Sunday, December 18, 2005

எடின்பரோ குறிப்புகள் - 4

தமிழ் எழுத்தாளனுக்கும், நார்வே நாட்டுப் பத்திரிகையாளருக்கும் என்ன சம்பந்தம்? நாலு சட்டை, ரெண்டு பேண்ட், ரெண்டு லுங்கி, ஒரு எட்டு முழ வேட்டி இத்தனையும்தான்.

தோப்புத் தெருவில் லாண்டரி கிடையாது. வீட்டில் சலவை மிஷின் இருந்தாலும் துவைக்க சோம்பல். பிளாஸ்டிக் பையில் துணியை எல்லாம் திணித்து, மாக்கு மாக்கென்று பவுண்டன் பிரிட்ஜ் ஏறித் திரும்பி, பியர் தொழிற்சாலைக்கு மேற்கே மேட்டுப் பிரதேசத்துக்கு மேல்மூச்சு வாங்க நடந்தேன். கில்மோர் தெரு வளைந்து திரும்பிய ஓரத்தில் பாட்டியம்மா லாண்டரி வாவாவென்று வரவேற்றது. அங்கே வழக்கம்போல் துணி வெளுக்கப் போட்டானது.

சாயந்திரம் அதையெல்லாம் திருப்பி வாங்கிவர இன்னொரு முறை மலையேறினால், பாட்டியம்மா என்னைப் பார்த்த பார்வையில் டிராகுலா, ஜியார்ஜ் புஷ், ப்ரங்காஸ்டின் என்று எல்லாப் பிசாசும் ஒரே உருவெடுத்து நடந்துவரக் கண்டதுபோல் பயம் தெரிந்தது.

தப்பு நடந்து போச்சு தம்பி என்றாள் அவள் அழமாட்டாக் குறையாக. வெளுக்கப் போட்ட வேட்டியை வெள்ளாவி வைத்து நார்நாராகக் கிழித்து விட்டார்களா கடை சிப்பந்திகள்? சட்டை சாயம் போய் லுங்கியிலிருந்து பஞ்ச வர்ணத்தைக் கடன் வாங்கிக் கொண்டதா? பேண்ட் சுருங்கி, அரை டிராயர் ஆகிவிட்டதா?

நோ டியர். உன்கிட்டக் காலையிலே கை நீட்டி வாங்கினேனே துணி, ஒண்ணையும் காணலை. பத்து நிமிஷம் முன்னாடி இஸ்திரி போட்டு இங்கேதான் தொங்க விட்டிருந்தேன். இப்போ அம்பேல்.

சலவைத்துணி திருடும் யட்சிணி நடமாட்டம் கடைக்குள் இருக்கிறதா என்று நாலு திசையிலும் வாடையடிக்கச் சுருண்டு கிடந்த அழுக்கு மூட்டைகளுக்கு நடுவே நின்று ஆராய்ந்து கொண்டிருந்தபோது, சிப்பந்தி சீனமாது என் வெளுத்த துணியை பாட்டியம்மா பார்க்காத நொடியில் யாருக்கோ ராங்க் டெலிவரி கொடுத்த சமாச்சாரம் புலனானது.

ரெண்டு வாரம் சனிக்கிழமை விடிகாலை விரதம் இருக்கிறவன் போல் ஓட்ஸ் கஞ்சி குடித்து நடையாக நடந்து லாண்டரிப் படியேறினால், பாட்டியம்மா ஏழு லட்சம் தடவை மன்னிப்பு கேட்டபடி இருந்தாளே தவிர துணி போனது போனதுதான். பிரின்சஸ் கடைத்தெருவில் புது உடுப்பு நூறு பவுண்டு சொச்சத்துக்கு வாங்கி நிலைமையைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம்.

ரெண்டு நாள் முந்தி ஆப்பீஸில் இருக்கும்போது மொபைல் உற்சாகமாகக் கூவியது. சாம், உன்னோட துணி கிடைச்சாச்சு. ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. வாங்கிட்டுப் போயிடலாம்.

பாட்டியம்மா தான். அவள் கூப்பிட்ட சாம் நான் தான். இங்கே சாம் ஆகப் பெயர் பூண்ட சங்கதியை சாவகாசமாக எடுத்தோதுகிறேன். இப்போதைக்குத் துணியைத் திரும்பப் பெறுவதுதான் முக்கியம்.

எடின்பரோ நகர அழுக்குத் துணியெல்லாம் ஒரே நேரத்தில் வெளுக்கப்போட்ட மாதிரி கடைக்குள் ராட்சச சலவை யந்திரங்கள் சுழன்றபடி இருக்க, மங்கலான டியூப்லைட் வெளிச்சத்தில் பாட்டியம்மாவோடு கெச்சலான ஒரு தாடிக்காரன்.

இவர் நார்வேக்காரர். ஜர்னலிஸ்ட். உன் துணியை மாற்றி வாங்கிப் போனவர்.

யந்திரத்துக்கு இன்னொரு ஈடு துணியைத் தீனியாகப் போட்டபடி பாட்டியம்மா அறிமுகப்படுத்தினாள். நார்வேக்கார பிரையனும் இந்தியக்கார இப்போதைக்கு சாமும் கைகுலுக்கிக் கொண்டோம். காந்தி, நேரு, ஆஸ்லோ, கப்பல் கட்டுதல், ஈராக் ஆக்கிரமிப்பு, எடின்பரோ நாடகக் கொட்டகைகள் என்று கலந்து கட்டியாகப் பேசி முடிப்பதற்குள் சலவைக்கடை சிப்பந்தி நான் வெளுக்கப்போட்ட துணிகளை ஒயர் ஹாங்கரில் மாட்டித் தூக்கிக்கொண்டு வந்தார். அயர்ன் செய்த சூட்டோடு கைக்கு இதமாக அதெல்லாம் சந்தோஷமாக என் தோளோடு ஒடுங்கிக்கொண்டன. நார்வேக்காரர் புதுசாக வெளுக்கப்போட்ட துணியும் அடுத்து வந்து சேர்ந்தது.

பிரையன் தவறுதலாகத் துணியை வாங்கிக்கொண்டு எல்லாவற்றையும் பெட்டியில் வைத்தெடுத்துப் பாரீஸ் போய் அங்கே தொடரும் கலவரத்தை நேரில் பார்வையிட்டு தன் பத்திரிகைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார். கலவரத்தில் ஈடுபட்ட யாரையோ பேட்டி எடுக்கப் புறப்படும் போது, பச்சைச் சட்டையைப் பிரித்து மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட்டபோதுதான் தாமதமான ஞானோதயம். சலவைக்கடையிலிருந்து வந்திருந்த சட்டை ராங் டெலிவரி.

நார்வே போகிற வழியில் திரும்ப எடின்பரோ வந்து சலவைத்துணியைத் திரும்பக் கொடுத்த அக்கறைக்காக அந்த தாடிக்காரப் பத்திரிகையாளருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். சொன்னேன்.

ஒரு பென்னிகூட சலவைக்கூலி வேணாம் என்று சொல்லிவிட்டாள் எங்க பாட்டியம்மா. சாம் கிட்டே காசு வாங்கினா சாமி என்னை மன்னிக்காது என்று தீர்மானமாகச் சொன்னபோது ஒரு ஜாடைக்கு நித்திய சுமங்கலி சுப்பம்மாளாகத் தெரிந்தாள் அவள்.

வீட்டுக்கு வந்து பார்த்தேன். வெளுக்கப்போட்ட எல்லாத் துணியும் இருந்தது. எட்டு முழ வேட்டியைத் தவிர. பிரையன் கொண்டு வர மறந்து விட்டிருக்கலாம். போனால் போகிறது.

இதைப் படிக்கிற யாராவது நார்வேயில் தழையத்தழைய எட்டுமுழ வேட்டி கட்டிக்கொண்டு ஒரு கெச்சலான வெள்ளைக்காரப் பத்திரிகையாளன் நடந்துபோவதைப் பார்த்தால், சாம் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லவும்.

*************************************************************
00000000000000000000000000000000000000000000000000000000000

வரவர எங்கே இருக்கிறோம் என்பதே மறந்துபோய்க் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வருகிறதுபோல் இங்கே இங்கிலாந்திலும் தேர்தல் வந்து கொண்டிருக்கிறது. அங்கே போல் இங்கேயும் சமூக நீதி பற்றிப் பேச்சு ஆரம்பித்திருக்கிறது.

இதையெல்லாம் வழக்கமாக பிரதமர் டோனி பிளேயரின் தொழிற்கட்சி, இரண்டாம் எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சிப் பிரமுகர்கள்தான் இதுவரை செய்வது வழக்கம். கொஞ்சூண்டு சோசலிஷம் அவர்கள் அரசியல் ரத்தத்தின் ரத்தத்தில் இன்னும் கலந்திருப்பதால் தேர்தல் நேரத்தில் இதெல்லாம் பேச்சாக வெளிப்பட்டு காற்றோடு கலந்து போகிற வாடிக்கை.

கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் சமூக நீதிக்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்று சகலரும் நம்பியிருந்தனர். இங்கிலாந்தில் முடிந்த மட்டும் விக்டோரியா மகாராணி அல்லது மார்கரெட் தாட்ச்சர் அம்மையார் ஆண்ட ஸோ கால்ட் பொற்காலத்தைத் திரும்பக் கொண்டுவரப் பாடுபடும் ஆசாரமான வெள்ளைக்கார மகாஜனங்கள் இவர்கள்.

ஆனாலும் நிலைமை மாறித்தான் போய்க்கொண்டிருக்கிறது. தொழிற்கட்சியின் டோனி பிளேருக்குப் போட்டியாக கன்சர்வேட்டிவ் கட்சியின் இளைய தலைமுறைத் தலைவர் டேவிட் காமரன் கிளம்பியிருக்கிறார். நம்ம பேராண்டி என்று தாட்ச்சர் அம்மையார் தள்ளாத வயதில் காமரனை ஆசிர்வதித்தது கட்சி இளசுகளுக்குப் புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

சம்பிரதாயத்தை எல்லாம் உடைத்தெறிந்துவீட்டு, புதுத் தலைமுறையின் ஆசைப்படி நாட்டை வழிநடத்திப் போவதற்காக எதையும் துறக்கத் தயாரான காமரன் முதலில் துறந்தது கழுத்தில் சுருக்குப்போட்டு சதா தொங்கும் டையை. சனியன் பிடித்த டை ஒழியட்டும் என்ற இவருடைய விட்டு விடுதலையாக்கும் அறைகூவலை, முப்பது வருடத்துக்கு முந்திய ‘பேர்ன் த ப்ரா’வான மார்க்கச்சை எரிப்பு இயக்கத்தோடு ஒப்பிட்டுப் பத்திரிகையாளர்கள் சிலர் அகமகிழ்கிறார்கள்.

டையைக் கழற்றிப்போட்ட காமரன் இங்கிலாந்தில் சமூக நீதி பற்றி வெகு தீவிரமாகச் சிந்தித்து வருவதாக கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இயான் டங்கன் ஸ்மித் சொல்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சி கெலித்தால் ஸ்மித்துக்கு அமைச்சரவையில் படுமுக்கியமான இடம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி.

காமரன் சமூக நீதியை நடப்பாக்க என்ன செய்யப் போகிறார்? ஆராய்ச்சி. எதைப் பற்றி? இங்கிலாந்தில் ஏன் வறுமை இருக்கிற்து என்பதைப் பற்றி. ஆராய்ச்சி செய்ததும் என்ன நடக்கும்? வறுமையே வெளியேறு என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளி அது வெளியேற்றப்படும். சரி, இதற்கான கன்சர்வேட்டிவ் கட்சியின் செயல்திட்டம் என்ன? இருக்கு சார்.

காமருன் சமூக நீதியை நிலைநாட்ட, இங்கிலாந்தில் வறுமை பற்றி ஆராய ஒரு கமிட்டி போட்டிருக்கிறார். அவர்கள் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பித்து, வறுமை வெளியேறி, சமூக நீதி கிட்டி.

சந்தேகமேயில்லை. காமரூன் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து அரசியல் பாடம் படித்துப் போகிறார்.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

ஸ்காட்லாந்துக்கு வந்து கொஞ்சம் போலவாவது ஸ்காட்டிஷ் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் எப்படி?

பிரின்சஸ் தெருவில் சதா ஸ்காட்லாந்தின் தேசிய வாத்தியமான பேக் பைப் ஒலிக்கும் கடைக்குள் நுழைந்தேன். ஸ்காட்லாந்து தேசிய உடையான சிவப்பு, நீலச் சதுரம் நிரம்பிய குட்டைப் பாவாடை அணிந்த ஸ்காட்லாந்தியர்களாகிய ஏழடி ஆண் சிப்பந்திகளும், அதே நிறக் குட்டைப்பாவாடையும் ஸ்டாக்கிங்கும் அணிந்த ஸ்காட்லாந்து பெண்களும் ஸ்காட்லாந்து உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி சுறுசுறுப்பாக வரவேற்கிறார்கள். ஆயிரத்துச் சொச்சம் ஸ்காட்லாந்து சமாச்சாரங்களைக் காட்டி கொள்ளை மலிவு விலையென்று குறிப்பிட்டு வாங்கச் சொல்கிறார்கள். தேசிய உடை, தேசிய வாத்தியம், கயிறு கட்டி முடிந்து கொள்ளும் ஸ்காட்லாந்து சட்டை, ஸ்காட்லாந்து இனிப்பு, ஸ்காட்லாந்து வாசனைத் திரவியம், ஸ்காட்லாந்து செருப்பு, ஸ்காட்லாந்து பூட்டு, ஸ்காட்லாந்து இலக்கியம், ஸ்காட்லாந்து கம்பளி மப்ளர், ஸ்காட்லாந்து பாத்ரூம் டிஷ்யூ, டாய்லெட் பேப்பர் …

ரெண்டு பவுண்டுக்கு ஒரு ஸ்காட்லாந்து காப்பிக் குவளை வாங்கிக்கொண்டு பணம் அடைக்க கவுண்டருக்குப் போகிறேன். செண்டிமீட்டருக்குச் செண்டிமீட்டர் ஸ்காட்லாந்து வாடை தீர்க்கமாக அடிக்கும் கடையின் முதலாளியான அந்த ஸ்காட்லாந்துக்காரரின் தேசபக்திக்காக அவரைக் கைகுலுக்கிப் பாராட்டியே ஆகவேண்டும்.

“ஷுக்ரியா” என்றார் காசை வாங்கிக் கல்லாவில் போட்டுக்கொண்ட கடை முதலாளி. தலைப்பாவும் தாடியுமாக நம்ம ஊர் சர்தார்ஜி.

oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

அடி வாங்கினாலும் கொஞ்சம் கிரிக்கெட், உலகக் கோப்பை ஜெயிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் நிறையக் கால்பந்தாட்டம், கொஞ்சம்போல் ரக்பி என்று இங்கிலாந்து மூன்று விளையாட்டுகளில் முன்னணியில் நிற்க, ஸ்காட்லாந்து பிரதேசம் எந்த விளையாட்டிலும் சோபிக்காத மசமச பின்னணியில்.

எலிசபெத் மகாராணியின் தாயாதியோ பங்காளியோ இங்கே ஒரு பிரபு ஸ்காட்லாந்துக்கான இந்த அவப்பெயரைத் துடைக்கக் கச்சை கட்டிக்கொண்டு கிளம்பியிருக்கிறார். ஆர்கெயில் பிரதேசக் கோமகனான கேம்பெல் பிரபுதான் அவர்.

அவர் முயற்சியால் ஒரு உலகக் கோப்பையை அண்மையில் ஸ்காட்லாந்து தட்டிக்கொண்டு வந்திருக்கிறது. அது யானை மேல் ஏறிக்கொண்டு விளையாடும் போலோ விளையாட்டு.

யானை போலோ ரொம்பக் கஷ்டமான விளையாட்டு என்கிறார் காம்பெல் பிரபு. பந்தை நகர்த்த யானையை முன்னே போகச் சொன்னால் அது பந்தைத் தூக்கி வெளியே போடும். இல்லாவிட்டால் அடுத்த யானையை முட்டித் துரத்தும். இல்லையா, குடுகுடுவென்று மைதானத்துக்கு வெளியே ஓடும். போலோ குச்சியை ஒடிக்கும். இத்தனை கஷ்டத்துக்கும் ஈடுகொடுத்து யானையில் ஏறி அதை இஷ்டப்படி முன்னால் செலுத்தி போலோ விளையாடுவது பின்னும் கஷ்டம், பெரும் கஷ்டம். இத்தனைக்கும் மேல் ஸ்காட்லாந்து யானைபோலோவில் வென்றிருக்கிறது என்றால் யாருக்குத்தான் பெருமை இருக்காது என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு கேட்கிறார் இவர்.

எல்லாம் சரிதான். ஸ்காட்லாந்து முழுக்கத் தேடினாலும் ஐந்து யானைகூடத் தேறாது. இதில் இரண்டு இந்தப் பிரபு வளர்ப்பவை. இந்த லட்சணத்தில் எப்படி யானையில் ஏறிப் பழக்கி, விளையாடி, உலகக் கோப்பை வென்று?

போட்டியாகப்பட்டது ஸ்காட்லாந்தில் நடக்கவில்லையாம். நேபாளத்தில் நடந்ததாம். ஸ்காட்லாந்து அணியில் மேற்படி பிரபு, இன்னும் சில இந்திய ரிடையர்ட் ராணுவ மேஜர்கள், சில இலங்கைக் கார தோட்ட முதலாளிகள் என்று சேர்ந்து விளையாடிக் கெலித்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் எப்படி ஸ்காட்லாந்துக்காக ஆட முடியும்?

டேக் இட் ஈசி என்கிறார் காம்பெல் பிரபு. யாரை வேண்டுமானாலும் உடனடியாக ஸ்காட்லாந்துக்காரர் ஆக மாற்ற ஒரு சடங்கு இருக்கிறதாம். இந்திய ராணுவ மேஜர்களும் இதர மைனர்களும் ஸ்காட்லாந்துக்காரர்கள் ஆனது இதை நடத்தித்தான்.

பிரபு மேற்படி சடங்கின் விவரத்தையும் தருகிறார்.

ஸ்காட்ச் விஸ்கி இருக்கு இல்லே, ஸ்காட்ச் விஸ்கி? அதை முட்ட முட்ட உள்ளே தள்ள வைத்தால் வேற்று நாட்டாரும் நொடியில் ஸ்காட்லாந்தியர் ஆகிவிடுவார்கள்.

அடுத்த ஸ்காட்லாந்து தேர்தலில் ஓட்டுப் போடலாமா என்று யோசிக்கிறேன். மோரிசன் தெரு செயின்ஸ்பரி சூப்பர் மார்க்கெட்டில் ஸ்காட்ச் விஸ்கி விலை விசாரிக்க வேண்டும்.

4 Comments:

At 2:09 am, Blogger தருமி said...

"........இங்கே சாம் ஆகப் பெயர் பூண்ட சங்கதியை சாவகாசமாக எடுத்தோதுகிறேன்.....// சீக்கிரம் எடுத்தோதுங்க, சார்!

 
At 3:47 am, Blogger துளசி கோபால் said...

வழக்கம்போலவே அட்டகாசமான பதிவு.

இங்கே நான்கூட 'ட்ரிஷ்'தான்.

 
At 8:38 am, Blogger Thangamani said...

//இதைப் படிக்கிற யாராவது நார்வேயில் தழையத்தழைய எட்டுமுழ வேட்டி கட்டிக்கொண்டு ஒரு கெச்சலான வெள்ளைக்காரப் பத்திரிகையாளன் நடந்துபோவதைப் பார்த்தால், சாம் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லவும்.//

:)

 
At 5:06 pm, Blogger தருமி said...

"இதைப் படிக்கிற யாராவது நார்வேயில் தழையத்தழைய எட்டுமுழ வேட்டி கட்டிக்கொண்டு ஒரு கெச்சலான வெள்ளைக்காரப் பத்திரிகையாளன் நடந்துபோவதைப் பார்த்தால்,...//

- நல்ல வேளை, எங்கே இன்னும் அந்த வேட்டி ஞாபகத்திலேயே இருப்பீங்களோன்னு பார்த்தேன்... :-)

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது