Friday, August 26, 2005

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்

சென்னை மகாலிங்கபுரம் கிருஷ்ணன் அம்பலத்தில் சற்று நேரம் முன் தொழுது வந்தேன்.

செத்தி மந்தாரம் துளசி
பிச்சக மாலகள் சார்த்தி
குருவாயூரப்பா நின்னெ கணிகாணேணம்.

நான் போன நேரம் கண்ணனுக்குத் திருமஞ்சன வேளை.

தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்துபோய் பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான் என்மகன்கோவிந்தன்கூத்தினை இளமாமதீ. நின்முகம்கண்ணுளவாகில் நீஇங்கேநோக்கிப்போ.

பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனி காணப்பெரிதும்உகப்பன் ஆகிலும்கண்டார்பழிப்பர் நாணெத்தனையுமிலாதாய். நப்பின்னைகாணில்சிரிக்கும் மாணிக்கமே. என்மணியே. மஞ்சனமாடநீவாராய்.

(தொழுவத்தில் புகுந்து விளையாடிக் களித்துப் புழுதியளைந்த உன் திருமேனியைக் காண எனக்குப் பெருவிருப்பம் என்றாலும், அழுக்குப் பிள்ளையான உன்னைக் கண்டவர் பழிப்பர். உனக்கு நாணமே இல்லை. நப்பின்னை கண்டால் சிரிப்பாள். என் மாணிக்கமே, மணியே திருமஞ்சனமாட வா - பெரியாழ்வார் திருமொழி).

என்று யசோதை அழைத்த பிள்ளைக்குக் குளிரக் குளிரத் திருமஞ்சனம். தமிழ், கேரள சோதர, சோதரியர் கூட்டம் பெருகி வழிந்து வழி மறைக்கும் திருக்கோவில் உள்ளே எப்படியோ வலம் வைத்து வந்தேன்.

அம்பலப்புழை கிருஷ்ண அம்பலம் போல் இன்று இந்தக் கோவில் அங்கணத்தில் பெரிய உருளி வைத்துப் பால் ஊற்றிக் காய்ச்சிப் பால்பாயசம் செய்து கொண்டிருக்கிறார்கள். கண்ணப்பெருமானுக்கு நிவேதனமாகி இது அடியார்க்கெல்லாம் பிரசாதமாக இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படும்.

பட்டத்ரியின் நாராயணீயத்தைக் கம்பீரமாகச் சொல்லியபடி ஒரு குழு அம்பல முற்றத்தில். சூழலில் விழாவின் உற்சாகம்.

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.

இரவு பத்து மணிக்கு அத்தாழ பூசையும், பின்னே அவதார பூஜையும் எழுந்நள்ளிப்புமாக இன்று அடியார்க்கு உறக்கமில்லை.

அப்புறம் கண்ணன் உறங்குவான்.

மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே. தாலேலோ
வையமளந்தானே. தாலேலோ.

4 Comments:

At 12:26 pm, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு,

கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி.

 
At 12:42 pm, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பதிவைப்படிக்கும்போதே மனதிற்கு நிறைவாக இருக்கிறது. நேரிலேயே பார்த்ததுபோன்ற உணர்வு!

'பெருந்தச்சன்' படத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு இணையம் வந்தேன். நல்ல பொருத்தந்தானோ? :)

-மதி

 
At 12:56 pm, Blogger rajkumar said...

நேரடியாக கோயில் சென்றதைப் போல உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.

நன்றி.

அன்புடன்

ராஜ்குமார்

 
At 1:22 pm, Blogger ஜென்ராம் said...

//மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்//

சின்ன வயதில் அம்மா,அத்தை பாடிக் கேட்டது..இப்போது அப்படித் தொட்டிலும் இல்லை..தாலாட்டும் இல்லை..

அப்புறம் ஒரு சீசன்: நானொரு குழந்தை நீயொரு குழந்தை, பூஞ்சிட்டுக் கன்னங்கள் (இவையெல்லாம் தாலாட்டா என்று நீங்கள் கேட்கக் கூடாது.)

இப்போ குத்தாட்ட சினிமா பாட்டே தாலாட்டாகவும் மாறிவிட்டது. படித்தேன் ரசித்தேன் முருகன்.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது