Saturday, September 17, 2005

அரசாங்க வாத்து


அரசுத் துறை தொலைக்காட்சியில் மலையாளம் தூரதர்ஷன் கொஞ்சம் தூக்கலாக அரசாங்க வாசனை வீசுவது. சம்பளம் வாங்கினோமா, வேலையைச் செய்தோமா என்று அதது பழகிப் பதிந்த தடத்திலேயே நடக்க, திருவனந்தபுரம் குடப்பனிக்குன்னு தூர்தர்ஷன் கேந்திரத்தில் பிள்ளை, குறூப், நம்பியார், நாயர், நம்பூத்ரி வகையறாக்கள் கடியாரத்தைப் பார்த்து வேலை செய்து சாயந்திரம் மழை வரும்போது குடையைப் பிடித்துக் கொண்டு இறங்கிப் போகிற ஸ்தலம் இது.

ராத்திரிகளில் தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியாக - லைவ் ·போன் இன் - நிசாகந்தி என்று ஒரு பரிபாடி. சினிமாவையே பெரும்பாலும் நம்பி இருப்பது இது. மலையாளத் திரைப் பாடலில் முத்திரை பதித்த காலம் சென்ற வயலார் ராமவர்மாவின் மகனான சரத்சந்திர வர்மா போன்ற இளம் பாடலாசிரியர்கள், பூவச்சன் காதர் போன்ற பழைய பாடலாசிரியர்கள், சுவாமி என்று எல்லோராலும் பிரியமாக அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி போன்ற முதுபெரும் இசையமைப்பாளர்கள், லெனின் ராஜேந்திரன் போன்ற கலைப்பட இயக்குனர்கள் என்று அவ்வப்போது நிசாகந்தியில் வந்தாலும் மற்ற நாட்களில் சினிமாக்காரர்கள் யாரையாவது பிடித்து வந்து நிகழ்ச்சி நடத்தி முடிக்கிற அரசாங்க அலுப்பு தெரிகிறது.

இப்படி மாட்டிய விருந்தாளிகளிடம் தொலைபேசி உரையாடுகிறவர்கள் பெரும்பாலும் இவர்களுடைய பந்துமித்திரர்களும் நண்பர்களுமே. நீங்க சௌக்கியமா, உங்க வீட்டுலே எருமைக் கண்ணுக்குட்டி, மாமியார், மச்சினி சௌக்கியமா என்று போஸ்ட் கார்டில் எழுதிக் கேட்கிற சமாச்சாரங்கள் தான் பெரும்பாலும். அண்ணாச்சி, போன மாசம் என்கிட்டே கைமாத்தா வாங்கிட்டுப் போன நூத்துப்பத்து ரூபாயை எப்பத் திருப்பப் போறீங்க என்று எப்போது யார் யாரைப் பார்த்துக் கேட்கப் போகிறார்கள் என்று ஆவலாக எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

இது இருக்கட்டும். பாரப்புரத்து எழுதிய ஒரு கதை - யாத்ரயுடெ அந்தம். கே.சி.ஜியார்ஜ் அதை தூர்தர்ஷனுக்காக ஒரு நல்ல தொலைக்காட்சிப் படமாக்கினார் ஐந்தாறு வருடம் முன்பு. எம்.ஜி.சோமன், முரளி, கரமன ஜனார்த்தனன் நாயர் போன்ற நடிகர்களின் அற்புதமான நடிப்பில் மிளிர்ந்த படம் இது. திருவனந்தபுரம் தூரதர்ஷன் மகிழ்ச்சியோடு திரையிட, நல்ல திரைப்படங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். சந்தோஷம்தானே, அப்ப இன்னொரு தடவை பாருங்க. தூரதர்ஷன் திரும்பத் திரையிட்டது யாத்ரயுடெ அந்தம் படத்தை. மறுபடி மகிழ்ச்சி. அப்புறம் திருவனந்தபுரம் தொலைக்காட்சியில் யாருக்குத் தோன்றியதோ - யாத்ரயுடெ அந்தம் படத்தை ஒளிபரப்பினால் மலையாளபூமியில் மகிழ்ச்சி கரைபுரண்டோடும் என்று. இப்போதெல்லாம் மாதம் ஒருதடவையாவது படம் அந்தச் சானலில் வரத் தவறுவது இல்லை.

இது கூடப் பரவாயில்லை.

ஏழு வருஷத்துக்கு முன்னால் மத்தளராயன் இங்கிலாந்து போவதற்கு முன் ஞாயிற்றுக்கிழமை காலையில் தூர்தர்ஷனைப் போட்டால் பழைய மலையாளச் சினிமாப் பாட்டு நிகழ்ச்சி. ஜெயபாரதி வாத்து மேய்த்தபடி வாய்க்காலைக் கடக்க முற்படும்போது பாடிக் கொண்டே நனைவார். இங்கிலாந்திலிருந்து வந்து இங்கே கொஞ்சம் நாள் குப்பை கொட்டி விட்டு தாய்லாந்தில் அடுத்த வருடம் முழுக்க மசாஜ் செய்து கொண்டு திரும்பி வந்து டிவியைப் போட்டால் அதே ஜெயபாரதி, வாத்து, வாய்க்கால்.

அப்புறம் யு.எஸ், இங்கிலாந்து என்று துரைகளோடும் துரைசானிகளோடும் வருடக் கணக்கில் இழைந்து மறுபடி சென்னைக்கு வந்து ஞாயிற்றுக்கிழமை புலர்காலைப் பொழுதில் ரிமோட்டை அழுத்தி மலையாள தூரதர்ஷனுக்குப் போனபோது தெரியவந்தது யாதெனில், ஜெயபாரதியும் அவர் மேய்க்கும் வாத்துக்களும் இன்னும் வாய்க்காலைக் கடந்து அக்கரைக்குப் போகவே இல்லை.

(செப்டம்பர் 2003-ல் எழுதியது)

சில பின்குறிப்புகள் 17 sep 2005
-----------------
1) இரண்டு வாரம் முன்னால் தூர்தர்ஷன் மலையாளம் சானலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அதே வாத்துகள். அதே ஜெ.பா. அடுத்த வாரம் மீண்டும் பயணம் வைக்க ஏற்பாடு. போய் சாவகாசமாகத் திரும்பி வரும்போது வா மற்றும் ஜெ-பா அங்கேயே இருக்க என் மனம் நிறைந்த வாத்துகள்.

2) என் குட்டநாடு புகைப்படத் தொகுப்பில் ஒரு வாத்தும் இல்லாத காரணத்தால் விடிகாலையில் கூகுளிக்க, நிறைய ஜெயபாரதி புகைப்படங்கள் கிடைத்தன. காலைக் காப்பி பறிபோனது.

4 Comments:

At 11:04 am, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு,

இன்னும் இந்த 'அரசாங்க வாத்துக்களை' நான் பார்க்கலையே(-:

'இதா இவிட வரே' படத்துலேயும் மது ஒரு தாராவு கும்பலை ஒரு ஆறு/ஓடை வழியே கொண்டு போறது ஞாபகம் வருது.

க்வாக் க்வாக்

 
At 11:28 am, Blogger Thangamani said...

//விடிகாலையில் கூகுளிக்க, நிறைய ஜெயபாரதி புகைப்படங்கள் கிடைத்தன. காலைக் காப்பி பறிபோனது//

:))

 
At 12:05 pm, Blogger dondu(#11168674346665545885) said...

எண்பதுகளில் நான் தில்லியில் இருந்தபோது எப்போது சென்னைக்கு வந்தாலும் தூர்தர்ஷனில் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" படம் போடப்படும். அது இல்லாவிட்டால் கொங்கு நாட்டுத் தங்கம் போடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 2:54 am, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

"நெஞ்சத்தைக் கிள்ளாதே" படம் போடப்படும். அது இல்லாவிட்டால் கொங்கு நாட்டுத் தங்கம் போடுவார்கள்.
what a choice you had -:)

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது