இவிடம் நாவிற்கினிய எள்ளுப் புண்ணாக்கு
அது என்னமோ தெரியவில்லை. சுவாரசியமான அறிவிப்புப் பலகைகள் என்னை விடாமல் துரத்துகின்றன.
ஒரு மழைக்கால சாயந்திரத்தில் கையில் உயர்த்திப் பிடித்த குடையோடு புறநகர் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்தபோது கண்ணில் பட்டது இது -'இவ்விடம் நாவிற்கினிய அரிசி, குருணை, தவிடு மற்றும் எள்ளுப் புண்ணாக்கு கிடைக்கும்.'
அடுப்பில் ஏற்றி வடித்தால் பொலபொலவென்று மல்லிகைப்பூ வெண்மையோடு சோறாக உதிரும் அரிசி இந்த நாக்கு இருக்கும் வரை சுவையானதுதான். குருணை? நாலு நாள் காய்ச்சலில் நாக்கு வறண்டு போய் முடங்கும்போது, அல்லது டயட்டில் இருக்கச் சொல்லி டாக்டர் கட்டளை போடும்போது, கஞ்சி வைத்து ஒரு துண்டு நார்த்தங்காய் ஊறுகாயோடு சாப்பிட்டால் அதுவும் ஏறக்குறைய தேவாமிர்தம்தான். கோழிக்கும் போடலாம்.
அப்புறம் தவிடு? அதை எப்படிச் சாப்பிட்டு நாவிற்கு இனியது என்று சர்டிபிகேட் தருவது?
மாஸ்கோவில் தொழிற்சாலை அமைத்து, தவிட்டிலிருந்து பிஸ்கட் தயாரித்ததாக பழைய 'சோவியத் நாடு' வழவழ பத்திரிகையில் படித்த ஞாபகம். பத்து வருஷம் முன்னால் திடீரென்று ஒரு விடிகாலையில் அந்தப் பத்திரிகையும், அதை அச்சடித்து வெளியிட்ட சோவியத் யூனியனும் காணாமல் போக, மாஸ்கோ மட்டும் எஞ்சி நிற்கிறது. அங்கே தவிட்டு பிஸ்கட் தயாரிக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.
இதெல்லாம் கிடக்கட்டும். அறிவிப்புப் பலகையில் கடைசி ஐட்டமான எள்ளுப் புண்ணாக்கு. எத்தனை யோசித்தும் அதில் மறைந்திருக்கும் இனிமை என்ன மாதிரியானது என்று புரியாமல் கடைக்காரரிடமே கேட்டுவிட்டேன்.
"அது ஒண்ணுமில்லே சார். கோழித் தீவனம், மாட்டுத் தீவனம்னு விளம்பரப்படுத்தி இன்னும் ரெண்டு போர்டை நிப்பாட்டி வைக்கலாம்னா அப்புறம் நான் கல்லா போட்டு உட்கார இடம் இருக்காது. அதான் எல்லாத்தையும் ஒரே போர்டாக்கிட்டேன். "
ஒரே போடாக அவர் போட்டபோது அவருக்குப் பின்னால் தேவத்தூதனின் சிறகுகள் முளைத்திருக்கிறதோ என்று கொஞ்சம் எக்கிப் பார்த்தேன். இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்கும் பரிபக்குவம் வருவது லேசான காரியமா என்ன?
பெங்களூரில் குடியிருந்தபோது ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு எதிரே புதுசாகக் கடை திறந்தார்கள். "பன்ரி', "பன்ரி' என்று அன்பொழுக அழைத்துப் போய், விடிகாலையிலேயே நெய் ஒழுகும் ரவா கேசரி, போண்டா விளம்பி, கடையின் விளம்பரப் பலகையைத் திறந்து வைக்கச் சொன்னார்கள்.
ஆங்கிலத்தில் எழுதிய போர்ட் அது. "டோர் டெலிவரி. உங்கள் வீடு தேடி வந்து எல்லா மொழியிலும் பால், பத்திரிகை வினியோகிக்கப்படும். "
மொழிவாரியான பால்? எனக்கு உண்மையிலேயே குழப்பம். 'பால்' என்பது 'ஹால்' ஆகவும், 'பல்' என்பது 'ஹல்' ஆகவும் மாறும் கன்னட மொழி கம்பீரமாக வலம் வரும் புண்ணிய பூமியில் அரை லிட்டர் தமிழ்ப் பால் கேட்டால் வீடு தேடி வந்து 'ஹல்'லை உடைத்துவிடுவார்களோ?
கடை ஆரம்பித்த நண்பரிடம் விளக்கம் கேட்க அவர் தலையில் கால் நூற்றாண்டு முன்னால் முடி இருந்த இடத்தைச் சொறிந்தபடி சங்கடமாகச் சிரித்தார்.
"பத்திரிகை ஏஜன்சி மட்டும்தான் முதல்லே எடுத்தேன். பாக்கெட் பால் வியாபாரமும் வச்சுக்கலாம்னு வீட்டுக்காரிதான் ஒரே அடம். எழுதக் கொடுத்திருந்த போர்டுலே கடைசி நிமிசத்திலே அவங்க விருப்பத்தையும் சேர்த்துட்டேன். "
அதே பெங்களூரில், இன்னொரு நண்பரைப் பார்க்க அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏழாவது மாடியில் இருந்த வீட்டுக்குப் போயிருந்தேன். பக்கத்து பிளாட்டில் பெயர்ப் பலகையைப் பார்த்துக் குழம்பிப் போய் நின்றுவிட்டேன்.
'டாக்டர் அனுமந்தப்பா, கால்நடை மருத்துவர், அவசர உதவிக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்...'
அவசர உதவிக்கு ஆதிமூலமே என்று அழைத்தால் கருணாமூர்த்தியாக ஓடி வரும் வெட்டினரி டாக்டருக்கு எல்லா விலங்கினமும் நன்றி சொல்லும்தான். ஆனால் ஒரு பசுமாடோ, யானைக் குட்டியோ, ஆட்டுக் கிடாவோ எப்படி அந்த ஏழாம் மாடிக்குப் படியேறி வந்து வைத்தியம் பார்த்துக் கொள்ளும்?
"டாக்டர் புதுசாக் குடி வந்திருக்கார். கிளினிக்லே வச்சிருந்த ஒரு போர்டையே இப்ப சிரத்தைக்கு இங்கே மாட்டிட்டார்'' என்றார் நண்பர் என் திருதிரு முழிக்கு விடையாக.
முந்தாநாள் கண் மருத்துவரின் கிளினிக் வாசலில் பார்த்த 'புறக்கண் நோயாளிகளுக்கு இங்கே மருந்து தரப்படும்' என்ற அறிவிப்பு என்ன மாதிரியானது என்று யோசித்துக்கொண்டே கம்ப்யூட்டரைத் திறந்து இண்டர்நெட்டில் மேய்ந்தேன்.
ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகாத கண் நோயாளியான அவுட் பேஷண்ட் 'புறக்கண் நோயாளி' ஆன சூத்திரம் புரிந்தபோது, இணையத்தில் லத்தீன் மொழிப் பல்கலைக்கழகத்தின் தகவல் பக்கத்தில் இருந்தேன். கிடைத்த தகவல் இது -
'புராதன ரோம் நகரத்தில் துணிகளை பிளீச் செய்து தர நிறுவனங்கள் இருந்தன. பிளீச்சிங்குக்கு அமோனியா வேண்டுமே. அந்தக் காலத்தில் ஏது அமோனியா? அமோனியா நிறைந்த, அதாங்க ஒன் பாத்ரூமைத்தான் இந்தக் காரியத்துக்காக உபயோகப்படுத்தினார்கள். சலவைக்கடை வாசலில் பெரியதாகப் பள்ளம் தோண்டி, "இங்கே சிறுநீர் கழிக்கவும்' என்று அறிவுப்புப் பலகை வைத்து, நகர மக்களை வேண்டி விரும்பி அழைத்தார்கள்.
ரோமானியர்கள் பற்றி இன்னொரு செய்தியும் இணையத்தில் படிக்கக் கிடைத்தது. அவர்கள் பிளீச் செய்யப் பயன்படுத்தியது போக மீந்த மேற்படி திரவத்தை வாய் கொப்பளிக்கவும் உபயோகித்தார்கள். துர்நாற்றம் இல்லாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. ரோமாபுரியிலேயே லோக்கலாகக் கிடைத்தது தவிர, ஸ்பெயின் பிரதேசத்திலிருந்து வரவழைத்த சரக்குக்கும் ஏக டிமாண்டாம். அதி சக்தி வாய்ந்த கிருமிநாசினி இந்த வெளிநாட்டுப் பொருள் என்று பரவலான நம்பிக்கை.
'ரோமானியப் பேரரசின் இறக்குமதி லைசன்ஸ் பெற்ற கடை. இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஸ்பெயினிலிருந்து வந்த நயம்...'
அறிவுப்புப் பலகை கற்பனையில் துரத்த ஆரம்பிக்க, கம்ப்யூட்டரை அவசரமாக மூடினேன்.
தினமணி கதிர் - 'சற்றே நகுக' ஜூலை 17, 2005
5 Comments:
In my childhood, I used to get Ellu Punnaku with Vellam (as kosuru) from the oil shop when my father buys oil.
It is very tasty.
//இப்படி மனிதன், மாடு, கோழி என்று எல்லா உயிரினத்தையும் ஒரே தட்டில் அல்லது போர்டில் வைத்துப் பார்க்கும் பரிபக்குவம் வருவது லேசான காரியமா என்ன?//
Hilarious! LOL!
நக்கல் நகைச்சுவை!
சில வாரங்கள் உமி போன்ற ஒரு வஸ்துவை சாதத்துடன் கலந்து முழுங்கியதுண்டு. கன்னாபின்னாவென்று எகிறியிருந்த கொலஸ்றால்-ஐ கட்டுப்படுத்த சகதர்மிணி அவர்கள் வாங்கி சாப்பிட கட்டாயப்படுத்திய சீலியம் உமி பார்க்க அரிசி உமி போன்றே இருக்கும். சாதத்துடன் பிசைந்து உடன் முழுங்க வேண்டும். பயத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தால்,சாத உருண்டை ஊதிப்போக ஆரம்பித்துவிடும்!! உமியின் தன்மை அத்தகையது. கண்கள் நீர் வழிய சில தடவைகள் உள்ளே தள்ளிப் பார்த்து பின்னர் வேண்டாமென்று விட்டு விட்டேன்.
தவிடு சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில்லை, தவிட்டுக்கு விற்கப்பட்டவரின் மகனென்றாலும்!
நன்றி திரு.இராமு.
நாவிற்கினியன்னு தானே போட்டு இருந்தாரு, யாரோட நாக்குன்னு நீங்களா ஒரு Guess அடிச்சா எப்படி !
சிறந்த நகைச்சுவை.
அன்புடன்
ராஜ்குமார்
Post a Comment
<< Home