Wednesday, February 09, 2005

ஆசாத் எழுதிய புத்தகம்

முன்ஷி பிரேம்சந் எழுதிய சிறுகதையின் அடிப்படையில் சத்யஜித்ராய் இயக்கிய 'ஷத்ரஞ்ச் கே கிலாடி' படத்தின் இறுதிக் காட்சி.

ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளின் இறுதிக்காலம். ஆங்கிலேயத் துரைத்தனத்தை இந்தியாவில் நிறுவிய கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் லக்னௌ நகரை முற்றுகையிட்டு நவாப் வாஜித் அலி ஷாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முன்னேறிக் கொண்டிருக்கின்றன. புறநகர்ப் பகுதியில் குதிரைக் குளம்பொலியும், தூசியும் எழுப்பியபடி அந்தப் படை கடந்து போக, லக்னௌ நகர அரசவைப் பிரபுக்களில் இருவர் சதுரங்க ஆட்டத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.

"ராணிக்கு வழிவிட்டு ராஜா நகர்ந்துக்கலாம்"
அவர்கள் சதுரங்கப் பலகையில் கருப்பு-வெள்ளை ராஜாக்களை ஆங்கிலேயப் பாணியில் மாற்றிவைத்துக் கொண்டு சொல்வதோடு படம் முடிகிறது.

அரசியல், சமூக ரீதியாக ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிய காலகட்டத்தை, அந்த நிகழ்வுகளின் பாதிப்பு ஒரு சிறிதுமின்றி சதுரங்க விளையாட்டில் கழிக்கும் பிரபுக்கள் பிரேம் சந்தின் கற்பனையாக இருக்கலாம். ஆனால் அந்த சூழலும், அவுத் என்ற லக்னௌ அரசாட்சி பூமியின் நவாப் வாஜித் அலிஷாவும் முழுக்க உண்மை.

வாஜித் அலி ஷா ஒரு கவிஞர். தும்ரி என்ற கவிதை வகையில் புகழ்பெற்ற 'பாபுல் மோரா நய்ஹர் சோட்டோ ஜாயே' கவிதை அவருடையதுதான். திருமணமான பெண் தாய்வீட்டை விட்டு நாலு பேர் தோளில் ஏற்றிய பல்லக்கில் கணவன் வீட்டுக்குப் பிரிந்து செல்லும் துயரை சாமானியர்களின் வாக்கான போஜ்பூரி மொழியில் உருக்கமாகச் சொல்லும் அக்கவிதையை 'அக்தர்பியா' என்ற புனைபெயரில் எழுதியவர் அவர்.

கண் முன்னே சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சொந்த பூமியும் ஆட்சி உரிமையும் பறி போய்க் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த முடியாத அந்த அரசன் கவிதையிலும் நாட்டியத்திலும் தஞ்சம் புகுகிறான். தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் அதே போன்ற ஒரு சூழலில் கர்னாடக இசையில் தன்னை முழுமையாக நுழைத்துக் கொண்ட சுவாதித் திருநாள் மஹாராஜாவுக்கும் நவாப் வாஜித் அலிஷாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
கவிதையும் இசையும் ஒரு தளத்தில் அவற்றைப் பிறப்பிக்கும் சமூக வாழ்க்கையின் பிரதிபலிப்பாக உருவாகிறது. தனிமனித, சமூக வாழ்க்கை தரும் மகிழ்ச்சியை, துயரத்தைச் சொல்லில், கானத்தில் இழைக்கிறது. இன்னொரு தளத்தில் அந்த வாழ்க்கையின் வாதனைகளையும் அது பிறப்பிக்கும் நம்பிக்கையின்மையையும் மறக்கத் தன்னில் அமிழ்ந்து போகச் சொல்லி அழைத்து அணைத்துக் கொள்வதும் இந்தப் படைப்பு மற்றும் நிகழ்கலை வடிவங்களின் இயல்பு.

கவிஞர் வாஜித் அலி ஷாவுக்கு தும்ரி. முகலாயப் பேரரசின் கடைசி சுல்தானான மற்றொரு கவிஞர் பஹதூர் ஷா ஸ·பருக்கு கஸல். முன்னவர் வங்காளத்துக்குக் குடிமாற்றப்பட்டு, லக்னௌ பற்றிய தன் கனவுகளோடு இறக்கிறார். பஹதூர் ஷாவோ பர்மாவுக்கு ஆங்கிலேய அரசால் நாடு கடத்தப்பட்டு, தாய்நாட்டு மண்ணை நினைத்துக் கஸலாக, கவிதையாக உருகியபடி மரிக்கிறார் -

ஹை கித்னா பத் நஸீப் ஸ·பர் த·ப்ன் கே லியேதோ காஸ் ஸமீன் பீ நா மிலே கூ-ஈ-யார் மே.

(இந்தப் பயணிக்குத்தான் எத்தனை துரதிர்ஷ்டம். அவன் இறுதியாக உறங்க அவன் பிறந்த மண்ணில்ஆறடி மண்கூடக் கிட்டவில்லை).

கஸலின் மக்தாவில் 'ஸ·பர்' என்று தக்காலூஸ் ஆகத் துயரப் பெருமூச்சோடு தன் புனைபெயரைக் கையப்பமிட்டு முடிக்கும் அந்தக் கிழவரின் துயரம் கம்பன் காட்டும் தயரதனின் புத்திர சோகத்துக்கோ, ஷேக்ஸ்பியரின் லியர் அரசனின் மகளைப் பறிகொடுத்த துயரத்துக்கோ கொஞ்சமும் குறைந்ததில்லை.

கவிதையும் இசையும் எதற்காக? நிகழ்காலத்தை மறந்து சுயமாக நிர்மாணித்துக் கொண்ட ஆசுவாசம் தரும் கற்பனை உலகுக்குக் கனவுகள் முன் செலுத்தத் தப்பித்து மிதந்து செல்லவா? நினைவின் வடிகால்களாகப் பரிணமித்துப் பெருகவா? மனதையும் சிந்தனைகளையும் உயர்த்தித் தன்னளவில் மேன்மையுற வழிசெய்யவா? துவண்டு கிடக்கிற ஓர் இனக்குழுவுக்குத் தனிவாசிப்பிலும், கூட்ட நிகழ்வு மூலமும் உத்வேகம் அளித்துப் பெரு மாற்றங்களையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கவா?

இவை ஒவ்வொன்றுக்காகவும் தான். எல்லாமும் தான். இவை எல்லாம் கடந்த வேறு தேடலும் கூடச் சாத்தியமே.
ஒரு பார்வையில் கவிதையும், இசைப் பாடலும் காலத்தின் சில கணங்களை உறைந்து போக வைக்கிறவை. வாஜித் அலிக்கும், பகதூர் ஷாவுக்கும், சுவாதித் திருநாளுக்கும் இந்தக் கணங்கள் விரும்பித் தேடிய யுகங்களாக நீண்டன. நாம் வாழும் காலத்தின் பரபரப்பான இயக்கத்துக்கு நடுவே நமக்கோ உறைந்து போன இக்கணங்கள் நிம்மதியான சிறு ஓய்வைத் தருகின்றன. அயர்வு நீக்குகின்றன. தெம்பளித்துத் தொடர்ந்து பயணப்பட வைக்கின்றன.

கஸலும் எல்லாச் சிறந்த இலக்கிய வடிவங்களைப் போல் மானுடம் பாடுகிறது. பெண்ணிடம் பேசுவது என்ற பொருள் கொண்ட அந்தப் பாரசீகச் சொல் பெண்ணைப் பற்றி, காதல் பற்றி, பிரிவுத் துயர் பற்றி, அதை மறக்க மதுவில் மூழ்கும் சராசரி மனிதனை, சக்கரவர்த்தியைப் பற்றிய படைப்பாக நீட்சியடைகிறது. சுருங்கச் சொன்னால், மானுடத்தின் பேர்பாதியான பெண்ணைப் பற்றி முழுக்க முழுக்க அமைந்த திணையும் துறையும் அது.

பாரசீகத்திலிருந்து பனிரெண்டாம் நூற்றாண்டில் இங்கே வந்த கஸலின் சரித்திரத்தில் தென்னிந்தியாவுக்கும் முக்கிய இடமுண்டு. தக்காணத்தில் பிஜப்பூர், கோல்கொண்டா சமஸ்தானங்களில் தான் உருது கஸல் செழித்து வளர்ந்ததாக வரலாறு சொல்கிறது. கஸலில் மகாகவியாக விளங்கிய மிர்ஸா காலி·ப் கூட தன் வாழ்க்கையில் மிக முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும் வட இந்தியாவில் உருது கஸல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வாலி தக்கணியின் முயற்சிகளும் காரணம் என்றும் அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன.

இப்படி நல்லன எல்லாம் இங்கே இருந்து போனதுதான். இங்கே இருந்து ஊக்குவிக்கப்பட்டது தான்.

இங்கே இருந்து வளைகுடா நாட்டிற்குத் தொழில் நிமித்தமாகச் சென்ற என் நல்ல நண்பர் அபுல் கலாம் ஆசாத் கஸலை இலக்கிய வடிவமாகத் தமிழில் கொண்டு வருவதில் முழு வெற்றி அடைந்திருக்கிறார் என்பதில் ஆச்சரியம் இல்லை. பெருமகிழ்ச்சியே ஏற்படுகிறது.

ஆசாத் சிறப்பான மரபுக் கவிஞர். வெண்பாவா, ஆசிரியப்பாவா இந்தா பிடி என்று நொடியில் பாடுவது எல்லாம் செய்யுள் மட்டுமில்லாமல் கவிதையாகவும் இருப்பது அவருடைய புலமைச் சிறப்பு. நாள், மலர், காசு, பிறப்பு என்று முடிய நேரிசை வெண்பா பாடும் ஆசாத், சுருதி பிசகாத சென்னைத் தமிழில் கானாவும் எழுதுவார். பேனா பிடித்த அவருடைய கைகள், தென் தமிழ்நாட்டு வீர விளையாட்டான சிலம்பமும் சுற்றும். எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு ரசிகர். நல்ல இசை, நல்ல திரைப்படம், நல்ல கவிதை, உரைநடை - முதல் வரிசையில் ஆசாத் கட்டாயம் இருப்பார்.

ஆசாத்தின் ரசனையும், கவித் திறனும், உருது, தமிழ் இருமொழியாற்றலும் லாவகமாக எந்த உறுத்தலுமில்லாமல் இழைந்து கலந்திருக்கும் இந்த நூல் கஸலைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதைவிட கஸலுக்குத் தமிழைச் சரியான விதத்தில் பரிச்சயப்படுத்துகிறது என்பதே உண்மை.
அக்பர் இலாஹாபாதியை, மொகல்-ஏ-ஆஸம் படத்தின் உருது - தமிழ்க் கீதங்களை, கை·பி ஆஸ்மியின் கவிதைகளை, இப்னே இன்ஷாவின் 'கல் சவ்துவீன்கா சாந்து தீ' மனதில் கொளுத்தும் இன்பத்தீ பற்றி, உம்ரா ஜான் படத்தில் ஷாரியாரின் மறக்க முடியாத 'தில் சீஸ் க்யா ஹை' பற்றி, முஜ்ரா என்ற சமூக உரு சிதைந்து போன நிகழ்கலையை, கவ்வாலியைப் பற்றி எல்லாம் பிரமிக்க வைக்கும் வேகமும், சுவாரசியமும் கைகோர்த்து நடக்கச் சொல்லிப் போகிறார் ஆசாத் இந்த நூலில்.

கோலத் திருவடிவு கோதயர்க ளாசையினால்ஆலைக் கரும்புபோ லானேன் பராபரமே!
என்பது போன்ற தாயுமானவரின் பராபரப் கண்ணி, குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல் போன்ற மரபுக் கவிதைகளில் கஸலை அடையாளம் காணும் ஆசாத், உருது கஸல்களை ஓசை நயம் குன்றாமல், பொருட் செறிவோடு மொழிபெயர்த்திருப்பதும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

இஸ் அன்ஜுமன்மே ப்கோ ஆனா ஹை பார்பார்தீவார்-ஓ-தர்கோ கௌர்ஸே பெஹ்சான் லீஜியே
கஸலுக்காக, கஸலாகவே வாழ்ந்த பெண் கவிஞர் உம்ரோ ஜான் பற்றி முஸா·பர் அலி இயக்கிய திரைப்படத்தில் ஆஷா போன்ஸ்லே குரலிலும், கய்யாமின் இசையிலும், உம்ராவாக நடித்த ரேகாவின் கண்களிலும் நாம் இன்னும் கேட்டும் கண்டும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த கஸலின் வரிகளை ஆசாத் தமிழாக்கும்போது, மனத்திரையில் உம்ரா தமிழில் பேசுகிறாள்.

என் இல்லம் தேடி நீயும் வரவேண்டும் கள்வனாய்மாடங்கள் வாசல் வீதி உன் மனதில் வாங்கிடு
உருது கஸலில் 'நங்கே பாவோன்' என்று சொல்கிறார்கள். 'நிர்வாணப் பாதம்' சொல்லிப் பார்க்கையில் புதிதாக இருந்தாலும், அன்னியமாகவும் இருக்கிறது என்று புது மாப்பிள்ளையாக ஓரிடத்தில் கூச்சப்படுகிறார் ஆசாத். வேணாமே! 'சக்ரவர்த்தினி நினக்கு ஞானொரு சில்ப கோபுரம் துறன்னு. புஷ்ப பாதுகம் புறத்து வச்சு நீ நக்ன பாதயாய் அகத்து வரு' (பேரரசியே, உனக்காக நான் ஒரு சிற்ப கோபுர மாளிகையை உருவாக்கினேன். பூப்பாதுகைகளை வெளியே விட்டு, நக்னமான கால்களோடு உள்ளே நடந்து வா) என்று மலையாளக் கவிஞர் வயலார் வரவேற்ற போதையேற்றும் பாதங்களல்லவோ அவை.

நவாப் வாஜித் அலிஷாவின் 'பாபுல் மோரா' தும்ரியைத் திரைப்படத்தில் இசைமேதை குந்தன்லால் சைகாலும், இசை மேடைகளில் பேகம் அக்தாரும் பிரபலமாக்கியது வரலாறு. தும்ரியோடு, கஸலிலும் பிரபலமானவர் பேகம் அக்தார். 'மல்லிகா-ஏ-கஸல்' (கஸல் அரசி) என்று அன்போடு அழைக்கப்பட்ட அக்தார் பேகம் கஸலைப் பற்றிச் சொன்னார் - 'நல்ல முறையில் பாடப்படும் கஸல் போதையைத் தரும்'. தீமை வருத்தாத போதை அது. நக்னமான பாதங்களைப் போல.

ஆசாத்தால் நல்ல முறையில் எழுதப்பட்ட, அச்சும் அமைப்பும் அழகுற அமைந்த இந்த நூலும் பேகம் அக்தார் குரலில் ஒலிக்கும் கஸலாகப் போதை தருகிறது. சுப்ஹான் அல்லாஹ்!

இரா.முருகன்
டிசம்பர் 05 2004

5 Comments:

At 4:50 am, Blogger பரி (Pari) said...

0-60mph in 6 seconds மாதிரி ஒரேயடியா போட்டா என்னாவறது. இடுகைகளுக்கு இடையே போதிய இடைவெளி விடவும் :)

 
At 5:14 am, Blogger Boston Bala said...

கு.க. வாரியத்தின் கொள்கைகளுக்கு நேர் எதிர் நெறிகள் கொண்டிருக்குதே தமிழ்மணம் ;-))

இரண்டுக்கு மேல் எப்பவும் வேணாம்... கு.க.
மூன்றுக்கு மேல்தான் வேணும்... த.ம.

 
At 10:32 am, Blogger PKS said...

Anbulla Era.Mu.,

Welcome to Tamil Blog World as a writer (so far you were only commenting and giving feedback :-) ). Goodluck and all the very best.

Thanks and regards, PK Sivakumar

 
At 11:17 am, Blogger era.murukan said...

Thanks, dear Siva.

 
At 2:05 pm, Blogger dondu(#11168674346665545885) said...

வருக முருகன் அவர்களே.

சதுரங்க ஆட்டக்காரர்கள் படத்தில் சஞ்சீவ் குமார், அம்ஜத் அலி கான், சைய்யத் ஜாஃப்ரீ ஆகியோர் அற்புதமாக நடித்திருப்பார்கள்.

இச்சிறுகதை நான் மத்திய அரசு அலுவலகத்தில் ஒரு அதிக சம்பள உயர்வு வேண்டிப் படித்த ப்ராக்யா வகுப்புக்குப் பாடப் புத்தகத்தில் ஒரு பாடமாக இருந்தது. சஞ்சீவ் குமார் வீட்டில் சதுரங்கம் ஆடுவதற்கு அவர் மனைவி ஆட்சேபம் தெரிவிக்க, நண்பர் வீட்டிலோ அவர் மனைவிக்கு அவர்கள் இருவரும் தன் வீட்டிற்கு வருவது "ஏனோ பிடிக்கவில்லை" என்று கோடி காட்டியிருப்பார் ஆசிரியர் Premchand. நான் உடனே எங்கள் ஹிந்தி ஆசிரியரிடம் அதற்குக் காரணம் அந்த மனைவிக்கு ஏற்பட்டப் பரபுருஷன் சினேகிதமாக இருக்குமோ என்றுக் கேள்வியெழுப்ப அதெல்லாம் இல்லை என்றுக் கூறி என்னை உட்கார வைத்தார்.

ஆனால் அதற்குச் சில வருடங்கள் கழித்து வந்தத் திரைப்படத்தில் சத்யஜித் ரே நான் கூறியபடியே காட்சியமைத்திருந்தார். ஃபரீதா ஜலால் மற்றும் ஃபரூக் ஷேக். ஹிந்தி ஆசிரியரை அதன் பிறகுப் பார்க்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது