Saturday, September 10, 2005

வாகன யோகம் - 2

பறப்பது என்பது பறவைகளுக்கு மட்டும் ‘படச்சோன்’ ஆன ஆண்டவன் வழங்கிய விசேஷ கன்செஷன். மனிதர்கள், அதிலும் நம்மைப் போன்ற சாமானியர்கள் பறக்க யத்தனித்தால் பின்னும் கஷ்டம் பெருங்கஷ்டம். விமானப் பயணத்தைச் சொல்கிறேன்.

விமானம் ரன்வேயில் பறந்து எவ்வி வானத்தில் ஏறியதும், ஏர் ஹோஸ்டஸ் பெண்மணி கையில் தட்டு நிறைய எடுத்து வந்து வழங்குவது மிட்டாயில்லை. டர்க்கி டவல் துண்டு. யூதிகோலன் செண்ட் மணக்க மணக்க, பார்த்தாலே முகத்தைப் புதைத்துக் கொள்ளச் சொல்லும் இந்தத் துண்டுகளைத் தண்ணீரில் நனைத்திருப்பார்கள். அது என்ன எழுதாத விதியோ, சென்னையில் வியர்த்து விறுவிறுத்து பிளேனைப் பிடித்தால் என் கையில் திணிக்கப்பட்ட டவல் வென்னீரில் நனைத்ததாக இருந்து வியர்வையை இன்னும் ஆறாகப் பெருக்கும். அண்டார்டிகா குளிரில் விமானம் ஏறினால், ஜில்லென்று ஐஸ்வாட்டரில் ஊறப்போட்ட துவாலையை நீட்டி மூக்கு, முழி, மூக்குக் கண்ணாடியை எல்லாம் உறைந்துபோக வைப்பார்கள். இந்த டவல் உபச்சாரம் மேலதிக மரியாதையோடு விமான உயர் வகுப்பிலும் ‘வேணும்னா எடுத்துக்கோ, இல்லாட்ட கம்முனு கெட’ பார்வையோடு எகனாமி கிளாஸ் என்ற கால்நடை வகுப்பிலும், வர்க்க பேதமில்லாமல் நடத்தப்படும்.

இந்திய அரசுடமையாக்கப்பட்ட விமான சர்வீசில் சாப்பாடு என்பது ஒரு விநோதமான சமாச்சாரம். காலைச் சாப்பாட்டு நேரத்தில் பயணம் செய்தாலும், மதிய உணவு அல்லது சாயந்திர, ராத்திரி டின்னர் நேரம் என்றாலும், உணவு கிட்டத்தட்ட ஒரேமாதிரித்தான். அது தென்னிந்திய உணவா, வட, வடமேற்கு, மிசோராம், அருணாசல் பிரதேசச் சாப்பாடா என்றெல்லாம் சுளுவில் கண்டுபிடித்துவிட முடியாது. கமிட்டி போட்டு இந்தியில் விவாதித்து வேற்றுமையில் ஒற்றுமை காண உருவாக்கப்பட்ட சாப்பாடு. தேசிய ஒற்றுமையை வளர்க்கிறதோ என்னமோ, தேசிய அஜீர்ணத்தை வளர்ப்பதில் அதன் பங்கு கணிசமானது.

சக பயணிகள் விமானப் பயணத்தில் இன்னொரு சுவாரசியமான அனுபவத்தைத் தரக்கூடியவர்கள். சிலர் விமானப் பணிப்பெண் அவ்வப்போது தரும் சகலமானதையும் மூட்டை கட்ட முனைவார்கள். சாக்லெட், காதில் அடைத்துக் கொள்ளும் பஞ்சு, பத்திரிகை, நீண்ட தூரப் பயணத்தில் பற்பசை, பிரஷ் என்று எல்லா ஏர்லைன் வஸ்துக்களும் கைப்பையில் அடைக்கலமாகி விடும். விமானங்களில் சாப்பாட்டு நேரத்தின்போது முன்பெல்லாம் எவர்சில்வரில் ஸ்பூன், வெண்ணெய் வெட்டும் கத்தி, முள்கரண்டி என்று அளிக்கப்படும். கையாலேயே சாப்பிட்டு, விரலால் காப்பியில் சர்க்கரை கலக்கிக் குடித்து இந்த உபகரணங்களைக் சேகரித்த என் சகபயணி ஒருவர் இருபது மணி நேரப் பயணத்தின் முடிவில் மினிசைஸ் பாத்திரக்கடை வைக்கும் உத்தேசத்தோடு பிளைட்டை விட்டு இறங்கிப் போனார்.

சிங்கப்பூரில் சற்றே ஓய்வெடுத்துவிட்டுக் கிளம்பிய விமானத்தில் ஏறிய வயதான ஒரு பெண்மணி பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார். அவர் கையில் துணி சுற்றி ஏதோ பாத்திரம். காணிக்கைப் பாத்திரத்தோடு யாத்திரை கிளம்பியிருக்கிறவர் போலிருக்கிறது. அதை மடியில் வைத்துக் கொண்டு சீட்பெல்டை அணிந்து கொள்ளக் கஷ்டப்பட்டார் பாவம். “எங்கிட்டே கொடுங்க, வச்சுக்கறேன்” என்று உதவிக் கரம் நீட்டினேன். வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

விமானம் பறக்க ஆரம்பித்ததும் மூடிவைத்த துணியை மெல்ல விலக்கினார். கண்கள் மூடியபடி இருந்தன. பாத்திரம் வாய்க்கு அருகே உயர்ந்தது. இது என்ன மாதிரி பிரார்த்தனை என்று புரியாமல் அவரையே பார்த்தேன். துப்பினார். அந்தப் பாத்திரத்துக்குள் தான். ஒன்றரை மணி நேரப் பயணத்தில் துப்பல் பாத்திரம் நூற்றுச் சில்லறைத் தடவை அவர் வாய்க்கு முன் உயர்வதை ஒரு நடுக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையை அடைந்தாலும் ஏராப்பிளேன் இறங்காப்பிளேன் ஆக வானத்திலேயே ஏதோ நேர்ந்து கொண்டது போல் முப்பது முறை சுற்றி வந்தது. லேண்டிங்கில் சின்னத் தகறாராம். இந்தத் தகவலை அந்தப் பெண்மணிக்குத் தெரியப்படுத்தியபோது அவர் கலவரப்பட்டதில் மடிப்பாத்திரம் கிட்டத்தட்ட நிறைந்து என் மேல் துளும்பும் நிலைக்கு வந்து விட்டது. அதுவும் கடந்து விமானம் முழுவதையும் அது வெள்ளத்தில் ஆழ்த்துவதற்குள், நல்லவேளை விமானி பத்திரமாகத் தரையிறங்கி விட்டார்.

லண்டனிலிருந்து விமானம் ஏற ஹீத்ரு ஏர்போர்ட் போனபோது ஒரு தடவை விமானக் கம்பெனி ஊழியர் நைச்சியமாகச் சொன்னது இது - “நீங்க இந்த பிளைட்லே போகாமல், நாளைக்குக் கிளம்பிப் போனால், உங்களுக்கு உடனடியா இருநூறு பவுண்ட் பணம் (அதாவது கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய்) தரோம். த்ரீ ஸ்டார் ஓட்டலே ஒருநாள் ப்ரீயா எஞ்சாய் பண்ணுங்க எங்க செலவுலே. நாளை சாயந்திரம் பிளைட்டைப் பிடிச்சுடலாம்”.

விமானத்தில் சீட் எண்ணிக்கையை விடக் கூடுதலாக டிக்கெட் விற்றிருந்தார்களோ என்னமோ. டவுன் பஸ் போல் ஸ்டாண்டிங்க் பிரயாணம் எல்லாம் கிடையாது கையால் பயணத்துக்கு ஆயத்தமாக வந்தவர்களில் சிலரையாவது இப்படிக் கையூட்டுக் கொடுத்துத் திருப்பியனுப்ப முயற்சி. அதை வெற்றிகரமாக முறியடித்தேன். நான் இந்தியா திரும்பாவிட்டால் பத்துக்கோடி பவுண்ட் கணக்கில் நஷ்டம் ஏற்படும் என்று விளக்கினேன். (பத்துக்கோடிக்கு எத்தனை சைபர் போடணும்?). வேண்டா வெறுப்பாக எனக்கு விமானத்தின் கடைசியில் கழிவறைக்கு அருகில் சீட் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

கீகடமான இடத்தில் நடு சீட்டில் நான். ஜன்னலை ஒட்டிய இருக்கையில், வஞ்சனையில்லாமல் வளர்ந்த ஒரு பஞ்சாபிக்காரர். இந்தப் பக்கத்துச் சீட்டில் அதே சைசிஸ் ஒரு குஜராத்திக்காரர். பஞ்சாபிக்காரர் லண்டனில் சாப்பாட்டுக்கடை நடத்துகிறார். குஜராத்தியார் அங்கே தட்டுமுட்டுச் சாமான், பிளாஸ்டிக் வாளி இத்யாதி விற்கிற கார்னர் ஷாப் என்ற பெரிய சைஸ் பெட்டிக்கடை நடத்துகிறார்.

பத்தே நிமிடத்தில் இரண்டு பேரும் எனக்கு சிநேகிதமாக, ஒரு காதில் சாப்பாட்டுக்கடை நடத்துவதில் இருக்கும் பிரச்சனைகள் வந்து நிறைந்த வண்ணம் இருந்தன. இன்னொரு காது பெட்டிக்கடைக்காக ஒதுக்கப்பட்டது.

ரெட்டை ஸ்டீரியோவாக எனக்குக் கரைத்துப் புகட்டப்பட்ட பிரித்தானிய வியாபார நெளிவு சுளிவு, சந்திக்க வேண்டிய சவால்கள் ஒன்று கலந்து ஜீர்ணமானதில், ஏர்லைன்ஸ் சாப்பாடு கூட வேண்டியில்லாமல் வயிறு திம்மென்று இருந்தது. இவ்வளவுக்கும், இடியாப்பம், காரக்குழம்பு என்று தமிழ்ப் பதார்த்ததைச் சமைத்து இங்கிலீஷில் மெனுகார்ட் அடித்துப் பரிமாறிய பிரிட்டீஷ் விமானக் கம்பெனி சேவை அது.

சர்வதேச விமானப் பயணத்தில் சினிமா, சின்னத்திரை சீரியல் காட்சி என்று பல மொழியிலும் போடுவார்கள். ஒன்றுக்கு நாலு சானலில் இதெல்லாம் தெரிய குட்டியாக ஒரு டெலிவிஷன் நம் சீட்டுக்கு முந்தியதின் முதுகில் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு தடவை என் பக்கத்து சீட்டில் காவியுடுத்த சாமி. அவருக்கு நேர் முன் சீட்டில் அதி சிக்கனமாக ரவிக்கை போட்ட மாமி. முக்கால் திறந்த முதுகைக் கடந்து வருவது பக்திப் படமென்றாலும் வேண்டாம் என்று முற்றும் துறந்த சந்நியாசி சொல்லிவிட்டதால், பயணம் முழுக்க நானும் ஹெட்போனைக் கழற்றி வைத்துவிட்டு உபன்னியாச வெள்ளத்தில் மூழ்கி முத்தெடுக்க வேண்டிப் போனது.
பறவைகள் மட்டுமில்லை, பறப்பதும் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

(தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - ஆகஸ்ட் 28 2005)

1 Comments:

At 1:44 am, Blogger பாவக்காய் said...

Enakkum Idhe Mathiri Niriya Anbhavam. Niriry Idangalil paditihvittu sirithuvitten. Senthil

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது