Friday, September 23, 2005

பத்திக்கிட்டால் பத்துக் கலைப் படம்


நூறு வருடத்துக்கு முந்திய, இன்னும் சரியாகச் சொல்லப் போனால், விக்டோரியா மகாராணி காலத்து ஆங்கிலேயர்கள் குளித்தார்களா? தினசரியோ அல்லது வாரம் ஒரு தடவையோ அதுவும் இல்லாத பட்சத்தில் லீப் வருடத்தில் பிப்ரவரி 29ம் தேதியோ தவறாமல் குளிக்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது என்று எந்த சரித்திர ஆசிரியராவது எழுதினால் அதெல்லாம் ரீல் என்று நிரூபிக்க நான் தயார்.

ப்ரூப் வேணுமா? கொஞ்சம் என்னோடு யார்க்ஷயருக்கு வாருங்கள். விக்டோரியா ஓட்டல் என்ற புராதனமான தங்கும் விடுதியில் குளியலறையை வெளியில் இருந்து பாருங்கள்.

உள்ளே போகலாம்தான். ஒடுங்கலான அந்த அறைக்குள் ஒரு தினுசாக உடம்பை உடும்பாக வளைத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும். அதே போஸில் ஷவரைத் திறக்க வேண்டும். ஒருக்களித்தபடியே குளித்துவிட்டு சுளுக்குப் பிடிப்பதற்கு முன் வெளியே வர வேண்டும்.

ரைட் ராயலாக உள்ளே நுழைந்தால் எசகு பிசகாகச் சுவர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டு தீயணைப்புப் படையைக் கூப்பிட வேண்டியிருக்கும். அதுவும் அந்த ஊர்த் தீயணைப்புப் படையில் ஆறரை அடி உயரத்தில் கட்டு மஸ்தான பெண்மணிகள் அதிகம். நாலு சவரன் தங்கச் செயினை அழித்து ஒரு பவுன் மோதிரம் நாலு செய்கிறதுபோல், ஒரு தீயணைப்பு மாமியை அழித்தால் என் சைஸ் ஆசாமிகள் மூணு பேரைத் தோராயமாகச் செய்து நிறுத்தலாம்.

இந்த வீராங்கனைகள் இரண்டு பேர் வந்து பாத்ரூமிலிருந்து வெடுக்கென்று வெளியே பிடித்து இழுத்தால் இடது கை, வலது முழங்கால், தோள்பட்டை என்று தனித்தனியாக வந்து விழுந்து அப்புறம் உத்தேசமாக ஒட்டிச்சேர்க்க வேண்டியிருக்கும்.

தீயணைப்புப் படை என்ன, இங்கிலாந்து தேசியக் கொடியான யூனியன் ஜாக்கைப் பறக்கவிட்டுக் கொண்டு பட்டாளமே கொட்டி முழக்கிக்கொண்டு வந்தாலும் விக்டோரியா ஓட்டல் ஷவரில் தண்ணீர் வராது. குழாயைத் திறந்து இரண்டு நிமிடம் ஆனபிறகு சன்னமாக சீசன் ஓய்ந்த குற்றால அருவி மாதிரி சலித்துக்கொண்டு ஒழுக ஆரம்பிக்கும்.

இவ்வளவுக்கும் அந்தப் பட்டணத்தில் எக்கச் சக்க மழை பெய்து ஏரி, குளம் எல்லாம் எப்பவும் ரொம்பி இருப்பதால், முனிசிபாலிட்டிக்காரர்கள் லோக்கல் பத்திரிகைகளில் விளம்பரம் தருவது இந்த மோஸ்தரில் - ‘மகாஜனங்கள் எல்லோரும் நிறையத் தண்ணீரைச் செலவழிக்கும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம். தண்ணீர் நமக்கு இயற்கை கொடுத்த வரம். தினமும் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இன்னும் நாலு பக்கெட் பிடித்துத் தோட்டத்துச் செடிகொடிகளுக்கு நீர்பாய்ச்சுங்கள். தினசரி ஒரு மணி நேரமாவது ஷவரில் குளியுங்கள்'.

விக்டோரியா ஓட்டல் நிர்வாகிகளை அந்த ஊர் நகரசபைக்கும், நகரசபை உறுப்பினர்களை நம்முடைய தருமம் மிகு தண்ணீர் குறை சென்னைக்கும் நாலு வாரம் அனுபவப் பயிற்சி பெற அனுப்ப வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு குளித்துத் திரும்பினேன் ஒரு ஞாயிறு காலையில். அது ஓட்டலில் குடித்தனம் வைத்து வெற்றிகரமாகப் பத்தாவது நாள்.

காலைச் சாப்பாடு ரெடியா என்று கீழ்ப் போர்ஷனில் விடுதிக் காப்பாளார் மார்த்தா அம்மையாரை டெலிபோனில் விசாரிக்க. விடிகாலையிலேயே ஏண்டாப்பா பிராணனை வாங்கறே என்றார் அந்தம்மா.

காலை பத்து மணி விடிகாலையானதற்குக் காரணம் முந்திய ராத்திரி விடிய விடிய ஊர்கூடிக் கூத்தடித்துக் கொண்டிருந்ததுதான். சனிக்கிழமை சாயந்திரம் ஊர் மக்கள் ஓட்டல் கீழ்த்தளத்தில் சுதி ஏற்றிக் கொண்டு பழைய ஜாஸ், கண்ட்ரி ம்யூசிக் பாட்டுகளைக் கர்ண கடூரமாகப் பாடி ஆட ஆரம்பிப்பது, நடு ராத்திரி வரை தொடரும். நான் அரைகுறைத் தூக்கத்தில். சபரிமலை அய்யப்ப சாமிக்குப் படிப்பாட்டு பஜனை, தாம்பரம் - கடற்கரை மின்சார ரயிலில் கோஷ்டி கானத்தைக் கேட்டபடி பிரயாணம் என்று சத்தத்தின் பாதிப்பில் தினுசு தினுசாகக் கனவு கண்டு விழித்துக் கொள்ளும்போது கீழே ஓட்டல் இசைக்குழு ட்ரம்காரர் ஓங்கி முரசரைந்து ஒரு பாட்டை முடித்து அடுத்ததை ஒரு வழி பண்ணக் கிளம்பி இருப்பார்.

இன்ஸ்டால்மெண்ட் தூக்கத்தில் ஒருதடவை இப்படி எழுந்தபோது, தலைமாட்டில் சுருட்டு வாசனை. கண் சிவந்த ஒரு வெள்ளைக்காரர். மனுஷர் நீட்டி நிமிர்ந்து சோபாவில் சாய்ந்து நிம்மதியாகப் புகைவிட்டபடி டெலிவிஷன் பார்த்துக்கொண்டு இருந்தார். துள்ளி எழுந்து விளக்கைப் போட்டேன். பத்திரமாக உள்புறமாகப் பூட்டிவிட்டுப் படுத்துக் கொண்ட என் அறையில் இவர் எப்படி நுழைந்தார்? ஏன் நுழைந்தார்?

அவருக்கும் என்மேல் அதேபோல் சந்தேகம். வயல்காட்டுப் பக்கம் விடிகாலையில் குத்த வைக்கப்போகிற எங்கள் கிராமத்துப் பெரிசுகள் போல் பக்பக் என்று சுருட்டு பாட்டுக்கு புகையோடு இழுபட்டுக் கொண்டிருந்தது. பெயரை உச்சரிப்பது போல் அவருடைய அறை எண்ணை அவர் உச்சரிக்க, நான் என்னுடையதைச் சொன்னதோடு மேஜையில் வைத்திருந்த சாவிக்கொத்தில் மேற்படி எண்ணைக் காட்டி சந்தேகமற நிரூபித்தேன். என் ரூம்தான்.

மாடிப்படியில் எத்தனையாவது வளைவிலோ தவறாகத் திரும்பி இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். அதைவிட இன்னொரு பெரிய உண்மை ஏக காலத்தில் எங்கள் இருவருக்கும் புலப்பட்டது. விக்டோரியா ஓட்டலில் எல்லா அறைச் சாவியும் ஒரே மாதிரித்தான். ஒரு சாவி இருந்தால், இருக்கப்பட்ட முப்பது அறையில் எதில் வேணுமானாலும் சுளுவாக நுழைந்து விடலாம்.

இந்த ஞானோதயத்தோடு ராத்திரி ரெண்டேகாலுக்குக் கைகுலுக்கி விடைபெறும்போது அந்த ஐரிஷ்காரர் நான் உடுத்தியிருந்த எட்டுமுழ வேட்டியை உற்றுப் பார்த்தார். "இப்படி பெட்ஷீட்டை இடுப்பில் கட்டிக் கொண்டால் படுக்கையில் விரித்துப் படுக்க என்ன பண்ணுவே?' என்று கரிசனத்தோடு கேட்டுப் போனாரே பார்க்கலாம்..

சனிக்கிழமை ராத்திரி இப்படி எதிர்பாராத விருந்தாளிகளை வரவேற்று உபசரித்துச் சப்த சமுத்திரத்தில் கரையேறுவதில் கரைந்து போனால், மற்ற ராத்திரிகள் கொஞ்சம் வித்தியாசமாக பயர் அலாரம் அலறுவதில் உயிர் பெறும்.

ஏகக் களேபரமாகப் பத்து நிமிடம் ‘தீப்பிடிச்சுடுத்து, ஓடு, ஓடு' என்று அது அலறும். பதறி அடித்து பேண்டுக்குள் காலை நுழைத்துக் கொண்டு, கைக்குக் கிடைத்ததை வாரிச் சுருட்டிக் கக்கத்தில் இடுக்கியபடி பிராணபயத்தோடு கீழே ஓடினால், மற்ற அறைக்காரர்களும் அவ்வண்ணமே. அவர்களில் அரைக்காலுக்கு கீழே கண்டிப்பாக இறங்காத இறுக்கமாக நிஜார் அணிந்த ரதிகள் நாலைந்து பேராவது கட்டாயம் இருப்பார்கள். தீயாவது, விபத்தாவது என்று படு அலட்சியமாக இந்தத் தலைமுறையின் கனவுக்கன்னிகளான ஷாரப்போவாவுக்கும், பமீலா ஆண்டர்சனுக்கும் ஏனையோருக்கும் சவால் விடும் வனப்போடு அவர்கள் ஓட்டல் வாசல் நாற்காலியில் அட்டணக்கால் போட்டபடி சிகரெட் குடித்துக் கொண்டிருப்பதை பார்க்கத் தடையுத்தரவு போடும் என் மனசு. மகா அல்பமாக அது, எடுத்துவர மறந்துபோன இருமல் மருந்தை, ஜீரண மாத்திரையை, மூக்கடைப்பு களிம்பைச் சுற்றி ஜலதோஷத்தோடு சுழன்று கொண்டிருக்கும்.

"ஓட்டல் சலவைக்கூடத்தில் எலியோ எதோ ஒயரைக் கடிச்சுப் போயிருக்கு. அதான் பயர் அலார்ம் கூவினது. சமத்தாப் போய்த் திரும்பத் தாச்சிக்கோ' என்று மார்த்தா அம்மையார் கட்டளையிட அறைக்குத் திரும்ப நடந்தது பத்துக்கு மூன்று ராத்திரி அரங்கேறிய கதை. அதற்கப்புறம் தூக்கம் பிடிக்காமல் டெலிவிஷனைப் போட, ரெப்பல்ஷன், டெணண்ட் என்று மூணு ராத்திரியும் ரோமன் போலன்ஸ்கியின் அருமையான திரைக்காவியங்களை தொலைக்காட்சி தயவில் பார்த்தேன்.

‘வீடு போன்று சவுகரியமான' ஹோம்லி சூழ்நிலை அமைந்திருந்தால் மற்ற ரசனைக்கெல்லாம் இல்லாவிட்டாலும், கலை ரசனைக்காவது ஏதோ தீனி போடமுடிந்த நிம்மதி.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - 11 செப்டம்பர் 05

1 Comments:

At 2:33 am, Blogger KARTHIKRAMAS said...

:-) மழை பெய்தால்?

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது