Sunday, September 25, 2005

'ஒரு கிறிஸ்துமஸ் கதை'மலையாள எழுத்தாளர் பால் சக்கரியாவின் 'சக்கரியயுடெ பெண்கதகள்' மலையாளச் சிறுதொகைத் தொகுப்பில் (டி.சி புக்ஸ், கோட்டயம் வெளியீடு - 2001) இருந்து எனக்குப் பிடித்த இந்தச் சிறுகதையை மொழிபெயர்த்துத் தருகிறேன். சக்கரியாவின் எழுத்துகள் பற்றி நிறையப் பேசவேண்டும்.
--------------------------------


சித்தார்த்தனும் பத்ரோசும் சேர்ந்து அம்மிணி என்ற வேசியை ஒரு விடுதியின் அறைக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அடுத்த அறையில் இருந்த யாரோ அவளைத் திருப்பியனுப்பியபோது, சித்தார்த்தன் விடுதி வராந்தாவில் வைத்து அவளைச் சந்தித்ததன் பின்னால் நடந்தது அது.

"எனக்குப் பிராந்தியும் பிரியாணியும் வேணும்"

அவள் சொன்னாள். பிறகு சித்தார்த்தனின் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டாள். போர்வையைப் போர்த்திக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு அவள் கிடந்தாள்.

சித்தார்த்தனும் பத்ரோசும் சிறிது நேரம் அவளையே பார்த்தார்கள். பத்ரோசு பிராந்தியும் பிரியாணியும் வாங்க வெளியே போனபோது, சித்தார்த்தன் போர்வையை மெல்லத் திறந்து அவளை நோக்கினான்.

பிராந்தி குடித்து, பிரியாணியும் சாப்பிட்டு முடித்ததும் அவள் மீண்டும் கட்டிலில் படுத்து, போர்வையைப் போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள். பிராந்தியின் போதையில் சற்றே ஆடிய தலைகளோடு சித்தார்த்தனும் பத்ரோசும் அவளை நோக்கியிருந்தார்கள்.

"தூங்கறதுக்கா நீ இங்கே வந்தே? நாங்க ரெண்டு பேர் இங்கே காத்திருக்கோம், தெரியுதா?".

பத்ரோசு அவளிடம் உரக்கச் சொன்னான்.

அம்மிணி சுவரைப் பார்க்கத் திரும்பி இருந்தாள்.

சித்தார்த்தன் சொன்னான் - "அவ நம்மளை ஏமாத்திட்டா".

அம்மிணி சுவரைப் பார்த்தபடியே சொன்னாள் - "நான் யாரையும் இதுவரை ஏமாத்தினது இல்லே. ரெண்டு நாளாச்சு நான் நல்லாத் தூங்கி. என்னோட சங்கடமும் கஷ்டமும் உங்களுக்குப் புரியாது. நான் கொஞ்சம் தூங்கறேனே".

"உனக்குக் களைச்சு இருந்தா, தூங்கு. நாங்களும் கொஞ்சம் தூங்கிக்கறோம்", என்று சொல்லியபடி பத்ரோசும் சித்தார்த்தனும் அடுத்த கட்டிலில் தூங்கினார்கள்.

மாலை மங்கும்போது அவர்கள் எழுந்தார்கள். அப்போது அம்மிணி கட்டிலில் உட்கார்ந்தபடியே தலை வாரிக்கொண்டிருந்தாள். அவள் வாய் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

"தூங்கி முடிச்சுட்டியா?"

பத்ரோசு கேட்டான்.

சித்தார்த்தன் அவள் மெல்லப் பாடிக் கொண்டிருந்த பாட்டைக் கேட்டபடியே கண்களை மூடிக் கிடந்தான்.

"ஒரு கிண்ணம் சந்தனம் கொண்டு ஓடி நடக்கும் வெண்ணிலாவே" என்று அவள் பாடிக் கொண்டிருந்தாள்.

"கிண்ணமாக விரித்த பூவிதழ்க் கைகளோடு காட்டுப் பூவின் இதயம் காத்திருக்குது".

சித்தார்த்தன் மீதிப் பாடலை முணுமுணுத்தான். அது அவனுக்கு விருப்பமான பாடல்.

அப்புறம் ஒருத்தன் வெளியே நாற்காலியில் இருந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருக்க மற்றவன் அவளோடு சுகித்தது நடந்தது. சித்தார்த்தனுக்கு ஏனோ சங்கடமாக இருந்தது.

ராத்திரிச் சாப்பாட்டு நேரம் பத்ரோசு மீண்டும் வெளியே போய்ப் பிராந்தியும், பிரியாணியும் வாங்கி
வந்தான்.

குடியும், சாப்பாடும் முடிந்ததும் அம்மிணி நாற்காலியில் உட்கார்ந்து, கட்டிலில் காலை நீட்டியபடி சொன்னாள்
"எனக்கு இப்போ தூக்கம் வரலே. என்னோட கஷ்டங்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? ஒரு வேசியின் வாழ்க்கை எப்படிப்பட்டது? எனக்குப் புருஷனும் ரெண்டு குழந்தைகளும் உண்டு. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அண்ணி, அக்கா, தங்கச்சி, மாமா, மாமி எல்லாரும் உண்டு. நான் வேசி. இதோட அர்த்தம் என்ன? நான் எங்கேயோ இருந்து வந்து உங்க கட்டில்லே கிடக்கறபோது நீங்களும் கேட்டிருக்க வேணாமோ இதோட அர்த்தம் என்னன்னு? நான் வேசியாக இல்லாம இருந்தால் எப்படி ஆகியிருப்பேன்? எனக்கு இது புரியவே இல்லை. நான் யாரு? மனைவியா? மகளா? அம்மாவா? உடன் பிறந்தவளா? காதலியா? வேசியா?"

சித்தார்த்தன் அவள் பாதங்களை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு சொன்னான் - "நீ ஒரு பாவப்பட்ட பொண்ணு. உன் பேர் என்ன?"

"இப்போ என் பேரு உங்களுக்குத் தெரிஞ்சு என்ன ஆகணும்? எனக்குத் தொழில் ஆளை மயக்கறது".

அம்மணி தேம்பி அழத் தொடங்கினாள்.

"இப்பத்தான் நீங்க என் பேரைக் கேக்கறீங்க. இத்தனை நேரம் நீங்க யார்கிட்டப் பேசிட்டு இருந்தீங்க? யாரோட படுத்துக் கிடந்தீங்க?"

சித்தார்த்தனும் பத்ரோசும் குற்ற உணர்வோடு சொன்னார்கள் - "நீ எங்களை மன்னிக்கணும். உன்னை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. நீ இன்னிக்கு ராத்திரியும் வேணுமானா நாளைக்கும் இங்கேயே தங்கிக்கோ. நாங்க உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டோம்".

"அப்படீன்னா நீங்க முதல்லே என் கதையைக் கேளுங்க. என்னோட காதலன் என்னைத் தேடிட்டு வரக் கூடும். என்னோட புருஷன் என்னைத் தேடிட்டு வரக் கூடும். என்னோட அம்மாவோ அப்பாவோ இனி வரப்போறதில்லே.

நீங்க என்ன செய்வீங்க? ஆச்சரியப்படாம இருப்பீங்க என்றால் கேளுங்க. நான் வேசியானது என் புருஷன் சொல்லித்தான். அவனுக்குக் குடிக்க அதிகப் பணம் தேவையா இருந்தது என்கிறது அப்புறம் தான் தெரிஞ்சது. என் வீட்டுக்காரன் கூட்டிட்டு வரவங்களோட நான் படுப்பேன்.

அவன் வாசல் திண்ணையிலே பீடி வலிச்சிட்டு உட்காந்திருப்பான். அப்புறம் காசைக் கணக்குப் பண்ணி வாங்கிப்பான். அதுக்கு அப்புறம் என்னை அங்கேயும் இங்கேயும் தொட்டும் முகர்ந்தும் பார்ப்பான்.

நான் நடுராத்திரியானாலும் குளிச்சுட்டு என் குழந்தைகளோடு போய்த் தூங்குவேன். அப்பவும் எனக்கு என் புருஷனைப் பிடிச்சிருந்தது? ஏன்?

புருஷன்னா என்ன? எதுக்காக எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு? அவன் எனக்குக் கொடுத்த குழந்தைகளோடு இருக்கற அன்பு அவனுக்கும் ஆகிப் போனதோ? அவன் நிஜமாகவே என்மேல் பிரியம் வச்சிருக்கான் அப்படீன்னு நான் நினைச்சதாலா?

அவன் காசை எண்ணறதும் என்னை அப்புறம் மோந்து பார்க்கறதும் எனக்கு அலுத்தபோது எனக்கு ஒரு காதலன் கிடைச்சான். ஒரு லாரி டிரைவர். அவன் சாயந்திரம் எனக்கு பிராந்தியும் பிரியாணியும் கொண்டு வருவான். என் குழந்தைகளுக்கு நல்ல உடுப்புகளும் பொம்மைகளும் வாங்கித் தருவான். அவங்களைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டுபோய் விடுவான். லாரியிலே அவன் பக்கத்துலே என்னை உட்கார வச்சு, எம்.சி.ரோடிலே வேகமாப் போவான். சினிமாவுக்குக் கூட்டிப் போவான். என் வாழ்க்கையிலே முதல் தடவையாக எனக்கு முத்தம் கொடுத்தது அவன் தான். உங்களுக்குத் தெரியுமா?"

அம்மிணி சட்டென்று எழுந்து நின்று கேட்டாள் -

"நான் இந்நேரம் முழுக்க உங்களோட இங்கே இருந்தாலும் நீங்க யாராவது எனக்கு முத்தம் கொடுத்தீங்களோ? எனக்கு உதடு இருக்குன்னு உங்களுக்கு நினைப்பு வந்ததா? முத்தம் பிடிக்கும் எனக்கும்"

சித்தார்த்தனும் பத்ரோசும் குற்ற உணர்ச்சியோடு சுவரைப் பார்த்தபடி இருந்தார்கள்.

சித்தார்த்தன் சொன்னான் - "எங்களுக்கும் இதுவரை யாரும் முத்தம் கொடுத்ததில்லே. நாங்க இன்னும் கொஞ்சம் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வரோம். எங்களுக்கு நீ முத்தம் கொடுப்பியா?"

அம்மிணி வேகமாக நடந்து அவர்களின் நெற்றியில் முத்தினாள்.

"குழந்தைகளுக்கு இது போதும்", என்றாள்.

"விளையாடாதே. நாங்க பிள்ளைங்க இல்லே. அம்மா முத்தம் கொடுக்கற மாதிரி இருந்தது நீ முத்தம் கொடுத்தது".

"அப்ப நீங்க பொய் சொன்னீங்க"

அம்மிணி அவர்கள் பக்கத்தில் போய் அவர்கள் இருவரின் முகங்களையும் தன் கொஞ்சம் கனத்த வயிற்றில் அணைத்தபடி சொன்னாள். "உங்க அம்மாவாவது உங்களுக்கு முத்தம் கொடுத்திருக்காங்களே. நானும் உங்க அம்மாதான். என் வயத்துக்குள்ளே உங்களோட குட்டித் தம்பியோட சுவாசம் உங்களுக்குக் கேக்கறதா?"

அவர்கள் பெருந்துன்பத்தோடு அம்மிணியின் கைகளிலிருந்து தங்கள் தலையை விடுவித்துக் கொண்டார்கள் அவளுடைய புடவைக்கும் ரவிக்கைக்கும் இடையே தெரிந்த வயிற்றை சந்தேகத்தோடு பார்த்தார்கள். தங்களுக்கு அதிலிருந்து ஒரு இதயம் துடிக்கும் சத்தம் கேட்டது என்று அவர்களுக்குத் தோன்றியது.

"என்னோட காதலனோட மகன் இவன். இவன் பேரு சித்தார்த்தன்" அம்மிணி சொன்னாள்.

சித்தார்த்தன் திடுக்கிட்டுப் போனான்.

"அது மகன் தான்னு உனக்கு எப்படித் தெரியும்?" பத்ரோசு கேட்டான்.

"அவன் என்னைக் கஷ்டப்படுத்தறான். வயித்துக்குள்ளே அப்படியும் இப்படியும் திரும்பிக் கிடக்கான். ஆண்கள் தான் இப்படிக் கஷ்டப்படுத்துவாங்க. இன்னொரு தடவை நீங்க அவனோட இருதயத் துடிப்பைக் கேட்கறீங்களா?"

சித்தார்த்தனும் பத்ரோசும் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தார்கள்.

"வேணாம். நீ எங்களை விளையாட்டுப் பிள்ளையா எடுத்துக்கிட்டே".

"உங்களை எப்படி நான் அந்த மாதிரி எடுத்துக்கிட்டதாச் சொல்றீங்க?"

அம்மிணி கேட்டாள்.

"உனக்குக் கர்ப்பம் இருக்குன்னு நீ எங்க கிட்டச் சொல்லவே இல்லியே?"

அம்மிணி உரக்கச் சிரித்துக் கொண்டு அவர்கள் பக்கம் ஓடிப்போய் அவர்கள் இருவர் கன்னத்திலும் முத்தம் கொடுத்தாள்.

"நான் கர்ப்பமா இருந்தாலும் இல்லாட்டாலும் உங்களுக்கு என்ன வந்தது? நீங்க இப்பப் பழகறது என்னோடு தானே? என்னோட வயத்துலே இருக்கற குட்டி மகனோடு இல்லியே? அவன் உங்களை என்ன செய்யப் போறான்?"

மகிழ்ச்சியில் பளபளக்கும் கண்களோடு அம்மிணி அவர்கள் கண்ணுக்குள் நோக்கியபடி நின்றாள்.

"அறையிலே வேறே யாரோ இருக்கற மாதிரி"

பத்ரோசு சொன்னான்.

"நீ ஏன் அவனுக்கு என் பெயரை வச்சே?"

சித்தார்த்தன் கேட்டான்.

அம்மிணி புன்சிரித்தபடி கட்டிலில் படுத்துப் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

"உங்களுக்கு என் மகன் மேலே பயமா? அவன் பாவம். என் சிநேகிதனோட மகன். நானும் அவனும் கொஞ்சம் தூங்கறோம்".

சித்தார்த்தனும் பத்ரோசும் இரவின் இருட்டில் படி இறங்கிப் போய்ப் படகுத் துறையில் நீரில் நிழலிடும் படகுகளின் விளக்குகளைப் பார்த்தபடி நீண்ட நேரம் நின்றிருந்தார்கள். தூரத்தில் கப்பல்களின் அலறலை அவர்கள் கேட்டார்கள். முன்பு ஒரு காலத்தில் ஒரு மகன் பிறந்ததைக் கொண்டாட பாதி ராத்திரியில் மணிகள் முழங்கின.

"சித்தார்த்தா".

பத்ரோசு கூப்பிட்டான்.

"என்ன?"

"இன்னிக்கு கிறிஸ்துமஸ்".

"ஆமா" என்றான் சித்தார்த்தன்.

"சரிதான்".

அப்புறம் மேலே, ராத்திரியின் உயரங்களில் ஒரு பனிப்புகையிலூடே ஆகாசத்தின் பால்வழியைப் பார்த்தபடி சித்தார்த்தன் மெல்லப் பாடினான்.

"ஸ்ரீமகாதேவன் தன்ரெ ஸ்ரீபுள்ளோர்க் குடம் கொண்டு ஓமன உண்ணியுடே ..".

பிறகு அவர்கள் திரும்பிப் போனார்கள். அம்மிணியின் தூக்கம் கெடாமல், ஒரு சத்தமும் காட்டாமல், கட்டிலில் படுத்தபடிக் கண்களை மூடாமல் பதுமைகள் போல் கிடந்தார்கள்.

அவர்களின் காதில் பெருஞ்சத்தமாக தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது தங்களின் இதயத் துடிப்போ, அம்மிணியின் கர்ப்பத்தில் உள்ள சிசுவின் இதயத்துடிப்போ என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ராத்திரியில் எப்போதோ அம்மிணி தூக்கத்தில் ஏதோ சொல்வது கேட்டு அவர்கள் நடுங்கினார்கள். அவளுடைய அமைதியான சுவாசத்தின் அலைகள் மீண்டும் அவர்களைத் தழுவிச் சென்றன.

"தெய்வமே".

சித்தார்த்தன் மெல்லச் சொன்னான்.

"என்ன சொன்னே?"

பத்ரோசு கேட்டான்.

"ஒண்ணுமில்ல".

அப்புறம் ஒரு தொட்டிலைப் போல் அந்தக் கட்டில் அவர்களையும் கனவில்லாத ஓர் உறக்கத்தில் ஆழ்த்தியது.

(பால் சக்கரியாவின் 'ஒரு கிறிஸ்துமஸ் கத' - மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு - இரா. மு
- translation Aug 2003 )

1 Comments:

At 11:25 am, Blogger துளசி கோபால் said...

இரா.மு,

அருமையான மொழிபெயர்ப்பு. கதை நன்றாக இருக்கிறது.
உலகத்தில் இதுபோல எத்தனை 'அம்மணிகளோ?'

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது