Saturday, September 10, 2005

வாகன யோகம் - 1


அதென்னமோ ராசிபலன் எழுதுகிறவர்களுக்கு என் ராசி என்றால் இளப்பம். ‘மேற்கே அல்லது தென்கிழக்கில் பயணம்’ என்று அவர்கள் எனக்குப் பலன் கணித்து எழுதியிருந்தால், மேற்படி யோகம் தனியாக வந்ததாக சரித்திரமே இல்லை. கூடவே அலைச்சல், வீண் செலவு, சுகவீனம் என்று ஏகப்பட்டது முன்பாரம் பின்பாரமாக ஆஜராகி விடும்.

உடனடியாகக் கிளம்பி லண்டன் போகச் சொல்லித் தாக்கீது பிறப்பிக்கப்படுவதில் தொடங்குவது இது. டிக்கட் வந்து சேர்ந்தும் சோதித்தால் வாஸ்கோடகாமா, கொலம்பஸ், மார்க்கோ போலோ என்று உலகம் சுற்றிய அந்தக்கால வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் ஞாபகம் வருவார்கள். சென்னையிலிருந்து நேரடியாக லண்டன் போக என்று இல்லாமல், கொழும்பு, மாலத்தீவு, மான்செஸ்டர் வழியாக லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டுக்குப் போய்ச்சேர டிக்கட் எடுக்கப்பட்டிருக்கும். ஆகக் குறைந்த கட்டணத்தில் எடுக்கப்படுவதால் அலைந்து திரிந்து நொந்து நூலாகிச் சாவகாசமாகத்தான் இலக்கை அடைய வேண்டிய நிர்பந்தம்.

விமான நிலையத்தில் நுழைந்ததுமே தப்பான இடத்துக்கு வந்துவிட்டதாகத் துரத்தப்படலாம். ‘உன் மூஞ்சிக்கெல்லாம் பிளைட் ஒரு கேடா?’ என்கிற மாதிரித் துரத்தல் இல்லை இது. “விமான நிலையம் மாறி வந்திட்டீங்க சார்” என்று ஏர்போர்ட் வாசலில் காவல் இருக்கும் போலீஸ்காரர் என் பயணச் சீட்டைச் சோதித்து விட்டுச் சொன்னார் ஒரு முறை. சென்னையில் எனக்குத் தெரியாமல் ஏழெட்டு விமான நிலையம் எப்போது வந்தது என்று புரியாமல் அவரைப் பார்த்து டிரேட் மார்க் முழியோ முழி என்று முழித்தேன். இங்கே இருக்கிற கொச்சிக்கு விமானத்தில் போவதற்காக ஜம்பமாக சென்னை விமான நிலைய உள்நாட்டு டெர்மினலுக்குப் போய்ச் சேர்ந்தது என் தப்பு.
ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பி ஏழெட்டு நாடு கடந்து சென்னை, அப்புறம் கொச்சி என்று பறக்கும் விமானத்தில் டிக்கட் போட்டிருந்தார்கள். அந்த விமானத்தைப் பிடிக்க அதே சென்னை விமான நிலையத்தில் அமைந்திருக்கும் இண்டர்நேஷனல் டெர்மினலுக்குப் போகவேண்டும்.

மூட்டை முடிச்சோடு அங்கிருந்து இங்கே வியர்க்க விறுவிறுக்க ஓட்டந்துள்ளலாகச் சாடினேன். கவுண்டரில் இருந்த அதிகாரி, விமானம் ஏறப் போர்டிங்க் கார்டோடு, முழ நீளத்துக்கு ஒரு படிவத்தையும் நீட்டினார். வழக்கம்போல் அதில் அரைமுழம் இந்தி.

“இதைப் பூர்த்தி செய்து கொடுத்துக் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வாங்கினால்தான் வண்டி ஏறலாம்.”

பாரத்தைப் பார்த்தால், அதில் ஏகப்பட்ட கேள்விகள். எல்லாம் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல வேண்டிய ரகம். கையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருக்கிறீரா? முந்தாநாள் உமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டதா? தண்ணீரைக் காய்ச்சிக் குடிக்கிறீரா? மூக்கு நீளம் ஒண்ணேகால் அங்குலத்துக்கு மேலா, குறைவா என்பது போல் கேள்விகளுக்குச் சத்தியப் பிரமாணம் செய்து பதில் தர முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, “விமானம் கிளம்பத் தயாராக இருக்கு, போங்க ஏறிக்குங்க” என்றார்கள். நான் பள்ளிக்கூட இம்போஷிஷன் போல் எழுதிக் கொடுத்த பாரம் கேட்பாரற்று ஒரு மூலையில் எறியப்படுவதைப் பார்த்தபடி நகர்ந்தேன்.

இப்படியான கலாட்டா எல்லாம் முடிந்து செக்யூரிட்டி செக்-இன் என்னும் பாதுகாப்பு பரிசோதனைக்குப் போய் இரண்டு கையையும் விரித்து நின்றால், ஸ்கேனர் என்ற இரும்பு விசிறி மாதிர்¢யான ஒரு சமாச்சாரத்தால் உடம்பு முழுக்கத் தடவுவார்கள். குண்டு வைத்திருந்தால் அந்த ஸ்கானர் பீப்பீப் என்று அலறி, குண்டர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்பது என்னமோ சரிதான். ஆனால் எப்போது என்னைப் பார்த்தாலும் அந்தக் கருவிக்கு குஷி கிளம்பி விசிலடிக்க ஆரம்பித்துவிடுவதுதான் ஏனென்று தெரியவில்லை. அது கத்துகிறதே என்று காவலர் சந்தேகப்பட்டு என் கேசாதி பாதம் பரிசோதனை செய்தால், பேண்ட் பின்பக்க பாக்கெட்டில் எப்போதோ போட்டுத் தேடிக் கிடைக்காத ஐந்து ரூபாய் நாணயம் கிட்டும். அதைத் தடவிப் பார்த்துத்தான் ஸ்கானர் ‘இந்த ஆள் குண்டோ வேறே என்ன கருமாந்திரமோ வச்சிருக்கான்’ என்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டும்.

ஒரு தடவை ஹைதராபாத் விமானத் தளத்தில் சென்னை விமானத்துக்காகப் பாதுகாப்பு சோதனை. சட்டைப் பையில் இருந்த மொபைல் தொலைபேசியை முன் ஜாக்கிரதையாக அணைத்து வைத்திருந்தேன்.

"ஓண் இட்", பாதுகாப்புச் சோதனை செய்த காவலர் சொன்னார். ‘உன்னோடது தானா’ என்று விசாரிக்கிறார் போல் இருக்கிறது. உரிமையை எப்படி நிரூபிப்பது? அதை வாங்கி ஒரு வருடம் ஆகி விட்டதே. பில் எல்லாம் எங்கேயோ.
அவரிடம் இதைத் தயக்கத்தோடு சொல்ல, பலமாக மறுத்தபடி திரும்ப "ஓண் இட்".

‘என்னோடது தான். என்னோடது மட்டும் தான்’. துண்டைப் போட்டுத் தாண்ட யாரிடம் கடன் வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவரே வலுக்கட்டாயமாக மொபைலை வாங்கி, அதை இயக்கினார். திருப்தியோடு, “சரி போங்க” என்றார்.

சேட்டன் மலையாள உச்சரிப்பில் "on it" என்று சொல்லியிருக்கிறார், அவ்வளவுதான்.

"உங்க மொபைலை ஆன் பண்ணச் சொன்னாங்க. என்னோடதை ஆ·ப் செய்யச் சொன்னார் அந்தப் போலீஸ்கார அம்மா". பாதுகாப்புப் பரிசோதனை முடிந்து வந்த என் மனைவி சொன்னாள். “இப்படி இருந்தால் அப்படியும் அப்படி இருந்தால் இப்படியுமாக மாற்றச் சொல்லிச் சோதனை செய்வதற்குத்தான் அவர்களுக்குச் சம்பளம்” என்றேன்.

இதெல்லாம் கடந்து விமானத்துக்குள் நுழைந்தால், உபசரிக்க நிற்கும் ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி நம்மைப் பார்த்து இயந்திரகதியில் ஒரு சிரிப்பை உதிர்ப்பார். வரவேற்கிறார் என்று அர்த்தமாம். நம் போன்ற எகானமி கிளாஸ், அதாவது சிக்கன வகுப்பு பயணி என்றால் விமானக் கம்பெனிகளுக்குக் கொஞ்சம் இளப்பம்தான் என்று என் யூகம். இந்த இகனாமி கிளாசுக்கு, விமான ஊழியர் பரிபாஷையில் ‘கால்நடை வகுப்பு’ என்று பெயராம். இது தெரிந்தது முதல், விமானத்தில் ஏறியதும் ‘ம்மா’ என்றோ ‘மே’ அல்லது ‘மியாவ்’ என்றோ ஏர் ஹோஸ்டஸ¤க்குப் பதில் வணக்கம் சொல்ல ரொம்ப நாளாக ஆசை.

விமானத்தில் முன் இருக்கைகளாக சகல சொகுசோடும் கூடிய ‘எக்சிக்யூட்டிவ் கிளாஸ்’ என்ற ‘நிர்வாகி வகுப்பு’ இருக்கும். அதிகக் கட்டணம் செலுத்தி இந்த இருக்கைகளில் ஆரோகணித்துப் பயணம் செய்யும் மேட்டுக்குடியினருக்கு விமான ஊழியர்கள் விழுந்து விழுந்து செய்யும் உபசரிப்பு தனிரகம். ‘கால்நடை’கள் இதைப் பார்த்துப் பொறாமைப் பட்டு வெப்ப மூச்சு விடக்கூடாது என்ற கரிசனத்தில், விமானம் பறக்கும்போது திரையைப் போட்டு இந்த மேன்மக்களைத் தனிமைப் படுத்தி விடுவது வழக்கம்.

“அவனுக்கென்ன, சதா ஏராப்ளேன்லே பறந்துட்டிருக்கான்” என்று என்னைப் பார்த்து இதே ரக வெப்ப மூச்சை வெளியேற்றும் என் பந்து மித்திரர்களுக்கு, இந்தக் கஷ்ட புராணம் கொஞ்சம் நிம்மதியை அளிக்கலாம். அடிஷனல் நிம்மதி அடுத்த வாரம் தொடரும்.

(தினமணி கதிர் - சற்றே நகுக - 21 ஆகஸ்ட் 2005)

1 Comments:

At 10:56 pm, Blogger Vaa.Manikandan said...

நல்ல எழுத்து முருகன்.ஆனால் தினமனியின் ஆரம்ப "சூடு" கொஞ்சம் குறையற மாதிரி தெரியுது!

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது