Tuesday, April 18, 2006

எடின்பரோ குறிப்புகள் – 12

அதிகாலை ஐந்து மணிக்குத் தோப்புத் தெருவுக்கு வரவேண்டிய டாக்சிக்காரர் க்ரோவ்னர் தெருவில் அலைந்து திரிய வேண்டிப்போனது டாக்சிக் கம்பெனி அம்மணியின் தவறு மூலமாக.

தவறு கொஞ்சம் முன்னாடியே ஆரம்பமாகி விட்டது. ஈஸ்டர் விடுமுறை தொடங்குவதற்குக் கடைசி நிமிடம் வரை தள்ளிப்போட்டு சட்டென்று முடிவெடுத்து விமானப் பயணமாக லண்டனுக்குக் கிளம்பியது முதல் தப்பு. காலைக் காப்பி கூடக் குடிக்காமல் அடித்துப்பிடித்துக்கொண்டு விமானத்தாவளம் போய்ச்சேர்ந்தது ரெண்டாம் தப்பு. ஆறரை மணிக்குக் கிளம்பும் பி.எம்.ஐ ஃஃப்ளைட்டில் வாங்கோண்ணா என்று உபசார வார்த்தையோடு, ஆவி பறக்கப் பறக்க ஒரு டம்ளர் அல்பமான காப்பித் தண்ணியாவது கலந்து எடுத்து வந்து நீட்டமாட்டார்களோ என்று எதிர்பார்த்தது அடுத்த தப்பு. மாட்டார்களாம்.

ஏர் ஹோஸ்டஸ் டிரேயில் காப்பி, டீ சகிதம் வந்தபோது, கழுத்தில் கண்டக்டர் மாதிரி தோல்பை. காப்பி சாயா வேணுங்களா? கட்டாயம் வேணும் தாயி. ஒண்ணரை பவுண்ட் அடைச்சா காப்பி. சாயா ஒரு பவுண்ட். பிஸ்கட் அம்பது காசு. எடுக்கட்டா?

செங்கல்பட்டு ஜங்ஷன் பிளாட்பாரத்தில் சேது எக்ஸ்பிரஸ் நிற்கும்போது ‘இட்லி வடை சூடான காப்பி’ என்று கடந்து போகிற குரல்களை இனி விமானங்களிலும் நாசுக்கான ஆங்கிலத்தில் கேட்கலாம்.

888888888888888888888888888888888888888888888888

ஈஸ்டர் நெருங்கி வந்தும், இன்னும் நாலைந்து டிகிரி செல்சியஸைத் தாண்டாமல், நெடுநல்வாடையடிக்கும் எடின்பரோவிலிருந்து புறப்படும்போது லண்டன் காலநிலை பத்து டிகிரியில் சஞ்சரிப்பதாக பிபிசி தளம் சொன்னது. எதற்கும் இருக்கட்டும் என்று வெங்காயச் சருகு போல ஒரு விண்ட் ஷீட்டரை சட்டைக்கு மேலே அணிந்து கொண்டு கிளம்பியது இன்னொரு தவறு. நசநசவென்று வியர்க்கத் தொடங்கியிருக்கிறது. சனியனைக் கழற்றிச் சுருட்டி முதுகில் சுமக்கும் மூட்டையில் திணிக்க வேண்டியதுதான்.

பிக்கடலி சர்க்கிள் பாதாள ரயில்நிலையத்தில் முதலாவது நகரும் படிக்கட்டு ஆமை வேகத்தில் மேலே போய்க்கொண்டிருக்கிறது. இது முடிந்து அடுத்த படிக்கட்டும் நகர்ந்து மேலே கொண்டுபோய் விட்டால்தான் பிக்கடலி தெருவும், ரீஜண்ட் தெருவும் மற்றதும்.

படிக்கட்டுத் தொடங்கும் இடத்தில் இரண்டு இளைஞர்கள் கிதாரை இசைத்து அருமையாகப் பாடிக்கொண்டிருக்க, படிக்கட்டில் நின்றபடிக்கே ஒரு தாடிக்காரனும் கூட்டுக்காரியும் அவர்களைக் கிண்டல் செய்வதுபோல் கண்டாமுண்டா என்று ஆடுகிறார்கள். அதையும் சிலர் ரசிக்கிறார்கள்.

எதையும் கவனிக்காமல் நகர்ந்தபடிக்கே இளம் ஜோடி ஒன்று தீவிரமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கிறது. மேல்படி வருவதற்கு ஒரு வினாடி முன் சட்டென்று பிரிந்து முன்னால் குதித்துக் கைகோர்த்து நடக்கிறார்கள். ரெண்டு பேரும் சுந்தரிப் பெண்குட்டிகள். லண்டனில் குளிர் விட்டுப்போய்விட்டது.
888888888888888888888

கென்சிங்க்டன் பகுதி பஸ் ஸ்டாப்களில் அண்ணன் அழைக்கிறார் ரக போஸ்டர்கள். லண்டன் நகர மேயர் கென் லிவிங்ஸ்டன் நெரிசல் வரி கட்டச்சொல்லி மக்களை அழைக்கிறார்.

வாரநாட்களில் பரபரப்பான பகல் பொழுதுகளில் லண்டன் – வெஸ்ட்மினிஸ்டர் முக்கிய வீதிகளில் காரை ஓட்டிப் போனால், நெரிசல் வரி கட்ட வேண்டும். லண்டனில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேயர் இரண்டு வருடம் முன்னால் வகுத்த திட்டம் வெற்றிகரமாக நடக்கிறது, அதாவது மாநகராட்சியையும், முணுமுணுத்தபடி தினசரி தண்டம் அழும் நகரவாசிகளையும் பொறுத்தவரை.

ஏகப்பட்ட கார், வேன், ஆள் அம்பு என்று வைத்துக்கொண்டு சகலமான அதிகாரிகளும் சதா நகரத் தெருக்களில் வாகனங்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்ததலும், ஒரு காசு கூட நெரிசல் வரி கட்டமுடியாது என்று அமெரிக்கத் தூதரகம் அடம் பிடித்து வருகிறது. கிட்டத்தட்ட லட்சம் பவுண்ட் வரிபாக்கி. உன்னால் முடிஞ்சதைச் செஞ்சுக்கோ என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு போகிற அமெரிக்கத் தூதரை ‘ரொம்ப சின்னத்தனமான மனுஷன்’ என்று மேயர் விளாசியிருக்கிறார். ஆனாலும் டாலர்தேசத்திலிருந்து காசு பெயரவில்லை.

நெரிசல் வரியை இப்போது கொஞ்சம் உயர்த்தியிருப்பதாக மாநகராட்சி போஸ்டர்கள் அறிவிக்கின்றன. தினசரி எட்டு பவுண்ட் வரி. ஒரு வருடத்துக்கு மொத்தமாகச் செலுத்தினால், நாற்பது நாள் லைசன்ஸ் இலவசம்.

பெட்ரோல் செலவு. காருக்கு இன்ஷூரன்ஸ். பராமரிப்பு. கூடவே வருடத்துக்கு ரெண்டாயிரத்து நானூறு பவுண்ட் வரி. நம்ம ஊரில் இந்தப்படிக்கு காசு கொடுப்பதாக இருந்தால் வருடம் ஒரு செஹண்ட் ஹாண்ட் கார் வாங்கிவிடலாம்.

88888888888888888888888888

இங்கிலாந்தில் இப்போது பென்ஷன் நிதி நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது. அரசு, தனியார் நிறுவனங்கள் பென்ஷன் நிதியை முதலீடு செய்திருந்த இனங்களிலிருந்து வரும் வருமானம் குறையத் தொடங்கியிருப்பதால், இப்போதைய, இனிவரப் போகிற பென்ஷன்தாரர்களுக்கு மாதாந்திர பென்ஷனைக் கொடுப்பது செலவுக் கணக்கை எகிற வைக்கும்.

பிரச்சனை தீர ஒரு வழியாக அமைச்சர் கார்டன் ப்ரவுன் அறிவித்திருப்பது இதுதான் – உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது. இதையடுத்து, பிரிட்டீஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்புச் செய்திருக்கிறது. பைலட்டுகள் இனி அறுபது வயது வரையும், ஏர் ஹோஸ்டஸ்கள் அறுபத்தைந்து வயது வரையும் வேலை பார்க்க வேண்டும்.

கண்ணைக் கவிந்தபடி காக்பிட்டில் வயோதிக விமானிகள் உட்கார்ந்து விமானத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தள்ளாடியபடி உள்ளே ஏர்ஹோஸ்டஸ்கள் சாயா, காப்பி விற்றுக் காசுவாங்கிப் போட்டுக்கொண்டு மூட்டுவலியோடு நடந்துபோகிற காலம் வருவதற்கான அறிகுறிகள் தட்டுப்படுகின்றன.

8888888888888888888888888888888

பென்ஷன் பெறும் வயது உயர்கிறதோ இல்லையோ, கணிசமான பிரிட்டீஷ்கார முதியவர்கள் தொண்ணூறு, நூறு வயது கடந்து பிரச்சனையில்லாமல் மூச்சுவிட்டுக் கொண்டு ஓடியாடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

எலிசபெத் மகாராணிக்கு வரும் ஜூன் மாதத்தில் எண்பது வயதாகிறது. ஈஸ்டரை ஒட்டி மகாராணி மாண்டி பர்ஸ் என்று ஆயிரக்கணக்கான பேருக்கு தட்சணை கொடுப்பது வழக்கம். மற்றதில் மரபு கடைப்பிடிக்கப் படுகிறதோ என்னமோ, மாண்டி பர்ஸ் விஷயத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருத்தருக்கும் தொண்ணூறு காசு. அதுதான் காலம் காலமாக வழங்கப்படும் தட்சணை. ரெண்டாயிரத்து ஆறாம் வருடத்திலும் ஏழைகளுக்கு அதே தொண்ணூறு பென்ஸ் காசைத்தான் துணிப்பையில் போட்டு நீட்டுகிறார் மகாராணி. அவருடைய எண்பதாம் பிறந்த நாள் என்பதால் அரை பவுண்ட் கூடுதலாகத் தரப்படும் என்று தெரிகிறது.

ராணியம்மாவின் எண்பதாம் ஆண்டு நிறைவு சிறப்புப் புகைப்படத்தை அருமையான கருப்பு வெள்ளையில் எடுத்தவர் ஒப்செர்வர் பத்திரிகையின் புகைப்படக் கலைஞர். ஜேன் பவுன் என்ற இந்தப் பெண்மணி பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணியைப் படம் எடுத்து முடித்து, எண்பதாம் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ராணி சொன்னார், “ஜேன், உனக்கும் அதேபடி வாழ்த்துகள்”. புகைப்படக் கலைஞர் ஜேன் பவுனும் எண்பது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

888888888888888888888888888888888

ஜேனுக்கும் ஜோனுக்கும் ஒரு எழுத்தும் இருபது வயதும் வித்தியாசம்.

காரிலோ, பஸ்ஸிலோ இல்லை தேம்ஸ் நதியில் படகு விட்டபடியோ லண்டனைச் சுற்றுவதை விட நடந்து திரிந்து பார்ப்பது அலாதியான அனுபவம்.

டிஸ்ட்ரிக்ட் லைனில் வெஸ்ட்மினிஸ்டரும், எம்பாங்மெண்டும் கடந்து டெம்பிள் பாதாள ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்தபோது, பத்தொன்பதாம் நூற்றாண்டு உடையில் நிற்கிற மூதாட்டி ஜோன். சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளில் இடம்பெறும் லண்டனைச் சுற்றிக்காட்டத் தயாராக நிற்கிறார் இவர். ஆறு பவுண்ட்தான் கட்டணம்.

பத்து நிமிடத்தில் முப்பது பேர் நடைப் பயணத்தில் சேர, உற்சாகமாக நடக்க ஆரம்பிக்கிறார் இந்த வழிகாட்டி. டிக்கன்ஸ் நாவல்கள், கட்டுரைகளை ஒன்று விடாமல் கரைத்துக் குடித்த இவர் வரலாறு, வம்சாவளி பற்றிப் பத்திரிகைகளில் எழுதுகிறவர். கூடவே பழம்பெரும் நாடக நடிகை.

குறுக்குச் சந்துகளில் புகுந்து புறப்பட்டு, வீதியோரமாக, பழைய கட்டடங்களின் முன்னால், அவற்றைச் சுற்றிக்கொண்டு பின்னால், அப்புறம் ஒரு சாட்டமாக அடுத்த தெருமுனைக்கு என்று சளைக்காமல் நடக்கிற ஜோனோடு கூட அரக்கப்பரக்க நடக்கிறவர்களில் இளம் பெண்களும், நடுவயது ஆண்களும் அதிகம்.

டெம்பிள் பகுதி நீதிமன்றங்கள், வழக்கறிஞர் அலுவலகங்கள், அரசு ரணசிகிச்சைக் கழகம், எம்பாங்மெண்ட் இருக்கும் இடத்திற்கு நேர்கீழே இருந்த நதியோரப் பட்டறைகள், தொழிற்கூடங்கள், புகை, அசுத்தம், குளிர் மூட்டம், சாரட் வண்டிகள், ஸ்டேஜ் கோச்கள் என்று இரண்டு நூற்றாண்டு முந்திய விக்டோரியா கால உலகத்தின் எச்சங்களை ஜோனின் கைகள் சுட்டிக்காட்ட, அவர் குரல் தளர்வில்லாமல் ஒலிக்கிறது. டிக்கன்ஸ், அவருடைய பெற்றோர், டிக்கன்ஸின் கதாபாத்திரங்களான பிக்விக், டேவிட் காப்பர்பீல்ட், ஸ்மால்வீட், டெட்லாக் சீமாட்டி, சாம் வெல்லர், வெஸ்பிட், பாப் சாயர், பேகின் என்று பல உண்மை, கற்பனை மனிதர்கள் முப்பது செகண்ட் இடைவெளிகளில் ஜோனின் முகபாவத்திலும் ஏற்ற இறக்கத்தோடு ஒலிக்கும் குரலிலும் வறுமையோடும், நோயோடும், மகிழ்ச்சியோடும், பகட்டோடும், குரூரத்தோடும், பெருமிதத்தோடும் உயிர் பெறுகிறார்கள். டிக்கன்ஸ் எழுதிய வரிகளாக ஒலித்து மறைகிறார்கள்.

ஒரு முடுக்குச் சந்து திரும்பி நிற்கிறார் ஜோன். பழைய கட்டிடம் ஒன்றைக் காட்டுகிறார். “ஓல்ட் க்யூரியாசிட்டி ஷாப் இதுதான்”. அவர் குரல் கம்முகிறது. டிக்கன்சின் அதே பெயரிலான நாவலில் நெல் என்ற குழந்தைப் பெண்ணும், அவளுடைய பாட்டனும் இந்தக் கடையை நடத்தி வந்ததை, சூதாட்டத்தில் எல்லாம் இழந்த பாட்டனோடு கூடக் கஷ்டப்பட்டு அலைந்து, நெல் உயிர்விடுவதை அற்புதமான உயிரோட்டத்தோடு ஜோன் சொல்ல, நேரம் உறைந்து போய் நிற்கிறது.

ஆண்ட்ரூ லாய்ட் வெப்ஸ்டரின் இசையமைப்பில் வெற்றிகரமாகத் தொடர்ந்து இருபது வருடமாக அரங்கேறிவரும் பிரம்மாண்டமான இசை நாடகமான (ஓப்பரா) ‘ஃபாண்டம் ஓஃப் தி ஓப்பரா’ பார்க்க இப்போது கிளம்பினால்தான், பிக்கடலி சர்க்கிளை ஒட்டிய வைக்கோல் சந்தைப் பகுதியில் நாடகக் கொட்டகை போய்ச் சேர முடியும்.

*****************************************

2 Comments:

At 11:14 am, Blogger துளசி கோபால் said...

//கண்ணைக் கவிந்தபடி காக்பிட்டில் வயோதிக விமானிகள்
உட்கார்ந்து விமானத்தைச் செலுத்திக் கொண்டிருக்க,
தள்ளாடியபடி உள்ளே ஏர்ஹோஸ்டஸ்கள் சாயா,
காப்பி விற்றுக் காசுவாங்கிப் போட்டுக்கொண்டு மூட்டுவலியோடு
நடந்துபோகிற காலம் வருவதற்கான அறிகுறிகள் தட்டுப்படுகின்றன.//

ஹய்யோ, சிரிச்சுச் சிரிச்சு இப்போ வயித்துவலி:-))))


//‘ஃபாண்டம் ஓஃப் தி ஓப்பரா’ பார்க்க ...//

பாட்டுங்க எல்லாம் அருமை.

ஒரே ஒரு சந்தேகம்.

உங்க பதிவு தமிழ்மணத்துலே வர்றதில்லையா?

அதான் படிக்க விட்டுப்போச்சு(-:

 
At 1:14 am, Blogger Costal Demon said...

படிக்கும் போதே லண்டன் நகரை சுற்றிப் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது.

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது