அட்ல சூடண்டி, ஹிட்ச்காக் காரு
காலையில் பத்திரிகை வந்து விழக் காத்துக் கொண்டிருந்தபோது கை விரல் தன் பாட்டுக்கு டெலிவிஷன் பெட்டியின் ரிமோட்டை அழுத்துகிறது. சானல் சானலாகத் தாவுகிற காட்சி. சகலமான மொழியிலும் போன, முந்தைய தலைமுறைக்காரர்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள்
தெலுங்கு சானலில் பழைய சினிமா பாட்டு சீன். புஷ்டியான கருப்பு வெள்ளை சுந்தரிகள் சேலை மாதிரி எதையோ தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தொம்தொம்மென்று தரையதிரக் குதிக்கிறார்கள். யாரோ ஒரு ராவ் கதாநாயகர். கைத்தண்டையில் கவசம் போல் மல்லிகைச் சரத்தைச் சுற்றிக்கொண்டு, அழுக்கு கலர் பாட்டிலிலிருந்து ஊற்றிக் குடித்தபடி அந்தப் பூகம்ப நாட்டியத்தை ரசித்ததவாறு திண்டு தலையணையில் சாய்ந்திருக்கிறார். காமிரா நகர, நாலைந்து கண்டா முண்டா ஆசாமிகள் அவசரமாக உருட்டி விழித்தபடி வாசல் கதவு பக்கம் நிற்கிறார்கள். வில்லனின் கையாள்களாக இருக்க வேண்டும். வில்லன் எங்கேப்பா?
காமிரா உள்ளறையில் எட்டிப் பார்க்கிறது. கள்ளச் சிரிப்பும், பென்சிலால் வரைந்த மீசையுமாக திடகாத்திரமான வில்லன். பாட்டும் ஆட்டமுமாகப் பக்கத்து ஹாலில் அமளிதுமளிப் படுவது கொஞ்சம் கூடப் பாதிக்காமல் அந்த ஆள் ஒரு பழைய டைப்ரைட்டரில் லொட்டு லொட்டு என்று டைப் அடித்துக் கொண்டிருக்கிறான். கவனம் சிதறி, டைப் அடிப்பதில் எழுத்துப் பிழை வராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவோ என்னமோ, எப்போதும் வாயில் புகையும் சிகரெட்டைக் கூடக் கொளுத்தாமல் சும்மா உதட்டில் பற்றிக் கொண்டிருக்கிறான்.
டைப் ஆகிக் கொண்டிருப்பது ஒரு ஸ்டாம்ப் பேப்பரில். நீள நீளமான வாக்கியங்களாக வந்து விழுவது ஏதோ சொத்து விவரம் என்று ஊகிக்க முடிகிறது. பாட்டு முடிவதற்குள் டைப் அடித்து முடிக்க வேண்டும். அப்புறம் சொத்தைத் தன் பெயருக்கு எழுதித்தரச் சொல்லிக் கதாநாயகனை மிரட்ட வேண்டும்.
பாட்டு முடியும் நேரம் எதிர்பார்த்தபடியே கையில் ஸ்டாம்ப் பேப்பரோடு அறைவாசலில் அவன். நான் இன்னதென்று சொல்ல முடியாத ஆத்திரம் கொப்பளிக்க, டிவியை நிறுத்தினேன.
பின்னே என்ன? வெளியே ஆடுகிற அழகி பாட்டு முடிந்த பிறகு பணத்தை வாங்கிக் கொண்டு பறந்து விடுவாள். அதற்குள் அவளுக்கு ஒரு ஹலோ சொல்லலாம். புறங்கையில் மல்லிகைப்பூவை இவனும் கேட்டு வாங்கிச் சுற்றிக் கொண்டு, அந்த அழுக்கு திரவத்தை இரண்டு மடக்கு குடிக்கலாம். லட்டு மாதிரி சந்தர்ப்பம் கிடைத்து ஹீரோவும் வேறு வசமாக மாட்டிக் கொண்டிருக்கிறான். பத்து ரூபாயை விட்டெறிந்திருந்தால் ரிஜிஸ்தர் ஆபீஸ் வாசல் தட்டச்சரோ, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்காரர்களோ சர்க்கார் மொழியில் மணிமணியாக அடித்து நீட்டியிருப்பார்கள் இந்த லீகல் டாக்குமெண்ட் சங்கதியை எல்லாம். கையைத் தட்டினால் எடுபிடி கொண்டு வந்து கொடுத்துப் போவான். இல்லை, அவனே வில்லன் சார்பில் மிரட்டி, பேனாவை மூடி திறந்து மசியை உதறிச் சரிபார்த்துக் கொடுப்பான். ஹீரோ கையெழுத்துப் போடட்டும், போடாது போகட்டும். வில்லன் கெத்தைக் கைவிடலாமா என்ன? கோர்ட் குமாஸ்தா மாதிரி சொத்துப் பத்திரத்தை டைப் அடிப்பதா வில்லன் வேலை?
இந்த விஷயத்தில் ஹாலிவுட் டைரக்டர் ஹிட்ச்காக் நம்ம கட்சி. அவர் பிரிட்டீஷ் காரர். இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குப் போய்ப் படம் எடுத்தவர்.
1940-ல் அவர் எடுத்த முதல் ஹாலிவுட் படம் ‘ரெபக்கா’. இந்தப் படத்தில் ஒரு பெண் வில்லனை (சரி, வில்லியை) அவர் சித்தரித்த விதத்துக்கு ஹாலிவுட்டே எழுந்து நின்று சலாம் போட்டு ஆஸ்கார் பரிசையும் தூக்கிக் கொடுத்தது.
அப்படி என்ன கதை ரெபக்கா படத்தில்? ஒரு கோடீஸ்வரப் பிரபு. முதல் மனைவியான ரெபக்காவை இழந்த இவன் ஓர் அழகியைக் காதலித்து இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு, தன் கோட்டைக்குப் போகிறான். அங்கே வீட்டை நிர்வகிக்கும் ஒரு மத்திய வயது ஸ்திரி. சீமானின் முதல் மனைவியான ரெபக்கா காலத்திலிருந்தே வேலையில் இருப்பவள். இந்த இரண்டாம் மனைவியின் வரவை அடியோடு வெறுக்கிற அவள், அந்தப் பெண்ணை வீட்டை விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அந்தப் பெண்ணும் இவளைக் கண்டாலே நடுங்க ஆரம்பிக்கிறாள்.
ரெபக்கா மேல் விசுவாசம், கிட்டத்தட்ட கண்மூடித்தனமான பிரியம் வைத்த இந்த நிர்வாகிப் பெண்தான் படத்தின் வில்லி. அவள் இரண்டாம் மனைவியைச் சந்திக்கும்போதெல்லாம் குரலை உயர்த்தாமல் மிரட்டுகிற காட்சிகள் படத்தின் சிறப்பு. இந்த வில்லி பாத்திரத்தின் கொடுமையைக் கூட்டாமல் குறைக்காமல் தர முடிவு செய்தார் ஹிட்ச்காக். எப்படி அதை நிறைவேற்றினார் என்பதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் -
“அந்த வில்லி வரும் காட்சி எதிலும் அவள் அறைக்குள் நுழைவதையோ, காட்சி முடிவில் அறையை விட்டு வெளியேறுவதையோ காட்டினால், அவள் பத்தோடு பதினொன்றாகியிருப்பாள். அந்தக் கதாபாத்திரத்தின் கொடூரம் மங்கிப் போகும். எனவே வில்லி தோன்றும் காட்சி எதிலும் மற்ற பாத்திரங்கள் உள்ளே வருவார்கள். போவார்கள். திடீரென்று வில்லி பேசுவது கேட்கும். காமிரா திரும்பிப் பார்க்கும்போது, அவள் அந்த அறையில் ஏற்கனவே இருப்பாள்.”
புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் லாரன்ஸ் ஒலீவியர் கதாநாயகனாகவும், ஜோன் பாண்டைன் அவரின் இரண்டாம் மனைவியாகவும் நடித்த ‘ரெபக்கா’வில் இந்த வீட்டு நிர்வாகி பாத்திரத்தில் வந்து புகழை அள்ளிக்கொண்டு போனது ஆஸ்திரேலிய நடிகையான ஜூடித் ஆண்டர்சன். பின்னாளில் இங்கிலாந்து அரசியார் வழங்கிய கவுரவ ‘டேம்’ பட்டம் பெற்றவர் இவர். (சர் பட்டம் ஆண்களுக்கு வழங்கப்படுவது; அதற்கு இணையான டேம் பெண்களுக்கு வழங்கப்படுவது), பட்டம் வழங்கியபோது இந்தம்மா ஏற்கனவே அறைக்குள் இருந்தாரா என்று தெரியவில்லை.
நாற்பதுகளில் வெளியான பிரபல தமிழ்ப்படம் ஒன்று. அப்போதெல்லாம் அரசர், சேனாதிபதி, மந்திரி, ராணி என்று யார் நாலுவரி வசனம் பேசினாலும், ஒரு குறிப்பிட்ட இனத்தின் பேச்சு மொழியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். இந்தப் படத்தில் ராஜா தான் வில்லனும் கூட. கதாநாயகி அரண்மனையிலிருந்து தப்பிக்கும்போது கொடுமைக்கார ராஜாவின் விசுவாசமான ஊழியர்கள் ஊதுகுழலை உரக்க ஊதுவார்கள். ஒரு நொடியில் படை வீரர்கள் திரண்டு வந்து கதாநாயகியைச் சுற்றி வளைப்பார்கள். மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க, வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”.
அட்டகாசமாகச் சிரித்தபடி அடித்தொண்டையிலிருந்து உறுமிச் சொல்ல வேண்டிய சங்கதியை இப்படி திவச மந்திரம் மாதிரி வில்லன் மொழிந்ததை அந்தக் காலத்தில் ரசித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்.
வில்லனோடு சம்பந்தமில்லைதான். அரசியல்வாதி ஒருத்தர் சில ஆண்டுகள் முன்னால் சொன்னது இது - “நான் நாட்டியம், சங்கீதக் கச்சேரி எல்லாம் போகமாட்டேன். இந்த மாதிரியான ரசனைகள் நம் பெர்சனாலிட்டியைத் தொளதொளாவென்று ஆக்கி விடும்”.
ஹிட்ச்காக் இருந்தால் இதைக் கேட்டு மகிழ்ந்ததோடு, இவரைக் கதை வசனம் எழுத வைத்து ஒரு தமிழ்ப் படத்தையும் எடுத்திருப்பார்!
தினமணி கதிர் - சற்றே நகுக - 26 ஜூன் 2005
5 Comments:
எக்ஸ்ப்ளோரர் சரியாக வேலை செய்யவில்லை. ஃபையர் பாக்ஸ் வழியே உங்கள் பதிவை படிக்க பார்த்தால், முடியவில்லை. வார்ப்புருவில் align = justify
என்று எங்காவது இருந்தால் அகற்றிவிடுங்கள் . நன்றி
வாசன்
வாசன், நன்றி. மாத்திட்டேன்.இப்ப சரியா வருதா பாருங்க.
//மின்னல் வேகத்தில் இப்படிப் பிடிபட்ட கதாநாயகி மருட்சியோடு பார்க்க, வில்லன் விளக்குவான் - “அவா ஊதினா இவா வருவா”.//
ரஞ்சன் நல்ல charisma உள்ள நடிகர். ஏர்·போர்ஸிலோ, நேவியிலோ வேலை செய்து விட்டு வந்து நடிகர் ஆனவர். சின்ன வயசிலேயே விபத்தில் இறந்து போனார். அவர், இந்தப் படத்தில்- மங்கம்மா சபதம் - ஆஷா மையில் மீசை வரைந்து கொண்டு, இடுப்பில் கை வைத்துக்கொண்டு , வில்லத்தனம் ( anti-hero) செய்வதைப் பார்க்கும் போது - நம்பியார், அசோகன், ராம்தாஸ் வகையறா எல்லாம் பார்த்து ஓய்ந்த காலத்தில் - காமெடியாக இருக்கும். அதை விட, அதற்கு வசுந்தரா தேவி பயப்படும் அழகு.. ரொம்ப அழகு...இந்தம்மாளின் பெண்ணே இப்போ கிழவியாகிவிட்டார். சமீபத்தில் படித்தேன். ஆரம்ப காலத்தில், தேவருக்கும் , எம்.ஜி.ஆருக்கும் நடுவில் ஏதோ பிரச்சனை வந்ததாம். அந்தச் சமயத்தில் ரஞ்சனை ஹீரோ வாகப் போட்டு, நீல மலைத் திருடனை எடுத்தார். எம்.ஜி.ஆர் படம் மாதிரியே இருக்கும். படம் நல்ல வெற்றி. பிறகு சில படங்கள். அதற்குள், இருவரும் ராசியாகி விட, பின், எம்ஜிஆர்-தேவர் காம்பினேஷனில் நிறைய படங்கள் வந்ததாம்.
நன்றி இரா.மு. தற்போது ஃபையர் பாக்ஸ் லும் நன்றாக படிக்க முடிகிறது.
prakash`s info adds interest to the blog.
Post a Comment
<< Home