Thursday, September 01, 2005

சென்னை 366சென்னை நகருக்கு வயது 366!

லண்டனை அதன் சகல அழுக்குகளோடும் சார்லஸ் டிக்கன்ஸ் நேசித்தது போல், டப்ளினை ஜேம்ஸ் ஜாய்ஸ் பிரியப்பட்டது போல், கொல்கத்தாவை சத்யஜித்ராயும், மும்பையை அருண் கொலட்கரும் விரும்பியது போல், சென்னையை நேசிக்கிறேன்.


நண்பர் மாலன் தன் வலைப்பதிவில் சென்னை மாநகர் பிறந்த வரலாறு பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

என் பங்குக்கு, அரசூர் வம்சம் நாவலில் இருந்து 1760களின் சென்னை பற்றி சில பகுதிகள்
------------------------------------------------

பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை தெருக்கள். அகலமான வீதிகள். குதிரைச் சாணமும் மாட்டுச் சாணமும், பலாப்பழமும், வறுத்த தானியமும், மல்லிகைப் பூவும், வியர்வையும், ஒச்ச நெடியும், மனுஷ மூத்திரமுமாக மணக்கிற தெருக்கள். குறுக்குச் சந்துகள். அதிலெல்லாம் புகுந்து புறப்படுகிற மனுஷர்கள். குதிரை வண்டிகள். துரைகள் பவிஷாக ஏறிப் போகும் ரெட்டைக் குதிரை சாரட்டுகள். துரைசானிகள் குடை பிடித்து நடக்கிற வீதிகள். துரைகளுக்கும் துரைசானிகளுக்கும் சேவகம் செய்து குடும்பம் நடத்திக் குழந்தை குட்டி பெற்று அவர்களை அடுத்த தலைமுறை துரைமாருக்குத் தெண்டனிட்டு ஊழியம் செய்யப் பெருமையோடு அனுப்புகிற ஜனங்கள் ஜீவிக்கிற கருப்புப் பட்டணம். ராத்திரியோ, பகலோ தமிழும் தெலுங்குமாக சதா சத்தமாக ஒலிக்கிற ஜாகைகள், முச்சந்தி, சாப்பாட்டுக் கடைகள். அப்புறம் இந்தச் சமுத்திரக் கரை.

சங்கரனுக்கு ஒண்ணொண்ணும் ஆச்சரியமாக இருந்தது. கப்பல் ஏறிப் போய் வந்த யாழ்ப்பாணமும், அரசூரிலிருந்து அவ்வளவொண்ணும் அதிக தூரம் என்று இல்லாத மதுரைப் பட்டணமும் எல்லாம் சின்னஞ்சிறு கிராமம், குக்கிராமம் இந்தச் சென்னப் பட்டணத்தோடு பக்கத்தில் வைத்துப் பார்த்தால்.

ஓவென்று இரைச்சலிட்டு அலையடித்துக் கொண்டிருக்கிற கடல் அதை ஒட்டி விரிந்த இந்த பிரம்மாண்டமான மணல் வெளியால் இன்னும் பெரிதாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு நாள் சாவகாசமாகப் பகவதிக் குட்டியைக் கூட்டி வந்து காட்ட வேண்டும். காயலையும் வள்ளத்தையும் தவிர வேறெதுவும் பெரியதாகப் பார்த்திருக்கப் போவதில்லை அந்தப் பதினாறு மட்டும் திகைந்த சிறு பெண்.

இந்தக் கடற்கரையில் கால் மணலில் புதையப் புதைய அவளோடு கூட நடக்க வேண்டும். கால் வலித்துக் களைத்துப் போகும்போது உட்கார்ந்து அவளைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டும். அலைக்கு மேலே அவள் குரல் எழும்பி வரும். தண்ணீர் முகத்தில் தெறிக்கும். உடுப்பை சுவாதீனமாக நனைத்துச் சிரித்துக் கொண்டே திரும்பி ஓடும். போயிடாதே. இதோ நொடியிலே வந்துடறேன் என்று அது இரைகிறது எட்டு ஊருக்குக் கேட்கும். பகவதிக் குட்டி அவன் தோளில் சாய்ந்து கொள்வாள். கொட்டகுடித் தாசி போல் அபிநயம் பிடிப்பியாடி பொண்ணே?
----------------------------------------------
நொங்கம்பாக்கத்தில் வைத்தியநாதனின் வீடு நூதனமாக எழுப்பிக் குடி போயிருந்ததால் வெகு நேர்த்தியாகவும் சகல சௌகரியம் கூடியும் இருந்தது.

வைத்தியநாதன் சங்கரனுக்கு அண்ணா உறவாக வேண்டும். அவன் தகப்பனார் கச்சேரி ராமநாதய்யர் ஒன்று விட்ட சித்தப்பா என்பதால் இவன் ஒன்று விட்ட அண்ணா.

தெருவில் எல்லோருக்கும் அவன் மேல் நிறைய மரியாதை இருந்தது. அவன் வெளியே போகும்போதும் வரும்போதுமெல்லாம் அக்கம்பக்கத்திலே இருக்கப் பட்டவர்களும், எதிர்ப்பட்டவர்களும் அவனை சார் என்று மரியாதையாக விளித்தது சங்கரனுக்கு விநோதமாகப் பட்டது. அந்த இங்கிலீஷ் வார்த்தைக்கு ஜயா என்றோ எஜமான் என்றோ அர்த்தம் என்று ஊகித்திருந்தான் அவன்.

கோட்டையில் வேலை பார்க்கிற ராஜாங்க உத்தியோகஸ்தன் என்பதால் வைத்தியநாதனுக்கும் அப்படியே எல்லோரும் கூப்பிடுவது பழகிப் போயிருந்ததோடு பிடித்தும் இருந்தது.

வைத்தியநாதய்யன் கோட்டையில் குமஸ்தன் வேலை பார்க்கிறதாகச் சொன்னான். துறைமுகத்தில் வந்து சேரும், புறப்படும் கப்பல் போக்கு வரத்து பற்றிய கணக்கு எல்லாம் அவன் தான் எழுதியாக வேண்டுமாம். அதுவும் துரைத்தனத்து மொழியில். இவன் கணக்கு எழுதாமல் எந்தவொரு பரங்கித் துரையோ, துரைசானியோ சென்னைப்பட்டணத்துக்குள் காலெடுத்து வைக்க முடியாது. அதே பிரகாரம், கப்பலேறி ஊரைப் பார்க்கவும் புறப்பட முடியாது என்று வைத்தியநாதய்யன் சொன்னபோது சங்கரனுக்கும் அவன்மேல் சொல்ல முடியாத அளவு மரியாதை வந்து சேர்ந்தது.

வைத்தி சார், இங்கிலீஷிலே வார்த்தையும் கணக்கும் எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியிருக்குமே?

சங்கரன் அவனைக் கேட்டான்.

கச்சேரி ராமநாதய்யர் கோர்ட்டுக் கச்சேரியில் சிரஸ்ததார் என்ற உத்தியோகத்தில் பல வருஷம் இங்கே சென்னப்பட்டணத்திலேயே இருந்ததால் அதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே சிரமமில்லாமல் படிக்கத் தனக்கு வாய்த்தது என்றான் வைத்தி.

கச்சேரி ராமநாதய்யர் அவனைச் சீமைக்கு அனுப்பி பி.ஏ பரீட்சை கொடுத்துவிட்டு வரவும் ஏற்பாடு செய்திருந்தாராம். உள்ளூர் வைதீகர்கள் அப்படி அனுப்பினால் அடுத்த க்ஷணமே ஜாதிப் பிரஷ்டம் செய்வதாகப் பயமுறுத்தவே அதைக் கைவிட்டுக் கோட்டையில் குமஸ்தனாகப் போக வேண்டிப் போனதாக வருத்தப்பட்டான் வைத்தி.

வைதீகர்கள் இந்தப் பெரிய பட்டணத்திலும் இருக்கிறார்கள் என்பதே சங்கரனுக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது. கருப்புப் பட்டணத்திலும், மற்ற இடத்திலும் சகல ஜாதியினரும் நிரம்பி வழிந்து மூச்சுக் காற்று முகத்தில் பட, வியர்வை தோளில் ஈஷ, பிருஷ்டம் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு ஊர்ந்து போகும் ஸ்தலத்தில் அவர்கள் தர்ப்பைக் கட்டையோடு இறங்கினால், ஒவ்வொரு பத்தடி போனதற்கும் திரும்பி வந்து குளித்துத் தீட்டுப் போக்கவே நாள் முழுக்க நேரம் சரியாக இருக்கும். அப்படியும் மிஞ்சிய நேரத்தில் எள்ளை இறைத்துத் தர்ப்பணமும், அப்தபூர்த்தி ஹோமமும் செய்து நாலு காசு சம்பாதிக்கவும், அதற்கும் எஞ்சி நேரம் கிடைத்து கச்சேரி ராமநாதய்யர் சீமந்த புத்திரனை ஜாதிப்பிரஷ்ட விஷயமாக மிரட்டிவிட்டுப் போகவும் அவர்களுக்கு எப்படி ஒழிந்தது என்று சங்கரனுக்குப் புரியவில்லை.
------------------------------------------
நாலு தெரு நடந்தால் முச்சந்தி வரும். அங்கே அரை மணி காத்திருந்தால் கருப்புப் பட்டணம் போகும் வண்டி வரும். கருத்த ராவுத்தன் காத்திருப்பான். அந்தத் தெலுங்குப் பிராமணப் பையனும் தான்.

முச்சந்தியில் வண்டிக்காக நாலு பேர் நின்றிருந்தார்கள். பருமனான ஒரு மனுஷ்யன் தலையில் பெரிய முண்டாசும், தொளதொளவென்று வஸ்திரமும் கையில் பிடித்த சிலுவையுமாக ஏதோ பெரிய கூட்டத்தை எதிர்கொண்டது போல உரக்கப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்.

பரணி ஆண்டி சொல்கிறேன். சென்னப் பட்டணத்து மகா ஜனங்களே இந்த சத்ய வார்த்தையைக் காது கொடுத்துக் கேளுங்கள். நானும் சாதாரண ஹிந்துவாக இருந்தவன் தான். இப்போது உன்னத ஹிந்துவாகி இருக்கிறேன். அதெப்படி என்று கேட்பீராகில் சொல்லுவேன், நான் பிரஜாபதியை இன்னார் என்று அடையாளம் கண்டு கொண்டேன். அவரை நமஸ்கரிக்கிறேன். நித்யமும் அனுசாந்தானம் செய்து அஷ்டோத்திரமும் சகஸ்ரநாமமும் சொல்லி அந்த மஹா மூர்த்தத்தை அர்ச்சிக்கிறேன்.

கண்கள் செருக ஆகாயத்தைப் பார்த்தான். கிரகணம் விட்டுப் போன சூரியன் அவனைக் கஷ்டப்படுத்தினதாகத் தெரியவில்லை. அப்புறம் அந்தப் பிரசங்கியின் பார்வை புதிதாக வந்து சேர்ந்து முகத்து வியர்வையைத் தோள் துண்டால் துடைத்துக் கொண்டிருந்த சங்கரன் மேல் விழுந்தது.

இதோ நிற்கிறாரே இந்தப் பிராமணோத்தமர் போல் பெங்காளத்தில் ஞான சூரியனாக இருக்கப்பட்டவர் கிருஷ்ண மோஹன் பானர்ஜியா. அந்த மகாநாமத்தை இன்னொரு தடவை சொல்கிறேன் கேளுங்கள். கேட்ட மாத்திரத்திலேயே பீடையெல்லாம் விலகி ஓடும். கிருஷ்ண மோஹன். எந்தக் கிரகணமும், ராகுவும் கேதுவும் பற்றிப் பிடித்து தொந்தரைப்படுத்த உத்தேசித்தாலும் அந்த மஹாத்மாவிடம் அது ஈடேறாது. அவர் எனக்குக் காட்டித் தந்த பிரஜாபதிதான் கிறிஸ்து மஹரிஷி. ஓம் நமோன்னமஹ வந்தே என்று ஹிந்துக்களான நாமெல்லாரும் போற்றித் துதிக்கத்தக்க தெய்வ துல்யமான அந்த புண்ணிய ஸ்வரூபனையும், அவருடைய புண்யமாதாவான சர்வேஸ்வரி மஹாமேரி அம்மனின் மங்களகரமான சித்திரத்தையும் நீங்கள் தரிசிக்க இப்போதே காட்டித் தருகிறேன்.

அந்த மனுஷ்யன் தோளில் மாட்டியிருந்த சஞ்சியிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்து உயர்த்திப் பிடித்தான். அவன் நின்ற மரத்தடி நிழல் சங்கரனுக்குப் பிடித்திருந்தது. இவன் எல்லாத் தெய்வத்தையும் தரிசனப்படுத்தி அந்தாண்டை போகட்டும். அந்த தெய்வங்களின் கிருபை இவனுக்குப் பரிபூர்ணமாகக் கிட்டட்டும். ஒரு நொடிப் பொழுது அந்த விருட்ச நிழலை ஒழித்துக் கொடுத்தால் சங்கரன் இளைப்பாறிப் போவான்.

பரணி ஆண்டி ஓய்கிற வழியாக இல்லை. கருப்புப் பட்டணத்துக்கும், சமுத்திரக் கரைக்கும் போகும் ஒரு வண்டி கூட வந்து சேராத காரணத்தால் அவனுக்கு முன்னால் ஆர்வமில்லாமல் பார்த்துக்கொண்டு ஒரு கூட்டம். அதில் இப்போது பத்துப் பேராவது இருப்பார்கள்.
------------------------------------------
கட்டுமரம் அலையில் மிதந்தும் அதோடு தாழ்ந்தும் உயர்ந்தும் அனுசரித்துப் போவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு சமுத்திரப் பரப்பில் ஊர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமைல் இப்படியே சமாதானமாகப் போனால் கப்பல் வந்துவிடும்.

கப்பல் பாட்டுக்கு அங்கே வெள்ளைக்காரத் திமிரோடு, கருப்பு நாயே என்னடா துறைமுகம் வச்சு முடியைப் பிடுங்குறே எம்புட்டு நேரமா நிக்கறேன். எவனாவது வந்து மரியாதை செஞ்சு கும்பிட்டு விழுந்தீங்களாடா என்று நீள உயர நிமிர்ந்து நின்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. கப்பலில் வந்தாலும், இறங்கிக் காலில் கரை மணல் ஒட்ட நடந்தாலும், வியர்வை மின்னும் நாலு கருப்புத் தோளில் பல்லக்கு ஏறிக் கெத்தாக நகர்ந்தாலும், மனுஷ நெரிசல் அடர்த்தியாகக் கவிந்த பாதையில் குதிரைக்கும், எதிர்ப்படுகிற கருப்பனுக்குமாகச் சவுக்கைச் சுழற்றி வீசி சாரட்டில் ஓடினாலும் வெள்ளைத் தோலுக்குள்ளும் வெளியிலும் பிதுங்கி வழிகிற திமிர் அது.

வாராண்டா வாராண்டா வெள்ளக்காரன்
வந்தாண்டா வந்தாண்டா தாயோளி

பக்கத்துக் கட்டுமரத்தைச் செலுத்துகிறவன் பாடுகிறான். சுலைமான் அவன் அம்மாளையும் அக்காவையும் தீர்க்கமாக வைகிறான். பாடினவனும் மற்றவர்களும் ஏகத்துக்குச் சிரிக்கிறார்கள். சங்கரனுக்கும் சிரிப்பு முட்டிக் கொண்டு வருகிறது. பளிச்சென்று முகத்தில் அறைகிறதுபோல் தண்ணீரை வீசிப் போகிறது வந்த அலையொன்று. சுலைமான் திரும்ப வைகிறான். தமிழில் இருக்கப்பட்ட வசவு எல்லாம் போதாதென்று இந்துஸ்தானியிலும் திட்டுகிறான். அதில் நாலைந்து கேட்க ஏக ரசமாக இருக்கிறது சங்கரனுக்கு. வைத்தி சாரோ அந்தத் தெலுங்கு பிராமணனோ இங்கிலீசில் தஸ்ஸு புஸ்ஸு என்றால் இந்துஸ்தானியில் மனதுக்குள்ளாவது திட்டிக் கொள்ளலாம்.

(புகைப்படம் - சென்னை துறைமுகம் 1896)

2 Comments:

At 2:34 am, Blogger Narain said...

இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமாகவே அரசூர் வம்சம் ஒரு வித்தியாசமான கதைக் களம், வித்தியாசமான கதை சொல்லும் பாணி. முழுவதும் படித்து விட்டு பின் சந்திக்கிறேன்.

 
At 5:16 am, Blogger Boston Bala said...

நன்றி :-)

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது