Sunday, October 21, 2007

ப்ரூஃப் ரீடர்

நல்ல நண்பர்கள். ஆனாலும் வேலைப் பளுவும் பொழுது போய்ப் பொழுது வந்து ஒரே மாதிரியான வேலையும் சேர்ந்து அவர்களை ஒருவழி பண்ணிவிடுகிறது. ப்ரூஃப் ரீடர்களைச் சொல்கிறேன். நான் எழுதுவது பத்திரிகையிலும் புத்தகத்திலும் அவ்வப்போது கூறு மாறிப்போக இந்த நண்பர்களே காரணம்.

ரொம்ப அபூர்வமாகவே ஆச்சரியப்படக் கூடியவன் நான். ஆனால் எழுதுவது புத்தகமாகும்போது, எப்படியோ பக்கத்துக்கு நாலு ஆச்சரியக் குறியாவது இவர்கள் தயவால் நுழைந்துவிடுகிறது. கதையில் வரும் மனிதர்கள், கடவுள், பசுமாடு, கன்றுக்குட்டி, பனைமரம் என்று சகலமானவர்களும், சகலமானவைகளும் நான் சொல்லாமலேயே எதற்காவது ஆச்சரியப்படுவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

'தில்லியில் இருக்கும்போது தினசரி தாபாவில் ரொட்டி சாப்பிட்டேன்' என்று எழுதியிருந்தால், 'தில்லியில் இருக்கும்போது தினசரி தபாலில் ரொட்டி சாப்பிட்டேன்' என்று சர்வ சுதந்திரமாக அதை மாற்றி, என்னுடைய மாஜிக்கல் ரியலிசத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துப் போகிறார்கள்.

'இத்தாலிய் கால்பந்தாட்டக் குழு கோச் அரிகோ சாச்சி' என்று எழுதினால், 'இத்தாலிய கால்பந்தாட்டக் குழு கோச் அரிகேச சாட்சி' என்று அந்த இத்தாலியருக்கு ஹரிகேச, ரிஷிகேச தீட்சை அளித்துத் மோனத் தவமிருக்க வைத்துவிடுகிறார்கள்.

பழைய கதை எல்லாவற்றிலும் யாராவது பேசுவது " " என்று கொட்டேஷன் மார்க்குகளோடு எழுதும் வழக்கம் இருந்தது. கதைக்கு நடுவில் கதாபாத்திரம் மனதில் ஏதாவ்து நினைத்தால் ' ' என்று சிங்கிள் கோட் வரும். இப்போது ப்ரூப் ரீடர்கள் டபிள் கோட்டை எல்லாம் சிங்கிள்கோட்டாக மாற்றிவிடுவதால், பேச்சு, அந்தரங்க நினைப்பு என்ற பேதமே இல்லாமல் எல்லாரும் எல்லோருக்கும் தெரிய நினைக்கிறார்கள்; பேசுகிறார்கள். இந்தத் தொல்லைக்குப் பயந்தே கொட்டேஷன் மார்க் இல்லாமலேயே எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இதை எல்லாம் என் ப்ரூப் ரீடர் நண்பர் ஒருத்தரிடம் சொல்லி மூக்கால் அழுதுகொண்டிருந்தபோது அவர் சிங்கிள் கொட்டேஷனில் சொன்னார் -
எங்க மேலேயே குத்தம் சொன்னா எப்படி சார்? எழுத்தாளர்கள் எழுதறது மட்டும் சரியா?

அவர் ஒரு இலக்கியப் பத்திரிகைத் தொகுப்பை எடுத்துக் காட்டினார். பிறமொழிக் கதை ஒன்றை எழுத்தாள நண்பர் ஒருத்தர் மொழிபெயர்த்திருந்ததில் ஒரு வரி கண்ணில் பட்டது -

என் தம்பி தாமுவுக்கு இனிப்பு மாமிசம் கொடுத்தான்.

மாமிசத்தில் ஏது இனிப்பு? நான் தலையைச் சொறிந்தேன். சட்டென்று பிடிபட்டது. வேற்று மொழியிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியதில் தான் சிக்கல் - 'My brother gave Dhamu sweetmeats' !! (இந்த ஆச்சரியக் குறிகளை நான் தான் போட்டேன்).

3 Comments:

At 1:52 am, Blogger jeevagv said...

//ரொம்ப அபூர்வமாகவே ஆச்சரியப்படக் கூடியவன் நான். ஆனால் எழுதுவது புத்தகமாகும்போது, எப்படியோ பக்கத்துக்கு நாலு ஆச்சரியக் குறியாவது இவர்கள் தயவால் நுழைந்துவிடுகிறது.//
:-)
//
ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியதில் தான் சிக்கல்!
//
இதுபோல நிறைய பார்ப்பதுண்டு. (ஆச்சரியக்குறி இல்லாமல்)

 
At 9:53 pm, Blogger Unknown said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

 
At 2:11 am, Blogger Costal Demon said...

வாங்க, வாங்க...

ரொம்ப நாளா ஆளையே காணோம்? உங்க பழைய பதிவுகளை எல்லாம், கிட்டத்தட்ட ரெண்டு தடவை படிச்சிட்டேன். திரும்ப தமிழ் பிளாக்கில் எழுதுறதுக்கு நன்றி... நிறைய எழுதுங்க.

அன்புடன்,
இராம்

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது