Saturday, September 17, 2005

ஓணப் பிற்றேன்ன


(ஓணத்துக்கு அடுத்த நாள்)

ஓணத்துக்கு அடுத்த அவிட்டமும் கழிந்த சதய நாளிது.

ஓணத்தன்று கவிஞர் சுகுமாரனுக்குத் தொலைபேசியபோது அவர் மலைப்புரத்தில் அலைந்து கொண்டிருந்தார். சூர்யா டிவியில் புள்ளிக்காரன் ஏற்பாடு செய்யும் 'வர்த்தமானம்' நிகழ்ச்சிக்கான அலைச்சல் அது. ஒரு நல்ல தமிழ்க் கவிஞரை கேரளா பாலிடிக்ஸ் இப்படியா அலையவிட வேண்டும்.

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு வாழ்த்து சொன்னபோது, 'பொன் ஓணமில்லே, வெட் ஓணமாக்கும் இங்கே திருசூர்லே' என்றார். மழை நிற்கவேயில்லை அங்கேயும், ஆலப்புழையிலும்.

சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஓணம் எல்லாம் ஒருபோல தான் இப்போது. டிவி சானல் ஓணம். ஓட்டலில் 100 ரூபாய்க்கு ரிசர்வ் செய்து ஸ்பெஷல் ஓண சத்ய ஓணம் -ஒரு சுக்கும் இல்லை ரெண்டிலும்,

சானல் ஓணம் சானல் தீபாவளி மாதிரித்தான். சினிமா நடி நடன்மார் திரையை ஆக்கிரமிக்காத நேரங்களில் சின்னத்திரை நட்சத்திரங்கள். அப்புற்ம அந்த அந்த டிவிக்குச் செல்லப் பிள்ளைகளான பிரமுகர்கள் ஓணாசம்ச நேர்தல என்ற வாழ்த்துச சொல்லல். ஏகத்துக்கு விளம்பரங்களுக்கு
நடுவில் சினிமாப் படம்.

கைரளி டிவியில், அட்லாஸ் ஜுவல்லரி ராமச்சந்திரன் 'ஜனகோடிகளுடெ விஸ்வஸ்த ஸ்தாபனம்' என்று முகத்தில் ஜாக்கிரதையாக ஒட்டி வைத்த சிரிப்போடு அறிவித்துக் கொண்டு அடிக்கடி தோன்றி பாட்டும் கூத்துமாக எதேதோ ஸ்பான்சர் செய்கிறார்.

ஓணத்துக்கு முந்தைய உத்தராட நாளில் வந்த விக்ரம் பேட்டியை அங்கே இங்கே கொஞ்சம் மாற்றினால் நம்ம ஊர் சானலில் தீபாவளிக்கு ரீயூஸ் செய்து விடலாம். அவர் பேட்டியோடு காட்டப்பட்ட கிளிப்பிங்கள் மிக்கவாறும் தமிழ்ப் படங்கள் தான்.

ஆனாலும் இந்த ஓணம் சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்குத்தான் பொன் - பிளாட்டினம் ஓணம். நேரறியான் மம்மூட்டி, மம்மூட்டியோடொப்பம், மம்முட்டியோடு ஒரு கூடிக்காழ்ச்ச என்று சகல சானலிலும் அவர்தான் பிரகாசித்தார். தூர்தர்ஷன் மலையாள்த்தில், நிஜமான ஜ்வலிப்பு - நாலு தாம்புக் கயிறு செயின் கழுத்தில், எல்லா விரலிலும் தாமரைக்கனி போட்டிருந்த சைஸ் மோதிரங்கள், கைத்தண்டையில் பிரேஸ்லெட், கோல்ட் செயின் வாட்ச் என்று நடமாடும் நகைக்கடையாக வந்தார் மம்மூக்கா, செட்டில் பீடி குடித்தபடி, டபுள் முண்டோடு காஷுவலாக தரையில் கால்வைத்து நடந்து கொண்டு, மம்மூட்டி என்ற பெயரில் ஒரு அற்புதமான நடிகர் இருந்ததாக ஞாபகம்.

மோகன்லால்? அவரும் எல்லா சானலிலும் தவறாமல் வருகிறார். 'பங்கஜ கஸ்தூரி - ப்ரீத் ஈசி' என்று ஆஸ்துமா மருந்து விளம்பரம் கொடுத்துக் கொண்டு.

ஏஷ்யாநெட்டில் கொஞ்ச நேரம் ஷீலா, ஜெயராம் நடித்த 'மனசினக்கரெ' பார்த்தபோது தோன்றியது - கொச்சுத் தெரசா ஷீலாவை விட, கூட நடித்த அந்தக்கால வில்லி நடிகை கேபிசிஏ லலிதா அற்புதமாக நடித்திருக்கிறார். ஆனாலும் ஷீலா ஷீலாதான்.

குறியேடத்துத் தாத்ரிக்குட்டிக்கும் (பார்க்க, இரண்டு வாரம் முன்னால் 'திண்ணை'யில் சுகுமாரன் கட்டுரை, மற்றும் ராயர் காப்பி கிளப்பில் என் பழைய கட்டுரைகள்) தன் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார் ஷீலா. ஆனாலும் இதைச் சிலவருடம் முன்னால் தொடங்கி வைத்த எழுத்தாளர் - நடிகர் - வசனகர்த்தா மாடம்பு குஞ்ஞுக்குட்டன் நம்பூத்ரியோ இப்போது தாத்ரி பிரச்சனையின் நூற்றாண்டு நிறைவில் அதைப் பற்றி பேசியவர்களோ எதுவும் பதில் சொல்லவில்லை.

(ஓவியம் ராடிக்கல் மூவ்மெண்ட் ஓவியர் என். என்.ரிம்சன் - நன்றி தேசாபிமானி)

2 Comments:

At 2:59 pm, Blogger துளசி கோபால் said...

அன்புள்ள இரா.மு,

//சானல் ஓணம் சானல் தீபாவளி மாதிரித்தான்//

//சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஓணம் எல்லாம் ஒருபோல தான் இப்போது.
டிவி சானல் ஓணம். ஓட்டலில் 100 ரூபாய்க்கு ரிசர்வ் செய்து ஸ்பெஷல் ஓண
சத்ய ஓணம் -ஒரு சுக்கும் இல்லை ரெண்டிலும்,//

நிஜமாவா மம்மூக்கா நகைக்கடையா வந்தார்? 'டானி' பார்த்தீங்களா?

அதென்ன கேபிசிஏ லலிதாவை வில்லி நடிகைன்னு ஒரே போடாப் போட்டுட்டீங்க.

ஓஹோ, அந்தக்காலத்து வில்லி நடிகையா... சரிசரி.

இப்பெல்லாம் அவுங்க குணச்சித்திர நடிகையா அருமையா செய்ய்றாங்களே.
அதுவும் கொச்சு தெரெஸ்ஸாக்கு வேண்டி ( தன்டே பழைய கூட்டுகாரியல்லே)
தின்னானுள்ள சாதனங்கள் பொதிஞ்சு கொண்டுவந்து கொடுக்கறது, அமெரிக்கா
போகப்போறென்னு சொல்லிட்டு அங்கே எதுக்காகப் போறாங்கன்னு சொல்லி அழறது எல்லாம்
அருமை.

இதையெல்லாம் படிக்கிறப்ப, நாந்தான் எங்கியோ இருந்துக்கிட்டு இதையெல்லாம்
'மிஸ்' செய்யறேனோன்னு தோணுது:-)

 
At 9:13 pm, Blogger donotspam said...

good coverage
அமிர்த்தானந்தமயி பேட்டி பற்றியும் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது