Friday, July 08, 2005

ஆக்காண்டி

பெயரிலி பதிவில் நான் குறிப்பிட்ட சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை இதுதான் -


ஆக்காண்டி

- சன்முகம் சிவலிங்கம்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?

கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சுக் கிரை தேடி
நாலுமலை சுற்றி வந்தேன்.
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்த தென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்.
கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்.
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்.

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை.
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை.

கண்ணீர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே.
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

வண்டில்கள் ஓட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.
கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்.
கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்.
நெய்யும் தறியிலே
நின்று சமர் செய்தேன்.
சீலை கழுவி
சிகையும் அலங்கரித்தேன்.
வீதி சமைத்தேன்.
விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்.
ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை.

காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்.
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே.
விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே.

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை.
வீடுகள் பற்றுமென்று
விம்மியழவில்லை.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்.
பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்.
கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்.
வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்.

கொல்லன் உலையும்
கொடுந் தொழிற் சாலையதும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்.

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார் -
பொல்லாத கோபங்கள்
பொங்கி வரப் பேசுகின்றார்.

'கடலும் நமதன்னை
கழனியும் நமதன்னை
கொல்லன் உலையும்
கொடுந் தொழிற்சாலையதும்
எல்லாம் நமது" என்றார்.
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்.

எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கி வரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்

ஆனவரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் காணேன்
போனவரைக் காண்கிலனே.

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கு முட்டை வைத்தாய்?
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்.

(நன்றி - திரு பத்மனாப ஐயர்)

3 Comments:

At 2:23 am, Blogger -/பெயரிலி. said...

அன்பின் முருகன், இதன் ஒரு வடிவம், மதியின் சண்முகம் சிவலிங்கம் பதிவிலேயும் இன்னொரு வடிவம் சந்திரவதனாவின் பதிவிலும் இருக்கின்றது. நான் இதனைப் பாடலாக ஒலியவடிவிலே இணையத்திலே இருப்பது குறித்துச் சொன்னேன்.

 
At 2:31 am, Blogger -/பெயரிலி. said...

tamilwebradio என்று ஞாபகம்; ஒரு சின்னக்குழந்தை பாடியதாக இந்தப்பாடல் பதியப்பட்டிருந்தது. இப்போது இருக்கின்றதா என்று தெரியவில்லை.

 
At 8:06 am, Blogger era.murukan said...

நன்றி பெயரிலி. நானும் ஒலிவடிவத்தைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இந் தக் கோப்பு கிடைக்கவே வரிவடிவத்தை இட்டேன். நல்ல விஷயம் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பது நல்லதுதானே? :-)

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது