எடின்பரோ குறிப்புகள் - 10
இங்கே இங்கிலாந்திலும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நட்பு முறையில் எதிர்க்கட்சித் தலைவர் வீட்டுக்கு ஒரு நடை போய் காப்பி சாப்பிட்டு வருவது, ஓ பாசிட்டிவ் ரத்த தான அறிவிப்புகள், கட்சி மாநாட்டுக்கு அணிதிரள அழைக்கும் போஸ்டர்கள் என்று சுவாரசியமான சங்கதிகள் எதுவும் கண்ணில் படவில்லைதான். அதேபோல், பழைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ஷான் கானரி, சினிமா டைரக்டர் டேவிட் அட்டன்பரோ போன்றவர்கள் இன்னும் கட்சி ஏதும் ஆரம்பிக்கவில்லை என்பதும் உண்மைதான்.
சர்வ ஜீவராசிகளின் பெயரையும் சுவாதீனமாக சுவீகரித்துக்கொண்டு பத்திரிகை நிருபர்களும் துணையாசிரியர்களும் ஸ்கூப் வெளியிடும் நம்ம ஊர் வழக்கம் இங்கே வேறு ஒரு ரூபத்தில் அரங்கேறுகிறது. தலைவர்களின் அரசியலை விட்டுவிட்டு அந்தரங்க வாழ்க்கையைத் துருவிப் பரபரப்புச் செய்தி வெளியிடுவது இது.
சமீபத்து பரபரப்புச் செய்தியில் அடிபட்ட லிபரல் டெமாகிராட் கட்சித் தலைவர் சார்லஸ் கென்னடி அடுத்த தேர்தலில் போட்டியிடமாட்டார். காரணம் பத்திரிகைகள் கண்டுபிடித்து அறிவித்த ரகசியம். அந்த அடலேறு ஆண்சிங்கம் சிலபல வருடங்களுக்கு முன் லாட்ஜில் ரூம் போட்டுக் கூத்தடித்திருக்கிறார். உல்லாசமாக அவரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டது ஒண்ணில்லை, ரெண்டு பேர். அந்த ரெண்டுபேரும் ஆம்பிளைதான்.
அவர் gay ஆக இருந்துட்டுப் போகட்டும். ஆனா, ஒரே நேரத்துலே ரெண்டு விலைமகன்களோடு ஆட்டம் போட்டது கொஞ்சம் ஓவர் என்று கட்சியில் கருத்து உருவாக, சார்லஸ் இப்போதைக்கு அரசியலைத் துறந்துவிட்டார். அவர் வீட்டுக்காரம்மா அவரைத் துறந்துவிட்டதாகவும் செய்தி.
சமீபத்திய துணைத்தேர்தலில் தோற்றதோடு பிரதமர் டோனி பிளேயரின் தொழிற்கட்சிக்குத் தலைவலி அதிகமாகி இருக்கிறது. ஈராக் ஆக்கிரமிப்பில் ஜியார்ஜ் புஷ்ஷைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததற்காக அதிருப்தியும் ஆத்திரமும் அடைகிறவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஈராக்கில் இறந்துபோன பிரிட்டீஷ் படைவீரர்களின் எண்ணிக்கை போனவாரம் நூறைத் தொட்டு இன்னமும் உயர்ந்து கொண்டிருப்பது இதற்கு முக்கிய காரணம்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையில் புதுரத்தம் பாய்ந்து டேவிட் காமருன் கட்சித் தலைவர் ஆவதை ஏற்கனவே எழுதியிருந்த நினைவு. டோனி பிளேரை விட இளையவரான காமருன் அரசியல் மட்டுமில்லாமல் இசை, கலை என்று சகலத்திலும் அடுத்த தலைமுறை ரசனையின் பிரதிநிதி என்பதால் இளைய தலலமுறையை ஈர்க்கக் கூடும். மனுஷர் கொஞ்சம் போதைப் பழக்கத்திலும் ஈடுபட்டு மீண்டுவந்தவர் என்று டேப்ளாயிட் பத்திரிகைகள் ரெண்டு மாதம் முன்னர் அலறியது ஓய்ந்து போயிருப்பதற்கு லிபரல் டெமாக்ரடிக் தலைவரோடு ஒப்பிட்ட இரு கோடுகள் (சரி மூணு) தத்துவம் காரணமாக இருக்கலாம்.
இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் புஷ்ஷைச் சந்தித்து நல்லாசி வாங்கப் புறப்பட்ட மூன்று நபர் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்கள் குழு அங்கே போய்ச் சேர்ந்த நேரம் சரியில்லை. வெள்ளை மாளிகை, உப ஜனாதிபதி டிக் செனி, தன் நண்பரை நட்பு முறையில் கொக்கு சுடுவதுபோல் சுட்டுக் காயப்படுத்திய பரபரப்பில் இருப்பதால், வாஷிங்டன் போன டோரிகள் சந்தித்தது மூன்றாம் நிலை நான்காம் நிலை ரிபப்ளிக்கன் தலைவர்களை. பிரம்மராட்சசன் அருள் பாலிக்காவிட்டாலும், குட்டிச்சாத்தான்கள் அருள் வாக்கு சொல்லித் திருப்பியனுப்பிய இந்தப் பிரயாணம் வெற்றி என்று அறிக்கை விட்டுவிட்டு கன்சர்வேட்டிவ்கள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறார்கள்.
ஒரு காலத்தில் தொழிற்கட்சியில் இருந்து, கொள்கை வேறுபாட்டால் விலகி மரியாதைக் கட்சி தொடங்கியவர் ஜியார்ஜ் கேலவே. அந்தக் கட்சியின் சார்பில், பங்களாதேஷ்கார முஸ்லீம் மக்கள் பெருமளவு வசிக்கும் லண்டன் பெத்தனால் க்ரீன் பகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். ஈராக் ஆக்கிரமிப்பின் முக்கிய எதிர்ப்பாளரான காலவே அமெரிக்க செனட் கமிட்டி முன்னால் ஆஜராகி புஷ் அரசாங்கத்தை ஒரு பிடி பிடித்தபோது இன வேறுபாடில்லாமல், நடுநிலைமையாளர்களிடையே இவருக்கு மதிப்பு ஒருபடி உயர்ந்தது. இப்படித் தனக்கு இருந்த நல்ல பெயரை காலவே அண்மையில் கெடுத்துக்கொண்டதற்கு சின்னத்திரைதான் காரணம்.
‘Celebrity Big Brother’ என்று சானல் நாலு தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில் பங்கு பெற்று - ரியலிட்டி டிவி ஷோ இது - மூன்று வாரம் ஒரு அடைபட்ட வீட்டுக்குள் ஏழெட்டுப் பேரோடு தங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பம் காலவேக்கு. வீட்டில் சக குடித்தனக்காரியான அழகான பெண் ஒருத்தி ஆணையிட, காலவே மியாவ் மியாவ் என்று பூனை போல் சத்தம் போட்டுக்கொண்டு தரையில் தவழ்ந்துபோனதைப் பார்த்தவர்கள் முப்பது லட்சம் அண்ட் சொச்சம் பார்வையாளர்கள். அடுத்த தேர்தலுக்கு அவர் தொகுதியில் பிரசாரத்துக்கு வந்தால், தட்டில் பால் எடுத்து முன்னால் வைப்பார்களே தவிர ஓட்டுப்போட மாட்டார்கள் இவர்கள். நாடாளுமன்றம் கூடுகிற நேரத்தில் மூணு வாரம் சிக் லீவ் போட்டுவிட்டு டிவி நிகழ்ச்சிக்குப் போன பொறுப்பில்லாத்தனத்துக்கு காலவே காலம் முழுக்கப் பதில் சொல்லவேண்டி வரலாம்.
இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் இப்படித் தேர்தலை எதிர்கொள்கிறபோது, நாட்டு மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடுதல் வசதிகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. வாக்குச் சாவடிக்கே போகத் தேவையில்லாமல் போகலாம். செயின்ஸ்பரி, டெஸ்கோ, ஸ்காட்மிட், அஸ்டா-வால்மார்ட் போன்ற சூப்பர் மார்க்கெட் கடைகளில் நுழைந்து ரெண்டு லிட்டர் பால், அரைக் கிலோ உருளைக்கிழங்கு, மூணு ரோல் டாய்லெட் பேப்பர் வாங்கிக்கொண்டு அங்கேயே நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்துவிட்டுத் திரும்பி விட வசதி வரப்போவதாகச் செய்தி.
இந்த வசதி நம்ம ஊருக்கு வந்தால், எங்கெல்லாம் ஓட்டுப் போடலாம்? உஸ்மான்ரோடு நகைக்கடை, ரங்கநாதன் தெரு பாத்திரக்கடை, ஜவுளிக்கடை, சரவணபவன் ஓட்டல், சத்தியம் தியேட்டர், டாஸ்மாக் கடைகள். பட்டியலைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கலை விஷயத்தில் ஸ்காட்லாந்து, அதிலும் முக்கியமாக எடின்பரோ எப்பவுமே தலைநகர் லண்டனை விட ஒருபடி உசத்திதான். லண்டனில் போன வாரம் மேடையேறித் தொடர்ந்து விவாதங்களை சிருஷ்டித்துவரும் ‘கருப்புப் பறவை’ நாடகம் போன வருடம் எடின்பரோ நாடகவிழாவில் தான் அரங்கேற்றம் கண்டது. நபகோ எழுதிய ‘லோலிடா’வின் நீட்சி போல, கூடுதலாகப் பல பரிமாணங்களை உள்ளடக்கி வளரும் இந்த நாடகம் பற்றி விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.
சோதனை முயற்சி நாடகம் போல் நிகழ்கலை வெளிப்பாடுகளை ஊக்குவிப்பதிலும் எடின்பரோதான் நாட்டில் முன்னணியில் உள்ள நகரம்.
யோகோ ஓனோவின் பெர்பார்மிங்க் ஆர்ட் நிகழ்ச்சிகள் பற்றி இரண்டு வருடம் முன் திண்ணை ‘வாரபலன்’ பகுதியில் மத்தளராயனாக எழுதியது நினைவு வருகிறது. விருப்பமுள்ள அன்பர்கள் அதைத் திண்ணைத் தொகுப்பில் தேடிப்படித்துவிட்டு வந்தால் இந்த நிகழ்கலை சமாச்சாரம் பழகியிருக்கும்.
இந்த வாரம் (பிப்ரவரி 18) நடைபெறும் எடின்பரோ நிகழ்கலை விழாவில் பங்கேற்ற வாய்ப்புக் கிடைத்தது. அரசாங்க உதவிபெறும் அமைப்பான ராயல் ஸ்காட் அகாதமியும், கலைஞர்களின் அமைப்பான ஸ்காட்டிஷ் ஆர்ட்டிஸ்ட் சொசைட்டியும் இணைந்து நடத்தும் இந்த விழா அங்கங்கள் (பாடி பார்ட்ஸ்) என்ற பொதுக் கருவைக் கொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு.
பரபரப்பான கடைவீதியான பிரின்சஸ் தெருவில் வேவர்லி புகைவண்டி நிலையத்துக்கு அருகே ஸ்காட்லாந்து தேசிய ஓவியக் கூடமான நேஷனல் காலரி. அதற்கு முன்வசமாக ஸ்காட்டிஷ் மியூசியம். டயரிக்காரனின் வார விடுமுறைப் பொழுதைச் சுவாதீனமாகக் கவர்ந்துகொள்ளும் பெருமை இந்த இரண்டு பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு உண்டு.
நேஷனல் காலரியில் ரெம்ப்ராண்டின் ‘காத்திருக்கும் மணவாட்டி’ ஓவியத்துக்கு முன்னால் பத்து இருபது உள்ளூர்வாசிகளுக்கு ஓர் ஓவிய விமர்சகர் ரெம்ப்ராண்ட் ஆதிகால ஓவியங்களில் காணப்படும் சிவப்புப் பிரகாசத்தின் உட்பொருளை விளக்கியபடி வகுப்பு எடுத்ததை சுவாரசியமாகக் கவனித்தபடி நின்றதில் நிகழ்கலை விழாவுக்குப் போகவேண்டும் என்பது கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது.
அடித்துப்பிடித்து மியூசியம் கீழ்த்தளத்தில் பின்லே சிற்றரங்கில் (கொஞ்சம் பெரிய அறை. அவ்வளவுதான் அரங்கம்) நுழையும்போது சனிக்கிழமை விழா நிகழ்ச்சிகள் தொடங்கியிருந்தன.
சுவரில் நடுநாயகமான ஒரு நாக்கு ஆணி அடித்ததுபோல் பொருத்தப்பட்டிருந்தது. முன்னால் ஒரு இளம்பெண். அவர்தான் இந்த நிகழ்ச்சியின் பெர்பார்மிங்க் கலைஞரான ஆஞ்சலா பட்ரம்.
நாவால் சுவைத்தல் (டங்கிங்) என்ற இந்த நிகழ்ச்சிக்காக அவர் சுவரில் பொருத்தியிருந்தது தன்னுடைய நாக்கின் நகலைத்தான். ஆஞ்சலா சுவர் ஓரமாக சரிந்து நின்று அந்த சிவந்த நாவைத் தன் நாக்கால் சுவைத்துக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி அதுதான்.
கடல் பாசியினால் செய்யப்பட்ட அந்த செயற்கை நாவை அந்தப் பெண் கலைஞர் பதினைந்து நிமிடம் சுவைத்துக்கொண்டிருந்தபோது கூடியிருந்த முப்பது சில்லறை பேர் இதன் உள்ளுறை பொருள் என்ன என்று ஒருவரை ஒருவர் பார்ப்பதும் சிரிப்பதும் புரிந்ததுபோல் தலையசைப்பதும், காம்கார்டர், விடியோ காமிராவில் பதிவு செய்வதுமாக இருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கான கையேடு சொன்னது -
‘சுவரில் இருக்கும் நாக்கின் படிமம், மரபு சார்ந்த ஒருங்கிணைந்த டெக்ஸ்ட்-ஐத் தன்னகத்தே கொண்டுள்ளது. நுனியில் சுவைக்கும்போது இந்த நகல் நாக்கு டெக்ஸ்டை வெளிப்படுத்தத் தொடங்குகிறது. சொற்கள் செயலைப் பிரதிநிதிப்படுத்துவதும் அந்தக் கணத்தில் நிகழ ஆரம்பிக்கிறது.’
நிகழ்ச்சி முடிந்து ஆஞ்சலா வாயைத் துடைத்துக்கொண்டு கைதட்டுகளுக்கு இடையே உள்ளே போனார். நாலைந்து பேராவது எச்சில் வடியும் சுவர்ப்பக்கம் குனிந்து அந்த நாக்குக்கு அடியில் டெக்ஸ்ட் ஏதாவது தெரிகிறதா என்று தேடினார்கள்.
நிகழ்ச்சியின் சப்-டெக்ஸ்ட் பற்றி யோசித்தபடி வெளியே வந்து கொண்டிருந்தபோது, நடுநாயகமாக முன்குடுமி வைத்த வெள்ளை இளைஞன் சிநேகிதியிடம் சுவர் நாக்கைச் சுவைக்கும் பெண்ணை தன் வீடியோ காமிராவில் அடக்கியதைக் காட்டிக் காதில் கிசுகிசுத்தான். அவள் உடனடியாக அவனை நரகத்துக்குப் போகச் சொன்னாள்.
சப் டெக்ஸ்டைத் தப்பாப் புரிஞ்சிக்கிட்டே தம்பி என்று அவனிடம் சொல்லலாமா என்று யோசித்தபடி அடுத்த நிகழ்ச்சிக்கு எதிர் அரங்கத்தில் நுழைய, மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ஒரு மர பெஞ்ச். நிறையக் காகிதச் சீட்டுகளைப் பக்கத்தில் குவித்துவைத்துக் கொண்டு ஒரு நடுவயதுப் பெண் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்.
ஷான் வாரன் என்ற இந்தக் கலைஞர் நடத்திய நிகழ்கலை நிகழ்ச்சி - ‘வயிறு நிறையச் சாப்பிடுதல்’ (ஈட்டிங்ஹார்ட் அவுட்). நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.
குவித்து வைத்திருந்த காகிதச் சீட்டுகளில் ஒன்றை எடுத்துப் பிரிக்கிறார் அவர். படித்ததை உரக்கச் சொல்கிறார் - "இருட்டான தெருவில் தனியாக நடக்க எனக்குப் பயமாக இருக்கிறது". சொல்லி முடித்ததும் அந்தத் துண்டுக் காகிதத்தைக் கிழித்து வாயில் போட்டு மென்று விழுங்குகிறார். குவியலில் இருந்து அடுத்த சீட்டை எடுக்கிறார்.
"நிறையத் தூங்கிவிடுவேனோ என்று பயம்". காகிதம் உரக்க வாசிக்கப்படுகிறது. கிழிக்கப்படுகிறது. மென்று தின்னப்படுகிறது. அடுத்த காகிதம். "காரணம் இல்லாமல் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது". கிழிபடும் காகிதம் உணவாகிறது. "எனக்குப் பரிச்சயமில்லாத ஒருத்தன் என் உள்ளாடையில் கைவைப்பான் என்று பயம்". "என்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவார்கள் என்று பயம்". "எனக்கு எய்ட்ஸ் வரும் என்று பயம்". "இருட்டு அறையில் குளிர்கால இரவில் அடைபடும் பயம்".
ஒவ்வொரு பயமாக உரக்க வாசிக்கப்பட்டு உண்ணப்பட, அங்கே ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. முகத்தில் உணர்ச்சியே காட்டாமல் டெட்பான் ஆக வைத்தபடி ஷான் வாரன் பயங்களை ஒவ்வொன்றாக விவரித்துப் போக, கையேட்டை பக்கத்து மேசை விளக்குக்கு அடியில் வைத்துப் படித்தபோது தெரியவருகிறது -
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஷான் வாரன் தற்போது வசிப்பது பெல்ஜியத்தில். தென்னாப்பிரிக்கா, கனடா, பெல்ஜியம் நாடுகளில் இவர் நடத்திவரும் ‘வயிறு நிறையச் சாப்பிடுதல்’ என்ற இந்த நிகழ்ச்சியில் ஷான் வெளிப்படுத்துவது, கட்டுப்படுத்தப்படாத பயம் எவ்வாறு வாழ்க்கையை ஆக்கிரமிக்கும், உணர்வு - உணர்வு இழந்த நிலைகளில் எவ்வாறு தொடர்ந்து மனதில் படிந்து இயங்கும் என்பதை. தெற்காப்பிரிக்கா தலைநகரமான ஜோஹான்ஸ்பர்க்கில் தனக்குக் கிடைத்த வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் அவர் உருவாக்கிய நிகழ்ச்சி இது. பயம் என்பது உலகளாவிய நிகழ்வு என்பதைச் சித்தரிக்க முயலும் இந்தக் கலைஞர் பார்வையாளர் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவராக இருந்தாலும் கலந்துபட்ட பொருளமைதியையும் வேறுவேறான தொடர்புபடுத்தல்களையும் நிகழ்ச்சி மூலம் பெற முடியும் என்று நம்புகிறார். நடைமுறை வாழ்க்கை அனுபவங்கள், நினைவுகள், அன்றாட சம்பவங்கள் இவற்றின் பின்னணியில் இவர் கட்டி எழுப்பும் பயங்கள் மனதை அரித்துத் தின்னும் முன்னால் அவற்றை வெளிப்படுத்தித் தின்று ஒழிக்கத் தூண்டுவது நிகழ்ச்சியின் நோக்கம்
அரைமணி நேரத்தில் அரைக்கிலோ அளவு பயங்களை வாரன் சாப்பிட்டு இன்னும் மிச்ச பயங்கள் மரபெஞ்சில் அவர் பக்கத்தில் பிரிக்கப்படுவதற்காகக் காத்திருக்க, வெளியே வந்தபோது, ஒரு தட்டு நிறைய காகிதச் சீட்டுகள். ஒன்றை எடுத்துப் பார்க்க, அதில் ‘பயங்கரக் கனவு கண்டு விழிக்கும்போது அமைதியான அறை பயமாக இருக்கிறது’ என அச்சடித்திருந்தது. கிழித்த துண்டை வாயில் போட, காகிதம் போன்ற அந்த மெலிதான பிஸ்கட் துண்டு கரைந்து போனது.
ஆர்ட்ஸ் காலரிக்கு முன்னால் நின்ற பழைய வேனில் சாண்ட்விச்சும், சாயாவும் வாங்கிக்கொண்டு மியூசியம் படிக்கட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் வந்து சாண்ட்விச்சோடு உட்கார்ந்த சிவப்பு ஸ்வெட்டர்காரர் ஹலோ என்றார். பயம் நிகழ்ச்சியில் நூற்றுச் சில்லரை பயங்கள் பட்டியலாக நீளும்வரை ஓரமாகப் பொறுமையோடு உட்கார்ந்து தலையை ஆட்டிக்கொண்டிருந்த கெச்சலான நடுவயதுக்காரர் அவர்.
ஒருமணி நேரம் முன்னால் மெல்லிய வெய்யிலும் இதமான குளிருமாக இருந்த எடின்பரோ இப்போது சட்டென்று அதிகத் தணுப்பும் மேற்கேயிருந்து அடிக்கும் காற்றும் வெய்யிலை விரட்டியடித்து மேகம் கவியும் வானமுமாக மாறியிருக்கும் விநோதத்தைப் பகிர்ந்துகொண்டு ஸ்காட்லாண்ட் வானிலைக்கு எத்தனை முகம் என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
அடுத்த நிகழ்ச்சி தொடங்கும் நேரம் என்பதால் அரங்கில் நுழைய ‘வழிகாட்டியோடு ஒரு பயணம் போகத் தயாராக இருங்கள்’ என்றார் விழா அமைப்பாளர்.
முப்பது பேர் காத்திருக்க, வழிகாட்டி அவசரமாக உள்ளே நுழைந்தார். பக்கத்தில் உட்கார்ந்து சாண்ட்விச் சாப்பிட்ட சிவப்பு ஸ்வெட்டர்காரர்தான் அவர்.
‘மார்க் வேமேன் உங்களை இப்போது இந்தக் கட்டிடத்தின் பின்பகுதிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வார்’.
அறிவிப்பைத் தொடர்ந்து மார்க் வேமேன் முன்னால் நடக்க கூடவே மற்றவர்கள்.
அகதாமி கட்டிடத்துக்குப் பின்னால் ஓவியக் கூடத்தைப் பார்த்தபடி நின்றார் மார்க்.
"இந்தக் கட்டிடம் விக்டோரியா காலத்தைச் சேர்ந்தது. வாசலில் மூன்று பிரம்மாண்டமான தூண்கள் இருக்கின்றன. கட்டிடத்தின் வாசலில் யாருமே இல்லை".
அவர் சுற்றுலா வழிகாட்டி குரலில் தொடங்க, முன்னால் இருந்த கட்டிடத்தில் நான்கு தூண்கள் எல்லோருக்கும் தெரிந்தன. கட்டிட வாசலில் சுற்றுப்பயணிகளின் ஒரு பெரிய கூட்டம் நின்றிருக்கிறது.
"கட்டிடத்தின் மேல் வலதுபுறம் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கிறது. பக்கத்தில், பாதுகாப்பு மேற்பார்வைக்காக ஒரு விடியோ காமிரா உள்ளது. கட்டடத்துக்கு முன்னால் இரண்டு நூற்றாண்டு முந்திய விளக்குக் கம்பங்கள் உள்ளன. ஒரே உயரமும் கனமுமான அந்த இரண்டு கம்பங்களிலும் உருவாக்கப்பட்ட 1995 என்ற ஆண்டு குறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கம்பம் மற்றதை விட மூன்றடி உயரமாக உள்ளது.".
"வலது புறத்தில் மலையடிவாரத்தில் ரயில் நிலையம். அங்கேயிருந்து ஒரு ரயில் இந்தப் பக்கம் இரைச்சலோடு ஓடிவந்து கொண்டிருக்கிறது. தொலைவில் நான்கு அரசாங்கக் கட்டிடங்கள் மலைச்சரிவில் தட்டுப்படுகின்றன. வாசலில் பசுமையான புல்தரை விரிந்திருக்கிறது"
இடது புறத்தில் மலை இருக்கிறது. அரசாங்கக் கட்டிடங்கள் மலையடிவாரத்திலிருந்து வளைந்து திரும்பும் தெருவில் உள்ளன. அவற்றின் வாசலில் பசுமையான புல்தரை உண்டு. இரைச்சலோடு ரயில் வருகிறது. அது ரயில் நிலையத்திலிருந்து வரவில்லை. அங்கே போய்க்கொண்டிருக்கிறது.
மார்க் வேமேன் அளிக்கும் விளக்கம் பார்வையாளர்களுக்கு அவர் காட்டும் காட்சியோடு எப்போதும் பொருந்துவதில்லை. காட்சியிலிருந்து சொற்களைப் பிரித்து நிறுத்த அவர் பல நுட்பங்களைக் கையாள்கிறார். பின்னால் இருப்பதை முன்னால் இருப்பதாக வர்ணிக்கிறார். சில நுட்பமான உண்மைகளைச் சொல்லும்போது சட்டென்று கண்ணில் படக்கூடிய சில தகவல்களைத் தவறவிடுகிறார். சில காட்சிப் பிழைகளை நுழைக்கிறார்.
காட்சியும் வார்த்தையும் அவ்வப்போது ஒன்றுபடும்போது கிரகித்துக்கொண்டு, காதில் விழுவதற்கும் கண்ணில் படுவதற்கும் இடையே திரும்பத் திரும்ப ஏற்படும் வேறுபாட்டை வேகவேகமாகக் கடந்து, அதை இடம்-வலம், முன் - பின் என்று இலக்கு மாறிய வேறு காட்சிகளோடு தொடர்புபடுத்தி இசையவைக்க முயன்றபடி, சூழலோடு ஒத்திசைவாக நிற்க எல்லோரும் படும் சிரமம் பார்வையிலும், சிரிப்பிலும் தெரிந்தது.
மார்க் வேமேன் சொல்லைக் காட்சியிலிருந்து அகற்றி நிறுத்தும்போது பார்வையாளர்கள் தங்களுடைய தீர்மானங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. காட்சியை மறுக்க மனம் ஒப்புக் கொள்வதில்லை. காதில் விழும் சொல்லை மறுக்கவும் அது முழுக்க உடன்படுவதில்லை. கொண்டு கூட்டிப் பார்த்து அதில் உண்மையைத் தேடி, இட்டு நிரப்பப் பிரயாசைப்படும்போது, நிகழ்வு புலன்களில் ஏற்படுத்தக்கூடிய உணர்வுகளின் பரந்துபட்ட சாத்தியக்கூறுகள் பிரத்தியட்சமாகின்றன. மார்க் வேமேன் என்ற நிகழ்கலைஞர் வெற்றிபெறுவது இங்கேதான்.
2 Comments:
Hello Sir,
What happened? Long time no post...
Please start writing.
Rams
This comment has been removed by a blog administrator.
Post a Comment
<< Home