Saturday, September 03, 2005

கார்ப்பரேட் விருந்தாளிகளும் ஒரு துண்டு ஊறுகாயும்



காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்து வரும். வாரக் கடைசியில் ஆபீசிலிருந்து வீட்டுக்குக் கிளம்புகிறபோது ஈமெயில் வந்தால் கம்பெனிக்கு விருந்து வரும்.

வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை நாலு சுமார் சைஸ் இட்லி, பிரிட்ஜில் வைத்திருந்த முந்தாநாள் வெங்காயச் சட்னி, அதற்கு மூதாதையரான டீகாஷனும், பழம்பாலும் கலந்த காபி என்று ஒரு மாதிரி ஒப்பேற்றி உபசரித்து அனுப்பிவிடலாம். கார்ப்பரேட் விருந்தாளிகள் இன்னொரு வகை.

போயிங் விமானமும், ஏர்பஸ் விமானமும் பிடித்துக் கிளம்பியிருப்பார்கள் அவர்கள் ஊர் நேரத்துக்கும் நம் ஊர் நேரத்துக்கும் ஏகதேசம் பத்தரை மணி நேர வித்தியாசம் இருப்பதால் ஜெட்லாக் என்ற அயர்வு வேறே. காது வலி, கால் ஆணி போல் இல்லாமல் மகா கவுரவத்தோடு சொல்லக் கூடிய சுகவீனமாக்கும் இந்த ஜெட்லாக். இப்படி வந்து சேர்ந்து சென்னையிலும் தில்லியிலும் கத்திரி வெய்யிலில் கோட்டு சூட், டை மாட்டிக் கொண்டு பிசினஸ் பேச எழுந்தருளும் வாடிக்கையாளர்களை வரவேற்று, உபசரித்து, வழியனுப்பி வைப்பதற்காகவே பெரிய கம்பெனிகளில் வழிமேல் விழி வைத்துப் பார்த்தபடி ஒரு நிர்வாகி இருப்பார். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இவருடைய செல்போன் எப்பவுமே பிசியாக இருக்கும்.

"ரெஸ்ட் ரூமுக்குப் போகணும்", என்று வந்த விருந்தாளி சொல்ல, அட்டகாசமாக பைவ் ஸ்டார் ஓட்டலுக்குப் போன் போட்டு ரூம் புக் செய்தார் இந்த மாதிரி உத்தியோகத்தில் புதிதாகச் சேர்ந்த என் நண்பர் ஒருவர். வந்தவர் பொறுக்க முடியாமல் நெளிந்தபடி "எங்கே இருக்கு டாய்லெட்" என்று இங்கே புரியும் ஆங்கிலத்தில் கேட்டபோதுதான் நம்ம ஆளுக்கு விஷயம் புரிந்தது. அவங்க ஊர் பரிபாஷையில் ரெஸ்ட் ரூம் என்றால் நம்ம ஊர் ‘பாத்ரூம்'. ஒரு ரூபா கொடுத்துப் போக வேண்டிய விஷயத்துக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு!

கம்பெனி விருந்தினர் வருவதற்கு முன்னாலேயே அவர்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை வந்துவிடும். தாய்லாந்திலிருந்து முக்கிய விருந்தாளிகள் வந்தபோது நான் வேலை பார்த்த நிறுவனம் அனுப்பிய சுற்றறிக்கை சொன்னது - "தாய்லாந்துக்காரர்களை சவா தே காப் என்று சொல்லி வணங்க வேண்டும். தலையைத் தொடுவது அவர்கள் நாட்டில் அவமரியாதை'.

என் தலையை நான் தொட்டால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை என்று புரியாமல் விசாரித்தபோது, அவர்கள் தலையைத் தொடுவதுதான் அவமரியாதை என்று விளக்கம். வந்த விருந்தாளி தலையை வேலை மெனக்கெட்டு ஏன் தொட வேண்டும் என்று குழப்பத்தோடு விமான நிலையம் போனால் விருந்தாளிகள் மழலைத் தமிழில் ‘வணக்கம்' என்றார்கள். மர ஸ்டூல் வாங்கிப் போட்டு ஏறி நின்று தான் அவர்கள் தலையைத் தொடவேண்டியிருக்கும். வந்தவர்கள் சராசரி ஆறரை அடி உயரம்.

இது இப்படி என்றால், இன்னொரு முறை ஜப்பானில் இருந்து ஒரே சீராக ஐந்து அடி உயரத்தில் ஓர் உயர்மட்டக் குழு வந்தது. ஜப்பானியர்களைக் குனிந்து வணங்க வேண்டும். குனிந்தபடியே நம் விசிட்டிங்க் கார்டை அவர்கள் படிக்க வசதியாகத் திருப்பி நீட்ட வேண்டும். அவர்கள் கார்ட் கொடுத்தால் கரிசனத்தோடு வாங்கி, பெயரை ஒருதடவை தப்பு இல்லாமல் உரக்கப் படிக்க வேண்டும். இதெல்லாம் ஜப்பானியக் கலாச்சாரத்தைப் போதிக்கும் கம்பெனிக் கட்டளைகள்.

முப்பது பேருக்கு முப்பது முறை இடுப்பை வளைத்துக் குனிந்து வணங்கி, விசிட்டிங்க் கார்ட் பரிமாற்றம் செய்து ஜாக்கிரதையாகப் பெயரை உச்சரித்து முடிப்பதற்குள் மதியச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. அடிமைப்பெண் எம்.ஜி.ஆர் மாதிரி குனிந்தபடிக்கே அவர்களை லஞ்சுக்கு அழைத்துப் போனேன்.

"கலிபோர்னியாவிலிருந்து மிஸ்டர் சாம்சன் வருகிறார். விமான நிலையத்துக்கு ஏர்கண்டிஷன் காரை எடுத்துப் போய் அழைத்து வரவும்" என்று கம்பெனி ஆணையிட, அடலேறாகப் புறப்பட்டார் இன்னொரு நண்பர். வரப் போகிற விருந்தாளியின் பெயரை எழுதிப் பிடித்த அட்டையோடு தான் இந்த மாதிரி சந்தர்பங்களில் ஆள் அனுப்புவது வழக்கம். அட்டையும் வேணாம், கட்டையும் வேணாம் என்று தில்லாகக் கிளம்பிப் போனார் இவர். விமானத்திலிருந்து இறங்கி கைவீசி ஒய்யாரமாக வந்த ஒவ்வொரு துரையையும் கவனித்துப் பார்த்து மிஸ்டர் சாம்சன் என்று அழைக்க, ஊஹ¥ம், யாரும் லட்சியமே செய்யவில்லை.

"சாம்சன் கவுத்துட்டார். வரவே இல்லை", என்று அங்கலாய்ப்போடு ஆபீசுக்குத் திரும்பி வந்த இவரை மிஸ்டர் சாம்சனே வரவேற்றார். வெள்ளைக்காரர் இல்லை. கருப்பு இன அமெரிக்கர் அவர். அதே விமானத்தில் தான் வந்திருக்கிறார். அமெரிக்கர் என்றால் வெள்ளைக்காரர் என்றே மனதில் படிந்து போன பிம்பத்தை நண்பர் இப்போது ஒழித்துக்கட்டி விட்டார்.

சிங்கப்பூரிலிருந்தோ மலேசியாவிலிருந்தோ வந்த ஒரு விருந்தாளியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்ள இளைஞரான அதிகாரி ஒருத்தரை அனுப்பினார்கள். வந்தவர் பிசினஸ் பேசி முடித்து, ஷாப்பிங்க் போய் விட்டு, தொழிற்துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கு பெற்ற கூட்டத்தில் சொற்பொழிவாற்றுவதாக ஏற்பாடு. எல்லாம் கிரமமாக முடிந்தது. கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும்போது, சில முக்கியத் தகவல்களை அச்சடித்த காகிதங்களை விநியோகிக்க வைத்திருந்தது நினைவுக்கு வரவே அவர் விருந்து அதிகாரியை அழைத்தார். தங்கியிருந்த ஓட்டலுக்குப் போய், மேசைமேல் வைத்திருந்த பார்சலை எடுத்து வரவேண்டும். அதைப் பிரித்து எல்லோருக்கும் வினியோகிக்க வேண்டும்.

அதிகாரி போய்ப் பார்சலை எடுத்து வருவதற்குள் பேச்சு தொடங்கி விட்டது. உள்ளே நுழைந்து பார்சல் பிரித்துப் பார்த்த அவர் முகத்தில் சின்னக் குழப்பம். விருந்தாளியோ, சீக்கிரம் விநியோகிக்கச் சொல்லி சைகை செய்கிறார். எஸ் சார் என்று தலையசைத்து விட்டு வேலையை ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில், கூட்டத்தில் இருந்த ஒவ்வொருத்தர் உள்ளங்கையிலும் ஒரு துண்டு ஆவக்காய் ஊறுகாய். சிங்கப்பூரார் ஊருக்குக் கொண்டுபோக வாங்கி வைத்திருந்த ஊறுகாய்ப் பார்சலைத் தவறுதலாக எடுத்து வந்ததன் விளைவு அது.

கம்பெனி விருந்தாளிகள் விஷயம் இப்படி என்றால் தேசிய விருந்தாளிகள் இன்னொரு விதம். முன்பெல்லாம், டூரிங் கொட்டகையில் சினிமா தொடங்குவதற்குமுன் இந்தியன் நியூஸ் ரீல் போடுவார்கள். பீகாரில் வறட்சி, ஹரியானாவில் வெள்ளம் எல்லாம் நியூஸ் ரீலில் வருகிறதோ என்னமோ, டோங்கா மன்னர் வருடம் தவறாமல் இந்தியா வருவார்.

முழுத் திரையையே ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆகிருதியும் நல்ல மனசும் கொண்ட அவர் போன்றோர் இப்போதெல்லாம் வருவதில்லை என்பதில் வருத்தமே.

டோங்கா இருக்கட்டும். முப்பது வருடத்துக்கு மேலாக நம் தலைவர்கள் நல்லெண்ண விஜயமாக மடகாஸ்கர், டிம்பக்டூ, பராகுவே என்று உலக வரைபடத்தில் தேடித்தேடி விசிட் அடிப்பதை வானொலி சொல்லிக்கொண்டே இருக்கிறது, தொலைக்காட்சி பிலிம் காட்டியபடியே இருக்கிறது. வருடக் கணக்காக இப்படிக் கொண்டு போய்ச் சேர்ந்த நல்லெண்ணத்தை எல்லாம் என்ன செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

தினமணி கதிர் 'சற்றே நகுக' பகுதி 21 ஆகஸ்ட் 2005

4 Comments:

At 2:34 am, Blogger dondu(#11168674346665545885) said...

நான் டில்லியில் வசித்த போது ஒரு பிரெஞ்சுக்காரருக்கு துபாஷியாகச் செயல்பட நேர்ந்தது. அவர் ஒரு உள்ளூர் நிறுவனத்துக்கு வேலையாக வந்திருந்தார். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி அகர்வால் பிரெஞ்சுக்காரரிடம் இந்தியில் பேச ஆரம்பித்தார். நான் இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராகச் செயல் பட்டேன்.

அகர்வால்: "ராகவன், அவரிடம் கேளுங்கள், அவருக்கு இன்று மாலை காபரே நடனம் பார்க்க விருப்பமா என்று."
பிரெஞ்சுக்காரர்: "நன்றி ஐயா, தேவையில்லை.
அகர்வால்: "இல்லை ராகவன், மறுபடியும் கேளுங்கள்"
பிரெஞ்சுக்காரர்: (பொறுமையிழந்து): "நான் வேண்டாம் என்றுக் கூறி விட்டேனே? ஏன் அகர்வால் வற்புறுத்துகிறார்?"

உண்மையில் அகர்வாலுக்குதான் அதில் விருப்பம். விருந்தாளியைச் சாக்கிட்டுத் தானும் காபரே பார்க்க ஆசை. அதை வெளிப்படையாகக் கூற முடியுமா? ஆகவே அவர் கூறினார்:

அக்ர்வால்: "ஒன்றுமில்லை ராகவன், பாவம் மனிதன் இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். மனைவி அவருடன் வரவில்லை. ஆகவே அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படாதா? அவருக்கு ஒரு வடிகால் வேண்டாமா?"
நான்: (இந்தியில்). பிரச்சினையைக் கண்டு சோர்வடையாமல் அதைக் கையில் எடுத்துக் கொண்டால் அது தீர்ந்துப் போய் விடுமே?"

அவ்வளவுதான். அங்குக் குழுமியிருந்த அத்தனை இந்தியர்களுக்கும் இடிச் சிரிப்புத்தான். ஒருவர் கையை ஒருவர் குலுக்கிக் கொண்டோம்.

பிரெஞ்சுக்காரருக்குத் திகைப்பு. என்னைப் பார்த்து என்ன விஷயம் என்றுக் கேட்டார். நான் அகர்வாலிடம் கூறியதை அப்படியே பிரெஞ்சில் கூற, அவரும் முகம் சிவக்க ஒரு அவுட்டுச் சிரிப்பை வெளியிட்டார்.

இதில் விசேஷம் என்னவென்றால், தமிழில் நான் இங்கு எழுதியது அப்படியே வார்தைக்கு வார்த்தை இந்தியிலோ அல்லது பிரெஞ்சிலோ மொழிப் பெயர்த்தாலே சம்பந்தப் பட்ட மொழிகளில் அருமையான வாக்கியமாகி விடும்.

பிரெஞ்சுக்காரர் சிரிப்பு அடங்கியதும் கூறினார். "எய்ட்ஸ் வராமல் தடுக்க அருமையான வழி."

அதை நான் இந்தியில் மொழிப் பெயர்த்தேன் என்று கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 2:53 am, Blogger Jayaprakash Sampath said...

சாரே..... இந்த மாதிரி வெளிநாட்டில் இருந்து வரவங்களையல்லாம், இருட்டினம் பொறவு தீர்த்தவார்க்கிக் கூட்டிக்கினு போய் ஜாக் டானியலு, பக்கார்டினு ஊத்திக் குட்த்து கவுக்கறது பத்தியெல்லாம் சில தோஸ்துங்க மூல்யமா கேள்விப்பட்டிருக்கேனே... அந்த மாதிரியெல்லாம் உங்க ஆப்பீஸ்ல கெடையாதா? இட்லியும் வெங்காயச் சட்டினியுந்தானா?

 
At 3:12 am, Blogger Narain Rajagopalan said...

ஆஹா! நீங்களூமா. நல்ல வேளையாக இதுமாதிரியான அசம்பாவிதங்கள் எதிலும் நான் சிக்கவில்லை. என்னை வரவேற்க வந்து சொதப்பிய சங்கதிகள் உண்டே தவிர, நான் சொதப்பியதில்லை. அல்லது சொதப்ப சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.

பிரகாஷ் சொன்னதையும் கொஞ்சம் ஆவண செய்தால் நன்றாக இருக்கும் ;-)

 
At 4:52 am, Blogger தருமி said...

icarus prakash & narain - இருவரையும் மொழி வழிகிறேன்...சாரி..வழி மொழிகிறேன்.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது