Saturday, July 02, 2005

குஞ்ஞன் நம்பியாரின் குடமிழா


கேரளத்தில் குட்டநாடு பிரதேசத்தில், ஆலப்புழைக்கு அடுத்த அம்பலப்புழைக்குப் போயிருந்தேன். ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை. அங்கேயும் முன்னோர்கள் இருந்தார்கள். அவர்கள் மூச்சு பதிந்த காற்றும், வெறும் காலோடு நீள நெடுக தேகண்டம் என்ற சமையல் தொழில் பார்க்க நடந்த மண்ணும், கூடிப் பிணங்கிப் பிரிந்து சேர்ந்து மகிழ்ந்து, வருந்தி தலைமுறைகளாகக் கழித்த, சிறு வாழ்க்கையின் எச்சமான நினைவுகளும் எனக்காகக் காத்திருக்கும் என்ற நப்பாசைதான். அடுத்த நாவலுக்கு அவை எல்லாம் வேண்டும். கிடைக்காத பட்சத்தில் என்ன போச்சு? மனம் தானே உருவாக்கிக் கொள்ளும்.

அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவில். படிஞ்ஞாறே நட என்னும் மேற்கு வாசலிலிருந்து கோயிலுக்குள் நுழைகிறேன். கண்ணில் படுவது களித்தட்டு. ஓலை வேய்ந்த ஒரு பெரிய மண்டபம். நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான முரசு. அதற்குக் குடமிழா என்று பெயர். ஓட்டந்துள்ளலை உருவாக்கிய மலையாள மகாகவி குஞ்ஞன் நம்பியார் முன்னூறு வருடம் முன்னால் வாசித்த மிழா அது.

பாலக்காட்டுப் பக்கம் கிள்ளிக்குரிச்சிமங்கலத்தில் பிறந்து, இசையில் தேர்ச்சி பெற்ற நம்பியார் கோவில் ஊழியம் செய்யும் இளைஞராக, வழிபாட்டுச் சடங்கில் மிழா வாசித்துக் கொண்டிருந்தபோது அசதியால் சற்றே கண்ணயரவே, பக்கத்தில் கூட்டமாகப் பரிகசித்திருக்கிறார்கள். அப்போது இறங்கிப் போனவர் தான் அவர்.

குட்டநாடு பிரதேசத்தில் தகழி, பம்பையாற்றைக் கடந்து ஹரிப்பாடு, கருமாடித்தோடு, நெடுமுடி என்று அலைந்து திரிந்தபோது அவர் மனதில் ஒரே ஒரு எண்ணம் தான். தான் இறங்கி வந்த அதே அம்பலப்புழை கோவிலில் எல்லோரும் பாராட்டத் தன் திறமையை அரங்கேற்ற வேண்டும்.

எதை அரங்கேற்ற? கதகளியா? நுணுக்கமாகப் பயில வேண்டும். நிகழ்த்திக் காட்டக் குழு வேண்டும். சாக்கியார் கூத்து? வடமொழிப் புலமை வேண்டும். கூத்து என்ற பெயர் இருந்தாலும், வாய் வார்த்தையின் பலத்தில் நிற்பது. நம்பியாருக்கு அது போதாது.

திடம்பு நிருத்தம்? ஆட்டம் மட்டும்தான். முகத்தில் எந்த வித பாவபேதமும் தட்டுப்படாமல், தலையில் திடம்பு என்ற தெய்வச் சின்னங்களை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம். கோவில் பூரம் உற்சவத்தின்போது யானைகள் அலங்காரமாகச் சுமந்து வரும் திடம்புகளை, திடம்பு ஆட்டத்தில் தலையில் ஏற்ற நம்பூதிரிகளுக்கு மட்டுமே உரிமை.

குஞ்ஞன் இந்த ஜன்மத்தில் நம்பூதிரியாக முடியாது. எல்லாம் கழித்துக் கட்டினால், எதை அரங்கேற்ற?

யோசித்துக் கொண்டே குஞ்ஞன் நம்பியார் வந்து சேர்ந்த இடம் துரோணப்பள்ளி. அங்கே கன்னடத்து உடுப்பிக்காரர் ஒருவர் இளைஞர்களை ஈர்த்துக் கொண்டிருந்தார் அப்போது.

உடுப்பி, துளுக்காரர்கள் காலகாலமாகக் கேரளக் கோயில்களில் மேல்சாந்தி, தந்த்ரி என்று அர்ச்சகர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் துரோணப்பள்ளி நாயக்கர் கொஞ்சம் வித்தியாசமானவர். கேரள வீரவிளையாட்டான களரியை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கக் களறிப் பள்ளி நடத்திய அவர் துரோணப்பள்ளி சம்பிரதாயம் என்ற களரிப்பயிற்று முறையையும் உருவாக்கியவர்.

துரோணப்பள்ளி நாயக்கரிடம் களரியும், மாத்தூர் பணிக்கர் என்ற படைத்தலைவரும், கலைஞருமாக இருந்த இன்னொரு குருவிடம் ஆட்டக் கலையும் படிக்க ஒரே நேரத்தில் வாய்த்தது குஞ்ஞன் நம்பியாருக்கு. இந்த இரண்டும் அடிப்படையாக அமைய மரபுக் கலையான கதகளியையும், நாட்டார் கலையான கூத்தையும் இணைத்து ஒரு நிகழ்கலையை உருவாக்க நம்பியார் முடிவு செய்தார். கூடவே அவரிடம் இயல்பாக இருந்த கவிதை உணர்வும், நகைச்சுவையும் நாங்களும் வருகிறோம் என்று சேர்ந்து கொண்டன.

சமூக அவலங்களைக் கிண்டல் செய்வதற்கும், அவை பற்றிய பிரக்ஞையைப் பொதுமக்கள் மத்தியில் விதைப்பதற்குமாக பாட்டும், ஆட்டமுமாக இப்படித்தான் எழுந்து வந்தது ஓட்டந்துள்ளல். தான் மனதில் உறுதி செய்திருந்ததுபோல், குஞ்சன் நம்பியார் முதன்முதலில் ஓட்டந்துள்ளலை அரங்கேற்றியது அம்பலப்புழ ஸ்ரீகிருஷ்ணன் அம்பலத்தில் தான்.

ஆனால் அப்போது கோவிலின் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன. குஞ்ஞன் நம்பியாரின் கூத்து 'அம்பலத்தை அசுத்தப் படுத்திவிடக்கூடாது' என்பதற்காக அரச கட்டளை பிறப்பித்துப் பூட்டியிருந்தார்கள்.

அந்தக் கதவுகள் பிற்பாடு குஞ்ஞனை அங்கீகரித்து விரியத் திறந்தன. இடுப்பில் கம்பீரமாகத் தரித்த அம்பலப்புழைக் கோணகமும், தொடர்ந்து முழங்கும் மத்தளமும், மிழவுமாக நம்பியார் மகாபாரதத்தில் கல்யாண சௌகந்திகம் ஆடியபோது, நைவேத்தியமான அம்பலப்புழை பால்பாயசத்தைச் சாவகாசமாகக் குடித்துக் கொள்ளலாம் என்று தள்ளிவைத்து விட்டு, கண்ணபிரானே வந்திருப்பான்.

குஞ்ஞன் நம்பியாரின் மிழா வைத்த களியரங்கைப் பார்த்தபடி அம்பலப்புழை கோவில் நடையில் நின்றிருந்தேன். நான் தேடிவந்த என் வேர்களில் ஏதானும் ஒன்று குஞ்ஞன் நம்பியாரையும், அந்தப் பழைய மிழாவையும் சுற்றிப் படர்ந்து அப்பால் போயிருக்கலாம்.

மிழாவை ஒரு விநாடி தொட்டு உணரவேண்டும் என்று ஆவல் உந்த முன்னால் போனேன். 'மண்டபத்தில் பிரவேசிக்க வேண்டாம். சிதிலமடைந்துள்ளது' என்று எழுதி நிறுத்திய அறிவிப்புப் பலகை எச்சரித்தது.

அடுத்த முறை அம்பலப்புழை போகும்போது குஞ்ஞன் நம்பியாரின் மிழா வைத்த மண்டபம் இருக்குமா என்று தெரியவில்லை. இல்லாதுபோனால் என்ன? அதையும் உருவாக்கிக் கொள்ளலாம் தான்.

3 Comments:

At 12:06 am, Blogger ந. உதயகுமார் said...

முருகன்,

Nostalgic!! நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்!!

- உதயகுமார்

 
At 1:12 am, Blogger Voice on Wings said...

பல அறியாதத் தகவல்களை அளித்திருக்கிறீர்கள். மண்டபம் சிதிலமடைந்த செய்தி வருத்தமானதே. மரபுகளைப் பேணுவதில் நாம் இன்னும் கவனம் கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.

 
At 5:42 am, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு

எங்களையும் 'அம்பலப்புழை'க்குக்
கொண்டுபோனதற்கு மிகவும் நன்றி!

என்றும் அன்புடன்,
துளசி.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது