Monday, September 26, 2005

குரும்பூர் குப்புசாமி புத்தகம்

தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் - ஓர் ஆய்வு
--------------------------------
'ராணி' பத்திரிகை ஆசிரியர் அ.மா.சாமி வித்தியாசமானவர். தான் 'ஆமா சாமி' என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறவர் அவர் (ஆதித்தனார் மாணவர் சாமி).

'குரும்பூர் குப்புசாமி'யாகத் தொடர்கதை எழுதினாலும், நுணுக்கமான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினாலும், 'எல்லோருக்கும் எளிதில் புரியும்படியாக, சுவையாக எழுத வேண்டும்' என்று ஆதித்தனார் பள்ளியில் பாடம் படித்த சாமி, படித்த பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பதைத் 'தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள்' புத்தகம் புலப்படுத்துகிறது.

ஒன்றல்ல, நூறல்ல .. ஆயிரத்து அறுநூறு கிறிஸ்தவ இதழ்கள் பற்றிய விவரங்களைத் தேடிப் பிடித்துத் தொகுத்திருக்கும் சாமி ஒரு கிறிஸ்தவர் இல்லை என்பதில் யாராவது சின்னதாக ஆச்சரியப்பட்டால், இஸ்லாமியராக இல்லாத இவர், இதற்கு முன் இஸ்லாமிய இதழ்கள் பற்றியும்
இன்னொரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்பதற்கும் சேர்த்து ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம்.

எது கிறிஸ்தவ இதழ் என்பதற்குக் 'கிறிஸ்தவத்தைப் பற்றிய இதழாக இருக்க வேண்டும். அல்லது கிறிஸ்தவர் மட்டுமே படிக்கத் தகுந்த இதழாக இருக்க வேண்டும்' என்று விளக்கம் சொன்னாலும், அதை நெகிழ்த்தி, கிறிஸ்தவர்கள் நடத்திய வேறு இதழ்கள் பற்றியும் சொல்லிப் போகிறார் சாமி. அதோடு நிறுத்தாமல், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மதத்தின் வரலாற்றையும் விரிவாகத் தருவது இந்தப் புத்தகத்தின்
சிறப்பு.

தெரிந்த செய்தியில் கூடத் தெரியாத அம்சம் எதையாவது சேர்த்துத் தருகிறார் சாமி. கூடன்பர்க் 1455-ல் வெளியிட்ட பைபிள்தான் உலகில் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகம் என்பது எல்லோருக்கும் தெரியும். அது காகிதத்தில் அச்சாகவில்லை. தோலில் அச்சடிக்கப்பட்டது. 200
பிரதி தயார் செய்வதற்காகப் பத்தாயிரம் கன்றுக்குட்டிகளைக் கொல்ல வேண்டி வந்தது என்பது தெரியுமா?

புத்தகத்தில் கண்ட இன்னும் சில 'முதல்'கள் :

கடல் கடந்து கிறிஸ்தவம் பரவிய முதல் நாடு தமிழ்நாடு. இலத்தீன் மொழிக்கு அப்புறம் அச்சேறிய முதல் மொழி தமிழ். 1554-ல் போர்ச்சுக்கல்லில் 'கார்த்தீலியா' என்ற பெயரில் தமிழ் - போர்ச்சுகீஸ் மொழிகளில் வெளியான இந்த நூலின் தமிழ்ப் பகுதியை எழுதித்தர தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்று மீனவத் தமிழர்கள் போர்ச்சுக்கல் போய் வந்தார்களாம்!

முதல் தமிழ்ப் பத்திரிகை 1812-ல் வெளியான 'மாசத் தினச் சரிதை'.

தமிழ் அல்லாத முதல் கிறிஸ்தவ இதழும் (ஆர்மீனிய மொழி) சென்னையிலிருந்துதான் வெளியானது. 1794-ல். அதற்கு முன் ஆர்மீனிய நாட்டிலேயே பத்திரிகை கிடையாதாம்!

இன்னும், இந்தியாவில் முதலில் வெளிவந்த குழந்தைகள் இதழ் 'பாலதீபிகை' (1840) தமிழ்தான். இந்திரா காந்தியின்
எமர்ஜென்சி காலத்தில் தடைசெய்யப்பட முதல் பத்திரிகையும் கிறிஸ்தவத் தமிழ்ப் பத்திரிகையான 'சபதம்'.


அ.மா.சாமி அடுக்கும் ஆயிரத்து அறுநூறு பத்திரிகைகளில், ஒரே ஒரு இதழ் மட்டும் வெளியாகிக் காணாமல்
போனவையும் உண்டு. 1841-ல் தொடங்கி டபிள் சென்சுரியை நோக்கி நடை போடும் 'உதய தாரகை'யும் உண்டு.
தொண்ணூறு வயசான 'சர்வ வியாபி'யும் கூட உண்டு.

இதழ்களின் பெயர்களில் தான் எத்தனை வகை! 'இலவசம்' என்ற பெயரில் சும்மாவே வினியோகிப்பட்டு அப்புறம் கொம்பு முளைத்த 'இரட்சண்யக் கொம்பு'.

பல பத்திரிகைகளின் பெயர்களில் 'இயேசு அழைக்கிறார்' .. இயேசு - ஆசீர்வதிக்கிறார், இருக்கிறார், நேசிக்கிறார், வருகிறார்,
சந்திக்கிறார், தருகிறார், தொடுகிறார், விசாரிக்கிறார், சுகமளிக்கிறார், மன்னிக்கிறார்.

இதழ் ஆசிரியர்களும் சுவாரசியமானவர்களே.
"இலவசமாகக் கொடுத்தாலும் படிக்காமல் போடுகிறீர்களே" என்று அங்கலாய்ப்பவர்கள், 'காசு கொடுத்தால்தான்
புத்தகம்' என்று கண்டீஷனாகச் சொல்கிறவர்கள், 'நான் சொந்த வீடு கட்டிக் கொண்டு உங்களுக்குத் தொடர்ந்து
ஊழியம் செய்ய நிதி அனுப்புங்கள்' என்று கோரிக்கை விடுப்பவர்கள், 'இந்தப் பத்திரிகையை முஸ்லீம்களுக்குக்
கொடுக்க வேண்டாம்' என்று கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கும் 'கல்வாரியின் அழைப்பு' பத்திரிகை
ஆசிரியர் மைதீன்.. மரணப் படுக்கையில் இருந்தபோதும் கூட ·ப்ரூப் பார்த்து, அச்சடிக்கக் கையெழுத்துப் போட்ட பேலீசு அடிகளார் (1870-லேயே bombshell என்பதற்குத் 'தீக்குடுக்கை' என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியவர் இவர்!) .

பெரும்பான்மையான இதழ்கள் கிறிஸ்தவச் செய்திகளை மட்டுமே தாங்கி வந்தாலும், 'சர்வவியாபி' இதழில்
வடுவூர் துரைசாமி அய்யங்கார் 'மரகதம் அல்லது கருங்குன்றத்துக் கொலை' துப்பறியும் தொடர்கதை
எழுதியிருக்கிறார்! காண்டேகர் நாவல் மொழிபெயர்த்து வெளியிட்ட 'நல்ல ஆயன்' பத்திரிகை 'பொழுது
போக்கு இதழாக மாறியதால்' நிறுத்தப்பட்டது!

'இந்தப் பத்திரிகை ராணி சைஸ்' .. 'இது தினத்தந்தியை இரண்டாக மடித்த அளவில் வெளிவந்தது' என்பது
போல் அங்கங்கே தட்டுப்படும் வரிகளில், தாம் பணிபுரியும் பத்திரிகைக் குடும்பத்தோடு இரண்டறக் கலந்த
சாமி தென்படுகிறார்.

தமிழ் நூல்களைப் பதிப்பிக்கச் சுவடி தேடி அலைந்த 'தமிழ்த் தாத்தா' உ.வே.சா போல் இந்த அரிய நூலைப்
பதிப்பிக்க 1000-க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் பிரதிகளைத் தேடித் தமிழகம் எங்கும் அலைந்த அ.மா.சாமியை 'கிறிஸ்தவத் தாத்தா' என்று அழைத்தால், 'கிறிஸ்துமஸ் தாத்தா' சாண்டாகிளாஸ் ஆட்சேபிக்க மாட்டார்!

(தமிழ்க் கிறிஸ்தவ இதழ்கள் - ஓர் ஆய்வு

அ.மா.சாமி
நவமணிப் பதிப்பகம் வெளியீடு,
12, 2-வது பெருஞ்சாலை,
நகர வளர்ச்சிக் குடியிருப்பு,
சென்னை 600 004
விலை ரூ 130/)

மத்தளராயன் என்னும் இரா.முருகன்

பிரசுரம் கல்கி

1 Comments:

At 2:10 am, Blogger Venkat said...

முருகன் - எல்லாம் சரிதான். என் அபிமான பத்திரிக்கை "நற்கருணை வீரன்" பற்றி சாமி என்ன சொல்லியிருக்கிறார்?

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது