Saturday, October 01, 2005

நெப்போலியனை வரைதல்

மகா உக்கிரமான ஒரு போர் நடக்கப் போகிறது.

மிடுக்கான தலைக் கவசமும், கையில் ஏந்திப் பிடித்த வாளும், கேடயமும் கழுத்தில் அலட்சியமாகச் சுற்றிய சால்வையும் மட்டும் அணிந்த வீரர்கள். சிலர் குதிரையேறி விரைந்து வருகிறார்கள். பின்னணியில் கோட்டை கொத்தளம் புழுதியில் மங்கலாகத் தெரிகிறது.

அடுத்த நிமிடம் இந்த இரண்டு படைகளில் ஒன்று வெல்லும். வென்றவர்களின் ஆரவாரம் காற்றில் கலந்துமேலேறி வெளியெங்கும் கலக்க, தோற்றவர்களின் ரத்தத்தால் ஈரமான நிலம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். உயிர் மூச்சு மெல்ல அடங்க அவர்களின் உடல்கள் சரிந்து அந்த மண்ணோடு மண்ணாகும்.

எல்லாப் போர்க்களங்களும் இதே விதத்தில் தான் வரலாற்றின் பக்கங்களில் உறைந்து வெறும் வார்த்தையாகி எஞ்சுகின்றன.

ஆனால் இந்தப் போர்க்களம் வித்தியாசமானது. பெருங் கூட்டமாகப் பெண்கள், குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள். போரிட வந்தவர்கள் இல்லை. போரைத் தடுக்க வந்தவர்கள்.
சீறிச் சினந்து நிற்கும் ஒரு போர் வீரனின் காலைப் பிடித்துக் கொண்டு, போரிட வேண்டாம் என்று கதறுகிறாள் ஒருத்தி. அவள் இடுப்பில் குந்தியிருக்கும் குழந்தையும் தாயோடு சேர்ந்து குனிந்தபடி வெறிக்கிறது. இன்னொரு பெண் தன் பச்சிளம் சிசுவைத் தலைக்கு மேல் உயரத் தூக்கி, யுத்தம் வேண்டாம் வேண்டாம் என்றுகதறுகிறாள். மோத விரையும் கால்களுக்கு இடையே இன்னொருத்தி தரையில் மண்டியிட்டு அமர்ந்து யாரையோ,எல்லோரையுமோ கெஞ்சுகிறாள். அவள் பக்கத்தில் தவழும் குழந்தைகள்.

எல்லோருக்கும் நடுவே வெள்ளுடையில் ஓர் இளம்பெண் தேவதை போல் இரு கையையும் அகல விரித்தபடி,போதும், போதும் என்ற பாவம் முகத்தில் தெறிக்க நிற்கிறாள்.

பார்த்த மாத்திரத்தில் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் இந்தக் காட்சி இடம் பெறுவது ழாக் லூயி டேவிட்(Jacques-Louis David) என்ற பிரஞ்சு ஓவியர் வரைந்தது.

ஓவியக் கலைத்துறையில் புத்தலைப் போக்குகள் மலரத் தொடங்கிய ஆயிரத்து எழுநூறுகளின் இறுதியில் ஏற்பட்டமுதல் அலையான புதுக்கிய மரபியல் (Neoclassicism) பாணியில் அமைந்த இந்த ஓவியத்தின் பெயர்'சபைன் மகளிரின் குறுக்கீடு' (Intervention of the Sabine Women).

நியோகிளாசிசம் பற்றிப் பேசுவதற்கு முன், ஓவியத்தில் இடம் பெற்ற சபைன் மகளிர் பற்றிக் குறிப்பிடவேண்டும். ரோமாபுரி பற்றிய தொன்மப் புனைவு அது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரி மாநகரம் எழுந்தபோது, வேறு யாரும் குடி வரத் தயங்கியதாலோ என்னவோ (பழகிய இடத்தை விட்டுக் குடிபெயர யாருக்குத்தான் விருப்பம்?) நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்கச் சிறைப்பிடிக்கப் பட்ட குற்றவாளிகளை நிறையக் கொண்டு வந்து குடி அமர்த்தினார்களாம்.

ஆக அன்றைய ரோமாபுரி கிட்டத்தட்ட ஆண்களின் உலகம். பெண்கள் இல்லாத சமூகமாக அது அந்த, மிஞ்சிப்போனால் தலைமுறையோடு அழியும் அபாயம்.

ரோமாபுரிப் பேரரசுக்கு அடுத்து மலைவாழ் மக்களின் சிறு நாடான சபைன் இருந்தது. ரோமானியர்கள் அந்தஅரசிடம் தூது போய், சபைனியப் பெண்களை நாங்கள் மணந்து கொள்ள அனுமதி தாருங்கள். நாம் ஒன்று பட்டுவாழ்வோம் என்று கேட்டார்கள். சபைனியர்கள் ரோமானியர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

திரும்பிப் போன ரோமானியர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். அது -
தங்களுக்குப் பெண் கொடுக்க மறுத்த சபைனியர்களை ரோமானியர்கள் எதுவும் நடக்காததுபோல் சகஜமாக ஒரு விருந்துக்கு அழைத்தார்கள். நெப்த்யூன் தெய்வத்துக்கு விழா எடுக்க நடத்திய விருந்து அது.

அப்பாவி சபைனியர்கள் ஒட்டு மொத்தமாக ரோமாபுரிக்குள் திரண்டு வந்து விருந்துக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கும்போது, ரோமானிய இளைஞர்கள் விருந்துக்கு வந்த சபைனியக் கன்னியரை வலுக்கட்டாயமாகத் தூக்கிப்போய் விருந்தாக்கிக் கொண்டார்கள்.

போதை தெளிந்த சபைனியர்கள் கையாலாகாதவர்களாகத் திரும்பிப் போனபோது சிறைப்பிடிக்கப் பட்ட அவர்களின் பெண்களைப் பற்றிய துயரமும், நம்ப வைத்து ஏமாற்றிய ரோமானியர்கள் மேல் ஆத்திரமுமாகத் தளர்ந்து வலுவிழந்து நடந்தார்கள்.

அந்தத் தளர்ச்சி மாற, வலு திரும்ப எழ, இழந்ததை மீட்கப் படை நடத்திப் போக அவர்களுக்கு ஒரு வருடம் பிடித்தது.
ஆனால் அந்தக் கால இடைவெளியில் அவர்களின் மகளிர் ரோமானியர்களின் மனைவிகளாக, அவர்களின் அன்புக் குழந்தைகளின் அன்னையராக ஆகி இருந்தார்கள்.

ஒரு பக்கம் கொண்ட கணவர்கள். மற்றப் பக்கம் தந்தையரும், உடன் பிறந்தோரும். இருவரும் மோதிக்கொள்ள வருகிறார்கள். யார் தோற்றாலும் யார் வென்றாலும், இறுதி இழப்பு இந்தப் பெண்களுக்குத் தான்.

போரைத் தடுக்க அந்த சபைனியப் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளோடு போர்க் களத்தில் புகுந்து இரு தரப்பையும் வேண்டி வணங்கி நிற்க, அப்புறமென்ன சுபம் தான்.

கி.மு. 238-ல் ரோமானியர்களுக்கும் அவர்களின் அண்டை நாட்டாரான சபைனியர்களுக்கும் முதலில் சண்டையும் பிறகு சமாதானமுமாகிப் பின் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ரோம சாம்ராஜ்யமானது என்ற வரலாற்றின் அடித்தளத்தில் எழுப்பப் பட்ட தொன்மப் புனைவு இந்தக் கதை.

கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த புனைவை, கிறிஸ்துவுக்குப் பிந்திய பதினெட்டாம் நூற்றாண்டுக்கு எடுத்துப் போய், பிரஞ்சு ஓவியர் ழாக் லூயி டேவிட் ஓவியமாக அதை வரைந்தது ஏன்?

நியோகிளாசிசிசத்தின் ஆணிவேர்கள் அங்கு தான் தென்படுகின்றன.

நியோகிளாசிசிச அலை எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு மனித குல வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம்.
பாரம்பரிய வழி வந்த அரசுரிமையும், மத நிறுவனங்களின் ஆதிக்கமும் குறையத் தொடங்கிய நேரம் அது. பிரஞ்சுப் புரட்சி வெடிக்க வித்துக்கள் தூவப்பட்டு அவை முளைத்தெழுந்து விருட்சமாகிக் கிளை பரப்ப ஆரம்பித்தகாலம் அது.

மறுமலர்ச்சிக் காலத்தில் (கி.பி 1400 - 1600) அரசு சார்ந்தும், அதன் பின்னால் பார்க்-ரொகோகோ காலம் என்று குறிக்கப்படும் அடுத்த இருநூறு ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய மத நிறுவனங்களைச் சார்ந்தும்செயல்பட்ட ஓவியக்கலை, அந்தப் பாதிப்புகளிலிருந்தும் அவை தந்த பாதுகாப்பிலிருந்தும் நீங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.

சார்பு இல்லாததால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படச் சுதந்திரமும், அதே நேரத்தில் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது.

அந்த சிந்தனை நுண்கலையான ஓவியத்தில் ஏற்படுத்திய பல வகைப் போக்குகளில் ஒன்றுதான் புதுக்கிய மரபியல்.
நிகழ் காலம் அர்த்தமில்லாத வாழ்க்கையின், நிகழ்வுகளின் தொகுதி. கலாரூபமான பதிவுகளாக்க நிகழில் ஏதுமில்லை. எனவே புராதன காலத்துக்குத் திரும்புவோம். வரலாற்றை, தொன்மத்தைத் திரும்ப ஓவியமாகவும்,சிற்பமாகவும் வடிப்போம். தியாக மனப்பான்மை, வீரம், செய்யும் கடமையில் ஒருமித்த மன இயக்கம், எளிமை என்று நாம் இழந்த விழுமியங்களை அதன் மூலம் தேடுவோம்.

புதுக்கிய மரபியல் என்ற நியோகிளாசிசிசத்தை மூன்றரை வரிகளுக்கு மிகாமல் விளக்கச் சொன்னால் மேலே கண்டபடி சொல்லலாம்.

இந்தப் பாணி ஓவியம், சிற்பத்தை முதன்மைப்படுத்தியது. சிற்பம் போல் நுட்பமாக, வடிவத்திலும் வரைவிலும் செய்நேர்த்தி துலங்க ஓவியம் அமைய வேண்டும் என்றார்கள் நியோகிளாசிசிஸ்டுகள். மறுமலர்ச்சி ஓவியங்களின் பிரதான அம்சமான பிரகாசமும், ஒளிரும் வண்ணங்களும் முக்கியப்படுத்தப்படாமல், வடிவ ஒருமையே பிரதானமாக்கப்பட்டது.

சுய சிந்தனை அடிப்படையில் எழுந்த நியோகிளாசிசிசம், ஓவியத்தில் அதை வரைந்தவனின் வெளிப்பாட்டை(செல்·ப் எக்ஸ்ப்ரஷன்) வேண்டாமென்று ஒதுக்கியது விசித்திரமானது. படைப்பில் இடம்பெற்ற கருப்பொருளே அந்த வெளிப்பாட்டை வெளிக் கொண்டு வந்து விடும் என்று வாதிட்டனர் புதுக்கிய மரபியலார்.

'சபைன் மகளிரின் குறுக்கீடு' ஓவியத்தை வரைந்த நியோகிளாசிசிஸ்ட் ஓவியர் ழாக் லூயி டேவிட் அதை வரைந்து முடிக்க எடுத்துக் கொண்ட ஐந்து ஆண்டுகளில் வரலாறு துரிதமாக உருண்டு அவரைப் புரட்சியாளனிலிருந்து ராஜ விசுவாசியாக்கியது இதை விட விசித்திரமானது.

1748-ல் பிறந்த ழாக் லூயி டேவிட் இத்தாலியில் ஓவியம் பயின்று, நியோகிளாசிசிசத்தின் மூலக் கூறுகளைஉள்வாங்கிக் கொண்டு பிரான்சு நாட்டுக்குத் திரும்பிய 1780-ல் நாடாண்ட பதினாறாம் லூயி மன்னர் மேலும்,அவருடைய மனைவி மேரி அந்த்வானெத் மேலும் பிரஞ்சு மக்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள்.அரச குடும்பமும், பிரபுக்களும் எல்லா சலுகைகளும் வளங்களும் பெற்றுச் சுகபோகமாக வாழ்ந்திருக்க, சாமானியர்கள் பசியோடும் பட்டினியோடும் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.

தியாகம், வீரம், எளிமை என்ற நியோகிளாசிசிச சிந்தனைகளோடு பிரான்சு திரும்பிய ழாக் லூயி டேவிட்டை, பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான 'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற எழுச்சி மிகு அறைகூவல் பாதித்ததிச் வியப்பெதுவும் இல்லை.

வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான ரொபஸ்பியர் (Maximilien Robespierre) வழிநடத்திய பிரஞ்சுப் புரட்சி 1789-ல் வெடித்தபோது அதில் முக்கியமான பங்கெடுத்துப் பணியாற்றினார் ஓவியரான டேவிட்.

பதினாறாம் லூயி மன்னனையும் அவன் பட்டத்து ராணியையும் தலைவெட்டும் இயந்திரமான கிலட்டினில் தலைதுண்டித்துக் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்த பிரபல படைப்பாளிகளில் டேவிட்டும் ஒருவர்.

கிலட்டின் பதினாறாம் லூயியையும் மேரி அந்த்வானெத்தையும் மட்டும் தலை துண்டித்து விட்டு ஓயவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் தலைகளை வாங்கிய அபூர்வ சிந்தாமணியானது அது. அறுபட்டகடைசித் தலை பிரஞ்சு புரட்சியை முன்நின்று நடத்திய ரொபஸ்பியருடையது.

மற்றவர்களை எல்லாம் முகத்தை நிலம் பார்க்க வைத்துத் தான் கிலட்டின் தகடு பின் கழுத்தில் விழுந்து தலையைக் கொய்யும். ஆனால் ரொபஸ்பியருக்கு விசேஷ மரியாதையாக அவரை வானம் பார்க்க வைத்துச் சிரமறுத்தார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளாக இந்த தலைவெட்டிக் காலம் நீடித்தது. அப்போது அங்கங்கே செல்வாக்கு பெருகிய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கலகம் விளைவித்துக் கொடிருந்தார்கள்.

பிரஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து நடந்த இந்த உள்நாட்டுக் கலக காலத்தில், ழாக் லூயி டேவிட் தலை எந்தத்தம்பிரான் புண்ணியத்தாலோ தப்பிக்க, அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.

பால் பரஸ், ருழே துகாஸ் என்ற இரண்டு போட்டி அரசியல் தலைவர்களோடு கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த நெப்போலியன் பொனபர்த், அவர்களை ஓரம் கட்டிவிட்டுப் பிரஞ்சு சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டான் 1799-ல். வீரபாண்டிய கட்டபொம்முவைக் கும்பினியார் கயத்தாறில் தூக்கிட்டுக் கொன்ற வருடம்அது.

நெப்போலியன் பதவி ஏற்ற பிறகு ழாக் லூயி டேவிட் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். அதற்கு முன்கை எடுத்துச் செயல்பட்டவர் அவருடைய மாஜி மனைவி. ராஜ விசுவாசியான அந்தப் பெண்மணி டேவிட்டை விவாகரத்து செய்து விட்டுப் பிரியக் காரணமே டேவிட் புரட்சியாளனாக இருந்ததுதான்.

பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னும், அது நிகழும் போதும் டேவிட் பல நியோகிளாசிசிச ஓவியங்களை வரைந்துபுகழின் உச்சிக்குப் போனார். 'சாக்ரட்டீஸின் மரணம்', 'லெபல்தியரின் மரணம்', 'மாரெட்டின் மரணம்'என்று வரைந்து, மரணப் புனைவு ஓவியரான அவர் 'சபைன் மகளிர் குறுக்கீடு' என்ற மரண எதிர்ப்பு ஓவியத்தைவரையத் தொடங்கியது சிறையில் இருந்தபோது. அதாவது மாஜி மனைவியின் பாதிப்பு தொடங்கியபோது.(மனைவியாக இருந்தபோது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பிரிந்தவள், தோழியாக ஏற்படுத்திய பாதிப்பு அது)

சிறையில் இருந்து வெளியே வந்து ஓவியத்தை முடித்தபோது ஐந்து ஆண்டு கடந்திருந்தது. மாஜி மனைவி மறுபடிமனைவியானாள். 'சபைன் மகளிரின் குறுக்கீடு' ஓவியத்தை அவளுக்கு அன்புக் காணிக்கையாக்கிய ழாக் லூயிடேவிட் அவள் சொல் கேட்டுத் தானும் ராஜ விசுவாசியானார்.

அடுத்த ஐந்து வருடங்கள் அவர் நெப்போலியனின் ஆஸ்தான ஓவியராக வரைந்த ஓவியங்கள் - நெப்போலியன்,நெப்போலியன், நெப்போலியன் ..

ழாக் லூயி டேவிட்டின் நியோகிளாசிசிசம் நெப்போலியனில் முடிந்த கதை இதுதான்.

என்றாலும், நெப்போலியனைக் கால வெள்ளம் அடித்துப் போனது போல், டேவிட் வரைந்த 'சபைன் மகளிரின்குறுக்கீடு' ஓவியத்தை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாரீஸ் நகரத்தில் லொவர் அருங்காட்சியகத்தில் (Musee du Louvre, Paris) காட்சிக்குவைக்கப்பட்டிருக்கிறது அது.

1 Comments:

At 12:50 pm, Blogger Boston Bala said...

Thx for the excellent intro for an art novice like me!

From some googling upon reading your insightful piece...

In 1793, David painted the 'Death of Jean Paul Marat', a friend of Robespierre and a supporter of the Reign of Terror. He was stabbed to death by a disillusioned young woman, while in his bathtub, where he spent most of the day treating the skin disease. After he was killed, his adherents celebrated him as a martyr. His friend David painted the grisly portrait and presented it to the National Assembly. It became the symbol of the 'Revolution'. The copies were placed in churches & public offices.

David was secretly in love with the scientist, Antoine Laurent Lavoiser's wife. He began to pursue her moments after the scientist was guillotined. It is fascinating that the only time ever a death warrant was signed by less than five revolutionary tribunal members - it was mandatory to have all five - was in the case of Lavoisier's murder. David was the missing signature. Mrs Lavoisier escaped to England before Jacques-Louis got her in his clutches.

Louvre also has the 'Oath of the Horatii (1785). The three Horatii brothers sword held in the air, face their father and offer their lives to guarantee victory for Rome in a war with Alba. 'Death of Socrates' (1787) is in the Met Museum, NYC.

After Napoleon's fall in 1815, David was exiled to Brussels.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது