Friday, August 12, 2005

பட்டாணியால் மூக்கை உருட்டி

நம்மோடு தான் நடக்கிறார்கள். ஆனாலும் தரைக்கு மேலே சற்றே, அதாவது ஒண்ணே முக்கால் மில்லி மீட்டர் உயரத்தில் மிதந்தபடி வருகிறார்கள். வித்தகர்கள் எனக்கு வியப்பை எழுப்புவது இப்படித்தான்.

"ஆஸ்திரேலியாவில் ஒரு வருடத்தில் ஒருவர் இருபத்தெட்டு புள்ளி ஒண்ணு கிலோகிராம் கோழிக்கறி சாப்பிட்டு, நூற்று நாலு புள்ளி ரெண்டு லிட்டர் பாலும், நூற்றுப் பத்தொன்பது புள்ளி ஒன்பது லிட்டர் குளிர் பானமும் குடிக்கிறார்”.

என்ன அங்கிள், சவுக்கியமா என்று உபத்திரவமில்லாமல் குசலம் விசாரித்தாலே பேச்சை எப்படியோ ஹைஜாக் செய்து இந்த மாதிரி புள்ளி விபரங்களைக் கொட்டும் ஒரு நெருங்கிய உறவினர் என் வீட்டிலிருந்து இருநூற்று ஐம்பத்தெட்டு கிலோமீட்டர் தூரத்தில் குடியும் குடித்தனமும் புள்ளியும் விவரமுமாக இருக்கிறார். இந்தக் கிலோமீட்டர் தகவலும் அவர் உபயம்.

கசாப்புக்கடையில் படியேற வேண்டும். தராசுத் தட்டில் எடைக்கல்லைப் பார்த்துப் பார்த்துப் போடவைக்க வேண்டும். இருபத்தெட்டு புள்ளி ஒண்ணு கிலோ வந்ததும் கையைப் பிடித்து இழுத்து நிறுத்த வேண்டும். அப்படியாக வாங்கிவந்த கோழி மாமிசத்தைக் கறி வைத்துக் கொஞ்சமும் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும். அப்புறம் கண்ணாடிக் குடுவையில் அளந்து அளந்து பாலும் சர்பத்தும் மடக்மடக் என்று தனித்தனியாகக் குடிக்க வேண்டும். கனகச்சிதமாக இப்படிச் செயல்படும் ஜீரண சிகாமணி மற்றும் கணித மாமணியான ஆஸ்திரேலியர் யார் என்று முதல்முதலில் இந்தப் புள்ளிவிவரத்தைக் கேட்டபோது தப்புத் தப்பாக ஆச்சரியப்பட்டேன். இதையெல்லாம் கர்ம சிரத்தையாக தேடிப்பிடித்துப் படித்து மனதில் இருத்திக் கொண்டு அவ்வப்போது என்னைப் போல் நாலு பேருக்கு அறிவு வளர்ச்சி அடையத் துணையாக எடுத்துச் சொல்கிறவரின் திறமைதான் மூக்கில் விரல் வைத்து அதிசயிக்க வேண்டியது என்று புரிந்தது கொஞ்சம் தாமதமாகத்தான்.

இண்லண்ட் லெட்டரில் ஆயிரத்து முன்னூற்று முப்பது குற:ளையும் நுணுக்கி நுணுக்கி எழுதிச் சாதனை படைத்த இன்னொருவரின் திறமை பற்றிக் கேட்டது முதல் ஆச்சரியத்தால் விரிந்த கண் இமை இன்னும் இயல்பு நிலைக்கு வந்து சேரவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது பெரிசு ஒருத்தர் பக்கத்து வீட்டில் இருந்தார். யாருக்காவது கடிதம் எழுத உட்கார்ந்தால், இண்லண்ட் லெட்டரில் இருக்கும் மடிப்பைக் கூட விடமாட்டார். எருமை மாடு கன்று போட்டது, தனக்குக் கபம் கட்டி ஆடாதோடை கஷாயம் போடச் சொல்லிச் சாப்பிட்டது, இஷ்ட மித்ர பந்துக்கள் வந்தது, இருந்தது, சண்டை போட்டது, ஊருக்குப் போனது, பஞ்சாயத்துப் புளிய மரம் முந்தின வாரம் ஏலம் போன தொகை, மானாமதுரை பாசஞ்சர் உள்ளூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து சேர்வதில் நேர மாற்றம் என்று குத்து மதிப்பாக நூறு விஷயங்களை அனாசயமாக ஒரே கடிதத்தில் எழுதித் தள்ளுவார்.

ஒரு தடவை அவருக்குக் கையில் நகச்சுற்று வந்து எழுத முடியாமல் போனது. அரிந்த எலுமிச்சம் பழ மோதிரம் அணிந்து அறியாப் பாலகனான என்னை முன்னால் இருத்தி, இண்லண்ட் லெட்டரில் அதே தரக்கட்டுப்பாட்டோடு இன்னொரு நூறு சமாச்சாரம் எழுதச் சொல்லி என் ஞாயிற்றுக் கிழமையைப் பாழடித்தார்.

ஆனாலும் கோபத்தை விட அசாதாரணமானவர்களை கண்டால் ஏற்படும் ஆச்சரியம் தான் அப்போது வந்தது. இண்லெண்ட் லெட்டர் திருக்குறளார் இதையும் கடந்தவர். தபால் அட்டையில் தற்போது குறள் எழுத அன்னார் உத்தேசித்துள்ளாராம். இதற்கு என்ன விதத்தில் ஆச்சரியப்படுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

இவர்கள் போக, இன்னும் சில சாதனை வீரர்கள் என் பட்டியலில் உண்டு. மூக்கால் பட்டாணியை உருட்டிக் கொண்டு இருபத்தைந்து கிலோமீட்டர் போனவர் அவர்களில் ஒருவர்.

கட்டிலுக்குக் கீழே உருண்டு போன ஐந்து ரூபாய்க் காசை எடுக்கக் குனிந்து தேடினாலே மூச்சு வாங்குகிறது. இருபத்தைந்து கிலோமீட்டர் உருட்டிப் போனால் அப்புறமும் அந்தப் பட்டாணி அதே சைஸில் இருக்குமா? அதை ஆயுதம் தாங்கிக் கப்பல் போல் கொண்டு செலுத்திய மூக்கு அடுத்த முறை ஜலதோஷம் வந்தால் தும்முவதற்காவது அப்படியே இருக்குமா அல்லது அதுவும் பட்டாணி சைஸ¤க்குச் சிறுத்திருக்குமா? உலகில் வேறு யாரெல்லாம் இப்படி பட்டாணியால் மூக்கை உருட்டிச் சாதனை புரிந்திருக்கிறார்கள்?

இந்தச் சாதனையாளர் சிரமம் பார்க்காமல் இருநூற்று ஐம்பத்தெட்டு கிலோமீட்டர் இன்னொரு பட்டாணியை எடுத்து உருட்டிப் போனால் புள்ளிவிவர நிபுணர் இது சம்பந்தமான சகல புள்ளி விவரத்தையும் எழுதி மூக்குக்கு நேரே நீட்டி விடமாட்டாரா என்ன?

மூக்குப் பயணத்தில் இன்னொரு துணை வேணுமென்றால், பின்னாலேயே நடந்து நூறு கிலோமீட்டர் பயணம் போன இன்னொரு சாதனைச் சிற்பியைக் கூட்டிப் போகலாம். இந்த நடைப் பயணத்தில் அங்கே இங்கே கொஞ்சம் மாறுதல் செய்து சைக்கிளில் பின் நோக்கிப் பயணம் போய் ரிக்கார்ட் பிரேக் செய்தவர் உண்டு. அப்படிப் பின்னால் சைக்கிள் ஓட்டிப் போகும்போது வயலின் வாசித்தபடி ஐந்து மணி நேரத்தில் அறுபது கிலோமீட்டர் போய் ரிக்கார்ட், கேசட், சிடி என்று எல்லாவற்றையும் பிரேக் செய்து பொடித்துப் போட்டவரும் உண்டுண்டு. ஒவ்வொருத்தருக்கும் தலா நூறு ஆச்சரியக்குறியைத் தலைகீழாக எழுதி மரியாதை செலுத்த நான் தயார்.

இன்னும், அறுபத்தேழு தேர்தல்களில் நின்று வெற்றிகரமாக அறுபத்தியேழிலும் டெபாசிட் காலி ஆன சூப்பர் வேட்பாளர்கள், அறுபது மணி நேரம் நிறுத்தாமல் ஜோக் அடித்து சாதனை புரிந்த தென் ஆப்பிரிக்காக்காரர் (அதையெல்லாம் கேட்டு நிறுத்தாமல் அறுபது மணி நேரம் யாராவது சிரித்து அதிலும் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்று தெரியவில்லை!) என்று ஏகப்பட்ட வித்தியாசமானவர்கள் என் வீர வணக்க லிஸ்டில் உண்டு.

அடுத்தவர்கள் கவனத்தைக் கவர்வது தான் இந்த மாதிரி சாதனையாளர்கள் மற்றும் திறமைசாலிகளின் லட்சியம் என்று யாராவது சொன்னால் நாம் நம்ப மாட்டேன். இப்படிப்பட்ட தகவல் மாதத்துக்கு ஒன்றாவது இடம்பெறாவிட்டால் அப்புறம் என்னத்துக்குப் பத்திரிகை படிக்க வேணுமாம்?

இவர்கள் போக, இன்னும் வெளிச்சத்துக்கு வராத எண்ணற்ற சாதனைத் திலகங்கள் இருப்பதை எப்போதோ படித்த ஒரு சிறுகதை மூலம் தெரிந்து கொண்டபோது அடைந்த ஆச்சரியம் இன்னொரு ரகம்.

தினசரி தோசை சாப்பிடும் குடும்பத்தில் குடும்பத் தலைவி கணக்குப் போட்டுப் பார்க்கிறாள். அது இந்த ரீதியில் இருக்கிறது. ஒரு நாளைக்கு இருபது தோசை சுடுவதாக வைத்துக் கொண்டால் மாதத்துக்கு அறுநூறு தோசை. வருடத்துக்கு ஏழாயிரத்து இருநூறு. பத்து வருடத்தில் எழுபத்தி ரெண்டாயிரம். பதினைந்து வருடத்தில் தோசை சுட்ட கணக்கு லட்சத்தை எட்டி விடலாம்.

ஒரே காரியத்தை தினம் தினம் செய்ய வேண்டியிருப்பதில் எந்த சலிப்பும் இல்லாமல் இதை ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றும் இப்படிப்பட்ட கர்ம வீராங்கனைகள் எந்தத் திசையில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டாலும் அந்தத் திசை நோக்கி என் வந்தனங்கள். தோசை சாப்பிடுகிறவர்கள்? வேணாம், நான் இந்த ஆட்டத்தில் இல்லை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி 31 ஜூலை 2005

3 Comments:

At 3:01 am, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//தினசரி தோசை சாப்பிடும் குடும்பத்தில் குடும்பத் தலைவி கணக்குப் போட்டுப் பார்க்கிறாள். அது இந்த ரீதியில் இருக்கிறது. ஒரு நாளைக்கு இருபது தோசை சுடுவதாக வைத்துக் கொண்டால் மாதத்துக்கு அறுநூறு தோசை. வருடத்துக்கு ஏழாயிரத்து இருநூறு. பத்து வருடத்தில் எழுபத்தி ரெண்டாயிரம். பதினைந்து வருடத்தில் தோசை சுட்ட கணக்கு லட்சத்தை எட்டி விடலாம்.

ஒரே காரியத்தை தினம் தினம் செய்ய வேண்டியிருப்பதில் எந்த சலிப்பும் இல்லாமல் இதை ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றும் இப்படிப்பட்ட கர்ம வீராங்கனைகள் எந்தத் திசையில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டாலும் அந்தத் திசை நோக்கி என் வந்தனங்கள். தோசை சாப்பிடுகிறவர்கள்? வேணாம், நான் இந்த ஆட்டத்தில் இல்லை.//

அம்பையின் கதையன்றில் வரும் கடைசி வரிகள் நினைவுக்கு வந்ததாலோ என்னமோ நகைக்க முடியவில்லை. எந்த வரிகளைப்பற்றிக் கதைக்கிறேன் என்று பிறகு எடுத்து இடுகிறேன்.

-மதி

 
At 3:22 am, Blogger ரா.சு said...

மதி, அந்த அம்பையின் கதை "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்று நினைக்கிறேன்.

 
At 4:04 pm, Blogger வானம்பாடி said...

:)))

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது