Sunday, August 07, 2005

பேசா நாளெலாம் பிறவா நாளே


நாலு பலகையை இழுத்துப் போட்டு ஜமுக்காளம் விரித்து ஏழெட்டு நாற்காலியைப் பரத்தி, ஈசான்ய மூலையில் ஒரு மைக்கையும் பிரதிஷ்டை செய்கிறதை எங்கேயாவது பார்த்தால் நழுவி விடுகிற வழக்கம் எனக்கு. பேசக் கூப்பிட்டு மேடையேற்றி விட்டால் என்ன செய்வது என்று ஒரு நடுக்கம்.

பேசுகிறதுக்கெல்லாம் சளைத்த ஆசாமி இல்லைதான். ஆனால் பேச ஆரம்பிப்பதற்கு முன் மேடையில் வெட்டியாக உட்கார்ந்திருப்பதில் தான் பிரச்சனையே.

மேடைக்குக் கீழே, மூன்றாம் வரிசை வலது கோடியில் உட்கார்ந்திருக்கிற பெண்மணி எதற்கோ சிரிப்பை அடக்கிக்கொண்டு என்னையே பார்க்கிறதுபோல் இருக்கே? தலை வாரும்போது சீப்பைத் தலையிலேயே செருகி வைத்தபடிக்கே வந்துவிட்டேனா?

மேடையில் உட்கார்ந்தபடி தலையைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டால், கீழே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? தும்மல் வந்தால் தும்மலாமா? மூக்கைச் சொரியலாமா? பக்கத்தில் இருக்கிறவர் ஆரம்பித்து வைத்த கொட்டாவியைத் தொடரலாமா? இப்படி சின்னதும் பெரிசுமாக ஆயிரத்தெட்டு உளைச்சல்.

போதாக்குறைக்கு,. மேடையில் அந்தக் கோடியில் உட்கார்ந்திருக்கும் பேச்சாளர் அவசரத்தில் கைக்குட்டையையோ, கைக்குழந்தையையோ, மூக்குக் கண்ணாடியையோ, தெர்மாஸ் பிளாஸ்கில் சுக்குக் கஷாயத்தையோ விட்டுவிட்டு வந்திருப்பார். அதைக் கர்ம சிரத்தையாக யாராவது கொண்டுவந்து நம்மிடம் கொடுத்து அவரிடம் சேர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட, அந்த மூலைக்கு கை கையாக மாற்றிக் கடத்திவிட வேண்டியிருக்கும்.

இந்தக் கஷ்டத்தை எல்லாம் கருதித்தான் மேடையேற வேண்டாம் என்று தீர்மானித்தது. ஆனாலும் சமயா சமயங்களில் இதுவும் தவறிப் போகும். எனக்கு நெருங்கிய நண்பர் ஒருத்தர் சமூக நலத்தில் ஆர்வம் மிகுந்தவர். அவரை வெளியூரில் பொதுக்கூட்டத்தில் பேசச்சொல்லிக் கூப்பிட்டிருந்தார்கள். "தனியாகப் போக என்னமோ போல இருக்கு, நீயும் வாயேன்"என்று என்னையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

பஸ் பிடித்து அவர் பேச வேண்டிய ஊரில் போய் இறங்கினோம். வாரச்சந்தை நடக்கிற தினம் போலிருக்கிறது. பக்கத்துத் திடலுக்குக் கூடை, பை சகிதம் போகிறவர்கள் வருகிறவர்கள் என்று ஏக நெரிசல். தக்காளி, மீன், சப்போட்டா பழம் என்று கதம்ப வாசனை.

தெரு ஓரமாக மேஜை போட்டு வைத்திருந்தது. மேடை எல்லாம் கிடையாது. கூட்டத்துக்கு அழைத்தவர் மேஜைக்கு அடியிலிருந்து கிளம்பி வந்து, ஒரு சின்ன சைஸ் மைக்கையும், குட்டியாக இரண்டு ஒலிபெருக்கியையும் எடுத்து மேஜையில் வத்தார்.

‘நம்ம சகலபாடி சிங்கப்பூர்லேருந்து வாங்கி அனுப்பிச்சிருக்கார்", பெருமையோடு பேட்டரியைப் பொருத்தி ஒலிபரப்பு சாதனங்களை இயக்கி, தாய்மார்களே பெரியோர்களே என்று எல்லோரையும் கூட்டத்துக்கு அழைக்க ஆரம்பித்துவிட்டார்.

அசந்துபோய் நின்ற எங்களை அப்படியே விடாமல், அடுத்த ஐந்தாவது நிமிடம் "மைக்கைப் பிடிங்க சார்" என்று நணபரிடம் கைமாற்றிவிட்டுப் பேசச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்.

நாலைந்து வாண்டுகளும், பொழுது போகாமல் சந்தைக்கடைப் பக்கம் வந்த சில பெரிசுகளும் முன்னால் நின்று பார்க்க, நண்பர் நடப்பது நடக்கட்டும் என்று திட சிந்தனையோடு சமுதாய முன்னேற்றத்துக்கான வழிமுறை பற்றிப் பேச ஆரம்பித்தார். பக்கத்தில் கையைக் கட்டிக்கொண்டு நான்.

அவர் மார்க்கெட்டில் மெகபோனைப் பிடித்தபடி கூவியழைத்து எலிப் பாஷாணம் விற்கிற மாதிரியும் நான் அவருடைய அசமஞ்சமான அசிஸ்டெண்ட் மாதிரியும் ரொம்ப நாள் கனவில் எல்லாம் அந்தக் காட்சி துரத்திக் கொண்டிருந்தது.

இது இப்படி என்றால், பேசுவதற்காக ஒரு சொற்பொழிவாளரைக் கூட்டி வந்த அனுபவம் இன்னும் விசித்திரம். அவரிடம் யாரோ சொன்னார்களாம், நான் இருந்த ஊரில் தாம்புக் கயிறு பிரபலம் என்று.

"ஆமா சார், இங்கே நாங்க நல்லாவே கயிறு திரிப்போம்" என்று பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி நின்றேன். "எனக்கு ஒரு தாம்புக் கயிறு வாங்கிவந்து கொடுத்திடுங்க" என்று கண்டீஷனாகச் சொல்லிவிட்டார்.

அவர் பேசுவதைக்கூடக் கேட்காமல் தாம்புக் கயிறு வாங்கப் போய்த் திரும்பி வந்தேன். மேடையில் ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று கம்ப ராமாயணத்தில் ராமன் ஜனகனின் வில்லை வளைத்ததைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நம்ம ஆள் என்னைப் பார்த்தார். அவர் கை மேலும் கீழும் போகிறது. வில்லை வளைக்கிற ஆக்ஷன் இல்லையே இது? கிணற்றில் தண்ணீர் இழுக்கிற மாதிரி இல்லையோ இருக்கு.

அட, நம்மிடம்தான் சைகையில் கேட்கிறார். தாம்புக்கயிறு வாங்கியாச்சா என்று. இது புரிந்து நான் ‘வாங்கியாச்சு’ என்று தாமதமாகத் தலையாட்டியபோது கூட்டம் முடிந்து விட்டிருந்தது.

சில சமயங்களில் மேடையில் நடப்பதைவிட, சுற்றி நடப்பது சுவாரசியமாக இருக்கும். பாலக்காட்டுப் பக்கம் இசை மேதை ஒருவரின் நினைவு சங்கீத உற்சவம். நாலு நாள் நடக்கும் இந்த விழாவில் தொடர்ந்து யாராரோ பாடியும், வாத்தியம் வாசித்தும் மறைந்த இசைமேதைக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். மேடை ஓரத்தில் மரமேஜை போட்டு ஒருத்தர் உட்கார்ந்திருந்தார். மடக்கிவிட்ட முழுக்கை சட்டையும், குறுந்தாடியும், எட்டு முழ வேட்டியுமாக மத்திய வயசுக்காரர். மேஜையில் அடுக்கி வைத்த ஒரு கத்தை காகிதங்களைச் சரி பார்ப்பதும், பக்கத்து ஸ்டாம்ப் பேடில் ரப்பர் ஸ்டாம்பை ஒற்றுவதும், முத்திரை குத்துவதும், அந்தப் பேப்பரை ஒவ்வொன்றாக பக்கத்து டிரேயில் போடுவதுமாக இருந்தார். பாட விண்ணப்பித்தவர்களின் படிவங்களாம் எல்லாம். பரிசீலித்து அவற்றை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதுமாகக் கடமையே கண்ணாகச் செயல்பட்ட அவரை எப்பேர்க்கொத்த கல்யாணியும், சஹானாவும், பைரவியும் எல்லாம் தொந்தரவு செய்ய முடியவில்லை.

மிருதங்க வித்துவான் கூடத் தாளம் தவறியிருப்பார். பாட்டுக்கு ஒத்தாசையாகக் காலப் பிரமாணத்தோடு கடுதாசி தவறாமல் முத்திரை குத்திய அந்தச் சேட்டன் செலுத்திய அஞ்சலி போல வருமா என்ன?

போன வருடம் தீபாவளி முடிந்து இரண்டு நாளைக்கு அப்புறம் நடந்த கூட்டத்துக்குப் போயிருந்தேன். கவிதைத் தொகுதி வெளியீடு. மேடையில் பேச்சு தொடந்தபடி இருக்க, பிளாஸ்டிக் தட்டில் காராபூந்தியும், மிக்சரும் நிறைத்து கூட்டத்துக்கு வந்த எல்லோருக்கும் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மேடையிலும் ஏறி ஒருத்தர் விநியோகத்தைத் தொடர்ந்தார். பேசிக் கொண்டிருந்தவர் முன்னும் ஒரு தட்டு நீட்டப்பட்டது.

கவிதையா காராபூந்தியா என்று தீர்மானிக்க அவர் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. நானாக இருந்தால் கவிதையை சந்தோஷமாக நிராகரித்து, மேடையிலிந்து விட்டு விடுதலையாகி, தட்டை வாங்கிக்கொண்டு கீழே இறங்கியிருப்பேன்.

(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - 24 ஜூலை 2005)

4 Comments:

At 2:25 am, Blogger Balaji-Paari said...

:))

 
At 3:49 am, Blogger ஏஜண்ட் NJ said...

சரியா ஞாபகம் இல்ல... ஒரு படத்துல... ர... ஒரு டயலாக் பேசுவாரு, "சைனாக்காரன் சூதாடாட்டி செத்துப்பூடுவான்; ...... நம்பாளு பேசாம இருந்தா செத்துப்பூடுவான்" அப்டீன்னு.

ஞானபீடம்.

 
At 3:45 pm, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு.

நம்முடைய தேசீய குணமே 'பேச்சு'தானே?

அதை எளிதா மாத்திக்க முடியுமா?

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 8:53 pm, Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அட, நம்மிடம்தான் சைகையில் கேட்கிறார். தாம்புக்கயிறு வாங்கியாச்சா என்று. இது புரிந்து நான் ‘வாங்கியாச்சு’ என்று தாமதமாகத் தலையாட்டியபோது கூட்டம் முடிந்து விட்டிருந்தது//

அருமை அருமை

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது