பெரிய சிறகுகளோடு ஒரு கிழவன்
நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாளர் (ஸ்பானிஷ் மொழி) காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் படைப்பிலக்கியத்தில் மாய யதார்த்த வாதத்தை (மேஜிக்கல் ரியலிசம்) முன்னெடுத்துச் சென்றவர். அவருடைய 'நூறு வருடத் தனிமை' மேஜிக்கல் ரியலிசப் புனைகதைகளில் ஒரு மைல்கல்.
குழந்தைகளுக்காக எழுதிய கதை என்று உபதலைப்போடு அவர் எழுதிய அற்புதமான சிறுகதை, 'A very old man with enormous wings'.
கதையை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறேன்.
மத்தளராயன் என்னும் இரா.முருகன்
------------------------------------------------------------
பெரிய இறக்கைகளோடு ஒரு வயசாளி
மழை பெய்ய ஆரம்பித்த மூன்றாம் நான் பெலாயோவின் வீட்டுக்குள் வந்த ஏராளமான நண்டுகளைக் கொன்றார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ராத்திரி முழுக்கக் காய்ச்சலாக இருந்தது. செத்த நண்டுகளின் வாடையால் அது ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் நினைத்ததால், பெலாயோ மழையில் நனைந்த வாசலைக் கடந்து எடுத்துப் போய் அவற்றைக் கடலில் எரிந்தான்.
செவ்வாய்க்கிழமையிலிருந்து உலகம் சோகமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே போல சாம்பல் நிறத்தில் கிடந்தது. மார்ச் மாத இரவுகளில் வெளிச்சப்பொடிகள் போல் மின்னிய கடற்கரை மணல், செத்த கிளிஞ்சல் பூச்சிகளும் சகதியுமாகக் குழம்பிக் கிடந்தது.
நண்டுகளைக் கடலில் எரிந்து விட்டு பெலாயோ திரும்பி வந்தபோது, சந்திரனின் ஒளி மிகவும் சோகையோடு இருந்ததால், அரையிருட்டில், வீட்டு நடையில் வலியால் முனகியபடி நகர்ந்து கொண்டிருப்பது எது என்று
அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதற்கு மிக அருகில் போய்ப் பார்த்தபோது அது ஒரு கிழவன் என்று தெரிந்தது. ரொம்பவே வயசான ஒரு கிழவன். சகதியில் முகம் புதையப் படுத்திருக்கிறான். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவன் எழுந்திருக்க முடியாததற்குக் காரணம், அவனுடைய
மிகப் பெரிய இறக்கைகள்.
பெலாயோ பயந்துபோய் வீட்டுக்குள் ஓடினான். அவன் மனைவி எலிசிந்தா நோயால் துடிக்கும் குழந்தைக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வாசல் நடைக்குப் போனான் பெலாயோ. விழுந்து கிடக்கும் உருவத்தை இருவரும் வியப்பும் திகைப்புமாகப் பார்த்தார்கள்.
அந்தக் கிழவன் குப்பை பொறுக்குகிறவன் போல் உடுத்தியிருந்தான்.
அவனுடைய வழுக்கைத் தலையில் சில மங்கிய முடிகளே மிச்சம் இருந்தன. பொக்கை வாயிலும் கொஞ்சம் போல் பற்கள். இதற்கு முன் எத்தனை ராஜபோகமாக இருந்தானோ. முழுக்க நனைந்த முப்பாட்டன் போல் அவனுடைய தற்போதைய பரிதாபமான நிலையில் அதெல்லாம் அடிபட்டுப் போயிருக்கும்.
பாதி பிடுங்கப்பட்ட அவனுடைய இரண்டு பெரும் இறக்கைகளும் அழுக்காக, சகதியில் சிக்கிக் கொண்டிருந்தன.
பெலாயோவும் எலிசிந்தாவும் அந்தக் கிழவனை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்புறம் பார்வை பழகி அவனும் பழகிப் போனான். பிறகு அவனிடம் தைரியமாகப் பேச முயன்றார்கள். அவன் மாலுமிகளின் கனத்த குரலில் ஏதோ புரியாத மொழியில் பேசினான்.
புயலில் சிக்கிச் சீரழிந்த கப்பலிலிருந்து தூக்கி எறியப்பட்டவன் அந்தக் கிழவன் என்று அவர்கள் புத்திசாலித்தனமாக ஊகிப்பதற்கு அவனுடைய பெரிய இறக்கைகள் தடையாக இல்லைதான்.
ஆனாலும் பக்கத்து வீட்டம்மாவை அவர்கள் கூப்பிட்டார்கள். வாழ்க்கை, சாவு பற்றி சகலமும் தெரிந்த அவள் ஒரு தடவை அந்தக் கிழவனைப் பார்த்ததுமே, அவர்கள் நினைப்பு தவறானது என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.
"அவன் ஒரு தேவதூதன். உங்க குழந்தை உடம்பு சரியில்லாம இருக்கு இல்லியா ... அதோட உயிரைக் கொண்டு போறதுக்காக வந்தவனா இருக்கும்.. பாவம் .. வயசு ரொம்ப ஆச்சு இல்லே .. மழை அவனைக் கீழே விழுத்தாட்டிடுச்சு".
ரத்தமும் சதையுமாக ஒரு தேவதூதன் பெலாயோ வீட்டில் பிணைக்கைதி போல் இருக்கிறான் என்ற தகவல் அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
"இந்த மாதிரி தேவதூதர்கள் சுவர்க்கத்தில் நடக்கும் ஏதோ சதியில் தப்பித்து வந்தவங்க.." என்று பக்கத்து வீட்டுக்கார அம்மா சொன்னதால், அந்தக் கிழவனை அடித்துக் கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை.
சமையல்கட்டிலிருந்து பெலேயோ பிற்பகல் முழுக்க அந்தக் கிழவனைக் கண்காணித்தபடி இருந்தான். எதற்கும் இருக்கட்டும் என்று அவன் கையில் ஒரு தடி இருந்தது. ராத்திரி தூங்கப் போகும் முன் அவன் கிழவனைச்
சகதியிலிருந்து இழுத்துக் கொண்டு போய்க் கோழிக்கூட்டில் வைத்துப் பூட்டினான்.
நடுராத்திரியில் மழை நின்றது. பெலேயோவும் எலிசிந்தாவும்
அப்போதும் நண்டுகளைக் கொன்றபடி இருந்தார்கள்.
கொஞ்ச நேரம் கழித்துக் காய்ச்சல் இறங்கிக் குழந்தை விழித்துக் கொண்டு பசியால் அழுதது. அப்போது அவர்களுக்குக் கருணை பொங்கியது.
தேவதூதனை ஒரு தோணியில் ஏற்றி மூன்று நாளுக்கு வரும்படியாகக் குடிதண்ணீரும் சாப்பாடும் கூடவே வைத்துத் திரும்பக் கடலில் கொண்டுவிட்டுவிடலாம் என்று தோன்றியது.
ஆனால் விடிந்து அவர்கள் வெளியே வந்தபோது, அவர்கள் கோழிக்கூடுக்கு முன்னால் அண்டை அயல் முழுக்கக் கூடி இருந்தது. அந்தக் கும்பலுக்குத் தேவதூதன்மேல் கிஞ்சித்தும் மரியாதை இல்லை. ஒரு சர்க்கஸ் மிருகத்துக்குக்
கொடுப்பது போல் கூண்டின் கம்பிகள் வழியே ஏதேதோ பண்டங்களை அவன் தின்பதற்காக எறிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
இந்த வினோதமான செய்தி கிடைத்துத் திடுக்கிட்டுக் காலை ஏழு மணிக்கு முன்னதாகவே கொன்சாகா பாதிரியார் வந்து சேர்ந்தார். அந்த நேரத்தில் தேவதூதனைப் பார்க்க வந்த பார்வையாளர்கள் காலையில் வந்தவர்கள் போல் விளையாட்டுத்தனத்தோடு இல்லாமல், பிடிபட்ட தேவதூதனின் எதிர்காலம் குறித்துப் பல விதமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் எளிமையான சிந்தனையுடையவர்கள், தேவதூதனை உலகத்தின் தந்தையாக, ஒரு மாநகராட்சி மேயர் போல் நியமிக்க வேண்டும் என்றார்கள். கொஞ்சம் கடுத்த மனம் படைத்தவர்கள் தேவதூதனுக்கு உடனே ஐந்து
நட்சத்திர அந்தஸ்து உள்ள படைத்தளபதி பதவி கொடுத்து, உலகின் யுத்தங்களை எல்லாம் ஜெயிக்க வேண்டும்
என்றார்கள். இன்னும் சில முன்னோக்கு சிந்தனையாளர்கள் அவனை ஒரு பொலி காளை போல் பயன்படுத்தி,
இறக்கை முளைத்த அறிவாளிகளின் இனத்தை உருவாக்கி அவர்கள் இந்த அகிலத்தையே அரசாளச் செய்ய வேண்டும்
என்று அபிப்பிராயப் பட்டார்கள்.
கொன்சாகா பாதிரியார் பாதிரி மடத்தில் சேர்வதற்கு முன் ஒரு திடகாத்திரமான விறகுவெட்டியாக இருந்தவர். கோழிக் கூண்டுக்கு வெளியே நின்றபடி கேள்வி-பதில் முறையில் இங்கே நடப்பதை அறிய வேண்டும் என்று தீர்மானித்தபடி பக்கத்தில் போய்ப் பார்க்க வசதியாகக் கதவைத் திறக்கச் சொன்னார். குஞ்சுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு பெரிய கோழி போல் உள்ளே இருந்தவன் அவருக்குத் தெரிந்தான்.
தேவதூதன் ஒரு ஓரமாகச் சூரிய வெளிச்சத்தில் இறக்கையை உலர்த்தியபடி இருந்தான். காலையில் அவனைப் பார்க்க வந்தவர்கள் மேலே விட்டெறிந்த பழத்தோல்களும் பலகார மிச்சங்களும் அவனைச் சுற்றி இருந்தன. இந்த உலகத்தின் மரியாதையில்லாத்தனத்தோடு அந்நியப்பட்டவனாக அவன் தன் அறுதப் பழைய கண்களால் ஏறெடுத்துப் பார்த்துப் புரியாத மொழியில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
கொன்சாகா பாதிரியார் கோழிக் கூட்டுக்குள் நுழைந்து அவன் அருகில் சென்று இலத்தீன் மொழியில் காலை
வணக்கம் சொன்னார்.
கடவுளின் மொழியாகிய இலத்தீனை அவன் விளங்கிக் கொள்ளவில்லை. கடவுளின் ஊழியர்களான பாதிரியார்களுக்கு எப்படி மரியாதையோடு முகமன் கூறுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆசாமி ஒரு
மோசடிப் பேர்வழியாக இருப்பானோ என்று கொன்சாகா பாதிரியாருக்கு அப்போதுதான் முதன்முதலாகச்
சந்தேகம் வந்தது.
அப்புறம்தான் அவர் கவனித்தார். அவன் ஒரு சராசரி மனிதன் போலத்தான் இருந்தான். அவனிடம் வெளியிடங்களில் அடிக்கும் ஒரு பொறுத்துக் கொள்ள முடியாத நெடி இருந்தது. அவன் இறக்கைகளின் பின்புறத்தில்
புழுபூச்சிகள் அரித்துக் கொண்டிருந்தன. தரைக்காற்றால் சேதமடைந்த இறக்கைகள் அவை. அவனைப் பற்றிய
எதுவுமே தேவதூதர்கள் பற்றிய பெருமையும் கண்ணியமும் கொண்டதாக இல்லை.
அவர் கோழிக்கூட்டிலிருந்து வெளியே வந்து, கூடியிருந்தவர்களிடையே சுருக்கமாக ஒரு சொற்பொழிவு
செய்தார். ஆர்வக் கோளாறினால் காட்டும் துணிச்சலின் அபாயங்கள் குறித்து இருந்தது அது. கேளிக்கை
விழாவில் காட்டும் தந்திரங்களைப் பிரயோகித்துச் சாத்தான் இப்படித்தான் விஷயம் தெரியாதவர்களைக்
குழப்பும் என்றார். விமானத்துக்கும் கழுகுக்கும் வேறுபாடு என்ன என்று தீர்மானிக்க இறக்கைகள் மட்டும் போதாது.
தேவதூதர்களைப் பற்றிய தீர்மானம் எடுப்பதில் இறக்கைகளின் பங்கு இன்னும் குறைச்சல்தான் என்று விளக்கினார்.
என்றாலும் அவர் தன் பிஷப்புக்கு இது குறித்து எழுதுவதாகச் சொன்னார். பிஷப் அவருடைய தலைவருக்கு. அவர்
நேரடியாக போப்பாண்டவருக்கு. இப்படியாக உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பு இந்த விஷயத்தில் கிடைக்கும்.
ஆனால் அவருடைய மேதாவிலாசம் அங்கே எடுபடாமல் போனது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி அதி
வேகமாகப் பரவ, சில மணி நேரத்தில் அந்த வீட்டு நடையில் சந்தைக்கடை இரைச்சலோடு கும்பல் நிரம்பி
வழிந்தது. அவர்கள் வீட்டையே தகர்த்து விடலாம் என்பதால், கத்தி சொருகிய துப்பாக்கியோடு காவல்படை
வந்து இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க வேண்டியிருந்தது.
வீட்டு நடையில் குவிந்த குப்பைகளை எடுத்துத் துப்புரவு செய்து அலுத்துப்போன எலிசிந்தா, வீட்டு நடையைச்
சுற்றி வேலி அடைக்கலாம் என்றும் தேவதூதனைக் காண வருகிறவர்களிடம் ஆளுக்கு ஐந்து காசு நுழைவுக் கட்டணம்
வாங்கலாம் என்றும் முடிவு செய்தாள்.
அதிசயத்தைப் பார்க்க ஆசை கொண்டவர்கள் தொலை தூரத்திலிருந்து எல்லாம் வந்தார்கள். ஊர் ஊராகப் போகும்
ஒரு களியாட்ட விழாக்குழுவும் வந்தது. அதில் ஒரு வித்தைக்காரன் கூட்டத்தின் தலைகளுக்கு மேல் பறந்து
வேடிக்கை காட்டினான். ஆனாலும் யாரும் அவனை லட்சியம் செய்யவில்லை. காரணம் அவனுக்கு இருந்தவை வௌவால்
சிறகுகள் தான். தேவதூதன் போல் பெரிய இறக்கைகள் இல்லை.
உலகின் மிகுந்த துர்பாக்கிய வசப்பட்ட உடல் குறையுள்ளவர்கள் தாங்கள் நலம் பெற வந்தார்கள். ஒரு ஏழைப் பெண்மணி வந்தாள். அவள் சிறு வயதிலிருந்து தன் இதயத் துடிப்புகளை ஒன்று விடாமல் எண்ணி, இனிக் கணக்கு வைக்க அவளிடம் எண்கள் தீர்ந்திருந்தன. போர்ச்சுக்கலில் இருந்து ஒரு மனுஷ்யன் வந்திருந்தான். அவனைத் தூங்கவிடாமல் நட்சத்திரங்களின் சத்தம் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததாம். அப்புறம், தூக்கத்தில் நடக்கும் ஒருவன். அவன் விழித்திருக்கும் செய்த எல்லாவற்றையும் தூக்கத்தில் நடந்து கலைத்துப் போடுகிறவன்.
இன்னும், அத்தனை கடுமையான உபாதைகள் இல்லாத பலரும் கூட வந்திருந்தார்கள். இந்த மகா கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் இடையே பெலாயோவும் எலிசிந்தாவும் களைத்துப் போனபடி சந்தோஷமாக இருந்தார்கள். இருக்காதா பின்னே? ஒரு வாரத்துக்குள் வீட்டு அறைகள் முழுக்கப் பணம் சேர்த்து அடைத்து வைத்திருந்தார்கள். தேவதூதனைத் தரிசிக்க நின்ற யாத்திரீகர்களின் வரிசை தொடுவானத்துக்கு அப்பால் நீண்டிருந்தது.
தேவதூதன் மட்டும் இதிலெல்லாம் பங்கு பெறாமல் இருந்தான். அவன் கடன் வாங்கிய தன் இருப்பிடத்தில்
முடிந்தவரை சௌகரியமாக இருக்க முயன்றான். முள்வேலியைச் சுற்றி ஏற்றி வைத்த எண்ணெய் விளக்குகளும், தரிசிக்க வந்தவர்கள் ஏற்றி வைத்த புனிதமான மெழுகுதிரிகளும் கிளப்பிய சூடு நரக வேதனையாக
இருந்திருக்கும்.
முதலில், அவனைச் சில அந்துருண்டைகளைச் சாப்பிட வைக்க முயன்றார்கள். அந்துருண்டை தான் தேவதூதர்கள்
சாப்பிட விதிக்கப்பட்ட உணவு என்று எல்லாம் தெரிந்த பக்கத்து வீட்டு அம்மா சொன்னதே காரணம். ஆனால்
அவன் அவைகளைச் சாப்பிடவில்லை. அதேபோல், மடாலயங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட பாதிரிகள்
சாப்பிடும் புனிதமான உணவையும் அவன் நிராகரித்தான். அதற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததா
அல்லது அவன் ரொம்பவும் வயசாளியாக இருந்ததா என்று யாருக்கும் தெரியவில்லை. கடைசியில், அவன்
கத்தரிக்காய்க் கூட்டு மட்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
அவனுடைய ஒரே அசாதாரணமான இயல்பு அவனுடைய பொறுமைதான். முக்கியமாக, கோழிகள் அவனுடைய
இறக்கைகளில் வானவெளிப் புழுப்பூச்சிகளைத் தேடித்தேடிக் கொத்திக் கொண்டிருந்தபோதும், முடவர்கள் அவனுடைய
இறக்கையிலிருந்து சிறகு பிய்த்தெடுத்துத் தங்கள் செயலிழந்து போன உடல் பகுதிகளில் வைத்துத் தடவிக்
கொண்ட போதும், இன்னும், சிலர் கல்லெறிந்து அவனை நிற்க வைத்துப் பார்க்க முயன்ற போதும் அவன்
பொறுமையாகவே இருந்தான்.
அவன் கொஞ்சம் பொறுமை இழந்தது ஒரே ஒரு தடவைதான். அவன் மணிக்கணக்காக அசையாமல் இருந்தபோது செத்துப்போய் விட்டானா என்று பரிசோதிக்க, கொதிக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் அவனுக்குச் சூடு
வைத்தபோது அவன் சிலிர்த்து எழுந்து, யோகிகளின் மொழியில் ஏதோ சொல்லியபடி, கண்களில் நீர்முட்ட எழுந்து நின்று தன் இறக்கைகளை இரண்டு தடவை விசிறி அடித்துக் கொண்டான். அப்போது கோழி எச்சமும், நிலாத் தூசியும்
பறக்க, இந்த உலகத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாத நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சூறாவளி எழுந்தது.
அவனுடைய எதிர்வினை கோபத்தால் எழுந்தது இல்லை. அது வலியால் ஏற்பட்டது என்று புரிந்தது, அப்புறம் அவர்கள் அவனைத் தொந்தரவு செய்யவில்லை. ஆனாலும் அவர்களில் பலருக்கும் அவனுடைய நிதானம் ஒரு நாயகனின்
சாவகாசமான செயல்பாடு இல்லை என்றும் அது ஓய்வில் எழும் தீவிரமான செயல்பாடு என்றும் புரிந்தது.
கொன்சாகா பாதிரியார் கூட்டத்தின் குதூகலத்தை வேலைக்காரியின் ஆர்வ உந்துதல் பற்றிய சமன்பாடுகளால்
தக்க வைத்துக் கொண்டு, இந்தச் சிறைப்பிடிக்கப்பட்ட தேவதூதன் பற்றிய இறுதித் தீர்ப்பு மடாலயத்தின்
மேலிடத்திலிருந்து வருவதற்காகக் காத்திருந்தார்.
ஆனால் ரோமாபுரியிலிருந்து வந்த கடிதத்தில் நிலைமையின் அவசரமே தென்படவில்லை. அவர்கள் இந்த நபருக்குத் தொப்புள் இருக்கிறதா, அவன் பேசும் மொழியில் அராமைக் மொழியின் சாயல் புலப்படுகிறதா, அவனால் எத்தனை முறை ஒரு ஊசியின் முனையில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியும் .. இல்லை அவன் இறக்கை முளைத்த ஒரு நார்வே நாட்டுக்காரனா .. என்று கண்டறிவதிலேயே நேரத்தைச் செலவிட்டார்கள்.
இந்தக் கடிதங்கள் வந்தும் போயும் கொண்டிருப்பது முடிவே இல்லாமல் நீண்டிருக்கும்.. நல்ல வேளை, ஒரு நிகழ்ச்சி
பாதிரியாரின் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அந்த நாட்களில், கேளிக்கை விழா சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஊர் விட்டு ஊர் போகும் ஒரு கண்காட்சி நகரத்துக்கு வந்தது. பெற்றோருக்குக் கீழ்ப்படியாத குற்றத்துக்காக ஒரு சிலந்தியாக மாற்றப்பட்ட
பெண்ணைக் கண்காட்சிப் பொருளாக வைத்து நடத்தப் பட்டது அது.
சிலந்திப் பெண்ணைப் பார்க்க, தேவதூதனைக் காணக் கொடுக்க வேண்டிய கட்டணத்தை விடக் குறைவாகத் தான்
வசூலிக்கப்பட்டது. அது மட்டும் இல்லை. அந்தச் சிலந்தியை முழுக்கத் தடவிப் பார்த்து, எல்லாவிதமான கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவள் ஆட்டுக்குட்டி அளவிலான ஒரு பயந்து போன சிலந்தியாக, நடுவே பெண் தலையோடு இருந்தாள்.
அவளுடைய அசாதாரணமான தோற்றத்தை விட, அவள் உண்மையான கரிசனத்தோடு தன் துரதிருஷ்டம் பிடித்த
வரலாற்றைச் சொன்னதே மனதைத் தொடுவதாக இருந்தது. பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடனமாடப் போய்,
ராத்திரி முழுக்க ஆடிக் களித்து விட்டுக் காட்டு வழியே வீட்டுக்குத் திரும்பி வரும்போது, வானம் பிளந்ததுபோல் இடி இடித்து மின்னல் கீற்று இறங்கி வந்து அவளைச் சிலந்தியாக மாற்றிப் போட்டதாம்.
அவளுடைய ஒரே உணவு, பரிதாபப்பட்ட நல்லவர்கள் அவள் வாயில் விட்டெறிந்த இறைச்சி உருண்டைகள் தான்.
இவ்வளவு மனுஷத்தனமான உண்மையும், அச்சுறுத்தும் படிப்பினையும் கொண்ட அவளுடைய இருப்பு, யாரையும்
ஏறெடுத்துக்கூடப் பார்க்காத மேட்டிமையான தேவதூதனின் காட்சியைச் சுலபமாக முந்திக் கொண்டு கூட்டம் சேர
வைத்தது.
தேவதூதன் நிகழ்த்தியதாகச் சொல்லப்பட்ட ஒரு சில அற்புதங்களும் கிட்டத்தட்டக் கிறுக்குத்தனமானவையாக
இருந்தன. பார்வையில்லாத ஒருவனுக்கு அனுபவப்பட்ட அற்புதத்தில் அவனுக்குப் பார்வை திரும்பக் கிடைக்கவில்லை.
ஆனால் புதிதாக மூன்று பற்கள் முளைத்தன. முடவன் ஒருவனுக்கு ஏற்பட்ட அற்புத அனுபவம் வேறு மாதிரி. அவனுக்கு நடக்க முடியவில்லை. ஆனால் லாட்டரிக் குலுக்கலில் அநேகமாக அவனுக்குப் பரிசு கிடைத்தது. தொழுநோய் பீடித்த ஒருவனின் புண்களில் சூரியகாந்திப் பூக்கள் பூத்தது இன்னொரு அதிசயம்.
இப்படி ஒன்று கிடக்க ஒன்று நடக்கும் ஆறுதல் அற்புதங்கள் தேவதூதனின் பெருமையைக் கீழே இறக்கிவிட்டன. அந்த
சிலந்திப் பெண் அதை முழுமையாக இல்லாமல் போக்கி விட்டாள்.
கொன்சாகா பாதிரியாரின் தூக்கம் வராத நோய் சொஸ்தமானது. பெலாயோ வீட்டு நடை திரும்ப ஆள் அரவமற்றுப் போனது.
ஆனாலும் பெலாயோவுக்கும் அவன் மனைவிக்கும் குறைப்பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. தேவதூதனைப் பார்க்க வசூலித்த காசில் அவர்கள் இரண்டு அடுக்கு வீடாகத் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கட்டினார்கள். தோட்டமும்
பால்கனியும் அமைந்த அந்த வீட்டுக்குள் நண்டுகள் வராமல் இருக்க, சுற்றிலும் உயரமான வேலி அமைத்தார்கள்.
பெலாயோ சர்க்கார் உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு நகரத்துக்குப் பக்கத்திலேயே முயல் பண்ணை
வைத்தான். எலிசிந்தா குதிகால் உயர்ந்த செருப்புக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் சீமாட்டிகள் உடுத்தும்
தரமான உடுப்புக்களும் நிறைய வாங்கினாள்.
கோழிக்கூடு மட்டும்தான் அப்படியே இருந்தது. அதை அவ்வப்போது கிருமிநாசினி கலந்த நீரால் கழுவிவிட்டு,
புகை போட்டது தேவதூதன் மேல் அவர்கள் வைத்திருந்த மரியாதையால் இல்லை. அங்கே கனமாகப் பிசாசு
போல் சூழ்ந்து புதுவீட்டைப் பழைய வீடுபோல் தோற்றம் அளிக்க வைத்த குடலைப் பிடுங்கும் கோழிக்கழிச்சல்
வாடை போய்த் தொலையத்தான்.
குழந்தை நடக்கத் தொடங்கியபோது அவன் கோழிக்கூட்டுக்குப் பக்கத்தில் போகாமல் இருக்கும்படி
ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் சீக்கிரமே அவர்களுக்குப் பயம் தணிந்து, கோழிக்கூட்டு வாடையும் பழகிப் போனது. இரண்டாவது பல் முளைத்தபோது, அவன் விழுந்து கொண்டிருந்த கம்பிகள் அடைத்த கோழிக்கூட்டுக்குள் விளையாடப் போனான்.
தேவதூதன் குழந்தையிடமிருந்தும் விலகித்தான் இருந்தான். ஆனாலும் அது செய்யும் குறும்புகளை பிரமைகள் இல்லாத நாய் போல் பொறுத்துக் கொண்டான்.
இரண்டு பேருக்கும் ஒரே சமயத்தின் தட்டம்மை வந்தது. குழந்தைக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்குத் தேவதூதனின் இதயம் துடிக்கும் சத்தத்தை
எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்று ஆசை. அப்படிக் கேட்க நேர்ந்தபோது அந்த இதயத்தில் ஏகப்பட்ட சீழ்க்கைச் சத்தமும், சிறுநீரகத்திலிருந்து வேறு சத்தங்களும் தட்டுப்பட்டன. இதோடு எல்லாம் கூடி எப்படி அந்தத் தேவதூதன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்றே
அவருக்குப் புரியவில்லை. அவனுடைய இறக்கைகள் இன்னொரு ஆச்சரியம்.
தர்க்கரீதியாகத் தேவதூதன் உடம்போடு அவை இசைந்துபோனது போல் ஏன் மற்ற மனிதர்களுக்கும் இறக்கை முளைக்கவில்லை என்றுதான் மருத்துவருக்கு
விளங்கவில்லை.
குழந்தை பள்ளிக்கூடம் போகத் தொடங்கியபோது மழையிலும் வெய்யிலிலும் சேதமடைந்து கோழிக்கூடு விழுந்துவிட்டது. இறந்து கொண்டிருக்கும் அநாதை போல் தேவதூதன் அங்கேயும் இங்கேயும் ஊர்ந்து
கொண்டிருந்தான். படுக்கையறையில் அவன் ஊர்ந்து வந்தால் விளக்குமாற்றால் அடித்து விரட்டுவார்கள். அடுத்த வினாடி அவன் சமையல்கட்டில் இருப்பான்.
அவன் தன்னைத்தானே பல வடிவங்களாக்கிக் கொண்டு, பல இடங்களில் ஒரே நேரத்தில் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றியது.
இப்படி இழவெடுக்கும் தேவதூதர்களோடு மாரடித்து மாரடித்து வீடே நரகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று எலிசிந்தா
அலுத்துக்கொண்டாள்.
தேவதூதனால் எதையும் சாப்பிட முடியவில்லை. அவனுடைய புராதனமான கண்களும் பஞ்சடைந்து போய்க் கம்பங்களில் முட்டிக் கொண்டபடி ஊர்ந்தான். அவனுடைய இறக்கைகளின் கடைசித்துண்டு தான் மிச்சம் இருந்தது.
பெலாயோ அவன் மேல் ஒரு போர்வையைப் போர்த்தி, அவனைத் தொழுவத்தில் படுத்துக்கொள்ள அனுமதித்தான்.
அப்போதுதான் தேவதூதனுக்கு இரவில் காய்ச்சல் அடிக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்தது. அவன் ஜன்னி கண்டு நார்வேஜிய மொழி போல் ஏதோ பல்லை உடைக்கும் பாஷையில் பிதற்றிக் கொண்டிருந்தான். அவன். இறந்து விடக்கூடும் என்று அவர்களுக்குப் பயம் ஏற்பட்டது. செத்துப்போன தேவதூதர்களை என்ன செய்வது என்று பக்கத்து வீட்டம்மா கூடச் சொல்லவில்லை.
ஆனாலும் தேவதூதன் அந்த மோசமான குளிர்காலத்தைச் சகித்துக்கொண்டான். கோடை வந்தபோது அவன் உடல் நலம் தேறியது. முற்றத்தின் கோடியில் யாரும் காணாத இடத்தில் அவன் நாட்கணக்கில் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
டிசம்பர் வந்தபோது அவன் இறக்கைகளில் புதிய சிறகுகள் முளைக்கத் தொடங்கின.ஆனாலும் அவை வைக்கோல் பொம்மையின் சிறகு போல் பரிதாபமாக இருந்தன. அவனுக்கு அதன் ரகசியங்கள் தெரிந்திருக்க வேண்டும். அந்தச் சிறகுகளை யாரும் பார்க்கக் கூடாது என்பதிலும்,
நட்சத்திரங்கள் முளைத்த ராத்திரியில் அவன் சில நேரங்களில் பாடிய கடற்பாட்டுக்களை யாரும் கேட்டு விடக்கூடாது என்பதிலும் கவனம் எடுத்துக் கொண்டதாகப் பட்டது.
ஒருநாள் காலை எலிசிந்தா பகல் உணவுக்காக வெங்காயம் அரிந்து கொண்டிருந்தாள். கடலில் இருந்து வந்ததுபோல் ஒரு காற்று சமையலறையில் வீசியது.
அவள் ஜன்னல் அருகில் போய்ப் பார்த்தபோது காமாசோமா என்று தேவதூதன் பறக்க முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. அவன் நகங்கள் காய்கறி விளைந்திருக்கும் தோட்டத்து மணலில் ஆழப் பிராண்டிக் கொண்டிருந்தன. இறக்கைகளின் மடார் மடார் என்ற அடிப்பில் தொழுவமே
விழுந்துவிடும் போல் இருந்தது. அவனால் காற்றைப் பற்றிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்ந்து கொண்டிருந்தான்.
ஒரு கிழட்டுக் கழுகு போல் இறக்கைகளை அபாயகரமான முறையில் அடித்தபடி அவன் பறந்து, தெருவின் கடைசி வீடுகளைக் கடந்து போனபோது எலிசிந்தா தனக்காகவும் அவனுக்காகவும் பெருமூச்சு விட்டாள்.
வெங்காயம் அரிந்தபடி, பார்வையில் இருந்து மறையும் வரை அவன் பறந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள் எலிசிந்தா. அதற்கப்புறம் அவன் அவள் வாழ்க்கையில் ஒரு தொந்தரவாக இல்லாமல் போனான். கடலின் தொலைவில் தெரியும் அடிவானத்தில் அவன் ஒரு கற்பனைப் புள்ளியாக
மட்டும் தெரிந்தான்.
மொழிபெயர்ப்பு - மத்தளராயன் என்னும் இரா.முருகன் - மே 2002
3 Comments:
ரா.கா.கியில் படித்த கதை. மீண்டும் வாசிக்கையில் வேறு பல எண்ணங்களை ஓட வைக்கிறது. நன்றி!
இரா.மு,
தேவதூதன் நிறைய நினைவுகளை உசுப்பிவிட்டிருக்கின்றான்.
தேவதூதனுக்கும் பிரச்சினை வந்ததா.
அருமையாக இருந்தது முருகன்.
அலட்சியப்படுத்தப்பட்ட
அனைவருக்கும் இது போல விடுதலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment
<< Home