Friday, November 09, 2007

ஓர்ம்மகளுடெ விருந்நு


காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம் இல்லை, முழுக்க உண்மை என்று அறிவியலைத் துணைக்கழைத்து வாதிக்க முற்படுகிறவர்களுக்கு என் வந்தனம். அவர்களுடைய வம்சாவளியும் அடுத்தடுத்து வரப்போகும் தலைமுறைகளும் எல்லாத் தேவதைகளாலும் வாழ்த்தப்படட்டும். இந்தக் கட்டுரை அவர்களைப் பற்றியதில்லை. கடந்துபோன காலத்தைப் பரிவோடும் நேசத்தோடும் நினைத்துப் பார்க்கும் என் போன்ற சாமானியர்களைக் குறித்து.

ஒற்றைச் சாட்டமாகக் காலம் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் - இது வெறும் தோற்றம் என்பவர்களும் வாழ்த்தப்படட்டும் - நோஸ்டால்ஜியா என்பது ஐம்பது அறுபது வருடப் பழைய அனுபவங்களை நினைவு கூர்தல் என்பது கடந்துபோய், வெறும் பத்து வருடத்துக்கு முந்திய கணங்களும் ‘இனி இவை திரும்பப் போவதில்லை’ என்ற போதம் மனதில் அழுத்த, அகப் பயணங்களுக்குக்கதவு திறந்து காத்திருக்கின்றன.

பத்து வருடத்துக்கு முன் மலையாள மொழியில் ‘கலாகௌமுதி’ என்ற ஒரு வாரப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. இன்னும் தான் அது வருகிறது. அச்சு மசிவாடையும், சிக்கும் சிடுக்குமான கேரள அரசியல் வாடையும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பொதுவான ஒற்றை முகமுமாக வெளியாகும் இன்றைய கலாகௌமுதி பற்றி இங்கே எழுத ஒன்றுமில்லை.

அந்தப் பழைய கலாகௌமுதியில் நான்கு தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. நான்குமே பழையதை அசைபோடுவதை ஒரு கலைத்தன்மையோடு செய்தவை. முதலாவது கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் என்ற கதகளிக் கலைஞரின் சுயசரிதம். அடுத்தது பேராசிரியர் கிருஷ்ணன் நாயர் தன் அனுபவங்களின் அடிப்படையிலும் வாசிப்பின் அடிப்படையிலும் மலையாளப் புத்திலக்கிய க்கங்களை வாராவாரம் விமர்சனம் செய்த இலக்கிய வாரபலன் கட்டுரைப் பகுதியான ‘சாஹித்ய வாரபலம்’. அடுத்தது, கேரள முதலமைச்சராக இருந்த சி.அச்சுதமேனோன் தொடர்ந்து எழுதிய வாழ்க்கைக் குறிப்புகள். நான்காவது, மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறந்த பத்திரிகையாளர் என்று அறியப்பட்ட வி.கே.மாதவன்குட்டி எழுதி வந்த ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ என்ற ‘நினைவுகளின் விருந்து’.

இவர்களில் யாருமே இன்று நம்மிடையே இல்லை. 2006 மார்ச் முதல் வாரத்தில் பேராசிரியர் கிருஷ்ணன் நாயரும், அதற்கு ஓர் ஆண்டு முன் வி.கே மாதவன் குட்டியும், அதற்கும் சில ஆண்டுகள் முன் மற்ற இருவரும் காலமானார் பட்டியலில் சேர்ந்தார்கள். பழைய கலாகௌமுதி பத்திரிகை இவர்களுக்கு முன்பாக அதே பட்டியலில் இடம் பிடித்து விட்டது. னாலும், இவர்கள் எழுத்தில் வடித்த 1930-60 காலகட்டங்களின் கேரளபூமியும், அவை வெளியான 1990-1995 காலமும் ஒரு வாசகன் என்ற விதத்தில் என் மனதில் அழியாத இடத்தை என்றும் தக்க வைத்துக் கொண்டவை. பழையதை நினைவு கூர்வது குறித்த நினைவு கூர்தலான இதை ஒரு derivative nostalgia என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.

மாதவன் குட்டி ஒரு பத்திரிகையாளராக அறியப்பட்டவர். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் சிறப்பாக எழுதிய அவர் வாழ்க்கையின் முதல் பதினைந்து அல்லது இருபது வருடங்கள் மட்டுமே கேரளத்தில் மலபார் பிரதேச கிராமத்தில் வாழ்ந்தவர். அந்த நினைவுகளோடு அப்புறம் ஐம்பது வருடத்துக்கு மேலாக தில்லியில் நிரந்தரமாகக் குடியமர்ந்து பத்திரிகைப் பணி செய்துவந்தார். தன் இளமைக் கால நினைவுகளை அடுத்து வந்த வாழ்க்கை அனுபவங்கள் பாதிக்காமல் பாதுகாத்து அவற்றை எழுத்தில் வடிக்க முற்பட்டபோது அவர் ஒரு புது இலக்கிய வடிவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது.

ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் செய்தியாக மட்டும் தன் பிள்ளைப் பிராயத்தைப் பதிவு செய்ய மாதவன் குட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால், அவர் இலக்கியப் படைப்பு எதையும் அதுவரை எழுதியிருக்கவில்லை. ஒரு நாவலாக எழுதினால் அனுபவமின்மை காரணமாகச் சொல்ல வந்தது கட்டுமீறிப் போய்த் தோல்வி ஏற்படலாம். நம்பகத்தன்மை குறையவும் வாய்ப்பு உண்டு. எனவே சொற்சுருக்கதோடு சகலமான விதத்திலும் தான் மனதில் காத்து வைத்திருந்த பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அவர் ஏற்படுத்திக் கொண்டது வாழ்க்கைச் சித்திரங்களை (bio-sketches) கோர்த்துத் தொடுத்து நீட்சியடையச் செய்யும் ஒரு சுவாரசியமான கலவையான வடிவம்.

மாதவன் குட்டி இந்தப் படைப்பில் தன் வாழ்க்கையின் நிகழ்வுகளைக் காட்டுவது ஒரு சாக்குத்தான். அவற்றின் வழியே ஒரு சமுதாயத்தின் இருப்பை, வளர்சிதை மாற்றத்தை, மாற்றத்தை எதிர்த்து, அது சாத்தியமில்லை என்று தெரிந்து நிறையச் சங்கடத்தோடும் சகிப்புத்தன்மையோடும் ஏற்றுக் கொண்டு தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்ட ஒரு பாரதப் புழையோரத்துக் கிராமத்தைக் காட்டுவதே அவருடைய நோக்கம்.

‘நான் பிறந்தது ஒரு கிராமத்தில். பாலக்காடு தாலுக்காவில் உள்ள கிராமம்’ என்று சாதாரணமாகத் தொடங்குகிறது ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் பார்வையில் இந்த நூல் நகர்கிறது. அந்த வயதுக்கே உரிய நிஜமும், நிழலும், கற்பனையும், துளிர்விடும் சைகளும், குழந்தைமையும், மெல்ல விழித்தெழும் இனக்கவர்ச்சி எண்ணங்களுமாக அந்தப் பிராயத்தில் திரும்ப நுழைகிறபோது புனைவு மெல்லிய பூச்சாகக் கவிகிறது.

மாதவன் குட்டியின் கிராமம் பெரும்பாலும் நாயர் குடும்பங்களால் ஆனது. அதிலும் கிரியத்து நாயர்கள், அத்திக்குறிச்சி நாயர்கள், வெளுத்தோடன் நாயர்கள் என்ற மூன்று பிரிவு நாயர்களே அங்கே இருந்தார்கள். நாயர் தரை என்று அவர்கள் வீடுகள் இருந்த பகுதி அழைக்கப்பட்டது.
‘செறுமன்’ (சிறுமகன்) என்று அழைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்தவரும் சிலர் கிராமத்தில் உண்டு. அவர்களுக்குக் குளத்தில் குளிக்கத் தனிப் படித்துறை. அங்கே அவர்கள் வளர்க்கும் மிருகங்களும் இறங்கிக் குளித்துச் சேறாகிக் கிடக்கும். அவர்களின் கோவில்கள் கூடத் தனியானவை. நாயர்கள் வழிபடும் கோவில்கள் க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட ஈழவர்களின் கோவில்கள் காவுகள் என்று பிரித்துக் காட்டி வழங்கப்பட்டன.

கிராமத்து நாவிதர் சின்னான் நாயர்களுக்கு கிராப் வெட்டிவிடுவார். அவருடைய சகோதரர் பக்கத்து கிராமங்களில் பட்டன்மாருக்கு (அந்தணர்களுக்கு) குடுமி திருத்தி, நாள் நட்சத்திரம் பார்த்து தாடி மழித்து விடுவார். இளைய சகோதரர் ஈழவருக்குத் தலையில் கிண்ணியைக் கவிழ்த்ததுபோல் ‘பப்பட வெட்டு’ என்று வெட்டிவிடுவார். அந்தணர்கள் குறைவானபடியால் கட்டணத்தை அதிகமாக்குகிறார் நாவிதர். அவர்களோ, மாதத்துக்கு இரண்டு முறை சவரம் என்னும் வழக்கத்தை மாற்றி மாதம் ஒரு முறையாக்கி விடுகிறார்கள். சித்தம் தடம்புரண்ட நாவிதர் அந்தணர்களுக்கும் பப்பட வெட்டு என்று மாற்றி வெட்டித்தள்ள கலவரம் ஏற்படுகிறது. மாதவன் குட்டி விவரிக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஒரு சிறுவனின் பார்வையில் பட்ட சம்பவம் இது. அவ்வளவுதான்.

ஒரு பிரம்மாண்டமான சமூக, அரசியல் விழிப்புணர்ச்சியோடு கேரளத்தில் பெருமாற்றம் நிகழ்ந்த காலகட்டத்துக்கு சற்றே முற்பட்ட 1930-40 காலம் மாதவன் குட்டி சித்தரிப்பது. அந்தக் காலப் பாலக்காட்டு கிராமத்துக்கு அப்ரஹாம் புதிதாக வந்து சேர்கிறார். அவர் தபால்காரராகப் பொறுப்பேற்று கிராமத்தில் நுழையும்போது, கிராம மக்களுக்கு ஒரு புதிய அனுபவம். முதன்முறையாக ஒரு கிறிஸ்துவர் கிராமத்திற்கு வந்திருக்கிறார். அந்தக் கால நாயர்கள் ஜாதி உணர்வில் ஊறியவர்கள். ஸ்தானி நாயர் என்று குலப்பெருமை பேசுகிறவர்கள். அஞ்சல் சேவையை அவசியம் கருதி ஏற்றுக் கொண்டாலும், தபால் அட்டையில் எழுத மாட்டார்கள். அது செறுமன்கள் எழுதிச் சேதி சொல்ல. தபால் உறையில் கடிதம் எழுதி வந்து சேர்ந்தாலும், முதலில் மேல் விலாசம் பரிசோதிக்கப்படும். மகா ராஜ ராஜ ஸ்ரீ என்பதன் சுருக்கமாக ம.ரா.ரா. என்று பெயருக்கு முன்னால் போடாததால் தபால்காரரிடமே கடிதத்தைத் திருப்பிக் கொடுக்கிறார் ஒருத்தர். அந்த ஊரில் கிறிஸ்துவரான அப்ரஹாம் தபால்காரராக வரும்போது நாயர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை அவர் தொட்டுக் கொடுத்த கடிதத்தைக் கையில் வாங்கினால் தீட்டுப் பிடிக்குமா என்பது.

புரையத்து நாராயணன் நாயர் பிரச்சனையைத் தீர்க்கிறார். அவர் கோட்டயத்தில் வேலை பார்க்கும்போது அங்கே நாயர்கள் கிறிஸ்துவர்களோடு பழகுவதைப் பார்த்திருக்கிறார். கிறிஸ்துவர் தொட்டால் தீட்டு இல்லை என்று அவர் ‘அனுபவத்தில்’ சொல்வதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து சில புதிய நியமங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அப்ரஹாம் வீட்டில் படியேறி வந்து கடிதம் கொடுத்தபிறகு, குடிக்கத் தண்ணீர் கேட்டால் தரலாம். அவர் பாத்திரத்தை உயர்த்திப் பிடித்துக் குடிக்க வேண்டும். அப்புறம் அப்படியே வைத்துவிட்டுப் போகலாம். கவிழ்த்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த ‘நியமம்’ செறுமன்களுக்கு ஆனது. ஆக, அப்ரஹாம் இடைத் தட்டில் அந்த சமூக அமைப்பில் இருத்தப்படுகிறார்.

அப்புறம் அப்ரஹாம் கிராமத்தில் வீடு வாங்குகிறார். பரம்பு (தோட்டம்) வாங்குகிறார். ரப்பர் செடி வரவழைத்து வளர்க்கிறார். நிலத்தில் கப்பை (மரச்சீனிக் கிழங்கு) பயிரிடுகிறார். ‘இது கிறிஸ்துவர்கள் சாப்பிடற சமாச்சாரம். நாயர்களுக்கு ஏற்பட்டதில்லை’ என்று கள்ளச் சிரிப்போடு நாயர்கள் அப்ரஹாமின் நடவடிக்கைகளைக் கவனிக்கிறார்கள். அவர் திரேசம்மையைக் கல்யாணம் செய்து கிராமத்துக்குக் கூட்டிவருகிறார். கழுத்தில் நாலு பவுன் நகையும், நீண்டு கருத்த கூந்தலுமாக கிராமத்துக்கு வரும் திரேசாளை நாயர் ஸ்த்ரீகளுக்குப் பிடித்துப் போகிறது - அவள் நெற்றியில் சந்தனப் பொட்டு இல்லாமல் போனாலும்.

அப்ரஹாம் தலைமை தபால் உத்தியோகஸ்தனாகும்போது கிராம போஸ்ட் ஆபீசில் அவருக்குக் கீழ் உத்தியோகம் பார்க்க ஒரு நாயர் நியமிக்கப்படுகிறார். மெல்ல கிராமப் பிரமுகராக உயரும் அப்ரஹாம் ‘அவுரச்சன்’ என்ற மரியாதையாக அழைக்கப்படுகிறார். அவர் உயிர் பிரியும்போது கிறிஸ்துவ சமுதாயத்தின் அரசியல் அங்கமான கேரள காங்கிரஸ் உயிர் பெறுகிறது. கிராமத்தில் இன்னும் சில கிறிஸ்துவக் குடும்பங்களும், மாதாகோவிலும், கப்பையும் மெல்ல நுழைந்து அந்த சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கங்களாகின்றன.

ஒரு நாலு பக்கத்தில் அப்ரஹாம் மெல்ல எழுந்து கிராமத்துப் பெரிய மனிதராவதை அற்புதமான சொற்சிக்கனத்தோடு சித்தரிக்கிறார் மாதவன் குட்டி. ஓவியர் நம்பூத்ரி வரைந்த கோட்டோவியத்தில் அப்ரஹாம் இன்னும் உயிரோடு நடந்து வருகிறார். பத்திரிகையில் தொடராக வெளிவந்தபோது நம்பூத்ரியின் சித்திரங்களுக்காகவே பத்திரிகையைப் பிரித்ததும் ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ பக்கத்தைத் தேடிப் புரட்டிய ஓர்மை இன்னும் பசுமையாக மனதில் இருக்கிறது. அந்தக் கோட்டோவியங்களில் பலவும் புத்தகத்திலும் இடம் பெற்றது இந்த நூலின் வாசிப்பு அனுபவத்தை இன்னும் முழுமையாக்குகிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஆண்டிப் பண்டாரங்கள் கிராமத்தில் வந்து ஊர்ப்பொதுவில் ஆலமரத்தடியில் தங்குகிறார்கள். காலையில் ஆலமரத்தில் காகங்கள் விழித்தெழும்போது அவர்களும் எழுந்து அன்னக் காவடிகளோடு பக்கத்து கிராமங்களுக்குப் போகிறார்கள். அவர்களின் மனைவிமார், கிராமத்தில் எண்ணெய் விற்கிறார்கள். ஆண்டிகளும் அவர்களின் மனைவிகளும் ராத்திரியில் சண்டை போட்டால் ஆலமரத்துக் காக்கைகள் விழித்தெழுந்து பெருஞ்சத்தத்தோடு கரைய ஆரம்பிக்கின்றன. இந்தத் தொல்லைக்குப் பயந்து அவர்கள் குடும்பங்களில் கலகமே ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையின் சிறப்பு அம்சம் இது என்பதை மாதவன் குட்டி சொல்லாமல் சொல்கிறபோது நமக்குள் ஒரு புன்சிரிப்பு எழுகிறது.

மழை பெய்யாதபோது, வீடு வீடாகச் சென்று ‘மானத்து மகாதேவா, மழைபெய்தால் காதோ’ என்று தமிழில் பாடிக் கும்மியடிக்கிறார்கள் ஆண்டிப் பெண்கள். எண்ணெய் விற்க வந்த ஒரு ஆண்டிச்சிப் பெண்மேல் கண் வைக்கிறார் தரவாட்டு நாயரான கிட்டுண்யார் (கிட்டு நாயர் என்ற கிருஷ்ணன் நாயர்). கமலேடத்தி (கமலாக்கா) கழுத்து டாலர் காணாமல் போகிறபோது எண்ணெய் விற்க வந்த ஆண்டிச்சிதான் திருடிப் போயிருக்கிறாள் என்று கிட்டுண்யார் அவளைத் தேடிப்போய், ஆளில்லாத இடத்தில் அவள் உடல் முழுக்கத் தடவிச் சோதனை நடத்துகிறார். நகை கிடைக்கிறது. அதை அவர்தான் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தார் என்று கமலேடத்திக்குத் தாமதமாகத் தெரிகிறது.

மாதவன் குட்டி காட்டும் கிராமத்தில் ஒரு வேசியும் உண்டு. குஞ்ஞு மாதவி என்ற அந்தப் பெண்ணை ஒரு நாயர் பையன் காதலித்துக் கைவிட்டுப் போயிருக்கிறான். அவளுடைய தேநீர்க்கடைக்குப் போகவேண்டாம் என்று சிறுவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அங்கே உள்ளே நுழைந்து மெல்ல வெளியே வருகிறவர்களைப் பற்றிய குறுகுறுப்பான பார்வையை, எண்ண ஓட்டங்களை பதின்ம வயது மாதவன் குட்டி அற்புதமாகப் பதிவு செய்கிறார்.

ஒரு நினைவு, அது சார்ந்து ஒரு நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் முக்கியப் பாத்திரமான கிராமத்து ஆண் அல்லது பெண் பற்றி ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம், அந்தச் சித்திரத்தினடியில் பிறக்கும் இன்னொரு நினைவு, இன்னொரு வாழ்க்கைச் சித்திரம் இப்படிப் பின்னலிட்டுப் போகிறது மாதவன் குட்டியின் புத்தகம்.

பழைய கால தென்னிந்திய சமூகத்தில் அவ்வப்போது நிகழும் சம்பவமான யாராவது வீட்டை விட்டுப் போய் அலைந்து திரிந்து விட்டு சாவகாசமாகப் பல வருடம் கழித்துத் திரும்ப வருவது மாதவன் குட்டியின் கிராமத்திலும் நடக்கிறது. நான்கு பெண்குட்டிகளுக்குத் தந்தையான வாத்தியார் குட்டிராமன் நாயர் வீட்டை விட்டுப் போய் பதினெட்டு வருடத்துக்கு அப்புறம் திரும்பி வருகிறார். மனைவி பாஞ்சாலியம்மையும் குடும்பமும் ஏதும் நடக்காததுபோல் அவர் வரவை ஏற்றுக்கொள்கிறார்கள். பள்ளிக்கூட வாத்தியார் வேலை திரும்பக் கிடைக்கிறது. இன்னொரு முறை தந்தையாகிறார் குட்டிராமன் நாயர். ஐந்தாவது பெண்குழந்தை இப்போது.

மொத்தம் நூறு வார்த்தைகளுக்குள் இத்தனையும் சொல்லி முன்னால் போகிறார் மாதவன் குட்டி. வார்த்தைகளுக்கு இடையே உள்ள வெளியைக் கட்டுக்குள் வைக்கத் தெரிந்த அவருக்கு படைப்பின் முழு வெளியும், அதைச் சார்ந்த புறவெளியும் இயல்பாக வசப்படுகின்றன. ‘ஓர்ம்மகளுடெ விருந்நு’ நூலைத் திரும்பத் திரும்ப வாசித்து அனுபவிக்க வைப்பது அவருடைய இந்தத் திறமைதான்.

(இரா.முருகன்)
19 மார்ச் 2006எடின்பரோ, இங்கிலாந்து

(எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட நூலில் இடம் பெற்ற கட்டுரை)

1 Comments:

At 5:02 pm, Blogger Indian said...

ஓ மலபார் தேவதைகளோ?
:) மற்றும் :(

 

Post a Comment

<< Home

p>Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது