Sunday, July 24, 2005

சீன வேலை


சீனாவில் அரசாங்க வேலைக்கு ஆளெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே இதெல்லாம் எப்படி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. நம்ம ஊரிலே அரசாங்க வேலைக்கு அப்ளிகேஷன் போட்டால் அடுத்தாற்போல் நாடவேண்டியது அரசு உத்தியோகஸ்தரை. நோபல் பரிசு வாங்கிய அமார்த்தியா சென் வகுப்பெடுக்க முதல் பெஞ்சில் உட்கார்ந்து கேட்டுப் படித்துப் பட்டம் வாங்கியிருக்கலாம். ப.சிதம்பரம் படிக்கப்போன அதே ஹார்வார்ட் பல்கலைக்கழகம் திறமையை மெச்சி, டாக்டரேட் பட்டத்தைப் பளபள காகிதத்தில் அடித்து இந்தா பிடியென்று தூக்கிக் கொடுத்திருக்கலாம். அதெல்லாம் சர்க்கார் வேலைக்காகாது. அந்தப் பட்டத்தை லோக்கல் தாசில்தார் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும். அப்புறம், அதை நகல் எடுத்த காகிதத்தில் ரப்பர் ஸ்டாம்ப் குத்தி நீளமாகக் கையெழுத்துப் போட்டு அவர் அட்டஸ்டேஷன் செய்ய வேண்டும். இல்லையா, நாலெழுத்துப் படித்ததாக, வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி இருப்பதாக அரசாங்கம் லேசில் ஒத்துக்கொள்ளாது.

சீன அரசாங்க வேலைக்கு இந்தக் கஷடம் எல்லாம் இருக்காது என்று நம்புவோம். கம்ப்யூட்டர் பணி. இணையம், அதான் இண்டர்நெட் சம்பந்தப்பட்ட உத்தியோகம். வேலை இதுதான்.

சீனாவில் இண்டர்நெட் உபயோகம் கன்னா பின்னாவென்று பெருகி விட்டதாம். சீனர்கள் சமர்த்தாக இண்டர்நெட்டில் சினிமா நடிகை படம் பார்த்துக் கொண்டு இருக்கலாகாதோ. அல்லது ஆறு வருஷம் வெற்றிகரமாகத் தொடர்ந்து நேயர்களை ராத்திரிகளில் அழ வைக்கும் சின்னத்திரை சீரியலில், ஏழு பெண் பெற்ற குடும்பத் தலவர் திடீரென்று சாகடிக்கப்பட்டது கதையை என்ன விதத்தில் பாதிக்கும் என்று இணையத்தில் விவாதம் செய்து பொது அறிவை வளர்த்துக் கொள்ளலாமே.

இதெல்லாம் செய்கிறார்களோ என்னமோ, ஏகப்பட்ட சீனர்கள் இண்டர்நெட்டில் வலைப்பதிவு என்று அவரவருக்குச் சொந்தமாக தகவல் பதிந்து வைக்க இடம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிளாக் என்று அழைக்கப்படும் இந்த இண்டர்நெட் பரப்புகளில் அவர்களில் பலர் நித்தியப்படிக்கு, சீன அரசாங்கத்தை காட்டமாக விமர்சித்து எழுதித் தள்ளுகிறார்கள்.

இண்டர்நெட்டில் எழுதுகிற சீனாக்காரர்கள் எல்லாம் அரசாங்கத்தில் பதிந்து அனுமதி வாங்கி அப்புறம் தான் எழுதவேண்டும் என்று கட்டுப்பாடு கொண்டுவரலாமா என்று சீன அரசு யோசித்தது. கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பத்துக் கோடி சீனர்களுக்கு இப்படி ரேடியோ லைசன்ஸ் போல் அச்சடித்துக் கொடுத்து, யார் எங்கே எப்போது என்ன எழுதுகிறார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணெயோ, பாம்பு, தவளை எண்ணெயோ விட்டுக்கொண்டு கண்காணிப்பது உலகமகா சிரமமானது என்று புரியவந்தது. இது சரிப்படாது என்று யோசனையைக் குப்பையில் கடாசி விட்டார்கள்.

இப்படி இண்டர்நெட்டில் எழுதித் தள்ள இடம் ஏற்படுத்தித்தரும் பிரபல கம்பெனிகளை அணுகிக் கோரிக்கை விடுக்கலாமா என்று அடுத்த யோசனை. அந்தக் கம்பெனிகளும் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார்கள். ரொம்ப சுலபமான காரியம் தான் அவர்கள் செய்ய வேண்டியது. எந்த சீனனாவது அல்லது சீனப் பெண்ணாவது தன்னுடைய இண்டர்நெட் வலைப் பதிவில் ஜனநாயகம், சீன அரசாங்கம், பிரதமர் டெங்-சியோ-பிங்க் என்றெல்லாம் எழுதினால் அந்த வார்த்தையை உடனே கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி எழுதியதை இண்டர்நெட்டில் போட அனுமதிக்கக் கூடாது. அப்போது, எதிர்ப்பாளர்களின் கொட்டம் அடங்கிவிடும் இல்லையா?

ஊஹும். இதுவும் சரிப்படாது என்று சீன அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயகம் என்ற சொல் இண்டர்நெட்டில் எழுதினால் தப்பு என்றால், அதற்குப் பதிலாக இன்று முதல் வெங்காயம் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவது என்று கோடிக் கணக்கான சீனர்கள் முடிவு செய்துவிட்டால் என்ன ஆகும்?

“சீனாவில் ஜனநாயகம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள்தான் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. ஜனநாயகப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்பட வேண்டும்” என்று எழுதினால் தானே பிரச்சனை? அதையே, “சீனாவில் வெங்காயம் பெருத்த அபாயத்தில் இருக்கிறது. சீன அரசாங்கம் இன்னும் எத்தனை நாள் தான் வெங்காய விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமோ தெரியவில்லை. வெங்காயப் பாதுகாப்பு இயக்கம் நாடு முழுவதும் உடனே தொடங்கப்ப்பட வேண்டும்” என்று எழுதினால் தீர்ந்தது எழுதுகிறவர்களின் பிரச்சனை. அரசாங்கத்துக்கோ, வெங்காய - ஜனநாயகத் தலைவலிதான் இன்னும் அதிகமாகும்.

ரொம்பவே யோசித்து சீன அரசாங்கம் கண்டுபிடித்த வழிதான் வெங்காயத்தை வெங்காயத்தால், அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது. இண்டர்நெட்டில் அரசாங்கத்தை விமர்சித்து எழுதுகிற சீனர்களை எழுத விட்டுவிடலாம். அவர்கள் எழுதும்போது பதில் போட்டு விவாதம் செய்ய பத்துப்பேர் வருவார்கள் இல்லையா? இங்கே தான் கவர்மெண்ட் நுழைகிறது.

அரசாங்கம் பணியில் அமர்த்திய உத்தியோகஸ்தர்கள் ஜரூராக இந்த மாதிரி இண்டர்நெட் விவாதங்களில் புனைபெயர்களில் பங்கெடுப்பார்கள். விவாதிக்கப்படும் விஷயத்தை சாமர்த்தியமாக மாற்றி பிரச்சனை இல்லாமல் ஆக்குவதற்குத்தான் இவர்களுக்குச் சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி. காரசாரமாக சீன அரசாங்கத்தை யாராவது விமர்சித்தால் அங்கே இவர்கள் பதில் எழுதும்போது சீனாவில் பத்தாண்டுகளில் நெல் விளைச்சல் பதினேழு புள்ளி நாலு சதவீதம் அதிகரித்துள்ளது என்று நட்போடும் தோழமையோடும் எழுத வேண்டும். சீனப் பிரதமர் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறார் என்று இன்னொரு சீனர் எழுதி வைத்து, நாலைந்து பேர் அதற்கு ஆமாம் போட்டால், இந்த அரசாங்க உத்தியோகஸ்தர் நடுவில் புகுந்து, சீனாவில் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றி, முட்டைக்கோசு உற்பத்தியில் தன்னிறைவு பற்றி உற்சாகமாக எழுத வேண்டும்.

ரொம்ப நாள் முன்னால் ஆர்.கே நாராயண் ‘கவர்ன்மெண்ட் ம்யூசிக்’ (‘சர்க்கார் சங்கீதம்’) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். மத்திய சர்க்கார், சங்கீதத்தில் அரசுப் பிரச்சாரத்தைப் புகுத்தினால் என்ன ஆகும் என்று ஜாலியான கற்பனை அது.

முக்தி கொடு ஆண்டவா என்று பக்தி ரசம். கண்ணன் வருவானோடி தோழி என்று காதலில் உருகுவது. இவை பற்றிய ரொட்டீன் கீர்த்தனமெல்லாம் சரிதான். அவற்றோடுகூட, ஐந்தாண்டு திட்டம், கனரகத் தொழில் முன்னேற்றத்தின் அவசியம், நிலத்தில் சல்பேட் உரம் போடுவது போன்ற விஷயங்களைப் பற்றியும் ராகம், தானம், பல்லவியோடு புதுப்பாட்டுப் பாட வித்துவான்கள் ஊக்குவிக்கப் படுவார்கள். சங்கீதக் கச்சேரி நடக்கும்போது ரசிகர்கள் தூங்கினால், சர்க்கார் உத்தியோகஸ்தர் கச்சேரியை நிறுத்தி, மைக்கைப் பிடுங்கிக் கொள்வார். “எழுந்திருங்கள். இது ஊக்கத்தோடு செயல்பட வேண்டிய காலம். சங்கீதத்தைக் கேட்டு நாட்டை முன்னேற்றுவது நம் எல்லோரின் தலையாய ஜனநாயகக் கடமை” என்று அறிவித்து விழிப்புணர்ச்சியை உண்டாக்குவார். இப்படிப் போகும் ‘சர்க்கார் சங்கீதம்’ கட்டுரை.

சீன அரசாங்கத்தின் இண்டெர்நெட் ஊழியர்கள் இதுவும் செய்வார்கள், இதுக்கு மேலும் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

இரா.முருகன் - 'சற்றே நகுக' பகுதி - தினமணி கதிர் 4 ஜூலை 2005

1 Comments:

At 5:03 pm, Blogger dondu(#11168674346665545885) said...

இரா முருகன் அவர்களே,
நீங்கள் சீனாவில் நடக்கப் போவதாகக் கூறுவது இந்தியாவில் ஏற்கனவே ஆரம்பித்து விட்டதென்று நம் சகவலைப்பதிவர் ஒருவர் பதிவு ஒன்றைப் போட்டு விட்டார். யார் அவர் என்பதெல்லாம் இங்கே வேண்டாமே. அது உண்மையா பொய்யா என்பது கூட யோசிக்க வேண்டிய விஷயமே.

"சரி இந்தப் பதிவில் ஒரு சின்ன எச்சரிக்கை மணி அடிக்கலாம் என்னும் எண்ணம் தான். இனக்குழுக்கலாக கூடிப் பேசும் இடங்களில் எல்லாம் அரசாங்க காவல் நாய்கள், கூட்டத்தோட கூட்டமா ஜோதியில் கலந்து ஆள் அடையாளம் கண்டு கொள்வது என்பது பழைய நிகழ்வு.
soc.culture காலங்களில் இருந்து வரும் நிகழ்வு இது. sao.culture.tamil ல் ஈழ ஆதரவு கடிதங்களை எழுதிய ஒரே காரணத்துக்காக, வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் தணிக்கை செய்யப்பட்டும், தந்தை SITயினரால விசாரனை என்ற பெயரில் இழுக்கப்பட்டதும் அவமானப்படுத்தப்பட்டதும் உண்மை நிகழ்வு. இன்னமும் இந்திய அரசாங்க நாய்களுக்கு கருத்து சுதந்திரம் என்றால் என்ன என்பதன் அர்த்தமே தெரியாது. ஜெர்மன் மொழி
பேசுகிறவன் பிரன்சு பேசுகிறவன் என்று வேறு உண்மையிலேயே உருப்படியான காவல் நாய் உத்தியோகத்து தேவையான திறமை இருந்தும் கல்யாண வீட்டு வாசல் சோறு பொறுக்க வெல்லாம் விடுவான்கள். (retirement வேலையாகக் கூட இருக்கலாம்) தவிர்ப்பது எளிதோ எளிது. வெகுண்டு எழுந்து உருப்படியான பதிவுகள் கொடுக்கலாம். எல்லோருக்கும் நல்ல புரிதல் கிடைக்கலாம். ஆனால் ip address போன்ற ஆள் அடையாளம் காட்டும் விடயங்களை இவர்கள் இடத்தில் விடுவதை தயவு செய்து தவிர்ங்கள். நேரில் சந்திக்கும் கூட்டங்களை தவிருங்கள். அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட இடத்தில் கூட ஒரளவிற்கு ( ஓரளவிற்குத் தான் ) privacy act உதவும். அதாவது இந்திய காவல் நாய்கள் கேட்டால் எல்லாம் blogger.com உங்கள் விவரங்களை "அவ்வளவு சீக்கிரம்" கொடுத்து விடாது. ஆனால் மற்ற தளங்களோ ஆட்களோ அவ்வாறு அல்ல. இந்த எச்சரிக்கை இந்திய அல்லது இலங்கை அரசாங்கங்கள் செய்வதெல்லாம் பைபிளோ, குரானோ, கீதையோ, (டோல்முத்து வையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் போலுள்ளது) படி நடக்கின்றது என்று நம்பும் பரமார்த்தகுரு சீடர்களுக்கு இல்லை. மற்றபடி happy blogging. நன்றி."

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது