Saturday, July 09, 2005

ஓட்டக்காரன் குறிப்புகள்

இருபத்தைந்து வருடம் முன்னால் தில்லியில் சமாதிகளுக்கு நடுவே ஓடிக் கொண்டிருந்தேன்.

வேறே ஒன்றுமில்லை. தில்லி டிபன்ஸ் காலனி வங்கியில் உத்தியோகம். தொட்டடுத்த லாஜ்பத்நகரில் குடித்தனம். பிரம்மச்சாரி நடத்துகிற குடித்தனம் எல்லாம் எதிலே சேர்த்தி? உருப்படியான அரசாங்கத் தயாரிப்பான மாடர்ன் பிரட், எப்பவாவது தோன்றினால் அரிசி வேகவைக்க இன்னொரு உருப்படியான அரசு உற்பத்திப் பொருளான நூதன் ஸ்டவ், அரசாங்க மதர் டயரி பால்பண்ணையிலிருந்து கட்டை குட்டை போத்தலில் இந்தி வாடையோடு கிட்டும் கொழுப்புச் சத்து குறைந்த பால்.

இப்படி அரசாங்கமே பிரம்மச்சாரிகளைத் தத்து எடுத்து வளர்த்ததால் கல்யாணம் எல்லாம் என்னத்துக்கு என்று அசிரத்தையோடு இருந்த காலம். விடிகாலை எழுந்ததும் பேங்குப் பரீட்சைக்குப் படித்த நேரம் போக, உடல் பயிற்சிக்கென்று ஆனது.

லாம்ப்ரட்டா ஸ்கூட்டரை நானூறு உதை விட்டு ஸ்டார்ட் செய்து தொண்ணூறு விழுக்காடு தேகப் பயிற்சியை முடித்து, மீதி பத்து சதவிகிதத்தை லோதி கார்டன் என்ற முகலாயர் காலத் தோட்டத்தில் அங்கே இருக்கிற இப்ரஹிம் லோதி மற்ற லோதி வம்ச சுல்தான்கள், மகாராணிகள் கல்லறைகளைச் சுற்றி ஓடுவதில் நிறைவு செய்து கொண்டிருந்தேன்.

ஓடும் போது உற்சாகமளிக்கவோ என்னமோ, பிரட்டும், ஸ்டவ்வும், பாலும் கொடுத்துப் போஷித்த அந்தக்கால மத்திய அரசான ஜனதா சர்க்காரின் துணைப் பிரதமர் சவுதிரி சரண்சிங்க் தினசரி வாக்கிங்க் போக என் பாதையில் வருகிற வழக்கம். அந்த வயசர் அரசியல் சதுரங்கத்தில் எந்தக் காயை எங்கே நகர்த்தலாம் என்று யோசித்தபடி மெல்ல நடக்கும்போது, நான் ஓடி முடித்து பக்கத்து கன்னடா ஸ்கூல் மெஸ்ஸில் இப்போது போனால் இட்டிலி கிடைக்கும் இன்னும் பத்து நிமிஷம் கழித்துப் போனால் பொங்கலும் கிடைக்கும் என்று கணக்குப் போட்டபடி ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டிருப்பேன்.

பதினைந்து வருடம் முன்னால் மும்பை மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் விரிந்து கிடக்கும் ஜிம்கானா கிளப்பில் விடிகாலையில் ஓட ஆரம்பிக்க, அவசரமாகப் புடவையைப் போர்த்திக் கொண்ட பெண்ணும், பைஜாமாவை இறுக்கியபடி ஆணும் மராத்தியில் இரைய ஆரம்பித்தார்கள். ராத்திரி காற்றாடப் படுத்திருந்த ஜோடிகள் எத்தனை என்று கணக்குப் போடுவதற்குள், தூரத்திலிருந்து பறந்து வந்த கிரிக்கெட் பந்து தலையைப் பதம் பார்த்தது. லோக்கல் டிரெயினைப் பிடிக்க தாதர் ஸ்டேஷனிலும் சத்ரபதி சிவாஜி டெர்மினலிலும் நித்தியப்படிக்கு ஓடுவதே போதும் என்று ஞானோதயம் ஏற்பட்டது அப்போதுதான்.

ஐந்து வருடம் முன்னால் கலிபோர்னியா சான் ஓசேயில் வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்த அலுவலகத்துக்கு, கார் இல்லாத காரணத்தால் தினசரி ஓடிக் கொண்டிருந்த ஒரே பிரகிருதி நானாகத்தான் இருக்கும் என்ற நினைப்பில் மண்விழ ஓட ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து நாலைந்து வெள்ளை, கறுப்பு அமெரிக்கர்கள் மற்றும் மெக்சிகோகாரர்கள் படுகுஷியாகக் கம்பெனி கொடுத்ததோடு சாயந்திரம் அலுவலகம் முடிந்தும் திரும்ப அவர்கள் கூட ஓடச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

இரண்டு வருடம் முன்னால் லண்டன் கென்ஸிங்க்டன் பூங்காவில் ஓடக் கிளம்பியபோது, எதற்கும் அவ்வப்போது பின்னால் திரும்பிப் பார்த்தபடி ஓடிவிட்டு வா என்று நண்பர் எச்சரித்து அனுப்பினார். பூங்காக்களில் வழிப்பறி நடக்கிற மாநகரம் ஆதலால் இப்படி ஒரு முன் ஜாக்கிரதை நடவடிக்கை. இதைப் பின்பற்றி நான் பத்து அடிக்கு ஒருமுறை நின்று அரைவட்டம் சுழன்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டப்பிங் தெலுங்கு சினிமாவில் மந்திரவாதியின் உதவியாளன் போல் கேணத்தனமாக ஓட, வயதான பிரிட்டீஷ் சீமாட்டி ஒருத்தி சங்கிலி போட்டு இழுத்து வந்த சின்ன நாய்க்குட்டி ஏகத்துக்கு மிரண்டுபோய், 'நாய்கள் கழிவறை' என்று அறிவிப்புப் பலகை வைத்த இடத்தை அடைவதற்கு முன்னாலேயே பார்க்கில் அசுத்தம் செய்தது. அந்தத் துரைசானியம்மா வெட்கம் பிடுங்கித் தின்ன, தலை தாழ்த்தியபடி என்னைக் கடந்து போனாள்.

போனவாரம் சென்னையில் பொலபொலவென விடிந்த வாரக் கடைசியில் ஓட ஆரம்பித்தேன்.

கிளம்பும்போதே இம்சைகள் எட்டிப் பார்த்தன. ஜூன் மாதம் சென்னையில் வியர்வையில் தொடங்கி வியர்வையில் முடிகிற ஒன்று. உடுத்தியிருந்த எட்டு முழ வேட்டியைக் களைந்துவிட்டு ஜீன்ஸுக்கு மாறி, முரட்டு சாக்ஸையும் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஷுவையும் காலில் மாட்டுவதற்குள் தொப்பலாக நனைந்தாகி விட்டது. வேட்டி கட்டியே போகலாம்தான். வேட்டி கட்டிக் கொண்டு ஓடினால், பர்ஸைப் பறிகொடுத்து விட்டுக் கையறு நிலையில் ஓடுகிறதுபோல் இருக்கும்..

ஷார்ட் போட்டுக் கொண்டு ஓடலாம். போன நூற்றாண்டுத் தாத்தாவிலிருந்து மீசை முளைத்துக் கொண்டிருக்கும் புத்திளைஞன் வரை அரை டிராயரில் சகலமான இடத்துக்கும், சகல விதமான வாகனங்களிலும், நடந்தும் ஓடியும் கொண்டிருப்பது பழக்கமான காட்சியாகி விட்டது. ஆனாலும், பத்து வயதில் விழுத்துப் போட்ட நிஜாரைத் திரும்ப மாட்டிக் கொள்ள மனசு வரமாட்டேன் என்கிறது.

அப்புறம் செல்·போன். தில்லியிலும், மும்பையிலுமிருந்து அழைக்கக் கூடியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து தாடையைச் சொறிந்து கொண்டிருப்பார்கள். இல்லை, வாக்கிங்க் போக ஷ¥வைக் கட்டிலுக்கு அடியில் தேடிக் கொண்டிருப்பார்கள். ஆஸ்திரேலியாவில் இப்போது பகல் சாப்பாட்டு நேரம். அமெரிக்காவில் இன்னும் நேற்று ராத்திரி ஒன்பது மணி. யாராவது இங்கேயிருந்தெல்லாம் நினைத்துக் கொண்டு கூப்பிடலாம்.

செல் தொலைபேசியும் சட்டைப் பையில் ஏறி இடத்தை அடைத்துக் கொள்ள, அடுத்து மூக்குக் கண்ணாடி நானும் வரேனே என்றது. வழியில் அங்கங்கே கேபிள், சாக்கடைக் குழாய், தண்ணீர்க் குழாய் என்று காரணம் வைத்தோ இல்லை சும்மாப் பள்ளம் தோண்ட வேண்டும் என்பதற்காக வெட்டியாக வெட்டிப் போட்டோ வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் பார்க்காமல் நடந்தால், அல்லது ஓடினால் அப்புறம் அடுத்த ஓட்டம் சொர்க்கத்திலா அல்லது இதே தரத்தில் இருக்கும் நரகத்திலா என்று தெரியாது. கண்ணாடி இருந்தால் இது தள்ளிப்போக வாய்ப்பு.

ஆக, புறப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்கு அப்புறம் முழுக்கத் தயார் நிலையில் தெருவில் இறங்கியானது. ஓட்டமும் நடையுமாக எதிரில் வரும் மொபசல் பஸ்களையும், காய்கறி ஏற்றிவரும் டெம்போ, தண்ணீர் லாரிகளைத் தவிர்த்து, நாலு வீதி சுற்றிப் பூங்காப் பக்கம் திரும்புகிறேன்.

வெளிநாட்டிலிருந்து படைபட்டாளமாகக் கிளம்பி நாலு நாள் நல்லெண்ண விஜயமாக வந்திறங்கிய தூதுக்குழு தேசியத் தலைவர் சமாதியில் மலர் வளையம் வைத்து டெலிவிஷன் காமராக்களுக்குத் தீனி போட்டபடி சுற்றி வருகிறது போல், ஒரு பெருங்கூட்டம் பூங்காவுக்குள் சுற்றுப்பாதையில் நெருக்கியடித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓட்டமும் இல்லை. நடையும் இல்லை. ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்.

நான் வந்த வழியே திரும்ப ஓடுகிறேன்.

(தினமணி கதிர் 'சற்றே நகுக' 26 June 2005)

4 Comments:

At 4:01 am, Blogger Balaji-Paari said...

:)

 
At 4:23 am, Blogger jeevagv said...

ஓட்டக்காரன்...மலையாள மஞ்சரியோ என நினைத்தேன்...தலைநகரில் தடகள வீரரானது படித்தபின் புரிந்தது!

 
At 2:25 pm, Blogger Pavals said...

//ஒரு பெருங்கூட்டம் பூங்காவுக்குள் சுற்றுப்பாதையில் நெருக்கியடித்து நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓட்டமும் இல்லை. நடையும் இல்லை. ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்.//
நடசேன் பார்க்'கிலா? 2001ல் சென்னையில் இருந்த போது, பார்த்தது, இதுக்கு இவுங்க நடக்காமலே இருக்கலாமேன்னு தொணிச்சு.. :-(

 
At 10:37 pm, Blogger Boston Bala said...

Run Murugarey Run ;-)

 

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது