எடின்பரோ குறிப்புகள் - 14
போன வார நம்புங்கள் நாராயணன் அல்லது ஆட்டுங்கல் நம்பூத்திரி ராசிபலனின் தனக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேர் கவனித்திருந்தால், நெருங்கிய நபர்களால் பெருங்கஷ்டம் என்று தெரிந்திருக்கும்.
போன புதன்கிழமை ஒரே நாளில் அவருடைய மூன்று அமைச்சர்கள் பிளேருக்குத் தலைவலி, திருகுவலி என்று கிரமமாக உண்டாக்கி, உட்கார்கிற இடத்தில் மிளகாய் விழுதைப் பதமாகத் தடவி எரிய வைத்துவிட்டார்கள்.
உள்துறை அமைச்சர் சார்லஸ் கிளார்க் தொடங்கி வைத்தார். அவருடைய அமைச்சகம் கடந்த நாலு வருடத்தில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு வெளிநாட்டுக்காரர்களை தண்டனை முடிந்ததும் விடுவித்திருக்கிறது. இதில் என்ன தப்பு இருக்கு என்று ஆச்சரியப்பட்டால், இதோ - பிரிட்டீஷ் சட்டவிதிகளின்படி, இந்தக் கிரிமினல் குற்றவாளிகள் தண்டனைக்காலம் முடிந்ததும், அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும்.
ஆனால் நடந்ததோ வேறு தரத்தில். கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், கற்பழிப்புக் குற்றவாளிகள் என்று பலதரப்பட்ட இவர்கள் எல்லாரும் சிறையில் இருந்து இறங்கி வந்து லண்டனிலும், பர்மிங்ஹாமிலும், கிளாஸ்கோவிலும் இன்னும் பிரிட்டன் முழுக்கவும் அடியெடுத்து வைத்து, நாட்டு மக்களோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். ஒரு நூறு பேர் போலத் திரும்பப் பிடிபட்டார்கள் என்று அரசாங்கம் அவசர அவசரமாக அறிவித்தாலும், பாக்கி தொள்ளாயிரம் பேரையும் பிடித்து நாடு கடத்துவது என்பது பகல்கனவுதான்.
இப்படிப் படு காஷுவலாக அயல்நாட்டுக் குற்றவாளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் கிளார்க் ராஜினாமா செய்ய வேணும் என்று எதிர்க்கட்சிகள் குரலை உயர்த்திவிட்டார்கள். ‘என்னோட அமைச்சரகம்தான். யார் இல்லேன்னாங்க? ஆனா, அங்கே இண்டு இடுக்கில் என்ன தப்பு நடக்கிறது என்று தூண்டித் துருவிப் பார்ப்பது என்னோட வேலையில்லை’ என்று சார்லஸ் கிளார்க் நம்ம ஊர் அமைச்சர்கள் ஸ்டைலில் எகிற, பிரதமர் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
இதுக்கே இப்படிக் கவலைப்பட்டால் எப்படி, கொஞ்சம் இதையும் சமாளியுங்க என்று சுகாதார அமைச்சர் பாட்ரீஷியா ஹீவிட் அம்மையார் தன் பங்குக்கு மிளகாய் அரைத்திருக்கிறார்.
நாட்டின் ஒட்டுமொத்த உடல் நலமும் ஆரோக்கியமும் தேசிய சேவையான நேஷனல் ஹெல்த் சர்வீஸ் என்ற என்.ஹெச்.எஸ் மூலம் பராமரிக்கப்படும் இங்கிலாந்தில், மூக்கடைப்பில் இருந்து, புற்றுநோய்வரை சிகிச்சை பெற நாட்டுமக்கள் அரசு மருத்துவனைகளைத்தான் நாடுவது வழக்கம். வரிப்பணம், அரசு மானியம் என்று காசு பணத்துக்குக் குறைச்சல் இல்லாமல் இருந்த என்.ஹெச்.எஸ்ஸின் நிதிநிலைமை நிர்வாகச் சீர்கேடு மூலம் தற்போது கண்டமேனிக்குச் சீர்கெட்டுக் கிடக்கிறது. மாதச் சம்பளம் கொடுக்கப் பணமில்லாமல் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நர்சுகள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை வேலையிலிருந்து திடீரென்று நிறுத்தப் போகிறதாகத் தெரிகிறது. ஆரோக்கிய சேவையைக் குற்றுயிரும் குலலயுயிருமாக உயிருக்குப் போராட வைத்துவிட்டதாக அரசு மேல் குற்றச்சாட்டும், கோபமும் பரவலாக எழுந்திருக்கிற நேரம் இது.
இப்போது பார்த்து சுகாதார அமைச்சர் பாட்ரீஷியா ஹீவிட் அம்மையார் ராயல் காலேஜ் ஓஃப் நர்சிங் என்ற அரசு செவிலியர் கல்லூரியில் ஆண்டுவிழா உரையாற்றக் கனகம்பீரமாகப் புறப்பட்டுப் போயிருக்கிறார். என்.எச்.எஸ் அருமையான ஆரோக்கியத்தில் இருக்கிறதாகவும், நர்சுகள் தான் தங்கள் வேலைமுறையை சிறப்பாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் திருப்பணியை மைக்கைப் பிடித்துக் கொண்டு இந்த அமைச்சர் ஆரம்பிக்க, பாரம்பரியம் மிக்க ராயல் நர்சிங் கல்லூரி வரலாற்றிலேயே முதல்முறையாக கூச்சல், குழப்பம். அமைச்சர்
உடனடியாக உரையை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
டாக்டர்களும், நர்சுகளும் ஆத்திரத்தோடு அரசு நடவடிக்கைகளை எதிர்த்து கேள்விக்கணைகளை அமைச்சரை நோக்கித் தீவிரமாக எடுத்துவிட, அம்மையார் அடித்துப் பிடித்துக்கொண்டு வெளியே சாடிவிட்டார். பத்திரிகைகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் கொண்டாட்டம். தொழிற்கட்சி நாட்டு மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடுவது வெட்கக்கேடு என்றும், ஹீவிட் அம்மாவும் ப்ளேர் அய்யாவும் உடனடியாக கால்கடுதாசி எழுதிக் கொடுத்துவிட்டு இறங்கிப் போக வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் உரக்க முழங்க, ப்ளேர் ஒரே நாளில் இரண்டாவது தடவையாக அடுத்த பிரச்சனையைச் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
அமைச்சர்கள் மட்டும் தான் பிரதமரை நோகடிக்க வேணுமாக்கும், நான் எதுக்கு இருக்கேன் உதவிப் பிரதம மந்திரியாக என்று ஜான் பிரஸ்காட் அடுத்த பிரச்சனையாகியிருக்கிறார்.
எல்லாம் பெர்பூமோ, ஜான் மேஜர் என்று காலம் காலமாக பிரிட்டீஷ் அரசியல் தலைவர்களை, முக்கியமாக அமைச்சர்களைச் சபல புத்திக்கு இரையாக்குகிற
சமாச்சாரம்தான். அறுபத்தாறு வயது ஜான் பிரஸ்காட், நாற்பத்து நாலு வயதேயான தன் டயரி செகரெட்டரி குமாரி டெம்பிளோடு எக்கச் சக்கமான நெருக்கத்தில் இருந்ததாக டேப்ளாய்ட் பத்திரிகைகளில் வெளியான செய்தி உண்மைதான் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.
கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும் பழைய பிரதமருமான ஜான் மேஜர் தன் அமைச்சரவையில் பெண் அமைச்சர் ஒருத்தரோடு காதல் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக, அவர்கள் எல்லாம் பதவியிலிருந்து வெளியே போய் பல வருடத்துக்கு அப்புறம் குற்றச்சாட்டு எழுந்தபோது, ‘கன்சர்வேட்டிவ்கள் ஒழுக்கம்-னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற ஆளுங்க’ என்று சாடிய ஒழுக்க சீலர் பிரஸ்காட் ‘என்னமோ புத்தி தவறிடுச்சு, தப்புத்தான், மன்னிச்சுங்க’ என்று ப்ளேரிடமும், தன் அறுபது வயது மனைவியிடமும், நாட்டு மக்களிடமும் காலைப் பிடிக்காத குறையாக மன்னிப்புக் கேட்கிறார்.
பிரஸ்காட்டின் கள்ளக்காதல் அவருடைய சொந்த விவகாரம் என்று ப்ளேர் சமாளித்தாலும், எதிர்க்கட்சிகள் தொழிற்கட்சியின் பரிசுத்தமான உருவம் சிதைவதைக் கள்ளச் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருக்கின்றன.
மக்கள் என்ன நினைக்கிறார்கள்? கிரிமினல்களைக் கட்டவிழ்த்துவிட்ட உள்துறை அமைச்சர் கிளார்க் மற்றும் தேசிய ஆரோக்கிய சேவையை முடக்கிப்போட்ட ஹீவிட் அம்மையார் இருவர் மேலும் சகலருக்கும் அதிருப்தியும் கோபமும். காதல் மன்னன் பிரஸ்காட்? அந்தக் கிழம் எக்கேடும் கெடட்டும்; கவர்மெண்ட் ஆபீசில் கவர்மெண்ட் கட்டில் கவர்மெண்ட் மெத்தை போட்டு கவர்மெண்ட் வேலை நேரத்தில் கவர்மெண்ட் ஊழியரான காதலியோடு சொந்த டூயட் பாடாமல் இருந்தால் சரிதான் என்பதே பொது அபிப்பிராயம்.
அடுத்த தேர்தலில் தொழிற்கட்சி மறுபடியும் கெலித்து, மற்ற அமைச்சர்கள் திரும்பி வந்தாலும், பிரஸ்காட் அமைச்சரவையில் இருப்பார் என்று தோன்றவில்லை. ரிடையரான காலத்தில் அவர் பொழுதை உருப்படியாகக் கழிக்க நம்மாலான சிபாரிசு அவரை பிரிட்டீஷ் பேட்டண்ட் இணையத் தளத்துக்கு-பேடண்ட்.கவ்.யூகே- விஜயம் செய்யும்படி கேட்டுக்கொள்வது.
அங்கே, லட்சக் கணக்கான பேடண்ட்கள் பற்றிய தகவல் நடுவில் இந்த சமாச்சாரம் தட்டுப்படும். ஐம்பது வருடம் முந்தி ஒரு பிரிட்டீஷ்காரர் உருவாக்க நினைத்து பேடண்ட் வாங்கியது. விஷயம் வேறொண்ணுமில்லை. ஆணுறை. கொஞ்சம் விசேஷமானது. God Save the Queen என்று கூடுதலில் உச்ச கட்டத்தில் இசையெழுப்பிப் பாடும். பேடண்டுக்கு உயிர்கொடுத்து, தானும், இன்னும் பலரும் தேசபக்தியோடு காதல் செய்ய பிரஸ்காட் வழிசெய்ய வாழ்த்துகள்.
8888888888888888888888888888888888888888
பிரிட்டனில் ஊராட்சித் தேர்தல்கள் வரும் இந்த நேரத்தில், போன பொதுத் தேர்தல் செலவுக் கணக்காக அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியான டோனி ப்ளேரின் தொழிற்கட்சிச் செலவுக் கணக்கிலிருந்து -
தேர்தல் வெற்றிக்காகப் பிரச்சாரம் உருவாக்க ஒரு அமெரிக்க ஆலோசகருக்குக் கொடுத்த கட்டணம் நாலு கோடி ரூபாய். பழைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனோடு தொடர்புடைய கம்பெனி இது.
டோனி ப்ளேர் தன் முந்தைய அமைச்சரவையின் ராஜினாமாவை பக்கிங்ஹாம் அரண்மனையில் சமர்ப்பித்துவிட்டு, பத்து டவுணிங் தெரு வீட்டுக்கு டாக்சியில் போக நானூத்தெண்பது ரூபாய் செலவு.
பிரதமரின் மனைவி செர்ரீ ப்ளேர் கணவரோடு கூடத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறார். அப்போதெல்லாம் ப்யூட்டி பார்லருக்குப் போய் சிகையலங்காரம் செய்து கொண்ட வகையில் செலவு சுமார் அறுபத்து நாலாயிரம் ரூபாய்.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் செலவுக் கணக்கிலிருந்து -
ஓட்டுப் போடச்சொல்லி ஈமெயில் அனுப்ப, பத்து லட்சம் ஈமெயில் முகவரிகள் வாங்கிய வகையில் செலவு கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து லட்சம் ரூபாய்.
இளவரசர் சார்லஸ் - கமீலா பார்க்கர் கல்யாணத்துக்குப் போகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஹோவர்டின் மனைவிக்கு ஒப்பனைச் செலவு ஐநூறு ரூபாய்.
இன்னொரு எதிர்க்கட்சியான லிபரல் டெமகிராட் கட்சியின் முக்கிய எலக்ஷன் செலவாகக் காட்டப்படும் கணக்கு - கட்சித் தலைவர் சார்லஸ் கென்னடி நல்லதாக நாலு பேண்ட் சட்டை தைத்துக் கொண்ட வகையில் ரூபாய் நாலு லட்சம் செலவு.
நம்ம ஆளுங்க கொடுக்கப் போகும் கணக்குகளுக்கு இதெல்லாம் பயன்பட்டால் சந்தோஷம்தான்.
88888888888888888888888888888888888888888888888888888
ஷேக்ஸ்பியர் பிறந்த தினமான ஏப்ரல் இருபத்து மூனு தேதியில், இந்த வருடம் லண்டன் மாரத்தான் சிறப்பாக முடிந்திருக்கிறது. போன வருடம் பெண்கள் ஓட்ட வீராங்கனையாகத் தேர்வான பாவ்லா ராட்க்ளி ஃப் இந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாகப் பங்குபெற முடியாமல் போய்விட்டது. போன வருடம் அவர் ஓடிக்கொண்டே உடை நனைய அற்ப சங்கையைத் தீர்த்துக் கொண்ட புகைப்படத்தை ஒரு பத்திரிகையாளர் ஒளிந்திருந்து எடுத்து சகலமான பத்திரிகைகளிலும் அது பிரசுரமான சங்கடம் இன்னும் பாவ்லா ராட்க்ளிஃபுக்குத் தீரவில்லையோ என்னமோ. No more making history by making water என்று நினைத்திருக்கலாம்.
போன ஒலிம்பிக்கில் வெங்கலப் பதக்கம் வாங்கிய அமெரிக்க வீராங்கனை டீனா காஸ்டர் இந்த இருபத்தாறு மைல் ஓட்டப் பந்தயத்தில் முதல் இடம் பிடித்து கிட்டத்தட்ட நாற்பது லட்சம் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். கென்யாவைச் சேர்ந்த லிமோ ஆண்கள் சாம்பியனாகத் தேர்வாகியிருக்கிறார்.
இவர்கள் தவிர சின்னத்திரை நட்சத்திரங்கள் வர்த்தக நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்போடு பப்ளிசிட்டிக்காக ஓடி, அங்கங்கே நடை தளர்ந்து நின்றிருக்கிறார்கள். ஒரு ஓட்டக்கார ஜோடி திருமண உடையில் ஓட்டமாக ஓடி, லண்டன் டவர் பக்கம் ஓடியபடிக்கே மோதிரம் மாற்றிக் கல்யாணம் முடித்துக் கொண்டது. பாதிரியாரும் கூடவே அங்கி தரையில் புரள ஓடினதாகத் தகவல் இல்லை.
லண்டன் சிறையிலிருந்து நாலு குற்றவாளிகள் லண்டன் மாரத்தானில் கலந்து கொண்டார்கள். இவர்கள் ஓட்டப் பந்தயம் முடிந்து சமர்த்தாக ஜெயிலுக்குத் திரும்ப ஓடி வந்து விட்டதில் உள்துறை அமைச்சருக்கு துக்கிணியூண்டு நிம்மதி கிடைத்திருக்கலாம்.
88888888888888888888888888888888888888888888888
2 Comments:
லண்டன் நியூஸ் டைஜஸ்ட் பிரமாதம்.
எங்கும் எதிலும் ஊழல்ன்னு எல்லோரும் ஜேஜேன்னு இருக்காங்க போல.
அரைச்ச மிளகாயையெல்லாம் ஒரே இடத்துலேயா தடவிட்டாங்க?
அடப்பாவமே!:-)))
வழமை போல, நல்ல :)
Post a Comment
<< Home