Friday, August 19, 2005

நலமில்லை, நலமறிய ஆவல் இல்லை


‘எழுதப்பட்ட வார்த்தைகளை விட, இன்னும் எழுதப்படாதவையே சுவாரசியமானவை என்று ஜென் புத்தமதக் குருமார்கள் சொல்லியிருக்கிறார்களாம். அல்லது வரும் பவுர்ணமியன்று சொல்ல உத்தேசமாம்.

எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் கடிதங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதும், எப்போதோ எழுதி அனுப்பி வந்து சேர்ந்து எல்லோரும் மறந்து போன பழைய கடிதாசுகளைத் தேடிப்பிடித்துப் படிப்பதும் இந்த ஆவலோடுதான்.

கல்ப கோடி காலம் முன்னால் நான் வீட்டுப் பரணில் குடைந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வீட்டில் வாசல்படி இருக்குமோ என்னமோ, பரண் கட்டாயம் இருந்தது. அங்கே என்ன என்ன அடைக்கலாம் என்பதற்கு விவஸ்தையே கிடையாது. ஆகவே பித்தளைக் குடம், சருவப் பானை முதல் தாத்தா காலத்துக் கனவுக் கன்னி படம் போட்ட சினிமா பாட்டுப் புத்தகம், நாலு ஆவர்த்தம் மாஞ்சா தடவி உருவேற்றிய நூல், அறுந்துபோன பட்டம் வரை தேடுகிறவர்களின் திறமைக்கும் பொறுமைக்கும் தகுந்தபடி கிட்டும். எனக்குக் கிட்டியது அரைக்கிலோ பழைய கடிதங்கள்.

அறுபது வருடமும் அதற்கு மேற்பட்ட பழமையும் உடைய அந்தப் புராதன வஸ்துக்களை நுனி வளைந்த இரும்புக் கம்பியில் எதற்கோ கழுவேற்றி வைத்திருந்தது.

உப்புப் பெறாத விஷயத்துக்காக வீட்டில் கோபித்துக் கொண்டு தேசாடனம் போன சொந்தக்காரர் ஒருவர் எழுதியது அதெல்லாம். ‘நான் சவுக்கியமில்லை. ஆலப்புழை கேளு நாயர் ஓட்டலில் காலை காரமாகப் புட்டும், சரியாக வேகாத கடலையும் சாப்பிட்டேன்’ என்று தடாரென்று பின்நவீனத்துவ இலக்கியம் மாதிரித் தொடங்கியவை பாதிக்கு மேல். கொச்சி, ஹுப்ளி, புனா, ஆக்ரா, ஹரித்துவார் என்று பல இடத்திலிருந்தும் எழுதிய தபால் அட்டைகள்.

அவை வழக்கமான சௌக்கியமில்லையில் தொடங்கி பலவித அசௌகரியங்களைக் கிரமமாகப் பட்டியலிடுவதை ஓட்டை விழுந்த பிரிட்டீஷ் போஸ்ட் கார்டின் ஓரத்தில் இங்கிலாந்து அரசர் தலையை நீட்டி அனுதாபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார்.

‘அன்னபூர்ணாவுக்கு மைசூர் ரசம் வைக்கச் சொல்லிக் கொடுத்தேன். உப்புப் போட மறந்து போகிறாள். ஆபிசுக்கு டிராமில் போகிறேன். ஒரே நெரிசல். வங்காளி பாஷை பேசக் கஷ்டம். யாராவது இங்கே வந்தால் ரசப்பொடி, நார்த்தங்காய் ஊறுகாய் அனுப்பவும். பல்லில் எகிறு வீங்கி ..’ என்று தொடங்கும் துயர அத்தியாயத்தோடு மூடிவைத்துவிட்டு பரணை விட்டு இறங்கினேன்.

இந்த ‘பங்க பந்து’ வீட்டுச் சண்டையையே சாக்காக வைத்து ஆல் இண்டியா டூர் அடித்து, கல்கத்தாவில் குடியும் குடித்தனமுமாகச் செட்டில் ஆகி, எத்தனை எழுதியும் தீராத ஏகப்பட்ட கஷ்டங்களைத் தொடந்து அனுபவித்தவர். அதே காலகட்டத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம், இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சின்னச் சின்னதாக அங்கங்கே வேறே என்னெல்லாமோ நடந்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

பரணில் ஏடு தேடியது அறுபதுகளில். (இப்படிப் பன்மையைப் போட்டால் அந்தக் காலத்துக்கே ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது!) அப்போது, ஆப்பிரிக்காவின் பல பாகங்களிலிருந்து எங்களுக்குக் கடிதம் வரும். எங்களுக்கு என்றால் எட்டு ஏ வகுப்பில் படித்துக் கொண்டிருந்த வானரக் கூட்டத்துக்கு. விடுமுறையில் எல்லா நாட்டுத் தூதரகத்துக்கும் எழுதிப் போட்டு வரவழைப்பது.

அதென்னமோ கானா, உகாண்டாவிலிருந்து எல்லாம் டாண் என்று மாதம் பிறந்ததும் தவறாமல் அனுப்பிவிடுவார்கள். கருப்பு வெளுப்பில் நிறையப் படம் போட்டு வரும் பத்திரிகைகளில் அந்த நாடுகளில் எப்போதுமே சந்தோஷமாக ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் மக்களையும், மைக்குக்கு முன்னால் உற்சாகமாகச் சொற்பொழிந்து கொண்டிருக்கும் தலைவர்களையும் பார்க்கலாம். திடீர் திடீரெனப் பழைய தலைவர்கள் காணாமல் போய்ப் புதுத் தலைகள் முளைக்க, மக்கள் என்னமோ எப்பவுமே மகிழ்ச்சிக் கடலில் தான்.

கம்ப்யூட்டரும் இண்டர்நெட்டும் வந்த பிற்பாடு கார்டும், இண்லண்ட் லெட்டரும் வாங்கி வந்து கடிதம் எழுத உட்காருவதைவிட, கம்ப்யூட்டரைத் திறந்து நொடியில் ஈ மெயில் அனுப்புவதும் பெறுவதுமே சுலபமான வேலையாகப் போய்விட்டது. இதிலும் சுவாரசியத்துக்குக் குறைச்சல் இல்லை.

நான் கேட்காமலேயே யார்யாரோ அமெரிக்காவிலிருந்து மின்னஞ்சல் அனுப்பி, மிசிசிப்பியில் வீடுகட்ட எனக்கு சகாய வட்டியில் முப்பதாயிரம் டாலர் வழங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள். மிசிசிப்பியில் வீட்டைக் கட்டிவிட்டு, சென்னையில் உத்தியோகம் பார்க்கத் தினம் எப்படி வந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ‘வாங்கிப் போடுப்பா, நான் இல்லே இப்போ’ என்று நண்பர் தைரியம் சொல்கிறார்.

‘சென்னைக்கு மிக அருகே அறுபதாவது கிலோமீட்டரில் சகல வசதியும் நிறைந்த குடியிருப்பில்’ வீடு கட்டிப் போனவர். கும்மிடிப்பூண்டி லோக்கலில் தினசரி வேலைக்கு வந்து திரும்பும் ரயில்நீள அனுபவம் அவர் சொல்லும் தைரியத்துக்குப் பின்னால் திடமாக நிற்கிறது.

உயரத்தை உடனடியாக உயர்த்த உத்திரவாதம் சொல்லி, மாத்திரை அனுப்புவதாக வாக்குத் தரும் ஈமெயில்கள் பத்தே பத்து டாலர் கொடுத்தால் போதும் என்கின்றன. திடீரென்று ஏழெட்டு இஞ்ச் உயர்ந்து, போன மாதம் தைத்த பேண்ட் கணுக்காலிலோ, முழங்காலிலோ நிற்கிற அசௌகரியமும், துணி விலை, தையல் கூலி, வாங்க நாலு தடவை வண்டியில் போன பெட்ரோல் செலவு என்று செலவழித்த பணம் பாழாகிற கவலையும் ஏற்படுவதால் மாத்திரை வேண்டாம் என்று தள்ள வேண்டியிருக்கிறது.

போனவாரம் ஆப்பிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அங்கே என் நெருங்கிய அல்லது தூரத்து உறவினர் ஒருத்தர் இருக்கிறார். அதாவது இருந்தார். அவர் பெயர்கூட கிட்டத்தட்ட என் பெயர் தான். அங்கே சர்க்காரில் பெரிய பதவி வகித்தாராம். என்னென்னமே தகிடுதத்தம் செய்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து வெளிநாட்டில் வங்கியில் எல்லாப் பணத்தையும் முதலீடு செய்துவிட்டு போன வருடம் இறந்து போய்விட்டார் பாவம். போகிற போது நான் தான் அவருக்கு ஒரே தாயாதியோ, பங்காளியோ என்று எப்படியோ தெரிந்து, எனக்கு அந்தச் சொத்தைக் கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார். மின்னஞ்சல் அனுப்பிய பொதுநல விரும்பிக்கு நான் என் பேங்க் அக்கவுண்ட் நம்பர், விலாசம் சொன்னால் போதும். பணத்தை அனுப்பி வைப்பாராம். அவருக்கு நான் முன் கூட்டியே யிரம் டாலர் இதற்கான செலவுகளுக்காக அனுப்பிவைத்தால் போதும்.

கோடிக் கணக்கில்ஆப்பிரிக்கப் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு அப்புறம் தூக்கம் வராமல் தவிக்கலாமா இல்லை தமிழ் சினிமா எடுக்கலாமா என்று பூவா தலையா போட்டுப் பார்க்கும்போது அடுத்த பிளாட் அனந்தாச்சாரி வந்தார். அவருக்கும் இதேபோல் ஒன்றல்ல, ஏழு கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். நெக்வே சாரி, உக்யோம்னோ சாரி, ம்னெயோபொ சாரி என்றெல்லாம் பெயர் கொண்ட அவருடைய ஆப்பிரிக்க சொந்தக்காரர்கள் அனைவரும் கோடி கோடியாக அவர் பெயரில் எழுதி வைத்துவிட்டுப் போன வருடம் இறந்து போய்விட்டார்கள். ஆயிரம் டாலர் அனுப்பினால் போதும் அதைப் பெற.

பணத்துக்குப் பதிலாகப் பத்துக் கிலோ ஆப்பிரிக்காவில் அச்சுப் போட்ட பழைய பத்திரிகை அனுப்பலாமா என்று விசாரிக்க வேண்டும். பரணில் இருக்கிறது.


(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஜூலை 31, 2005)

5 Comments:

At 1:55 am, Blogger ராம்கி said...

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.இப்போதும் புது வீடுகளில் வேண்டாததை போட்டு வைக்க பெரிய நவீன பரண்கள் இருக்கின்றன. அதில் நாம் வாங்கிய பழைய பத்திரிகைகள் தான் இருக்கின்றன.

 
At 2:57 am, Blogger Dharumi said...

எனக்கும் இந்த மாதிரி மெயிலக்ள் வந்தன. ஆயிரம் டாலர் அனுப்பலாமென நினைத்து எதுக்கும் இருக்கட்டுமேன்னு ஒரு கிளி ஜோஸ்யக்காரரிடம் கேட்க நினைச்சிருக்கேன்; உங்க ஏரியாவில கிளி ஜோஸ்யக்காரர் வந்தா இந்தப் பக்கம் அனுப்புங்க.

 
At 3:21 am, Blogger Balaji-Paari said...

:))

 
At 3:23 am, Blogger icarus prakash said...

//உயரத்தை உடனடியாக உயர்த்த உத்திரவாதம் சொல்லி, மாத்திரை அனுப்புவதாக வாக்குத் தரும் ஈமெயில்கள் பத்தே பத்து டாலர் கொடுத்தால் போதும் என்கின்றன. //

:-) :-) :-)

இதையெல்லாம் தினமணியிலே அலவ் பண்றாங்களா? :-) முந்தியெல்லாம் தினமணி கதிர் படிக்கிறதுக்கு, மனைமாட்சி பாக்கறாப்பல இருக்கும்

 
At 12:56 pm, Blogger Today's American Family said...

Hey. For funny cartoons check out
www.todaysamericanfamily.com

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது