Saturday, August 27, 2005

'ரேடியோ அண்ணா, மதறாஸ் நாலு'

“சங்கக் கூட்டம் போயிருந்தேன். பஸ் கிடைக்காமல் நடந்தே வரேன்”, மேல் மாடியில் குடியிருக்கும் ஆந்திராக்காரர் படியேறி வந்தபடி சொன்னார்.

மகாசபைக் கூட்டமாக இருக்கும். ராவ்காரு, ரெட்டிகாரு, ராஜுகாரு எல்லாரும் அந்தக் கால ஆஸ்டின், மோரிஸ் மைனர் கார் தொடங்கி புத்தம்புது கொரிய, ஜப்பான் கார் வரை சவாரி செய்து வந்து இறங்கியிருப்பார்கள். ஓட்டுப் போட்டுவிட்டு ரங்காராவ், ராமாராவ் மாதிரி கணீர் குரலில் நாட்டு நடப்பு பேசியிருப்பார்கள். அப்புறம் குண்டூர் மிளகாய் மணக்கும் கோங்குராவும், ஆவக்காயும், பருப்புப் பொடியும், புளிக்கீரையுமாக விருந்தெல்லாம் அமர்க்களப்பட்டிருக்கும். அந்த மிளகாயின் உச்ச எரிசக்தியில் ராக்கெட் போல் பறந்தே வந்திருக்கலாமே. பஸ் எல்லாம் எதற்கு?

சாப்பாட்டுக்காக இல்லையாம் கூட்டம். ரேடியோ அண்ணாவைச் சந்திக்கத்தானாம். ரேடியோவில் அந்த அண்ணகாரு - அன்னய்யா குழந்தைகள் நிகழ்ச்சி நடத்திய காலத்திலிருந்து இவர் அவருக்கு விசிறியாம்.

மேல்மாடிக்காரரை உற்றுப் பார்த்தேன். கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கும். இவர் ரேடியோவில் பாப்பா மலர் கேட்ட அந்த ஆறிலிருந்து இந்த அறுபதுவரை மேற்படி ரேடியோ அண்ணா சிரஞ்சீவியாக இருக்கிறாரா என்ன?

“பின்னே இல்லியா? அவருக்கு இப்போ நூறு வயசு. செஞ்சுரி போட்டாச்சு. ஸ்டில் கோயிங் ஸ்ட்ராங்”

நூறு வயது அண்ணாவும் அறுபது வயது குட்டித் தம்பி தங்கைகளும் பழைய நினப்புடா தாத்தாண்டி பழைய நினைப்புடா என்று கோஷ்டி கானம் பாடினார்களா? இல்லை ‘சந்தமாமா ராரா’ என்று மழலைக் குரலில் அறுபது வயதைக் கரைத்து விட்டு ஆனந்தமாக கமர்கெட் சாப்பிட்டார்களா? ஊதல், தொப்பி, குடை ராட்டின சவாரி எல்லாம் இருந்ததா?

நான் கேள்விப் பட்டியல் தயார் செய்வதற்குள் அவர் மூட்டைப் பிடித்தபடியே மாடியேறிப் போய்விட்டிருந்தார்.

போனவாரம் தான் வழிதவறி என்னிடம் வந்து சேர்ந்த கடிதம் ஒன்று வானொலி நேயர் சங்கத்துக்கு சந்தாவைப் புதுப்பிக்கச் சொல்லிக் கேட்டிருந்தது. அது ஓர் அன்னிய நாட்டு வானொலியைக் கேட்கிற ரசிகர்களின் சங்கம். நாற்பது வருடமாகத் தொடர்ந்து கேட்கிறார்களாம். அடுத்த வாரம் ஆண்டு விழாவாம். சந்தாதாரர்களுக்குக் குலுக்கல் முறையில் வெட் கிரைண்டர், மூணு அடுக்கு இட்லிப்பானை, லெதர் பை பரிசு எல்லாம் உண்டாம்.

ஒன்றில்லை, பத்தில்லை, நாற்பது வருடமாக வானொலி கேட்கிறார்கள். சின்னப்பையனாகக் கிட்டிப்புள்ளும் கோலியும் விளையாடும் பிராயத்தில் ரேடியோ லைசன்ஸ் கட்டி, இந்த அன்னிய நாட்டு வானொலியை ஒரு சுபயோக சுபதினத்தில் கேட்கத் தொடங்கியிருப்பார்கள். படிப்படியாக அடுத்த கிளாசுக்குப் பாஸ் ஆகி, கிரிக்கெட் காமெண்டரி கேட்டு, குரல் திடப்பட்டு, மீசை அரும்பும்போது இந்த வானொலி கேட்பதில் எந்த அசுவாரசியமும் தட்டாமல் இன்னும் கேள் என்று ஈர்த்திருக்கும். வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு, கிடைத்து, முதல் கருப்பு வெள்ளை டெலிவிஷன் பெட்டி வாங்கி ‘புரியலை பேச்சு உன்னோடது’ என்ற வினோதமான மொழிபெயர்ப்பில் ‘ஹம்லோக்’ சீரியல் பார்க்கும்போதும் அன்னிய நாட்டு வானொலி மீது விருப்பம் குறைந்திருக்காது. அப்புறம் வண்ணத்தில் சின்னத் திரை விரிந்து, சேனல் டிவி சீரியல்கள் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டாலும், இந்த வானொலி மீது பிரேமை தீவிரமாகத் தொடர்ந்திருக்கும்.

இங்கே ஒரு பிளாஷ்பாக் வைக்கலாம். நான் வானொலி கேட்டு வளர்ந்த கதைச் சுருக்கம்.

அப்போதெல்லாம் தீபாவளிக்குக் கூட நம்ம ஊர் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்னூர்காரர்கள் "வாங்க கண்ணுச்சாமி .. ஹெ.. ஹெ.. இன்னிக்குத் தீபாவளியாச்சே .. சாப்பிட்டீங்களா .. விதர்பாவிலே சர்க்கரைத் தொழிற்சாலையைத் திறந்து வைத்து உணவுப் பொருள் உற்பத்தியிலே நம்ம நாடு தன்னிறைவு அடையணும்னு நம்ம பிரதமர் பேசியிருக்காரே...படிச்சீங்களா" என்று நாட்டு நடப்பு விவாதிப்பார்கள்.

ஸ்ரீவைகுண்டத்தார் கொஞ்ச நேரம் கழித்து பக்க வாத்தியத்தோடு கர்நாடக சங்கீதக் கச்சேரி செய்வார். சாயந்திரம் வாசகர் கடிதம் படிப்பார். ராத்திரியில் அகில பாரத நாடகத்தில் "பிரிஜேஷ் சர்மா, உங்களைத் தூக்கித் தயிர்லே போடணும்" என்று எந்த மொழியிலும் சிரிப்பு வராத ஜோக் அடித்து, கெக் கெக் என்று சிரிப்பார். அவர் குரலின் பலத்தில் தான் உள்ளூர் வானொலியே நடந்தது என்று தோன்றுகிறது.

கரபுரா சத்தத்துக்கு நடுவில் ஞாயிறு பிற்பகலில் கிரிக்கெட் விளையாடப் போகாமல், ஒரு மணி நேர சினிமா ஒலிச்சித்திரம் கேட்ட அந்தக் காலத்தில் கூட அண்டை நாட்டு வானொலி என்றால் ‘வணக்கம் கூறி விடைபெறும்’ வரை சினிமாப் பாட்டுப் போடும் இலங்கை வானொலி மட்டும்தான். அங்கே ‘ஸ்ரீலங்கா பத்திரிகையை ஒழுங்காக வாசியுங்கள்’, ‘பம்பலப்பிட்டியா ஜவுளிக்கடையில் பாவிக்கும் புடவைகள் கிடைக்கும்’ என்று விளம்பரங்கள் வரும். அவற்றின் சுவாரசியம், ஒலிபரப்பான பாட்டுகளின் சுவைக்குச் சற்றும் குறைந்தது இல்லை.

அந்தப் பொற்காலத்தில், பொழுது போகாமல் நீளும் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் பகல் தூக்கத்தில் மும்முரமாக இருக்கும்போது ரேடியோவில் முள்ளை நகர்த்தி பாண்ட் சுவிட்ட்சைத் திருகிச் சோதனை செய்ய வாய்ப்புக் கிடைக்கும். பிபிசியில் வயதானவர்கள் என்னமோ நாளைக்கே உலகம் முடிந்து விடப்போகிறது என்பது போன்ற கவலை குரலில் தெரிக்க, ஹெட் மாஸ்டர் இங்கிலீஷில் நடுநடுவே உஸ் உஸ் என்று மூச்சு விட்டபடி பேசித் தள்ளுவார்கள். எப்போதாவது கவாஸ்கர் நூறு ரன் அடித்த ரன்னிங்க் காமெண்டரி துண்டு துணுக்காகக் காதில் வந்து விழும். வாய்ஸ் ஓஃப் அமெரிக்காவிலும் வெள்ளைக்காரர்கள் தான். இது கொஞ்சம் வித்தியாசமான உச்சரிப்பில் ரயிலையோ, பஸ்ஸையோ, சந்திரனையோ பிடிக்கப் போகிற வேகத்தில் இருக்கும்.

நாற்பது வருடமாகச் சங்கம் வைத்துக் கேட்கிறார்களே, அந்த வானொலி நிலையமும் அவ்வப்போது கையில் மாட்டும். கிய்ங்க் முய்ங்க் என்று நீள நெடுகப் பேசுகிறது தவிர சங்கீதம் எல்லாம் மருந்துக்குக் கூடக் கிடையாது. அங்கே தமிழிலும் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதுவும் பேச்சுத்தான். புரட்சி, திட்டம், வளர்ச்சி, ஏகாதிபத்தியம், நெல் விளைச்சல் என்று கொஞ்சம் மூக்கிலிருந்து தமிழ் பேசுகிறதைப் பத்து நிமிடத்துக்கு மேல் கேட்கப் பயம். எதிரி நாட்டு ரேடியோவைக் கேட்டால் போலீஸ் பிடித்துக் கொள்ளும் என்று யாரோ எச்சரித்து வைத்திருந்த காரணம்.

அந்த ஒலிபரப்பைக் கேட்டு யாரும் தேசப்பற்றைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அப்போதோ, இல்லை நாற்பது வருடம் கழித்து இப்போதோ கூடத் தோன்றவில்லை.

வெற்றிகரமாகத் தொடரும் அந்த வானொலி ரசனைக்கு இட்லிப் பானையும் லெதர் பையும் மட்டுமென்ன? கூடவே டிரான்சிஸ்டர் ரேடியோ, டேப் ரிக்கார்டர், டெலிவிஷன் பெட்டி எல்லாம் பரிசாகத் தரலாம். அதே அந்நிய நாட்டில் உற்பத்தியாகி, இங்கே கொட்டிவைத்து விற்கப்படுகிறவை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஆகஸ்ட் 7, 2005

2 Comments:

At 12:37 pm, Blogger ஜென்ராம் said...

நன்றி முருகன்..சற்று நேரம் எனது ரேடியோ அனுபவங்கள் குறித்த நினைவுகளில் மனம் இறங்கியது.

 
At 3:16 pm, Blogger தருமி said...

அந்தக் காலத்து ரேடியோ பொட்டியே படம் போட கிடச்சிருக்கு.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது