள்.

லூர்து துரைசாமி..ஸ்டீபன் தங்கவேல் அலெக்ஸ் ஆரோக்கியசாமி இப்படிபட்ட புதிய கலாசார நாமங்களும் சென்னை வாசிகளின் காதுகளில் நூதனமாக ஒலிக்கத் தொடங்கிய கால கட்டம்.

சென்னை அழுக்காக இருந்தாலும் காற்றோட்டமாக விஸ்தாரமாக இருந்தது. கடற்கரையில் நல்ல காற்று வீசியது. எப்போதாவது கடந்து போகும் Austin Morris Vauxhal -கார்கள் மௌண்ட் ரோடை நின்று ரஸிக்கத் தகுந்த நாகரீகத்துடன் அலங்காரம் செய்தது.

எந்த விஷயத்தையுமே அப்போது நன்றாக இருந்தது போல் இப்போது நினைக்கத் தோன்றுகிறது. எப்போதும் எந்த மாற்றத்துக்கும் பொறுப்பாளிகள் நாம் தான் என்பது அடிக்கடி நமக்கு மறந்து விடுகிறது.
--------------------------------

> இக்கட்டு
> ------------
>> நாகரீகம் வளர்ந்ததினால்
> தாத்தா வைத்த குடுமியை
> நறுக்கி யெறிந்தேன்
> நாசூக்காக அன்று.
என்று தொடங்கும் கவிதை - இதையும் இணையத்தில் பகிர்ந்துகொண்டார் இந்தச் சொற்சித்திரத்தோடு ஒத்துப்போகிறதா எனத் தெரியவில்லை.

வைதீஸ்வரன் மறைந்த அற்புதமான நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். வைதீஸ்வரனும் சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களான 'வடிவேலு வாத்தியார்', 'பாஞ்சாலி சபதம்', 'நாலுவேலி நிலம்' நாடகங்களில் நடித்திருக்கிறார். மறைந்த முத்துராமன், வீராச்சாமி, வாத்தியார் ராமன் ஆகியோர் பிற சேவா ஸ்டேஜ் கலைஞர்கள்.

சேவா ஸ்டேஜ் நடிகர்கள் அதிகம் பங்கு பெற்ற ஒரு தமிழ்த் திரைப்படத்தில் வைதீஸ்வரன் சினிமா பிரவேசம் என்று நினைவு. தேவிகா கதாநாயகியான அப்படத்தில், தேவிகா கனவு காணும் காட்சியில் மன்மதனாக வருவது கவிஞர்தான்!

சினிமா பற்றி நடிகர் வைதீஸ்வரன் ரா.கா.கியில் சொன்னது இது -
''நாலு வேலி நிலத்தில் ' நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்."

கவிதைகளோடு தாம் வரைந்த ஓவியங்களையும் பகிர்ந்து கொண்டு வருகிறார் ஓவியர் வைதீஸ்வரன். அதில் ஒரு ஓவியம் 'Abnormal Study' என்று ஓவியரால் தலைப்பிடப் பட்டது. இரவில் படித்துக் கொண்டிருக்கும் சிறுவன். கண்கள் கிட்டத்தட்ட மூடியே உள்ளன. படிப்பில் முழுக் கவனமோ அல்லது படித்துக் களைத்து உறக்கத்துக்கு முந்திய, நினைவுகள் வழுக்கும் வினாடியோ.. தலைக்குப் பின்னால் கடியாரம் இரவு ஒரு மணி என்று நேரம் சொல்கிறது. அறையில் விளக்கு அது சாதாரணமாக இருக்கும் இடத்தை விட நன்றாகக் கீழே இறங்கிச் சிறுவனுக்கு மிக அருகே பிரகாசமாக ஒளி விடுகிறது. அதன் ஒளிவீச்சு கண்ணைக் கூச வைத்ததாலோ, படிப்பில் ஆழ்ந்ததாலோ ஒரு கையைக் கண்ணுக்கு அருகில் வைத்தபடி அவன் படித்துக்கொண்டிருக்கிறான். ஜன்னல் வழியே அமைதியாகக் கசியும் இரவு.

ஓவியம் உணர்த்தும் அதீதம் (abnormality) நிகழ்ச்சியில் (ஓவியமாக்கப் பட்ட காட்சி) இருப்பதாகவே நான் கருதுகிறேன். சிறுவன் abnormal ஆனவன் என்று சூசனைகள் உண்டு. ஓவியத்தில் பயம், அயர்வு, துயரம் போன்றவற்றைக் குறிக்கும் வண்ணங்கள் இடம் பெறாது மெல்லிய குளிர்ச்சியான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் நிறங்களே காணப்படுகின்றன. கரிசனத்தையும் நம்பிக்கையையும் தூரிகை வெளிப்படுத்துகிறது. வைத்தீஸ்வரனின் இந்தக் கவிதை போல் :

பொறுத்திரு
----------
நடுசாமப் படுக்கையில்
சற்றே விழித்து
உற்றுக் கேள் -

முடிவற்ற மௌனக் கிணற்றுள்
தவறவிட்ட ஒலிக்கல்லாய்,
எங்கோ ஒரு தனிக்காரின்
ஓலம் நிச்சயம் காதில் விழும்.

அல்லது ஜன்னலை விரித்து வைத்து
எதிரே இருட்டு வலைக்குள்
கவலையற்றுத் தூங்கும்
ஒரு மலையைக் கவனி.

அங்கு உருட்டிவிட்ட சிறுவிளக்காய்,
வலைப்பட்ட மின்மினியாய்
ஒரு பஸ், ஆடி வளைந்து
இருளைக் கிறுக்கு இறங்குவது
கண்ணில் பட்டே தீரும்.
பொறுத்திரு.

அவருடைய கவிதை அவர் வரையும் ஓவியத்தின் நீட்சியாகவும், ஓவியம் கவிதையின் நீட்சியாகவும் பரிணாமம் கொள்ளுவதைப் பல சந்தர்ப்பங்களில் கவனித்து வியந்திருக்கிறோம்.

நமக்கு ஒரு தொடர்ச்சியான ஓவிய மரபு இல்லை' என்பது இங்கே சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி. அந்த மரபுத் தொடர்ச்சி இல்லாத காரணத்தால், ஓவியமொழி என்ற ஒன்றை நாம் இதுவரை இங்கே அனுமதிக்கவில்லை. கவிதை மொழி போல், கதை மொழி போல், ஓவியனைத் தன்போக்கில் சிந்திக்க விடும் சுதந்திரத்தை நாம் தருவதில்லை.

ஓவியம் 'தத்ரூபமாக' அதாவது இருக்கிற ஒன்றின் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கவேண்டும் என்று ஓவியனின் மனதையும், சிந்தனையும் கட்டிப் போட்டு, அவன் கைகளுக்கு மட்டும் இயங்க அனுமதி கொடுப்பதின் மூலம் நாம் ஓவியம் மூலம் நம்மால் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிந்தனை வெளியையே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

ஒரு கவிஞனின், கதைஞனின் மொழியோடு, எழுத்து-ஒலி வடிவ மொழி கடந்து, வரிகளுக்கு நடுவே ஊடாடி வரும் மௌனத்தின் மூலம் அவன் பேசுவதோடு நம்மால் ஒத்திசைய முடிகிறது. அந்த ஒத்திசைவை ஓவியத்துடன் நாம் மேற்கொள்ள இயலவில்லை என்பதற்கான கா¡ரணங்களை நம் மரபணுக்களில் தேடவேண்டி இருக்கலாம்.

வியத்னாமை அமெரிக்க வல்லரசு ஆக்கிரமித்தபோது, மைலாய் கிராமத்தில் பொழிந்த குண்டுமழையில் ஒரு கிராமமே நிர்மூலமானது. இந்தச் சோகத்தைச் சொல்லும் கவிஞர் வைதீஸ்வரனின் 'மைலாய் வீதி'யின் கவிதைமொழி நமக்குப் புரிகிறது.

வெளியில் பல கிளிகள்
மிதிபட்டுக் கிடக்குதங்கே!
குப்பைத் தொட்டியில்
குழந்தைத் தலைகளும் ..
மலத்தொடு பிணங்கள்
கலந்து நாறும் கோரங்கள்.
பச்சை வயல்களெங்கும்
செங்குருதி பாயக் கண்டேன்.

நம்பிக்கையோடு
அறுவடைக்குப் போன மக்கள்
அறுபட்டு, உயிரற்று ஊதிப்போய்,
வயற்காட்டுப் பொம்மைகளாய்
வழியெங்கும் நிற்கக் கண்டேன்,

இன்றைக்குப் படித்தாலும் நான் பார்க்காத வியத்னாமியக் கிராமத்தில் நாற்பது வருடம் முன்னால் அரங்கேறிய ஓர் அவலத்தை வைதீஸ்வரனின் கவிதைமொழி நமக்கு நிகழ்கால அனுபவமாக்கித் தருகிறது. இந்தத் தொடர்ந்த அனுபவப் பகிர்வு நம்மில் மிச்சமிருக்கும் காருண்யத்தை, மனித நேயத்தை, மன ஈரத்தை வரண்டு போக விடாமல் செய்து கொண்டே இருக்கும். கவிதைமொழியில் இல்லாமல் ஓவியமொழியில் வைதீஸ்வரன் இதைச் சொல்லியிருந்தாலும் இதே பாதிப்பு நமக்குக் கிடைத்திருக்கும்.

வைதீஸ்வரன் வேறு விதமான கவிதைகளும் எங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் சொல்வது - சினிமாக் காதல் காதை துளைப்பதால் சில நல்ல எதிர்வினைகளும் எனக்கு ஏற்படுகின்றன..காதல் இப்படித்தான் நுண்மையாக சொல்லப் பட வேண்டுமென்று எனக்கு தோன்றிய இலக்கணம்....

காதலனின் கானல் வரிகள்
------------------------
உன்னுடைய வாசலுக்காக
மல்லிகை வளர்த்தேன்.
பூ விரிந்து மணந்த போது
நீ விலாசத்தை மாற்றிக் கொண்டாய்!!

இப்படி எட்டுச் சிறு கவிதைகளை, முகத்தில் முறுவல் வரவழைக்கும் கவிதைகளை எழுதிய கவிஞர் வைதீஸ்வரன் வயதில் ஐம்பதைத் தாராளமாகக் கழித்து விடலாம்.
வேறு எங்கும் பிரசுரிக்கப்படாத இன்னொரு கவிதை இதோ. பாட்டுடைத் தலைவன் நான் தான். திநகரில் வீடு மாறியபோது, விலாசம் கேட்டார் வைதீஸ்வரன். சொன்னேன். அந்தத் தெருவா என்று மென்மையாகச் சிரித்தார். அடுத்த நாள் ஈமெயிலில் வந்த கவிதை இப்படி -

பகவந்தம் தெரு ---பலவந்தமற்ற நினைவுகள்...
---------------------------------------
திருப்பதி வாசனைக்கு
மரியாதையான உயரத்தில்
பகவந்தம் முருகன் -----

தெருமருங்கில் .......
பான் பராக் தோரணத்துக்குள்
பதுங்கி விற்கும் பையன் முகங்கள்.
உண்டியலை திறந்து வைத்து
உதவியற்று நிற்கும் குட்டைக் கோயில்
துவார பாலகர்கள்

நாலடிக்கு ஒரு நாயாகத்
தூங்கும் நடை பாதைகள்
''வருவண்டி...வருவண்டீ ''யென்று
வாசலில் புடைத்து நிற்கும்
கன்னிக் கலர் குடங்கள்...

மறைந்த எழுத்தாளர் காசியபன் பற்றிச் சொன்னார் இப்படி -

எழுத்தின் மூலம் புகழும் பொருளும் கிடைப்பது ஒரு விபத்து தான்..சில சமயம் ஆபத்தானதும் கூட.. பரிசுகளுக்குப் பின் சுத்தமாக வறண்டு போய்விடுகிறார்கள் சில எழுத்தாளர்கள்.. ஒத்த மனமுள்ள சக மனிதர்களோடு உறவும்,சிந்தனைப் பரிமாற்றமும் வாழ்க்கையை ஸ்வாரஸ்யமாக்குகிறது..இது தான் எழுத்தாளர்கள் காணும் நிதர்சனமான பலன். அசடு`` புத்தகத்துக்கு முகப்பு அட்டைக்கு என் ஓவியம் பயன் படுத்தப் பட்டுள்ளது, நாவலுக்கும் ஓவியத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும், ஓவியம் நன்றாக இருப்பதாக பாராட்டினார், மதிப்புக்குரிய காஸ்யபன் ...

காசியபன் பற்றிய ஒரு வாழ்க்கை சார்ந்த முரண்நகையை இயல்பாகச் சொல்கிறார் வைதீஸ்வரன் -

அவரும் ,துணைவியாரும் டாக்சியில் ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது வழியில் ஒரு வண்டியுடன் மோதி விபத்து நேர்ந்து விட்டது..பெரிய காயம் படவில்லை..பிறகு மேலும் சௌகரியமாக ஆஸ்பத்திரிக்கு போக முடிந்தது..அவர்கள் மோதிய வண்டி ஆம்புலன்ஸ்!!

கவிஞர் வைதீஸ்வரனை ராயர் காப்பி கிளப்புக்காகச் சந்தித்து உரையாடினேன். அப்போது கேட்டேன். -

கேள்வி: ஒரு கவிதை பெறும் வெற்றி எதை வைத்துக் கணிக்கப் படும்?

பதில்: நிலைத்ததற்கும், மாறிக் கொண்டே இருப்பதற்கும் நடுவே நிகழும் ஊடாட்டத்தை இயல்பாகச் சொல்வதில் கவிதையின் வெற்றி இருக்கிறது. நல்ல படைப்பு, நல்ல கவிதை என்பது ஒரு சின்ன ஒளிச்சிதறல். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தைப் பாதிப்பதாக, மறுபரிசீலனை செய்ய வைப்பதாக வெளிப்படும் சிந்தனைக் கீற்று. அந்த வெளிச்சத்தில் நேசம் மலரும். உறவுகள் மேம்படும்.

கேள்வி: உங்கள் கவிதைகளை நீங்களே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பில், மூலக் கவிதை எழுதிய திருப்தி கிடைக்கிறதா? வேறு யாரும் மொழி பெயர்த்தால் கவிதையின் புரிதல் அல்லது மொழி தொடர்பாக மூலக்கவிதையிலிருந்து விலகல் அனுபவப்படுமா?

பதில்: நானே என் கவிதையை மொழிபெயர்த்திருக்கிறேன். மூலக் கவிதை தருவதற்கு நிகரான அனுபவம் மொழிபெயர்ப்பில் கிடைப்பது கடினம் தான். ஆனால் இது வசப்படும் காரியம் தான்.

உதாரணமாக, 'தீர்ப்பு' என்ற என் கவிதை - அசோகமித்திரன் மொழிபெயர்ப்பில் இப்படித் தொடங்கி முடியும் :('The fragrance of rain' - an anthalogy of poems by S.Vaidheeswaran - a Writers Workshop publication)

It didn't bite you,
Then why did you kill it?

Maybe killing an ant
is the easiest thing in the world.
Should you kill it
just because it is so?

இதன் தமிழ் மூலம்.

எறும்பு
கடிக்காத போது
ஏன் கொன்றாய்?

உலகத்தில்
நசுக்க மிகச் சுலபம்
எறும்பு தான் என்றாலும்
சுலபமாய் இருப்பதால்
கொலையா செய்வது?

(நான்-இரா.முருகன் கருதுவது - வைதீஸ்வரனின் கவிதை வெற்றிக்கு சட்டென்று முகத்தில் அறைந்து இதயத்தைக் கவ்விப்பிடிக்கும் இந்த universal metaphor அடித்தளம். அந்தக் கவிதை மொழிபெயர்ப்பிலும் அதே வெற்றி பெற வைதீஸ்வரனை, அவர் கவிதைகளை அவற்றின் தொனி வ்¢சேஷங்களுடனும், வெளிப்படுத்தும் நுண் உணர்வுகளோடும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் நண்பரும், அதே தன்மைகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறவருமான அசோகமித்திரன் என்ற படைப்பாளி தேவை. இந்த ஒத்திசைவு (resonance) அமைவது அபூர்வம்.)

கேள்வி; தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற ஒரே மொழிக்குடும்பத்திற்குள் செய்யப்படும் மொழி பெயர்ப்புகளுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலம், ஜர்மன் போன்ற பிற கலாச்சாரங்களைச் சார்ந்த மொழிகளுக்குச் செய்யப்படும். மொழிபெயர்ப்புக்களுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டா? நம் கலாச்சார, மொழி, இனம் சம்பந்தமான idiom, சொல்லாடல், படிமங்களை ஆங்கிலம் போன்ற மொழிகளில் அப்படியே பெயர்த்து அளிப்பது சாத்தியமா?

பதில்: வேறுபட்ட கலாச்சாரங்களிடையே இலக்கியப் படைப்புகளைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போது மொழிபெயர்ப்பை விட மொழியாக்கம் எழுத்தை அதன் தீவிரத்துடன் கொண்டு சேர்க்க உதவும். When culturally variant, transcreation is a possibility. ஒத்த கலாச்சாரங்களிடையே மொழிபெயர்ப்பு அதன் இயல்பான தாக்கத்தோடு சுலபமாக வாசகனை அடைய வாய்ப்பு இருக்கிறது. அப்புறம் ஒன்று, மொழிபெயர்ப்பில் வாசகனுக்கும் பங்கு இருக்கிறது. 'இடியாப்பம்' வேறு மொழியிலும் இடியாப்பமாகவே போகட்டுமே. அதை pancake என்று மொழி மாற்றிப் புரியவைப்பதை விட அன்னிய மொழி வாசகனுக்கு இடியாப்பத்தை, அதன் சுவையை முதல் முதலாக அறிமுகப் படுத்தி வைக்கும் காரியம் கௌரவக் குறைச்சலானதா என்ன?

கேள்வி: கவிதை பிரசுரமாகும்போது அதில் ஏதாவது வரியோ, சொல்லோ, எழுத்தோ மாறி இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? போர் பற்றிய உங்கள் கவிதையில் 'காகித சேதியாய்த் திரும்பி வருவான்' என்று நீங்கள் எழுதியதைக் கணையாழி 'காகித சோதியாய்த் திரும்பி வருவான்' என்று பிரசுரித்ததும், அப்போது கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த திரு.அசோகமித்திரன், "காகித சோதி என்பதும் பொருத்தமாகத் தான் இருக்கிறது" என்று சமாளிப்பாகக் கூறியதும் எனக்கு நினைவு வருகிறது.

பதில்: மிகுந்த சோகம். அதுவும் இந்தப் பிழையோடு கவிதை பாராட்டப் படும்போது!

கேள்வி: புதுக்கவிதையில் காவியம் எழுவது சாத்தியமா?

பதில்: இதுவரை சாதிக்காததால் அதைச் சாதிக்க முடியாமா என்ற கேள்வி எழுகிறது. சி.மணியின் 'நரகம்', 'பச்சயம்', 'வரும் போகும்' போன்றவை காவியத்தின் ஆழக்கல்லை நாட்டிய முயற்சிகள். இப்போது நமக்குச் சோம்பல். கவிதைக் கருவை ஆழமாக அகலமாகப் படரவிட மனப்பங்கில்லை.

எதிர்காலத் தமிழ்க் கவிதை எப்படி இருக்கும்? என்பது என் கடைசிக் கேள்வி.

"கவிதையில் வாசகத் தன்மை எப்படி வளர்கிறதோ, அதே போல் கவிதை வளரும். கானாக் கவிதையும் இலக்கியமாகலாம்."

இந்த நம்பிக்கைதான் வைதீஸ்வரன்.


(அக்டோபர் 2, 2005 ஞாயிறு மாலை சென்னையில் கவிஞர் வைதீஸ்வரனின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. கூட்டத்தில் நான் ஆற்றிய உரை).

6 Comments:

At 1:05 pm, Blogger Thangamani said...

கவிஞருக்கு வாழ்த்துகளும், உங்களுக்கு நன்றியும். அழகான பதிவு.

 
At 1:29 pm, Blogger Mookku Sundar said...

நன்றி இரா.மு

இதுவரை ரா.கா.கியிலே கவிஞ்ரை பற்றி பகிர்ந்து கொண்டதின் மொத்த தொகுப்பாக இருக்கிறது

 
At 10:18 pm, Blogger Srikanth Meenakshi said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:19 pm, Blogger Srikanth Meenakshi said...

நீளமான கட்டுரையாதலால் மெதுவாகப் படிக்கலாம் என்று இப்பொழுது தான் படித்து முடித்தேன். மிகவும் சிறப்பான கட்டுரை, நன்றி. நேர்மையான கவிதைகளின் வாசிப்பு அனுபவம், அக்கவிதைகளை எழுதிய கவிஞர்களைப்்கவிஞர்களைப் பற்றித் அதிகம் தெரிந்து கொள்ளுகையில் மேன்மை அடைகிறது.

 
At 10:52 am, Blogger Unknown said...

Great post, I enjoyed reading it.

Adding you to favorites, Ill have to come back and read it again later.

 
At 2:36 am, Blogger Unknown said...

Good post

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது