Sunday, February 13, 2005

நான் அறியும் அசோகமித்திரன்

நான் அறியும் அசோகமித்திரன் (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்)

அசோகமித்திரன் என் அப்பாவின் சிநேகிதர். இரண்டு பேரும் த்¢.நகர் வாசிகள் ஆனதால், அது நடேசன் பூங்கா நட்பாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கும் முற்பட்டதாம். ராணுவத்தில் இருந்த, அசோகமித்திரனின் உறவினரான, அவர்களுக்கு ஒரு தலைமுறை முந்திய யாரோடோ தொடங்கியதாக இருக்கும் என்று தெரிகிறது.

அது தெரியாமலேயே, அசோகமித்திரனை கணையாழிக்காரராகவே நான் முதலில் அறிந்திருந்தேன்.

எண்பதுகளில் தில்லியில் நான் வேலை பார்த்தபோது கணையாழிக்கும் தீபத்துக்கும் அங்கேயிருந்து கவிதை அனுப்புவது வழக்கம். அசோகமித்திரன் அப்போது கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்தார்.

நான் எழுதிய சிறுகதை ஒன்று. 'வண்டி' என்ற பெயரில் கணையாழியில் பிரசுரமானது. (தேர் தொகுப்பில் உண்டு). அது வருடம் 84-ல் என்று நினைவு. கவிதையிலிருந்து உரைநடைக்குக் காலடி எடுத்து வைத்த நேரம். அச்சில் வந்த என் முதல் கதை அதுவாகத்தான் இருக்கும்.

அதற்கு முன்னால் எழுதிய சிறுகதையை தீபம் நா.பாவிடம் கொடுத்திருந்தேன். நான் எழுதிய கவிதையை எல்லாம் தீபத்தில் மறுக்காமல் பிரசுரித்த அவர் கதையைப் பற்றிக் கேட்டபோது மெல்லச் சிரித்தார். அது நா.பா டைப் கதை இல்லைதான். பின்னாளில் வீதி குறுநாவலாக நீட்சி அடைந்த அந்தக் கதையும் தேர் தொகுப்பில் உண்டு.

கணையாழிக்கு அனுப்பிய வண்டிக்கு ஒரு விபத்தும் நேராமல் அனுப்பிய இரண்டாம் மாதமே பிரசுரமானது. ஒரு குளிர்கால சனிக்கிழமை ராத்திரி, கரோல்பாக் அஜ்மல்கான் ரோட் பக்கத்து நடராஜன் மெஸ்ஸில் ராச்சாப்பாடு முடித்து, தமிழ்க் கடையில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு கணையாழி வந்தாச்சா என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டேன். வந்தாச்சு என்ற வழக்கத்துக்கு மாறான பதிலோடு கையில் கணையாழி பனியில் நனைந்த குழந்தையாக என் கையில். பிரித்த பக்கத்தில் வண்டி.

சிகரெட்டைத் தரையில் போட்டு அணைத்தேன். சன்னமான பனிக்காற்று. சுபாவமாகவே அழகான எல்லா பஞ்சாபிப் பெண்ணும் பேரழகியாகத் தெரியும் ராத்திரி வெளிச்சம். லிப்ஸ்டிக்கும், பிரம்மாண்டமான காதணிகளும் அணிந்த ஆரணங்குகள் அந்த ராத்திரிப் பனியில் கண்ணில் கனவு மிதக்க நிற்கும் ஒரு கெச்சலான மதராஸி இளைஞனை லட்சியமே செய்யாமல் அஜ்மல்கான் வீதி நடைபாதையில் இன்னும் லிப்ஸ்டிக்கும், தோடும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். வாங்கி முடித்து பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பானிபூரி, பஞ்சாபி வாசனைக்கு நடுவே காஷ்மிலான் ஸ்வெட்டரோடு என் வெஸ்பா ஸ்கூட்டரில் உட்கார்ந்தபடி வண்டி முழுக் கதையையும் படித்து முடித்தபோது ஒரு வரிகூட சேதாரம் இல்லாமல் அச்சில் சுகப் பிரசவம் என்று தெரிய வந்தது. மிதமான வேகத்தில் ஸ்கூட்டர் விட்டுக்கொண்டு இந்தியா கேட், லோதி காலனி வழியாக லாஜ்பத்நகர் வரும் வரை கதை வரிகள் மனதில் வரிசை கலைந்து வந்தபடி இருந்தன.

லாஜ்பத்நகர் ரயில்வே ஸ்டேஷன் எதிர்ப்புறம் வீடு. மேஜர் சாப் ஒருத்தருடைய வீட்டு முதல் மாடியின் தனிக்கட்டையாக வாசம். வீட்டில் மேஜருடைய வயதான அம்மா, மனைவி, சகோதரி என்று நானிஜி, மாதாஜி, பூவாஜி கவுர்கள். மற்றும் குல்வந்த் கவுர், வீரான்வாலி கவுர், அமர்ஜித் கவுர் என்று மேஜருடைய பெண்கள் பள்ளியிறுதியிலும் கல்லூரியிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பாங்க் ஆபீசர் சோக்ரா என்பதால் மட்டும் என்னை வாடகை வாங்கிக்கொண்டு முதல்மாடியில் குடிவைக்க ஏற்றவில்லை மேஜர். தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டான், அந்த மாதிரி ஏதாவது ஏடாகூடமாக நினைக்க முற்பட்டாலும் புஜபல பராக்ரமசாலிகளான கவுர்கள் வாஹே குரு என்று பையனை நிர்மா போட்டுத் துவைத்து பால்கனி கொடியில் காயப்போட்டு விடுவார்கள் என்று சர்வ நிச்சயமாகத் தெரியும் அவருக்கு.

வீட்டுக்குள் சிகரெட் பிடிக்காதே, வீட்டுச் சமையலறையில் தேங்காய் உடைக்காதே என்று அம்மா கவுர் போட்ட நிபந்தனையோடு (எனக்கு முன்னால் அங்கே இருந்த ஒரு தலைச்சேரி நாயர் குடும்பத்தோடு தினசரி தேங்காய் யுத்தங்கள் நடத்தி அலுத்துப் போயிருந்தார் அவர்), ராத்திரி பத்து மணிக்கு முன்னால் வீட்டுக்கு வந்து சேராவிட்டால் வாசல் இரும்புக் கதவு பூட்டப்படும் என்ற தடைச்சட்டமும் அமலிலிருந்தது.

தேங்காய் உடைக்கும் விஷயத்தில் கவலை இல்லை. செண்ட்ரல் மார்க்கெட் பஞ்சாபி தாபாவும், லஜ்பத்நகர் தமிழ் மெஸ்ஸ¤ம், லோதி காலனி கர்னாடகா பள்ளி மெஸ்ஸ¤ம், போதாக்குறைக்கு யு.என்.ஐ காண்டீனும் இருந்தபடியாலும், இங்கெல்லாம் போய்க் கறங்கித் திரும்ப ஸ்கூட்டருக்குப் போடப் பெட்ரோல் அப்போது ரொம்பவே மலிவாகக் கிடைத்து வந்ததாலும், வீட்டில் சமையல்கட்டுக்குப் போவதே பியர் பாட்டில் மூடியை அகற்றிப் போடவும், பிரட் டோஸ்ட் செய்யவும்தான்.

சிகரெட் சமாச்சாரமும் கிட்டத்தட்ட ஒ.கேதான். சட்டமாக பால்கனியில் நின்று புகை விடாமல், எல்லாக் கதவையும் மூடிவிட்டு ஊதினால் புகை கீழே இறங்கி, தலைப்பா மாடிப்படியேறாது.

ஆனால், ராத்திரி பத்து மணி ஷரத்து கடைப்பிடிக்க கஷ்டமானது. வாரத்தில் இரண்டு தடவையாவது மீற வேண்டிப் போகும். மலையாள சலச்சித்ரோல்ஸவம், பெங்காலி படவிழா, மும்பையிலிருந்து குழு நாடகம் என்று கவுரவமான சாக்குகளும் இதற்குச் சில வேளை காரணமாகும்.

வண்டியை வெளியில் நிறுத்திவிட்டு, கம்பிக் கதவேறித் திருடன் மாதிரி உள்ளே குதித்து மாடிக்குப் போகும்போது கவுர்பெண்ணுகள் முதுகுக்குப் பின்னால் சிரிக்கிற மாதிரி பிரமை.

நான் தில்லிக்குப் போனது ஏக் துஜ்ஜே கே லியே வந்த நேரம். தேரே மேரே பீச் மே கைசா ஹை ஏ பந்தன் என்று எஸ்.பி.பி குரலில் பாடியபடி, எல்லாச் சுவரையும் கடந்து, கவுர்களில் ஒருத்தியைக் காதலித்துக் கல்யாணம் செய்து, தினசரி லிப்ஸ்டிக்கும் முட்டையும்,மதர்ஸ் டயரி டோக்கன் பாலும் வாங்கி வந்து கொடுத்து, தலைப்பாக் கட்டிக் கொண்டு தில்லியிலேயே செட்டில் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரம் அது. (நல்ல வேளையாக மேஜர் குடும்பம் ரட்சைப் பட்டது).

கவுர் நினைவு இல்லாமல் கணையாழி நினைவில் அந்த ராத்திரியும் சுவரேறிக் குதித்து உள்ளே போனேன்.

நடு இரவில் ரஜாயைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு படுக்கையில் உட்கார்ந்தபடி அசோகமித்திரனுக்கும், கஸ்தூரிரங்கனுக்கும் நன்றிக் கடிதம் எழுத உட்கார்ந்து எப்படித் தொடங்குவது, என்ன எழுதுவதென்று தெரியாமல் கிறுக்கிக் கொண்டிருந்தபடி கண்ணயர்ந்ததும், காலையில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏழு மணி ஷோவுக்கு நிசாமுத்தீனில் 'ஒரு கை ஓசை' போனபோது கூடக் கையோடு கணையாழியைக் கொண்டு போய் அரையிருட்டில் திரையில் அஸ்வினியும் பாக்யராஜும் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும்போது, பத்திரிகையைப் புரட்டி இன்னொரு தடவை வண்டி படித்ததும் நினைவு இருக்கிறது.

நான் தில்லியில் இப்படி படைப்பாளிக்கே உரிய, உரிய என்னது அது. ஆமா, படைப்பு தரும் கர்வத்தில், அளித்த திருப்தியில் திரும்பத் திரும்ப மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இன்னும் நாலு பாக்கெட் ·போர் ஸ்கொயர் சிகரெட் காலு கடையில் வாங்கிக் காலி செய்து கொண்டிருந்தபோது சென்னையில் என் வீட்டுக்கு அசோகமித்திரன் வந்திருக்கிறார். அப்பாவைச் சந்திக்க இல்லை. என்னைப் பார்க்கத்தான்.

(தொடரும்)

4 Comments:

At 9:35 pm, Blogger Thangamani said...

நல்லா இருக்கு படிக்க. நன்றி

 
At 2:15 am, Blogger PKS said...

Era.Mu.,

1. Could not read your blog in Tamil in Windows - 98. See only square boxes. Please look into it.

2. Read your blog about AM. Thanks for the narration and life in Delhi, gave a feeling of visiting Delhi. Have your ther thokupu. Will read Vandi from it.

Thanks and regards, PK Sivakumar

 
At 2:21 am, Blogger Narain Rajagopalan said...

இரா.மு, விழாவில் பார்த்தும் பேச இயலவில்லை. ஐகாரஸ் பிரகாஷ் அறிமுகபடுத்தி வைக்கிறேன் என்று சொன்னாலும், நான் கொஞ்சம் சொதப்பி, சீக்கிரமே கிளம்பிவிட்டேன். விரைவில் சந்திக்கும் தருணங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

 
At 2:41 am, Blogger Mookku Sundar said...

இனிய முருகன்,

ரொம்ப நல்லா இருக்கு. நேர நின்னுகிட்டு பேசற மாதிரி இருக்கு உங்களோட. நீங்க வலைப்பூவுக்கு வந்தது எனக்கு பர்சனலா ரொம்ப சந்தோஷம்.

என்னுடைய முதல் செய்திக்கட்டுரையை 91 ஆம் வருஷம் ஜூனியர் போஸ்டில் படித்தபோது, எனக்கு காரைக்குடி பஸ் ஸ்டாண்டே ஜொலித்தது நினைவுக்கு வருகிறது. ஒரு அங்சு காப்பியாவது வாங்கி நண்பர்களுக்கு ஃப்ரியா கொடுத்திருப்பேன்னு நினைக்கிறேன்.

தொடருங்கள். :-)

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது