Sunday, May 15, 2005

கதகளியும் மர-ஸ்டூலும்

கதகளி ஆட்டத்தில் ஒரு சிறிய அரங்கை எவ்வளவு எளிதாக மிகப் பெரிதாகத் தோற்றமளிக்கச் செய்கிறார்கள் என்பது வியப்புக்குரியது. மேடையில் பின்னணியில் செண்டை, மத்தளம், தாளம் என்று வாத்தியக்காரர்களும் பாட்டுக்காரர்களும் அணிவகுத்து நிற்க, கதாபாத்திரங்கள் நடமாடும் இடம் இன்னும் குறுகிப் போய்விடுகிறது. இருந்தாலும் பார்வையாளர்களின் கற்பனையில் நம்பிக்கை வைத்து சில அசாதாரணத் தோற்றங்களை உருவாக்க அந்தக் கலைஞர்களால் முடிகிறது.

எதையும் பட்டவர்த்தனமாகச் சொன்னால்தான் பார்வையாளனுக்குப் புரியும் என்பது நம்ம ஊர் மனநிலை. கோஷிஷ் என்ற இந்திப் படம் (இது கூட ஒரு ஜப்பானியப் படத்தின் பாதிப்புத்தான்) குல்சார் உருவாக்கத்தில் இந்தியில்வெளிவந்தது. கணவனும் மனைவியுமாக இரண்டு பேருமே செவிட்டு ஊமைகள். இவர்களுக்குப் பிறந்த குழந்தை குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்ப்பார்கள்.

குழந்தைக்கு முன் ஒரு கிலுகிலுப்பையை அசைக்க, குழந்தை சலனமற்றுப் பார்த்தபடி இருக்கும். முகத்தில் ஏமாற்றம் கவியபெற்றோர், குழந்தையும் நம்மைப் போலத்தான் என்று தீர்மானிக்கும்போது கணவன் கிலுகிலுப்பையைப் பிரித்துப் பார்ப்பான். உள்ளே சிறிய கூழாங்கல்லோ, மணியோ எதுவும் இல்லாமல் வெறுமையாக இருக்கும் அது. ஒலிஎழுப்பாத கிலுகிலுப்பை என்பதால் குழந்தை சத்தம் கேட்டுத் திரும்பவில்லை என்று அறிந்த மகிழ்ச்சியை எந்த வித வசனமும் இன்றி சஞ்சீவ் குமாரும் ஜெயாபாதுரியிம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இதே படம் தமிழில் கமல், சுஜாதா நடித்து வெளிவந்தபோது, கதாநாயகன் ஒரு அபிநயத்தை வெளிப்படுத்தினால், அது என்ன என்று உரக்கச் சொல்லி அப்படியா என்று கேட்பார்கள். பாதிப்படத்தில் பிய்த்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வந்துவிட்டேன். கோஷிஷ் இருக்கட்டும், கதகளிக்குத் திரும்பலாம்.

கதகளி மேடையில் கவனித்துப் பார்த்தால் இரண்டு ஸ்டூல் இருக்கக் காணலாம். சும்மாக் கால் வலித்தால் கதாபாத்திரங்கள் உட்கார இல்லை அது. முனிவர்களோ, அரசர்களோ, தெய்வங்களோ ஆசி அருளும்போது அந்த ஸ்டூலில் உட்கார்ந்து மற்ற பாத்திரங்கள் அவர்களுக்கு முன்னால் தொழுது நிற்பார்கள்.

மகாபாரத யுத்தம் காட்சி என்றால், பீமன் ஜராசந்தனை வதைப்பதற்கு முன் நடக்கும் சண்டையில் ஸ்டூல் ஒரு ஆயுதமாகும். பின்னணியில் செண்டை உச்சத்தில் முழங்க, ஸ்டூலைத் தூக்கி அடிக்க வருவதாகப் பாவனை காட்டும்போது அந்த ஸ்டூல் மறைந்து பீமன் கதை தான் மனதில் வரும்.

அது மட்டுமில்லை. பாண்டவர்களுக்காகத் துரியோதனிடம் தூது போன கண்ணனோ, இலங்கையில் சீதாபிராட்டியைத் தேடிப் போன அனுமனோ, தக்க நேரத்தில் தங்கள் முழு வலிமையை - விச்வரூபம் போல்- காட்ட ஸ்டூலில் ஏறி நின்றால் போதும். முக முத்திரைகளும், கை அபிநயமும் மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்த ஸ்வரூபத்தை நம்மைக் கற்பனையில் காண வைத்து விடும்.

அதே போல், பிரகலாதனை மலையுச்சியிலிருந்து ஹிரண்யகசிபு உருட்டி விட உத்தரவு கொடுத்ததும், பிரகலாதன் ஏறுவது ஸ்டூலில்தான். பின்னால் நின்று இரண்டு சேவகர்கள் பிடித்துத் தள்ள அவர்கள் தான் விழுவார்கள். பிரகலாதன் புன்சிரித்தபடி நிற்பான்.

கதகளி பார்க்க வரும் மக்கள் கூட்டம் சாதாரணர்களிலிருந்து நடுத்தர வர்க்கம் வரையானது. இவர்களில் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் அதிகமாக இருக்க முடியாது. ஆனாலும், பார்வையாளர்களின் ஊகத்துக்குச் சிலவற்றை விட்டகாட்சியமைப்பு புத்திசாலித்தனமானது.

கதகளியில் ராமாயணக் கதை பார்க்கும்போது சின்னச் சின்னதாக மெருகேற்றியிருப்பதைப் பார்த்தேன். அசோகவனத்தில் சீதையைத் தரிசித்த அனுமன், பிராட்டி கொடுக்கும் கணையாழியைக் கையில் வாங்கும் முன், ஒருதுண்டுத் துணியால் தன் கைகளைத் துடைத்துத் தூய்மைப் படுத்திக் கொள்வது இம்மாதிரி ஒன்று.

பாட்டுகள் மூலம் ஆட்டக்கதையை நகர்த்தி முன்னேறும்போது, அங்கங்கே, செண்டை மட்டும் பின்னணியில் ஒலிக்க, கர, முக முத்திரைகளால் பாத்திரங்கள் உரையாடுகிறார்கள்.

சூர்யா நியூஸ் சானலில் இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒரு வரி எழுதிக்காட்டி அந்த அபிநயம் என்ன என்று சொல்கிறார்கள். இது பழகிய பிறகு முத்திரைகள் எளிதில் புரியும். எழுதிக் காட்டுவதும் குறைந்து போகும்.

சூர்யா நியூஸ் கதகளிக்குச் செய்வதை சன் நியூஸ் தெருக்கூத்துக்கும், பாகவதமேளாவுக்கும், அரையர் சேவைக்கும் செய்யலாமா என்று நண்பர் மாலனை விசாரிக்க வேண்டும்.

(Feb 2004)

1 Comments:

At 2:12 am, Blogger jeevagv said...

சுவையாக இருந்தது, நன்றி.

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது