கனவுகளே
ஏஷியாநெட் 'நாதமாதுரி'யில் கைதப்ரம் தாமோதரன் நம்பூத்ரியோடு, பி.லீலாவும் வந்து இன்றைய காலை நேரத்தை இனிமையாக்கினார்.
கர்னாடக சங்கீதக் கலைஞரான லீலா எத்தனை எத்தனையோ தமிழ், மலையாளத் திரைப் பாடல்களைப்
பாடியவர். பாகப்பிரிவினை படத்தில் 'தாழையாம் பூ முடிச்சு' என்று வரும் சுகமான நாட்டுப்பாடல் இவர் பாடியது தான்.
நாராயணியத்தை, முக்கியமாக அதில் வரும் பாதாதிகேசம் பகுதியை இவர் பாடிய ஒலிப்பேழையைக் கேட்டால், அதிகாலையில் குளித்தொருங்கி, குருவாயூர் அம்பலத்தில் நிர்மால்ய தரிசனம் தொழப் போவது போல் புனிதமான சிந்தனைகள் மனதில் வரும்.
நாதமாதுரியில் லீலா பாடிய பழைய பாடல், 'கான மேளா' படத்தில் இடம் பெற்றது. பி.தட்சிணாமூர்த்தி இசையமைத்தது.
இருபது ஆண்டுகள் முன்னால் வரை கர்னாடக சங்கீதம் மலையாளத் திரைப்படங்களின் அடிநாதமாக ஒலிக்க இந்த இசையறிஞர் தான் காரணம். சுவாமி என்று மரியாதையோடும் அன்போடும் திரைப்படத்துறையினரால் விளிக்கப்படுகிறவர் தட்சிணாமூர்த்தி
ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய நாவலின் அடிப்படையில் தமிழில் மிடில் ·ஓப் தி ரோட் சினிமாவாக வந்த 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' படத்தில் இடம் பெற்ற 'நல்ல மனம் வாழ்க', மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற எஸ்.பி.பாலசுப்ரமனியம் பாடிய இனிய பாடல்கள் இவர் இசையமைத்தவை தாம்.
கானமேளா படத்தில் தட்சிணாமூர்த்தி இசையமைத்த வயலாரின் அழகான கவிதை 'ஸ்வப்ங்கள், ஸ்வப்னங்களே'.
சஹானா ராகத்தில் இசை வெள்ளமாக எழுந்து பரவும் இப்பாடலை ஏசுதாசும் லீலாவும் பாடிய இசைத்தட்டைக் கேட்டுப் பலகாலம் ஆனாலும் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது அது.
ஸ்வப்னங்கள் ஸ்வப்னங்களே நிங்ஙள்
ஸ்வர்க்க குமாரிகள் அல்லோ.
நிங்ஙள் ஈ பூமியில் இல்லாயிதிருந்நெங்ஙில்
நிச்சலம் சூன்யம் ஈ லோகம்.
தெய்வங்கள் இல்லா மனுஷ்யர் இல்லா - பின்னெ
ஜீவித சைதன்யம் இல்லா.
சௌந்தர்ய சங்கல்ப்ப சிற்பங்கள் இல்லா
சவுகந்திகப் பூக்கள் இல்லா.
இந்த்ர நீலம் கொண்டு வானத்துத் தீர்த்தொரு
கந்தர்வ ராஜாங்கணத்தில்
சந்த்ரிக பொன் தாழிகக் குடம் சார்த்துன்ன
கந்தர்வ ராஜாங்கணத்தில்
அப்சர கன்யகள் பெற்று வளர்த்துன்ன
சித்ர சலபங்கள் நிங்ஙள்.
ஸ்வர்க்கத்தில் நின்னும் விருந்நு வராருள்ள
சித்ர சலபங்கள் நிங்ஙள்.
ஞானறியேதென்ரெ மானச ஜாலக
வாதில் துறக்குன்னு நிங்ஙள்.
சிற்பிகள் தீர்த்த சுமருகள் இல்லாதெ
சித்ரம் வரைக்குன்னு நிங்ஙள்.
ஏழெல் எழுநூறு வர்ணங்கள் எத்ர
வார்மழ வில்லுகள் தீர்த்து
கண்ணு நீர் சாலிட்டு எழுதுன்னு பாக்யமோர்
ஸ்வர்ண விதானங்கள் நிங்ஙள்.
வயலாரின் பாடல் மொழிபெயர்ப்பில் -
கனவுகளே, கனவுகளே நீங்கள்
சுவர்க்க குமாரிகள் அன்றோ?
நீங்கள் இப்பூமியில் இல்லாதுபோனாலோ
நிச்சயம் உலகம் சூன்யமாயிருக்கும்.
தெய்வங்கள் இருக்காது. மனிதர் இருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையின் துடிப்பு இருக்காது.
அழகு சமைந்த சிற்பங்கள் இருக்காது.
மணமுள்ள பூக்களும் தான்.
கரு நீல வானத்தில் பொன் கோபுரங்களை
நிலவு எழுப்பும் கந்தர்வ நாட்டில்
தேவ கன்னிகள் பெற்று வளர்க்கும்
வண்ணத்துப் பூச்சிகள் நீங்கள்.
சுவர்க்கத்தில் இருந்து விருந்துக்கு வந்த
வண்ணத்துப் பூச்சிகள் நீங்கள்.
நான் அறியாது என் மனதின் சாளர
வாயில் திறப்பவர்கள் நீங்கள்.
சிற்பிகள் எழுப்பிய சுவர்கள் இல்லாமல்
ஓவியம் தீட்டுகிறவர்கள் நீங்கள்.
ஏழு எழுநூறு வண்ணங்களால் எத்தனையோ
வானவில்லுகள் எழுப்பிக்
கண்ணீர் வழிந்தோடி எழுதும்
பொன் விதானங்கள் நீங்கள்.
பாடலை இங்கே கேட்கலாம்.
(ஏப்ரல் 2002)
3 Comments:
என்ன இனிமையான பாடல்!
Thanks for making my day,
Srikanth
attakaasam!
இப்பாடலை எனது வீட்டில் உள்ளவர்களோடும் கேட்டேன். எனது மாமனார் சொன்ன தகவல்: இதன் பல்லவி மட்டுமே சஹானா, இதன் முதல் சரணம் ஷண்முகப்ரியாவிலும் (மோகமுள் படத்தில் சொல்லாயோ வாய் திறந்து போல), இரண்டாவது கல்யாணியிலும் உள்ளன.
Post a Comment
<< Home