Monday, October 03, 2005

அரண்மனை பன் சிங்கிள் டீ


கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாயை எப்படிச் செலவழிப்பது? அதுவும் ஒரே வருடத்தில். வெரி சிம்பிள். தின்றே தீர்த்து விடலாம். விருந்து கொடுத்தால் போதும். காட்டு யானை, மலை யானை, முதுகில் பாகன் உட்கார்ந்து செலுத்த பனகல் பார்க் பக்கம் யாசகம் கேட்டுத் தும்பிக்கை நீட்டுகிற டவுன் யானை இப்படி வெயிட்டான பார்ட்டிகளை வரவழைத்து தினசரி அல்வா வாங்கிக் கொடுத்தாலும் ஒரு வருடத்தில் நாலு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கைக் காட்ட முடியாது என்கிறீர்களா?. யானையெல்லாம் எதுக்கு சார், சாதா மனிதர்களே போதும். பன்னும் டீயும் கொடுத்து அனுப்பினால் மொத்தச் செலவு மேலே கண்ட தொகை. விருந்து வைத்த வகையில் இப்படிச் செலவானதாகக் கணக்குச் சொல்லியிருப்பது பிரிட்டிஷ் அரசி எலிசபத் அம்மையார் வசிக்கும் லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் நிர்வாக அலுவலகம்.

தோட்ட விருந்து என்று ஒரு சமாச்சாரம் உண்டு. கிட்டத்தட்ட இருநூறு வருஷமாக இங்கிலாந்து ராஜகுடும்பம் கடைப்பிடிக்கிற சடங்கு. வருடத்துக்கு நாலைந்து முறை நாட்டு மக்களை, அதிலும் முக்கியமானவர்களை, ‘நம்ம வீட்டுலே ஸ்பெஷல் விருந்து. ஒரு நடை வந்துட்டுப் போங்க' என்று கூப்பிட்டு அனுப்புவார்கள். இப்படியான விருந்தினர்கள் ஒரு யிரம் பேராவது, ‘ராஜா, ராணியோடு உட்கார்ந்து சாப்பிடலாம்' என்ற பெருமைக்காகக் கட்டாயம் ஆஜராகி விடுவார்கள். இங்கிலாந்தின் எல்லா கவுண்டிகளிலும் (கிட்டத்தட்ட நம்ம மாவட்டம் மாதிரி) மற்றும் தலைநகர் லண்டனிலிருந்தும் அழைக்கப்பட்டவர்கள் இந்த விருந்தாளிகள்.

இவர்கள் பொறுமையாகக் கியூவில் நின்று அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்தால், நாலு பன், ரெண்டு கேக், உருளைக்கிழங்கு வறுவல், அப்புறம் நாயர் கடையில் அவசரத்தில் போட்ட டீ மாதிரி ஒரு திரவ பதார்த்தம். அம்புட்டுத்தான். பன்னை டீயில் நனைத்து சாப்பிட்டுவிட்டுத் தூரத்திலே ராணியம்மா நின்று கொண்டிருப்பதை இருந்த இடத்தில் இருந்தே தரிசித்துப் பின்வாசல் வழியாக வெளியேறுவதோடு அரண்மனை விருந்து நிறைவடையும்.

ஆயிரத்தில் பத்து அல்லது இருபது விருந்தாளிக்கு அதிர்ஷ்டம் இருக்கும். ராணியம்மா ஒரு வினாடி இந்த அதிர்ஷ்டக்காரர்கள் பக்கத்திலே வந்து, புகைப்படக்காரர் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொண்டு காலே அரைக்கால் செண்டிமீட்டர் புன்னகை பூப்பார். கூடவே ‘நல்லா இருக்கீங்களா, வீட்டுலே, ஊர்லே சவுக்கியம் எல்லாம் எப்படி' என்று சம்பிரதாயமாகக் கேட்பார். கேள்வி யாரைப் பார்த்துக் கேட்கப்பட்டதோ அவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பதில் சொல்ல வாயைத் திறக்கக்கூடாது. வேண்டுமானால் சும்மா பக்கத்தில் நிற்கலாம். அது மட்டுமில்லை, ராணிதான் கேள்வி கேட்க வேண்டும். அவரிடம் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. அப்புறம் முக்கியமாக இன்னொன்று, அரசியாருக்கு முதுகைக் காட்டிக்கொண்டு விருந்தாளிகள் யாரும் நிற்கக்கூடாது.

இத்தனை கட்டுப்பாடுகளுக்கு இடையே, ‘நலந்தானா' கேள்விக்குத் தொண்டையைக் கனைத்துக் கொண்டு வீட்டு நாய், பூனை, மாமியார் சவுக்கியத்தில் தொடங்கி எட்டுக்களை சவுக்கம் பல்லவி ராகமாலிகையாக விலாவாரி பதில் சொல்வதற்குள், அரசியார் நகர்ந்துபோய் அடுத்த போட்டோவுக்குப் புதுசாகச் சிரிக்க ஆரம்பித்திருப்பார்.

லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை, பக்கத்து பிக்காடல்லி கடைவீதியிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கவில்லை என்பதை சாமானியர்களுக்கு நிரூபிக்க நடத்தப்படும் இந்தச் சடங்கு கிட்டத்தட்ட ஒரு அன்னதானம் மாதிரி. இப்படித் தோட்ட விருந்து நடத்தி, மக்களோடு தங்கள் அந்நியோன்யத்தை அரச குடும்பம் வெளிப்படுத்த நாலு கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகப் போன வருஷக் கணக்கிலிருந்து தெரியவருகிறது.

டீக்கும் பன்னுக்கும் இவ்வளவு செலவு பிடிக்குமா? ராணியம்மா அடுத்த தேர்தலில் நிற்கிறதாக ஏதும் ஐடியா இருக்கிறதா? அப்படி என்றால், பன்னில் நைசாக மறைத்து வைத்த தங்க மோதிரமும், டீக்குள் விரலை விட்டால் விஸ்கியும் ரம்முமாகக் கொடுத்து விருந்துக்குக் கூப்பிட்டு, எட்டுக் கவுண்டி ஓட்டர்களை விலைக்கு வாங்குகிற உத்தேசமா என்று விசாரித்தால் கிடைக்கிற பதில் விசேஷமானது.

‘விருந்துக்கு நாலு கோடி ரூபாயும் ஆகும். அதுக்கு மேலேயும் ஆகும். சாப்பிட வந்தவங்க எல்லாம் சாமானியப்பட்டவங்களா என்ன? அதாவது சாப்பிடற விஷயத்துலே. ஒருத்தொருத்தரும் பதினாலு பன் சாப்பிட்டு அரை லிட்டர் டீ குடிக்கறாங்க. ஏழெட்டு கேக் வேறே கூடவே. அவங்களே கொட்டிக்கறாங்களோ இல்லே நியூஸ்பேப்பர்லே பார்சல் கட்டி வீட்டுக்கு எடுத்துப் போறாங்களோ?'

விருந்து செலவுக் கணக்குக்குத் தோராயமாக இப்படி விளக்க உரை அளித்து அரண்மனை நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு விருந்தாளியும் சாப்பிட்ட, குடித்த கணக்கை கனகச்சிதமாக எண்ணி எண்ணி நினைவு வைத்துச் சொல்கிற அவர்களின் ஞாபக சக்தியும், மேற்படி அசுரப்பசி விருந்தாளிகளின் ஜீரண சக்தியும் ஆஹா என்று பாராட்ட வைக்கிறது.

இதையெல்லாம் பிரிட்டீஷ் பத்திரிகைகள் பொதுவாகக் கண்டுகொள்வதில்லை. தோட்ட விருந்து நிகழ்ச்சிக்காக சம்பிரதாயமாக நாலாவது பக்கத்து ஈசானிய மூலையில் நாலு வரி ஒதுக்கும் பத்திரிகைகள், அதைப் பற்றி முதல் பக்கம் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டது இரண்டு வருடம் முன்னால் நடந்தது. அப்போது நடைபெற்ற விருந்தில் அரச தம்பதியரும் மற்ற விருந்தாளிகளும் பார்த்துக் கொண்டிருக்க, விருந்துக்கு அழைக்கப்பட்ட ஓர் இளைஞன் உடுதுணி எல்லாம் நொடியில் அவிழ்த்துப் போட்டுப் படுகுஷியாகத் தோட்டத்தைச் சுற்றி ஓட ஆரம்பித்தான். அரண்மனைப் பாதுகாப்பு வீரர்கள் வேறு என்னத்துக்கு இருக்கிறார்கள்? "விடாதே பிடி. கோழி அமுக்குகிற மாதிரி அமுக்கி, வெளியே கொண்டு போய் விடு'. விருந்துக்கு பயங்கர பப்ளிசிட்டி கிடைக்க ஒத்தாசை செய்த அந்த திகம்பர இளைஞனை பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரம் உள்ளூற வாழ்த்தியிருக்கும்.

இதற்குச் சில வருஷம் முன்னால் தோட்ட விருந்தில் வயதான ஒரு சீமாட்டி கையில் குடையோடு ஒரு ஓரமாகப் பெஞ்சில் சாதுவாக உட்கார்ந்து பன்னைப் பிய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எப்படியோ அதை மோப்பம் பிடித்து, அழையா விருந்தாளியாக வானத்திலிருந்து ஒரு மின்னல் புறப்பட்டுப் பாட்டியம்மா குடைக்காம்பில் இறங்கி .. குடை எரிந்து போனது தவிர வேறே பொருட்சேதமில்லை. அடுத்த வருடம் குடைகளும், மரபெஞ்சுகளும், மின்னலும் விருந்திலிருந்து மிஸ்ஸிங்.

இந்தப் பந்தி போஜனம்தான் பேக்கரியில் மொத்தவிலைக்கு பன்னும் ரொட்டியும் வாங்கி வந்து நடக்கும்போல இருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் யாராவது வந்தால் அருமை அருமையாகச் சமைத்துப்போட அரண்மனையில் சமையல்காரர்கள் படைபட்டாளமாக இருக்கிறார்கள் என்று எனக்குப் பரிச்சயமான பாலக்காட்டு சமையல் நிபுணர் ஒருத்தர் சொன்னார்.

ஒரு தடவை இந்தியாவிலிருந்து போன பிரபல அரசியல் தலைவருக்கு அப்பளம் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு, இங்கேயிருந்து அப்பளத்தை இறக்குமதி செய்தார்களாம். அப்பளக் கட்டில் ஒரு அப்பளத்துக்கும் இன்னொன்றுக்கும் நடுவில் மெல்லிசாக இலை நறுக்கை வைத்து அனுப்பியிருந்த பார்சலோடு, ‘எண்ணெயில் பொறிக்கவும்' என்று ஒற்றை வரி செயல்முறை விளக்கம். ‘சும்மா ஜிகிடி வேலையாக' ஒவ்வொரு இலை நறுக்குக்கும் மேலும் கீழும் வைத்துக் கட்டியிருந்த ‘வட்ட வட்ட மாவு வளையத்தை' எல்லாம் எடுத்துப் போட்டுவிட்டு, நடுவிலிருந்த இலையை வெகு கவனமாக எடுத்துப் பொறித்ததாகக் கேள்வி! இந்தக் தப்புக் கணக்கில் எத்தனை லட்சம் எண்ணெயோடு போனது என்று தெரியவில்லை.

தினமணி கதிர் - 'சற்றே நகுக' பகுதி - செப்டம்பர் 25 2005

3 Comments:

At 4:04 am, Blogger Srikanth said...

//காட்டு யானை, மலை யானை, முதுகில் பாகன் உட்கார்ந்து செலுத்த பனகல் பார்க் பக்கம் யாசகம் கேட்டுத் தும்பிக்கை நீட்டுகிற டவுன் யானை இப்படி வெயிட்டான பார்ட்டிகளை வரவழைத்து தினசரி அல்வா வாங்கிக் கொடுத்தாலும் ஒரு வருடத்தில் நாலு கோடி ரூபாய்க்குச் செலவுக் கணக்கைக் காட்ட முடியாது என்கிறீர்களா?//

முருகன், உங்களிடம் அசாத்திய எழுத்துத் திறமை இருப்பது சொல்லி தெரியத் தேவையில்லை. இருப்பினும், மேற்கண்ட வரிகள் போன்ற சில வரிகள் வாசிப்பு ஓட்டத்திற்குத் தடையாக இருக்கின்றன. வரியின் நீளமும், நடுவில் வரும் context-switching reference-உம், ஒரே வரியை இரண்டு-மூன்று முறை படிக்க வைக்கின்றன.

I love your writing, they are very good, but if you can keep in mind the reading flow while you are writing, I think it would enhance the work.

Just my 2 cen, err, pence...

 
At 2:29 pm, Blogger Dharumi said...

வெயிட்டான பார்ட்டிகளை வரவழைத்து தினசரி அல்வா வாங்கிக் கொடுத்தாலும் //
நீங்கள் எதை, யார் செய்ததைச் சொல்லுகிறீர்கள்?

 
At 6:53 pm, Blogger G.Ragavan said...

அடேங்கப்பா! இந்த பார்ட்டியைப் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கின்றேன். இன்போசிஸ் நாராயணமூர்த்தியும் அவரது துணைவியாரும் போயிருந்தார்கள். அது வெறும் டீ பார்ட்டி மட்டுமே என்று வெளிப்படையாகச் சொல்லிப் போட்டுடைத்தார்கள்.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது