Sunday, July 03, 2005

கோர்ட் எழுத்து


'பதவியிலிருந்து ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பும் எழுத்தாளர் சேதுவுக்குப் பாராட்டு விழா'.

வாசித்துக் கொண்டிருந்த மலையாளப் பத்திரிகையில் படத்தோடு நாலு காலம் பெட்டி கட்டிச் செய்தி.

மலையாளத்தில் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான சேது என்ற சேதுமாதவன் தான் வகித்த சௌத் இந்தியன் வங்கியின் நிர்வாகத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் சொந்த ஊரான ஆலுவாய்க்குச் சென்ற வாரம் புறப்பட்டபோது, திருச்சூர் நகரில் பெரிய விழாவெடுத்துக் கவுரவித்ததுதான் மேற்படி செய்தி.

சேதுமாதவன் ரிடையர் ஆனது மட்டுமில்லை. ஆயுர்வேத வைத்தியரின் அறுபதாவது பிறந்தநாள் விழாவில் மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவருக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்தது, கல்லூரி ஆண்டுவிழாவில் எழுத்தாளர் முகுந்தன் சொற்பொழிவு, பள்ளிக்கூட நிகழ்ச்சியில் எழுத்தாளர் சி.வி.ஸ்ரீராமன் உரை, பிளாச்சிமடை குளிர்பானத் தொழிற்சாலையை அடைத்துப் பூட்டவேண்டியதன் அவசியம் பற்றிப் போன ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு பெற்ற சாரா ஜோச•ப் மற்றும் கவிஞர் சுகதகுமாரி தெரிவித்த கருத்துகள், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பிரபல எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற சுரையாவின் நீளமான பேட்டி.

தினசரி ஏதாவது ஓர் எழுத்தாளரின் பெயர் செய்தியில் அச்சடித்து வராவிட்டால் அல்லது கேபிள் டிவி சேனலில் முகம் தட்டுப்படாவிட்டால், கேரளச் சோதரருக்குப் பத்திரிகை படித்த திருப்தி ஏற்படாது என்று சொல்ல வைக்கிற அளவுக்கு மலையாள எழுத்தாளர்களுக்கு நியூஸ் வால்யு இருக்கும்போல.

இந்த விஷயத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கு அதிர்ஷ்டம் ஆகக் குறைவு. அவர்கள் ஏறக் குறைய சாதுப் பிராணிகள். சாதாரணமாக யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். தலை போகிற, போகாத எந்த விஷயத்தைப் பற்றியும் முகத்துக்கு நேரே மைக்கை நீட்டி டெலிவிஷன் நிருபர்கள் கருத்துக் கேட்க மாட்டார்கள். இவர்கள் நிற்பதுவும், நடப்பதுவும் இருப்பதுவும் செய்தியாகவோ, ரெவின்யூ ஸ்டாம்ஸ் சைஸ் புகைப்படமாகவோ வராது. அதிர்ஷ்டம் இருந்தால், 'ஒரேயடியாகக் கிடப்பது' மூன்று வரியில் சிக்கனமாகக் ‘காலமானார்’ என்று தகவலாகி உதிர்ந்து போகும்.

இலக்கியச் சிறு பத்திரிகைகளில் நாய்ச் சண்டை, நரிச்சண்டை என்றெல்லாம் பெயர் வைத்தும் வைக்காமலும் அம்பு விட்டுக்கொண்டாலும், ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்ந்தால் வெட்டுப்பழி குத்துப்பழியாக அதெல்லாம் உருவெடுக்காமல், உடுப்பி ஓட்டல் படியேறி, கொத்துமல்லிச் சட்னியோடு மெதுவடையும் ரெண்டு கோப்பை சர்க்கரை ஜாஸ்தி, ஸ்ட்ராங்க் காப்பியுமாகக் கழித்துவிட்டுப் ஓட்டல் பில்லை அடைப்பது யாரென்று பிரியமாகக் குட்டிச் சண்டை போட்டு இரண்டு தடவை காசு கொடுத்துவிட்டுச் சமாதானமாகப் பிரிவார்கள் இவர்கள்.

மிஞ்சி மிஞ்சிப் போனால் எழுத்துச் சண்டை வெண்டைக்காய் அளவு முற்றி, வக்கீல் நோட்டீஸ் விட்டுக் கொள்வார்கள். இது முன்சீப் கோர்ட்டில் சிவில் வழக்கில் முடிந்து நாலு காசு பார்க்கலாம் என்று நோட்டீஸ் தயாரித்து அனுப்பிய வக்கீல் எதிர்பார்த்தால் நோட்டீஸ் காத்த கிளியாக ஏமாந்து போக வேண்டியதுதான். சாதா அஞ்சலில் அனுப்பிய வக்கீல் நோட்டீசில் கேட்டுக் கொண்டபடியும் அதற்கு இன்னும் அரை அங்குலம் குனிந்தும் மன்னிப்புக் கேட்டு எதிர்வாதி பதில் எழுதி மின்னலென விரைந்து கூரியரில் அனுப்ப எல்லாம் சுபம். இரண்டு தரப்பும் களைப்புத் தீர நாலு மாதம் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த சாயாக் கோப்பை புயல் தொடங்குவதற்குள் ஆதரவாளர்கள் மொத்தம் எட்டுப்பேர், இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அங்கேயிருந்து இங்கேயும் சாடிக் குதித்துப் போயிருப்பார்கள்.

தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்ட பரம்பரைக் கதைகளிலும் யாப்பு இலக்கணத்துக்கு வணங்காமல் தளைதட்டி, தப்புத் தப்பாகக் கவிதை எழுதிய புலவனின் காதை அறுக்கிற வில்லிப்புத்தூரானைத் தவிர வேறே சேடிஸ்ட் ஆத்மாக்கள் கிடைப்பது அபூர்வம்.

தெற்குப் பகுதிக் கிராமங்களில் முன்பெல்லாம் தண்டட்டி மாட்டித் தொங்கிப் போய் அறுந்த காதை ஒட்ட வைக்கும் நுட வைத்திய சாலைகள் டூரிங்க் சினிமா டாக்கீஸ் இடைவேளை நேர கலர் ஸ்லைடுகளில் விளம்பரமாக வரும். வில்லிப்புத்தூரான் நுடவைத்திய சாலை நடத்தி, புதுசாகக் கவிதை பாடிய கோயிந்தசாமிப் புலவனின் காதை அறுக்காத சமயங்களில், நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா என்று இலக்கணம் போதித்தபடி, ஏற்கனவே அறுத்த காதுகளைச் சலுகைக் கட்டணத்தில் ஒட்டி வைத்தியம் பார்த்திருக்கலாம். அதனால், தமிழ் இலக்கியத்துக்கு இன்னொரு காதோ கவிதையோ கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.

தமிழில் முதல் நாவல்களில் ஒன்று 'கமலாம்பாள் சரித்திரம்'. முதல் நாவலே அதுதான் என்று இலக்கிய விமர்சகர் கைலாசபதி பிரகடனப்படுத்தியபோது கூட தமிழ் மண்ணில் வம்பு வழக்கு ஏதுமில்லை என்பது வேறு விஷயம். இந்த நாவலில் தமிழ்ப் புலவர் ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளையும் அம்மாபட்டி கவிராயரும் அன்னப் பறவை என்பது ஒரு பட்சியின் பெயரா இல்லை சாப்பிடுகிற வெள்ளையரிசிச் சோறான அன்னம் தானா அது என்று நாள் கணக்காக, ராப்பகலாக சொற்போர் நடத்துவார்கள். வாக்குவாதம் கைகலப்பில் முடிய, நடுராத்திரி ரோந்து வந்த காவலர்கள் படைப்பாளிகள் சண்டையில் சர்க்கார் தலையிடக் கூடாது என்பது தெரியாததால் அவர்களைப் பிரித்து விடுவார்கள். வெளியூர்க் கவிராயர் தன் ஊர் திரும்பி தான் வெற்றிக்கொடி நாட்டியதாக முழக்கமிட, பிள்ளைவாள் எதிரி திரும்பிப் போனதை ஒரு முறைக்கு இரு முறை விசாரித்து நிச்சயம் செய்து கொண்ட பிறகு, தன் வரலாறு காணாத வெற்றி பற்றிச் சொந்த ஊரில் எட்டுத் திசையும் கொட்டி முழக்குவதாகக் கதை போகும்.

ஆக, பழைய இலக்கியம், முதல் நாவல் என்று சகலமான சங்கதிகளிலும் அபூர்வமாகவே படைப்பாளிகளின் மோதல் நிகழ்ந்து கொண்டிருந்த தமிழில், நூறு வருடம் முன்னால் ஒரு நிஜப் பரபரப்பு. அருட்பா மருட்பா வழக்கு என்று பிரசித்தமான அறிஞர் மோதல் அது.

அருட்பா எழுதிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளை எதிர்த்து யாழ்ப்பாண ஆறுமுக நாவலர் வழக்குத் தொடர்ந்து வள்ளலார் கோர்ட்டில் படி ஏற வேண்டிவந்தது. நாவலரைப் பற்றி ஏதும் பேசவோ எழுதவோ வேண்டாம் எனக் அவர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே, இரு தரப்பு தரவாளர்களுக்கும் இடையே நடந்த பிட் நோட்டீஸ் யுத்தங்களின் மொழிநடையை இப்போது கைக்கொண்டால் அதற்கே ஏழெட்டு மானநஷ்ட வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்.

நம் முன்னோருக்கு எது தெரிந்ததோ இல்லையோ, வக்கணையாக, எதுகை மோனையோடும் கற்பனை வளத்தோடும் திட்டத் தெரிந்திருந்திருந்தது என்பது இந்தப் பிரசுரங்களைப் படித்தால் புலனாகும்.

இது இப்படி இருக்க, எழுத்தாளர்கள் பவுடர் போடாத செய்தி நட்சத்திரங்களாகும் மலையாள இலக்கிய உலகில், அவர்களுக்கு நடுவே மோதலும் காத்திரமான நட்சத்திர அந்தஸ்தோடு நடப்பது சுவாரசியமான விஷயம்.

எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துள்ள (குஞ்சப்துல்லா) இன்னொரு எழுத்தாளரான டி.பத்மநாபன் மேல் ஒரு வருடம் முன்பு வழக்குத் தொடர்ந்தார். சாதா சிவில் வழக்கு இல்லை. கிரிமினல் கேஸாக்கும். பத்மநாபன் 'பச்ச மலயாளம்' பத்திரிகையில் கடந்த டிசம்பரில் எழுதியது தன்னை அவமானப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்று குஞ்சப்துல்லாவின் புகார்.


டி.பத்மநாபன் சீனியர் எழுத்தாளர். நாவலே எழுத மாட்டேன் என்ற வைராக்கியத்தோடு முழுக்கச் சிறுகதையில் ஈடுபட்டவர். இவருடைய எந்தக் கதையிலும் முக்கியக் கதாபாத்திரம் ஒரு பெயரில்லத 'அயாள்' (அவன்) தான். சிறுகதையோடு ரோஜாச் செடி வளர்ப்பதிலும் ஈடுபாடு கொண்ட இந்த ரிடையர்ட் அரசாங்க அதிகாரியை எதிர்க்கும் குஞ்ஞப்துல்லா நாவலாசிரியர். மருத்துவர். வளைகுடா மலையாளி.

கோழிக்கோடு மாஜிஸ்ட்றேட் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. சாட்சிக் கூண்டில் ஏறியவர் இன்னொரு மலையாள எழுத்தாளரான வி.ர். சுதீஷ். தனக்குக் குஞ்சப்துல்லாவோடு பதினைந்து வருட நட்பு உண்டென்றும், முதிர்ந்த எழுத்தாளர் என்ற முறையில் பத்மநாபன் மேல் மதிப்பு உண்டென்றும் குறிப்பிட்ட சுதீஷ், குஞ்சப்துல்லாவின் நாவலான 'பரலோகம்' காப்பியடித்து எழுதப்பட்டது அல்ல என்றும் குஞ்சப்துல்லாவே சுயமாகக் கற்பனை செய்து எழுதியதென்றும் கோர்ட்டாரிடம் தெரிவித்தார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இப்படி ஒன்றல்ல, எட்டுத் தடவை வழக்கை ஒத்தி வைத்து வைத்து அலுப்படைந்து போனார் நீதிபதி. பிரதிவாதி பத்மநாபன் ஜரூராக நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் ஆஜரானாலும், வாதி குஞ்ஞப்துல்லா அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.

அவருக்கே இல்லாத அக்கறை நமக்கெதற்கு என்று நீதிபதி போன வாரம்தான் வழக்கைத் தள்ளுபடி செய்து பத்மனாபனை வீட்டுக்குப் போங்க சார் என்று அனுப்பி வைத்தார்.

'பச்சை மலையாளம்' பத்திரிகை இன்னமும் வருகிறதா என்று போன வாரம் ரிடையராகி பத்திரிகையில் முக்கியச் செய்தியான மலையாள எழுத்தாளர் சேதுவிடம் கேட்டு ஈ-மெயில் அனுப்பியிருந்தேன். பத்து வருடமாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறையச் சேர்ந்து போனதாகவும், ஆலுவாயில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் அதையெல்லாம் வாசித்துத் தீர்ப்பதே முதல் வேலையாக இருக்கும் என்றும் பதில் அஞ்சல் அனுப்பிய சேது சார் பச்சை மலையாளம் பற்றி ஏதுமே சொல்லவில்லை.

சர்ச்சையிலிருந்து விலகி இருப்பதில் அவரும் தமிழ்ப் பாடம் படிக்கிறார் போல் இருக்கிறது.

(An abridged version of this article was published in my weekly column ‘SatRe Nakuka’ in Dinamani Kadir 19.6.2005)

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது