மாம்பலம் டைம்சும் மயிலாப்பூர் வக்கீலும் - 1
மாம்பலம் டைம்ஸ் பத்திரிகையில் ராண்டார் கை வாராவாரம் எழுதிவரும் 'They made Madras' சுவையானது.
அதில் தற்போது அவர் எழுதிக் கொண்டிருப்பது குற்றவியல் சட்டத்துறையில் பெரும்புகழோடு விளங்கிய வழக்கறிஞர் வி.எல். எத்திராஜ் பற்றி. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் இவர்தான்.
ராண்டார்கை எழுத்திலிருந்து அங்கங்கே கொஞ்சம் மொழிபெயர்த்து -
கல்லூரியில் எத்திராஜ் அடியெடுத்து வைத்தபோது ஆங்கிலத்தில் தேர்ச்சி இல்லாமல் இருந்த காரணத்தால் வீட்டிலேயே வந்து அவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியரை அமர்த்தினார்கள்.
தினசரி பஸ்ஸை, டிராமைப் பிடித்து வந்து எத்திராஜுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்து மாதம் சொற்ப சம்பளமாக முப்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போன அந்த வாத்தியார் சில மாதங்களுக்குப் பிறகு அலுத்துப் போய் இந்தப் பையனுக்கும் ஆங்கிலத்துக்கும் ரொம்பவே தூரம் என்று டியூஷன் எடுப்பதை முடித்துக் கொண்டார்.
ஆனாலும் தளராது படித்து எப்பாடும் பட்டு ஒருவழியாகப் பட்டதாரியானார் எத்திராஜ். அப்புறம் அதே மாதிரி சட்டத்துறையிலும் பட்டம் வாங்கிவிட்டார்.
அப்போதெல்லாம் மயிலாப்பூர் வக்கீல்கள் பலர் சிவில் லாயர்களாகப் பெரும்புகழ் அடைந்திருந்தார்கள். எத்திராஜ் அப்படி ஒரு வக்கீலுக்கு உதவியாளராக இருந்து தனியாக பிராக்டிஸ் ஆரம்பிக்க, கட்சிக்காரர்களைத்தான் காணோம்.
பிறகு எத்திராஜ் புரட்சிகரமான ஒரு முடிவு எடுத்தார்.
குற்றவியலான கிரிமினல் சட்டத்துறையில் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதை உள்ளூர்ப் பிரமுக வழக்கறிஞர்கள் பலரும் கவுரவக் குறைச்சல் என்று நினைத்த நேரம் அது. இங்கிலாந்திலிருந்து வந்த துரைகளும், மும்பை பார்ஸி வக்கீல்களும்தான் சென்னை உயர்நீதிமன்றத்திலும், மற்ற கோர்ட்டுகளிலும் கிரிமினல் லாயர்களாக இருந்தார்கள்.
வருமானம் வராத சிவில் துறையை விட்டு எத்திராஜ் கிரிமினல் லாயரானார். அவ்வளவுதான். அப்புறம் அவர் காட்டில் மழைதான். குற்றவியல் வழக்குறைஞர்களில் மேதை என்று அவர் பெயர் வாங்கியபோது, அவருக்கு ஆங்கிலம் வசப்பட்டிருந்தது.
எத்திராஜுக்கு ஆங்கிலமே வராது என்று சொல்லிவிட்டுப் போன டியூஷன் வாத்தியார்? அவரும் புகழ்பெற்றுவிட்டார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என்பது அவர் பெயர். இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தார்.
1 Comments:
Nalla pathivu..
Mutivu innum suvarasiyam....
Post a Comment
<< Home