Sunday, February 13, 2005

மாம்பலம் டைம்சும் மைலாப்பூர் வக்கீலும் - 2

ராண்டார்கை எத்திராஜ் பற்றி எழுதும்போது, நாற்பதுகளில் சென்னைக்கு உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த பையர்ஸ் துரை பற்றியும் இன்னொரு பிரபல வழக்கறிஞரான வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார் பற்றியும் கூடக் குறிப்பிடுகிறார்.

மேற்படி பையர்ஸ் துரை வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது கோர்ட்டிலேயே தூங்கிவிடுவது வழக்கம் (வேலை பார்க்கும் இடத்தில் தூங்கினால் வேலை காலி என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு அப்போது வரவில்லை!).

ஸ்ரீனிவாச அய்யங்கார் லா வீக்லி பத்திரிகையில் புனைபெயரில் இதைக் கிண்டல் செய்து, பையர்ஸ் துரை 'wakeful attention'-ல் வழக்கு விசாரிப்பதாக விவரித்திருக்கிறார்.

நாற்பதுகளில் பரபரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு பெயிலில் விடுப்பு வாங்கிக் கொடுத்தவர் வி.எல்.எத்திராஜ்.

நீதிமன்றம் விடுமுறை என்பதால், நீதிபதி பதஞ்சலி சாஸ்திரியாரின் மயிலாப்பூர் லஸ் பங்களாவில் வைத்தே அந்த விசாரணை நடந்தது. எதிராஜ் வெற்றிகரமாக பெயில் எடுத்துவிட்டாலும், சில நாள் கழித்து அரசு வழக்கறிஞர் (அப்போது க்ரவுன் ப்ராஸிக்யூட்டர் என்று குறிப்பிடுவார்கள்) பாகவதருடைய ஜாமீனை ரத்து செய்து அவரைத் திரும்பச் சிறையில் அடைக்க பிராது கொடுத்தார்.

வழக்கு இன்னொரு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அந்த நீதிபதி பையர்ஸ் துரைதான். பெய்ல் கேன்சல் ஆகக்கூடாது என்று இந்தத் தடவை வாதாட, பாகவதர் சார்பில் ஆஜரானவர் வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார்.

அய்யங்காரும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்தான். ஆனால் வேண்டாம் என்று பிராக்டிஸ்ஸ¤க்குத் திரும்பி விட்டார். காரணம் வேறு எதுவும் இல்லை - வருமானம் தான்.

அந்தக் காலத்தில் நீதிபதிக்கு மாதச் சம்பளம் மூவாயிரம் ரூபாய். ஆனால் வழக்கறிஞராக அய்யங்கார் சம்பாதித்தது மாதம் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் - அந்தக் காலத்திலேயே.

அய்யங்கார் பாகவதருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என்று மூன்று மணி நேரம் வழக்காடி முடித்ததும் நீதிபதி பையர்ஸ் துரை சொன்னார் - " இந்த மாதிரி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமீனில் விடக்கூடாது என்று சென்னை நீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறதே".

துரை குறிப்பிட்ட தீர்ப்பு, சாட்சாத் வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார் நீதிபதியாக இருந்தபோது வழங்கியதுதான் !

"கற்றுத் துறைபோகிய நீதிபதி (learned judge) ஒருவர் வழங்கிய தீர்ப்பல்லவா அது" என்று அய்யங்காரைப் பார்த்துக் கேட்டார் துரை.

அய்யங்கார் அசராமல் பதில் சொன்னார் - "அந்த நீதிபதி அப்படி ஒன்றும் கற்றுத் தேர்ந்தவர் இல்லை" (That judge was not that learned after all).

ஒரு விதத்தில் சுயவிமர்சனம் என்றாலும், இன்னொரு விதத்தில் நீதிபதி என்ற தனிநபரைக் குறித்த விமர்சனம் என்பதால், இது contempt of court ஆகியிருக்குமே!

0 Comments:

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது