Monday, September 26, 2005

'பேனா' அப்புசாமி

பெ.நா.அப்புசுவாமி என்ற அறிவியல் எழுத்தாளர்

தலைப்பாகையும், பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி, பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில் , லா பாயிண்ட்தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர் சட்டம்படித்த பெ.நா.அப்புசுவாமி.

பாக்கியம் ராமஸ்வாமி சாஸ்வதமாக்கிய அப்புசாமித் தாத்தாவுக்கும் இந்த அறிவியல் தாத்தாவுக்கும் வயதும் துறுதுறுப்பும் தான் ஒற்றுமை.

1917 ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்தகட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை லகுவாகத் தாண்டும். (தள்ளாத பிராயத்தில் தான் எழுதிய படைப்பைப் பத்திரிகைக்கு அனுப்ப அஞ்சல் அலுவலகத்துக்கு நடந்தபோது தான் இந்த ஜாம்பவான் காலமானார் என்று எங்கேயோ படித்த நினைவு.)

படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமைதரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல்எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

1936ல் காற்றடைத்த ராட்சச பலூன்களில் நடத்திய விண்வெளியாத்திரை பற்றி எழுதியவர், துணைக்கோள் (ஜியோ ஸ்டேஷனரிசாட்டலைட்) பற்றி 1965ல் அதே உற்சாகத்தோடு எழுதுகிறார். 'பண்டித மோதிலால் நேருவைப் பறி கொடுத்தோமே' என்று கிராமபோனில் கேட்டு இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நெக்குருகிக் கொண்டிருந்த போது, அந்தப் பெட்டி எப்படிப் பாடுகிறது என்று படம் வரைந்து எளிமையாக விளக்கும் அப்புசாமி, நவீன அறிவியல் கோட்பாடான மேதமை அமைப்பு (எக்ஸ்பெர்ட் சிஸ்டம்) அடிப்படையில் இயங்கும் மின்னனு மொழிபெயர்ப்பு பற்றி 1960களின் இறுதியில் தமிழில் முதலாவதாக எழுதுகிறார்.

அது மட்டுமில்லை, "நாம் வாழும் யுகம் கம்ப்யூட்டர் யுகமாகி வருகிறது" என்று அவர் கணினிப் புரட்சிக்குஇருபது வருடம் முந்திய 1969 லேயே அறிவியல் ஆருடம் சொல்லிவிடுகிறார்.
கமிட்டி போட்டுக் கலந்தாலோசித்து நத்தை வேகத்தில் ன்று தமிழில்கலைச் சொல்லாக்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது. அப்புசுவாமி அலட்டிக்கொள்ளாமல் 'பொங்கியெழுகேணி' (artesian well), நுண்துகள்கொள்கை (corpuscullar theory), அறிவுக்குறி எண்(intelligent quotient) என்று போகிற போக்கில் நல்ல தமிழ்த் தொடர்களை வீசிப் பிரமிக்க வைக்கிறார்.

"வயிற்றோட்டமும் பலவீனமும் இருப்பின் அரை அல்லது ஓர் ஆழாக்கு சாராயம் தரலாம்" என்று கள்ளுக்கடை மறியல் காலத்தில் இவர் எழுதிய கட்டுரையும் சிறிய தரத்தில் பிரமிப்பை ஏற்படுத்துவது உண்மைதான்.இந்த வைத்தியம் மனிதனுக்கு இல்லை, நோய் கண்ட பசுமாட்டுக்கு.

புத்தகத்தை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கும் உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் பாராட்டுக்குரியது.

எழுதிய ஆசிரியரின் பெயரை ஓரத்தில் போட்டுவிட்டு, தொகுப்பாசிரியரின் பெயரை அட்டையில் நடுநாயகமாக அச்சிடுவதைத் தற்போது இலக்கியத்திலிருந்து அறிவியல்நூல் பதிப்பு வரை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த நூலும் இதற்கு விதிவிலக்கில்லை.
--------------------------------------------------

புத்தகம் பெ.நா.அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள்(தொகுதி - 2)

வெளியீடு - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை

கட்டுரை - இரா.முருகன் 2001
பிரசுரம் இந்தியா டுடே

2 Comments:

At 12:57 am, Blogger Boston Bala said...

---அறிவியல்எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே ---

:-)

--எழுதிய ஆசிரியரின் பெயரை ஓரத்தில் போட்டுவிட்டு, தொகுப்பாசிரியரின் பெயரை அட்டையில் நடுநாயகமாக ---

:-(

 
At 2:28 am, Blogger Venkat said...

பெ.நா.அ - என்னுடைய அரைடவுசர் காலத்து ஹீரோ. வாத்தியாரான என்னுடைய அப்பா "விஷயத்தைச் சொல்லித் தரப்ப சொல்றவனுக்கு ரொம்ப அதிகமா தெரியும் அப்படீன்னு பிரமிப்பு காட்டாம சொல்றது முக்கியம்" என்று சொல்வார். நான் முந்தா நாள்தான் படிச்சேன். ரொம்ப நல்ல விஷயம், நீங்களும் தெரிஞ்சுக்கங்களேன் - ரீதியில்தான் பெ.நா எழுதுவார். பேரூராட்சி நூலகத்தின் பின்கட்டில் உடைந்து போன நாற்காலிகளுக்கிடையில் சில சமயங்களில் நான் மூட்டைப்பூச்சிகளின் மேல், பல சமயங்களில் என் மேல் மூட்டைப்பூச்சி என்று "உணர்வுபூர்வமாக" பெ.நா-வைப் படித்ததெல்லாம் இன்னும் நினைவிலிருக்கிறது.

ஆமாம், அவர் "அப்புஸ்வாமி" இல்லையோ?

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது