Sunday, February 27, 2005

வார்த்தகள்

பாலக்காடு மாவட்டம் பாலப்புரம் அருகே சினக்கத்தூர் பகவதி அம்பலத்தில் பூரம் உற்சவக் கொடியேற்றப்பட்டது.

எல்லா வருடமும் போலவே இந்த ஆண்டும், அண்ணாமலைப் புலவரும் அவருடைய மகனும் இசைக்குழுவினரும் பதினேழு தினங்கள் நடத்திய கம்பராமாயணம் தோல்பாவைக் கூத்தின் இறுதி நாளன்று இந்தக் கொடியேற்றம்.

கொடியேற்றப் பட்டபோது கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழக்கப்படி 'அய்யய்யோ, அய்யய்யோ' என்று பெருங்குரலெடுத்துக் கூவினார்கள். பூரம் பரம்பில் வெடிகள் முழங்கின.

பிறகு, "அய்யய்யோ, தச்சுக் கொல்லுன்னே" (அய்யய்யோ, அடிச்சுக் கொல்றாங்களே) என்று அலறியபடி பூரம் பரம்பிலிருந்து குதித்துக் கீழே இறங்கி எல்லா திசையிலும் ஓடிப் போனார்கள்.

இந்த வாரம் நடைபெறும் சினக்கத்தூர் பூரம் திருவிழாவில் வழக்கப்படி முப்பத்தி மூன்று யானைகள் பங்கு பெறுகின்றன.

************************************************

கோழிக்கோடு மாவட்டம் கொண்டோட்டி அருகே கரிப்பூர் விமான நிலையத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் உயர் அதிகாரியான டாக்டர் ஏ.பி.ஹர்பனஹள்ளி வந்தார்.

விமானத் தாவளத்தின் ரன் - வே நீளம் அதிகரிப்பது சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்று அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை செய்ய பெங்களூரிலிருந்து கரிப்பூருக்கு பயணம் செய்திருந்தார் அந்த அதிகாரி.

விமான நிலைய அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்தனர். ரன் வே பிரச்சனை பற்றிக் கேட்ட அதிகாரியிடம் அவர்கள் "அதெல்லாம் முடிஞ்சு ரன் -வே விருப்பப்பட்டது போல் நீட்டி, விமானப் போக்குவரத்து எல்லாம் ஜோராக நடக்குதே" என்றார்கள்.

"அப்புறம் எதற்கு என்னை விசாரிக்க அனுப்பியிருக்காங்க?" என்று கேட்டபடி தன்னிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுவை அவர்களிடம் நீட்டினார் ஹர்பனஹள்ளி.

அதை வாங்கிப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் நமுட்டுச் சிரிப்போடு அதை அவரிடமே திருப்பிக் கொடுத்தார்கள்.

"நீங்க கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க சார்"

அவர்கள் புகார் மனுவில் போட்டிருந்த தேதியைக் காட்டிச் சொன்னார்கள்.

1995-ம் வருடம் கொடுக்கப்பட்ட புகார் அது.

************************************

மலைப்புரத்தில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில், கட்சியின் மாநிலச் செயலராக மறுபடியும் பிணராயி விஜயன் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஒரு நாள் முழுக்க நீண்ட வாக்கெடுப்பில், விஜயனுக்கு 452 வாக்குகளும், வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு 342 ஓட்டுகளும் கிட்டின. அச்சுதானந்தன் எதிர்பார்க்காத தேர்தல் முடிவாகும் இது. அடுத்த கேரள முதல்வர் பதவியில் இந்தத் தேர்ந்தெடுப்பு முடிவடையும் என்று தோழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உண்டென்று தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான தேசாபிமானியின் ஆசிரியராக இருந்த பேராசிரியர் விஜயன் பதவி விலகினார். போராட்டம் எல்லாத் தளங்களிலும் தொடரும் என்று நிருபர்களிடம் சொன்னார் அவர்.

கட்சி மாநாட்டில் உரையாற்றிய அச்சுதானந்தன் போராட்டம் தொடரும் என்றார். பிணராய் விஜயன் போராட்டம் தொடரும் என்றார். போராட்டம் தொடரும் என்றார் தேசியச் செயலர் சீத்தாராம் எச்சூரி. தொடரும் என்றார் முதுபெரும் தலைவர் ஹர்கிஷன் சிங்க் சுர்ஜித். என்றார் பொலிட் பீரோ உறுப்பினர் பிரகாஷ் கராட்.

கட்சி மாநாடு முழுவதும் கைரளி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்பட்டது.

3 Comments:

At 10:52 pm, Blogger விடாதுபருப்பு said...

கொன்னுபுட்டிங்க போங்க.

 
At 2:25 am, Blogger Narain said...

இரா.மு, தோல்பாவை கூத்து தமிழகத்தில் காணக்கூடிய கிராமியக் கலையா ? நேரமிருப்பின் சொல்லுங்கள். காண ஆவலாய் இருக்கிறேன்.

 
At 10:36 pm, Blogger ந. உதயகுமார் said...

மலப்புரம் சமாசாரம் இன்று ஹிந்துவில் தலையங்கமாக வந்தது. உங்கள் பதிவை ஏற்கெனவே படித்து விட்டதால் அதைப் படிக்கையில் deja vu என்று நினைக்கத் தோன்றியது. புது வலைப் பதிவிற்கு வாழ்த்துகள்.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது