Thursday, February 17, 2005

கல்லற துறந்நு

அருந்ததி ராயின் கேரளப் பின்னணியில் அமைந்த 'The God of Small Things' நாவலில் வயசான ஓர் அம்மணி வருவார். ஊரில் யார் வீட்டில் இழவு விழுந்தாலும், ஏதாவது உறவு சொல்லிக் கொண்டு முதலில் ஆஜராகி விடுவார் . இறந்தவரின் உடலுக்கு மிக அருகே நிற்பது, பிணத்தின் முகத்தில் தைலம் தடவுவது (இதை இவரே கொண்டு வந்திருப்பார்) என்று ரசித்துச் செயல்படுவார்.

சவங்களை மிக நேசிக்கும் நெக்ரோபிலியா இந்த அம்மாவுக்கு மட்டுமில்லை, கொஞ்சம் அதிகப்படியாகவே சராசரி மலையாள மனதில் இருக்கிறதா என்று எனக்கு வெகு நாளாகவே சந்தேகம் உண்டு.

மலையாளப் தினப் பத்திரிகையில் சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் சட்டென்று நினைவு வருவது ஒரு பக்கம் முழுக்க வெளியாகும் 'காலமானார்' விளம்பரங்கள் தான். படிக்க வசதியாக மாவட்ட வாரியாகக் கொடுத்திருக்கும் இந்தப் பக்கம் ஒரு நாள் கூட முழுக்க நிரம்பாமல் வெளியாகாது.

இது போதாதென்று 'துங்கி மரிச்சு' (தூக்குப் போட்டுத் தற்கொலை), புழயில் வீணு மரிச்சு, வேன் இடிச்சு மரிச்சு, குத்தேற்று மரிச்சு, விஷம் குடிச்சு மறிச்சு, தீ கொளுத்தி மரிச்சு, ஓட்டோவும் காரும் கூட்டியிடிச்சு மரிச்சு, பஸ்ஸில் நின்னு தெறிச்சு வீணு மரிச்சு, ஷோக்கேற்று மரிச்சு என்று அடுத்த பக்கத்தில் இரண்டு காலம் முழுக்க முழுக்கச் சாவுச் செய்திகள்.

போதாக்குறைக்கு பிரமுகர்களின் சாவுச் செய்தி. நகைச்சுவை நடிகர் ஜகதி ஸ்ரீகுமாரின் மாமியார் இறந்தது இந்த மாதிரி அண்மையில் வந்த பத்து வரி நியூஸ் ஐட்டம்.

இன்றைக்குப் பத்திரிகையைத் திறந்தால் இது -

திருவல்லா பக்கம் கவியூரில் வி.கே.குர்யன் என்பவர் ஆறு மாதம் முன்னால் இறந்து போனார். சவ அடக்கம் கவியூர் ஓர்த்தடோக்ஸ் சர்ச் சார்ந்த செமித்தேரியில் நல்லபடியாக நடந்தது.

அண்மையில் புஷ்பகிரி மருத்துவக் கல்லூரி நடத்திய ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள்களில் ஒரு பிணமும் உண்டு. பார்க்க வந்த யாரோ, அந்தப் பிணம் குரியனுடையது என்று சொல்ல, பரபரப்பான பத்திரிகைச் செய்தி ஆனதோடு, காவல்துறை விசாரணை ஜரூராகத் தொடங்கியது.

மெடிக்கல் காலேஜில் காட்சிப் பொருளானது குரியனின் உடல் என்றால், கல்லறைக்குள் இருப்பது யார்?

நேற்றைக்குக் காவல்துறை ஏற்பாட்டின் பேரில் ஓர்த்தடோக்ஸ் பள்ளி வளாகசெமித்தேரியில் குரியனின் கல்லறை மறுபடி திறக்கப்பட்டு, உள்ளே இருந்த உடல் வெளியே எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட எலும்புக் கூடுதான் அது. இனி டாக்டர்கள் பரிசோதித்து அது குரியன் தானா இல்லை வேறு யாராவதா என்று தெரிவிப்பார்கள்.

பத்திரிகைச் செய்தியில் என் கவனத்தை ஈர்த்த வரி இதுதான் - கல்லற துறக்குன்னது காணான் ஆயிரங்களாணு செமித்தேரிக்குச் சுற்றும் தடிச்சுக் கூடியது (கல்லறை திறக்கப்படுவதைப் பார்க்க ஆயிரக் கணக்கில் மக்கள் செமித்தேரியைச் சுற்றிக் கூடினார்கள்).

பின்குறிப்பு

வேம்ப நாட்டுக் காயல் என்று தலைப்பு வைத்ததே முக்கியமாகக் கேரள கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வுகளைப் பதிய உத்தேசித்துத்தான். குரியன் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

6 Comments:

At 1:21 am, Blogger Venkat said...

முருகன் - நீங்க வந்ததக் கொஞ்சம் லேட்டாத்தான் கவனிச்சிருக்கேன். வந்தவுடனே வாங்கன்னு கூப்பிடமுடியாமப் போய்விட்டது. க்ஷமிக்கனு.

ஐஐஎஸ்ஸியில் படித்த காலத்தில் மலையாளிச் சாவுகளைப்பற்றி ஒரு ஜோக் உண்டு.

செத்துப் போன மலையாளியைத் தூக்க எத்தனைபேர் தேவை?

விடை - 5, நாலுபேர் பாடையைத் தூக்க, ஒருவர் முன்னால் டேப்ரிக்கார்டரைத் தூக்கிச் செல்ல.

நிற்க; இங்கே டொராண்டோவிலும் தமிழ்ப் பத்திரிக்கைகளில் பத்தி பத்தியாக மரணச் செய்திகள் வருகின்றன. சேரளத்தைப் போல ஈழத்திலும் சாவுச் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தோன்றுகிறது (இது இன்றைய ஈழத்தைப் பற்றியதல்ல, சண்டைகள் இல்லாத காலத்தில்). சேவை இரண்டில் அறிவித்தல்கள் - முதலில் 'மெரண' அறிவித்தலொன்று என்றுதான் துவங்கும். அதில் இன்னாரின் மாமனார், மைத்துனர் என்று சொந்தங்களின் பட்டியலைத் தருவார்கள்.

 
At 1:40 am, Blogger Boston Bala said...

ஹிந்துவைத் திறந்தவுடன் 'ஒபிச்சுவரி' படிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அதன் மூலம்தான் உற்றவர்களின் மரணத்தை அறிந்து கொள்ளுமளவு எவ்வளவு பெரிய சண்டை போட்டிருப்பார்களோ என்ற எண்ணம் எழும்.

'ஒபிச்சுவரி' என்றவுடன் சமீபத்தில் பார்த்த 'Curb your enthusiam' என்னும் Seinfeld-புகழ் லாரி டேவிடின் காட்சி மறக்கமுடியாதது:

மனைவியின் Aunt இறந்து விடுவார். துக்கத்தில் எவ்வாறு பங்கு பெறுவது என்று தெரியாமல் விழிப்பதையும் அதன் தொடர்பான இயல்பான பாசாங்குகளையும் சித்தரித்து வருவார். பத்திரிகையில் 'மரண அறிவிப்பு' கொடுக்கும் போது typo-வில் 'அத்தை'யின் A-க்கு பதிலாக C வந்து விழுந்து ரகளையாகும்.

(அந்த மாதிரி விவகாரமான தட்டச்சுப் பிழை ஏதாவது இங்கும் இருந்தால் தற்செயலான ஒன்றுதான் ;-)

 
At 2:54 am, Blogger Mookku Sundar said...

//சவங்களை மிக நேசிக்கும் நெக்ரோபிலியா //

சவங்களை புணரும் வியாதிக்கு நெக்ரோஃபீலியா என்று ராஜேந்திரகுமார் கதியில் படித்ததாய் ஞாபகம். ஒருவேளை நேசத்தின் உச்சமோ :-)

 
At 3:28 am, Blogger -/பெயரிலி. said...

boston Globe இனைத் திறந்தீர்களென்றால், மூன்று பக்கங்களுக்குக் காணலாம். இரண்டு பக்கங்களிலே நுணுக்கி நுணுக்கி "இன்னார் இவர்; எங்கே எப்போது" எனப் பெட்டிபோட்டும் மூன்றாம் பக்கத்திலே "இப்படியான வல்லமை நிறைந்த விண்ணர் விண்ணேறினார்" என்ற வகையிலும் ஒபிசுவரியும் இயூலோசியும் மரிச்சவரைப் பற்றி மோச்சுவரி துடக்கம் கல்வாரி வரைக்கும் நீளும்

 
At 10:58 am, Blogger era.murukan said...

Venkat, Bala, Sundar, Ramani, Moorthy, Balaji -Pari

Thanks.

 
At 3:44 pm, Blogger ஜெ. ராம்கி said...

இரா.மு ஸார்,

ரெண்டே ரெண்டு கேள்விகள்.

வேம்பநாட்டுக்காயல்னு குடிச்சுட்டு மம்முட்டி, மனோஜை பார்த்து பாடறாரே அதுக்கு என்ன அர்த்தம்?

எனக்கு ரொம்ப பிடிச்ச காமெடி நடிகர் ஜெகதி. டிவியில் மட்டும்தான் அவர் நடித்தத காமெடி காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஜெகதியை நம்மூர் நாகேஷ் கூட ஒப்பிடலாமா?

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது