Sunday, November 13, 2005

மீண்டும்...

மீண்டும்...

(சிறுகதை)


உன்னிகிருஷ்ணன்

உன்னிகிருஷ்ணன் நம்பூத்ரி. உன்னிகிருஷ்ணன் நாயர். உன்னிகிருஷ்ணன் ஜாதியில்லை. உன்னிகிருஷ்ணன் தெய்வம். உன்னிகிருஷ்ணன் பசு. உன்னிகிருஷ்ணன் சிசு. உன்னிகிருஷ்ணன் இளைஞன். உன்னிகிருஷ்ணன் கிழவன். உன்னிகிருஷ்ணன் ரயிலில் போகிறவன்.

மூணாம் வகுப்பில் இடித்துப் புடைத்து ஏறி, இடுங்கி உட்கார்ந்து கொண்டு. ராத்திரியானாலும் குறையாத கூட்டம். நெருக்கித் தள்ளுகிறார்கள். காற்று ஒழிந்த அரையிருட்டில் அடர்த்தியாக நின்று கெட்ட வாடையடிக்க வசவு உதிர்க்கிறார்கள். அதில் யாராவது எந்த நேரத்திலும் மூட்டை முடிச்சை வெளியே தூக்கி எறியலாம். எந்த நிமிடத்திலும் வெளியே பிடித்துத் தள்ளலாம். ரயில் பாதையில் விழுந்து மோசமாகக் காயமடைந்து காலஞ்சென்ற உன்னிகிருஷ்ணன்.

"எண்பது வயது மதிக்கத் தக்க முதியவரின் உடல் பழைய ரயில் நிலையத்தில்...'

பத்திரிகையை மடக்கி வைத்தார் உன்னிகிருஷ்ணன். எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று பிரியமாகக் கலந்து இருட்டுப் பொதியைக் கண்ணிலும் கையில் பிடித்த தாளிலும் அப்பிப் போகிறபோது விஷமமாகக் கூக்குரலெடுத்து ரயிலோடு கூவுகின்றன.

ரயில் ஆலத்தூர் போய்ச் சேர இன்னும் ஏழெட்டு மணியாவது பாக்கி இருக்கிறது. அதாவது நடுவில் எங்கும் அசம்பாவிதம் ஏற்படாமல், எதிரில் வரும் வண்டிக்கெல்லாம் வழிவிட்டு, வழிபட்டு நிற்காமல், யந்திரக் கோளாறோ, பாதையில் பழுதோ இல்லாமல், இதே வேகத்தில் போய்க்கொண்டிருந்தால், நாளை விடியும்போது ஆலத்தூர். அப்புறம் பரிசலில் அரை மணி போலப் பயணம் வைத்தால் அம்பலத்தூர். தெப்பக்குளம், பாசி வழுக்கும் படிகள். தண்ணீரில் தர்ப்பை மிதக்கும். தலை முழுகணும். எதை? ஈர உடுப்பு உலர்த்தணும். அப்புறம் கோவில்.

ஸ்ரீபலிக்கு ஏற்பாடு செய்ய நடை அடைத்து இருக்கும். மாரார் எடக்க வாத்தியம் வாசித்தபடி சோபான சங்கீதம் பாடுவார். "எப்ப வந்தே? பயணம் எல்லாம் எப்படி? இன்னும் ஓட்டல் அடுப்படியிலேதான் வெந்துட்டிருக்கியா?'. அவர் குரல் விசாரிக்கும். வாத்தியம் அவர் கைத்தண்டையில் பிரி முறுக்கியும் தளர்ந்தும் உயிர் கொண்டு எழுந்து, "அவன் கிட்டே என்ன பேச்சுடா மாரானே.... நடைப் பொணமா வந்திருக்கான் கிழவன். சவத்தைத் தள்ளிட்டு என்னைக் கவனி' என்று தன்னைத் தாளமும் இசையுமாகக் கரைத்துக் கரைத்து ஒன்றுமில்லாமல் போக அலைபாயும். நடை திறக்கப் போகிறது.

"கண்ணா, நடை திறக்கப் போறது. பகவான்கிட்ட வேண்டிக்கோ. நல்லாப் படிச்சு முன்னுக்கு வரணும். இந்தக் கரண்டி உத்தியோகம் என்னோட போகட்டும்'.

படிவாசல் கடந்து கோவிலுக்குள் போனது நேற்றைக்கா அல்லது நாற்பத்தைந்து வருடம் முன்பா? கூட நடந்த கல்யாணி, கையைப் பிடித்துக் கொண்டு குதியாட்டம் போட்டபடி வந்த கண்ணன். அடுத்த ஸ்டேஷனில் இருப்பார்களா, பிளாஸ்கில் காப்பியும், பூக்கூடை எடுத்துப்போக குதிரை வண்டியுமாக எதிர்பார்த்துக் கொண்டு?'.

"அம்மா, தூக்கிக்கோ', கண்ணன் சிணுங்குகிறான்.

"கல்யாணி, கண்ணனைத் தூக்கி இடுப்பிலே வச்சுக்கோ. கூட்டம் அலைமோதறது பாரு. காணாமல் போயிட்டாத் தேடறது கஷ்டம்'.
"இடுப்புலே வச்சுக்குற குழந்தையா இவன்? மூணு வயசாச்சு. தூக்க முடியலே. கையைப் பிடிச்சுக்கோ கண்ணா. இங்கே பாரு, பெரிய மேளம்'.

"மேளம் இல்லே...அதுக்குப் பேரு மிழா'. குழந்தையை இரண்டு கையையும் உயர்த்தித் தலைக்கு மேல் தூக்கிக் காட்டும் உன்னிகிருஷ்ணன்.

கோவில் முன்மண்டபம் அதிர்கிறது. ரயில் அந்தத் தாளத்தோடு இசைகிறது போல் போக்குக் காட்டிக்கொண்டு தப்புத் தப்பாக ஆடி அசைந்து அப்புறம் சக்கரம் அரைபட ஓலமிட்டு வேகம் குறைகிறது. அசுர வாத்தியமான மிழா இருட்டில் பிரம்மாண்டமாக எழுந்து "வெறும் கையை என்னத்துக்கு தலைக்கு மேலே உசத்திட்டு நிக்கறே, கீழே போடு' என்று அதட்டுகிறது.

உயர்த்தின கை இரண்டையும் கீழே போடுகிறார் உன்னிகிருஷ்ணன். வலிக்கிறது. வெறும் கை இல்லாமல் இருந்தால்கூட உபத்திரவமில்லாமல் இருக்கும். இந்த உடம்பும்கூட. கொண்டு வந்த துணிப்பை எங்கே? அது சீட்டுக்கு அடியில். அதை மறைத்துக் கொண்டு இரண்டு கூடை. உன்னிகிருஷ்ணன்தான் கொண்டு போகிறார். ஜவந்திப் பூ நிரம்பி வழிகிற கூடைகள். குளிர்ந்த வாசனையை அடக்கமாக வெளிப்படுத்திக் கொண்டு நல்ல உறக்கத்தில் இருக்கின்றன ரெண்டும்.

ரயில் ஜன்னல் வழியே திரவமாக உள்ளே வழியும் இருட்டுக்குள் தலை நீட்டிப் பார்க்கிறார் உன்னிகிருஷ்ணன். காற்றோடு கலந்து கல்யாணியின் குரல்.

"நாளைக்கு அத்தம். திருவோணத்துக்குப் பத்தே நாள்தான் இருக்கு. வீட்டு முற்றத்திலே பூக்களம் ஒருக்க வேணாமா?'

"எல்லாப் பூவும் எதேஷ்டமா இருக்கு. நீயும் கண்ணனும் காலையிலே பூவை எல்லாம் அழகாத் தரையிலே பரத்திப் பூக்களம் வைக்கலாம். சரியா'

"எல்லாப் பூவுமா? தும்பைப் பூ?'

ரயில் ஒரு நிமிடம் நிற்கிறது. "இறங்கினால் கோவில்தான். தும்பைச் செடி கொல்லுனு பூத்து இருக்கு. இறங்கு' என்று எட்டு ஊருக்குக் கேட்க ரகசியம் சொல்கிறது சில்வண்டு. கோவில் நாளம்பலத்தில் தேவதைகள் முணுக்கென்று சிரிக்கும் சத்தம்.

"ஓணத்துக்கு அத்தப்பூ பறிக்கப் போனாளா கல்யாணி? குழந்தையையும் தூக்கிட்டுத்தானே? இன்னுமா திரும்ப வரலே?' என்று கெக்களி கொட்டிச் சிரிக்கும் அவை திரும்பக் கிளம்பும் ரயிலில் ஏற ஓடி வருகின்றன.

"காயல்லே படகு முழுகி என் வீட்டுக்காரியும் பிள்ளையும் வெள்ளத்தோட போயாச்சு. அப்படித்தான் அப்போ சொன்னாங்க. உன்னிகிருஷ்ணன் வெளியே பார்த்து ரயில் இரைச்சலுக்கு நடுவே முணுமுணுக்கிறார்.

"மண்ணாங்கட்டி. அந்த நாயர் செக்கனோட ஓடிப் போயிட்டா அவள். மாடும் கன்னுமா இழுத்துப் போயிட்டான் பயல்'.

"நாளைக்கு உங்களைக் கோவிலில் வச்சுப் பாக்கறேன். மீதி சேதி எல்லாம் பேசலாம். இப்போது தூக்கம் வருது', உன்னிகிருஷ்ணன் சொல்கிறார். நாளைக்கு விடிந்தால் கோவிலில் இருக்கலாம். நடை திறக்க, உள்ளே குழல் ஊதிக் கொண்டு, ஒய்யாரமாக சிரித்தபடி அங்கே இன்னொரு உன்னிகிருஷ்ணன். இல்லை, எல்லாம் ஒரே உன்னிகிருஷ்ணன்தானா?

"வந்துட்டியா?' வாகைச் சார்த்து முடிந்து தங்கம் தங்கமாக குத்து விளக்கொளியில் மினுமினுத்துக் கொண்டு அவன்தான் கேட்பான். மேல்சாந்தி பலிக்கல் பக்கம் நைவேத்தியத்தை இரைக்கும்போது ரயிலோடு கூட ஓடிவந்த பசித்த தேவதைகள் எல்லாம் "மெட்ராஸ் டிரிப்ளிகேன் மூத்திரச் சந்து உண்ணிகிருஷ்ணா, எங்களுக்கு இன்னும் கொஞ்சம் சாதம் வேணும். திருமேனி கிட்டே கேளு' என்று முறையிடும்.

அப்போது அவைகளிடம் உன்னிகிருஷ்ணன் சொல்வார். "என் பேரப்பிள்ளை காத்துட்டிருக்கான். என்னைத் தன்னோட வச்சுக்கக் கையைப் பிடிச்சுக் கூட்டிப் போகப் போறான். கடுதாசி போட்டிருக்கான். அம்பலத்தூரிலே பெரிய வீடாக்கும் அவனுக்கு. எல்லோரும் இருக்கலாம். இந்த மாரான், அவன் எடக்க, சங்கீதம், பலிக்கல், உன்னிகிருஷ்ணன், கல்யாணி, கண்ணன், பூக்கூடை, நீங்க. உங்களுக்கு வயிறு நிறையப் படைக்கறேன், இப்போ சும்மா கிடங்கோ'.

நீர் பிரியவேணும். இந்தக் கூட்டத்தில் கையையும் காலையும் மிதித்துக்கொண்டு கழிவறைக்குப் போக திராணி இல்லை. போய்த் திரும்பினால் இந்தத் துளி இடமும் பறிபோய்விடலாம். போகாமல் முடியாது. கைப்பையிலிருந்து உருண்ட ஆரஞ்சுப் பழத்தைத் திரும்ப வைத்துவிட்டு எழுந்திருக்கிறார் உன்னிகிருஷ்ணன்.

கழிவறையில் அற்ப சங்கை தீர்த்து வெளியே வந்தபோது பெட்டியில் யாருமே காணோம். சொல்லி வைத்தாற்போல் அத்தனை பேரும் இறங்கிப் போய்விட்டார்கள் போலிருக்கிறது.
டிக்கெட் பரிசோதகர் கடந்து வருகிறார். நீட்டிய டிக்கெட்டை வாங்காமல், உன்னிகிருஷ்ணன் என்கிறார். ராமன்குட்டி நாயர்தானே இது? அவர் வெறுமனே சிரிக்கிறார். இவருடைய மூத்த அண்ணன் வேதத்தில் ஏறின பவுலோஸ் பாதிரியா? ஆமாம் என்று தலையாட்டல். இளையவன்? கல்யாணியோடு கூடப் போனது இவர் தம்பி இல்லையோ? தெரியாது என்று தலையை அசைத்துவிட்டு வெளியே இறங்கிப் போகிறார். தேவதைகள் திரும்பச் சூழ்ந்து கொள்கின்றன.

சட்டைப் பையில் வைத்திருந்த கடிதத்தைச் சுவாதீனமாக எடுத்து ஒரு தேவதை சத்தமாகப் படிக்கிறது. "அன்புள்ள தாத்தா, என் அப்பா கண்ணன் பட்டர் சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாங்கள் அம்பலத்தூரில்தான் இருக்கிறோம். அப்பா ஓட்டல் நடத்தி வருகிறார். நீ கூரை போட்டுச் சாப்பாட்டுக்கடை நடத்தி வந்த அதே இடத்தில்தான். பாட்டி கூடமாட வேலை செய்து, இப்போது தளர்ந்துபோய் வீட்டோடு இருக்கிறாள். உன்னைப் பார்க்கத் துடிக்கிறாள். நடந்ததெல்லாம் நடந்ததாக இருக்கட்டும். பெரியவர்களோடு சேர்ந்து நானும் வேண்டுகிறேன். உடனே மதராஸில் இருந்து புறப்பட்டு ஓணத்துக்கு முன்னால் வரவும். ஆலத்தூர் ஸ்டேஷனுக்கு வந்து நான் கூட்டிப் போகிறேன். தள்ளாத இந்தப் பிராயத்தில் இனி எங்களோடையே இருக்கவும். இப்படிக்கு உங்கள் பேரன் உன்னிகிருஷ்ணன்.'

கடிதத்தைப் பிடுங்கி சட்டைப்பையில் வைத்துக் கொள்கிறார் உன்னிகிருஷ்ணன். தேவதைகள் சிரிப்படங்காமல் குறுக்கும் நெடுக்கும் ஓடுகின்றன.

கம்பார்ட்மெண்டின் கடைசியிலிருந்து கேட்கும் குழந்தைக் குரல். அது இப்போது கேட்டதா? ரொம்ப அருகில்தான். ஒரு ஐம்பது வருடம் முன்னால். கல்யாணியோடு பழனிக்குப் போனபொழுது.
"கொழந்தைக்குப் பால்', உன்னிகிருஷ்ணன் கல்யாணியிடம் சொல்கிறார்.

"ஐயோ, இங்கே வச்சா பால் குடுக்கறது? அதுவும் முண்டும் தோர்த்துமா நிக்கறேன். ரயில் பெட்டியிலே எல்லாரும் காணட்டுமா? நாணக்கேடு'.

முண்டும் தோர்த்துமாகத்தான் அவள் அத்தப்பூ பறிக்கச் சின்னப் படகில் அக்கரை போனாள். இக்கரையில் இல்லாத பூவா?
ஆனால், தும்பைப் பூ இல்லாத ஓணமா? தும்பை எல்லாம் அக்கரையில்.

தும்பை மட்டுமில்லை. ராமன் குட்டி நாயரின் தம்பியும்தான்.

"தும்பையைத் தேடிப் புழை கடக்கணுமா என்ன? படகுக்காரன் அப்புக்குட்டன் கிட்டே சொன்னால் காலையிலே எடுத்து வந்து கொடுத்துட்டுப் போறான்'.

"அப்புக்குட்டனும் பப்புக்குட்டனும் எதுக்காம்? கொதும்பு வஞ்சியில் ஏறி நானே அஞ்சு நிமிஷம் துழஞ்சு போய் அக்கரையிலே தும்பை பறிச்சு வரேன். கண்ணனையும் தூக்கிட்டுப் போயிடறேன். கடையை பார்த்துக்குங்க. வடைக்கு பருப்பு அரைச்சாச்சு'.

"கல்யாணிக்குப் படி தாண்ட, புழை கடக்க, கடந்து கரையேற அவசரம்'. கீசுகீசென்று இரையும் தேவதைகளைச் சும்மா இருங்கோடி என்று அதட்டினார் உன்னிகிருஷ்ணன்.

"ரயில் ஏன் கிளம்பவில்லை'? அவர் கேட்டபோது, "தெரியாது போடா' என்றன தேவதைகள். அதுக்கும் சிரிப்புத்தான் பதிலோடு கூட. உன்னிகிருஷ்ணன் புழை கடந்தபோதும் அவை இப்படித்தான் சிரித்தன.

அவர் புழை கடந்து அம்பலத்தூர் விட்டது தும்பைப் பூவை, கல்யாணியைத் தேடி இல்லை. வடக்கே மதராசுக்கு. தெரிந்த ஒரே வேலை, உடுப்பி ஓட்டலில் சமையல். திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனத்தில் ஒற்றை அறைக்கு வெளியே யாருக்கும் கல்யாணியை, காயலை, கன்றோடு பசுவைப் படகில் ஏற்றிப் போனதைப் பற்றியெல்லாம் தெரியாது. "பாலக்காட்டு ஸ்மார்த்தன். ஒண்டிக்கட்டை, ஏப்பையோ சாப்பையோ, பாலடைப் பிரதமன் பேஷாப் பண்றான். எதேஷ்டம்'.

"ஸ்டேஷன் வந்தாச்சு, இறங்கலியா?' என்றார் திரும்ப வந்த டிக்கெட் கலெக்டர். "பேரனா? வந்திருப்பார். வெளியே விளக்கு இல்லை. நீங்க பெஞ்சிலே உக்காந்துக்கங்க. லைட்டு வந்ததும் கூட்டிப் போவார். ரயில் ஊதறது. கிளம்பறேன். பத்திரமாப் போய்ட்டு வாங்க. எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க.'
இருட்டில் உன்னிகிருஷ்ணன் ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் தட்டுத் தடுமாறி உட்கார்ந்தார். சுற்றிலும் சிமிட்டி நெடி. பையில் இருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரித்து வாயில் போட்டுக்கொண்டார். நல்ல புளிப்பு. பேரன் காத்திருப்பான். இந்த சிமிட்டி மூட்டைக் களேபரத்து நடுவிலே அவன் எப்படித் தேடுவான்? உன்னி, உன்னி, நான் இங்கே இருக்கேன். அத்தத்துக்கு எல்லாப் பூவும் கூடை கூடையா கொண்டு வந்திருக்கேன் பாரு. தும்பைதான் கிடைக்கலே. குதிரை வண்டி எங்கே?

கண் இருண்டு வந்தது. கைப்பையில் இருந்த பத்திரிகை முன்னால் முன்னால் நீண்டது. இருட்டிலும், அதன் எழுத்துகள் தெளிவாகத் தெரிய அது சேதி சொன்னது.

எண்பது வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் பழைய ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது. சிமிட்டி மூட்டை அடைத்து வைப்பதற்காக இருபது வருடமாக உபயோகமாகிவந்த புராதனமான இந்த ரயில்வே ஸ்டேஷனில் தற்போது ரயில்கள் ஏதும் வருவதில்லை.

நாற்பது வருடத்துக்கு முந்தைய பத்திரிகை. இன்னும் பழுக்காத மாம்பழங்கள், பழைய கால ரயில்வே டிக்கெட், இரண்டு கூடை நிறைய வாடிய ஜவந்திப்பூ. இவற்றோடு காணப்பட்ட இவர் யாரென்று தெரியவில்லை. எழுதி, தபாலில் சேர்ப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கடிதம் சட்டைப்பையில் காணப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது -அன்புள்ள தாத்தா, என் அப்பா கண்ணன் பட்டர் சொல்லி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நாங்கள் இப்போது...!

(Dinamani Kadhir Nov 05)

2 Comments:

At 4:34 am, Blogger துளசி கோபால் said...

கதையின் முடிவு.... மனம் கனத்துப்போனது.

பாவம் உன்னிகிருஷ்ணன்கள்.

 
At 4:16 pm, Blogger Thangamani said...

ஜானகிராமனின் 'அடி' நினைவுக்கு வந்தது.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது